Tuesday, January 17, 2023

இப்பப்போய் வந்த இந்தியப் பயணம். பகுதி 1

கிட்டத்தட்ட  நாட்டைவிட்டு வெளியே போயே மூணு வருஷம் ஓடிப்போச்சு.   எல்லைக்கதவை மூடி சாவியை வச்சுக்கிட்ட அரசு....     ரொம்ப வருஷங்களுக்குப்பின்   'சரி... போய்த்தொலையுங்க'ன்னு கதவைத் திறந்ததும் மக்கள் எல்லோரும் ஆச்சா போச்சான்னு கிளம்பிப்போறதும் திரும்பி வர்றதுமா இருந்தாங்க.  பார்க்கப்பார்க்கக் கண்ணு பூத்து நிக்குது..... நாமும் சும்மா இருக்க முடியுதா.....   ஆகஸ்ட் மாசம் ஊருக்குப் போயிட்டு  செப்டம்பர் மாசம் 22 தேதிக்குத் திரும்பிடலாமுன்னு  திட்டம் போட்டார் 'நம்மவர்'. 

ஆஹா.... என்னவொரு பர்ஃபெக்ட் டைமிங்னு  பூரிச்சுப்போனேன்.  நவராத்திரி வர்ற சமயம். ஊருலே இருந்து கொஞ்சம் பொம்மைகளை, முக்கியமா 'நிக்கற லக்ஷ்மி' யைக் கூட்டி வரணும் ! மூளையில் முடிச்சு :-)

 மங்கிஃபாக்ஸ் வந்துருச்சுன்னு  வலையில் பார்த்ததும்..... ட்ரிப் கேன்ஸல்னு சொன்னார்....  அட ராமா....  குரங்கு இப்போ ஏன் வந்துச்சுடா ....
திடுதிப்புன்னு  டிக்கெட் போடறதும்...  சொல்லாமக் கொள்ளாம  அதை கேன்ஸல் பண்ணுவதும் நம்மூட்டுலே வாடிக்கைதானே..... புதுசா என்ன ?  (மனுசியை சும்மா இருக்கவிட்டாலும்.... ஹூம்....) 

இப்படித்தான் உள்ளூர் பயணங்களுக்குக்கூட நடக்குது.  ஏர்நியூஸிலாண்ட் மஹா கெட்டி.  கேன்ஸல் ஆனால்.... காசைத் திருப்பித்தராது..... வரவுக் கணக்கில் வச்சுக்கும். "உன்காசு என்னாண்டை பத்திரமா இருக்கு. உனக்கு எப்ப உள்ளுர்ப்பயணம் போகத் தோணுதோ அப்ப உன் காசுகூட கொஞ்சமே கொஞ்சம் மேலே போட்டுக்கோ!  டிக்கெட்டு  தயார்"

ஆனால்  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்  கொஞ்சம் பரவாயில்லை....  (இதுலே மட்டும்தான் !)  பயணம் ரத்தா ? காசு வாபஸ். 

இந்தியப் பயணம் ரத்து ஆகிட்டதால்..... உள்ளூரிலாவது எங்கியாப் போனாக் கொள்ளாம்.  அதான் ரெண்டு வருஷத்துக்கு முன்னே வடக்குத்தீவு ஹேமில்டன் நகரில் இருக்கும்  பெருமாள் கோவிலுக்குப் போய் வர டிக்கெட் போட்டு வச்சு, அதுவும் அந்த ஏரியாவில் கோவிட் வந்துருச்சுன்னு நம்மவர் டிரிப்பை  ரத்து பன்ணிட்டாரே.....   அந்தக்காசு 'அவனாண்டை' இருக்கே. அதை வச்சே இப்போ போயிட்டு வந்தால் ஆச்சு. நம்மவர் & நம்ம துளசிதளம் பொறந்தநாளுக்குப் பெருமாள் தரிசனம்னு சட்னு முடிவெடுத்தேன் ! முதல் நாள்  மத்யானத்துக்குமேல் கிளம்பிப்போய் மறுநாள் , பொறந்தநாள்  தரிசனம் முடிஞ்சதும் கிளம்பி நம்மூருக்கு வந்துடலாம்.
ததாஸ்து !  அப்படியே ஆச்சு.  இங்கெதான் எழுதலையே தவிர  ஃஃபேஸ்புக்கில்  நாலைஞ்சு  சின்ன வீடியோ க்ளிப்ஸ் போட்டுத் தாளிச்சாச்சு :-)
 மேலே படம் : முதல்நாள் ஹேமில்டன் போனவுடன் கோவில் விஸிட்தான். மறுநாள் புரட்டாசி முதல் சனிக்கிழமை. புதுசாக வந்த  பெருமாள் திருவடிக்கவசத்தைக் கொண்டு வந்து காண்பித்தார் பட்டர்பிரான்( இவர் நம் நண்பரும் கூட )
மறுநாள்  திருமஞ்சனம், மஞ்சள் காப்பு,   அலங்காரம், அன்னதானம் என்று எல்லாமே அருமையாக அமைஞ்சது 'அவன் ' அருளே!



அப்பாடா..... ஏர்நியூஸியின் கடன் கழிஞ்சது.  இனி அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இருக்கு. அதுக்கு நாம் கட்டவேண்டிய கப்பத்தைக் கட்டியாகணும்.  என்ன ஆனாலும் சரி..... அந்தக் கோவிட்டே வந்தாலும் சரி, இந்தியப் பயணம் போயே ஆகணுமுன்னு ......

எப்போன்னு நாள் பார்த்துக்கிட்டு இருந்தப்பதான்  சட்னு தீபாவளிக்கு அசல் கங்காஸ்நானம் செஞ்சால் என்னன்னு தோணுச்சு!   'மூட்டையைக் கட்டு, கிளம்பு'ன்னு பெருமாள்  சொல்லிட்டார்.

முதல் வேலை முதலில்னு நம்ம ரஜ்ஜுவின் ஹாஸ்டலில்   ரூம் புக் பண்ணிட்டு நம்மப் பயணத்திட்டத்தைப் போட ஆரம்பிச்சோம். எல்லாம் ஆகஸ்ட் மாசம் போயிருக்க வேண்டிய அதே இடங்கள்தான்.  எந்தெந்த நாட்கள் எங்கே என்பதுதான் இப்போதைய மாற்றத்தில். 

கங்கைக் கரையோரம் தங்குமிடம் இருக்கணும் என்பது என்னுடைய தீர்மானம். காலையில் எழுந்து கங்கையைப் பார்த்துக் கண்ணைத் திறக்கணும்.  போனமுறைபோல ராடிஸனில் தங்கிட்டு, சூர்யோதயத்தைக் கோட்டைவிடப்டாது!  ஆகஸ்ட் பயணத்திலும் இதே தீர்மானம்தான். கங்கைக்கரையில் ஹொட்டேல் கூட புக் பண்ணிட்டு ஏழாயிரம் ரூ அட்வான்ஸ் கூட அனுப்பிட்டோம்.  பயணம் ரத்தானதால்,  அட்வான்ஸைத் திருப்பித்தருவானான்னு  கேட்கலாமுன்னா.... மெயிலுக்கும் சரி, ஃபோனுக்கும் சரி  பதிலே இல்லை.  போன ஜன்மத்துக் கடன் ஒழிஞ்சதுன்னு  விட்டுத்தொலைச்சோம்.  இப்ப வேற இடம் தேடணும்....  வேறொன்னு கிடைச்சது.
அக்டோபர் 16 (2022) ரஜ்ஜுவைக் கூட்டிப்போய் ஹாஸ்டலில்  ஒப்படைச்சோம்.  ரொம்பத் தெரிஞ்ச இடம் என்றதால்  ஆகாத்தியம் பண்ணாம அறைக்குள்ளே போயிட்டான்.  போயிட்டு வரேண்டான்னு சொன்னால்கூடச் சட்டையே செய்யாம முகத்தைத் திருப்பிக்கிட்டு ஜன்னலில் ஏறி உக்கார்ந்துட்டான். நாந்தான் மனசு கேக்காம அந்தாண்டை சுத்தி ஜன்னலாண்டை போய் சொல்லிக்கிட்டேன். 


வீட்டுக்கு வந்து பரபரன்னு பொட்டி கட்டும் வேலையை முடிச்சோம்.  மறுநாள் சாமியைக் கும்பிட்டுக்கிட்டு, நாட்டைவிட்டுக் கிளம்பியாச்சு.  பதினோரு மணி நேரத்தைப் பல்லைக்கடிச்சு ஓட்டிட்டு,     சிங்கையில் இறங்கினோம்.  பகல் நேர ஃப்ளைட் என்றாலுமே  கொஞ்சம் Bபோர்தான்.  வழித்துணையா உடையாரைக் கொண்டுபோயிருந்தேன்.   
KrisFlyer  மெம்பர்களுக்கு  இப்போ புதுசா ரெண்டுமணி நேரத்துக்கு  inflight Wifi   ஓசியில் தர்றாங்க.  அப்பப்பக் கொஞ்சநேரம்னு பயன்படுத்த முடியாது. லாகின் பண்ணிட்டால் ஒரேடியா ரெண்டு மணி நேரத்தை முடிச்சுக்கணும். போகட்டும், இவ்வளவாவது கிடைச்சதே!  வலை உலகில் மேய நமக்கா இடமில்லை :-) ஆனால் உண்மையைச் சொன்னால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் சர்வீஸ் தரம் ரொம்பக் குறைஞ்சு போயிருக்கு.  அந்த ப்ளாஸ்டிக் சிரிப்பின் நீளம்கூட இப்போ பாதிதான். இந்த  ஏர்லைன்ஸுடன் நம்ம   34 வருஷப் பயண அனுபவத்தில்,   ஃப்ரெஷப் பண்ணிக்கத்தரும்  சூடான டவல் கூட இப்பெல்லாம் இல்லை. 'உன்னைக் கூட்டிக்கிட்டுப்போறதே அதிகம். இதுலே உபச்சாரம் வேற செய்யணுமோ' ன்னு வாயைத் திறந்து சொல்லலை. அம்புட்டுதான்.

நம்ம ஊர் ஹரே க்ருஷ்ணா தலைவர், இதே விமானத்தில் வந்தார். மதுரா, வ்ருந்தாவன் போறாராம் எட்டாவது முறையாக !
சிங்கையில் இறங்கியதும் சென்னை விமானம் பிடிக்க இன்னும் ரெண்டரை மணி நேரம் இருக்கு.  காலாறக் கொஞ்சம் நடக்கலாமுன்னு டெர்மினல் 2 போனால்.... அங்கே ஏதோ புது மாற்றங்களுக்காக  ஆர்க்கிட் மலர்த் தோட்டம், மீன் குளம் னு எல்லா இடங்களையும் மூடி வச்சுருக்காங்க. 
ஊருக்குப்போயிட்டு  நியூஸிக்குத் திரும்பி வரும் நண்பர் குடும்பத்தைச் சந்திச்சோம்.  நாங்க திரும்பி வரும்வரை ஊரைப் பத்திரமாப் பார்த்துக்கச் சொல்லியாச்:-)

தீபாவளி அலங்காரத்தின் ஒரு பகுதியாக மயில் ஆடிக்கிட்டு இருக்கு :-)
சுத்திப்பார்க்க  வேறொன்னும் இல்லை......   போய் ஒரு காஃபி குடிச்சுட்டுச் சென்னை விமானம் கூப்பிடுதுன்னு போயிட்டோம்.  இங்கேயும் ஒரு ரெண்டு மணிநேர வைஃபை!  நம்மவர்தான் சினிமாவே கதின்னு இருப்பதால் நேரம் போனது அவருக்கு ! 
ஏர்ப்போர்ட் ப்ரீபெய்ட் டாக்ஸி எடுத்து லோட்டஸ் போய்ச் சேரும்போது  மணி பதினொன்னரை. நம்ம வழக்கமான அறையில் இப்போ ஆள் இருக்காம். மறுநாள் அறையை மாத்தித்தர்றோமுன்னு சொல்லி வேற அறையில் தூக்கம்.
பொழுது விடியட்டும் !

தொடரும் ..... :-)

PIN குறிப்பு : இது நம்ம  காசி யாத்திரை  ரெண்டாம் முறை.

போன முறைப் பயணம் படிக்க விரும்பினால் இந்தச் சுட்டியில் நூல்பிடிச்சுப் போகலாம். அப்பதானே  அன்றும் இன்றும் எப்படின்னு தெரியும் :-)

http://thulasidhalam.blogspot.com/2014/04/blog-post_7.html

16 comments:

said...

Welcome back

said...

ஆகஸ்ட்ல பணம் கட்டின ஹோட்டல்ல போய் கட்டின பணம் வாபஸ் கேட்டீங்களா...

said...

Thanks Deiva !

said...

வாங்க ஸ்ரீராம்,

அது யானை வாயிலே போன கரும்பில்லையோ !

said...

ரொம்ப வருடங்கள் கழித்து எழுதறாப்போல எண்ணம்... வலையுலகிலிருந்து விலகிட்டீங்களோன்னு நினைத்தேன்.

said...

அருமை.

Waiting for your trip to பிருந்தாவன், மதுரா & around.

said...

ஆஹா துளசிக்கா திரும்ப மூட்டைக் கட்டி புறப்பட்டு ஊருக்கும் போயாச்சா...

அது சரி அந்த 7000 கோவிந்தாவா!!!

கீதா

said...

வாங்க நெல்லைத்தமிழன்.

எங்கே விலகறது ? எங்கே சுத்தினாலும் திரும்ப இங்கே வந்துடணும்தானே ?

ஆறுமாசமா ஒரு வெறுமை.... ஒன்னும் எழுதத் தோணலை... ப்ச்.... ஆனால் மனசு மட்டும் எழுதிக்கிட்டே இருந்தது உண்மை.

said...

வாங்க விஸ்வநாத்.

இப்பவும் சரியாக் கவனிக்கலை போல ! மதுரா வ்ருந்தாவன் பக்கம் போனது நம்ம ஊர் ஹரேக்ருஷ்ணா கோவில் தலைவர்.

said...

வாங்க கீதா,

அது போன ஜன்மக் கடன் !

said...

திரு.கோபால் +துளசி தளம் இனிய வாழ்த்துகள்.
மீண்டும் காசி பயணம் தொடர்கிறோம்.

said...

வாங்க மாதேவி,

வாங்க, நாம் போய் என்னென்ன மாற்றங்கள் வந்துருக்குன்னு பார்த்துட்டு வரலாம் !

said...

வாங்க மாதேவி,

வாங்க, நாம் போய் என்னென்ன மாற்றங்கள் வந்துருக்குன்னு பார்த்துட்டு வரலாம் !

said...

வாங்க மாதேவி,

வாங்க, நாம் போய் என்னென்ன மாற்றங்கள் வந்துருக்குன்னு பார்த்துட்டு வரலாம் !

said...


இதோ வந்துட்டேன் ... மீண்டும் உங்களுடன் காசி பார்க்க..
நாங்களும் உங்க பின்னாடி தான் காசி போய்ட்டு வந்து இருக்கோம் ..எங்க பயணம் நவம்பர் முதல் வாரத்தில் அமைந்தது மா ...

said...

வாங்க அனுப்ரேம்,

கங்கையில் வெள்ளம் குறைஞ்சுருந்ததா ?