Wednesday, August 17, 2022

எதை எங்கே வச்சுருக்கணும் ?


ஆபத்து எப்படியெல்லாம் வருது பாருங்களேன்.....   எது ?  நேத்து  வந்த நம்ம நாப்பத்தியெட்டாவது கல்யாண நாளா ?   அதைச் சுடச்சுட  நம்ம துளசிதளத்தில் படங்களோடு கொண்டாடியாச்சு!  அப்பப் பார்க்கலைன்னா பிரச்சனையே இல்லை!  வெறும் '48 ' ன்னு தேடினால் கிடைச்சுரும்:-)
கூரியர்கார ஆள் பார்ஸலைக் கொண்டுவந்து வாசலில் வச்சுட்டுப்போறது இங்கே வழக்கம்தான். ஆனால் ஒரு ஓரமா வைக்காம வாசப்படியில் வச்சுட்டுப்போகலாமோ ? 
அந்த வாசலுக்கு மூணு படி ஏறிப்போகும் அமைப்பு.  கதவோ வெளிப்பக்கம் திறக்கும் வகை. நேரமோ அந்தி மாலை. அரையிருட்டு.....  வெளியே எதுக்கோ  போகவேண்டி, கதவைத்திறந்து காலடி எடுத்துவச்சது பார்ஸல் மேலே.... அடுத்த நொடி  கால் இடறித் தவறி  விழுந்து குய்யோ முறையோன்னு கணவரைக் கூப்பிட்டால்....    அவர் காதுலே ஹெட்ஃபோனை மாட்டிக்கிட்டு  வீட்டுக்குள்ளே ஏதோ  பாட்டு  கேட்டுக்கிட்டு இருக்கார். 

கூப்பாடு கேட்டது, பக்கத்துவீட்டுக்காரம்மாவுக்கு.  ஓடிவந்து பார்த்துருக்காங்க.  இந்த வீட்டுக்காரம்மா கீழே விழுந்து, எழுந்திரிக்க முடியாமல் கதறிக்கிட்டு இருக்காங்க.  

அடராமா......   அப்புறம் ?  வேறென்ன கணவருக்கு ஹெட்ஃபோன் இல்லாமலேயே பாட்டு கேக்க வேண்டி இருந்துருக்கும்தானே ? 

முந்தாநாள்  அப்பா அம்மா விஸிட் வந்த மகளும் மருமகனும்  ரஜ்ஜுவைக் கொஞ்சிக்கிட்டு இருந்தப்ப......   யதேச்சையா  'அப்பா அம்மா எப்படி இருக்காங்க'ன்னு மருமகனிடம் கேட்டதுக்கு, அம்மாவுக்குக் காலில் ஃப்ராக்ச்சர்னு சொன்னார். அவ்ளோதான் மேல் விவரம் ஒன்னும் இல்லை. 


சரி. நாம் போய் பார்த்துட்டு வரலாமுன்னு கிளம்பினோம்.  அவுங்க வேற ஊரில் இருக்காங்க. ஒரு அம்பது  நிமிட் ட்ரைவ். கண்ட்ரி லிவிங் !    சம்பந்தி வீட்டுக்குப்போனபின்தான்  மேலே குறிப்பிட்ட சம்பவத்தின் முழு  விவரம் தெரிஞ்சது ....   கணுக்காலில்  எலும்பு முறிவு!  அதுவும் ரெண்டு கால்களிலும்..............  ஐயோ....  ஆம்புலன்ஸைக் கூப்பிட்டு, இங்கே நம்மூர் ஆஸ்பத்ரிக்கு வந்து  கட்டுப்போட்டு , மூணு நாள்  வச்சுப்பார்த்து, வீட்டுக்கு அனுப்பி இருக்காங்க.   ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை செக்கப் பண்ணுவாங்களாம். எனக்கு ஐயோன்னு இருந்துச்சு.  வெள்ளையர் குடும்பத்திலே  ஆண்கள் நல்லாவே சமைச்சுடறாங்க என்பதால் குறைஞ்சபட்சம் சாப்பாட்டு பிரச்சனை இருக்காது. இதுவே எனக்காகி இருந்தால்..............   நம்மவர் அம்போ..... 

கொஞ்சநேரம் குடும்ப விஷயங்கள் பேசிட்டுக் கிளம்பினோம்.
இவுங்க ஊருக்குப் போகும் வழியில்  ஒரு பண்ணையில் விமானம் ஒன்னு தரையிறங்கி இருந்தது. ரெண்டு வருஷமாப் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்.  இந்த முறை பார்த்தால்..... அதுலே பாதியைக் காணோம்!!!   மீதிப்பாதி, இப்போ வீட்டாண்டை வந்து நிக்குது. அதை விருந்தினர் தங்கப் பயன்படுத்தப் போறாங்களாம். நம்ம சம்பந்தியின் நண்பரின்  பண்ணைதானாம். முழுசா இருந்தால்  நானே பைலட் ட்ரைய்னிங் எடுத்து  ஓட்டியிருப்பேனோ என்னவோ :-) எப்படி நகர்த்தியிருப்பாங்க ?  பண்ணையில் இருக்கும் ட்ராக்டர் இழுத்துருக்குமோ ? பைலட்டுக்கு என்னமாதிரி சிந்தனை பாருங்க... ஹாஹா...
பண்ணைவீட்டு மெயில்பாக்ஸ் , கலையழகோடு இருப்பதைப் பாராட்டத்தான் வேணும் !

நம்மூர்லே  மூணு புத்தர்கோவில்கள் இருக்கு.  அதுலே ஒன்னு  இந்தப்பக்கம்தான்.  ஒரு பண்ணை நிலத்தை வாங்கி கோவில் கட்டியிருக்காங்க. கோவில்ன்னா.... கோவில் அமைப்பு இல்லை. ஒரு பெரிய ஹாலில் ஒருபக்கம் புத்தர் சிலை இருந்தது.  இப்பப் பார்த்தால் தோட்டத்தில் புத்தர் நிக்கிறார். சம்பந்தி வீட்டுக்குப் போகும்போதே கண்ணில் பட்டார். வரும்போது போகலாமுன்னு நேராப்போயிட்டோம்.
இப்போ திரும்பி வரும்போது மறக்காம அங்கே போனோம்.  தெருவுக்கு முதுகு காமிச்சு நிக்கிறார். என்னன்னு பார்த்தால் கிழக்கே பார்த்த நிலை.  இவுங்களுக்கும் இப்படி சாமி கிழக்கே பார்க்கணும் என்ற நியமம் இருக்கு போல !
Wat Khemera Putthea Thireach  என்று பெயர். பளிங்குக் கல்வெட்டில் எழுத்தைப் பார்த்தால் ' தாய்' போல இருக்கு. யாரையாவது விசாரிக்கலாமுன்னா...   யாருமே கண்ணில் படலை, பக்கத்துப் பண்ணை குதிரைகளைத்தவிர.  அவையும் ஆள் நடமாட்டம் பார்த்து, வேலிப்பக்கம் வந்து 'என்னம்மா சுகமா'ன்னு விசாரிக்குதுகள்.  முந்தி ஒரு சமயம் இங்கே  கோவில் வந்துருக்கு பார்க்க வந்தப்பவும் யாருமே இல்லை.  ஹால் திறந்துருந்தது. போய்க் கும்பிட்டு வந்தோம். இப்ப அந்த ஹால் பக்கம் பார்த்தால்  மூடிக்கிடக்கு. 
புது புத்தர் நல்ல உயரமா இருக்கார். அவருக்குப் பின்பக்கக்கட்டைச்சுவரில்  நன்கொடை கொடுத்தவர்கள் பெயரிருக்கு.  500$ கொடுத்தவர்களையும் நன்றியோடு நினைவுகூர்தல் நல்லது ! 
வலை எதுக்கு இருக்குன்னு தேடுனதில் ஆப்ட்டது சில சேதிகள். 2020 செப்டம்பரில்  புத்தர் ப்ரதிஷ்டை ஆகி இருக்கு.  இது  கம்போடியன் புத்தர் கோவில்.அப்போ கோவிட் காரணம் ஊரடங்கும் வீடடங்கும்  இருந்த காலம். அதான் எல்லாம் ஓசைப்படாமல் நடந்துருக்கு போல ! 

  கீழே வலையில் அகப்பட்ட படம். 
நாலுமணிக்கு நம்ம வீட்டுக்கு வரும் பறவைகளுக்கான டின்னர் டைம் என்பதால் வீட்டுக்கு வந்து சோறு போட்டதும், இன்றைக்கு இன்னொரு விஸிட் போக ஏற்கெனவே முடிவு பண்ணியது நினைவுக்கு வந்துச்சு.  கால் உடைஞ்ச காதையில் இதை மறந்துட்டேன்....

நம்ம அண்ணி ஒருத்தருக்கு  ரெண்டுநாள் முன்னாலே பொறந்தநாள் வந்தது.  கொண்டாட்டம் மகன் வீட்டில்.  நாம்தான்  மாரியம்மன் கோவில் கல்யாணத்துக்குப் போயிருந்தோமே.....   அண்ணன் ரமண் சாமிக்கிட்டே போயிட்டார்.  முப்பத்திநாலு வருஷப் பழக்கம் நமக்கு.  முதலில் நம்ம வீட்டுக்குப்பக்கம்தான் இருந்தாங்க.  அப்பெல்லாம் வாரம் ஒருமுறை போய்ப் பார்த்துப்பேசிட்டு வருவோம்.  அண்ணன் மறைவுக்குப்பின்தான், அண்ணி இப்போ இருக்கும் இடத்துக்குப் போயிட்டாங்க.  அங்கே  உறவினர்கள் சிலர் இருக்காங்க.  அண்ணன் குடும்பம் பெருசு.  அவரோடு சேர்த்து எட்டு தம்பி, தங்கைகள்.  எல்லோருமே  நல்ல அன்பான ஆட்கள். 

 அண்ணன்தான் மூத்தவர். சின்ன வயசில் தன் தகப்பனாரோடு கிளம்பி ஃபிஜித்தீவுக்குப் போறார். கப்பல் எப்படியோ வழிதவறி  அஸ்ட்ராலியா  வந்துருக்கு.  அப்புறம் ?  அங்கிருந்து   நியூஸிலாந்து வந்தவங்க   இங்கேயே இருந்துட்டாங்க. சில வருஷம் கழிச்சு, ஊருக்குப்போய் அம்மாவையும் உடன்பொறந்தவங்களையும்  கூட்டி வந்துருக்கார்.  பழைய கதைகளை ரொம்ப சுவாரஸ்யமாச் சொல்லுவார். இப்பக்கூட நான் அண்ணனை அடிக்கடி நினைச்சுக்குவேன்.     

அண்ணனுடைய தம்பி, நம்ம சிட்டிக் கவுன்ஸில் அங்கமா பல வருஷங்கள் இருந்தார். அவரும் இப்ப சாமிக்கிட்டே போயிட்டார். அவர் பெயரில் ஒரு தெருவும் , சிறு தோட்டமும்  கூட  இருக்கு !   Ishwar Ganda Boulevard  & Ishwar Ganda Park.  இவை இவரின் முப்பது வருஷ கவுன்ஸிலர் சேவையைப் பாராட்டிய உள்ளூர் கவுன்சில் உபயம்.

நான் ஏற்கெனவே சொல்லி இருந்தேனில்லையா .... தோழியும் நானும் சேர்ந்து ஒரு கடை ஆரம்பிச்சோமுன்னு.... அதை நம்ம ஈஷ்வர் அண்ணன்தான் திறந்துவச்சார். (அப்புறம் நாங்களே ஆறுமாசம் கழிச்சு மூடிட்டோம்!)
பொறந்தநாள் கொண்டாட்டப் படங்களையெல்லாம் பார்த்தோம்.  அழகான கொள்ளுப்பேத்திக்கு ரெண்டரை வயசு. நல்லா இருக்கட்டும்!  அண்ணிக்கு வயசு எண்பது.  பொறந்தநாள் கேக்  நமக்கு எடுத்து வச்சுருந்தாங்க. 

9 comments:

said...

ஆரம்பத்தில் உங்களுக்கு ஏற்பட்ட விபத்து பற்றி எழுதியிருக்கீங்களோ என்று எண்ண வைத்தது. விரைவில் அவருக்குச் சரியாகப் ப்ரார்த்தனைகள்.

said...

சம்பந்தியம்மாவுக்குக் காலில் ஃப்ராக்சர் தவிர மற்றவை சுவாரசியம். 48 பார்க்கலை பார்த்துவிடுகிறேன்

ரஜ்ஜு..செம...

கீதா

said...

48 இனிய வாழ்த்துகள்.
சம்பந்தி அம்மா நலமடைய பிரார்த்தனைகள்.
புத்தரும் தோட்டத்தில் உயர்ந்து நிற்கிறார். இருந்தும் நம்நாடு இதில் கூடுதல் உயர்த்திதான் மலைகள் மேல் வானளாவி நிற்பார். எங்கும் பிரமாண்டம்.

said...

Mam, why on silent mode for so long?

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

அனைவரின் பிரார்த்தனைகளால் சம்பந்தியம்மாவுக்கு ஓரளவு சரியாகிவிட்டது. இப்போது நடக்க முடிகிறது.

மிகவும் நன்றி !

said...

வாங்க கீதா,

ரஜ்ஜு பாவம், இன்றைக்குக் கேட்டரிக்குப் போயிருக்கான். நமக்கு ஒரு பயணம் வாய்த்துள்ளது.

said...

வாங்க மாதேவி,

உண்மை !

ஒரு வாரம் உங்கள் நாட்டில் சுற்றியதில் எங்கெங்கும் புத்தரே !

said...

வாங்க ராஜ்,

அதென்னமோ மனமும் உடலும் பொருந்தி நிற்கலை. ரொம்ப நாட்கள் இடைவெளி ஆகிப்போச்சு.

இனியாகிலும் எழுதணும். விசாரிப்புக்கு நன்றி !

said...

உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
பிறந்திருக்கும் புத்தாண்டு சகல நலன்களையும் தரட்டும்.