ஊருக்கு மேற்கே பனிரெண்டு கிலோமீட்டர் பயணிச்சால் BSF கட்டிடம் வருது.. இந்தப் பக்கமெல்லாம் பாகிஸ்தானை நோக்கிப்போகும் சாலைகளில் எல்லைப் பாதுகாப்புக்குன்னு அங்கங்கே பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ்க்கு கட்டிடங்கள் கட்டி ஆர்மி ஆட்கள் காவலுக்கு இருக்காங்க. நம் தென்னிந்தியாவில் வேற நாட்டு எல்லைகள் ஒன்னும் இல்லாதபடியால் இதன் தீவிரம் நமக்குப் புரிவதில்லை. அதிசயமாக் கண்கள் விரிய பார்த்துக்கிட்டே போனேன். இந்தக் கட்டிடம் தாண்டி வலதுபக்கம் ஒரு கிலோமீட்டர் போனா, நேரா அந்த சாலை போய் ஒரு குளக்கரையில் முடியுது! இதுதான் ராம் தீரத். Ram Tirath. வால்மீகி முனிவரின் ஆஸ்ரமம் இருந்த இட(மா)ம். பெரிய செவ்வக வடிவமான குளம். எதிர்க்கரையில் ஒரு பெரிய கட்டிடம். அதன் தலையில் ஒரு ஆஞ்சநேயர் குளத்தைப் பார்த்தபடி நிற்கிறார். தண்ணி இல்லாத குளம்தான் அது இப்போதைக்கு. இதுலேதான் வருசத்துக்கு ஒருமுறை பெரிய திருவிழா நடக்குதாம். தீபாவளி அமாவாசை முடிஞ்சு வரும் பவுர்ணமி சமயம். அஞ்சு நாள் திருவிழாவாம். ஊரே ஜே ஜேன்னு இருக்குமாம். இங்கே வரும் 12 கிலோ மீட்டர் சாலையைச் செப்பனிடும் வேலை நடப்பதை வரும்போது பார்த்தோம். ராம்தீரத் ஹனுமன் . எதிர்க்கரைக் கோவில்
இந்தப்பக்கம் குளக்கரையில் ஒரு சின்னக் கோவில். சீதை பிரவிச்ச இடம்? இருக்கலாம். உள்ளே ஸ்ரீ ராம்ன்னு ஹிந்தியில் எழுதி, அதன் கீழே கழுத்துலே பாம்போடு இருக்கும் சிவன் உருவம் உள்ள டைல்ஸ் பதிச்சு, பீடத்தில் மூணு சிலைகள். ராம் லக்ஷ்மணன் சீதா இல்லைன்னா ராம், குசன், லவன்.. எது விருப்பமோ அப்படி நினைச்சுக்கலாம்.அதுக்குக் கொஞ்சம் தள்ளி இன்னொரு கோவில் ரெண்டு சந்நிதிகளுடன். ஒன்னு ராதாகிருஷ்ணன், இன்னொன்னு பூரி ஜெகந்நாத். க்ருஷ்ணன், பலராமன், சுபத்ரான்னு மர உருவங்கள்
சாலையின் கடைசியில் வலது பக்கம் லவகுசா மந்திர் மாதா லால்தேவிஜி ராம்தீர்த். பார்க்க ரொம்ப சாதாரணமா கடைவீதியில் இருக்கும் கடைகளுக்கிடையில் இருக்கு. உள்ளே போய்த்தான் பார்க்கலாமேன்னு நுழைஞ்சோம். வலப்பக்கச் சுவரில் சட்டம் போட்டு மாட்டுன படம் மாதிரி பெருசா ஒரு ம்யூரல்.
இந்தப்பக்கங்களில் இருக்கும் எல்லா வட இந்தியக் கோவில்கள்போலவே கலந்துகட்டி எல்லா சாமிகளும். ஒரு பக்கம் கண்ணாடி போட்டுருக்கும் ஒரு சாமியார் பெண்மணியின் உருவச்சிலை. ஹரே கிருஷ்ணா கோவில்களில் ஸ்ரீபிரபுபாதாவின் உருவச்சிலை இருக்குது பாருங்க அதேமாதிரின்னு நினைச்சுக்குங்க. மாதா லால் தேவி ஜி. இவுங்களுக்குன்னு ஒரு அறைவேற அலங்கரிச்சு வச்சுருக்காங்க.
இந்த மாதாவைபற்றி முதல்முறையாக் கேள்விப்படறேன். விசாரிச்சதுலே.... இவுங்க பெரிய மகான். உணவு சாப்பிட்டறதையே விட்டுட்டாங்களாம்! மெய்யாவா? பின்னே எப்படி ஜீவிச்சுருந்தாங்க? சமைச்ச உணவை விட்டுட்டாங்களாம். பால் பழங்கள் மட்டுமே உணவாம். மொத்தம் ஏழு கோவில்கள் கட்டி இருக்க்காங்களாம். அவுங்க காலத்துக்குப்பிறகு மாதா லால் தேவிஜி ட்ரஸ்ட் எல்லாத்தையும் கவனிச்சுக்குது.
மாடிக்குப்போகும் வழியில் ஏறும்போது கஜேந்திர மோட்சம் காட்சியை தோட்டத்தில் கவனிச்சேன். பெரிய யானை! கண்ணுலே படாம இருக்குமா? அதன் கால் முதலையின் வாய்க்குள்ளே! கருடன் மேலேறி மகாவிஷ்ணு பறந்து வர்றார்!மாடிக்குபோனா அங்கே இன்னொரு அதிசயம். எம்பதடி ஆஞ்சநேயர் வானத்துக்கும் பூமிக்குமா நின்னு குளத்தையும் எதிர்க்கோவிலின்மேல் இருக்கும் 'தன்னையும்' (முறைச்சு) பார்த்துக்கிட்டு இருக்கார்! அகட்டிவச்ச ரெண்டு கால்களுக்கும் முன்னால் சின்னதா ஒரு சந்நிதியில் கஜஹனுமன்!
சூரியன் மறையும் நேரம். மேற்கில் தூரத்தில் இருக்கும் வேறெதோ ஒரு கோவிலும் அதன் பின் ஜொலிக்கும் சூரியனுமா சூப்பரா ஒரு தரிசனம் போனஸ்! ஆஞ்சநேயருக்கு வணக்கம் சொல்லி வரும்போது இன்னொரு சின்ன வாசலில் 'வைஷ்ணவோதேவிக்குப் போகும் வழி'! இப்படியே கண்டுக்கிடலாமான்னு போனால்....
சின்னப்பிள்ளையாரைச் சுமந்து ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பெருச்சாளி வாயைத்திறந்து வான்னதும் உள்ளே நுழைஞ்சுட்டோம்:-)
நாலடி வச்சதும் நல்லாவே குனிஞ்சு போகும்படியா ஒரு குகைவாசல். உடலை ரெண்டா மடிச்சுக்கணும். மெல்லிய ஸீரோ வாட் வெளிச்சத்தில் வளைஞ்சு வளைஞ்சு போகும் குகையினூடே போகும்போது அங்கங்கே உள்வாங்கி இருக்கும் சின்னக்குகைகளில் ராதாகிருஷ்ணர், பத்ரகாளி, கோவர்தனக்குன்றைக் குடையாய் பிடிக்கும் கிருஷ்ணன், ராம லக்ஷ்மணர்களுக்கு நடுவில் சீதா இப்படி பார்த்துகிட்டே போக இன்னொரு சின்ன வாசல். உடலை மூணா மடிக்கணும்! உள்ளே சின்ன மேடையில் வைஷ்ணவோ தேவியின் சிரம் இருக்க சுவரில் லால்தேவிஜியின் படம் மாலையோடு. (பண்டிட் ) இளைஞர் ஒருத்தர் உக்கார்ந்து பக்தர்களுக்கு தரிசனம் செஞ்சு வைக்கிறார். இவர்தான் மாதா சாப்பிடறதில்லைன்னு விவரம் கொடுத்தவர்.
குன்றைக் குடையாய்
வைஷ்ணவோதேவி
பக்கவாட்டில் இருக்கும் வழியா வெளியேறினால் நாலைஞ்சு படிகள். அதிலேறி இருட்டான கண்ணாடி அறையை அடைஞ்சோம். சுற்றிவர கண்ணாடிகள் பதிச்சுக் கலர்ஃபுல்லா இருக்கும் அறையின் நடுவில் ஒரு பெரிய கண்ணாடிக்கூண்டில் நிக்குது மரத்தோடு கட்டப்பட்ட ஒரு குதிரை. இந்தப்பக்கம் அனுமனையும் கட்டிப்போட்டுருக்கு அதே மரத்தில் பக்கத்திலே லவனும் குசனும்.இங்கே மட்டும் விளக்கு இருந்தால் எப்படி ஜொலிச்சு இருக்குமுன்னு லைட் ஸ்விட்ச்சைத் தேடிப்பார்த்தும் கிடைக்கலை. மேலே மின்விசிறிகள் இருக்கு. அப்ப லைட் இருந்துதானே ஆகணும், எடு செல்ஃபோனை. அங்கங்கே ஆபரேஷனே இந்த வெளிச்சத்தில் பண்ணும்போது ஒரு ஸ்விட்ச் இருப்பது தெரியாதா என்ன? கண்ணாடிப் பிரதிபலிப்புகள் கண்ணுலே அடிக்குதே தவிர ஸ்விட்சைக் கண்டுபிடிக்க முடியவே இல்லை:(
இந்த வெளிச்சம் வெறும் ( இதய ) ஆபரேஷனுக்கு மட்டும்தான் போல:-))))
அடுத்த படிக்கட்டு நம்மைக் கீழே தளத்தில் கொண்டு விடுது. அங்கே சங்குசக்கரத்தைக் கைமாற்றிப் பிடிச்ச விஷ்ணு. சிற்பி தெரியாமச் செஞ்சுருக்கணும். ஆனா இதுக்கு ஒரு கதையைக் கண்டுபிடிச்சுட்டா தேவலை. இருங்க யோசிக்கலாம்!ரெட்டைப்பிள்ளைகளைத் தொட்டிலில் போட்டு ஆட்டும் சீதை. பிள்ளைகள் நல்ல உறக்கத்தில். பிள்ளைகள் பிறந்த இடத்தைக் கன்ஃபர்ம் செஞ்சுட்டாங்க,இல்லை?
பூமி பிளக்கச் சீதை அதனுள்ளே இறங்குதல்
எக்கச்சக்க சந்நிதிகள், எல்லாவற்றிலும் காணிக்கைப்பெட்டி. தீம் பார்க்கு போல அலங்காரம். குழந்தைகள் விரும்பிவரச் செய்யவாக இருக்கலாம். ஆரஞ்சு உடுத்திய ராம லக்ஷ்மணர், சீதை & அனுமன், பிள்ளையார், கிருஷ்ணர், சிவன், சிம்மவாஹினின்னு ஏராளமா இருக்காங்க. இங்கே தீம் கலர் ஆரஞ்சு!
நல்லாவே இருட்ட ஆரம்பிச்சது. போனவழியே திரும்பி நாம் தங்கி இருக்கும் ஹொட்டேல் பகுதியில் இருந்த கடைத்தொகுதிகளில் நுழைஞ்சு, தென்னிந்தய தோசையை விற்கும் கடையில் பார்ஸல் வாங்கிக்கிட்டு, கொஞ்சமா ஒரு ஷாப்பிங் செஞ்சுக்கிட்டு (நம்மூட்டு சாமிகளுக்குத் திருமஞ்சனம் பண்ண ஒரு பாத் டப்) அறைக்குத் திரும்பினோம்.
தொடரும்....................:-)
Tuesday, September 14, 2010
ஆக்ச்சுவலி, இதுதான் பிள்ளைகள் பிறந்த இட(மா)ம்.......(அம்ரித்ஸர் பயணத்தொடர் - 11 )
Posted by
துளசி கோபால்
at
9/14/2010 03:55:00 AM
21
comments
Monday, September 13, 2010
இப்படி ஆளாளுக்குப் பிச்சுப்பிடிங்கினா.......(அம்ரித்ஸர் பயணத்தொடர் - 10 )
ஒருத்தர் நல்லவரா இருந்து, புகழோடு வாழ்ந்து எல்லோர் மனசுலேயும் இடம் பிடிச்சார்ன்னா அவரைக் கொண்டாட அங்கங்கே 'மக்களாப் பார்த்து'ச் சிலை வச்சு மரியாதை செலுத்துவாங்க. கோவில்களும் இப்படித்தான் இஷ்ட தெய்வங்களுக்குன்னு நாடு பூராவும் கட்டி வச்சுக் கும்பிடறாங்க. ஆனா அதுக்காக 'அவர்' இங்கேதான் பிறந்தார். இந்த இடத்தில்தான் அவுங்க குழந்தைகள் பிறந்தாங்கன்னு ஊர் ஊருக்கு இடம் காமிச்சா எப்படி இருக்கும்? ப்ளேஸ் ஆஃப் பர்த் எது? பர்த் சர்ட்டிஃபிகேட் கொண்டான்னா சொல்ல முடியும்?
பகல் வெய்யில் தாங்காம அறைக்குப் போனவங்க, நம்ம ஓட்டுனர் ப்ரதீப்பிடம் என் கோவில் லிஸ்ட்டைக் கொடுத்து அக்கம்பக்கம் மக்களிடம் 'பஞ்சாபியில் பேசி' இந்த இடங்களுக்கு எப்படிப் போகணும் என்ற விவரத்தைச் சேகரிச்சு வையிப்பா. சாயங்காலம் அஞ்சு மணிக்குக் கிளம்பிப் போகலாம். பள்ளிக்கூடத்துலே ஹோம் வொர்க் செஞ்ச பழக்கம் இருக்குதானே? இதுதான் உனக்கு ஹோம் வொர்க்ன்னு சொன்னேன்.
அஞ்சுமணிக்குக் கிளம்புனப்ப முதல்லே போனது பக்கத்துலே ரெண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ராம் தலாய் மந்திர். சண்டிகர் பஸ் டெர்மினஸைக் கடந்து போய் வலதுபக்கம் திரும்பி புதுசாக் கட்டிக்கிட்டு இருக்கும் மேம்பாலத்தின் அடியில் போறோம். ரெண்டு கிலோமீட்டர்ன்னு போட்டுருக்கு வலையில். ஆனா போய்க்கிட்டே இருக்கோமே! எதுக்கும் இருக்கட்டுமுன்னு, பக்கத்துலே நிக்கும் சைக்கிள் ரிக்ஷாக்காரரிடம் விசாரிச்சோம்.
ரொம்பப் பக்கத்துலேதான் இருக்குன்னு கையைக் காமிச்சு பஞ்சாபியில் ப்ரதீப்புக்கு விளக்கினவர், நாங்க போய் ரைட் எடுத்துத் திரும்பி அலங்காரவாசலில் நிறுத்தும்போது, சைக்கிள் ரிக்ஷாவை மிதிமிதின்னு மிதிச்சுக்கிட்டு அங்கே வந்து நிக்கறார். இது இல்லையாம். அடுத்த ரைட்டுலே போணுமாம்.ஸ்பெஷலா இங்கே ரெண்டு அலங்காரவாசல். முதலில் இருப்பதில் ரெண்டு யானைகள். இதைப் பார்த்துட்டே போகலாமுன்னு உள்ளே நுழைஞ்சோம். ப்ராச்சீன் இதிஹாஸிக் மந்திர் ஸ்ரீராம். ராம் தலாய் னு வளாகத்தில் போர்டு போட்டுருக்கு. அப்ப இதுதான் நாம் தேடிவந்தது. அப்ப 'அது' என்னவா இருக்கும்?
பெருசா ஒரு கோவில்குளம். இடதுபக்கம் ஹனுமன் சந்நிதி, சிவனுக்கு ஒரு சந்நிதின்னு முன்பக்கம். சிவன்தலையில் குடைபிடிக்கும் பாம்புக்குச் சட்டை!!!!
ஒரு ஹால் போன்ற இடத்தில் வரிசையா சந்நிதிகள் அறுவரான ராமர் அண்ட் கோ , ராதாகிருஷ்ணா, விஷ்ணு, துர்க்கை இப்படி. கோவிலை இப்போ நடத்தும் குரு கன்ஷ்யாம் ஜி , இதுதான் லவகுசர் பிறந்த இடம். இந்த இடம்தான் வால்மீகி முனிவரின் ஆஸ்ரமம் இருந்த இடம். அதனால் இதை ராம் தலாய்ன்னு சொல்றோமுன்னு 'அடிச்சு'ச் சொல்றார். அப்ப கர்ப்பிணி சீதை இருக்கும் நம்ம கோயம்பேடு? வாயைத்திறக்காம சொன்னதைக் கேட்டுக்கிட்டேன்.
ராம் தலை ராமர் கூட்டத்தின் முக அழகு பிரமாதம்தான்.
அயோத்தியில் இருந்து இந்த இடம் கிட்டதான் இருக்கு. கதைக்குப் பொருந்தி வரும். ஒருவேளை கோயம்பேடுதான் லவகுசர் பிறந்த இடமுன்னா..... அவ்வளோ தூரம் கர்ப்பிணி சீதை எப்படி நடந்து வந்துருப்பாங்க? ஒருவேளை வால்மீகி ராமாயண சீதை இங்கும், கம்பராமாயண சீதை அங்குமா பெத்துப் போட்டுருப்பாங்களோ!!!!அடுத்த சந்நிதி சனி பகவானுக்கு. கருப்பு உடைகளில் நிக்கறார். முழுச்சந்நிதியும் கருப்பே. அபிஷேகம் பண்ணிக்க வசதியா கருமை நிறக் கண்ணன் ஒரு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ஸிங்லே இறங்கி நிக்கறார் ஒரு பக்கம்!
இன்னொரு ஆஞ்சநேயர் சந்நிதி. ஒரு சில குடிசைவீடுகள், வாசலில் மண் அடுப்பி, மாட்டுக்கொட்டில் நிறையப் பசுக்கள் இப்படி வளாகத்தின் ஒரு பக்கம். இருந்துட்டுப் போகட்டும். அடுத்த கோவிலைப் பார்க்கலாம். பழைய கோவிலை இடிச்சுட்டுப் புதுசாக் கட்டி இருக்காங்கன்னு பயங்கர பில்டப் கொடுத்தாராம் ரிக்ஷாக்காரர்.
சிம்ரன் பேலஸ் கல்யாண மண்டபத்தைக் கடந்து கொஞ்சதூரம் போனால் தெருவையொட்டி நிற்கும் மரத்தோடு சேர்ந்து நிக்குது ஹனுமன் கோவில்.
வழக்கமான பளிங்குச்சிலைகளுடன் சுவரில் பதிக்கப்பட்ட ஹனுமனும் இருக்கார். ரொம்பப் பழைய கோவில் இல்லையாம். நாப்பது வருசமா இருக்கும் கோவிலை, தெருவை அகலப்படுத்தன்னு காரணம் சொல்லி அரசு இடிச்சிருச்சாம். பொதுமக்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து கோரிக்கை வச்சு இதைமட்டும் இடிச்சு தெருவை அகலப்படுத்த முடியுமா? அப்போ இந்த வரிசையில் இருக்கும் எல்லாக் கட்டிடங்களையும் இடிச்சாத்தானே தெரு இன்னும் அகலமாகுமுன்னு சண்டை போட்டதும் நியாயத்தை உணர்ந்து நாலு மாசத்துக்கு முன்னே திரும்பக் கட்டிக் கொடுத்துருக்கு முனிசிபாலிட்டி.இடிச்சுக்கட்டுன கோவில்
இங்கே பூஜை செய்யும் பண்டிட் ஸ்ரீனிவாசன் நம்மை விசாரிச்சார். 'சௌத் கா லோக்' இல்லையா? மதுரைன்னு கோபால் ஊரைச் சொன்னேன். மீனாட்சியை தரிசிச்சு இருக்காராம். கன்யாகுமரிவரை போய்வந்தேன்னார். 'தமிழ் நாட்டுக்காரர்கள் ரொம்ப நல்லவங்க. நல்ல உதவும் மனப்பான்மை. விருந்தோம்பலில் சிறந்தவங்க' ன்னு புகழ் பாடினார். கேக்க இனிமையா இருக்குன்னு நன்றி சொல்லிட்டு வந்தேன். இட்லி தோசைன்னா உசுரையில்லே கொடுக்குது இந்த வடநாட்டு சனம்!!!!!
பண்டிட் ஸ்ரீனிவாஸ்
இன்னொரு கோவில் அடுத்த ரெண்டாவது ரைட்டில் இருக்கு. கட்டாயம் பாருங்கன்னாரேன்னு போனால்.... அதுவும் தனியார் கோவில். ஏதோ மடம். பத்துநிமிசம் இருங்க. சாமியார் வந்துருவார். சந்நிதி திறப்பாங்கன்னார்.
கோபாலின் முகத்தைக் கவனிச்சு, எஸ்' ஆகிட்டோம்.
கைவசம் பெரிய லிஸ்ட் இருக்கும்போது நமக்கென்ன மனக்கவலை?
முக்கால் மணி நேரப் பயணத்துலே இன்னொரு இடம் போனால் அதுதான் பிள்ளைகள் உண்மையாவே பிறந்த இடமாம்!! இப்படி ஆளாளுக்கு சீதை இங்கேதான் பிரசவிச்சாள்ன்னு அதிகாரபூர்வமாச் சொல்லும்போது...... பாவம். ஒருமுறை பெத்துப் பொழைச்சு வருவதே அபூர்வம் என்ற காலக்கட்டத்துலே எத்தனை முறை வலியை அனுபவிச்சாளோன்னு இருக்கு எனக்கு:(
அதிலும் இவளுக்கு ரெட்டைப்பிள்ளைகள்!
நல்லவேளை. ராமன் பிறந்த இடத்தை மட்டும் வேற எந்த ஊரும் சொந்தம் கொண்டாடலை. ஒரு அயோத்தியாலேயே இந்தப்பாடு பட்டாச்சு. இந்த லவகுசன் பிறந்த இடம் மாதிரி இருந்துருந்தா அவ்ளோதான்:(
தொடரும்......................:-)
======================================================================
Posted by
துளசி கோபால்
at
9/13/2010 12:14:00 AM
9
comments
Friday, September 03, 2010
சூடுபட்ட பூனை.......(அம்ரித்ஸர் பயணத்தொடர் - 4)
கைப்பையால் மீண்டும் கஷ்டம் வரக்கூடாதுன்னு 'ரொம்ப புத்திசாலித்தனமா' அறையிலே வச்சுட்டு எட்டரைக்குக் கிளம்பி கோவிலுக்குப் போனோம். மத்யானம் போனப்பக் 'கோவிலை வெளியே இருந்து பார்க்கலாமுன்னு நினைச்சு விட்டுப்போச்சே'ன்னு சின்னதா புலம்புன என்னைப் பார்த்து, 'அதான் பார்த்தமே'ன்றார் கோபால்.
எங்கே? எப்போ?
ஜாலியன்வாலா பாக் விட்டு வெளியில் வந்ததும் குல்ஃபி வண்டியைப் படம் எடுத்தியே அப்போ இந்தப் பக்கம் கோவிலைப் பார்க்கலையான்றார். அட ராமா? கண்ணுலே படாத அளவுக்குச் சின்னதா என்ன? இருக்காதே!!!!
கோவிலுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்போதே 'வண்டியை தெரு உள்ளே விடமாட்டோம். இங்கேயே பார்க்கிங் போட்டுட்டுப் போங்க'ன்னு ட்ராஃபிக் போலீஸ்காரர் சொல்றார். மத்தியானம் உள்ளே போனமே...........
நம்ம வண்டி வேற ஸ்டேட்னு நம்பரைப்பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டு உள்ளே விடமாட்டேன்றார் - ட்ரைவர்
பெரிய வண்டிகளை விடமாட்டாங்கம்மா - கோபால்.
ஆளாளுக்கு யூகங்கள்!
பார்க்கிங்லே வண்டியைப் போட்டுட்டு, ட்ரைவரையும் கோவிலுக்கு வரச்சொல்லிட்டு நடந்தோம்.; சுற்றுலாப்பயணிகள் ஏராளமா வரும் இடம் என்பதால் எங்கே பார்த்தாலும் அழுக்கு. தாவித்தாவி போறதுக்குள் விடிஞ்சுருச்சு. தெருமுனைவரை போய் வலதுபக்கம் திரும்புனதும், நமக்கிடதுபுறம் ஜாலியன் வாலா பாக் இருக்கு. நேராப் பார்த்தால்..... கொஞ்ச தூரத்தில் வெள்ளையா ஒரு பிரமாண்டமான பறவை நிற்பதுபோல் கோவில்! ஹர்மந்திர் சாஹிப்! ஹரிமந்திர் சாஹிப்ன்னும் சிலர் சொல்றாங்க! ஆனால் ஹர் மந்திர் என்பதுதான் பொருத்தமா இருக்கு. ஹர் ஏக லோகோங் கா மந்திர். அனைத்து மக்களுக்குமான திருக்கோவில்!
தெருவின் வலது பக்கம் ஓரமா நடைபாதியில் ஏறிப்போகலாமுன்னு போனால் அங்கே ஒரு ராதா கிருஷ்ணா கோவில்.! பெரிய கோவிலெல்லாம் இல்லை. கடை மாதிரி ஒரு இடத்துலே சுவரோடு சுவரா நிக்கறாங்க ரெண்டு பேரும். ஒரு கும்பிடு போட்டுட்டு மேலே நடந்தோம். வடக்குப் பார்த்தபடி நல்ல அகலமான குருத்வாராக் கட்டிடம். உள்ளே போக நிறைய வாசல்கள் .சீக்கியர்களின் கோவிலுக்குள் போக சில நியதிகள் இருக்கு. அதில் முக்கியமானது தலையைப் போர்த்திக்கொண்டு போகணும். எங்க நியூஸியில் அடிக்கடி குருத்வாரா போகும் பழக்கம் இருந்ததால் எனக்குப் பிரச்சனை ஒன்னும் இல்லை. அதான் துப்பட்டா இருக்கே:) ஆண்களுக்கு தலையில் கட்டிக்கொள்ள சிலபல ஆரஞ்சு நிறத்துணிகளை எங்கூரில் ஒரு தட்டில் போட்டு வச்சுருப்பாங்க. அதுலே ஒன்னு எடுத்துக் கட்டிக்கலாம். இல்லைன்னா பெரிய கைகுட்டை இருந்தாலும் போதும். இங்கே தினசரி வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோவிலில் தலைத்துணி வச்சா ஆகுமா? வெளியில் வித்துக்கிட்டு இருந்த ஒன்னைப் பத்து ரூபாய்க்கு வாங்கினோம்.
வளாகத்துக்குள்ளே நுழையும்போதே பெரிய பெரிய பாத்திரங்களில் சமையல் என்னவோ நடக்குது. கல்சா அங்கத்தினர் சிலர் நீண்ட வாளைத் தோளில் தொங்கப் போட்டுக்கிட்டுச் சமைச்சுக்கிட்டு இருக்காங்க. படிகள் இறங்கி பக்கத்திலே இருக்கும் 'ஜூத்தா கர்' போய் காலணிகளைக் கொடுத்துட்டு டோக்கன் வாங்கிக்கிட்டோம். ஏராளமான கவுண்ட்டர்கள். இது 24 மணி நேரமும் திறந்தே இருக்குமாம். பொதுவா இரவில் குருத்வாராக்களைப் பூட்டுவதில்லை.
வளாகத்தில் இடப்பக்கம் கடைகளா இருக்கு. கோவில் சம்பந்தப்பட்ட நினைவுப்பொருட்களை விற்கும் கடைகள். சீக்கியர்கள் கையில் போடும் கரா (வளையல்) ஏராளமாக் கொட்டி வச்சுருக்காங்க. எல்லாம் எவர்சில்வர். தங்கத்துலே போடக்கூடாதோ?????
வலப்பக்கம் நடந்தால் கோவிலுக்குள் நுழையும் வாசல் வருது. கால் நனைக்கும் விதமா கால்வாய். கடந்து உள்ளே வெராந்தாவில் நுழைஞ்சோம். அலங்கார வளைவுக்குள்ளில் அதோ தெரியுது பொற்கோவில்.
தொட்டுத்தடவலோ, கைப்பைகளை பரிசோதிப்பதோ, இந்த எலெக்ட்ரானிக் கேட்டுகளோ ஒன்னுமே இல்லை!!!! படங்கள் எடுக்கவும் தடை ஒன்னும் கிடையாது. நாம்தான் நம்ம வழக்கப்படி மூலவரை தரிசிக்கும்போது படம் எடுக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் இருந்தோம்.
படபடன்னு படிகள் இறங்கிக் கீழே போனால் மெல்லிய வெளிச்சத்தில் துல்லியமா ஜொலிக்குது! ப்ரமாண்டமான குளம். சுத்தி வர அகலமான பளிங்குத்தரைகள், நல்ல கூட்டம். ஜனங்கள் நின்ன இடத்தில் இருந்தே விழுந்து கும்பிட்டுச் சேவிச்சுக்கிட்டு இருக்காங்க. மூலவரை தரிசிக்கத் தங்கக்கோவிலுக்குள் போகணும். குளத்தின் ஒரு பக்கத்தில் இருந்து கோவில்வரை ஒரு பாலம் இருக்கு. பாலம் முழுசும் மக்கள் தலைகளாத் தெரியுது.
ஜொலிக்கும் கோவிலை நாலு படம் எடுத்தவுடன்.....பேட்டரி லோன்னு சொல்லுது. சார்ஜ் செஞ்சு ரெடியா வச்ச எக்ஸ்ட்ரா பேட்டரி...... ஐயோ.... என் கைப்பைக்குள்ளே வச்சுருந்தேனே............ பையைக் கொண்டுவராமப் போயிட்டேனே..... அறையில் இருக்கே:( அட ராமா....... வாகாவில் சுட்டுக்கிட்டா இங்கேயும் சுடுமுன்னு நினைச்ச அப்பாவி ஆனேன். உங்க கேமெரா எங்கேன்னா இவர் நான் கொண்டுவரலையேன்றார்:(
இறைவனின் திருவுளம் இப்படி இருக்கு! நாளைக்குப் பகலில் ஒருமுறை வந்து நல்லாக் கோவிலைச் சுத்திப்பார்த்துப் படம் எடுக்கணும்.
குளத்தின் வலப்பக்கமாகவே நடந்தோம். வலம் வந்த புண்ணியம் கிடைக்கட்டுமே! மேற்கூரை இருக்கும் அகலமான வெராந்தாக்களில் ஏகப்பட்ட சனம். பலர் ஓய்வாப் படுத்துக்கிட்டு இருந்தாங்க. குளத்துக்கும் வெராந்தாவுக்கும் இடையே ஒரு பத்துமீட்டர் அகலம் இருக்கு. நாலு மூலைகளிலும் குடிதண்ணீர் கிடைக்கும்படியா ஏற்பாடு. கொஞ்சம் அகலமான கிண்ணத்தில் தண்ணீர் தர்றாங்க. குடிச்சுட்டு வச்சுட்டா, பயன்படுத்திய கிண்ணங்களைக் கொண்டுபோய் ஒருவித மண் வச்சுத் தேய்ச்சு, பிறகு ஒரு பக்கெட்டில் போட்டு நல்லாக் கழுவித் துடைச்சு திரும்பவும் தண்ணீர் விநியோகம் செய்யுமிடத்துக்கு வந்துருது. எல்லாருமே தன்னார்வலர்கள். கடவுளுக்குச் செய்யும் சேவையாக இதைச் செய்யறாங்க.தங்கக்கோவிலின் பின்புறம் இருக்கும் கிழக்குக் கரைப்பக்கம் நெடுநெடுன்னு மினாரா ஸ்டைலில் ரெண்டு கோபுரங்கள் நிக்குது. புங்கான்னு இதுக்குப் பெயர். BUNGA என்றால் மாளிகை என்று பொருளாம். ( பங்களா என்ற சொல் இதிலிருந்து வந்துருக்குமோ?) ஜஸ்ஸா சிங் ராம்கரியா என்ற சீக்கியத் தலைவர்களில் ஒருவரால் 1794 இல் கட்டப்பட்டது.
மொகலாயர்கள் ஆண்ட காலத்தில் இந்த குருத்வாராவை பலமுறை தகர்த்துப் பாழாக்கி இருக்காங்க. ஒவ்வொருமுறையும் மீண்டும் சீர் செய்து கட்டிக்கிட்டே இருந்துருக்காங்க சீக்கியர்கள். அப்போதான் கல்ஸா வீரர்கள் இனி கோவிலின் பாதுகாப்புக்கு இங்கேயே தங்கணுமுன்னு முடிவெடுத்து இந்த புங்காக்களைக் கட்டுனாங்களாம். உசரே இருக்கும் கோபுரத்தில் வீரர்கள் அல்லும் பகலுமா இருந்து காவல் காத்து நின்னுருக்காங்க அந்தக் காலத்தில்.
இந்த சீக்கியர்களின் கட்டடக்கலையில் சிறப்பு அம்சமா இருக்கும் புங்கா இப்போ இது மட்டும்தானாம். மூணு அடுக்குக்கட்டிடம். ரெட்டை கோபுரத்தின் உயரம் மட்டும் 46 மீட்டர்கள். முதல்லே நாலு கோபுரம் கட்ட ஒரு திட்டம் இருந்துச்சாம். கடைசியில் கட்டுனதென்னவோ இந்த ரெண்டும்தான். 1903 வது வருசம் வந்த நிலநடுக்கத்தில் கோபுரத்தின் மேல் இருந்த கிண்ணக்கூரை உடைஞ்சுருச்சுன்னு அதை சரி செஞ்சு புதுப்பிச்சுருந்தாங்க. அதன்பிறகு தங்கக்கோவில் ஆக்ரமிப்பு (ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்ஸ்) 1984 இல் நடந்தப்ப இன்னொருமுறை பழுதாகிருச்சுன்னு திரும்பவும் ஒருமுறை சரி பண்ணி இருக்காங்க.இதைக் கடந்தவுடன் குளத்தின் கரையை ஒட்டி வலப்புறமா 'துக் பஞ்சனி பேர்' (Dukh Bhanjani Ber Tree)என்று பெயருள்ள ஒரு பெரிய இலந்தைமரம் நிக்குது. அங்கேதான் பக்தர்கள் புனிதநீரில் முங்கி எழ ஒரு ஸ்நான்கட் இருக்கு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் படித்துறை. அறுபத்தியெட்டுப் புண்ணீய தீர்த்தங்கள் இந்த திருக்குளத்தில் வந்து சேருவதாக ஒரு ஐதீகம்.
குளத்துக்கு ஒரு கதை இருக்கு. முன்னொரு காலத்துலே பீபி ரஜனினு ஒரு ராணி இருந்தாங்க. அவுங்க கணவருக்கு குஷ்டரோகம் வந்துருச்சு. ஒரு சமயம் காட்டுக்குள்ளே இருந்த நீர்நிலையில் அவர் முங்கிக் குளிச்சுருக்கார். நோய் போயிருச்சாம். இந்த அதிசயத்தைப்பற்றிக் கேள்விப்பட்ட குரு ராம் தாஸ், இந்த குளத்துக்கு விசேஷ சக்தி இருக்குன்னு இதை பக்தர்கள் குளிக்கும் ஸ்நானகட்டா விஸ்தரிச்சுக் கட்டித்தந்தாராம். குளக்கரையில் இருந்த மரத்துக்கும் துக் பஞ்சனின்னு பெயர் கொடுத்துட்டார். பளிங்கு மேடை கட்டி அந்த மரம் இன்னும் இங்கே இருக்கு. இங்கே மூழ்கி எழுந்தா நம் துக்கங்கள் விலகும் என்று ஒரு ஆழ்ந்த நம்பிக்கை. முடமான இளைஞர் ஒருவருக்கு இங்கே மூழ்கி எழுந்தபின் கால்கள் சரியாச்சுன்னும் சொல்றாங்க. அற்புதங்கள் நிறைந்த நாடல்லவா நம் புண்ணிய பூமி. (சொன்னாக் கேட்டுக்கணும். அம்புட்டுதான் சொல்வேன்)நமக்கு மூழ்க வசதி இல்லை என்பதால் தண்ணீரை அள்ளித் தலையில் தெளிச்சுக்கிட்டோம். கொஞ்சம் துக்கம் விலகுனாச் சரி. இதைத்தொட்டடுத்து மேடைபோல் கட்டிஇருக்கும் சந்நிதிக்குள் போய் நமஸ்கரிச்சுட்டு வர்றாங்க. 68 புண்ணிய ஸ்தலங்களைத் தரிச்சிச்ச பலன் கிடைக்குமாம்.
மக்கள் குளத்தில் இறங்கி வெளிவரும்போதெல்லாம் சிந்தும் தண்ணீரையும் ஈரத்தையும் சேவை செய்பவர்கள் துடைச்சுக்கிட்டே இருக்காங்க.
கோவிலின் அளவையும் முக்கியத்தையும் கருதி மூணு இடுகைகள் குருத்வாரா ஸ்பெஷலா வரப்போகுது. நின்னு நிதானமாப் பார்க்கலாம். வாழ்நாளில் ஒரு முறை வந்து போகவேண்டிய இடமல்லவா?
தொடரும்...............................:-)
PIN குறிப்பு: படங்கள் ஒரு இரவிலும் ஒரு பகலிலும் எடுத்தவை.
Posted by
துளசி கோபால்
at
9/03/2010 06:07:00 PM
16
comments
Labels: Amritsar, அனுபவம் Golden Temple
Wednesday, September 01, 2010
பெண்ணும் பேரழிவும் (அம்ரித்ஸர் பயணத்தொடர் - 2)
வலையில் பார்த்து புக் பண்ணி இருந்த ஹொட்டேலைத் தேடி கொஞ்சம் அலைஞ்ச பிறகு ரஞ்ஜித் அவென்யூவைக் கண்டுபிடிச்சோம். தெரு பூராவும் ' கார் ச்சலானா சிக்கோ' னு மரத்துலே பேனர் கட்டி வச்சுருக்கும் ட்ரைவிங் ஸ்கூல்கள்!!!! ஒரு ஷாப்பிங் செண்டருக்குப் பின்பக்கம் இருந்துச்சு இந்த ஹொட்டேல். அறைக்குப்போய் ஜன்னலைத் திறந்தா எங்க ஊர் 'அம்மா'வை (நியூஸி ஹெலன் க்ளார்க்) நினைவுக்குக் கொண்டுவரும் HK Clarks Inn. நேரெதிரே இருக்கு.பகல் சாப்பாட்டுக்கு அப்படியே வெளியே போயிட்டுப் பொற்கோவிலை வெளியே இருந்து ஒரு பார்வை பார்த்துட்டு வாகா பார்டர் போயிட்டு வந்துறலாமுன்னு திட்டம்.
ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் ஒன்னுமே கண்ணுலே தென்படலை. எங்கே பார்த்தாலும் தாபா தாபா. தாபாவைத்தவிர வேறொன்னும் இல்லை. ஒரு இடத்தில் ஃபேமிலி ரூம்ஸ் இருக்குன்னு போட்டுருக்கு. ஓக்கே.... இந்த தாபா என்பது இங்கத்து உணவகங்களுக்குப் பொதுவான பெயர்னு மனசிலாச்சு. வரிசை வச்சது போல வரிசையா உணவுப்பதார்த்தங்களை தெருவைப் பார்த்தமாதிரியே வச்சுருக்காங்க
இதுதான் ஒரிஜனல் தாபா
ரயில்வே ஸ்டேஷன் எதிரில் ஊர்ந்து வந்துக்கிட்டு இருந்தப்ப (அமிதாப்?) பச்சன்'ஸ் வைஷ்ணவோ தாபா ன்னு ஒன்னு பார்த்துட்டு அங்கே போனோம். மாடியில் சின்ன ஹாலில் மேசை நாற்காலிகள் போட்டுருக்காங்க. திரைச்சீலைகள் எல்லாம் போட்டு பரவாயில்லாமல் இருந்துச்சு. 'ப்ளெய்ன் தாலி' வாங்கிக்கிட்டோம். சிம்பிள். மூணு ரொட்டி, பருப்பு, சனா கறி & தயிர். இந்த வைஷ்ணவோ சாப்பாட்டில் வெங்காயம், பூண்டு எல்லாம் இருக்காது.பச்சன்'ஸ் தாபா
சாப்பாடு ஆனதும் அப்படியே கோவிலைப் பார்க்கப்போனோம். காந்தி கேட் என்ற தோரண வாசல் இருக்கும் சாலையில் நுழைஞ்சு போறோம். ரெண்டு பக்கமும் பழைய கட்டிடங்கள் நிற்கும் பரபரப்பான தெரு. இங்கே சாலைகள் தெருக்கள் எல்லாம் கொஞ்சம் அகலமாவே இருக்கு. சைக்கிள் ரிக்ஷாக்கள் ஏராளம். . தெருவின் கடைசியில் சிட்டிக் கவுன்ஸில் கட்டிடம். இதுக்குப் பக்கத்திலே அங்கே இந்த ஊர் பாரளுமன்ற அங்கத்தினரா இருந்த நவ்ஜோத் சிங் சித்து (க்ரிக்கெட் விளையாடினவர்) தொகுதி முன்னேற்றமுன்னு ஒரு அலங்காரச்சின்னம், சின்னதா ட்ராஃபிக் ஐலண்ட் தோட்டமுன்னு ஏற்பாடு செஞ்சுருக்கார்.
காந்திகேட்கடைத்தெரு
நேராப் போய் வலது பக்கம் திரும்புனதும் ஜாலியன்வாலா பாக் இருக்கு. கோவிலை அப்புறம் பார்க்கலாமுன்னு அங்கேயே இறங்கிக்கிட்டோம். 1919வது வருசம் ஏப்ரல் மாசம் 13 ஆம்தேதி வருசப்பிறப்பு கொண்டாட இந்த பார்க்கில் கூடி இருந்த இருவதாயிரம் சாதாரண ஜனங்களை, எந்த முன்னறிவிப்பும் இல்லாம படபடன்னு குருவி சுடுவதுபோல் சுட்டுத்தள்ளிய இடம். பாதகம் செஞ்சது அப்போ ப்ரிட்டிஷ் இந்தியாவில் மிலிட்டரி ஆஃபீஸரா இருந்த ரெஜினால்ட் எட்வர்ட் ஹேரி டையர்(Reginald Edward Harry Dyer)
மொத்தம் 20 நிமிஷம் இடைவிடாம 1650 ரவுண்ட் சுட்டுருக்காங்க. ஏறக்கொறைய 2000 பேர் மரணம். வெளியே வர சின்னதா மூணு வாசல் இருந்துக்கு. ஆனால் ரெண்டு வாசல்களில் பீரங்கி வண்டிகளை வழிமறிச்சு நிறுத்திட்டு சுட ஆரம்பிச்சதும் மக்கள் திகைச்சுப்போய் கடைசியா இருந்த ஒரு சின்ன சந்து வழியா வெளியேற முயற்சி செஞ்சு கூட்டத்தில் நசுங்கியும், குண்டடிபட்டும், சிதறி ஓடுனப்ப அங்கே இருந்த மொட்டைக் கிணற்றில் விழுந்தும் செத்தாங்க.இதுதான் அந்தச் சந்து
ஊருக்குள்ளே வரும்போது இருந்த மகிழ்ச்சி ஆர்வம் எல்லாம் ஒடுங்கிப்போய் வயித்துலேயும் நெஞ்சுலேயும் சங்கடமா ஆகிப்போச்சு.அப்போ இங்கே சின்னதா ஒரு கட்டிடம் மட்டும்தான் இருந்துருக்கு. சம்பவம் நடந்த சில வருசங்கள் கழிச்சு இந்த இடத்தை இண்டியன் நேஷனல் காங்ரெஸ் வாங்கி இங்கே நினைவுச்சின்னம் கட்டி இருக்காங்க. மொட்டைக் கிணற்றைச் சுவர் எழுப்பிக் கம்பிவலை போட்டு வச்சுருக்காங்க.
நினைவுச்சின்னம்
இண்டியன் ஆயில் கம்பெனி புண்ணியத்தில் அங்கே அமர்ஜோதி ஒன்னு இந்த 2000 ஆண்டு முதல் இடைவிடாம எரிஞ்சுக்கிட்டு இருக்கு. மக்கள் வந்து உட்கார ரெண்டு பக்கமும் அலங்காரமா பூச்செடிகள் வச்ச இடங்கள். நேரெதிரா நடுவில் நினைவுச்சின்னம். இடது பக்கம் அந்தக் கிணறு ( 120 சடலங்களை இங்கிருந்து எடுத்தாங்களாம்) வலது பக்கம் குண்டுகள் பாய்ந்திருக்கும் சுவர்கள் இப்படி மனசை சோகமாக்கிருச்சு.
துப்பாக்கி குண்டுகள் பாய்ஞ்ச இடம்
கிணறு
வெளியே வரும் வழியில் ஒரு சின்ன ஹாலில் சம்பவம் நடந்த சமயம் எடுத்த புகைப்படங்கள், நெஞ்சால் ஊர்ந்து வரும் சட்டம் போட்டு வெள்ளைக்காரன் படுத்திய கொடுமைகள் எல்லாம் இருக்கு. இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை.
கண்ணாடிப்பெட்டிக்குள் அப்போது பயன்படுத்திய துப்பாக்கிகள். உத்தம் சிங்கின் அஸ்தி ஒரு பித்தளைச் சொம்பில் வச்சுருக்காங்க.
யார் இந்த உத்தம் சிங்?
ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த சமயம் இவர் 20 வயது இளைஞர். நடந்த அநியாயத்தைக் கண்டு நாடே கொதிச்சுப்போனப்ப இளரத்தம் கொதிச்சு இருக்காதா? சுதந்திரப்போராட்ட வீரரா ;கதார் பார்ட்டி' என்ற புரட்சிக்காரர்களுடன் சேர்ந்துக்கிட்டார். ஜெனரல் டையரை எப்படியாவது கொல்லணும் என்ற வெறி அப்போ இளைஞர்களுக்கு இருந்துச்சு.
மூணு வருசம் இந்த கதார் பார்ட்டியில் இருந்து பயிற்சி எடுத்துருக்கார். அப்படி இப்படின்னு அமெரிக்காவுக்குப் போய் நிறைய வெடிமருந்துகள் துப்பாக்கிக் குண்டுகள், கைத்துப்பாக்கி எல்லாம் சேகரிச்சு இருக்காங்க இவரும் இவரைச் சேர்ந்த் இன்னும் 25 இளைஞர்களும். பகத்சிங் கட்டளைன்னு இந்தியா திரும்பினது ஜூலை 1927 இல். ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்து எட்டு வருசமாயிருக்கு. ஆனாலும் அது மூட்டிய தீ கொஞ்சம்கூட அணையாமல் தீவிரமா ,மனசுக்குள்ளே கொழுந்து விட்டு எரிஞ்சுக்கிட்டேதான் இருந்துருக்கு.
இங்கிலாந்துக்குத் திரும்பிப்போயிட்ட ஜெனரல் டையர் இந்த 1927வது வருசம்தான் தன்னுடைய 63 வது வயசில், ஸ்ட்ரோக் வந்து ரத்தக்குழாய்கள் வெடிச்சுச் செத்தார். சரியான கொடுங்கோலன்.
அடுத்த மாசமே (ஆகஸ்ட் 1927) உரிமம் இல்லாமல் துப்பாக்கி வச்சுருந்தார்னு உத்தம்சிங்கைச் சிறையில் அடைச்சுட்டாங்க. நாலு வருசம். இவர் சிறையில் இருந்த சமயம்தான் பகத்சிங்கும் சந்த்ரசேகர் ஆஸாதும் பிடிபட்டுத் தூக்கில் இடப்பட்டாங்க. நடந்த வருசம் 1931 மார்ச் 23. பகத்சிங்கின் வயசும் அப்போ 23தான்:(
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட ஏழுமாசம் கழிச்சு உத்தம்சிங் விடுதலை ஆகி வெளியே வந்தார். 32 வயசு அப்போ.
நம்ம ஜாலியன்வாலா பாக், படுகொலை நடந்துச்சுன்னு சொல்ற ஏப்ரல் மாசம் 13, 1919 தினத்துக்குச் சிலநாட்கள் முன்னே நடந்த சம்பவங்கள்தான் டையரின் சினத்துக்கு தீப்பொறியா இருந்துருக்கு. என்னன்னு கொஞ்சம் பார்ப்போம்.......
சரியா மூணு நாளைக்கு முன் ஏப்ரல் பத்து, சிறையில் இருக்கும் ரெண்டு முக்கிய உள்ளூர் தலைவர்களை அந்த மாநிலத்தில் இருந்து வெளியேறச் சொன்னதை ரத்து செய்யணுமுன்னு கோரிக்கைவச்சு அம்ரித்ஸர் ஜனங்க, டிப்டி கமிஷனரைப் பார்க்க ஊர்வலமாப் போயிருக்காங்க. அங்கே அவுங்களைக் கலைஞ்சு போகச்சொல்லி ராணுவம் துப்பாக்கி எடுத்துச் சுட்டு பயமுறுத்தி இருக்கு.
எப்பவும் கூட்டமா இருப்பவர்களின் மனநிலை, சரியாச் சிந்திக்காது. அதான் இவ்வளவு பேர் இருக்கோமே என்ற முரட்டு தைரியத்தில் அரசாங்கக் கட்டிடங்கள், பிரிட்டிஷ் பேங்க் எல்லாம் தீ வச்சு ரகளை செஞ்சுக்கிட்டே போறாங்க. அங்கே இங்கேன்னு வெறியாட்டத்தில் ஏழு ப்ரிட்டிஷ்காரர்களைக் கொன்னும் போட்டுட்டாங்க. ராணுவமும் கலகம் நடந்த இடங்களில் சுட்டத்தில் 20 இந்தியர்களும் கொல்லப்பட்டாங்க.
அப்போ மார்ஸெல்லா ஷெர்வுட் என்ற பெண்மணி , (சர்ச் ஆஃப் இங்கிலாந்து மிஷினரியா வந்து இங்கு டீச்சரா 15 வருசமா இருக்கறவங்க) ஒரு சின்ன சந்து வழியா சைக்கிளில் போய்க்கிட்டு இருந்தாங்க. கூட்டம் அவுங்களை வளைச்சுக் கீழே தள்ளி, கையில் இருந்த கட்டைகளால் அவுங்க தலையில் சரமாரியா அடிச்சு, உதைக்கவும் ஆரம்பிச்சுருக்கு. அவுங்க எழுந்து ஓட ஆரம்பிச்சதும் விடாம வளைச்சு அடிச்சுருக்கு. இந்த கலாட்டாவில் எப்படியோ தப்பிச்சு எழுந்து ஓடி, திறந்துருந்த ஒரு வீட்டுக்குள்ளே நுழையப்போனப்ப, வீட்டுலே இருந்த ஆளுங்க உள்ளே வரவிடாமக் கதவை மூடிக்கிட்டாங்க. பின்னாலேயே ஓடிவந்த கூட்டம் திரும்பத்திரும்ப அவுங்களைத் தாக்கி இருக்காங்க. அப்புறம், ரொம்ப ஆபத்தான நிலையில் மயங்கி இருந்தவங்களை விட்டுட்டு ஓடிப்போயிருக்கு கூட்டம்.
இதுக்குப்பிறகு இவுங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் சேர்த்தது இந்தப் பக்கம் வந்த சில ப்ரிட்டிஷ் ராணுவத்தினர். இங்கே அமிரித்ஸரில் அடுத்த ரெண்டு நாட்கள் அமைதியா இருந்தாலும் வேற பகுதிகளில் ரயில்வே தண்டவாளத்தைப் பெயர்த்துப்போடுவது, தந்தி ஒயர்களை அறுப்பது, அரசுக் கட்டிடங்களுக்குத் தீ வைப்பதுன்னு கலவரம் நடந்துக்கிட்டுத்தான் இருந்துச்சு. இப்ப மூணு ப்ரிட்டிஷார் அங்கங்கே கொல்லப்பட்டாங்க.
டீச்சரைத் தாக்கிய மூணாம்நாள் மதியம்தான் பஞ்சாப் மாகாணத்துக் கலவரங்களை அடக்க ராணுவ நடவடிக்கை எடுத்தே ஆகணுமுன்னு தீர்மானம் ஆச்சு. அப்போ ப்ரிகேடியர் ஜெனரலா இருந்த ரெஜினால்ட் எட்வர்ட் ஹேரி டையர், பிரிட்டிஷ் ராணுவத்தின் இந்தியப்பிரிவில் இருந்த அம்பது சிப்பாய்களுடன் உடனே கிளம்பி ஜாலியன் வாலா பாக் என்ற தோட்டத்துக்கு வந்துருக்கார்.
அன்னிக்கு பஞ்சாபிகளுடைய புது வருசம் பைஸாகி. அதைக் கொண்டாட அங்கே சுமார் இருபதாயிரம் மக்கள் குடும்பத்தோடு கூடியிருக்காங்க. மக்கள் கூட்டம் கூடிட்டால் கலாட்டாவில் முடியுது. அதனால் இப்படியெல்லாம் கூட்டம் கூட விடக்கூடாதுன்னு ராணுவம் முடிவு செஞ்ச பிறகும், சட்டையே பண்ணாமல் கூடிய இந்தக் கூட்டத்துக்குச் சரியான பாடம் கற்பிக்கணுமுன்னு சந்துவழியா உள்ளே நுழைஞ்ச அதிகாரி, அங்கே கடல் போல் கூடி இருந்த ஜனத்திரளைப் பார்த்ததும், கலைஞ்சு போங்க என்ற எச்சரிக்கை கூடச் சொல்லாமல், அவுங்களையெல்லாம் சுட்டுத்தள்ளும்படி ராணுவவீரர்களுக்கு உத்தரவு கொடுத்துட்டார். என்னதான் இந்தியன் ட்ரூப்பா இருந்தாலும், ராணுவத்திலே அதிகாரி சொன்னதை அப்படியே கடைப்பிடிக்கணும் என்ற நியதிப்படி அவுங்களும் படபடன்னு 1650 ரவுண்டு சுட்டுத்தள்ளிட்டாங்க.
அடுத்துவந்த சிலநாட்களில், இந்த இந்தியர்களை எப்படியெல்லாம் கேவலப்படுத்தினால் அவுங்க மனோதைரியம் ஓடிப்போகுமுன்னு யோசிச்சு, மிஸ். மார்ஸெல்லா ஷெர்வுட் தாக்கப்பட்ட அந்த சந்தின் ரெண்டு முனையிலும் வீரர்களை நிக்க வச்சு, அந்த சந்தின் வழியாப் போகும் இந்தியர்கள் யாரும் நடக்கக்கூடாது. தவழ்ந்து, நெஞ்சால் ஊர்ந்து போகணுமுன்னு சொல்லித் தப்பித்தவறி அந்தப் பக்கம் போன மக்களை அடிச்சு ஊர்ந்துபோகச் சொல்லி இருக்காங்க. சந்தின் நீளம் ஒரு 600 அடி தூரம் இருக்கும். இந்த சந்திலே குடி இருந்தவங்களுக்கும் வெளியே வந்தால் இதே தண்டனைதான். கொடுமைக்குப் பயந்து எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருந்துருக்காங்க.
மாலையில் எட்டு மணியில் இருந்து காலை ஆறு வரை ஊரடங்கும் சட்டம் இருந்ததால் அப்பவும் வெளியில் வர இயலாது. நல்லவேளையா இந்த ஊர்ந்து போகும் சட்டம் ஏழு நாளில் முடிவுக்கு வந்துச்சு. அம்பது சிவிலியன் ஜனங்கள் இதுலே மாட்டிக்கிட்டு நெஞ்சு வயிறு எல்லாம் புண்ணாகி ரத்தம் சொட்டச்சொட்ட ஊர்ந்து போகக் கட்டாயப்படுத்தப்பட்டாங்க.
இதெல்லாம் நடந்த சமயம் பஞ்சாப் கவர்னரா இருந்தவர் Michael O'Dwyer. இவர் ஜெனரல் டையருக்கு ஆதரவா இருந்தவர். ஏற்கெனவே டையர் 1927 இல் செத்துட்டார் என்பதால் அவரைக் கொன்னுப் பழி தீர்த்துக்கும் சான்ஸ் போயிருச்சு. இனி இப்போ ஆதரவா இருந்த கவர்னர் மைக்கேல் ஓ ட்வையர் பாக்கி. இவர் இங்கிலாந்துக்குத் திரும்பிப்போய் பலவருசங்கள் ஆச்சுன்னாலும் விடறதில்லைன்னு திட்டம் போட்டு , மைக்கேல் ஒரு மீட்டிங்லே கலந்துக்கிட்ட சமயம் அவரைச் சுட்டுத்தள்ளியவர்தான் இந்த உத்தம் சிங். இது 13 மார்ச் 1940 நடந்தப்ப ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்து 21 வருசங்கள் ஆகி இருந்துச்சு.
சுட்டுத்தள்ளிட்டுத் தப்பி ஓடாம இருந்தவரைப் பிடிச்சுச் சிறையில் அடைச்சு கேஸ் நடத்தி நாலரை மாசம் கழிச்சுத் தூக்கில் போட்டாங்க. அவரோட உடலை எரிச்ச அஸ்திதான் இங்கே ஜாலியன்வாலா பாக் தோட்டத்துலே நினைவகத்தில் வச்சுருக்காங்க.
மகாபாரதக்கதைபோல ஆகிருச்சு. பெண்ணை இம்சை செய்ததால் வந்த பேரழிவு.கனத்த மனசோடும், இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்தைக் கணக்கில் எடுக்காம, நம்ம அரசியல் வியாதிகள் எப்படியெல்லாம் நாட்டைச் சுரண்டிக்கிட்டு இருக்காங்க என்ற வருத்தத்தோடும், இந்த மாதிரி இடங்களைப் பார்க்கும்போது சட்னு ஏற்படும் தீவிர தேசபக்தி உணர்ச்சியோடும் கிளம்பி மேற்கு நோக்கி பயணிச்சோம்.....
தொடரும்..................:-)
Posted by
துளசி கோபால்
at
9/01/2010 04:40:00 PM
19
comments
