Friday, June 01, 2007

உயிரின் விலை $ 168.40


எப்படி இதைச் சொல்றதுன்னே தெரியலை.

இங்கே ஆக்லாந்து நகரில் மின்சாரக் கட்டணம் கட்டாத ஒரு வீட்டுலே இருந்து மின்சாரத்தொடர்பைத் துண்டிச்சுட்டாங்க. இது ஒரு பெரிய விஷயம் இல்லைதான் சாதாரணமா.ஆனா இந்த வீட்டுலே ஒரு 44 வயதுப் பெண்மணி, ( 4 பசங்களின் அம்மா) ஆக்ஸிஜன் கருவி மூலம் சுவாசிச்சுக்கிட்டு இருந்தாங்க.

பவர் கம்பெனிகள் 'லைன்' வேலை செய்ய இப்பெல்லாம் ஒப்பந்தக்காரர்களைப் பயன்படுத்தறாங்கதானே. அதில் ஒருத்தர் இவுங்க வீட்டுக்குப் ப்யூஸ் எடுக்கப் போனப்ப அந்தம்மா மூக்கில் குழாயோட இருந்ததைப் பார்த்தாராம்.அப்படியும் மின்சாரத்தைத் துண்டிச்சுட்டு வந்துட்டாராம். அதுக்கப்புறம் ரெண்டு,மூணு மணி நேரத்துலே அந்தம்மா இறந்துட்டாங்க. அவுங்க பயன்படுத்தும் அந்த சுவாசிக்கும் கருவி மின்சாரத்துலெ இயங்குதாம்.

இப்ப சிலர் பவர் கம்பெனியைக் குற்றம் சாட்டறாங்க. சிலர் ப்யூஸ் எடுத்த காண்ட்ராக்டரைக் குற்றம் சாட்டறாங்க. சிலர் அந்தக் குடும்பத்தினரைக் குற்றம் சாட்டறாங்க.

இதுக்கிடையில் தொலைக்காட்சியில் காமிச்ச குடும்பத்தோட நேர்காணலில்.அந்தம்மாவின் பெரிய மகன் ( வயசு 16/17 இருக்கும்) அம்மாவின் கடைசி நிமிஷங்களில் அவுங்களுக்குப் பிடிச்ச பாட்டை கிடாரில் வாசிச்சுக் காமிச்சேன்னு சொல்றான். (எங்கே போய் முட்டிக்கிறது? ஒரு ஆம்புலன்ஸைக் கூப்புட்டு இருக்கலாம் இல்லையா, பவர் நின்ன அடுத்த நிமிஷம்)

இத்தனைக்கும் இங்கே சம்பந்தப்பட்ட மின்சார பில்லின் தொகை $168.40தான்.

இதைப் பத்தின நியூஸி மக்களின் பலவேறு கருத்துக்களைப் படிச்சு ஒரே மனக்குழப்பமா இருக்கு. இதன் சம்பந்தப்பட்ட சில சுட்டிகளைக் கொடுத்துருக்கேன். நேரம் இருந்தாப் படிச்சுட்டு உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.

இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நாம் என்ன செய்யணும்? நம்ம இளைய தலைமுறைக்குஎன்ன செய்யச் சொல்லிக் கொடுக்கணும்?

17 comments:

said...

கண்டிப்பா குடும்பம் பேரிலே தான் தப்புனு தோணுது. சாதாரணமா பவர் கட் வந்து இருந்தா யாரை குற்றம் சொல்லி இருப்பாங்க?? கரண்ட் இல்லாம அவங்க உயிர் வாழ முடியாதுனா, ஆஸ்பத்திரில வெச்சுருக்கணும், இல்லை பில்லை ஒழுங்கா கட்டி இருக்கணும். கடைசில ஆம்புலன்ஸ கூட கூப்பிடலனா இவங்க தானே குற்றவாளி?? படத்தை பார்த்தாலும் $168 கட்ட முடியாதவங்களா தோணலை.

ஏதாவது சின்ன சாக்கு கிடைச்சா கூட மத்தவங்களை குற்றம் சுமத்தி, அதன் மூலம் பரிதாபத்தையும், பணத்தையும் சம்பாதிக்கறது தப்புனு தான் அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தரணும்னு நினைக்கிறேன்.

said...

நம்ம ஊர்ல இந்த மாதிரி ப்ரச்சனை எல்லாம் வராது.

நம்ம ஊர் கரெண்ட நம்பி உயிர் மூச்ச பணயம் வெக்க மாடாங்க்ய!

said...

மூத்த மகனுக்கு வயசு 20 தாம். ஆம்புலன்ஸ் உடனே கூப்பிட்டுருக்கணும். அம்மா வேண்டாம்னு சொன்னாலும்.

ப‌க்க‌த்து வீட்டுல‌ பேசி அங்க‌ இருந்து மின்சார‌ம் வாங்கி இருக்க‌லாம். எவ்வ‌ளவோ வழிக‌ள் இருந்திருக்கு அம்மாவை பிழைக்க‌ வைக்க‌. அம்மாவுக்கு கிடார்ல‌ பாட்டு வாசிக்க‌ற‌த‌ முக்கிய‌ம்னு நினைச்ச‌ ம‌க‌னை என்ன‌னு சொல்ற‌து

said...

என்ன சொல்றதுன்னே தெரியல..

யார் மேல குத்தம் சொன்னாலும் அநியாயமா ஒரு உயிர் போயிருச்சி...

அறிவுரை சொல்றது ஈசிங்க... ஆனா பதற்றமான சூழ்நிலையில என்ன செய்யணுங்கறத அனுபவம்தான் சொல்லித்தரும்..

பொற்கொடி சொல்றா மாதிரி ஒரு உயிரை பலிகொடுத்து மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தா அந்த குடும்பம் இதை செய்திருக்கும்?

நிச்சயம் இருக்காது...

said...

மின்சாரத்தை துண்டித்த ஊழியர் செய்தது கொலை.

மகன் செய்தது கருணைக்கொலை.

கையில் காசு இல்லாதவன் வேறு என்ன செய்யமுடியும்?

ஆம்புலன்சை கூப்பிட காசு இருந்திருந்தால் அவன் கரண்ட்பில்லை கட்டியிருக்க மாட்டானா?

பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை

said...

முன்னெச்சரிக்கை & தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது
அக்குடும்பத்தின் தவறு.

யார் மீது தவறிருந்தாலும் ஒரு உயிர் போச்சே.......

said...

ஆம்புலன்ஸைக்கூப்பிடக் காசு வேண்டாமே.
போன்போதுமே. ஒரு வேளை போன் பில்லும் கட்டலையோ.

மின்சாரம் சப்ப்ளையினால தான் நம்ம ஊரில ஷாக் அடிச்சுப் போவாங்க.
கட் பண்ணதால யாரு போகப் போறாங்க.
பொற்கொடி சொல்றமாதிரி போனப்போகட்டும்னு கடைசிப் பாட்டு வாசிச்சுட்டாங்களோ:-((

அநியாயம் துளசி.

said...

உங்க ஊரிலயும் இன்ஷுரன்ஸ் எல்லாம் இருக்கும்தானே.
என்னய்யா இது.

said...

டீச்சர்..

அந்தக் குடும்பத்தினர் மீதுதான் தவறு இருக்கிறது. மின்சாரத்தைத் துண்டிக்க வருபவர்கள் கண்டிப்பாக முன்கூட்டியே தகவல் தெரிவித்திருப்பார்கள். வருவார்கள் என்பது தெரிந்திருந்தும் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்திருப்பது வருத்தத்திற்குரியது.

எல்லா நாட்டிலும் சட்டம் என்பது சட்டம்தானே.. விதிமுறைகளை யாராக இருந்தாலும் பின்பற்றித்தான் ஆக வேண்டும். மின்சாரம் போன இரண்டு மணி நேரம் கழித்துத்தான் அவர்இ இறந்திருக்கிறார். உடன் இருந்த வாலிபன் கண்டிப்பாக உடனே ஆம்புலன்ஸ்க்கு சொல்லியிருக்க வேண்டும். சொல்லாதது அவனுடைய தவறு.. ஏன் சொல்லவில்லை.. ஏன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை என்ற பதிலில்தான் இதற்கான விடை உள்ளது.

said...

பவர் கம்பெனியோ ப்யூஸ் பிடுங்குபவரோ மனிதாபிமானத்துடன் நடந்திருக்கலாம். ஆனால் அந்தக் குடும்பத்தினர் இன்னும் சற்று பொறுப்புடன் நடந்திருக்கவேண்டும் என்று அவர்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.
பவர்கம்பெனிக்காரர்கள் ஒவ்வொரு தனி வாடிக்கையாளரின் தனிப்பட்ட சேவைகளை மனதில் கொண்டு செயல்படுவது கடினம்தான், ஆனால் கணினிமய உலகில் இயலாதது இல்லை.
பியூஸ் பிடிங்கியவரும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருவர் நாடகமாடுவதால் உண்மையா பொய்யா என மயங்கியிருக்கலாம்.
ஆனால் அந்தக் குடும்பத்தினர் அந்த அம்மணியின் உடல்நிலைப் பற்றி முழுதும் அறிந்தவர்கள் அவரை காப்பாற்ற ஏன் அடுத்த வீட்டிற்கு கொண்டு சென்றிருக்கக் கூடாது, இரண்டுமணிநேரத்தில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றிருக்கக் கூடாது, அல்லது இவ்வளவு உயிர்கொடுக்கும் கருவிக்கு பாட்டரி பாக் அப் செய்துகொண்டிருக்கக் கூடாது என பல வினாக்கள் எழுகின்றன. பொருளில்லாருக்கு இவ்வுலகமில்லை என்றாலும் அறிவில்லாதவர்களாகவும் இருந்திருக்கிறார்களே :(

said...

Arthur Hailey-ன் High Volatage என்று நினைக்கிறேன். அதில் ஒரு மின்சாரக் கருவியைச் சார்ந்துள்ள ஒரு தனி நோயாளிக்காகவே மிகவும் கஷ்டப்பட்டு, முனைந்து முயற்சியெடுத்து மின்சாரத்துறை சார்ந்தவர்கள் செயல்படுவதாகப் படித்து, நம் ஊரில்தான் உயிருக்கு அதுவும் ஏழைகளின் உயிர்களுக்கு மதிப்பில்லை; பணக்கார நாடுகளில் இவ்வளவு சிரத்தைஎடுத்துக் கொள்கிறார்களே என்று நினைத்தேன். மனிதர்கள் எல்லாரும், எங்கும் ஒன்றுதான் போலும்!
வருந்துகிறேன்.

said...

//Arthur Hailey-ன் High Volatage என்று நினைக்கிறேன்//

தருமி ஸார்

அது Overload - மின்சார நிறுவனத்தில் வாழ்ந்தது போல் எழுதியிருப்பார். நீங்கள் குறிப்பிட்டுள்ள life support இல் இருக்கும் அந்தப் பெண்மணியை ஒரு Black Out தினத்தில் எப்படிக் கையாள்கிறார்கள் என்று விவரித்திருப்பார்.

சரி. Arthur Hailey பற்றி இன்னொரு பதிவில் பின்னொரு நாளில் பேசலாம்.

துளசிக்கா

கரெண்ட் கட் பண்றதுன்னா நம்ம ஊர் பாணில வந்து 'கரண்ட்டு கட்டைய' பிடுங்கறதா அங்க நடக்குது? தகுந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளைக் கொடுத்துத்தான் தேதி நேரம் குறித்துத்தான் செய்திருப்பார்கள். இம்மாதிரி வருமானமில்லா நோயாளிகளுக்கு அரசாங்க மருத்துவமனை வசதிகள்ளாம் அங்க இருக்குமே? அம்மா சாகற நிலைல இருக்கும்போது இருவது வயசுப் பையன் கிடார் வாசிக்கறதெல்லாம் கொஞ்சம் இல்லை நிறையவே ஓவர் - சுத்த மடத்தனமா இருக்கு.

said...

என்னைப் பொறுத்த வரையில் அந்த குடும்பத்தினர் செயல்தான் தவறு. மீண்டும் வருகிறேன்.

said...

அவர்கள் வந்து மின்னிணைப்பைத் துண்டிக்கும் பொழுது உடனிருந்தவர்கள் யார்? 20 வயது மகன் என்றால் அவன் மீதுதான் தவறு. உடனே மருத்துவமனையை அணுகியிருக்கலாம். அக்கம் பக்கத்தவரை அழைத்திருக்கலாம். சொந்தக்காரர்கள் நண்பர்கள்...யாரையாவது கூப்பிட்டிருக்கலாம். 20 வயது என்பது சின்ன வயதல்ல. கிட்டார் வாசிச்சானாமே...கொமட்டுல குத்துங்க. அட...அவங்க அப்பாவுக்காவது போன் போட்டிருக்கலாம்ல. என்னவோ போங்க.

said...

வாங்க பொற்கொடி, சர்வேசன்,ச்சின்ன அம்மிணி, டெல்ஃபீன்,
டிபிஆர்ஜோ, செல்வன், சிஜி,வல்லி, உண்மைத்தமிழன்,
மணியன்,தருமி & சுந்தர்.

இங்கே ஆம்புலன்ஸ் உடனே கூப்பிட்டிருக்கலாம். அதுக்குக்
காசு கட்டாயம் கட்டணுமுன்னு இல்லை. ஆம்புலன்ஸ்க்காரங்க
அப்புறமா ஒரு பில் அனுப்புவாங்கதான். ஆனா கட்டாயம் அதுக்குக் காசுன்னு இல்லைங்க.
கட்ட முடியலைன்னா, காசு இல்லைன்னும் சொல்லலாம். அது ஒரு சேவைதான். அது பிரச்சனை
இல்லை. வெல்ஃபேர் இலாக்கா அதை செட்டில் செஞ்சுரும். குறைஞ்சபட்சம், பக்கத்துவீட்டுலே
போய் ப்ளக் பண்ணி இருக்கலாம். அந்த ஏரியா முழுசும் சமோவன்கள்தான் இருக்காங்க.

ஆஸ்பத்திரியிலும் எல்லாம் இலவச சிகிச்சைதான். அங்கே காசு ஒண்ணும் கட்டவேணாம். இன்ஸுரன்ஸ்
இருக்கான்னும் கேக்க மாட்டாங்க.

இந்த குறிப்பிட்ட குடும்பம் சமோவா நாட்டைச் சேர்ந்தவங்க. அவுங்க கல்ச்சுரல்படி குடும்பத்தின்
வறுமையை வெளியே சொல்றது இல்லையாம். இவுங்களுக்கே 4 புள்ளைங்களாச்சே. கட்டாயம் இன்கம்
சப்போர்ட் இருக்கும். அம்மாதான் சொன்னாங்களாம் ஆம்புலன்ஸைக் கூப்புட வேணாமுன்னு. இந்தப்
பையனும் பாட்டுப்பாடிக்கிட்டு இருந்துருக்கான். ( தமிழ்ப்படம் பார்த்திருப்போனா? அதுக்கும் ச்சான்ஸ் இல்லீங்களே)

காண்ட்ராக்டர் உள்ளெ வந்து பார்த்துட்டு, அதாவது மூக்கில் இருந்து ட்யூப் இருக்கறதையும் பார்த்துட்டுத்தான்
'நான் என் கடமையைச் செய்யணும்'னு சொல்லி ஃப்யூஸ் ஸை எடுத்தார்னு இப்ப அந்தப் பையன் சொல்றான்.
காண்ட்ராக்டரோ, அந்த மெஷின் டைரக்ட்டா பவர் சப்ளையில் கனெக்டட்னு அவருக்குத் தெரியாதுன்றார்.

சமோவன்களுடைய சாவு வீட்டுச் சடங்குகள் நம்ம பழக்கத்தைவிட வேறுமாதிரி இருக்கும். அதுலே வந்து
கலந்துக்கிட்டு இருக்கார் அந்தப் பவர் கம்பெனி CEO. வருத்தமும் தெரிவிச்சாராம்.

நியூஸிலாந்து இப்படி இதயமில்லாத நாடுன்ற தப்பான செய்தியை இந்த நிகழ்ச்சி உலகத்துக்குத் தந்துருச்சு ன்னு
பவர்கம்பெனிமேலே பிரதமர் படு கோவமா இருக்கார். எதிர்க்கட்சிகள் இதுதான் சாக்குன்னு, இதைப் பிடிச்சுக்கிட்டு
அவுங்க பங்குக்கு, ஆட்சி சரியில்லைன்னு கூவறாங்க.

பவர் கம்பெனிமேல் வழக்குப் போடுவோமுன்னு இப்பக் குடும்பம் சொல்லுது. அதுக்கு ஒரு வக்கீலும் கிடைச்சிருக்காங்க.

அந்தப் பவர் கம்பெனி சரியில்லைன்னு அதனால் பாதிக்கப்பட்ட இன்னும் சிலர் குற்றம் சாட்டறாங்க. நல்லவேளை
உயிர் இழப்பு ஒண்ணும் இல்லை அவுங்களுக்கு.

இப்ப இங்கே நாட்டில் உள்ள மத்த பவர் கம்பெனிகள் எல்லாம் அவுங்க வாடிக்கையாளர்களுக்கு அறிக்கை விட்டுருக்கு.
'இப்படி எதாவது லைஃப் சேவிங் டிவைஸ் இணைக்கப்பட்டிருந்தா பவர் கம்பெனிகளுக்குக் கட்டாயம் அறிவிக்கணும்.
அப்பத்தான் இப்படி அசம்பாவிதம் ஏற்படாமத் தவிர்க்க முடியும்'னு.

பின்விளைவுகள் இப்படியெல்லாம் இருந்தாலும், சரியான நடவடிக்கை இல்லாம ஒரு உயிர் போயே போச்சு.

ரெண்டு மணி நேரம் இருந்துருக்கு, சட்னு உதவியை நாடி இருக்கலாமுன்றது என்னோட அங்கலாய்ப்பு.

said...

துளசியக்கா!
இந்தக் குடும்பத்துக்கு வருமானம் இல்லாவிடிலும் உதவித் தொகை கிடைக்குமே! அப்படி ஒன்று நியூசியில் இல்லையா?
இப்படி மின்னில் இயங்கும் கருவி இருக்குதென்ற போது ,இவர்கள் சமூக சேவை நிறுவனத்துக்கு
அறிவித்து உதவி கேட்டிருக்கலாம்.
எந்த முன் அறிவுப்புமில்லாமல் வந்து
துண்டித்தால், அது மின் இலாகாவின்
பெருந்தவறு.
ஆனாலும் அந்த மகன் பக்கத்து வீட்டுத் தொலைபேசியை உபயோகித்து, அம்புலன்ஸ்சை அழைத்திருக்கலாம். அது அழைப்பு இலவசம், அல்லது பொதுத் தொலைபேசியில் கூட அழைத்திருக்கலாம்.
அவசர சிகிச்சை மிக வறிய நாடுகளில்
கூட அரச வைத்திய சாலையில் இலவசம்.
இன்னுமொரு விடயம்...அவுஸ்ரேலியா, அமெரிக்கா போல் அந்நாட்டின் பழங்குடி மக்களை,சென்று குடியேறிய ஐரோப்பியர் மாக்களாக கருதிச் சில உதவிகளே செய்யாது. அழியவிடுவது
போல் இந்தக் குடும்பமுமோ என ஐயுறுகிறேன்.
இந்தப் பாகுபாடு, இன அழிப்பில் இவர்கள் மன்னர்கள்.
நிச்சயம் இப்படி ஒரு நிலை அங்கு குடியேறிய ஐரோப்பிய சமூகத்துக்கில்லை.

said...

வாங்க கொத்ஸ், ராகவன்& யோகன்.

இவுங்க பழங்குடி மக்கள் இல்லீங்க. பக்கத்து நாடான சமோவாவில் இருந்து இங்கு வந்து குடியேறுனவங்க.
நியூஸி அரசாங்கத்துக்கும் சாமோவாக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கு. ஒவ்வொரு வருஷமும் ஒரு குறிப்பிட்ட
எண்ணிக்கை மக்களுக்கு இங்கெ நிரந்தரமா வசிக்கும் பி.ஆர். தர்றாங்க.
உதவித்தொகை எல்லாம் தாராளமாக் கிடைக்குதுதான். ஆனா இவுங்க பணத்தைச் செலவழிக்கும் விதம்
பார்த்தால் 'நமக்கு' சிலசமயம் எரிச்சலாவும் வரும். எது அத்தியாவசம்னு நாம் நினைக்கறோமோ, அதை
விட்டுட்டு வேற இனங்களில் செலவு செய்வாங்க. பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்தத் தெரியாத ஒரு இனம்.

நேத்து பாருங்க பிரதமரே அவுங்க வீட்டுக்குப் போயிட்டு வந்துருக்கார்.


மேலதிக விவரம் இங்கே.