விறுவிறுப்பா தமிழ்ச்சேவை(?) செய்யும்போது இப்படி ஒரு முன்னறிவிப்பும் இல்லாமச் 'சட்'னு மண்டையைப்போடும் பழக்கத்தை எங்கே யார்கிட்டே இருந்துக் கத்துக்கிச்சு இது? பத்துப் பதினைஞ்சு நாளா இதே நிலமை. போனதும் பதறாமல்( முதல் முறை பதறுனது கணக்கில் வருமா? )சுவத்தில் இருக்கும் பவர் சுவிட்சை அணைச்சுட்டு, எண்ணி அஞ்சே நிமிஷத்துலே மறுபடி,எல்லாத்தையும் முதல்லே இருந்து ஆரம்பிச்சா, என்னவோ இப்பத்தான் புதுநாளைத் தொடங்கறதுபோல, 'என்னடா........ இப்படிச் செஞ்சுட்டோமே'ன்ற குற்ற உணர்வு கொஞ்சம்கூட இல்லாம வேலை செய்ய ஆரம்பிக்குது.
வாரண்டி இருக்கா இல்லே தீர்ந்துபோச்சான்னு நினைவில்லை. வாங்குன பில்லைக் காணொம்.ரெண்டுநாளா இதே வேலையா இருந்து தேடுனோம். அஞ்சுவருசம் மூணுமாசம், நாயா பேயா உழைச்சுருக்கு.ஆனா அதுக்கு எப்படித் தெரிஞ்சது நாம் அஞ்சு வருசத்துக்குத்தான் வாரண்டி வாங்குனோமுன்னு!!!! கில்லாடி.
வேட்டை ஆரம்பம். வீட்டுக்கு வரும் ஜங்க் மெயில் போதாதா என்ன? வகைவகையா கூவிக்கூவி விக்கறாங்க.
கண்ணில் பட்ட முதல் கடையிலே மூவாயிரத்துலே ஆயிரம் குறைச்சுக்கலாமாம்.
Hewlett Packard Multi Media PC Package.21" LCD MonitorModel M81701.6 GHZ Pendium D processor1 GB DDR2 RAM 320 GB Hard Drive DVD Super Multi Drive HP printer C5280
கண்ணில் பார்க்கணுமேன்னு கடைக்கு நேரில் போனா, அட்டகாசமா இருக்கு. கார்ட்லெஸ் மவுஸ் & கீ போர்டு. இதுலே டிவியும் பார்த்துக்கலாமாம். ரிமோட் இருக்கு.
நல்லா இருக்குன்னு சொன்னாலும் அப்படியே வாங்கிறமுடியுதா? ரெண்டு இடத்துலே விசாரிக்க வேணாம்?
அடுத்தகடை. இங்கே நமக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தர் வேலை செய்யறார். மேற்படி எல்லாம் அடங்குனதுஇங்கே 2200. முதல் கடையைப் பத்திச் சொன்னதும் ஒரு அஞ்சு வினாடி யோசிச்சுட்டு, நாங்க அதே விலையை மேட்ச் பண்ணறோம். ஆனா HP மானிட்டர் இல்லை. 21க்குப் பதிலா 22 இஞ்ச்சு Acer மானிட்டர் தர்றோம்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......... இதுக்குப் பக்கத்துலேயே அடுத்தமாடல் M 8190 உக்காந்து இருக்கு. நாலாயிரம் ஆகுது. நம் தமிழ்ச்சேவை ஆற்றும் அழகுக்கு நாலாயிரம் கொஞ்சம் கூடிபோகுதே...........
இப்பத் தெரிஞ்ச பையன் அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டார். உங்களுக்கு என்னாத்துக்கு டெஸ்க் டாப்? அதுக்குன்னு ஒரு இடம் வச்சுக்கிட்டு அந்த அறையை அனாவசியமா ஹீட் பண்ணனுமா? லேப்டாப் அருமையா இருக்கு. ஒரு லைஃப் டைம் கேரண்டியோட wireless router 86 டாலருக்கு இருக்கு. நீலப்பல்லு. வீட்டுலே எங்கே வேணுமுன்னாலும் வச்சுக்கலாம். வேலை முடிஞ்சதும் மூடி அலமாரியில் போட்டுறலாம். இதைப் பாருங்கன்னு காமிச்சார்.
Pentium Core 2 Duo. 160 GB Hard Drive. இதுலேயே ஒம்போது படம் டவுன்லோடு பண்ணிக்கலாம். 16000போட்டோஸ், இன்பில்ட் கேமெரா, மைக்ரோஃபோன், ஸ்க்ராட்ச் ப்ரூஃப் (பூனை?) கீபோர்டு, கைரேகை லாக்ன்னு இன்னபிற அம்சம்ங்கள்.
மாடல் DV 9514TX 2498 க்கு தராங்க. 200$ குறை(ரை)ச்சிருக்காங்களாம்.இப்ப சேல் இருக்கு. கொஞ்சம் யோசிச்சுட்டு வரேன்னு சொல்லிட்டு வந்தோம். நம்ம விக்கிப் பசங்களில் விஸ்டா வேணுமா வேணாமான்னு வெங்கட் எழுதுனதைக் கொஞ்சம் மேலோட்டமாத்தான் படிச்சுருந்தேன். அதனாலே விஸ்டா இல்லாம ஹெச். பி கிடைக்குமான்னு கேட்டா............. அதல்லாம் பழய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்து. யாருக்கு வேணும்? இனிமே புது யுகத்துக்கு விஸ்டாதான்னு பதில்.
வீட்டுக்குவந்து மேஜையா, மடியான்னு மண்டையைக் காய்ச்சிக்கிட்டு இருந்தப்ப, நம்ம இலங்கை நண்பர் ஒருத்தர் வந்தவர், விஸ்டா வேணவேவேணாம். எல்லாத்தையும் ஒரிஜனலாப் போடச் சொல்லும். பேசாம ஹெச்பி கிடைக்குதான்னு பாருங்கன்னார். மேஜை என்னாத்துக்கு, பேசாம மடியையே வாங்குங்க. ஆனா டோஷிபாவா இருக்கட்டும். அதுதான் ரொம்ப நல்லது. ஸ்க்ரீனை வளைச்சாலும் வளையாதுன்னார். ( எதுக்காக ஸ்க்ரீனை வளைக்கணுமாம்? ஙே.............)
எதாவது வாங்கித்தான் ஆகணும். இதுவேற 'பொட் பொட்'டுன்னு போறதும் வாரதுமா இருக்கே. ராத்திரி கடக்கட்டும். மறுநாள் சேல் முடியப்போகுது.
கடைசிநாள் இன்னிக்குத்தான். போனோம். யானையை வாங்கியாச்சு. மடிமேலே வச்சுக்கலாம். யானைக்கு ஒரு பணம், அங்குசத்துக்குஅரைப்பணம். வீட்டுக்குக் கொண்டுவந்ததும் நம்ம ஜிகேவுக்கு பரம சந்தோஷம். எதாவது பொட்டியைத் தொறந்தா ஓடிவந்துருவான், வேடிக்கை பார்க்க.
ரொம்ப நோஸி:-)
கலப்பையை இறக்குனாத்தானே தமிழ்ச்சேவை செய்ய முடியும். ஆச்சு. ஆனா கீபோர்டு மாத்தமுடியலை. நம்ம முகுந்துக்கு அவசர மயில். சிலபேருக்கு வேலை செய்யுமாம். சிலபேருக்கு இல்லையாம். இல்லாத பாவிகளில் நான் இருக்கேன். புதுக்கலப்பை செஞ்சுக்கிட்டு இருக்காராம். காத்துக் கிடக்கறேன்.
அது வர்றதுக்குள்ளே வேற எப்படியாவது தமிழ் எழுத்து வரவழைக்க என்ன செய்யலாமுன்னு இப்ப இன்னொரு மண்டைக்காச்சல். பராஹாவை இறக்குனேன். எமெஸ் வேர்டுலே கொஞ்சம் காப்பாத்த வருது. ஆனா நோட்பேடுலே தமிழே வர்றதில்லைப்பா.....................
போதாக்குறைக்கு பொன்னம்மான்னு, வாங்குன router ம் கனெக்ட் பண்ண முடியலை(-:
ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. சேவை இனி உங்கள் கையில்:-)))
