Showing posts with label ஆஸ்ட்ராலியா.. Show all posts
Showing posts with label ஆஸ்ட்ராலியா.. Show all posts

Thursday, July 19, 2007

எ.கி.எ.செ? பகுதி 11


எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்? லைஃப்ஸ்டைல் மார்க்கெட். விதவிதமான மக்களும், கடைகளும். முதல்கடையே 'எனக்காக'ன்னு ஒரு இந்தியர் நடத்தும் நகைநட்டுக் கடை. ஜில்லாளி பில்லாளின்னு எல்லாம் ராஜஸ்தானி சமாச்சாரங்கள். அதுக்கடுத்து துணிமணிகள், கைவினைப்பொருட்கள், ஸ்கார்ஃப், கேக், பிஸ்கெட், கைரேகை நிபுணர்கள்னு பரவிக்கிடக்கு. ஒரு கூடாரத்துலே வருஷம் 365 நாளுக்கும் பிறந்ததேதி வச்சு மனுஷன் குணாதியசத்தைக் குறிப்பிட்டு அச்சடிச்சுத் தோரணமாக் கட்டி வச்சுருந்துச்சு. நம்ம நாளுக்கெல்லாம் அநேகமா சரியாத்தான் சொல்லி இருக்கு. தனிக் கடுதாசியா வாங்கணுமுன்னா ஒவ்வொண்ணும் அஞ்சு டாலர். அதான் நம்மளைப்பத்தித் தெரிஞ்சுபோச்சே(!!!) அப்ப எதுக்கு அனாவசியமா பத்து டாலர் செலவளிக்கணும்? ( கருமின்னு அதுலே போடலைபாருங்க. விட்டுப்போச்சோ?)

சின்ன மரத்துண்டுகளில் நகைப்பெட்டி மாதிரி செஞ்சு வச்சுருந்தாங்க ஒரு இடத்தில். அதோட திறப்பு ஆஸ்ட்ராலியாக் கண்டத்தின் டிஸைன். அழகா இருந்துச்சு. நாய் பூனைகளுக்கான அலங்காரம், படுக்கை, கழுத்துப்பட்டி, உடைகள்ன்னுஒரு கடை. பூனை உக்காரும் தூக்குமாடம் நல்லாவே இருக்கு. 'நம்மாளு'க்கு ரெண்டு முழு அறையே அட்டாச்டு பாத்ரூமோட கொடுத்துட்டதாலே இதை வாங்கிக்கலை. தலை அலங்கார சாமான்கள் கடையிலே விக்கும் பூவைஎப்படி வச்சுக்கணுமுன்னு கேட்ட சிறுமிக்கு கடைக்காரம்மா பூவை வச்சுவிட்டாங்க. ஒரு கடையில் கல் வித்துக்கிட்டு இருந்தாங்க.நமக்குக் கல்லுன்னாவே மனசு இளகிரும். அங்கே நின்னு கற்களை வேடிக்கைப் பார்த்துட்டு, ச்சின்ன சைஸுலேஇருக்கும் பாலீஷ்டு க்ரிஸ்ட்டல் & ஜெம் கற்களை ஒரு சின்ன அளவுக்கிண்ணம் ரெண்டு டாலர்னு வாங்கினேன்.( அதைப்போட்டு வைக்க ஒரு கண்ணாடிக் கப் இங்கே நம்மூரில் தேடி வாங்குது தனிக்கதை. சுண்டைக்கா காப்பணம்.சுமைகூலி........ முக்காப்பணம்)

நம்மூர்லே அந்தக் காலத்துலே எலந்தம் பழம், ஈச்சம்பழமெல்லாம் தெருவில் விக்கக் கொண்டாருவாங்க பாருங்க,அது ஞாபகம் வந்துச்சு. ஒரு சின்ன உழக்குலே அப்படியே குவிச்சு அளந்து போடுவாங்க. கூடவே கொஞ்சம் கொசுறும்கிடைக்கும். அதேதான். நான் அளவுக் கிண்ணத்துலே கும்மாச்சிக் கட்டிக்கிட்டு இருந்தேன் நிதானமா. இன்னும் எத்தனை கல் நிக்குதோநிக்கட்டுமுன்னு. கடைக்காரர் அதை ஒரு காகிதக் கவர்லெ போட்டுட்டு, இன்னும் அரைக்கிண்ணம் கொசுறும் கூடப் போட்டார்:-)

இது கோல்ட் கோஸ்ட்டுலே வாங்கின அகேட். பருந்து எப்படி இருக்கு?

மக்களுக்குப் பொழுது போகணுமேன்னு ஒரு இசைநிகழ்ச்சியும் ஒரு பக்கம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. பொலிவியா நாட்டு இசையாம். யாரும் நின்னு கேக்கலைன்னாலும் 'தேமே'ன்னு பாடிக்கிட்டு இருந்தாங்க.

அருமையான அமைப்போடு ஒரு ஆம்ஃபி தியேட்டர் இருக்கு. இன்னிக்கு நிகழ்ச்சிகள் ஒண்ணும் இல்லை. திடீர்னு என் குறுக்கே பாய்ஞ்சு ஓடுச்சு ஒரு குழந்தை. 'பிடி பிடி'ன்னு கூடவே ஒரு சத்தம். தமிழ்!!!!இது போதாதா நமக்கு? மதுரைக்காரங்களாம். வந்து 3 மாசமாகுதாம். இன்னிக்கு இங்கே சுத்திப் பார்க்க வந்தாங்களாம்.

இன்னும் கொஞ்சம் சுத்தியடிச்சுட்டு வண்டியை எடுக்க வந்தோம். இந்தக் கட்டிடத்தின் மாடியில்தான் ம்யூஸியம் இருக்கு. பக்கத்துக் கட்டிடம் தியேட்டர். நாளைக்கு இங்கே அபாரிஜின் நிகழ்ச்சி நடக்கப்போகுதாம்.

இந்த ஆறுமே ச்சும்மா சொல்லக்கூடாது. மக்கள்ஸ் விரும்புறமாதிரி அப்படி வளைஞ்சு வளைஞ்சு இல்லாத நெளிவுகள் எல்லாம் காட்டிக்கிட்டு இருக்கு. தண்ணி வியூக்குத் தவிக்கிறவங்க ச்சும்மா இருப்பாங்களா? இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுன்னு எட்டுத் திசைகளிலும் எதாவது பண்ணி வச்சுருக்காங்க. ஆத்தைக் கடக்கஅங்கங்கே பாலங்கள். ரயில் போக, வண்டிகள் போக, சைக்கிளும் பாதசாரிகளும் போகன்னு மொத்தம் 13 பாலங்கள்.

பகல்சாப்பாட்டுக்கு மறுபடி சிட்டிமால். மாலின் அந்தக் கோடியில் இருக்கும் கேஸினோவுக்கு ஒரு விஸிட் அடிக்காம நாட்டைவிட்டுப் போகக் கூடாதுன்னு விரதம். மாலின் நடுப்பகுதியில் மேடை போட்டு இசை நிகழ்ச்சி நடந்துக்கிட்டு இருக்கு. ஸ்பானீஷ் சங்கீதமுன்னு நினைக்கறேன். அருமையாப் பாடறாங்க. பார்வையாளர்களுக்காக மேடைக்கு முன்னால் நிறைய நாற்காலிகளைப் போட்டு வச்சுருக்காங்க. Mae Hilda Jitoli ன்னு ஒரு பேனர் விரிப்பு இருக்கு. கொஞ்ச நேரம்இருந்துட்டு, கேஸினோக்குள்ளே நுழைஞ்சோம். வெளியே முன் முற்றத்தில்(?) பெரிய உலோக உருண்டைகள்அலங்காரத்துக்கு இருக்கு. இந்த உருண்டைகள் என்னவோ சேதி சொல்லுதோன்னு மனசுலே தோணுச்சு.

கையிலே வெறும் எட்டு டாலர்தான் இருக்கு. உள்ளே மணி மெஷின் இருக்கும் அதுலெ எடுத்துக்கலாமுன்னு இருந்துட்டோம். அங்கே எல்லாரும் க்ரெடிட் கார்டு போட்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க. சில பாட்டிகள்கேஸினோ அங்கத்தினர் அட்டைகளை வச்சுத் தாளிச்சுக்கிட்டு இருக்காங்க. அஞ்சு செண்ட், ரெண்டு செண்ட், ஒருசெண்டுன்னு வெவ்வேற இயந்திரங்களில் இருக்கற எட்டை வச்சே விளையாடிக்கிட்டு இருக்கோம். நமக்கு அதிர்ஷ்டம் இருக்கற நாள் போல. அப்பப்பக் காசைக் கலெக்ட் பண்ணிக்கறேன். த சவுண்ட் ஆஃப் மணி ( ஃப்ரம் பக்கத்து மெஷின் பாட்டி) இஸ் கூல்!!! இப்பக் கையிருப்பு அஞ்சு டாலர். நிறுத்திக்கலாமுன்னு தோணுச்சு. கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் ரெண்டு மணி நேரம் ரெண்டுபேரும் விளையாடி இருக்கோம். மூணு டாலருக்கு இதைவிட மலிவான பொழுதுபோக்கு வேற எங்கே கிடைக்கும்? ஆனா நம்ம லிமிட் நமக்குத் தெரிஞ்சிருக்கணும். அது முக்கியம்:-)

நான் 'மேலே போனபிறகு, உனக்கு ரொம்ப போரடிக்குமே. உனக்கு மெம்பர்ஷிப் கார்டு வாங்கித் தந்துர்றேன்னு சொன்ன கோபாலுக்கு, 'கார்டு எல்லாம் வேணாம். தினம் வரமாட்டேன். வாரம் ஒருநாள்தான்'னு சொன்னேன்.

மால் கார் பார்க்கிங் முழுக்கத் தானியங்கி. காசை வாங்கிக்கக்கூட மெஷிந்தான். மணிக்கு அஞ்சு டாலர். (இங்கே எங்கூர்லே மணிக்கு 2.20. அதுவும் முதல் ஒரு மணி இலவசம்.) கொள்ளை அடிக்கிறாங்கப்பான்னு சலிச்சுக்கிட்டு அறைக்குத் திரும்பிக் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு அடுத்த ரவுண்டு கிளம்புனோம்.

ஆட்டமெல்லாம் முடிஞ்சது. இப்ப ஆன்மீகம்.

சனிக்கிழமையா இருக்கே. இந்த ஊரு ஹரே கிருஷ்ணாவுக்குப் போகலாமுன்னு வலையில் விலாசம் தேடி, (95 Bank Road, Graceville) கிளம்பியாச்சு. 1972லே ஆரம்பிச்ச கோயிலாம். வாடகை வீட்டில் சில வருசங்கள்இருந்துட்டு 1985லே இப்ப இருக்கும் இடத்தை வாங்கிக் குடிபெயர்ந்துட்டாங்க. கோயிலைத் தொட்டு ஓடும் நதி அழகாவேஇருக்கு. நிறைய மரங்கள் வச்சுப் பராமரிக்கிறாங்க. ஆனாலும், கோயிலுக்கான ஒரு 'லுக்' மிஸ்ஸிங்(-:

முன்வெராந்தாவில் மேசை போட்டு, புத்தக விற்பனை. இடதுபுறம் இருக்கும் சமையலறையில் இரவு உணவுக்கு வேலை நடந்துக்கிட்டு இருக்கு. உள்ளே பூஜை ஹாலில் ஐம்பொன்னால் ஆன உருவச்சிலை. ஒரு இருபதுபேர் பஜனை பாடிக்கிட்டு இருந்தாங்க. ஏழுமணிக்கு ஆரத்தி எடுத்துட்டு அப்புறம் சாப்பாடு.

கொஞ்சநேரம் உக்கார்ந்திருந்தோம். என்னவோ மனசே ஒட்டலை. அதனாலெ சாமியைக் கும்பிட்டுட்டு கிளம்பிவரும் வழியில் ஒரு இந்தியன் கடையில் சாப்பாடு வாங்கிக்கிட்டு அறைக்குத் திரும்பியாச்சு. தொலைக்காட்சியில் நல்லுறவைப் புதுப்பிக்கும் நிகழ்ச்சிகளா வந்துக்கிட்டு இருந்துச்சு.

ம்ம்ம்ம்ம்ம்ம் சொல்ல மறந்துட்டேனே........ சாயங்காலம் 'நம்ம பால்கனி'யில் உக்காந்து டீ குடிச்சுக்கிட்டு இருக்கும்போது,பக்கத்து அறையிலிருப்பவர் கதவைத் திறந்துக்கிட்டு பால்கனிக்கு வந்து சேர்ந்தார். ரெண்டு அறைக்கும் சேர்ந்தமாதிரி இருக்கு இது. நல்ல வயசான மனிதர். ஒரு எழுபது எழுபத்தியஞ்சு இருக்கும். நெடுநெடுன்னு உயரம். கொஞ்சம் கூன் போட்ட மாதிரி நடை.தலையெல்லாம் சுத்த வழுக்கை.குழி விழுந்த கண்ணில் எதோ கஷ்டம்போல இருக்கு. ரத்தக் கண்ணா இருந்தார். அறிமுக 'ஹை, நெய்பர்ஸ்' முடிஞ்சது. 'ஐயாம் கோயிங் டுபி ரூட்' உங்க அபார்ட்மெண்ட் பகுதியைப் பார்க்கப்போறேன்னு சொன்னார். காசா பணமா? பார்த்துக்குங்கோ. அட! ரொம்ப வசதியா இருக்கேன்னார். நாங்க போனபிறகு இங்கே மாத்திக்குங்கோன்னு சொன்னோம். இதுக்கு 50% கூடுதல் காசுன்றதை மட்டும் சொல்லலை.

இங்கே ஒரு பிஸினெஸ்ஸா வந்துருக்காராம். வீடு வாங்கிப்போடும் எண்ணமாம். இப்ப இருப்பது சிட்னி நகரமாம்.அவர் காமிச்ச ஒரு விளம்பர ப்ரோஷர்லே அட்டகாசமான இடம், இப்ப விலைக்கு வருது. ரெண்டு பக்கமும் கடல் தண்ணீர் இருக்கும் மனைகள். வெறும் மனையே எட்டு லட்சம் டாலர்கள். சன்ஷைன் கோஸ்ட் பக்கம் இருக்கு. 'கட்டாயம் ஒரு படகு வாங்கிக்கணும். அப்படியே வீட்டுமுன்னாலெ நிறுத்துனா ஒரு 'கெளரவமா' இருக்குமு'ன்னு சொன்னேன்.

ஆமாமாம். இவ்வளவு நல்ல மனையிலே வீடு கட்டணுமுன்னா அதுக்கு வேற காசு ரொம்ப வேணும். படகுக்கும் ஒரு பத்துலட்சம் டாலர்கள் வேணுமேன்னார். எல்லாம் பெரிய பெரிய பட்ஜெட்டுலே பேச்சு போய்க்கிட்டு இருந்துச்சு.எல்லாக் காசையும் இதுலே போட்டுட்டா அப்புறம் புவ்வா? தண்ணியைப் பார்த்துக்கிட்டே ப்ரெட் தின்னணுமோ(-:

என் மனைவியைக் கூட்டிட்டுவந்து காமிக்கணும். அவுங்களுக்குத்தான் கஷ்டமா இருக்கும். காலையிலும் மாலையிலும் ஒரு மணி நேரம் காரோட்டிக்கிட்டு வந்து என்னை வேலையில் விடணுமுன்னார். (பாவம். தினம் 4 மணி நேரம் காரோட்டிக்கிட்டு இருந்தா, வீட்டை எப்படி அனுபவிக்கறது?)

இந்த வயசுலே வேலையான்னு நான் முழிக்கறதைப் பார்த்துட்டு, எங்கே வேலைன்னு கோபால் கேட்டுட்டார். ஏர்ப்போர்ட்லே வேலையாம். அங்கே விமானத்தில் இருக்கும் ரேடியோ மற்ற தகவல் சாதனங்களைச் சரிபண்ணும் குழுவின் தலைவராம்.சிட்னியில் இருந்து இங்கே மாத்திக்கலாம்,பிரச்சனை இல்லை. ஆனால் அங்கே இவர் இதுக்கான பயிற்சிப்பள்ளியும் நடத்தறாராம். அதுவும் பிரச்சனை இல்லை. வாரம் ரெண்டொருநாள் போய்வந்துறலாமாம். ஆனால் திடீர்னு ஃப்ளைட்கிளம்ப ஒரு மணிநேரம் இருக்கும்போது ரேடியோ கண்ட்ரோல் வேலை செய்யலைன்னு அழைப்பு வந்துருமாம்.அப்ப எந்த நேரம் காலமுன்னு பார்க்காம ஓடணும். இவ்வளவு தூரத்துலே இருந்தா அது முடியுமான்றதுதான் முக்கிய பிரச்சனையாம். சொல்லிக்கிட்டே வந்தவர் திடீர்னு,

"எனக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்குமுன்னே ஒரு நல்ல இடம் வாங்கிப் போடணுமுன்னு மனசுலே இருக்கு. அப்பத்தான் ரிட்டயர் லைஃப் அனுபவிக்க முடியும். இப்பவே வயசு எனக்கு அம்பத்திநாலு ஆயிருச்சு"
எனக்குத் தூக்கிவாரிப்போட்டுச்சு. 'அடக்கடவுளே தாத்தான்னு நினைச்சவர் நம்மளைவிட வயசு கம்மியானவரா? 'அதுக்கப்புறம் தாத்தான்னு நினைச்சது தாத்தாவே இல்லைன்னு பயங்கர சிரிப்பு வந்துருச்சு.

உருவத்தைப் பார்த்து எதையும் சொல்ல முடியலை:-))))

தொடரும்.................

Monday, June 25, 2007

எ.கி.எ.செ? பகுதி 4

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?


ச்சும்மா குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டவேணாமுன்னு ஒரு காரை, Hertz லே வாடகைக்கு எடுத்துக்கிட்டோம். ஏற்கெனவே இங்கே நியூஸியில் இருந்து பதிவு செஞ்சு வச்சது. சாவியைக் கையில் வாங்கும்போது 'என்ன கலர்?'னு கேட்டா.......'நீங்க போட்டுருக்கும் உடுப்போட நிறம்தான். 'பர்கண்டி'ன்னு சொல்றார் அந்த ஆள்:-)



'ஊர் சுத்தறது' ஆரம்பிச்சது. சிட்டியை விட்டு வெளியே போற வழியில்தான் அரசாங்கக் கட்டிடங்களும், பொட்டானிக்கல் கார்டனும் இருக்கு.பார்க்கிங்தான் இங்கே ஒரு பெரிய கஷ்டம்,வண்டி நிறுத்த இடமே கிடைக்கறது இல்லை. அப்படியே ஓட்டிக்கிட்டு வந்தவுடன் ஒரு பெரிய பாலத்தைக் கடக்கும்போதே கிளைகிளையாப் பிரிஞ்சு ஆரம்பிச்சுருது அவுங்க மோட்டர் வே. சரியானபடி டைரக்ஷனைக் கவனிச்சு 'ஓட்டுனருக்கு'ச் சொல்லலைன்னா தொலைஞ்சோம். ( யாரோ சொல்லிக்கிட்டு இருந்தாங்களே, பெண்ணுங்களுக்கு மேப் படிக்கத் தெரியாதுன்னு. மெய்யாலுமா? )



ச்சும்மா சொல்லக்கூடாதுங்க. ரோடுகளின் தரம் அபாரம். ரொம்ப நல்லா பராமரிச்சு வச்சுருக்காங்க. காரில் எங்கியாவது காணாமப் போகணுமுன்னாக்கூடச் சான்ஸே இல்லை. கண்ணுலே இருந்து தப்பமுடியாத அளவுலே அறிவிப்புகள் வேற. எங்கே பார்த்தாலும் புதுசு புதுசாக் குடி இருப்புகள் கட்டிக்கிட்டு இருக்காங்க. கட்டிடத் தொழிலாளிகளுக்கு வேலை இன்னும் ஒரு முப்பது வருசத்துக்கு கேரண்டி.
இந்த' குவீன்ஸ் லேண்ட்'ன்னு சொல்றமே இந்த மாநிலம் முந்தி நியூ சவுத் வேல்ஸ் கூடத்தான் இருந்துச்சாம். இந்த மாநிலம் அங்கிருந்து பிரிஞ்சது 1859 லே. அப்ப இங்கிலாந்தின் மாட்சிமை பொருந்திய மகாராணி விக்டோரியா அவர்கள்தான் இதை பிரகடனம் செஞ்சு, இதுக்கான பத்திரத்தில் கையெழுத்துப் போட்டாங்க. அதனாலேதான் குவீன்ஸ் லேண்டுன்னு பெயரும் வந்துருச்சு.




இப்ப இதுதான் ஆஸ்தராலியாவில் ரெண்டாவது பெரிய மாநிலம். இங்கே வெள்ளையர்கள் கால் பதிக்குமுன்பே, ஒருநாப்பது அம்பதாயிரம் வருசங்களுக்கு முன்னாடியே இங்கே வந்துட்ட அபாரிஜன்கள் வாழ்ந்துக்கிட்டு இருந்த இடம்.ஏன் இந்த இடத்துக்கு மட்டும் ஸ்பெஷல்? இருக்கே! முக்கியமானது காலநிலை. வருசம் பூராவும் ஏறக்குறைய ஒண்ணுபோல ரொம்பச் சூடாவும் இல்லாம, குளிரும் இல்லாம மிதமான கால நிலை. 28 டிகிரிவரை போகும். அவ்வளோதான். குளிர்காலத்திலும்,பகலில் இதே சூடு இருந்தாலும், ராத்திரிகளில் பத்து டிகிரிக்குக் கீழே போறது இல்லை, பொதுவா. காத்துலே ஈரப்பதமும் ஜாஸ்தி. ( இட்லி மாவு நல்லா புளிச்சுரும் இல்லே? ஹூம்........என் கவலை எனக்கு)




இந்த மாநிலத்துக்கு 'சன்ஷைன் ஸ்டேட்'ன்னுச் செல்லப்பேர் இருக்குன்னா பாருங்க. இதோட கிழக்குப் பகுதியிலே இருக்கும் கடலை ஒட்டிய பகுதிகள் எல்லாம் இந்த கால நிலைக்காகவேக் கொண்டாடப்படுது. வடக்கே போகப்போக,மகர ரேகை, குறுக்காப் போகுறபடியாலே வருசம் முழுசும் அருமையான வெய்யில். வடக்கே இன்னும் மேலே போனா Cape York என்ற இடம்( முனைப் பகுதி) பூமத்திய ரேகைக்குப் பக்கத்துலெ போயிருது! இந்த நாட்டோட வரைபடத்தைப் பார்த்தீங்கன்னாவே இது புரிஞ்சுபோயிரும்.
குவீன்ஸ்லாந்தின் ஜனத்தொகையும் , நியூஸியின் மொத்த ஜனத்தொகையும் ஏறக்குறைய ஒண்ணுதான். ஆனா நிலத்தோட பரப்பளவுன்னு பார்த்தா ஆறரை மடங்கு பெருசு! கடற்கரைப் பகுதிகளை ரொம்ப நல்லாப் பராமரிக்கிறதுமில்லாம,அதுகளைக் கொண்டு வருமானம் கிடைக்க நல்லாவே வழி செஞ்சு வச்சுருக்காங்க. வருசம் முழுசும் சுற்றுலாப் பயணிகள் நிறைஞ்சு வழியுறாங்க. விண்ணை முட்டும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் இந்தப் பகுதிகளில் ஏராளம். இவ்வளவு இடம்இருக்கும்போது ஏன் உயரத்துலே போகணும்? கண்ணுக்குக் கடல் தெரியணுமுல்லெ? ஒவ்வொரு பகுதிக்கும் ஒருஅட்டகாசமான பேர். அந்தப் பேரே அங்கிருக்கும் நிலையைப் பளிச்சுன்னு வெளிச்சம் போட்டுக்காட்டுற மாதிரிதான்.கோல்ட் கோஸ்ட், சன் ஷைன் கோஸ்ட், சர்ஃபர்ஸ் பாரடைஸ், ப்ராட் பீச், ஃப்ளையிங் ஃபிஷ் பாய்ண்ட்'ன்னு 26 புகழ்பெற்ற கடற்கரைகள் இருக்கு.




வெளியாட்கள் வரவர இங்கே இருந்த பழங்குடிகள் மெல்ல மெல்ல உள்நாட்டை நோக்கிப் போயிட்டாங்க. உள்நாடுன்னா,பசுமை கிடையாது. முக்காவாசிப் பாலைவனம்தான்(-:


( ஒண்டவந்த பிசாசு.............. ஊர் பிசாசை விரட்டுன கதைதான்)



நாங்க(ளும்) ப்ரிஸ்பேன் நகருக்கு வெளியிலே வந்து, ஒவ்வொரு பகுதியாப் பார்த்துக்கிட்டே கண்ணுலே எதாவது மோட்டல் தெம்படுதான்னு போறோம். க்ளே ஃபீல்ட், விண்ட்ஸர், நியூ மார்கெட்ன்னு ஆங்கிலப் பேருங்க இல்லாம பல இடங்களில் பழங்குடிகள் வச்ச பேர்( மட்டும்) நிலைச்சு நிக்குது.' நுந்தா, புலிம்பா, யெரோங்கா, வூலூங்கப்பா,கொரிண்டா, கூமெரா,முராரி, காலம்வேல்'ன்னு அட்டகாசமான பேர்கள். இந்த அபாரிஜின்களுக்கும், நம்ம தமிழ்நாட்டு இருளர்கள் என்னும் மலைப்பகுதி மக்களுக்கும் உருவ ஒற்றுமை இருக்கறதாவும், கோண்டுவானா காலத்தில் ஆஸ்ட்ராலியாவும், இந்தியாவும் பக்கம்பக்கம் ஒட்டி ஒரே நிலப்பரப்பா இருந்ததாவும், அதுக்கப்புறம் கண்டங்கள் விட்டுவிலகிப் போனதாவும் படிச்ச ஞாபகம். அதுலே இந்த பழங்குடிகள் உடலெல்லாம் ஒரு சாம்பல்போல ஒண்ணைப் பூசிக்கிறதும், நட்சத்திரங்களையும்,ஆகாயத்தையும் பார்த்து வழிபடறது, தீ மூட்டி அதன் மூலமா ஆகாயத்துலே எங்கியோ இருக்கும் முன்னோர்களைத் தொடர்பு கொள்ளுறது இதெல்லாம்கூட அவுங்க நம்மாட்கள் என்ற எண்ணத்தை உண்டாக்குதுன்னும் 'தெய்வத்தின் குரல்'புத்தகத்தில் படிச்சதையும் வச்சு இந்தப் பெயர்களுக்கும் நம்ம தமிழ்ப்பெயர்களுக்கும் எதாவது சம்பந்தம் தோணுதான்னு மனசுக்குள்ளே ஒரு குடைச்சல். இப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லைன்னு வேறு சில ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்களாம்.



எது எப்படியோ, நாங்க போய்க்கிட்டு இருந்த வழியிலே காலம்வேல்னு போர்டு பார்த்ததும், வெற்றிவேல், வீரவேல்ன்னுஅந்தப்பகுதிக்குள்ளெ நுழைஞ்சோம். புதுப்புது வீடுகள் நிறையக் கட்டிக்கிட்டு இருக்காங்க. அநேகமா எல்லாமே ரெட்டைவீடுகளா இருக்கு. கட்டும் முறையும் இங்கே நியூஸியில் கட்டும் விதத்தைவிடக் கொஞ்சம் வேறுபட்டு இருக்கு. ரொம்ப இதைப்பத்தித் தெரியாதுன்னாலும், 'நமக்கும் வீடு கட்டுன அனுபவம்' ஒண்ணு இருக்கே. எனெக்கென்னமோ வீடுகள்அவ்வளவு இடைவெளி இல்லாம நெருக்கியடிச்சு நிக்குதுன்னு ஒரு தோணல். அங்கங்கே இருக்கும்ஷாப்பிங் செண்டர்களையும் நாங்க விட்டுவைக்கலை. வேடிக்கை மட்டுமில்லை, எல்லா இடத்திலும் ஒரு ஃபுட் கோர்ட் இருக்கு.ரெஸ்ட் ரூம்களும் நமக்குத் தேவையா இருக்கே.



காலம்வேல் ஷாப்பிங் செண்ட்டர் கொஞ்சம் சின்னதுதான். ஒரு சுத்து சுத்துனதில், அங்கெ ஒரு வெஜி & ப்ரூட்ஸ் கடையில் முலாம்பழமும், தர்பூசணியும் வாவான்னு கூப்புடுது. 'இனிமேத் தாங்காது'ன்னு, பக்கத்தில் இருந்த சூப்பர் மார்கெட்டில் நுழைஞ்சு, ஒரு கத்தியை வாங்கிக்கிட்டோம். அதுக்கு ஒரு மோல்டட் உறையும் இருக்கு. நல்ல பாதுகாப்புதான். பெரிய பெட்டிக்குள்ளே மறக்காம வச்சுக்கணும், திரும்பப்போகும்போது. இல்லேன்னா ஏர்போர்ட்லே மாட்டிக்குவோம்.



அந்தப் பகுதியில் கட்டிக்கிட்டு இருக்கும் ஒரு குடி இருப்புக்குப் போய்ப் பார்த்தோம். அறைகளில் மின்விசிறிகள் போட்டுக்கிட்டு இருந்தாங்க. அது என்னச் சிக்கனமோ, விளக்கும் விசிறியும் ஒரே யூனிட். நல்லாவே இல்லை(-:ஒரு சில வீடுகள் மட்டும் தனி வீடுகளா இருந்துச்சு. இங்கே தண்ணீர் கஷ்டம் இருக்குன்றபடியால்,கட்டாய மழைநீர் சேகரிப்புக்கு ஏற்பாடு செஞ்சுக்கணுமுன்னு ச்சிட்டிக் கவுன்ஸில் விதி இருக்கு. இப்பக் கட்டிக்கிட்டு இருக்கும் வீடுகளில் 5000 லிட்டர் டேங்க் பூமியில் புதைச்சுடறாங்க. ஏற்கெனவே கட்டுன வீடுகளில் அழகழகான டிஸைன்களில் வாங்கித் தோட்டத்தில் பொருத்தி இருக்காங்க. பிள்ளைகள் விளையாடும் ஜங்கிள் ஜிம் டிசைனில் கூட ஒரு வீட்டில் இருந்துச்சு. வீட்டின் வெளிப்புறச்சுவர் நிறத்துலேயே அதுக்குப் பெயிண்டும் அடிச்சு வச்சுடறதாலே பார்க்கறதுக்கு eye sore இல்லாம இருக்கு. தோட்டத்துக்குத் தண்ணீர் இதன்மூலமாத்தான் ஊத்தணுமாம். வீட்டின் மற்ற உபயோகங்களுக்குத்தான் அந்த 140 லிட்டர் தண்ணீர். தற்சமயம் தினம் ஒரு ஆளுக்கு 149 லிட்டர் சராசரியா செலவாகுதுன்னு டிவியிலே சொன்னாங்க. நல்ல தோட்டம் இருக்கற வீடுகளில்,இந்தத் தோட்டத்துக்குத் தண்ணீர், மழைநீர் சேகரிப்பு டேங்க் மூலம்'ன்னு அறிவிப்புப் பலகை வச்சுருக்காங்க.



சூரியனின் கிருபை எப்பவும் இருக்கறதாலே 'சோலார் ஹீட்டிங் ஹாட் வாட்டர் டேங்க்' எல்லா வீடுகளிலும் இருக்கு. ஆனாலும் கரண்ட் பில் குறையாதுன்னு நினைக்கிறேன். சூட்டுக்குத்தான் ஏ.சியும் ஃபேனும் வேண்டி இருக்கே. ஒரு பகுதியில் போகும்போது, 'கவனம் தேவை. இந்தத் தெருவில் தண்ணீர் தேங்கும் அபாயம் இருக்கு.வெள்ளப்பகுதி'ன்னு சாலைப் பராமரிப்பு அறிவிப்புப் பார்த்ததும் சிரிப்புத்தான் வந்துச்சு. அஞ்சு வருசமா மழை இல்லை இங்கே!




இன்னும் ஒரு மோட்டலும் கண்ணில் படலை. இங்கே நியூஸியில் ஹைவேயில் இருந்து சிட்டிக்குள்ளே வரும் மெயின்ரோடில் எதோ அணிவகுப்பு போல நிறைய மோட்டல்கள் இருக்கும். ஊருக்குள்ளெ வர்றவனை அப்படியே 'கப்புன்னு' அமுக்கிப்புடிச்சுப் போட்டுக்கும் விதமா. இங்கே என்னன்னா இதுவரை ...........



இங்கே நியூஸியில் இருந்து கிளம்பறதுக்கு முன்னேயே வலையிலே மோட்டல்களைத் தேடுனோம். எல்லா ஹொட்டல்,மோட்டல்களிலும் 23 ஆம்தேதி இடமே இல்லைன்னு தெரிஞ்சது. அப்பவாவது அது ஏன், எதுக்குன்னு விசாரிக்கத் தோணலை. வலையிலே விடுபட்ட இடம் இருக்கும். நேரில் பார்த்துக்கலாமுன்னு வந்துட்டோம். இப்பப் புதிர் விடுபட்டுச்சு.நியூ சவுத் வேல்ஸ்க்கும், குவீன்ஸ்லேண்ட் அணிக்கும் அன்னிக்கு ரக்பி மேட்ச் இருக்காம். (state of origin cup ) அதான் ஊருலே ஒரு இடம் பாக்கி இல்லாம நிறைஞ்சு கிடக்கு. 'அட!. ஆமாம். எப்படி இதைக் கவனிக்காம கோட்டை விட்டேன்'ன்னு கோபால் முழிக்க, 'ஆமாம் இவரெல்லாம் ஒரு ரக்பி ஃபேன்'னு நான் எதிர்ப்பார்வை விட...........



தொடரும்.

Thursday, June 21, 2007

எ.கி.எ.செ? பகுதி 3

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?

ப்ரிஸ்பேன் நகர வீதிகளில் அப்படியே நடந்து திரிஞ்சுக்கிட்டு இருந்தோம். மணி இப்போ மூணுதான். 25 டிகிரி வெய்யில்.கொஞ்சம் அறைக்குப்போய் ஓய்வெடுக்கலாமுன்னு ஒரு எண்ணம். மாலையில் மறுபடியும் 'மாலை' நோக்கிப் பயணம்.எல்லாம் க.கெ.கு.சுவர்தான். இந்த மால்களுக்குன்னு ஒரு வசீகரம் இருக்குங்க. அங்கே போனா பொழுதே போயிருது. எத்தனை வகை மக்கள். ச்சும்மா ஒரு இடத்துலே உக்காந்து வேடிக்கை பார்த்தாவே போதும்! அதுவும் இந்த குவீன் ஸ்ட்ரீட் மால் ஒரு திறந்தவெளி மால்னுதான் சொல்லணும். தெரு முழுசும் ரெண்டு பக்கமும் ரெண்டு ப்ளாக் நீளத்துக்குக் கடைகள்.வாகனங்கள் போக்குவரத்துக்கு அங்கே தடா. அதனாலே கவலையே இல்லாமல் குறுக்கும் நெடுக்குமா அலைஞ்சுக்கிட்டு இருக்கும் மக்கள் கூட்டம். கட்டிடம் எதுக்குள்ளேயாவது நுழைஞ்சு கீழே பேஸ்மெண்ட் போயிட்டோமுன்னா அடித்தளத்துலேயே ஊர்ந்து கடைகடையாப் போய்க்கிட்டே இருக்கலாம். அங்கங்கே ஃபுட் கோர்ட்(Food Court ) னு ஏராளமான உணவு வகைகள். இந்திய சாப்பாடுன்னு விக்கறவங்க ஒரு மலேசியன் இஸ்லாமியர் குடும்பம். அங்கேயே ச்சுடச்சுட 'நான்' பண்ணித் தர்றாங்க.

வழக்கமான ரூட்லே ( பார்றா.......ஒரு நாளில் வழக்கம், பழக்கமெல்லாம் வந்துருது!) போகாம 'ஆன்' தெருவுக்குள்ளே நுழைஞ்சோம். நடைபாதையில் சுள்ளி வச்சு தீ மூட்டி அதுலே ஒரு தூக்குச்சட்டியை வச்சுச் சூடா காப்பித்தண்ணி காய்ச்சுறாங்க, அஞ்சு 'வெள்ளை'க்காரங்க:-)

கிட்டப் போனதும் முழு விவரமும் கிடைச்சது. 1988லே உலக எக்ஸ்போ (World Expo ) நடந்தப்ப 'ஹுயூமன் ஃபேக்டர்'ன்னு சில சிற்பங்களை ஃபைபர் க்ளாஸ்லே செஞ்சு காட்சிக்கு வச்சுருந்தாங்களாம். அதுலே இருந்து ஒண்ணை ச்சிட்டிக்கவுன்ஸில் வாங்கி இங்கே வச்சு நகரை அழகுபடுத்தி இருக்காங்க. அதை அடுத்து ஒரு அழகான தேவாலயம்.

Ann Street Presbyterian Church 1840லே ஆரம்பிச்சு, வெவ்வேற இடத்துலே வழிபாடுகள் நடத்திட்டு,இப்ப இருக்கும் இடத்திலே 1854 லே கட்டுனது. இன்னும் இதுலே வழிபாடுகள் நடந்துக்கிட்டு இருக்கும் குவீன்ஸ்லாந்துலேயே பழமையான தேவாலயம்(Presbyterian Church) இதுதானாம். 1871லே நடந்த தீ விபத்துலே எரிஞ்சுப்போய், வெறும் சுவர்கள் மட்டும் தப்பிச்சதாம். அதையே புதுப்பிச்சு கட்டி இருக்காங்க.
அதைச்சுத்தி இருக்கும் அடுக்கு மாடி நவநாகரிகக் கட்டிடங்களுள் இது அப்படியே எதோ காலத்தில் உறைஞ்சாப்போல நிக்குது. அந்த செங்கல் சிகப்பும் ஒரு அழகாத்தான் இருக்கு.

அதுக்கு எதிர்வாடையில் நகரசபைக் கட்டிடம். பிரிட்டிஷ்காரர்கள் ஸ்டைலில் நிக்குது. முதல் மாடி முகப்பில் பெரிய பெரிய தூண்கள். (King George Square) அழகான முன் தோட்டம். அதில் தாமிரத்தில் செஞ்சு வச்சுருக்கும் மாடர்ன் சிற்பங்கள். சிற்பங்கள்னுகூடச் சொல்ல முடியாது. நவீன கலைப்பொருட்கள்னு வச்சுக்கலாம். கட்டிடத்தின் வலது பக்கம் இந்த நகரின் அரசுச் சின்னத்தில் இருக்கும் ஈமுவும், கங்காருவும் சிற்பமாகவே இருக்குமிடம், இப்போ எதோ பராமரிப்பு வேலைகள் நடக்கறதாலே மூடப்பட்டிருக்கு.

இதைக் கடந்து பக்கவாட்டில் திரும்புனா............. Anzac Square 'வார் மெமோரியல்' . உலகப்போர்கள் ரெண்டிலும் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை தரும் நிமித்தமாக் கட்டப்பட்டது. ரோமன் கட்டிடக்கலையின் சாயலில் வட்டமா தூண்கள். நடுவிலே அணையா ஜோதி. அந்த வளாகம் முழுசும் கீழே சுத்திவர இருக்கும் தோட்டத்தில் சிற்பங்களோ சிற்பங்கள். எல்லாம் வெவ்வேறு போர்களை நினைவூட்டுது. அந்தப் போர்களில் வீர மரணம் அடைஞ்சவங்களை எப்பவும் மறக்கக்கூடாதுன்ற உயர்வான எண்ணத்துக்கே மரியாதை செலுத்தணுமுன்னு தோணிப்போச்சுங்க. அடிபட்ட ஒரு ராணுவவீரரைக் காப்பாத்திக் கூப்பிட்டுப்போன ஒருத்தரும் இங்கே ஒரு சிலையில் இருக்கார். படியேறி மேலே வந்தால் நேர் எதிரே செண்ட்ரல் ஸ்டேஷன். இங்கிருந்து எல்லாப் பகுதிகளுக்கும் ரயில் போகுது. ஏர்ப்போர்ட் வரைக்கும் ரயிலிலே போகலாம். ரொம்ப வசதியா இருக்கு.

'எங்ககிட்டே ரயில் டிக்கெட் வாங்குனா ரெண்டு டாலர் லாபம். பத்தே டாலருக்கு ஏர்ப்போர்ட் போயிறலாம்'னு அறிவிப்பை ஹொட்டல் லாபியில் பார்த்தது நினைவு இருக்கு. Airtrain Service. ஒரு ஆளா இருந்தா இது உண்மையாவே லாபம்தான். ரெண்டு மூணுபேருன்னா டாக்ஸிதான் வசதி. இல்லேன்னா ரயிலடி வரை பெட்டிகளை உருட்டிக்கிட்டே வரணுமே!

ஒவ்வொரு தெருவாக் கடந்து எலிஸபெத் தெருவிலே நடந்தா செயிண்ட் ஸ்டீபன் கதீட்ரல் கம்பீரமா நிக்குது. சிட்டி மையத்துலே நாலுமுறை நடந்தாவே இந்த குவீன், ஆன், எலிஸபெத், சார்லெட், மேரி, மார்கரெட்ன்னு எல்லாத் தெருவும் பழகிரும்.

குறுக்கே போகும் தெருவுக்கெல்லாம் பொம்பளைப் பேருங்க. நெடுக்கே போறதுக்கெல்லாம், வில்லியம், ஜ்யார்ஜ், ஆல்பர்ட்,எட்வர்ட்னு ஆம்பளைங்க பேர்! வாழ்க்கைன்ற தறியிலே ஊடும் பாவுமா ஆண்களும் பெண்களும் இருக்கணுமுன்றஒரு தத்துவம் இங்கே ஒளிஞ்சிருக்கோ?

1850லே கட்டுன தேவாலயம் இந்த செயிண்ட் ஸ்டீபன் கதீட்ரல். கழுத்து வலிக்க அண்ணாந்து பார்க்கணும் அந்த உள் விதானத்தை. அம்மாடி.......... எவ்வளோ உயரம். அந்த உயரம் காரணமா சின்னக் குரலில் பேசுனாலும் கணீர்னு கேக்குது. சந்நிதானத்தைப் பார்த்து நாம் நின்னோமுன்னா நமக்கு இடப்புறம் அழகான பளிங்குச் சிலைகளா ரெண்டு தெய்வங்கள். பக்கத்துலே மெழுகுவர்த்தி ஏத்தறதுக்குள்ள எல்லா வசதிகளும் இருக்கு. இவர்தான் பரி. ஸ்டீபன் போல.ஒரு சிறுவனைக் கைப்பிடிச்சுக்கிட்டு நிக்கறார். நான் முதலில் இவரை செயிண்ட் கிறிஸ்டோபர்னு நினைச்சேன். ஒருவேளை அவர் கையில் இருந்த தடி காரணமான்னு தெரியலை. சந்நிதிக்கு அந்தப்பக்கம் சுவத்துலேயே பதிச்ச இன்னொரு பளிங்கு சிற்பம். இயேசுநாதரும் அவருடைய ரெண்டு சீடர்களும் உக்காந்துருக்காங்க. நடுவிலே ஒருமேஜை. அதைக் கடந்து வலப்புறம் திரும்புனா........ ஞானஸ்நானம் கொடுக்க தீர்த்தம் வைக்கும் பளிங்குப் பாத்திரமும் அதுலே இருந்தே அதேபளிங்கு உருகி, சீலையாகி அதுலேயே உருவானதுபோல ஒரு பெண்ணும், கருவில் உள்ள குழந்தையும்! எப்படி வர்ணிக்கறதுன்னே புரியலை. உங்களுக்காக படமாவே எடுத்துக்கிட்டு வந்துட்டேன். ஆலயத்தில் இருக்கும் ஸ்டெயின் க்ளாஸ் (stained glass windows)அலங்காரமெல்லாம் ஜெர்மனி, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்துன்னு பல இடங்களில் இருந்து வந்துருக்கு.

மறுவாசலில் வெளியே வந்தால் பிரமாண்டமான வெங்கல மணி. ரெண்டடி உயரக் காங்க்ரீட் மேடையில் நிக்குது.2856 கிலோ எடையாம். விலை ரொம்ப சல்லிசு. 250 பவுண்டுதான். ஆனா இது 1887 லே இருந்த விலை. கப்பலில்வந்து இறங்கி, 1888லே கோவிலில் பிரதிஷ்டை. திருமதி கெல்லியின் அன்பளிப்பு. தானம் கொடுத்துட்டு அதோட விலையையும்போட்டுட்டாங்களே !!! ( நம்மூரில் 'கோவிலில் ட்யூப் லைட்' ஞாபகம் வருது)
தொடரும்.............

Tuesday, June 19, 2007

எ.கி.எ.செ? பகுதி 2

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?


நண்பர் ஒருத்தர் , காலை பத்துமணிக்கு வரேன்னு சொல்லி இருந்தார். அதுக்குள்ளெ எழுந்து கடமைகளை ஒப்பேத்தி,குவீன் தெரு மாலுக்கு வந்தோம். ஹப்பாடா........... சூப்பர் மார்கெட் திறந்திருக்கு. முதலில் பாய்ஞ்சது தண்ணீர்பாட்டிலுக்கு. ஒன்னரை லிட்டர் 99 செண்ட். பார்த்தவுடனே தாகம் அடங்கிருச்சு. அப்படியே காய்கறி, பழங்கள் பகுதிக்கு வந்தால்............நெருப்பை மிதிச்சேன். ஒரே தீப்பொறி பறக்கும் விலைகள். வாழைப்பழம் 7 டாலர். ஆப்பிள் (ராயல் காலா) 5. தக்காளிப்பழம் கெட்ட கேடு 10 டாலர்! வயித்தெரிச்சலை அணைக்க தர்பூசணி மட்டும் 2 டாலர். அழகா பெரியதுண்டமா, பழத்தை நாலா வகுந்து வச்சிருக்கு. எப்படித் தின்னறது? வெட்டி எடுக்க கத்தி வேணாமா?

ப்ரேக் ஃபாஸ்ட்க்கான சாமான்கள், கொஞ்சம் பால் எல்லாம் வாங்கிக்கிட்டோம். மனசென்னவோ தர்பூசணி மேல்தான்.அறைக்கு வரும்போதுதான், பேசாம ஒரு கத்தி வாங்கிக்கலாமுன்னு தோணுச்சு. பகல் ரெண்டுவரை 'வுட்டி பாய்ண்ட்' என்ற இடத்தில் இருந்தோம். கடற்கரையை ஒட்டி இருக்கும் பகுதி. கடலைப் பார்க்கும் விததில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒண்ணுபிரமாண்டமாய் கட்டிக்கிட்டு இருக்காங்க. தண்ணீர் கொஞ்சம் உள்வாங்கி இருக்கும் இடத்தில் ச்சின்னதா ஒரு pier.அதையொட்டி வார் மெமோரியல். இதுக்கு எதிர்வாடையில் RSA கட்டிடம்.

திரும்பி வரும்போது ஜ்யார்ஜ் தெருவில் மாலுக்குப் பக்கத்தில் கொண்டு விட்டுட்டு நண்பர் போயிட்டார். தெருக்களோட பேர் எல்லாமே, ஆன், ஆல்பர்ட், மேரி, எலிஸபெத், மார்கரெட், சார்லெட், ஆலிஸ், எட்வர்டு, வில்லியம், ஜ்யார்ஜ்ன்னுஒரே ராயல் ஃபேமிலி அங்கத்தினர் பேருங்கதான். அங்கத்து மாலுக்குமே 'குவீன் ஸ்ட்ரீட் மால்'ன்னு பேர். ஆமாம், குற்றவாளிகளாப் பார்த்து இங்கே ஆஸ்தராலியாவுக்கு நாடு கடத்துன அரச குடும்பத்தின் மீது இவ்வளோ பற்றும் பாசமுமா? செஞ்சது மிக பெரிய குற்றங்கள்னு சொல்ல முடியாதாம். சிலர் பசிக்காக ரொட்டியைத் திருடுன குற்றம் செஞ்சவங்களாம்.கண்காணாத தேசத்துக்குக் கப்பலில் அனுப்பி வச்சது அரசாங்கம். அப்புறம் கொஞ்சம் 'ஆராய்ஞ்சு' பார்த்ததில் இன்னும் தகவல்கள்கிடைச்சது. ஒரு வேளை, நல்ல நாடா(வே)ப் பார்த்து(!) நாடு கடத்தி விட்டதுக்காக(வே) இந்த ராஜ விசுவாசமோ?

எப்படியும் வகுப்புக்கு வந்தது வந்தீங்க, அப்படியே நம்ம அண்டை நாட்டுச் சரித்திரம் 'கொஞ்சூண்டு' தெரிஞ்சுக்கறதுலே என்ன தப்பு? இடைக்கிடையில் தெரிஞ்சதைச் சொல்லவா?

நாங்க இதுக்கு முன்னேயே சில முறைகள் இங்கே ப்ரிஸ்பேனுக்கு வந்துட்டுப் போயிருக்கோம். அது பதிவர் ஆகும் முன்பு. இனிமேல் ப.மு & ப.பி. ன்னு காலத்தைப் பிரிச்சுக்க வேண்டியதுதான்:-)

ஆஸ்ட்ராலியாவுக்கு வெள்ளையர்கள் வந்து செட்டில் ஆகி இப்ப 219 வருஷம் ஆகுது. அவுங்க வந்து இறங்கியது சிட்னி பக்கம்தானாம். இந்த 219 வருசங்களில் நாடு நல்ல நிலமைக்கு முன்னேறி இருக்கு. இவுங்களுக்கு முன்பே அங்கே இருந்த பழங்குடிகள் 'அபாரிஜன்'களாம். இவுங்க இங்கே வந்து அறுபதாயிரம் வருசம் இருக்குமுன்னு சொல்றாங்க. லத்தீன் மொழியில் 'அபாரிஜின்' னு சொன்னா 'ஆரம்பத்துலெ இருந்தே இருக்கறதாம்'!(aborigine = from the biginning)

நாட்டை மொத்தம் ஏழு பகுதிகளாப் பிரிச்சிருக்காங்க. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவீன்ஸ்லாந்து,வெஸ்டர்ன் ஆஸ்தராலியா, நார்தர்ன் டெரிடரி, சதர்ன் ஆஸ்தராலியா டாஸ்மானியா இப்படி ஏழாப் பிரிஞ்சிருக்கு நாடு.தலைநகரம் இருக்கும் ஊர் கேன்பரா, ஆஸ்தராலியன் கேப்பிடல் டெரிரரின்னு தனி அந்தஸ்தோட இருக்கு.

என்ன யோசிக்கிறீங்க? எதாவது 'சட்'னு நினைவுக்கு வருதா? ம்ம்ம்ம்ம் நம்ம நாடு........அதே, அதே!! ஒவ்வொரு பிரிவும் ஒரு மாநிலம்(ஸ்டேட் ). தனித்தனி அரசாங்கம். அதுக்குன்னு முதல்வர், மற்ற மந்திரிகள் உள்ள சபை. அப்புறம் மொத்த நாட்டுக்கும் பொதுவா ஒரு பிரதமர், அவருடைய பாராளுமன்றம்னு இருக்கு. அடடா......... அச்சு அசலா நம்ம நாடேதான். புரிஞ்சுக்கறது ஒண்ணும் கஷ்டமே இல்லை:-) ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே இருக்கு.
(இதுதான் அந்தக் கெஸ்ஸோவாரி )

ஜனாதிபதிக்குப் பதிலா கவர்னர் ஜெனரல். இன்னும் மாட்சிமை தாங்கிய மகாராணியின் ஆளுகைக்கு உட்பட்ட சுதந்திர நாடுதான். சுதந்திரம் கிடைச்சது ஜனவரி முதல்தேதி 1901. போச்சுரா........ சுதந்திர தினமுன்னு கிடைக்கும் ஒரு நாள் லீவு அம்பேல்(-:

நாட்டின் மக்கள் தொகை போன வாரம்தான் 21 மில்லியன் கணக்கைத் தொட்டுச்சுன்னு நம்மூர் டிவியில் சொன்னாங்க.எம்மாம் பெரிய நாடு! அக்கம்பக்கம் பிக்கல் பிடுங்கல் இல்லாத தனி நாடு. முழுக்கண்டமும் இப்படி ஒரே நாடாஅமைஞ்சிருக்கு பாருங்க. அதிர்ஷ்டமய்யா அதிர்ஷ்டம்!

அப்படி மொத்த அதிர்ஷ்டமும் ஒரே மண்ணுலே போனா எப்படின்னு பாதிக்குப் பாதி பாலைவனம் & வெறும் செம்மண் பூமி.. ஒண்ணும் விளையாது. அதுவும் நாட்டுக்கு நட்ட நடுவாக் கிடக்கு கல்லும் மலையுமா (-: சுத்திவர இருக்கற ஊர்களில்தான் ஜனங்க இருக்காங்க. வெய்யில் மட்டும், குளிர் மட்டுமுன்னு சில இடங்கள். எல்லாம் கலந்து கட்டி இருக்கறதுன்னு பல இடங்கள்னு ஒரு மார்க்கமாத்தான் இருக்கு இந்த நாடு.

இந்த நாட்டைப் பத்தி நினைச்சவுடனே மனசுலே வரும் படம் காங்காரு. இதுலே மட்டும் 60 வகைகள் இருக்காம்.அதுலேயும் 'ரெட் கங்காரு'ன்னு சொல்றது ரொம்பவே விசேஷமாம். ரொம்பப் பெரிய சைஸ். ஆண்கள் கிட்டத்தட்ட90 கிலோ எடை. ரொம்ப உயரமா வேற இருக்குங்க. எழுந்து நின்னா சிலது ஏழடிக்கு வருதாம். அம்மாடியோவ்! ஆனால் பொண்ணுங்க மட்டும் கூடிப்போனா 30 கிலோ. கொடி இடைக் கங்கா(ரி)ருகளோ?

கங்காருக்கு அடுத்ததா கொஆலா(KOALA) வையும் ஞாபகம் வச்சுக்கணும். இது ஒரு அபாரிஜன் பேர். இதுக்கு அர்த்தம் 'குடிக்காதது' (no drink) . இங்கே 'குடி' ன்னா அது வேற குடி. அட... இது வெறுந் தண்ணி. இந்த மிருகங்கள் தண்ணீயே குடிக்காதாம். அப்ப தாக சாந்தி? இதுங்க தின்னுற இலையிலே இருக்கும் ஈரப்பதம்தான். ஒரே ஒரு வகை இலையை மட்டுமே இதுங்க தின்னும். அதுதான் யூகலிப்டஸ் இலைகள். முதல்தடவையா அந்த நாட்டுக்குப் போனப்ப,வழியில் பார்க்கற இந்த வகை மரங்களில் கொஆலா இருக்கான்னு அண்ணாந்து அண்ணாந்து கண்ணை நட்டுக்கிட்டு இருப்பேன். ஊஹூம்....... ஒண்ணும் தட்டுப்படலை(-: அப்புறம்தான் தெரிஞ்சது இதுங்களோட இனமும் கொஞ்சம் கொஞ்சமா அருகி வர்றதாலே அங்கங்கே சரணாலயம் ஏற்படுத்தி இதுகளை வச்சு வளர்க்கறாங்கன்னு. அந்திசாயற நேரம் தவிர மத்த சமயமெல்லாம் தூக்கமே தூக்கம் தானாம்.

ஒரு தடவை 'லோன் பைன்' கொஆலா சரணாலயம் (Lone Pine Koala Sanctuary in Brisbane) போனப்ப எடுத்தபடம் இதோ உங்களுக்காக.

இந்த கங்காரு, கொஆலா வகைகளைத்தவிர இந்த நாட்டுக்குன்னே பல ஸ்பெஷல் மிருகங்களும் இருக்கு. 'ப்ளாட்டிப்பஸ்,டிங்கோ, டாஸ்மானியன் டெவில், ஃப்ரில் நெக் லிஸ்ஸர்டு,பிக்மி போஸ்ஸம்,கடல்பசு' ன்னு எக்கச்சக்க வகைகள்.' கெஸ்ஸோவாரி'ன்னு கூட ஒரு பறவை தலையில் ஹெல்மெட்டு வச்சுக்கிட்டு இருக்கு. இதைப் பத்தியெல்லாம் நம்ம ஆஸி பதிவர்கள் நிறைய எழுதலாம்.
(கடல் பசு)
தொடரும்..........


Sunday, June 17, 2007

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?

மணி அஞ்சரைகூட ஆகலை, இப்படி மசமசன்னு இருட்டிக்கிட்டு வருதே'ன்னு ஒரு சலிப்பு.குளிர்காலமாம். இப்படித்தான் சீக்கிரம் இருட்டிருமாம். டாக்ஸி ஓட்டி சொல்றார்.வளைஞ்சு ஓடும் ஆற்றை ஒட்டியே போகும் ரோடு. ஆற்றின் குறுக்கே இருக்கும் பாலங்களில் மினுக் மினுக்ன்னு விளக்கு தோரணங்கள்.

ஜ்யார்ஜ் வில்லியம் ஹோட்டல். பேரே 'பிடுங்கித் தின்னுற மாதிரி' இருக்குல்லே? ஆனால் உஷார்! இருக்கும் இடம், லொகேஷன் அருமை. குவீன் தெரு மாலுக்கு ரெண்டே ப்ளாக்தான். ஏழாவது மாடி.நல்லவேளை மின் தூக்கி இருக்கு. அதைவிட்டுக் காரிடாரில் கால் வைத்தால் எதோ த்ரீ டி maze லே போறது போல வலது திரும்பி நேராப்போய், இடது திரும்பி, நேராப்போய், வலது திரும்பி, நாலடி வச்சு,ஒரு கதவுலே முட்டிக்கலாம். அதைத் திறந்தால்..................

உழக்குலே கிழக்கு மேற்குப் பார்க்கறாப்போல ஒன்னரை மீட்டர் இடம். மூக்கை நீட்டிக்கிட்டு முகத்தில் மோதும் விதமா 45 டிகிரி கோணத்தில் ஒரு கண்ணாடி பதிச்ச அலமாரி. அலமாரிக்கும் வலது பக்கச் சுவருக்கும் இடைவெளி ஒரு அரை மீட்டர்( இருந்தாலே கூடுதல்) அதுலே சைடு வாகாத் திரும்பித்தான் போக முடியும். அப்படிப் போயிட்டா, நீங்க முட்டி விழறது ஒரு படுக்கையில். படுத்தபடி மெள்ளத் திரும்புனா,அட்டாச்சுடு பாத்ரூம். திரும்பாம மேலே பார்த்தா ஒரு டிவி. இது எல்லாத்துக்கும் மேலேன்னு அங்கே(வேறெங்கே? மேலேதான்) ஒரு ஏர் கண்டிஷனர். (படத்துலே பார்த்தா .................ம்ம்ம்ம்ம்ம்ம்)
என்னதான் இது சிட்டியின் முக்கிய பாகத்துலே இருக்கற இடம்னு சொன்னாலும், அதுக்காக இப்படியா?ஒரு சதுர அங்குல இடமும் விடாம 'அலங்கரிச்ச' அறை. அந்த ஒன்னரை மீட்டர்லே ஒரு சன்னமான மேஜை, அதுக்கு ஒரு நாற்காலி. மேலே, அலமாரிக்கும் சுவத்துக்கு இடையில் ஒரு பலகை அடிச்சு அதில் மின்சாரக் கெட்டில். காஃபி, டீ போட்டுக்கலாமாம். ஆனால் 'ப்ரெட் டோஸ்ட்டரை உபயோகப்படுத்தாதே'ன்னு அறிவிப்பு. புகை வந்தவுடனே ஃபயர் அலாரம் அடிச்சு, விட்டத்தில் இருந்து படுக்கையில் பூ மழை பொழியுமாம்.
போட்டும், இப்படியாவது மழை வந்தால் ஆகாதா? அதான் அஞ்சு வருசமா மழையே இல்லாம காஞ்சு கிடக்காமே! திடுமுன்னு ஒரு இரைச்சல். என்னவோ ஏதோன்னு நடுங்கிக்கிட்டே இவரைப் பார்த்தால், 'சூடா இருக்கே'ன்னு அந்த ஏர்கண்டிஷனரை ஆன் செஞ்சிருக்கார். இப்ப என் முறைன்னு நான் டிவி ரிமோட்டை எடுத்துக்கிட்டேன். விரலை ஓடவிட்டா..................டக் டக் டக் டக் டக்! எண்ணி அஞ்சே சானல். அதுலே ரெண்டு வரிவரியா வருது. இன்னொண்ணு கறுப்பு வெளுப்புலே. என்னடான்னு பார்த்தால் இன்னொரு சானலின் ரிப்பீட்டு இது. உருப்படியா வர்றது ரெண்டே ரெண்டுதான்னு புரிஞ்சது. ஓஓஓஓஓஓ........இதைத்தான் 'அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை'ன்னு சொல்றமோ?

இது(வும்) இணையத்துலே பார்த்துத் தெரிவு செஞ்ச இடம்தான். முந்தி ஒருக்கா 'கோல்ட் கோஸ்ட்'லே இப்படி ஒரு இடத்தை இணையம் மூலம் புக் பண்ணிட்டு, நேரில் பார்த்தப்ப ................... அது ஒரு பெரிய கதை. அப்பாலே ஒருநாள் சொல்றேன். 'சூடு பட்ட பூனை'யா 'இந்த முறை ரெண்டே நாளுக்கு மட்டும் அறை எடுத்துக்கலாம். அப்புறம் அறை நல்லா இருந்தா இன்னும் அஞ்சு நாளுக்கு நீட்டிக்கலாமு'ன்னு சொன்னேன். இவர்தான் போய் இறங்குனவுடனே மறுநாளுக்கு அறை தேடிக்கிட்டே இருக்கணுமா? மூணு நாளைக்கு எடுக்கலாம். நமக்கும் அறை தேட நேரம் இருக்கும்னு சொன்னார்.

முகம் கழுவிக்கிட்டுக் கொஞ்சம் ஃப்ரெஷா வெளியே கிளம்புனோம். நல்லாவே இருட்டிப் போயிருந்துச்சு. ரொம்ப மெதுவா நடந்தாலும் அஞ்சு நிமிஷ நடையில் குவீன் தெரு மாலுக்குப் போயிரலாம். இதுலே ரெண்டு இடத்துலே ட்ராஃபிக் லைட்கள். என்னமோ மெஷின் துப்பாக்கியாலே சுடறமாதிரி 'டட்டட் டட்டட்'னு சத்தம் போட்டுக்கிட்டேப் பச்சை மனுஷன்' வரும்போது தெருவைக் கடக்கணும். சில சாப்பாட்டுக் கடைகள் மட்டுமே திறந்திருக்கு. மத்தபடிமாலே ஜிலோன்னு கிடக்கு. தலையில் நீல விளக்கோட ரெண்டு போலீஸ் கார்கள் மாலின் நடுப்பகுதியில் ஓரமா நிக்குது. 'விஷமி'களுக்கு எச்சரிக்கை. இங்கே சனி ஞாயிறுகளில் சாயங்காலம் அஞ்சோடு கடைகண்ணிகள் க்ளோஸ்.ஆளரவமே இருக்காது. அப்படி ஒண்ணும் பெரிய மாற்றம் இல்லை. சில வருஷங்களுக்கு முன்னே பார்த்த மாதிரியேதான் இருக்கு எல்லாமே, போலீஸ் கார் உள்ப்பட. நாளைக்குப் பொழுது விடிஞ்சு ஊருக்குள்ளே போனால் மாற்றங்கள் கண்ணுக்குத் தெரியுமோ என்னவோ?

ராத்திரியில் வயித்தைக் காயப்போடக் கூடாதேன்னு 'சப்வே'யில் சாப்பாட்டை(!) முடிச்சுக்கிட்டு, குடிக்க ஒரு பாட்டில் தண்ணீர் மறக்காம வாங்கிக்கிட்டோம். துளித்துளியாக் குடிச்சு நாளைக் காலைவரை ஒப்பேத்திக்கணும்.வெறும் 600 மில்லிக் குடிதண்ணீர் மூணு டாலர். வெளியே இறைஞ்சு கிடக்கும் கோக் வகையறா 99 செண்ட்.இங்கே தண்ணிக்கு நிஜமாவே 'வாழ்வு'தான். அஞ்சு வருசமா மழை இல்லையாம். அணைத் தண்ணீர் ரிசர்வ் வெறும் 20%தான் இருக்காம். அதனாலே ஒரு மனிதருக்கு 140 லிட்டர் தண்ணின்னு இப்ப அரசாங்கம் சொல்லுது. இப்படிக் காஞ்சுகிடக்குமா ஒரு நாடு? ஹூம்.........

எல்லாம் பூட்டி இருந்தாலும் அங்கங்கே கண்ணாடி ஜன்னல் ஊடாக எல்லாம் தெரியறமாதிரி பளிச்சுன்னு'விண்டோ ட்ரெஸ்ஸிங்' செஞ்ச ரெண்டு தெருக்களை இணைக்கும் குறுக்குப் பாதைக் கடைகள். ஆர்கேடுகள். அனக்கமில்லாத அமைதி. அட்டகாசமான கப்புகளுடன் ஒரு டீக்கடைக் கூட இருக்கு.
பக்கத்துத் தெருவழியாகத் திரும்பி வரும் வழியில்............. அட! இங்கே பார்றா!! பெஞ்சு மேல் ஒய்யாரமாப் படுத்து ஓய்வெடுக்கும் கங்காரு. அதுக்கு மனமகிழ்வூட்ட ட்ரம்பெட் வாசிக்கும் ரெண்டு கங்காருகள், ச்சும்மா அங்கே நின்னுக்கிட்டு இதை வேடிக்கைப் பார்க்கும் கங்காருன்னு ஒரு ச்சின்ன கங்காருக் கூட்டம்.

எந்த ஊர் இதுன்னு சொல்ல மறந்துட்டேனே.................. ப்ரிஸ்பேன்.
ஆஸ்ட்ராலியாவின் மூன்றாவது பெரிய நகரம்.

தொடரும்...................