Monday, July 06, 2020

இறக்கம் நல்லது. ஆனால் இரக்கம் ? (மினித்தொடர் பாகம் 3 )

மே மாசம் 18 முதல் பள்ளிக்கூடங்களைத் திறந்துட்டாங்க. சின்னப்பிள்ளைகளுக்கும் (தாய்மார்களுக்கும்தான்)ரொம்பவே சந்தோஷம்.

நோய் இருக்குமோ என்ற நிலையில் இருப்போரை அவரவர் வீட்டுலேயே தனிமையில் இருக்க சொல்லி இருந்தாலும், சௌகரியப்படாதவர்களைத் தனிமையில் வைக்க என்ன செய்யலாமுன்னு பலவித ஐடியாக்கள் வருமா இல்லையா ? அதுலே ஒன்னு கேம்பர் வேன்கள்!  பார்டரை மூடிட்டதால்  டூரிஸ்ட் வருகைதான் மொத்தமா நின்னு போச்சே....  அவுங்களுக்காக் காத்திருந்த வேன்களுக்கு இப்படியும் ஒரு சேவை செய்ய வாய்ப்பு கிடைச்சுருச்சு!
கொரோனா நோயாளிகள்  ஒவ்வொருத்தரா குணமாகி வீட்டுக்குப் போக ஆரம்பிச்சாங்க. ஆஸ்பத்ரியில் ஒரே ஒரு நோயாளி மட்டும் கொஞ்சம்நிறைய நாட்கள்  இருந்தார். தினமும் ஆஸ்பத்ரியில் இருக்கும் நபர்கள் எத்தனைபேர்னு நான் கவனமாப் பார்த்துக்கிட்டே இருந்தேன்.  கடைசியில் அவரும் நோய் நீங்கி குணமடைஞ்சு வீட்டுக்குத் திரும்பினார்.  இதுவரை 22 பேரைக் கொரோனா காவு வாங்கியிருந்தது.

உலக சுகாதார நிறுவனத்துக்கு நோயாளிகள் விவரம், கணக்கு, குணமடைஞ்சவுங்க எண்ணிக்கை, 'போனவர்கள்' எண்ணிக்கை எல்லாம்  அனுப்பிட்டோம். தினமும் கொரோனா செய்திகளில்  'புதுசா யாருக்கும் கொரோனா தொற்று வரலை. நோ நியூ கேஸஸ்'  என்று சொல்ல ஆரம்பிச்சாங்க. மனசு நிறைய மகிழ்ச்சிதான்.

"இன்னைக்கும் ஒன்னும் இல்லைதானே ?  "

"ஆமாம். இல்லை"

 ஹப்பாடா...... வாட் அ ரிலீஃப் !"

நம்ம சனாதன் தரம் ஹாலில்  வழக்கமா செவ்வாய்க்கிழமை மாலைகளில்  ராமாயணம் வாசிக்கும் நிகழ்ச்சி நடக்கும். கொரோனா லாக்டௌனில் இதுவும் நின்னுபோய் இருந்தது.  லெவல் 2 இல்  கோவில்கள் திறப்பதுடன்,  அம்பதுபேர் வரை ஒன்று கூடலாமுன்னு சொன்னதும்,  ஜூன் ரெண்டாம்தேதி செவ்வாய்க்கிழமை  ராமாயணவாசிப்பைத் தொடரலாமுன்னு  சேதி  அனுப்பி இருந்தாங்க. சமூக இடைவெளி கட்டாயம் அனுசரிக்கணும் என்ற ஒரே ஒரு கண்டிஷன்தான்.  நாங்களும் போய்ச் சேர்ந்தோம்.  நல்ல இடைவெளிவிட்டு நாற்காலிகள் போட்டு வச்சுருந்தாங்க. பண்டிட்,  ராமாயணம் வாசிப்பவர்கள், பஜனைப் பாடல் பாடும் இசைக்குழுவினர்னு மேடையில் பெரிய கூட்டம் வழக்கமாக இருக்குமிடத்தில் அஞ்சே பேர் இருந்தாங்க.  அப்புறமா இன்னும் இருவர் வந்து சேர்ந்தார்கள் .  மேடையில் எழுவர்.  சபையினரா ரெண்டு பேர். யாருன்னு ஊகிப்பது சுலபம் :-)  மற்றவர்களுக்கு சேதி போய்ச் சேரலை போல !





பூஜை முடிச்சு, கொரோனாவில் இருந்து காப்பத்தின கடவுளுக்கு நன்றி சொல்லி முடிச்சார் பண்டிட்.

இன்னும் சிலநாட்களில் எங்க  மணநாள் வருது. பொதுவா  நம்ம  ஹரே க்ருஷ்ணா கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் விருந்து உண்டு.   சொந்த விழாக்கள் எதாவது இருந்தால் அந்த விருந்துக்கான செலவை பக்தர்கள் ஏத்துக்குவாங்க. நாமும்  மணநாளுக்குச் சமீபம் வரும்  ஞாயிறில் இப்படிச் செய்யறதுண்டு. இப்ப லாக்டௌன் காரணம் விருந்தெல்லாம் நிறுத்தியிருந்தாங்க.

இதே போலதான் சனாதன் தரம் ஹால் வாங்கியதில் இருந்து  பொறந்தநாள், மணநாள் இப்படி விசேஷங்களை அங்கே நடத்தத் தொடங்கி இருந்தோம். அதுவும் லாக்டௌன் காரணம் இப்போதைக்கு இல்லைன்னு ஆகிருச்சு.  ரெண்டு இடங்களில் எங்கேயும் நடத்த முடியாது என்பதால் , நம்ம் விழாவுக்கு ஒதுக்கி வைத்த தொகையை ரெண்டாகப்பிரிச்சு, ரெண்டு இடங்களிலும்  கொடுத்துடலாமுன்னு முடிவு செஞ்சோம். பொழைச்சுக்கிடந்தால் அடுத்த வருஷம் நாப்பத்தியேழைக் கொண்டாடினால் ஆச்சு.
ஜூன் அஞ்சாம்தேதி  நம்ம கோவிலுக்குப் போய் வந்தோம்.

இதுக்கிடையில் மற்ற நாடுகளிலும் லாக்டௌனும், வெளிநாட்டு விமானப் போக்குவரத்துத்தடையும் இருந்ததால்.... அங்கெல்லாம் மாட்டிக்கிட்ட கிவிக்களை ( நியூஸி மக்களுக்கான செல்லப்பெயர் ! ) நாட்டுக்குத் திரும்ப அழைச்சுக்க ஏற்பாடு செய்யணுமுன்னு அரசின் முயற்சி தொடங்கியிருந்துச்சு.  இப்படித்தான்  மற்ற நாடுகளும் அவுங்கவுங்க மக்களைக் கூப்பிட்டுக்க ஆர்வமா இருந்தாங்க.

அரசுகளுக்கும் பேசி முடிச்சு, குறிப்பிட்ட சில மார்க்கங்கள் மூலமா கொண்டுவரலாமுன்னு  முடிவு செஞ்சாங்க.  எல்லா ஏர்ப்போர்ட்டுகளையும் இதுக்காகத் திறந்து வைக்க முடியாதுல்லையா?  ப்ரிட்டனில் இருந்து, தோஹா, அங்கிருந்து ப்ரிஸ்பேன்(ஆஸி)பிறகு ஆக்லாந்து (நியூஸி) ன்னு    ஒரு  ரூட். நம்ம  இந்தியாவும் 'வந்தே பாரத்'னு ஏர் இந்தியா விமானங்களை  (தில்லி - ஆக்லாந்து  ரூட் ) அனுப்ப ஆரம்பிச்சுருந்தது.  நாங்க ஏர் நியூஸிலாண்ட்.

மார்ச் மாசம் லாக்டௌன் ஆரம்பிக்கறதுக்கு ஒருவாரம் முன்னாலேயே நியூஸி பார்டரை மூடிட்டாங்க.  ஏராளமான கிவிக்கள் அங்கே இங்கேன்னு பலநாடுகளில் மாட்டிக்கிட்டாங்க.  இதில் இந்தியாவுக்குப் போன மக்களில் என்னுடைய தோழி ஒருவரும் உண்டு. இஸ்கான் பக்தை. மதுராவுக்குப் போயிருந்தாங்க. அவுங்களுக்குத் தங்கற இடம், சாப்பாடு இதெல்லாம் பிரச்சனை இல்லை. கோவிலின் கவனிப்பில் எல்லாம் கிடைச்சது.  ஆனால் அவுங்க பயணத்திட்டத்தின்படி திரும்பி வரத்தான் முடியலை.

இங்கே  நம்ம கோடைகாலத்தில்  குடும்பத்தினரைப் பார்க்க வந்த  இந்தியர்கள் பலர், திரும்பிப்போக முடியலை. விஸா காலம் வேற முடிஞ்சுருச்சு...... ஓவர் ஸ்டே....   இந்தக் கொரோனாவால் எவ்ளோ சல்யம் பாருங்க..ப்ச்...

இங்கே லாக்டௌன் அறிவிச்சவுடனே செயல்பட்டது  ஜெர்மனிதான். அவுங்க நாட்டுக்காரர்கள் பனிரெண்டாயிரம் பேர், நியூஸியில்  பலவேலைகள் நிமித்தம்  இருக்காங்க. அவுங்களைத் திரும்பக் கொண்டுபோக  லுஃப்தான்ஸாவை  அனுப்பிட்டாங்க. அவுங்க தூதரகம் துரிதமா செயல்பட்டது ! ஏப்ரல் பத்தாம் தேதி முதலே ஆக்லாந்தில் இருந்தும், கிறைஸ்ட்சர்ச்சில் இருந்தும் (எங்கஊர்) அவுங்க மக்களை ஏத்திக்கிட்டுப் போக ஆரம்பிச்சாங்க. விமானம் பறக்கும் சத்தம் கேட்டதும் ஆசைஆசையா வெளியே வந்து ஆகாயத்தைப் பார்த்தேன். எப்போ கொரோனா அடங்கி, எப்போ நாம்  பயணம் போவோம் என்ற பெருமூச்சுதான். தினம் காலையில் ரெண்டு ஃப்ளைட் கிளம்பிப்போகும்.
எங்க ஊருக்கு நன்றி சொல்லி மேலே ஒரு வட்டம் போட்டுட்டுப்போனார் ஒரு பைலட் !

A German airline pilot has performed a tribute flyover of Christchurch to thank the city for its hospitality of Germans stuck in New Zealand.

Christchurch Airport has been working with airline Lufthansa to get thousands of German nationals home after they became stranded because of border closures during the coronavirus pandemic, airport spokeswoman Yvonne Densem confirmed on Wednesday.

Upon departure from Christchurch on Monday morning, the captain of Lufthansa flight LH355 requested permission to fly over the city to thank its people for looking after stranded Germans and helping them get home, Christchurch Airport chief executive Malcolm Johns said in a Facebook post.

கடந்த இருபத்திநாலு நாட்களா ( மே 22 முதல் ) புது நோயாளிகள் யாரும்  இல்லை !

ஜூன் 8 ஆம் தேதி இரவு பனிரெண்டு முதல் லெவல் 1 வந்துட்டோம். மொத்தம் 105 நாட்கள் !  அரசுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. எங்கள் பொறுமையை ரொம்பப் பாராட்டி, ஒத்துழைப்பு கொடுத்து நடந்துக்கிட்ட நாட்டுமக்களுக்கு  நன்றிகளைச் சொல்லுச்சு !  பிரதமர் ஜெஸிண்டாவுக்கு, இங்கேயும், மற்ற வெளிநாடுகளிலும் ரொம்பவே நல்ல பெயரை வாங்கிக்கொடுத்துருச்சு இந்த கோவிட் 19.
வெளிநாட்டில் இருந்து வர்றவங்களைத் தனிமைப்படுத்த  ஆக்லாந்து நகரில் சில ஹொட்டேல்களை அரசு ஏற்பாடு செஞ்சுருச்சு. நாலு நக்ஷத்திர வசதி உள்ளவை. எல்லா செலவும் அரசுதான்.  மூணாம் நாளும் பனிரெண்டாம் நாளும் கோவிட் டெஸ்ட் நடத்துவாங்களாம். தொற்று  ஒன்னும்  இல்லாதவங்களைப் பதினாலு நாட்களுக்குப்பின் வீட்டுக்கு அனுப்பிருவாங்க. வீட்டுக்குப்போனாலும் ஒரு வாரம் தனிமைப்படுத்திக்கச் சொல்லியிருந்தாங்க.

ப்ரிட்டனில் இருந்து ரெண்டு கிவிக்கள், தோஹா, ப்ரிஸ்பேன் வழியா வந்தவங்க, அவுங்க தகப்பன்  மரணப்படுக்கையில் இருக்காருன்னு (கொரோனா இல்லை) போய்ப் பார்க்கணுமுன்னு விண்ணப்பிச்சுருக்காங்க.  மனிதாபிமானத்தின் அடிப்படையில்  அவுங்களை வெளியில் விட்டுருக்கு அரசு. என்னமோ ஒரு குழப்பம்..... இவுங்களுக்கு கோவிட் டெஸ்ட் எடுக்கவே இல்லையாம் !

இந்த ரெண்டு பெண்களும் ஆக்லாந்தில் இருந்து வெலிங்டன் நகருக்கு (642 KM )ஒரு உறவினரின் காரை இரவல் வாங்கித் தாங்களே ஓட்டிக்கிட்டுப் போயிருக்காங்க. தகப்பன் முதல்நாளிரவே சாமிக்கிட்டே போயிட்டார். ஆக்லாந்து நகரை விட்டுக்கிளம்பும்போது வழிதெரியாமல் தடுமாறினதாயும்,  அவுங்க நண்பருக்குப் ஃபோன் செஞ்சு அவர் வந்து சந்திச்சு வழி சொன்னதாகவும், கிவி வழக்கப்படி   இவுங்க கட்டியணைச்சுட்டுப் போனதாகவும் அப்புறம்  செய்தி கிடைச்சது  !  இவுங்களுக்கு கோவிட்டும் இருந்துருக்கு....   இவுங்க போய்ச் சேர்றதுக்குள்ளே  தகப்பன் உடல் மார்ச்சுவரிக்குப் போயிருச்சு.  எட்டுமணி நேர ட்ரைவ்.

சேதி வெளிவந்ததும்  சுகாதார இலாகாவைக் காய்ச்சி எடுத்தோம். அதெப்படி இவுங்களை  டெஸ்ட் எடுக்காமல் வெளியில் விடப்போச்சுன்னு.....  அங்கே போய்ச் சேரும்வரை இவுங்க ரெண்டுபேரும்  வெலிங்டன் போகும் வழியில் எங்கெங்கே போய் கொரோனாவைப் பரப்பிவிட்டாங்களோ ?

'இவுங்க ரெண்டுபேரையும்  இப்போ வீட்டுலேயே தனிமைப்படுத்தி வைக்கச் சொல்லிட்டோம். வழியிலே எங்கேயும் நிறுத்தலை, அப்படி இப்படி'ன்னு சப்பைக்கட்டுக் கட்டிக்கிட்டு இருந்தாங்க  இதுசம்பந்தப்பட்ட அதிகாரிகள்.


அதெப்படி? கிட்டத்தட்ட எட்டுமணி நேரம் வண்டியை நிறுத்தாமலும், ரெஸ்ட்ரூம் போய்வராமலும் இருந்துருப்பாங்களா ?  அப்புறம் வழியில் சாப்பிடாமலே போயிருப்பாங்களா?

நாங்களும் விடலை.  ஃபேஸ்புக்கில் நம்ம கொரோனாவுக்காக  அரசு ஒரு பக்கம் வச்சுருக்கே.... அதில்மட்டும் ஏகப்பட்ட காமென்ட்ஸ். சுமார் ஆயிரம் .... ஒரே திட்டலும் நக்கலுமாகத்தான்....   'நோய் பரவுச்சுன்னா  இன்னொருக்கா லாக்டௌனில் போகமாட்டோமு'ன்னு கத்திக்கிட்டு இருந்தோம்.

அந்த சவ அடக்கத்தையும் இப்போ இவுங்க ரெண்டுபேரும் ஐஸோலேஷனில் இருந்து வெளிவரும் வரை தள்ளிப்போட்டுருக்காங்க. முன்னாலேயே வெளியே விடாமல் இருந்துருக்கலாம். வேண்டாத வேலை...... வேலியிலே போன ஓணானை எடுத்து மடியில்  வச்சுக்கிட்டாப்லெ..............

இந்த கொரோனா கலாட்டாக்களுக்கிடையில் ஓசைப்படாம  இங்கத்து மக்கள் தொகை அஞ்சு மில்லியன் ஆகிப்போயிருக்கு. யாரும் எண்ணிக்கையை கவனிக்கலை.  'அஞ்சு மில்லியன் டீம் ஒர்க்கினால் கொரோனா ஒழிஞ்சது'ன்னு அரசு சொன்னப்புறம்தான் கவனிச்சோம். இப்ப இந்த ரெண்டுபேர் கொரோனாவை ஊருக்குள் கொண்டு வந்துட்டதால் அஞ்சு மில்லியன் கஷ்டப்படும்படி ஆச்சுன்னு அதுக்கொரு மண்டகப்படி ஆச்சு அரசுக்கு.  பாவம்... எங்க  டைரக்டர்  ஜெனரல் ஆஃப் ஹெல்த்  டாக்டர் ஆஷ்லி ப்ளூம்ஃபீல்ட்.......   மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி மாளலை.
தினம் தினம் டிவியில்  மலர்ந்த முகத்தோடு வந்து நாட்டுமக்களுக்கு நல்ல சேதி சொல்லிக்கிட்டு இருந்த ப்ரதமரைக் காணோம். .....   ஆஹா.....
'இனிமேப்பட்டு நாட்டுக்குள் வர்றவங்க எல்லோரையும் கவனமா ரெண்டு வாரத்துக்குத் தனிமைப்படுத்துவோம். யாருக்கும்  இரக்கம் காட்டப்போறதில்லை' ன்னு கதறும்வரை விடலை. நியூஸியில் இதுதான் ஒரு தொல்லை......   இங்கே மனுசர் சொல்வதை நம்பிருவோம்.  எந்த  பொது விசாரிப்புன்னாலும்  இப்படியே.  சாட்சி கொண்டா,  சர்ட்டிஃபிகேட் கொண்டா, ஆதார் கார்ட் கொண்டான்றதெல்லாம் இல்லை.  காய்ச்சல் இருக்கா? இருமல் இருக்கா? அது இருக்கா ...இது இருக்கா? இல்லை இல்லைன்னதும் நம்பிட்டாங்க. Too Naive

ஏர் இண்டியா கொண்டு வந்த மக்களில்  நிறையப்பேருக்கு கோவிட் இருக்கு.   அங்கே இங்கேன்னு வெவ்வேற நாடுகளில் இருந்து  இங்கே வந்து சேர்ந்தவர்களில் கோவிட் இருக்கற  பதினெட்டு  மக்களில்  இந்தியர்கள் பதினொருவர்.  ப்ச்.... நல்லவேளை ஆஸ்பத்ரி  வாசம் செய்யும் அளவுக்கு இல்லை.

இப்படி இருக்கும் நாளில் நமக்கு எதிர்பாராமல் ஒரு அதிர்ச்சி கிடைச்சது....


தொடரும்......   :-(

PIN குறிப்பு : இந்தப் பதிவு எழுதும் வேளையில்  டிவி நியூஸ் போய்க்கிட்டு இருக்கு.    இன்றைக்கு மூவருக்கு நோய் பாஸிட்டிவ். தில்லியில் இருந்து வந்து ஐஸொலேஷனில் இருக்கும் மக்கள்.   ஆறு பேர் அடங்கிய ரெண்டு குடும்பம். (-:


6 comments:

said...

நியூசிலாந்து கோவிட் அனுபவம் சுவாரசியமாகத்தான் இருக்கு.

அந்த அந்த நாடுகளுக்குத் திரும்பறவங்க, சங்கடங்களைத் தவிர்க்கவேண்டி பாராசிட்டமால் போட்டுக்கொண்டு காய்ச்சல் அறிகுறிகளைத் தவிர்த்துடறாங்கன்னு கேள்விப்பட்டோம்.

said...

எத்தனை எத்தனை அனுபவங்கள்.

நல்மே விளையட்டும்.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

நம்ம ஆட்கள் சாமர்த்தியம் தெரியாதா.... தடுக்கில் பாயச் சொன்னா கோலத்தில் கூட பாய்ஞ்சுருவாங்களே!

எந்த ஒரு சட்டம், நியமம் கொண்டு வந்தாலும் அதுக்குள்ளே புகுந்து முடிஞ்சவரை பணம் பண்ணுவதில் கெட்டிதான், இல்லையோ!!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ரகம் ரகமாக் கிடைக்குதே! நீங்க சொல்றதுபோல் நலம் கிடைத்தால் போதும் !

நன்றி !

said...

கோவிட் அனுபவம் எழுதியிருப்பீங்களான்னு வந்து எட்டி பார்த்தேன். ஹ்ம்ம்... எழுதிடீங்க அம்மா

said...

எத்தனையோ அனுபவங்கள்.

இங்கும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்பட்டிருந்த பாடசாலைகள் மூடப்பட்டு விட்டது இதற்குள் வரும் ஐந்தாம் திகதி தேர்தல் .