Showing posts with label சுற்றுலா. Show all posts
Showing posts with label சுற்றுலா. Show all posts

Monday, July 23, 2007

எ.கி.எ.செ? (கடைசிப்) பகுதி 12

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?
இன்னிக்கு 'ஆஸி டு நியூஸி'ன்னு கிளம்பறோம். காரைக் காலையில் பத்துமணிக்குத் திருப்பிக் கொண்டுவிட்டுறணும்.'க்ரேஸ் டைம்' அரைமணி நேரம் இருக்கு. அதுக்குமேலே போச்சுன்னா ஒருநாள் வாடகை கூடிப்போயிரும்.இன்னிக்குக் காலையில் வழக்கமான(??) நடைப்பயிற்சி வேணாமுன்னு முடிவு பண்ணிட்டு, சாமான்களையெல்லாம் பொறுக்கி ஒழுங்கா மூட்டைக் கட்டிட்டு, 'கோயில்' பார்க்கப் போனோம். உள்ளெ எப்படித்தான் இருக்குன்னு பார்த்தே தீரணும்.


நல்ல கூட்டம் இருக்கு. எல்லாரும் நீட்டா உடை உடுத்தி வந்துருந்தாங்க. அன்பா வரவேற்று உள்ளெ போகச் சொன்னாங்க.பெரிய ஹால்தான். ஒரு கோடியில் மேடை இருக்கு. அதுலே ஒரு மைக். கீழே நிறைய நாற்காலிகள். குழந்தையும் குட்டியுமா ஜேஜேன்னு இருக்கு. கடைசி வரிசையில் உக்கார்ந்தோம். ஒரு ட்ரே மாதிரி (தூக்குக் கைப்பிடியுள்ளது) வரிசையா எல்லார்க்குமுன்னே நீட்டிக்கிட்டே வந்தாங்க. மக்கள் அதுலே இருந்து ஒண்ணை எடுத்து வாயில் கவுத்துக்கிட்டு திருப்பி காலிக்குப்பியை அதுக்குன்னு இருக்கும் இடத்துலே போடறாங்க. கண்ணு பார்த்தா கை செய்யாதா நமக்கு? அரை ஸ்பூன் அளவு வரும் தண்ணீர்( தீர்த்தம்?)அதுக்கேத்தமாதிரி ச்சின்ன்ன்ன்ன்ன டம்ப்ளர். நம்மூர்லே டீக்கடைக்காரப் பையன் கொண்டுவரும் அஞ்சாறு டீ க்ளாஸ் வைக்கும் கொத்து ஞாபகம் வந்துச்சு. ஆமாம். இதுக்கு எதுக்கு இவ்வளவு நோணாவட்டம்?பேசாம நம்மூர்லே ச்சொட்டு மருந்து தர்றதுபோல வாயிலே விட்டுறலாமே? ச்சுப். பேசப்படாது:-)

Mormons churchன்னு எப்பவோ கேட்டுருக்கேன். அவுங்களுதாம் இது. நாங்க இப்ப இருக்கறது 'மீட்டிங் ஹவுஸ்ன்னு சொல்ற ஞாயித்துக்கிழமை நிகழ்ச்சியாம். நேத்துக் காலையில் என்னவோ அலுவல் நடக்குதுன்னு எட்டிப் பார்த்த இடம்தான் கோவிலாம். இங்கே 'அதுக்குன்னு' இருக்கறவங்க மட்டுமே நுழைஞ்சு பூசை செய்வாங்களாம். அப்ப எல்லாரும் வெள்ளை உடுப்புப் போட்டுக்குவாங்களாம். வெள்ளைன்றது பரிசுத்தத்தைக் குறிக்குமாம். நல்லவேளை, நேத்து ஓசைப்படாம ஓடுனது.'நேரமாகுது, பிரசங்கம் ஆரம்பிச்சா அப்புறம் நடுவுலே எழுந்து போறது நல்லா இருக்காது'ன்னு இவர் சொன்னதாலேஒரு அஞ்சு நிமிஷம் மனசுக்குள்ளெ 'தெரிஞ்ச மாதிரி' சாமியைக் கும்பிட்டுட்டு வெளியே வந்தோம். வாசலில்உக்கார்ந்திருந்த பாட்டி(??) அன்போடு பேசுனாங்க. 'நேரமாயிருச்சு'ன்னு சொன்னேன். நம்மைப் பத்துன விவரம்கேட்டுட்டு, பத்திரமா பிரயாணம் இருக்கணுமுன்னு ஆசி வழங்குனாங்க. பெரியவங்க சொன்னா அது பெருமாளே சொன்ன மாதிரி இல்லையா?

ஷாலட் தெருவிலே வண்டியைச் சரியான நேரத்துக்குக் கொடுத்துட்டு, 'ஆன், ஆல்பர்ட், மேரி, எலிஸபெத், மார்கரெட், ஆலிஸ், எட்வர்டு, வில்லியம், ஜ்யார்ஜ்'களில் குறுக்கெயும் நெடுக்கேயுமாப் போய் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தோம். மாலின் நடுவிலே இன்னிக்கு பள்ளிக்கூடப் பசங்க நிறைய இருக்கும் 'கொயர் நிகழ்ச்சி'. சனி, ஞாயிறுகளில் இப்படி எதாவது நடத்துதாம் 'மால் மேனேஜ்மெண்டு'.

இந்தப் பக்கம் கழைக்கூத்தாடி வித்தை காமிக்கிறார், ஆங்கிலம் பேசிக்கிட்டு. நெத்தியிலே கத்தியைச் செங்குத்தா நிறுத்தறதும், மூணு கத்திகளை வச்சு அம்மானை ஆடறதும், அவரைச்சுத்தி ச்சின்னப்பிள்ளைகள் கூட்டமும் கனஜோர். இன்னொரு பக்கம் வாயில் ஒரு சின்னக்குழாய் மாதிரி ட்யூப் அடைச்சுக்கிட்டு கர்மசிரத்தையா ஓவியம் தீட்டிக்கிட்டு இருந்தார் ஓவியர். என்னென்னவோ நிறங்களை ஸ்ப்ரே செஞ்சு கடைசியில் பார்த்தா அட்டகாசமான கலர்காம்பிநேஷனில் படம். வரைஞ்சு தள்ளியது நிறைய விற்பனைக்கு இருக்கு ஒரு பக்கம்.

எலிஸபெத் தெருவில் இருக்கும் 'கோவிந்தாஸ் ரெஸ்டாரெண்ட்' லே( ஹரே கிருஷ்ணா) சாப்பிடலாமுன்னு போனா......... நம்ம அதிர்ஷ்டம்மாலையில் பஜனை & 'இலவச'விருந்து இருக்காம். அதுக்காக சமைச்சுக்கிட்டு இருக்கறதாலே இப்ப 'உணவுவிற்பனை' கிடையாதாம். ஃபுட்கோர்ட்டுக்கு வந்து 'நம்ம பேர் எழுதியிருந்த பீட்ஸா'வை முழுங்கிட்டு ரெண்டு மணிக்குஅறைக்கு வந்தோம். செக் அவுட் நேரம் காலை 10 மணி. ஆனா நமக்கு ரெண்டு மணிவரை லேட் செக் அவுட் அனுமதி இருந்துச்சு. மோட்டல்காரங்ககிட்டே, இனி எப்ப வந்தாலும் 4A ரூம் நமக்குன்னு சொல்லிட்டு, ஒரு டாக்ஸி எடுத்துக்கிட்டு ஏர்போர்ட்டுக்கு நதியின் குறுக்கே இருக்கும் பதிமூணில் ஒண்ணான 'ஸ்டோரி ப்ரிட்ஜ்' ( நல்ல பொருத்தமான பெயர்தான் இந்தக் கதை முடிவில்) வழியா விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம்.

சிட்னியின் ஹார்பர் ப்ரிட்ஜ் டிஸைன் செஞ்சு கட்டுனவர் ஜான் ப்ராட்ஃபீல்ட்(John Job Crew Bradfield) . இந்த'ப்ரிஸ்பேன் ஸ்டோரி ப்ரிட்ஜ்'ம் இவர்தான் டிஸைன் செஞ்சு கட்டிக் கொடுத்துருக்கார். முழுக்க முழுக்க ஸ்டீல்கன்ஸ்ட்ரக்ஷன்.cantilever bridge

அமெரிக்கா கொண்டுவந்த விதிப்படி இப்ப இங்கே ஆஸி, நியூஸியெல்லாம் 'ஸீத்ரூ ப்ளாஸ்டிக்' பையில் டூத்பேஸ்ட்,க்ரீம் இத்தியாதிகள் ( 100 ml அளவுக்குள்ளே மட்டும் இருக்கணுமாம்) போட்டு,செக்யூரிட்டி செக்கப் வரை கையிலே தனியா வச்சுக் காமிக்கணுமுன்னு தமிழைத் தவிர எல்லா மொழிகளிலும் அச்சடிச்சு வச்சு கூடவே அதுக்குண்டான ப்ளாஸ்டிக் பைகளையும் போட்டு வச்சுருக்காங்க. எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு பையைக் கையில் எடுத்துக்கிட்டேன்.

செக்யூரிட்டியில் நான் வெறும் ஹேண்ட் பேக் மட்டும் வச்சுருக்கறதைப் பார்த்துட்டு அதை ஸ்கேன் செஞ்சபிறகு, என்னோட ப்ளாஸ்டிக் பை சாமான்கள் எங்கேன்னு கேட்டதுக்கு, நான் 'எல்லாத்தையும் செக்கின் பண்ண பெரிய பெட்டியிலே போட்டாச்சு. கையோட கொண்டு போறதுன்னாதானே ப்ளாஸ்டிக் பையிலே போடணும்?' சொன்னேன்.

"இந்தப்பக்கம் வாங்க, உங்க ஹேண்ட்பேகைத் திறந்து காமிங்க. அதுலே என்னவோ இந்த இடத்தில் இருக்குன்னு, ஸ்கேன்லே காமிக்குது."

அந்த இடத்துலே திறந்து நான் வெளியே எடுத்தது ஒரு லிப்ஸ்டிக்.

"ஓ........ நீங்க இதைத் தனியா ப்ளாஸ்டிக்லே போட்டுருக்கணும்."

"அப்படியா? லிக்விட் ஐட்டம்தானே பையிலே போடணும்? "

"இல்லையில்லை. இதையும் ப்ளாஸ்டிக்லே போட்டுருக்கணும்."

போட்டாப்போச்சு. இதோன்னு கையிலெ வச்சிருந்த ப்ளாஸ்டிக்லே போட்டேன்.

'சரி. நீங்க போகலாமு"ன்னு அதிகாரி சொன்னார். ( ஹூம்........இந்த இடத்துக்கு இவ(ன்)ர் ராஜா.)

என்னவோ எதோன்னு ' எங்க இவர்' பதறியடிச்சு என் பக்கம் வந்தார்.

"ஒண்ணுமில்லை."
(லிப்ஸ்டிக்கை வச்சு, விமானத்தைக் கடத்திருவேன்னு ஒரு சந்தேகம்)

உள்ளே லவுஞ்சுலே போனபிறகு, 'அந்த ஸ்கேனர் இதைப் பிடிக்காம விட்டுருச்சு பாருங்க'ன்னு கைப்பையில் இருந்த இன்னொரு லிப்ஸ்டிக்கை எடுத்துக் கோபாலுக்குக் காமிச்சேன்.

"எல்லாரும் கையிலெ ப்ளாஸ்டிக் பை பிடிச்சுக்கிட்டு வந்தப்ப நீ வெறுங்கையா வந்ததுக்கே, உன்னை ரெண்டு கேள்வி கேக்கணுமுன்னு அவருக்குத் தோணி இருக்கு"

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. அந்த இடத்துக்கு அவ(ன்)ர் ராஜா"

விமானம் கிளம்ப இன்னும் மூணுமணி நேரம் இருக்கு.
அருமையான பாஸ்த்தா, சன் ட்ரைய்டு டொமாட்டோ, மஃப்பின், காஃபின்னு கொஞ்சம் நல்லாவே( ஓசியில்) சாப்பிட்டுட்டு, நான் தமிழ்மணத்திலும், இவர் தினசரியிலுமா மூழ்குனோம்.

ஊருக்கு வந்து சேர்ந்தப்ப இரவு 12 மணி. இறங்குன பிறகு, Agate Geode கொண்டு வந்துருக்கேன்னு டிக்ளேர் செஞ்சிருந்தேன்.எடுத்துக்கூடக் காமிக்கச் சொல்லலை. ஒரு கேள்வி மட்டும்தான்.

"கடையில் வாங்குனதுதானே?"
"ஆமாம்."
"நோ ப்ராப்ளம். "

இது.............. :-)
வெளியே வந்தவுடன் 'ஆச்சரியத்திலும் ஆச்சரியமா' மகள் வந்துகாத்திருக்காள். டாக்ஸி செலவு மிச்சம்:-)))))

இதுவரை பன்னிரெண்டு முறை கேட்ட கேள்விக்கு என்ன பதில்?

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?

12 பதிவு(ம்) எழுதலாம்:-)))))

நன்றி & வணக்கம்.

Thursday, July 19, 2007

எ.கி.எ.செ? பகுதி 11


எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்? லைஃப்ஸ்டைல் மார்க்கெட். விதவிதமான மக்களும், கடைகளும். முதல்கடையே 'எனக்காக'ன்னு ஒரு இந்தியர் நடத்தும் நகைநட்டுக் கடை. ஜில்லாளி பில்லாளின்னு எல்லாம் ராஜஸ்தானி சமாச்சாரங்கள். அதுக்கடுத்து துணிமணிகள், கைவினைப்பொருட்கள், ஸ்கார்ஃப், கேக், பிஸ்கெட், கைரேகை நிபுணர்கள்னு பரவிக்கிடக்கு. ஒரு கூடாரத்துலே வருஷம் 365 நாளுக்கும் பிறந்ததேதி வச்சு மனுஷன் குணாதியசத்தைக் குறிப்பிட்டு அச்சடிச்சுத் தோரணமாக் கட்டி வச்சுருந்துச்சு. நம்ம நாளுக்கெல்லாம் அநேகமா சரியாத்தான் சொல்லி இருக்கு. தனிக் கடுதாசியா வாங்கணுமுன்னா ஒவ்வொண்ணும் அஞ்சு டாலர். அதான் நம்மளைப்பத்தித் தெரிஞ்சுபோச்சே(!!!) அப்ப எதுக்கு அனாவசியமா பத்து டாலர் செலவளிக்கணும்? ( கருமின்னு அதுலே போடலைபாருங்க. விட்டுப்போச்சோ?)

சின்ன மரத்துண்டுகளில் நகைப்பெட்டி மாதிரி செஞ்சு வச்சுருந்தாங்க ஒரு இடத்தில். அதோட திறப்பு ஆஸ்ட்ராலியாக் கண்டத்தின் டிஸைன். அழகா இருந்துச்சு. நாய் பூனைகளுக்கான அலங்காரம், படுக்கை, கழுத்துப்பட்டி, உடைகள்ன்னுஒரு கடை. பூனை உக்காரும் தூக்குமாடம் நல்லாவே இருக்கு. 'நம்மாளு'க்கு ரெண்டு முழு அறையே அட்டாச்டு பாத்ரூமோட கொடுத்துட்டதாலே இதை வாங்கிக்கலை. தலை அலங்கார சாமான்கள் கடையிலே விக்கும் பூவைஎப்படி வச்சுக்கணுமுன்னு கேட்ட சிறுமிக்கு கடைக்காரம்மா பூவை வச்சுவிட்டாங்க. ஒரு கடையில் கல் வித்துக்கிட்டு இருந்தாங்க.நமக்குக் கல்லுன்னாவே மனசு இளகிரும். அங்கே நின்னு கற்களை வேடிக்கைப் பார்த்துட்டு, ச்சின்ன சைஸுலேஇருக்கும் பாலீஷ்டு க்ரிஸ்ட்டல் & ஜெம் கற்களை ஒரு சின்ன அளவுக்கிண்ணம் ரெண்டு டாலர்னு வாங்கினேன்.( அதைப்போட்டு வைக்க ஒரு கண்ணாடிக் கப் இங்கே நம்மூரில் தேடி வாங்குது தனிக்கதை. சுண்டைக்கா காப்பணம்.சுமைகூலி........ முக்காப்பணம்)

நம்மூர்லே அந்தக் காலத்துலே எலந்தம் பழம், ஈச்சம்பழமெல்லாம் தெருவில் விக்கக் கொண்டாருவாங்க பாருங்க,அது ஞாபகம் வந்துச்சு. ஒரு சின்ன உழக்குலே அப்படியே குவிச்சு அளந்து போடுவாங்க. கூடவே கொஞ்சம் கொசுறும்கிடைக்கும். அதேதான். நான் அளவுக் கிண்ணத்துலே கும்மாச்சிக் கட்டிக்கிட்டு இருந்தேன் நிதானமா. இன்னும் எத்தனை கல் நிக்குதோநிக்கட்டுமுன்னு. கடைக்காரர் அதை ஒரு காகிதக் கவர்லெ போட்டுட்டு, இன்னும் அரைக்கிண்ணம் கொசுறும் கூடப் போட்டார்:-)

இது கோல்ட் கோஸ்ட்டுலே வாங்கின அகேட். பருந்து எப்படி இருக்கு?

மக்களுக்குப் பொழுது போகணுமேன்னு ஒரு இசைநிகழ்ச்சியும் ஒரு பக்கம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. பொலிவியா நாட்டு இசையாம். யாரும் நின்னு கேக்கலைன்னாலும் 'தேமே'ன்னு பாடிக்கிட்டு இருந்தாங்க.

அருமையான அமைப்போடு ஒரு ஆம்ஃபி தியேட்டர் இருக்கு. இன்னிக்கு நிகழ்ச்சிகள் ஒண்ணும் இல்லை. திடீர்னு என் குறுக்கே பாய்ஞ்சு ஓடுச்சு ஒரு குழந்தை. 'பிடி பிடி'ன்னு கூடவே ஒரு சத்தம். தமிழ்!!!!இது போதாதா நமக்கு? மதுரைக்காரங்களாம். வந்து 3 மாசமாகுதாம். இன்னிக்கு இங்கே சுத்திப் பார்க்க வந்தாங்களாம்.

இன்னும் கொஞ்சம் சுத்தியடிச்சுட்டு வண்டியை எடுக்க வந்தோம். இந்தக் கட்டிடத்தின் மாடியில்தான் ம்யூஸியம் இருக்கு. பக்கத்துக் கட்டிடம் தியேட்டர். நாளைக்கு இங்கே அபாரிஜின் நிகழ்ச்சி நடக்கப்போகுதாம்.

இந்த ஆறுமே ச்சும்மா சொல்லக்கூடாது. மக்கள்ஸ் விரும்புறமாதிரி அப்படி வளைஞ்சு வளைஞ்சு இல்லாத நெளிவுகள் எல்லாம் காட்டிக்கிட்டு இருக்கு. தண்ணி வியூக்குத் தவிக்கிறவங்க ச்சும்மா இருப்பாங்களா? இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுன்னு எட்டுத் திசைகளிலும் எதாவது பண்ணி வச்சுருக்காங்க. ஆத்தைக் கடக்கஅங்கங்கே பாலங்கள். ரயில் போக, வண்டிகள் போக, சைக்கிளும் பாதசாரிகளும் போகன்னு மொத்தம் 13 பாலங்கள்.

பகல்சாப்பாட்டுக்கு மறுபடி சிட்டிமால். மாலின் அந்தக் கோடியில் இருக்கும் கேஸினோவுக்கு ஒரு விஸிட் அடிக்காம நாட்டைவிட்டுப் போகக் கூடாதுன்னு விரதம். மாலின் நடுப்பகுதியில் மேடை போட்டு இசை நிகழ்ச்சி நடந்துக்கிட்டு இருக்கு. ஸ்பானீஷ் சங்கீதமுன்னு நினைக்கறேன். அருமையாப் பாடறாங்க. பார்வையாளர்களுக்காக மேடைக்கு முன்னால் நிறைய நாற்காலிகளைப் போட்டு வச்சுருக்காங்க. Mae Hilda Jitoli ன்னு ஒரு பேனர் விரிப்பு இருக்கு. கொஞ்ச நேரம்இருந்துட்டு, கேஸினோக்குள்ளே நுழைஞ்சோம். வெளியே முன் முற்றத்தில்(?) பெரிய உலோக உருண்டைகள்அலங்காரத்துக்கு இருக்கு. இந்த உருண்டைகள் என்னவோ சேதி சொல்லுதோன்னு மனசுலே தோணுச்சு.

கையிலே வெறும் எட்டு டாலர்தான் இருக்கு. உள்ளே மணி மெஷின் இருக்கும் அதுலெ எடுத்துக்கலாமுன்னு இருந்துட்டோம். அங்கே எல்லாரும் க்ரெடிட் கார்டு போட்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க. சில பாட்டிகள்கேஸினோ அங்கத்தினர் அட்டைகளை வச்சுத் தாளிச்சுக்கிட்டு இருக்காங்க. அஞ்சு செண்ட், ரெண்டு செண்ட், ஒருசெண்டுன்னு வெவ்வேற இயந்திரங்களில் இருக்கற எட்டை வச்சே விளையாடிக்கிட்டு இருக்கோம். நமக்கு அதிர்ஷ்டம் இருக்கற நாள் போல. அப்பப்பக் காசைக் கலெக்ட் பண்ணிக்கறேன். த சவுண்ட் ஆஃப் மணி ( ஃப்ரம் பக்கத்து மெஷின் பாட்டி) இஸ் கூல்!!! இப்பக் கையிருப்பு அஞ்சு டாலர். நிறுத்திக்கலாமுன்னு தோணுச்சு. கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் ரெண்டு மணி நேரம் ரெண்டுபேரும் விளையாடி இருக்கோம். மூணு டாலருக்கு இதைவிட மலிவான பொழுதுபோக்கு வேற எங்கே கிடைக்கும்? ஆனா நம்ம லிமிட் நமக்குத் தெரிஞ்சிருக்கணும். அது முக்கியம்:-)

நான் 'மேலே போனபிறகு, உனக்கு ரொம்ப போரடிக்குமே. உனக்கு மெம்பர்ஷிப் கார்டு வாங்கித் தந்துர்றேன்னு சொன்ன கோபாலுக்கு, 'கார்டு எல்லாம் வேணாம். தினம் வரமாட்டேன். வாரம் ஒருநாள்தான்'னு சொன்னேன்.

மால் கார் பார்க்கிங் முழுக்கத் தானியங்கி. காசை வாங்கிக்கக்கூட மெஷிந்தான். மணிக்கு அஞ்சு டாலர். (இங்கே எங்கூர்லே மணிக்கு 2.20. அதுவும் முதல் ஒரு மணி இலவசம்.) கொள்ளை அடிக்கிறாங்கப்பான்னு சலிச்சுக்கிட்டு அறைக்குத் திரும்பிக் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு அடுத்த ரவுண்டு கிளம்புனோம்.

ஆட்டமெல்லாம் முடிஞ்சது. இப்ப ஆன்மீகம்.

சனிக்கிழமையா இருக்கே. இந்த ஊரு ஹரே கிருஷ்ணாவுக்குப் போகலாமுன்னு வலையில் விலாசம் தேடி, (95 Bank Road, Graceville) கிளம்பியாச்சு. 1972லே ஆரம்பிச்ச கோயிலாம். வாடகை வீட்டில் சில வருசங்கள்இருந்துட்டு 1985லே இப்ப இருக்கும் இடத்தை வாங்கிக் குடிபெயர்ந்துட்டாங்க. கோயிலைத் தொட்டு ஓடும் நதி அழகாவேஇருக்கு. நிறைய மரங்கள் வச்சுப் பராமரிக்கிறாங்க. ஆனாலும், கோயிலுக்கான ஒரு 'லுக்' மிஸ்ஸிங்(-:

முன்வெராந்தாவில் மேசை போட்டு, புத்தக விற்பனை. இடதுபுறம் இருக்கும் சமையலறையில் இரவு உணவுக்கு வேலை நடந்துக்கிட்டு இருக்கு. உள்ளே பூஜை ஹாலில் ஐம்பொன்னால் ஆன உருவச்சிலை. ஒரு இருபதுபேர் பஜனை பாடிக்கிட்டு இருந்தாங்க. ஏழுமணிக்கு ஆரத்தி எடுத்துட்டு அப்புறம் சாப்பாடு.

கொஞ்சநேரம் உக்கார்ந்திருந்தோம். என்னவோ மனசே ஒட்டலை. அதனாலெ சாமியைக் கும்பிட்டுட்டு கிளம்பிவரும் வழியில் ஒரு இந்தியன் கடையில் சாப்பாடு வாங்கிக்கிட்டு அறைக்குத் திரும்பியாச்சு. தொலைக்காட்சியில் நல்லுறவைப் புதுப்பிக்கும் நிகழ்ச்சிகளா வந்துக்கிட்டு இருந்துச்சு.

ம்ம்ம்ம்ம்ம்ம் சொல்ல மறந்துட்டேனே........ சாயங்காலம் 'நம்ம பால்கனி'யில் உக்காந்து டீ குடிச்சுக்கிட்டு இருக்கும்போது,பக்கத்து அறையிலிருப்பவர் கதவைத் திறந்துக்கிட்டு பால்கனிக்கு வந்து சேர்ந்தார். ரெண்டு அறைக்கும் சேர்ந்தமாதிரி இருக்கு இது. நல்ல வயசான மனிதர். ஒரு எழுபது எழுபத்தியஞ்சு இருக்கும். நெடுநெடுன்னு உயரம். கொஞ்சம் கூன் போட்ட மாதிரி நடை.தலையெல்லாம் சுத்த வழுக்கை.குழி விழுந்த கண்ணில் எதோ கஷ்டம்போல இருக்கு. ரத்தக் கண்ணா இருந்தார். அறிமுக 'ஹை, நெய்பர்ஸ்' முடிஞ்சது. 'ஐயாம் கோயிங் டுபி ரூட்' உங்க அபார்ட்மெண்ட் பகுதியைப் பார்க்கப்போறேன்னு சொன்னார். காசா பணமா? பார்த்துக்குங்கோ. அட! ரொம்ப வசதியா இருக்கேன்னார். நாங்க போனபிறகு இங்கே மாத்திக்குங்கோன்னு சொன்னோம். இதுக்கு 50% கூடுதல் காசுன்றதை மட்டும் சொல்லலை.

இங்கே ஒரு பிஸினெஸ்ஸா வந்துருக்காராம். வீடு வாங்கிப்போடும் எண்ணமாம். இப்ப இருப்பது சிட்னி நகரமாம்.அவர் காமிச்ச ஒரு விளம்பர ப்ரோஷர்லே அட்டகாசமான இடம், இப்ப விலைக்கு வருது. ரெண்டு பக்கமும் கடல் தண்ணீர் இருக்கும் மனைகள். வெறும் மனையே எட்டு லட்சம் டாலர்கள். சன்ஷைன் கோஸ்ட் பக்கம் இருக்கு. 'கட்டாயம் ஒரு படகு வாங்கிக்கணும். அப்படியே வீட்டுமுன்னாலெ நிறுத்துனா ஒரு 'கெளரவமா' இருக்குமு'ன்னு சொன்னேன்.

ஆமாமாம். இவ்வளவு நல்ல மனையிலே வீடு கட்டணுமுன்னா அதுக்கு வேற காசு ரொம்ப வேணும். படகுக்கும் ஒரு பத்துலட்சம் டாலர்கள் வேணுமேன்னார். எல்லாம் பெரிய பெரிய பட்ஜெட்டுலே பேச்சு போய்க்கிட்டு இருந்துச்சு.எல்லாக் காசையும் இதுலே போட்டுட்டா அப்புறம் புவ்வா? தண்ணியைப் பார்த்துக்கிட்டே ப்ரெட் தின்னணுமோ(-:

என் மனைவியைக் கூட்டிட்டுவந்து காமிக்கணும். அவுங்களுக்குத்தான் கஷ்டமா இருக்கும். காலையிலும் மாலையிலும் ஒரு மணி நேரம் காரோட்டிக்கிட்டு வந்து என்னை வேலையில் விடணுமுன்னார். (பாவம். தினம் 4 மணி நேரம் காரோட்டிக்கிட்டு இருந்தா, வீட்டை எப்படி அனுபவிக்கறது?)

இந்த வயசுலே வேலையான்னு நான் முழிக்கறதைப் பார்த்துட்டு, எங்கே வேலைன்னு கோபால் கேட்டுட்டார். ஏர்ப்போர்ட்லே வேலையாம். அங்கே விமானத்தில் இருக்கும் ரேடியோ மற்ற தகவல் சாதனங்களைச் சரிபண்ணும் குழுவின் தலைவராம்.சிட்னியில் இருந்து இங்கே மாத்திக்கலாம்,பிரச்சனை இல்லை. ஆனால் அங்கே இவர் இதுக்கான பயிற்சிப்பள்ளியும் நடத்தறாராம். அதுவும் பிரச்சனை இல்லை. வாரம் ரெண்டொருநாள் போய்வந்துறலாமாம். ஆனால் திடீர்னு ஃப்ளைட்கிளம்ப ஒரு மணிநேரம் இருக்கும்போது ரேடியோ கண்ட்ரோல் வேலை செய்யலைன்னு அழைப்பு வந்துருமாம்.அப்ப எந்த நேரம் காலமுன்னு பார்க்காம ஓடணும். இவ்வளவு தூரத்துலே இருந்தா அது முடியுமான்றதுதான் முக்கிய பிரச்சனையாம். சொல்லிக்கிட்டே வந்தவர் திடீர்னு,

"எனக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்குமுன்னே ஒரு நல்ல இடம் வாங்கிப் போடணுமுன்னு மனசுலே இருக்கு. அப்பத்தான் ரிட்டயர் லைஃப் அனுபவிக்க முடியும். இப்பவே வயசு எனக்கு அம்பத்திநாலு ஆயிருச்சு"
எனக்குத் தூக்கிவாரிப்போட்டுச்சு. 'அடக்கடவுளே தாத்தான்னு நினைச்சவர் நம்மளைவிட வயசு கம்மியானவரா? 'அதுக்கப்புறம் தாத்தான்னு நினைச்சது தாத்தாவே இல்லைன்னு பயங்கர சிரிப்பு வந்துருச்சு.

உருவத்தைப் பார்த்து எதையும் சொல்ல முடியலை:-))))

தொடரும்.................

Thursday, July 12, 2007

எ.கி.எ.செ? பகுதி 9

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?

'சூர்யா' எழுப்புனதும் சூடா ஒரு காஃபி குடிச்சுட்டு நடக்கறதுக்குப் போனோம். உடற்பயிற்சியைக் கொண்டாடும்
ஆட்கள் எங்கே பார்த்தாலும். ஆத்தங்கரை வழக்கத்தைவிட அதிகமான சுறுசுறுப்போடு இருக்கு. நேத்து விபத்து
நடந்திருக்கக் கூடிய இடத்தை ஒரு பயத்தோடு எட்டிப்பார்த்தேன். கர்மசிரத்தையா கயிறு கட்டிக்கிட்டி இருக்கார் ஒருத்தர்.
இறங்கி ஏறுவாராம். "தலையில் ஹெல்மெட் போட்டுக்கோ. உனக்கு எதாவது ஆச்சுன்னா அதுக்கு நான் ஜவாப்தாரி இல்லை"ன்னு
கவுன்சில் போர்டு வச்சுருக்கு. ச்சின்னச்சின்ன விரிப்புகள் போட்டு அதுலே பஸ்கி, தண்டால்னு பயிற்சி செய்யும் ஆட்கள், அதலபாதாளத்தில் ஆற்றங்கரையில்.













அந்த சர்ச் கோவிலுக்குள் போய் எட்டிப்பார்த்தோம். உள் அரங்கத்துலே ரெண்டுமூணுபேர் என்னமோ அலுவலா இருந்தாங்க.
பார்வையாளர்கள் நேரம் காலை 9 முதல்னு ஒரு அறிவிப்பைப் பார்த்ததும் ஓசைப்படாமல் அங்கிருந்து நகர்ந்துட்டோம்.



இன்னிக்கு சவுத் பேங்க் போகலாமுன்னு எண்ணம் இருந்துச்சு. இந்த ஆற்றின் தெற்குப் பகுதி. இந்த ஆறுமே ச்சும்மா சொல்லக்கூடாது. மக்கள்ஸ் விரும்புறமாதிரி அப்படி வளைஞ்சு வளைஞ்சு இல்லாதநெளிவுகள் எல்லாம் காட்டிக்கிட்டு இருக்கு. தண்ணி வியூக்குத் தவிக்கிறவங்க ச்சும்மா இருப்பாங்களா? இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுன்னு எட்டுத் திசைகளிலும் எதாவது பண்ணி வச்சுருக்காங்க.


சனிக்கிழமையானதாலே
விடுமுறைக்கூட்டம் இருக்குமுன்னு நினைச்சேன். கார் பார்க்கிங்தான் எங்கே போனாலும் ஒரு தொந்திரவு. இங்கே
ஒரு இடத்தில் ஒரு காருக்கு 10 டாலர்னு பார்த்து விசாரிச்சதுலே நாள் பூராவும் நிறுத்தினாலும் பத்து டாலர்தானாம்.
ஒருமுறை உள்ளே கார் போக பத்துன்னு சொன்னாங்க. கார் பார்க் கட்டிவிட்டாவே பில்லியனர் ஆயிறலாம் போல!






வண்டியை நிறுத்திட்டு நதிக்கரையில் நடந்து போனோம். இதோ நான் தேடிவந்த இடம். நேப்பாளக் கோயில். "நேப்பாள்
ஷாந்தி மந்திர்". 1988லே நடந்த எக்ஸ்போ சமயத்துலே நேபாள நாட்டுக் கலைஞர்கள் தயார் செஞ்சது. அப்பதான்
ஆஸ்ட்ராலியாவுக்கு வெள்ளையர்கள் வந்து 200வது வருஷக் கொண்டாட்டம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. உள்ளே
வெவ்வேற முகத்தால் எல்லாத் திசைகளையும் பார்க்கும் கடவுள் சிலை.





இந்தமுறை அதைச்சுற்றி கண்ணாடித் தடுப்புப்
போட்டு ஒரு ஸீத்ரூ உண்டியலா ஆக்கி வச்சுருக்காங்க. அழகான மரவேலைப்பாடுகள். செதுக்கி, இழைச்சு வச்சுருக்காங்க.
வெளியே ரெண்டு யானைகள், அழகான வெங்கல மணின்னு அம்சமா இருக்கு. உள்ளே ஒரு பெஞ்சு இருக்கை. பின்பக்கம்
புத்த ஸ்தூபியின் அடிப்பாகம் இல்லேன்னா நம்ம கோயில்களில் இருக்கும் பலிபீடம்போல ஒண்ணு இருக்கு. ஒரு ச்சின்ன
செவ்வக வடிவக் குளம். கோயிலைசுத்தி மூங்கில் வனம். அங்கே இருந்து மரப்பாதைப் பாலம் வழியா ஒரு ட்ராப்பிகல்
தோட்டத்தைக் கடந்து போகலாம். பெரணிச்செடிகள் நிறைஞ்சு கிடக்கு.மணி ப்ளாண்ட்ன்னு சொல்வோம் பாருங்க,
அது அப்படிச் செழிப்பா வளர்ந்து மரங்களில் ஏறிப்பிடிச்சிருக்கு. ஒவ்வொரு இலையும் பிரமாண்டம். பேசாம வாழை
இலைக்குப் பதிலா அதுலே சோறு போட்டுச் சாப்புட்டறலாம்( எங்கே போனாலும் இந்த சோத்து நினைவுதான். ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்........)







இந்த ஊருக்கு 'பீச்' இல்லாத குறையை நிவர்த்தி செய்யறதுக்கு ஒரு செயற்கைக் கடற்கரை உண்டாக்கி வச்சுருக்கு
நகரசபை. அதை எதுக்குப் பாழாக்கணுமுன்னு அங்கங்கே நீச்சலுடையில் மக்கள். சிலர் சூரியக்குளியல் நடத்திக்கிட்டு இருக்காங்க.
செயற்கைக்கடலில் ச்சின்னதா அலை அடிக்குது. இன்னும் அட்மாஸ்பியர்க்கு வலுவூட்ட வேணுமுன்னு ஒரு 'லைஃப்கார்டு' பத்தடி உயர ஏணியில் உக்கார்ந்து 'கடலில்' குளிக்கும் ஜனங்களைக் கவனிச்சுக்கிட்டு இருக்கார். அதைத் தொட்டடுத்து சின்னப் பிள்ளைகளுக்கான நீச்சல்குளம். நீர்விளையாட்டுதான் அங்கே.






இன்னிக்குச் சனிக்கிழமையாப்போனது நல்லதுதான். இங்கே ஒரு மார்க்கெட் சனிக்கிழமைகளில் நடக்குது. கூடாரங்கள்
நாலுவரிசைகளில் முளைச்சிருக்கு. அந்தப் பகுதிக்குப் போனால் கண்முன்னே எதுத்தாப்புலே, நேத்து இருந்து மனசுலே
குடைஞ்சுக்கிட்டு இருந்த விஷயம். ஆஸ்ட்ராலியாவின் பழங்குடியைச் சேர்ந்த ஒருத்தர் டிட்ஜெரிடூ வச்சு வாசிக்கிறார்.
மரத்தினால் செஞ்ச ஒரு ஒன்னரை மீட்டர் வரும் குழாய். அதில் அவர் ஊதும் சத்தம் விநோதமா ஒலிக்குது. நான் படம் எடுக்கறதைப் பார்த்துட்டு, 'எடுத்துக்கோ'ன்னு சொல்லி கையால் ஜாடை காமிச்சுட்டு அவர் ஊதிக்கிட்டே இருந்தார். இதை ஊதறதுக்கு எவ்வளோ மூச்சடக்கி வாசிக்கணும், இது எவ்வளோ கஷ்டமுன்னு தெரிஞ்சுக்கிட்டு இருந்ததாலே ஒரு நிமிஷம்
போதுமே. நன்றி சொல்லிட்டு, அவருக்குக் கொஞ்சம் காசு கொடுத்துட்டு வந்தேன்.

இங்கே போட்டுருக்குப் பாருங்க.






இவுங்களைப் பத்திக் கொஞ்சம் சொல்லணுமுன்னு இருக்கேன். அடுத்த பதிவுக்குக் கட்டாயம் வந்து பாருங்க.


கொஞ்சம் மனசைக் கல்லாக்கிக்கிட்டு வாங்க.


தொடரும்............

இன்னிக்கு கறுப்பு வெள்ளின்றது என் கணக்குலெ சரியாப் போச்சு(-:

தமிழ்மணத்துலே சேர்க்கவே முடியலை. இப்ப மறுபடியும் வெளியிட்டுப் பார்க்கலாமேன்னு ஒரு எண்ணம். ச்சூ மந்திரக்காளி......... எல்லாம் சரியாப் போச்சு:-)))) ஹங்........... போச்சா இல்லையா?

Monday, July 09, 2007

எ.கி.எ.செ? பகுதி 8

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?
அருள்மிகு ஸ்ரீசெல்வ விநாயகரைத்தேடி அலைஞ்சுக்கிட்டு இருக்கோம். காலையில் 11 மணிக்குக் கோயிலை பூட்டிருவாங்களாம். மேப்பைப் பார்த்துக்கிட்டேதான் வந்தோம். ஹைவே(Mt Lindesay Highway) 13 இல் வந்துசவுத் மெக்ளீன் பகுதியில், மெக்ளீன் பார்க்குக்கு அடுத்ததுன்னு விலாவரியாப் போட்டுருக்கு. இதோ,மூணாவது முறையா இதே இடத்துக்கு வந்து , மொதல்லே முழிச்சுப் பார்த்தமாதிரி அதே முறைப்பில் இப்பவும் அந்தப் பார்க்கை முறைச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கேன். பார்க்குக்கு இடது பக்கம் 'ஹிண்டூ டெம்பிள்'னு மேப்லே போட்டுருக்கே! ஆனா............ பார்க் இதோ இருக்கு. அப்ப டெம்பிள் எங்கே? கவுண்டமணி செந்தில் கணக்காப் புலம்ப வச்சுட்டாரே இந்த பிள்ளையார்!


காலையில் கண்ணு முழிச்சதே சூர்யா நினைவாலே. நம்ம ஜே எஸ் சூர்யாங்க. அவர் படத்துலே வர்ற ஆ(ஹ்)ஆ(ஹ்) சவுண்டு கேட்டுத்தான். இது ப்ரிஸ்பேன் காக்கா. அச்சு அசலா அப்படியே கத்துது. மோட்டலில் இருக்கும் யூகலிப்டஸ் மரம். ஒரு பட்டைகூட இல்லாம மொழுமொழுன்னு அப்படியே உரிச்சு வச்சுருக்கு. அதோ உச்சியில் சூர்யா.ச்சேச்சே...........காக்கா.
நாப்பது நிமிஷ ட்ரைவ். இங்கே வந்து அரைமணி நேரமாச்சு. சுத்தி சுத்தி வந்துக்கிட்டு இருக்கோம். யாரையாவது கேட்டுப்பார்க்கலாமான்னா ஈ, காக்கையைக் காணொம். மடிக்கணினியை எடுத்துக் கோவிலோட வலைப்பக்கத்தைப் பார்த்தால் அதுலே ஒரு தொலைபேசி எண் இருக்கு. அதுக்கு அடிச்சுக் கேக்கலாமுன்னு கூப்புட்டா........ மணி அடிக்குதே தவிர,யாரும் எடுக்கலை. பூசை நேரம் 9 மணிக்காம். இப்பவே மணி ஒம்போதேகாலாயிருந்துச்சு. பத்தரை மணிக்கு ஒரு நண்பரை, வேற ஒரு இடத்தில் சந்திக்கறதா ஒரு முன்னேற்பாடு. 25 நிமிஷப் பயணம் போகணும்.

பார்க்குக்கு இந்தப்பக்கம் எதிரெதிரா ரெண்டு வீடுகள். ஒரு வீட்டுக் கதவைத் தட்டினோம். வீட்டம்மா நல்லவங்களா, இன்முகத்தோடு சொன்னாங்க. கோயில் அங்கேதான் இருக்காம்(!!!) அதுக்கு நுழைவாசல் இப்ப நாங்க நிக்கற தெருவுக்கு முன் தெருவாம். நாங்க முதல்லே வந்த ஹைவேயில் திரும்பிப்போனா முதல் இடது பக்கம் கோயில்.தொந்திரவு கொடுத்துட்டோம். மன்னிச்சுக்குங்கன்னதுக்கு, அட....... நீங்கவேற. நிறையப்பேர் இப்படி எங்களைத்தான்வந்து கேக்கறாங்க. பழகிப்போச்சு'ன்னு சொன்னாங்க.

ஒரு போர்டாவது வச்சுருக்கலாம் கோவில் இந்தப் பக்கமுன்னு. புலம்பிக்கிட்டே அவுங்க சொன்ன முதல் இடது திரும்புனா இந்துக் கோயில்னு ஒரு போர்டு இருக்கு. எப்படி இதைத் தவறவிட்டோம்? ம்ம்ம்ம்........ புரிஞ்சுபோச்சு.மெயின் ரோடைப் பார்க்காம ஒரு ஆங்கிளில் இருக்கு (-: வண்டியை உள்ளெ கொண்டு நிறுத்திட்டு,கோயிலின் பக்கவாட்டுக் கதவுக்குள்ளெ ஓடி நுழையறப்ப பூஜைமணிச் சத்தம் கணகணன்னு ஒலிக்குது. பிள்ளையாருக்கு நைவேத்தியம் காமிச்சுக்கிட்டு இருக்கார் குருக்கள். இன்னொருத்தர் கையில் ஒரு பெரிய ஜால்ரா. ச்சின்ன டவரா போலஒரு கிண்ணம். உள்ளே ஒரு பிடி மஹா நைவேத்தியம்( வெறுஞ்சோறு) ஒரு பெரிய கட்டி கற்பூரத்தை ஏத்திஒரு சுத்துச் சுத்திட்டு அந்த தீச்சுவாலைமேலே உள்ளங்கையை வேகமா ஆட்டி 'கப்'னு கற்பூரத்தை அணைச்சார் குருக்கள்.

என்ன நடக்குது? ஆ........ன்னு பார்க்கறேன். அந்தக் கற்பூரத்தட்டு, நிவேதனம் இருக்கும் கிண்ணம் எல்லாம் எடுத்துக்கிட்டு,கருவறையின் வலது பக்கச்சுவரில் இருக்கும் இன்னொரு தெய்வ உருவத்துக்கு முன்னால் கற்பூரத்தை மறுபடி கொளுத்தி,கிண்ணத்தைத் திறந்து காட்டி கற்பூர ஆரத்தி ஒரு சுத்து, மறுபடி கையை விசிறுனதுலே கப்னு கற்பூரம் அணைஞ்சது. இப்ப அடுத்து இன்னொரு சந்நிதி. எல்லாம் முன்னே சொன்னபடி. எனக்குப் புரிஞ்சுபோச்சு, இங்கத்து சிஸ்டம். ஜால்ரா தட்டுறவர் கூடவே போறார். அவர் பின்னால் நாங்களும். வலம் வந்துகிட்டே இடது வலதுன்னு ரெண்டு பக்கமும் இருக்கும்குட்டிக்குட்டிச் சந்நிதிகளை தரிசிச்சுக்கிட்டே வர்றோம். எல்லாருக்கும் காமிச்சபிறகு அதே பக்கவாட்டுக் கதவு வழியா குருக்கள் போயிட்டார்.

நாங்க ரெண்டுபேர் மட்டும் கொஞ்சம் ஆறஅமர மறுபடி ஒவ்வொரு சந்நிதியாப் பார்த்துக்கிட்டே வந்தோம். பண்ணைகளில் இருக்கும் ஷெட் போல ஒரு இடம். இதையே கோவிலா மாத்தி இருக்காங்களோ?

கோவிலுக்குள்ளெ நுழைஞ்சது இடதுபக்கக் கதவு வழியா. இது அர்த்த/மகா மண்டபம். முன்வாசலைப் பார்த்த ஒரு சந்நிதி. ஸ்ரீ செல்வ விநாயகருக்கு. அழகான மண்டபம். கருவறையைச் சுத்தி வலம்வரலாம். வலம் வரும்போது பின்னால் திறந்தவெளியா இருக்கும் முற்றத்தில் நமக்கு இடது புறம் ஆஞ்சநேயர் அவருக்கு நேர் எதிரே ஸ்ரீதேவி, பூதேவி சகிதமுள்ள ஸ்ரீ நாராயணன். நமக்கு வலதுபக்கம் வள்ளி தேவானையுடன் ஸ்ரீ முருகன். கொஞ்சமா சந்தனம் பூசிச் சந்தனக்காப்பில் இருந்தார். அவருக்கு நேர் எதிரே சரஸ்வதி.

கருவறையின் வெளிப்பக்கச் சுவர்களில் தட்சிணாமூர்த்தி, (பிள்ளையாருக்கு நேரே பின்னால்) லிங்கோத்பவர்,பிரம்மா.இவர்களைக்கடந்து நாம் மறுபடியும் அர்த்தமண்டபத்தில் நுழையும்போது நமக்கு வலதுபுறம் துர்கா, இடதுபுறம்சிவன் அமிர்தகதேஸ்வரர்,சமயக்குரவர் நால்வர். இன்னொரு மாடம் போலுள்ள இடத்தில் உற்சவ மூர்த்திகள். தில்லை நடராஜர் சபை என்று எழுதிய இடத்தில் நடராஜனும் சிவகாமியும்.

யாரையும் விட்டுறக்கூடாதுன்ற எண்ணத்தில் எல்லாரும் நெருக்கியடிச்சு நிக்கிறாங்க. அதானே? பிரம்மா கூட இருக்காரே! மண்டபத்தில் ஒரு ராமகிருஷ்ணரின் மார்புவரை உள்ள சிலை. முன்வாசல் அருகே நவகிரகங்களுக்கு ஒரு சந்நிதி. கவனமா இருந்தால் பக்கச் சுவத்தில் இடிச்சுக்காம வலம் வரலாம். பிள்ளையாருக்கு எதிர்ப்புறம், நவகிரகத்தையொட்டி ஒரு பைரவர்.

முன்வாசலில் போய் நின்னு கோபுரத்தைப் பார்த்தோம்.சின்னதா குட்டியா அழகான கோபுரம்,வெளிர் நிறத்தில். அதிலே இருக்கும் தெய்வ உருவங்கள் எல்லாம் சாம்பல் நிறத்தில். அம்சமா இருக்கு. இதே நிறத்தில்தான் பின்னால் கருவறை மேலே உள்ள விமானமும், குட்டிச் சந்நிதிகளில் இருக்கும் விமானமும்.

வெளியே மரத்தடியில் குருக்கள் நின்னுக்கிட்டு இருந்தார். பக்கத்துலேயே ஒரு வீடு. அவருக்குக் கொடுத்துருக்காங்களாம்.அந்த ஒம்போது மணிப் பூஜைதான் இன்னிக்குக் கொஞ்சம் பிந்திருச்சாம். புள்ளையாருக்கு பயங்கர குறும்புப்பா........ ஒம்போதுக்கு நம்மை அங்கே அலைய விட்டுட்டு, இங்கே அடுப்புப் பத்தவைக்கிறதைத் தள்ளிப்போட்டுருக்காரு பாருங்க.

கொஞ்சநேரம் குருக்களிடம் பேசிக்கிட்டு இருந்தேன். இலங்கையிலிருந்து இங்கே வந்து ஏழெட்டு வருஷமாச்சாம்.மற்ற வெளிநாட்டுக்கோயில் குருக்களைப்போல் இல்லாம ரொம்பவே சிம்பிளா(??) இருந்தார். சாமியும்தான், பேரில் மட்டும்'செல்வ' வச்சுக்கிட்டு இருக்கோன்னு எனக்குத் தோணுச்சு. எனக்குப் பாருங்க, இந்த 'தோணல்கள்' பொழுதன்னிக்கும் தோணிரும்.திரும்பிப்போகும்போது மனசுலே என்னென்னவோ ***கள். கடவுளர்களுக்கு நைவேத்தியம் காமிக்கும்போது ஒவ்வொரு சந்நிதிக்கும் தனித்தனிக் கிண்ணத்துலே வச்சுக் காமிக்கக்கூடாதா? இல்லேன்னா கொஞ்சம் நிறையவாவது காமிக்கலாமே? பிள்ளையார்(யானை)பசிக்கு சோளப்பொறி போல ..............பாவம் சாமி. என்னமோ காக்காய்க்கு வைக்கறதைப்போல ஒரு பிடி. ஹங்.........ஒருவேளை அதை காக்காய்க்கே வச்சுடறாங்களொ என்னவோ? அங்கேதான் காக்காய்ங்க இருக்கே! என்ன அஞ்ஞானம் பாருங்க.

ஏன் கோயிலில் பக்தர்களே இல்லை? வேலை நாள் என்றதாலா? ஒருவேளை சாயங்காலமா வருவாங்களோ? இல்லெ வீக் எண்டுலேமட்டும் வருவாங்களா? சிட்டியைவிட்டு இவ்வளோ தூரத்துலே வனாந்தரத்துலே இருக்கே! மறுபடி ***கள்.

குறிப்பிட்ட நேரத்துலெ நண்பரைச் சந்திக்க முடிஞ்சது. அன்னிக்குப் பகல் சாப்பாடு 'ப்ரவுன்ஸ் ப்ளெயின்ஸ்' என்ற இடத்தில் இருக்கும் 'க்ராண்ட் ப்ளாஸா'வில். பெரிய ஷாப்பிங் மால். சில சினிமா அரங்குகள்கூட இருக்கு இதுலே.ஃபுட் கோர்ட்லே உச்சிவானம் தெரியும் அருமையான கண்ணாடிக்கூரை. இதுமாதிரிதான் நம்ம வீட்டுலே போடணுமுன்னுநான் யதார்த்தமாச் சொன்னதைக்கேட்டு அப்படியே நடுநடுங்கிட்டார் இவர். மனசுக்குள்ளேக் காசைக் கணக்குப் போட்டுப் பார்த்திருப்பார்போல!

மனசு, உடம்பு, ஆன்மா மூணுக்கும் நான் உத்திரவாதமுன்னு சொல்ற கடை. அமித்திஸ்ட் கலர்லே அழகழகாப் பொருட்கள்.என்னோட கலராச்சேன்னு உள்ளெ போய்ப் பார்த்தேன். பிள்ளையார் ஒருத்தர் அகப்பட்டார். 'கணேஷாவைத் தேர்ந்தெடுத்ததுக்கு வாழ்த்து(க்)கள். குறைவில்லாத செல்வம், தடைகளை நீக்குதல், வாழ்வில் நீங்காத வளம், எடுத்த காரியத்தில் வெற்றி.இன்னும் சொல்றேன் கேட்டுக்கோ அவரோட கல்யாண குணங்களைன்னு ஒரு பக்கம் வர்ற அளவுக்கு விவரிச்சு வச்சுருக்கும்ஒரு நோட்டீஸை, ஒரு சந்தனமரப் பெட்டியில் இருந்து எடுத்து நம்ம அமித்திஸ்ட் பிள்ளையாருடன் சேர்த்து அழகா பொதிஞ்சு கொடுத்தாங்க கடைக்காரம்மா. பத்திரமாக் கொண்டுவந்து அறையிலே வச்சுப் பிரிச்சுப் பார்த்தேன். ச்சும்மா சொல்லக்கூடாது.......அருமையாச் செஞ்சுருக்காங்கச் சீனாவுலே! He is the patron saint of students who pray to him to pass their exams!! இன்னிக்குப் பிள்ளையார் கோவிலுக்குப் போய்வந்த நினைவுக்காச்சு.

இங்கே இன்னொரு கடையிலே நுழைஞ்சு மைக்ரோவேவ் பாத்திரம் ஒண்ணு வாங்கிக்கிட்டோம். இன்னிக்காவது நல்ல காஃபியாப்போட்டுக் குடிக்கணும். அங்கே விதவிதமா கைக்கடிகாரம் இருந்துச்சு. மகளுக்கு ஒண்ணு வாங்கிக்கலாமுன்னு சிலதைத் தேர்ந்தெடுத்து,கைத்தொலைபேசியில் படம் புடிச்சு அவளுக்கு அனுப்பி, அவள் தேர்ந்தெடுத்ததை வாங்கின்னு கொஞ்ச நேரம் ஆச்சு.முந்தியெல்லாம் நூத்தம்பது, இருநூறுன்னு செலவு செஞ்சு வாஙகுனதைவிட, இப்ப வேணுங்கறதை பேஷன் மட்டும் பார்த்து,இருவது, முப்பதுக்கு வாங்குறது நல்லாதான் இருக்கு. எப்படியும் ஒரு வருசத்துக்கு பேட்டரி வந்துருது. திரும்பி இங்கே பேட்டரிமாத்துறதுக்குத்தான் பதினைஞ்சு டாலர் ஆகிருது(-: இளவயசுக்காரங்களுக்கு, வாட்ச் இப்ப பேஷன் அக்ஸெஸரீஸ்னு ஆகிப்போச்சு.

மாலையில் மறுபடியும் ஆத்தங்கரை விஸிட். அக்ஸ்மாத்தா எட்டிப்பார்த்தப்ப, ராக் கிளெய்ம்பிங்குக்கு, குனிஞ்சுக் கயிறு கட்டிட்டு நிமிர்ந்த ஒருத்தர் எப்படியோ தடுமாறி விழப் பார்த்தார். நல்லவேளை...........என் தொண்டையில் இருந்து சத்தம்எழும்புறதுக்குள்ளே சமாளிச்சுட்டார். ( கத்தி இருந்தேன்னா அதைக் கேட்டே அதல பாதாளத்துலே போயிருப்பார்) எனக்குத்தான்உயிரே போறமாதிரி நெஞ்சு அடைச்சிருச்சு. 'விழுந்துருந்தா என்ன கதி?'ன்னு சொன்னதுக்கு, 'செத்துப்போயிருப்பேன்' னுகூலா சொல்றாருப்பா. கரணம் தப்புனா மரணம் (-: அந்த அரை இருட்டிலும் கருமமே கண்ணாயினார் போல மக்கள்ஸ் ஓடறதும், உடற்பயிற்சி செய்யறதுமா இருக்காங்க.

குழலூதும் 'கண்ணன்' சிலை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சாச்சு. The church of Jesus Christ of the latter-day saintsBrisbane Australia Temple. பளிங்கு, டைல்ஸ், மொஸைக்குன்னு இழைச்சு இழைச்சுக் கட்டி இருக்கும் விஸ்தாரமான கோயில்.சுத்திவர பாதிரிப்பூ(Plumeria, Frangipani ) மரங்களும், பர்ட் ஆஃப் பாரடைஸ் பூச்செடிகளும். நாளைக்கு காலையில் வாக்கிங் போகும்போதுன்னு மறக்காமக் காமெராவைக் கொண்டுவரணும்.

அன்னிக்கு ராத்திரி அகஸ்மாத்தா டிவியைப் பார்த்துட்டு மனசெல்லாம் ஒரு வலி. அடப்பாவிகளா.............. ஒரு இனத்தையே எப்படி அழியற நிலமைக்குக் கொண்டுவந்துட்டீங்கன்னு வேதனனையாப் போயிருச்சு.

தொடரும்...........

Saturday, June 30, 2007

எ.கி.எ.செ? பகுதி 7


எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?

எனக்காக ஒரு யானை அங்கே காத்திருக்குதுன்னு தெரியாமலேயே ஒரு இடத்துக்குப் போய்க்கிட்டு இருக்கோம்.பசிஃபிக் ஃபேர் (Pacific Fair) இங்கே நிறைய துணிக்கடைகளும், ஒரு சூப்பர் மார்கெட்டும்தான் முந்தி இருந்துச்சு. நல்ல நல்ல ப்ராண்டட் லேபிள் துணிகள் இங்கே கொஞ்சம் மலிவாக் கிடைக்கும். 'ஃபேக்டரி அவுட்லெட்'ன்னு மத்த இடங்களில் வித்துத் தீராத(??) துணிகள் கொட்டிக்கிடக்கும். போற வழியிலே 'காஸ்கேட் வாட்டர் கார்டன்'னு
போர்டைப் பார்த்ததும் டக்னு உள்ளெ நுழைஞ்சுட்டோம். அழகான பச்சைப் பசேல்னு இருக்கும் தோட்டம். எதோ பராமரிப்புப் பணி நடந்துக்கிட்டு இருக்கு. ச்சின்னதா பாறைகள் வழியாத் தண்ணி இறங்கிவிழும் சத்தம் சன்னமாக் கேக்குது. இவ்வளவு இதமான இடத்தைக் கண்டுக்காமப் பூரா சனமும் அங்கே 'பீச்'லே காஞ்சுக்கிட்டு இருக்குங்க. இந்த அமைதியை அனுபவிக்கறதுபோலஐபிஸ் பறவைகள் நாலைஞ்சு அமைதியா மேய்ஞ்சுக்கிட்டு இருக்கு. நாரை மாதிரி மூக்கு இருக்கே, ஒரு வேளை மீன்பிடிக்குமோ?

'பஸிஃபிக் ஃபேர்' இருந்த மைதானம் முழுசும் இப்பக் கட்டிடங்களால் நிறைஞ்சு வழியுது. கொஞ்சநாள் நாம வராம இருந்துட்டா,அதுக்காக இப்படியா? மைதானம் இல்லாததாலே பார்க்கிங்கூட மாடியிலே(-: கீழே இறங்குனா எதோ பழையகாலக் கிராமத்துக்குள்ளே புகுந்தமாதிரி இருக்கு செட்டிங். இங்கே காலநிலை நல்லா இருக்கறதாலே எல்லாமே ஓப்பன் ப்ளான் கடைகள்தான்.தெருவிளக்கு, தெருப்பெயர் சொல்லும் வழிகாட்டிப் பலகை, பார்க் பெஞ்சுன்னு போட்டு வச்சுருக்காங்க. அங்கே நம்ம யானை நின்னுக்கிட்டு இருக்கு. எனெக்கென்ன பயமா? ஓடிப்போய் அதைத் தடவிக்கொடுத்தேன். தாமரைக்குளம் அமைச்சு அதுலே நீராழிமண்டபம் மாதிரி ஓய்வெடுக்கும் இடங்கள். குளத்துக்குத் தண்ணீர் பாயும் குட்டி நீர்வீழ்ச்சி. திமிங்கிலம், முதலை, டால்ஃபின், இன்னும் கார்ட்டூன் மனுஷரெல்லாம் அங்கங்கே. குழந்தைகளைக் கொண்டுவரும் மக்கள்ஸ்க்கு நிம்மதியான இடம். பட்டிக்காட்டுக்குப் பக்கத்துலே பட்டணத்து செட் போட்ட மாதிரி நவநாகரீகமான மால் கட்டிடம் ஒட்டிக்கிட்டே இருக்கு. நாம் தேடிவந்த துணிக்கடைகள் ஒண்ணையும் காணோம். கான்செப்ட்டே மாறிப்போச்சு!

மாலுக்குள்ளே நுழைஞ்சால்........... நியூஜெர்ஸி மென்லோ மாலுக்குள்ளெ( அங்கெயெல்லாம் நாம வந்துருக்கொம்லெ!) வந்துட்டமோன்னு ஒரு நினைப்பு! அசப்புலே அப்படியே இருக்கு. அங்கிருந்து கிளம்பி ப்ரிஸ்பேன் போற ரோட்டைப் புடிச்சோம். 77 கிலோ மீட்டர்தான். வழியிலேயே ஒரு மாலில் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு மூணரைக்கு மணிக்கு கங்காரு பாயிண்ட் வந்துசேர்ந்தோம். ராத்தூக்கம் இல்லாத களைப்பு. கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு, பக்கத்துக் கடையில் பால், காஃபி,டீ ன்னு சில அயிட்டங்களை வாங்கிக்கிட்டோம்.

இந்தக் காபி டீ விஷயத்துலே, அங்கங்கே ஹொட்டல்களில் இப்பெல்லாம் அறையிலேயே இதுக்கு ஏற்பாடு இருக்குன்றதுஒரு நல்லதுன்னாலும், நம்ம 'ருசிகண்ட பாழாப்போன நாக்கு'க்குப் பச்சைப்பால் ஊத்திக் குடிக்கும் காஃபி இன்னும் பழகமாட்டேங்குது. டீ பரவாயில்லை, சமாளிச்சுரலாம். அதிலும் பால்னு ஒரு ரெண்டு ஸ்பூன் அளவு வரும்( ஒரு காஃபிக்கு இதுபோதுமாம்.யார் இந்தக் கணக்கைப் போட்டாங்களோ?)குட்டியான குப்பி மூணு, நாலைச் சேர்த்தால்தான் ஒரளவாவது நிறம்வரும். அதுக்குள்ளெ அந்தக் காபி, சூடாறி ஜில்லிட்டுப்போயிருது. ( எங்க பாட்டி இந்த சூட்டை, 'பூனை மூ* * *ம் னுசொல்வாங்க!) பரவாயில்லைன்னுட்டுக் கொஞ்சம் பாலை சூப்பர் மார்கெட்லே இருந்து வாங்கிக்கறதுதான். இங்கேயும் மைக்ரோவேவ் அவன் இருக்கு. நல்ல சூடாப் பாலைக் காய்ச்சி ஒரு காஃபி குடிக்கலாமுன்னா........... மைக்ரோ அவனுக்குண்டான பாத்திரம் இல்லை. அடுப்புலே வச்சுக் காய்ச்சணுமுன்னா காய்ச்சுக்கலாம். அதுக்கப்புறம் அந்தப் பாத்திரத்தைத் தேய்ச்சுக் கழுவணும். வாழைப் பழத்தை உரிச்சு மட்டும்தான் தருவாங்களாம். நாமே தின்னணுமாமே!

நேத்தும் சர்ஃபர்ஸ் பாரடைஸ் அபார்ட்மெண்ட்லே மைக்ரோ அடுப்புக்கேத்த பாத்திரம் இல்லை(-: இவ்வளவு செய்யறவங்க ஒரு ரெண்டு மூணு டாலர்லே ஒண்ணு வாங்கி வைக்கக்கூடாதா? அவுங்ககிட்டே சொல்லணும். நமக்கும் இது ஒரு பாயிண்டாப் போச்சு. ட்ரிப்புக்கு எடுத்துப்போற சாமான்கள் லிஸ்ட்லே இனி சேர்க்க வேண்டியது , ஒரு கத்தி,காதுக்கு அடைப்பான், ஒரு மைக்ரோ வேவ் ப்ளாஸ்டிக் பாத்திரம். கண்ணாடிப் பாத்திரம் வேணாம். அதுவேற ஒடைஞ்சு கிடைஞ்சு வச்சு............

நம்ம அறை பால்கனியில் இருந்து பார்த்தால் நேரெதிரே ஒரு உயரமான கட்டிடத்தில் ஒரு பையன் தங்க நிறத்தில் ஜொலிச்சுக்கிட்டுக்,கையில் ஒரு ஊதுகுழலை வச்சு ஊதும் சிலை. அது என்னன்னு போய்ப் பார்க்காட்டா எனக்குத் தலை வெடிச்சுரும்.

சதர்ன்க்ராஸ் மோட்டல் நல்ல வசதியா இருக்கு. அலமாரியிலே ஒரு எடைபார்க்கும் கருவியும் வச்சுருக்காங்க. ஊர் திரும்பும்போது 'இன்னும் எவ்வளவு எடை கூடியிருக்குன்னு பார்த்துக்கோ'ன்னு எச்சரிக்கை விடறாங்க போல. இது இருக்கறது மெயின் தெருவும்,Walmsley street ம் சேரும் இடம். இங்கிருந்து ரெண்டு நிமிஷம் இதே வாம்ஸ்லி தெருவில் நடந்தால் ரிவர் டெர்ரஸ் வருது. ப்ரிஸ்பேன் நதியை ஒட்டியே போகும் ரோடு இது. எதிரே மினுங்கும் நதி. அக்கரையில் நகரின் ஸ்கைலைன். பார்க்கவே அட்டகாசம். இந்த சிடி & ரிவர்வியூவுக்காகவே இங்கெல்லாம் இடத்தோட விலை ஆகாசத்துக்கே தாவிருச்சு. சாதாரண சிங்கிள் ரூம் அபார்ட்மெண்ட் வெறும் 1.3 மில்லியன் தானாம்.

இருட்ட ஆரம்பிச்சது. அப்படியே ஆத்தங்கரைவரை போனோம். கரையெல்லாம் ஒண்ணும் இல்லை. பார்க் டெர்ரஸ் முழுசும் இடுப்புயரச் சுவர்கட்டி வச்சுருக்கு. அதுக்கு அந்தப் பக்கம் அதல பாதாளத்தில் இருக்கு நதி. சுவருக்கும், தெருவுக்கும் இடையே இருக்கும் நடைபாதையெல்லாம் ரொம்ப அழகா விதவிதமான மரங்கள், அதுக்கிடையில் உட்கார்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள், பார்பக்யூ செஞ்சு சாப்பிட்டுக்க, ட்ரேயோடு கூடிய கேஸ் அடுப்புகள்னு எதோ பிக்னிக் ஏரியாவா ஆக்கி வச்சுருக்கு நகரசபை.
சுவத்துக்கு அந்தப் பக்கம் ஒரு ரெண்டடி இடம் இருக்கும். அங்கெல்லாம் இயற்கையாவே முளைச்ச(??) மரங்கள், புதர்கள், செடிகொடிகள். இதுகளுக்கிடையில் அங்கங்கே ரெண்டடி உயரக் காங்க்ரீட் தூண்கள் இருக்கு. ஒவ்வொரு தூணுக்குப் பக்கத்திலும் ஒண்ணுரெண்டு ஆட்கள், ஹெல்மெட்டும் தலையுமா! வடக்கயிறு போட்டு அந்தத் தூணில் இறுக்கி முடிச்சுப் போட்டுக்கிட்டு இருக்காங்க.'ராக் க்ளைம்பிங்' கீழே பாதாளம்வரை இறங்கிட்டு, மறுபடி ஏறி வருவாங்களாம். பொழுதுபோக்குகள் இப்படி! இதுக்கும் நகரசபை ஏற்பாடு பண்ணி வச்சிருக்கு. சரி, இப்படி ஏறி இறங்கறதை பகலில் வெளிச்சத்தில் வச்சுக்கக்கூடாதோ? கேட்டால், இப்பத்தான் வேலையில் இருந்து வந்தாங்களாம். இப்ப உடற்பயிற்சி நேரமாம். இந்த ஜனங்களுக்குச் சோம்பல் இல்லைப்பா!!

தொடரும்.............