Friday, August 05, 2022

பட்டிக்காட்டாளும் முட்டாய்க்கடையும் :-)

நிறைய சமாச்சாரங்கள் நடக்குது இப்பெல்லாம்......  எதை விட ? 
செவ்வாய்க்கிழமைகளில் ராமாயணம் வாசிப்பு. செவ்வாய் நம்ம ஆஞ்சிக்கு விசேஷநாள் என்பதால்  தரிசனமும்  கிடைச்சுரும் !  எல்லாம் நம்ம சநாதன் தரம் ஹாலில்தான்.  மாசம் ஒரு முறை கடைசி வெள்ளியில்  ஒரு ராமாயண் வாசிப்பு,  நம்ம க்றைஸ்ட்சர்ச் ஃபிஜி  சங்கத்தின் வகையில் நடக்கும்.

நமக்குன்னுன் ஒரு ஹால் இருப்பது எவ்வளவு வசதி பாருங்க. இதெல்லாம் வழக்கமா நடக்குதுன்னாலும்.... இன்னொரு விசேஷ சத்சங்கம்னு சொன்னால்     ஃபிஜி பெண்கள் குழு(மஹிளா மண்டலி )நடத்தும்  ராமாயண வாசிப்புதான்.  சநாதன் தரம் சபாவின் பஜனைக் குழுவினரும்  வந்து கலந்துக்குவாங்க. 
இந்த முறை நடந்ததில்  ஒரு பொறந்தநாள் விழாவும்  உண்டு. 

சநாதன்  ஹால்  ஆரம்பிச்சதில் இருந்து, ஃபிஜி மக்கள், அவுங்க வீட்டு விசேஷங்களை இங்கே ஹாலில் கொண்டாடுவது வழக்கமாகி இருக்கு. பொறந்தநாள், கல்யாணநாள், வீட்டுப்பெரியவர்களின் நினைவு நாள்னு தனிப்பட்ட விசேஷ நாட்கள் வராமயா இருக்கு ?   மகிழ்ச்சியான நாட்களைக் கொண்டாடுவது போலவே  வீட்டு சோக நிகழ்வுகளையும் இதே ஹாலில் நடத்திக்குவோம்.  இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான்  வாழ்க்கைன்னு தெளிவாக இருக்காங்க இம்மக்கள் !


ஊருக்கும் போகமுடியலை....   மனசு ரொம்ப வெறுமையா இருக்கு. சமைக்கவே பிடிக்கலைன்னு அப்பப்பக்  கொஞ்சம் புலம்பிக்கிட்டு இருப்பதைப் பார்த்து  வெளியில்  எங்கெயாவது போய் சாப்பிடலாமான்னு  'நம்மவர்' கேட்டதும்,  அடுத்த கேள்வி எங்கே என்றதுதான்.  இண்டியன் ரெஸ்ட்டாரண்டு என்னும் பெயர்களில்  நம்ம ஊரில் மட்டும் சுமார் அம்பது இருக்குன்னாலும், சொல்லி வச்சாப்லெ எல்லாத்துலேயும் ஒரே மெனு.  பட்டர் நானும் நவ்ரத்தன்  கொர்மாவும்  போரடிச்சுப்போச்சு.   வெஜிடேரியன் ரெஸ்ட்டாரண்டுன்னு தேடினால்  ரெண்டே ரெண்டுதான்.  ஒன்னு பிகானிர்வாலா.  ரெண்டாவது பொலினா.  முன்னதுக்கு  அடிக்கடி போறோமேன்னு பொலினாவுக்குப் போனோம்.  இங்கே  நம்ம இண்டியன் ஸ்வீட்ஸ்  விற்பனையும் உண்டு. ஆரம்ப காலத்துலே (ஒரு பத்துப்பனிரெண்டு வருஷம் ?  )  மிட்டாய்க்கடையாயும் கூடவே கொஞ்சம் சாப்பாட்டு வகைகளுமாத்தான் இருந்தது.  அந்த வருஷம் தீபாவளிக்கான இனிப்புகளை இங்கே வாங்கிப் பண்டிகையைக் கொண்டாடியாச்சு.  அதுக்குப்பின் இப்பதான் போறோம். வியாபாரம் கைமாறிப்போச்சு போல ! 
 
பட்டிக்காட்டான் முட்டாய்க் கடையைப் பார்த்தாப்லெ.....   ஹிஹி....   சுடச்சுட  ஜலேபி கவுன்ட்டருக்கு வந்ததும் ஒரு நூறு கிராம் கொண்டுவரச் சொன்னேன். நமக்கு டிஸ்ஸர்ட் ஆச்சு!  சாப்பாடு ?  அதே நான்தான், பூதமாட்டம் ரெண்டு. 


தோழி ஒருத்தர் பழம்பொருள் விற்கும் கடை ஒன்னு ஆரம்பிச்சுருக்காங்க. நம்மைப்போல் ஆண்ட்டீக் விரும்பிதான்.   தமிழ் வருஷப்பிறப்பு சமயம் கடை திறப்பு. நாம்தான் கோவீடால் பீடிக்கப்பட்டு இருந்தோமே.... போகலை.   அவுங்க வேற இடத்துலே முழு நேரம் வேலை என்பதால்..... கடை வாரம் ரெண்டுநாட்கள் மட்டுமே. வீக் எண்ட் பிஸினெஸ்.   இன்றைக்குப் போய் வரலாமுன்னு சாப்பிடும்போதுதான் தோணுச்சு. சட்னு அவுங்களுக்குக் கொஞ்சம் ஜலேபியும் சமோஸாவும்  பொலினாவிலேயே வாங்கிக்கிட்டோம்.
நல்ல பெரிய கடைதான்.  நிறைய பொருட்களும் வச்சுருக்காங்க.  தொன்னூறு சதமானம் சீனப்பொருட்கள்தான். !   கண்ணாடி நாகம் ஒன்னு சூப்பர்.... 'நம்மவரை' நினைச்சு வாங்கிக்கலை :-) கடையில் இருப்பவைகளை விட அவுங்க வீட்டில் வச்சுருக்கும் ஆன்ட்டீக் கலைப்பொருட்கள் அட்டகாசமா இருந்ததாக எனக்குத் தோணுச்சு. அது சொந்தக் கலெக்‌ஷன் இல்லையோ !!! 
 தொட்டடுத்த கடையும் இதே வகை என்பதால்....   ஆண்ட்டீக் விரும்பிகள்  இங்கேயும் வரலாம்.....  தோழி ,  தன் மனசுக்குப் பிடிச்சதை செஞ்சுக்கும் விதம் எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு!  நல்லா வரட்டும் !
நம்ம யோகா வகுப்பில்  ஒருத்தர்,  நீண்ட விடுமுறையில் போறதால் அவுங்களே நமக்கு பிரிவுபசாரம் செஞ்சாங்க. ஃபுட் யோகா ! என்னுடைய ரெட்டைப்பிறவிதான் என்பதால் எனக்குக் கூடுதல் கவலை.  கவலையைத் தீர்க்க ரெண்டு  பர்ஃபியை உள்ளே தள்ளினேன்.   இனி ஒருக்கிலும் இளைக்காது  என்பது உறுதியாச்சே !
சரஸ்வதி பூஜைக்கு அழைப்பு வந்தது.  கடந்த சில வருஷங்களா இங்கே இந்தியர்களின் கூட்டம் அதிகரிச்சுருக்கு.  எல்லாம் நிலநடுக்கம் காரணமே....    ஊரை மீண்டும் கட்டியெழுப்ப ஆரம்பிச்சதுமுதல் கட்டுமான வேலைகளுக்காக வந்தவங்க.  அப்புறம் கோவிட் வந்ததால் நாட்டின் எல்லைகளை மூடி வச்சுட்டதால்.... பயணிகளா வந்து நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் தங்கியிருந்தவங்க,  படிக்க வந்துட்டுத் திரும்பப்போக முடியாமல் இருந்தவங்கன்னு  காரணங்களா இல்லை !   இதில் ஒரு குழுவினரின்  பூஜை(யாம்)
அஞ்சு மணிக்குப் பூஜை ஆரம்பம்னு சொன்னதால் அஞ்சுக்குப்போய்ச் சேர்ந்தோம்.  சின்னதா ஒரு பக்கம்  சிம்மவாஹினி படம் வச்சு அலங்காரம் பண்ணி வச்சுருந்தாங்க.  பெரிய மேடையில்  பாட்டுக்கச்சேரிக்கான  ஏற்பாடு.  பஜன் பாடுபவர்களுக்காக இருக்குமோ என்னவோ....    உள்ளூர் நேப்பாள் பண்டிட், குடும்பத்துடன்  வந்துருந்தார்.  நம்ம புள்ளையார் கோவில் சத்சங்கத்துக்கு  சிலநாட்கள்  இவரை வச்சுப் பூஜை செய்வதால் நமக்கு நல்ல பரிச்சயம் உண்டு.  கொஞ்ச நேரத்தில் நம்ம சநாதன் ஹால் பண்டிட்டும் வந்தார். இவர்தான் இங்கே பூஜையை ஆரம்பிச்சு வைக்கப்போகிறார்னு தெரிஞ்சது. 
லேடீஸ் எல்லாம் பரபரன்னு பூஜைக்கான பொருட்களை எடுத்து பண்டிட் கைக்கெட்டும் தூரத்தில் வச்சதும், பூஜையை ஆரம்பிச்சு எல்லோரும்  ஆரத்தி எடுத்தோம்.  பண்டிட்  கிளம்பிப்போயிட்டார். 

அடுத்த நிகழ்ச்சி என்னன்னு யாருக்கும்  தெரியலை.  ஆர்கனைஸர்ஸ் யார் ? எங்கே ?   மத்யானம்  வந்து எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு ரெடியாகி வர்றதுக்குப் போயிருக்காங்களாம்.  ஙே......

நிகழ்ச்சிக்கு வரும் மக்களுக்கு, டின்னர் ஏற்பாடும் இருக்கு என்பதால்  சாப்பாடு வந்து இறங்குது ஒருபக்கம்.  இன்னொரு பக்கம் ஏகப்பட்ட மைக், ஸ்டேண்டுகளில் !  போற போக்கைப்பார்த்தால் ஆளுக்கொன்னு கொடுத்து பாடச் சொல்வாங்களோ !!!  முக்கால் மணி நேரத்துக்கப்பால்  காத்திருக்கும் பொறுமை இல்லாமல், நாங்கள் கிளம்பி நம்ம ஹரே க்ருஷ்ணா கோவில் தரிசனத்துக்குப் போயிட்டோம். அன்றைக்கு சனிக்கிழமை வேற !  ஏழுமணிக்கு  நிகழ்ச்சிகள் ஒருமாதிரி ஆரம்பிச்சு, ராத்ரி பதினொன்னுவரை நடந்ததாகக் கேள்வி !

சனிக்கிழமைகளில் கூடுமானவரை நம்ம  ஹரேக்ருஷ்ணா கோவிலுக்குப் போய் வர்றோம்தானே !  அங்கே போகும்போது,  சாளக்ராமத்துக்குச்  சார்த்தும் மாலை எப்பவும் எனக்குத்தான் கிடைக்குது.  வேண்டுதல் வேண்டாமை இலன் 'அவன்' என்பதால் பூக்கள் சரிவரக் கிடைக்காத சமயங்களில் வித்தியாசமான  மாலைகளா  இருக்கும். இந்த முறை இப்படி !  அட! 

நம்ம வீட்டுத் துளசியும் பரவாயில்லாமல் நாமாகத்தான் இருக்காள் !  அடுத்த மாசத்தை நினைச்சால்தான்  மனசுக்குள் 'திக்'னு இருக்கு.  இதோ அடுத்த வாரம் இங்கே நியூஸியின் குளிர்காலம் ஆரம்பம், ஜூன் முதல் தேதி.  குளிரில் பிழைச்சுக்கிடக்கணுமேன்னு..... 

அப்ப  மே மாசம் வெயிலா ? 
ஏது ?  இங்கெதான் ஏப்ரலில்  இருந்தே குளிர் ஆரம்பிச்சுருதே.... கோவிலில் சாமியே உல்லன் ஜெர்ஸி போட்டுருக்காரே.....  

அப்ப ஜூன்?      

ஹா.... அதுவா?  அது அரசுக்கணக்கு!  

 எல்லாம்.....     க்ருஷ்ணார்ப்பணம் .....

4 comments:

said...

க்ருஷ்ணார்ப்பணம்

said...

விழாக்கள் , கொண்டாட்டம், ஆண்ட்டிக் கடை, உணவகம் என காலங்கள் இனிதாக கழிகிறது .
குளிர்காலம் சுகமாக கடக்கட்டும்.

said...

வாங்க விஸ்வநாத் ,


உண்மை உண்மை !

said...

வாங்க மாதேவி,

இன்னும் 22 நாள் இருக்கு அஃபீஸியல் குளிர்காலம் முடிய. நம்ம கணக்கில் அக்டோபர் 15 வரை குளிர் இருக்கும். எதுவும் நடக்கலாம்....