Friday, June 26, 2015

கரிகாலன் கட்டி வைத்த கல்லணை! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 61)

கோவிலடியில் இருந்து கிளம்பி நாம் வந்த வழியாகவே போறோம்.  கொஞ்ச தூரத்தில் இடது பக்கம் திரும்பினால் காவிரி பாலம்(நாம் திரு அன்பிலில் இருந்து வந்தவழி) வரும். எங்கேயும்திரும்பாமல் நேராகப் போனால் கல்லணை. கிளம்பின பத்தே நிமிட்டில் இங்கே வந்துட்டோம்.  வெறும் 7 கிமீதான். எதோ அன்னப்பறவை சிறகை விரிச்சு நிக்கறதுபோல் ஒரு  பால் வெள்ளைக் கட்டிடம்.  என்னன்னு பார்க்கலாமுன்னு இறங்கிப் பார்த்தால் இது கரிகால் சோழன் மணி மண்டபம்.


பொதுப்பணித்துறை கட்டி இருக்காங்க. திறந்து வச்சே ஒரு ஒன்பது மாசம்தான் ஆகுது. நிறைய சுற்றுலாப்பயணிகள்  இருந்தாங்க.



உள்ளே போய்ப் பார்த்தோம். அநாவசிய அலங்காரங்கள் ஏதும் கண்களை உறுத்தாமல்  நட்ட நடுவிலொரு பெரிய யானைமேல்  அமர்ந்திருக்கும் கரிகால சோழனின் சிலை! யாரும் அருகில் போய் தொடமுடியாமல்  தடுப்பு வேலி.  வெண்கலச்சிலையாம்.  இவ்ளோ பெரிய  வெங்கலச் சிலையா!!!! இருக்குங்கறீங்க?  சரி. இருக்குமுன்னு நம்பிட்டுப்போகலாம்.




பாவம்  குழந்தை, தன்னைக்கட்டும் சங்கிலியைத் தானே தூக்கிக்கிட்டுப் போகுது!





ரெண்டாம் நூற்றாண்டு சமாச்சாரம். காவிரியில்  வெள்ளம் பெருகி  ஊரே வெள்ளக்காடாகும் நிலைதான் அப்போ. அதானே.....  காவிரியில்  அப்போ எங்கேயும்  அணைகளோ, நீர்த்தேக்கங்களோ கிடையாதே!  தலைக்காவிரியில் மழை பெய்யப்பெய்ய  காவிரியில் தண்ணீர் பெருகி ஓடுவதுதான் வழக்கம்.
வெள்ளக் காலங்களில் நாட்டு மக்கள் படும் துன்பங்களையும்,  மழை இல்லாத கடும்கோடையில்  விவசாயம் செய்ய முடியாமல் இருக்கும் பயிர்கள் வாடுவதையும்   கண்டு, இதுக்கு ஒரு வழி கண்டுபிடிக்கணுமுன்னு  மன்னன் கரிகாலன் உக்கார்ந்து யோசித்ததன் விளைவுதான்  இந்தக் கல்லணை!
1080 அடி  (329.184  மீட்டர்) நீளம். 66 அடி அகலம். 18 அடிஉயரம் இப்படிக்  கணக்கு சொல்றாங்க.


ஆமாம்...  சீறிப்பாயும் தண்ணிக்குள்ளே எப்படி அணை கட்டுனாங்கன்னு பார்த்தால்...........  நமக்கு மட்டுமில்லை, உலகத்துக்கே வியப்புதான்!

பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து ஒருவரிசையில் போடணும்.  ஓடும் தண்ணியில் மணல் அதை அரிச்சுக் கீழே கொண்டு போய் செருகிடும். அப்படியே கொஞ்சநாள் விட்டுட்டு நல்லா பூமியில் ஆத்துக்குள்ளே அழுந்தினபிறகு  இன்னொரு கல்வரிசை அதுக்கு மேலே!  ரெண்டு கல் வரிசைக்கு இடையிலும் தண்ணியில் கரையவே கரையாத களிமண். (அந்தக் காலத்து ஃபெவிகால்!)  இப்படியே அதே இடத்துலே 18 அடி உசரம் வரை ஏத்தி இருக்காங்க.  பாறைகள் எல்லாம் திருவெறும்பூர் மலையைச் சுத்தி இருந்தவையாம்!  (யானை இழுத்தாந்துருக்கும்,  இல்லே!)   கல்லை வச்சுக் கட்டுனதால் இதுக்கு கல்லணை என்ற பெயரே பொருத்தமா அமைஞ்சுருக்கு!
இந்தக் கல் அண்ட் களிமண்  ரகசியம் எப்படி நமக்குத் தெரிஞ்சதுன்னா....   ஒரு சுவாரசியமான  சம்பவம் நடந்துருக்கு.



ஆர்தர் காட்டன் என்ற   ப்ரிட்டிஷ் ஆர்மி எஞ்சிநீயர் , நீர்ப்பாசனங்களைப் பற்றி ஆராய்ஞ்சுக்கிட்டு இருந்த  ஸ்பெஷலிஸ்ட்.  தன்னுடைய 18 வது வயசில் இந்தியாவுக்கு    ஆர்மி சர்வீஸில் வேலைக்காக வந்து சேர்ந்தார். இந்தியாவுக்கும் சிலோனுக்கும்(அப்ப இந்தப்பெயர்தான்!) பாம்பன் வழிப்போக்குவரத்துக்கான  மரைன் சர்வே எல்லாம் நடத்துனவர். 1828 லே (25 வயசு)  ஆர்மி கேப்டனா பதவி உயர்வு. அதேசமயம் காவிரி நீர் பாசன ஆராய்ச்சி பணியும் இவருக்குக் கிடைச்சிருக்கு.


கல்லணையைப் பார்த்து பிரமித்த இவர்  இவ்ளோ  மணல்பாங்கான  நதியில் எப்படி அணை கட்டி இருப்பாங்கன்னு  (கொஞ்சம் ரகசியமாவே) ஆராய்ஞ்சு பார்த்தப்பதான்  கல் அண்ட் களிமண் ரகசியம் புலப்பட்டு இருக்கு. (பாருங்களேன்....  இதைக்கூட வெள்ளைக்காரர் வந்துதான் கண்டு பிடிக்கணுமுன்னு  இருந்துருக்கு!) இவருடைய வியப்பு இப்பப் பன்மடங்காப்பெருக,    க்ராண்டா  கட்டி இருக்கும் அணைக்கட்டுன்னு  க்ராண்ட் அணைக்கட்  (Grand Anicut) என்று குறிப்பிடப்போய்  வெள்ளையர்களின் ப்ரிட்டிஷ் இண்டியாவில் இதே பேரால் குறிப்பிடப்பட்டுருக்கு.
அணைக்கு மேல் பாலம் கட்டுனதுகூட  1839இல் தானாம்.

அப்புறம் முக்கொம்புகிட்ட  காவிரியில் மேலணை கட்டுனதும் இவர் திட்டம்தான். அப்புறம்  ஆந்திராவில் கோதாவரி நதியில்  கட்டுன  அணையும்  இவர் கைவண்ணம்தான். க்ருஷ்ணா நதி அணையும் இவர் கட்டிக் கொடுத்ததுதான்.  ப்ரிட்டிஷ் இந்தியாவில் நீர்ப்பாசன சம்பந்தமான பலபணிகள் செஞ்சு கொடுத்துருக்கார். கூடவே அப்பப்பப் பதவி உயர்வுகளும் கிடைச்சுக்கிட்டே வந்து  1860 ஆம் ஆண்டு  பணி ஓய்வு  கிடைச்சப்ப  ப்ரிட்டிஷ் ஜெனரலா  இருந்தார்.  அதுக்கு அடுத்த  ஆண்டு இவரது சேவைகளை  மெச்சி, இவரைக் கௌரவிக்கும்விதமா  ஸர் பட்டம்  கொடுத்துருக்கு  ராஜாங்கம்.

யானையை க்ளிக்கும் இளைஞர் ஒருவர்  ஒவ்வொருமுறையும் ஃப்ளாஷ் போட்டுக்கிட்டே படங்கள் எடுப்பதும் அதை ரீவைண்ட் செஞ்சு பார்த்துட்டுத் தலையை ஆட்டி, உதட்டைப்பிதுக்கி டிலீட் செஞ்சுட்டு மறுபடி க்ளிக்குவதுமாக இருந்தார்.  பிட்  வகுப்பு மாணவியான எனக்குப் பார்க்கப்பொறுக்கலை.  அவரிடம்போய் ப்ளாஷ் இல்லாமல் எடுங்க.  அப்பத்தான் சரியா வரும். அப்புறம்  பிக்காஸோவில்  கொஞ்சம்  வெளிச்சம் சேர்த்துக்கலாமுன்னு சொல்லி என் கெமெராவில் எடுத்த படங்களைக் காமிச்சேன். (எதோ என்னால் ஆன ரெண்டு ரூ) அதன்படியே அவரும் ஃப்ளாஷ் இல்லாமல் எடுத்துப் பார்த்துட்டு  திருப்தியுடன் சிரிச்சுக்கிட்டே வந்து  தேங்ஸ் மேடம்னு ரெண்டுமுறை சொல்லிட்டு மேற்கொண்டு க்ளிக்க ஆரம்பிச்சார்.

இந்த மண்டபத்துக்கு உள்ளே வர  நாலுபக்கமும் வழி இருக்குன்னாலும்  ஒரு வழியை மட்டும் திறந்து வச்சுருக்காங்க. இதுதான் முக்கியவாசல் போல!
பளிச்சுன்னு புது மெருகோடு இருக்கும் இந்த மணிமண்டபத்தை இதே நிலையில்  பராமரிக்கணும். இப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின்  ஆட்சி காலத்தில் அடிக்கல்நாட்டி, ஒரே வருசத்தில் கட்டிடமும் பூர்த்தியாகி அவர் கையால்  12 ஃபிப்ரவரி 2014 இல் திறப்பு விழாவும் நடந்துருக்கு. தற்கால கல்வெட்டுக்கள் சேதி சொல்லுது.  ஆனால்.... கல்வெட்டுகளை சரியாப் பராமரிக்கலை போல இருக்கே!

எனக்கு இந்த இடத்தில் மனதில் உறுத்திக்கிட்டு இருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கணும். நாட்டுமக்களுக்காக  அந்தந்த மாநில அரசுகளும், மத்திய அரசும் செய்துதரும் எல்லா சமாச்சாரங்களும்  மக்கள் வரிப்பணத்தில் இருந்து அமைக்கப்பட்டவைகளே! எந்த அரசியல்வியாதியும்  தன் சொந்தக் காசைச் செலவு செஞ்சு  சாலைகளும் பாலங்களும் இதைப்போன்ற நினைவுச் சின்னங்களும்  கட்டறதில்லை என்பதை நினைவில் வச்சுக்கணும்.

பொதுப்பணித்துறை  கட்டுதுன்னா அது அரசுக்காகச் செய்யுதே தவிர  ஆட்சியில் இருக்கும் அரசியல்வியாதிக்காக இல்லை என்பதை அவுங்களும் நினைவு வச்சுக்கணும். யார் இருந்தாலும் யார் போனாலும் ஏற்கெனவே அரசு ஆரம்பிச்சு வச்ச மக்கள் நல திட்டங்களை (இவை ஏற்கெனவே சட்ட சபையின் ஒப்புதல் பெற்று  ஆரம்பிச்சு நடந்துக்கிட்டு இருப்பவைகள்தானே?) ஆட்சி கைமாறுச்சுன்னு   அதை அம்போன்னு விடறது சரி இல்லை  என்பதை இங்கே சொல்லிக்கறேன்.

ஆனால் அதுக்காக இலவசமா  மக்களுக்கு  ஆட்டுக்கல் தரேன், அம்மிக்கல் தரேன்னு  ஆரம்பிச்சு  இலவசத்துக்கு அலையும் ஒரு கூட்டத்தை வளர்த்து விடுவதிலும் எனக்கு உடன்பாடில்லை. போதாக்குறைக்கு  அரசு ஊத்திக் கொடுக்கும் வியாபாரம் செய்வதை நினைக்கும் போதே எரிச்சலா இருக்கு. இதையெல்லாம் விட்டுத்தொலைச்சுட்டு,  மக்கள் உழைச்சு வாழும்வகையில் தொழிற்சாலைகளைத் தொடங்குவது, விவசாய வேலைகளுக்கு உதவிகள் செஞ்சு  அவைகள் நலிந்துவிடாமல்  காப்பது போன்றவைகளைச் செஞ்சால்  அநேகமாக  அனைத்து மக்களும்  உழைத்து சம்பாரிச்சுத் தன்குடும்பத்துக்கு வேண்டிய ஆட்டுக்கல்லோ அம்மிக்கல்லோ வாங்கிக்க மாட்டாங்களா என்ன? அப்படி தன் காசில் வாங்கி குடும்பம் செழிப்பது கௌரவமா இல்லையா?

கல்வியும் மருத்துவமும் அரசின் பொறுப்பாக இருக்கணுமே தவிர தனியார்களுக்குத் தாரை வார்த்துக்கொடுத்துட்டுக் கண்ணை மூடிக்கிட்டு இருக்கப்டாது. தன் நாட்டு மக்களுக்கு   கல்வி அறிவும்,  நல்ல உடல்நலமும் கொடுப்பது அரசாங்கத்தின்  முக்கிய  கடமை இல்லையோ? சொல்றதைச் சொல்லிட்டேன்....  என்னமோ பார்த்துச் செய்யுங்க!

விவசாயத்தை மட்டும்  நாம் விடவே கூடாது. காலத்துக்குத் தகுந்த மாதிரி  விவசாயத்தில் மாற்றங்கள்  கொண்டுவந்து சிறப்பாகச் செய்ய முயற்சிக்கணும்.  விவசாயம் முக்கியம் என்பதால்தானே   கல்லணையே கட்டும் திட்டம் வந்துச்சு இல்லையா?


 மாலைநேரத்தில் பறவைகள் கூடணையும் முன்னே  உடற்பயிற்சி செஞ்சுட்டுத்தான் தூங்கப்போறாங்க. அதான் எதுக்குமே தொப்பை இல்லை:-)


மணிமண்டபத்தை அஞ்சரைக்கு மூடிட்டாங்க. நாங்க அக்கம்பக்கமிருக்கும் தோட்டத்தையும் அணையையும் பார்த்துட்டுக் கிளம்பினோம்.  அவ்வளவா தண்ணீர் இல்லை. மண்டபத்துக்குப் பக்கத்திலே  ஒரு சின்னக்கோவில் இருக்கு.  மதில் மேல் சிங்கமா இல்லை புலியான்னு தெரியாதவகையில் ஒரு காட்டு மிருகம்!  அநேகமா காவிரி அம்மன் கோவிலாக இருக்கலாம்!




ஒரு அஞ்சு வருசத்துக்கு முன் இந்தப்பக்கம்  வந்தப்ப  யானை மேல் கரிகாலன் இருக்கும் சிலையும்,  அகத்தியரின் சிலையும் பார்த்துருக்கேன்.  அவையெல்லாம் இப்போ காணோம்!  ஒரு வேளை அது வேற வழியாக இருக்குமோ? தெரிஞ்சவங்க சொல்லுங்க.



இனி நேரா ஸ்ரீரங்கம்தான்...............  சலோ

தொடரும்......:-)



22 comments:

said...

இப்பவும் அகத்தியர் சிலையும் கரிகாலன் யானை மேல் அமர்ந்திருக்கும் சிலையும் இருக்கே!

மணிமண்டபம் - பராமரிப்பு எப்படி இருக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்!

ஆஹா ஸ்ரீரங்கத்துக்கு பக்கத்துல வந்துட்டீங்க! :)

said...

வெண்கல குழந்தை, கல்லணை தகவல்கள், இளைஞருக்கு கொடுத்த டிப்ஸ் என அனைத்தும் அருமை அம்மா... நன்றி...

said...

கல்லணை பற்றி அருமையான பதிவு. நன்றி மேடம்.

said...

அந்தச் சிலைகள் இப்பவும் இருக்கே அங்கு....கல்லணை புகைப்படங்கள் அனைத்தும் அருமை!

அதுவும் இடைச்செருகலாக விட்டீங்க பாருங்க கருத்துகள் கல்வியும், மருத்துவமும் தனியார் மயமாக்கப்படாமல் அரசின் கீழ் இருக்கணும்னு.....சூப்பர்.....இதை எல்லாம் யாரு பாத்து செய்யப்போறாங்க சொல்லுங்க....எப்படி பணம் அடிக்கலாம் அதுவும் மக்கள்கிட்டருந்துனு திங்க் பண்ணும் சுயநலவா(வியா)திகள் இருக்கறச்சே....நீங்க சொல்லுற இது எல்லாம் எங்க நடக்கும்....நாங்க எல்லாம் பாவமுங்க.....நீங்க வந்து மத்திக்கும் மாநிலத்துக்கும் குறைச்சுப் பரையணும்......

நல்ல கருத்துகள்

said...


முதலில் படித்துக் கொண்டு வரும்போது பழைய யானை மீதமர்ந்து இருந்த கரிகாலன் என்னானான் என்ற கேள்வி எழுந்ததுபின்னூட்டத்தில் அவன் அங்கேயே இருப்பது அறிகிறேன் 1970 களின் முன் பகுதியில் என் நண்பன் அப்போது அவனிடமிருந்த மூவி காமிராவால்சுட்ட சில படங்களை ஒருங்கிணைத்து எனக்கு சில நாட்களுக்கு முன் அனுப்பினான் கல்லணை நிறையவே மாறி இருக்கு போல் இருக்கு.

said...

உங்களுக்கு பிடிச்ச யானை!
அரசியல்/பணம்/பெயர் - இதெல்லாம் நேரடியாக மாற இப்போது வழியே இல்லை ஏனென்றால் அந்த அளவுக்கு பெரும்பாலன மக்கள் கெடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்.பெரு மூச்சு விடுவதை தவிர வேறு வழியில்லை.

said...

வெண்கல சிலை நாலாபுறமும் படம் எடுத்து நாங்களும் ரசிக்க பதிந்தமைக்கு நன்றி .
மக்களை ஓசிக்கு பழக்கபடுத்தி , சம்பாதிக்கும் பணத்தை செலவழிக்க ஊத்திக்கொடுத்து செலவழிக்க பழக்கபடுத்தி அடிமை வாழ்வு வாழ பழக்கபடுத்தி விட்டார்கள் . அப்புறம் எங்கேர்ந்து கௌரவமா வாழறது .


//கல்வியும் மருத்துவமும் அரசின் பொறுப்பாக இருக்கணுமே தவிர தனியார்களுக்குத் தாரை வார்த்துக்கொடுத்துட்டுக் கண்ணை மூடிக்கிட்டு இருக்கப்டாது. தன் நாட்டு மக்களுக்கு கல்வி அறிவும், நல்ல உடல்நலமும் கொடுப்பது அரசாங்கத்தின் முக்கிய கடமை இல்லையோ? சொல்றதைச் சொல்லிட்டேன்.... என்னமோ பார்த்துச் செய்யுங்க!//



உங்க ஆதங்கம் தான் , நான் உட்பட இங்கே பலருடையதுமா இருக்கு .

said...

நாங்க போனப்போ மணிமண்டபமே இல்லை. அதோடு இதை அணைனு சொல்லலாமா? ம்ம்ம்ம்ம்? அப்புறமா வரேன். :)

said...

ஏராளமான தகவல்களுடன் படங்களும் சேர்ந்து அசத்துகின்றன. அழகான பதிவு!

said...

கரிகாலன் மட்டுமல்ல.. அன்றைய மன்னர்களோட முதற் கடமையே வரப்புயர வழி செய்றதுதான். ஆனா இன்னைக்கு? என் மனசுல இருக்குறதத்தான் நீங்களே பதிவுல எழுதிட்டீங்களே.

said...

நல்லாருக்கு. ஆமாம் இந்த மணிமண்டபம்னு எல்லோரும் கேட்கிறாங்களே. இதனுடைய பயன் என்ன? கட்டிடத்தில் காசு அடிப்பதும், கொஞ்ச நாளில், காதலன்/காதலி பெயர் எழுதுவதுமாகிவிடுகிறது. இருக்கற வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கவே வழியில்லை. இதையெல்லாம் செய்யாமல், மணிமண்டபம் அமைத்தேன் என்பதே சாதனையாகி விடுகிறது. சரி..சரி.. அரசியல் பக்கம் ஒதுங்காதீங்க. ரொம்ப மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டியதாகிவிடும்.

ஆமாம்... வழில எதுவும் சாப்பிடவில்லையா? நேரமில்லையா? அல்லது குறிப்பிடவில்லையா?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பிறந்தநாள் கொண்ட்டாட்டம் எல்லாம் நல்லபடியாக நடந்துச்சோ? மீண்டும் வாழ்த்து(க்)கள்.

கொள்ளிடம் பார்க் பக்கம், அணைக்கட்டு மேலாகவே கொஞ்சம் நடந்துபோய் எட்டிப் பார்க்காமப் போனேனே இப்பத்தோணுது:(

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நான் வலைஉலகில் (மட்டும்) டீச்சர் என்பதை அடிக்கடி மறந்து போறேன்:-))))

said...

வாங்க ரத்னவேல்.

உங்க பக்கத்திலும் பகிர்ந்தமைக்கு நன்றி. இன்னும் கொஞ்சம் வாசகர்கள் கிடைத்தால் வேணாம் என்பேனா:-))))

said...

வாங்க துளசிதரன்.

ஒரு 1080 அடியிலே யானையைக் கோட்டை விட்டுருக்கேன்:(

மனசில் உள்ள அங்கலாய்ப்பை எங்கேகொண்டு கொட்டுவேன்? நல்லதும் பொல்லாததும் எல்லாம் இங்கேதான்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

மாற்றங்கள் இப்போதெல்லாம் எக்கச் சக்கம். போனவருசம் பார்த்து வச்சுட்டு, இந்த வருசம் போனால் எல்லாம் அடையாளம் தெரியாமல்லே மாறிக்கிடக்கு!!!!

இதுலே 1970 களின் முற்பகுதின்னா... கேக்கவே வேணாம். முடிஞ்சால் உங்களிடம் வந்த படங்களை உங்க பக்கத்தில் போட்டீங்கன்னா...அன்றும் இன்றும் வகைக்குப் பயனாக இருக்கும்.

said...

வாங்க குமார்.

உண்மைதான். ஆனால் எந்த அக்ரமத்துக்கும் ஒரு அளவு இல்லையா? இப்படியே போனால் எப்படி?

நம்ம யானை என்பதால் வளைச்சு வளைச்சுப் படமெடுத்தாச்சு:-)

said...

வாங்க சசி கலா.

கௌரவமா வாழவிடமாட்டேன்னா என்ன செய்வது? சுயமரியாதை சுய மரியாதைன்னு சொல்லிக்கிட்டே அதை இழக்கும்படி பண்ணிட்டாங்களே:(

said...

வாங்க கீதா.

2013 மே மாசம் அடிக்கல் நாட்டி, ஃபிப்ரவரி 2014 இல் முடிச்சுருக்காங்க. ஒன்பதே மாசம்தான்!

நீங்க அதுக்கு முன்னால் போயிருப்பீங்க. அதான்.... எப்படியும் கோவிலடி இன்னொருக்காப் போகப் போறீங்கதானே... அப்போ இதையும் கண்டுக்கிட்டு அங்கிருந்து கோவிலுக்குப் போகலாம். பத்தே நிமிசம்தான்.

நீர்த்தேக்கம் என்றும் சொல்லலாம்:-)

said...

வாங்கசெந்தில் குமார்.

ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி!

said...

வாங்க ஜிரா.

வரப்புயரன்னு எவ்ளோ சிம்பிளா சொல்லிட்டுப் போயிருக்காங்க பாருங்க நம்ம முன்னோர்கள்!
ஒரே சொல்லில் எல்லாம் அடங்கிருது!

நாடு போகும் போக்கைப் பார்த்தா....குறை ஒன்றுமில்லைன்னு பாடமுடியலையேப்பா:(

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நீர்த்தேக்கம்/ அணை எல்லாம் கட்டுனவங்களை நினைவு கூற மணிமண்டபம் அமைப்பது தவறில்லை. ஆனால் அவுங்க செஞ்ச நல்லவைகளைப் பாராட்டி நன்றி சொல்றதுக்கு பதிலா, சுற்றுலாப்பயணிகளா வரும் மக்கள்ஸ் சிலர், ஆட்டோக்ராஃப் போட்டு சுதந்திரம் கொண்டாடுவதுதான் ரொம்பவே மோசம். இதுகள் கோவிலையும் விட்டு வைப்பதில்லை:(

கோவிலில் அப்பம் கிடைக்கலை. அங்கிருந்து கல்லணைக்கு பத்தே நிமிட்தான் ஆச்சு. பொதுவா கண்ட நேரத்தில் தின்னும் பழக்கம் இல்லை. பகல் சாப்பாடு ஆனதும் மாலை டீ குடிக்கும்போதுதான் எதாவது கொறிப்பது உண்டு. அதுவும் பயணங்களில் சிலசமயம் முடிவதில்லை:( உங்களை ஏமாற்றாமல் தீனி படம் அடுத்த பதிவில் வருகிறது:-))))