Monday, June 22, 2015

ஸ்டேஷனுக்கு வந்த காந்தித்தாத்தா! (தலைநகரத்தில் ! பகுதி 9)

இந்தப்பக்கமே நேராப்போனா வந்துருமுன்னு நான் அடிச்சுச்(!) சொன்னால்கூட  கேக்காமல்  அது ஒன்வே , போகக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டே வேற ஒரு ரோடுக்குள்ளே  நுழைஞ்சு போய்க்கிட்டு இருக்கார் கோபால். பொம்பளைகளுக்கு மேப் பார்த்து வழிசொல்லத் தெரியாதுன்னு இருக்கும் பொய்மொழியை மெய்மொழின்னு நம்பும் ஆண் குணம்:(

ஊரெல்லாம் சுத்தி எங்க நாடாளுமன்றம் கடந்து  நாம் போக நினைச்ச இடத்துக்கு வந்து சேர்ந்தப்ப 'இவர் ஒன்வேன்னு  நினைச்சுக்கிட்டு இருந்தது  டுவே'ன்னு பார்த்ததும்......    "உனக்கு பார்லிமெண்ட் காமிச்சேனோல்லியோ!"   சரியான சமாளிப்புத் திலகம்:-)
 வாசலில் காந்தி நின்னுக்கிட்டு இருக்கார்.  பலவருசமா நின்னபடியே  ஒரு காத்திருப்பு! இன்னுமா ரயில் கிடைக்கலை?   இந்த வெலிங்டன் மாநகரத்துக்கு  இந்திய மக்களின் அன்பளிப்பு!



முகப்பில் ப்ரமாண்டமான எட்டுத்தூண்களுடன் (ஒவ்வொன்னும் 42 அடி  உசரம்! )  நிற்கும் பெரிய கட்டிடம்.  இதைக்  கட்டுன காலத்தில் நியூஸியின் மிகப்பெரிய கட்டிடம் என்ற அந்தஸ்து கிடைச்சது.  கட்டிடம் கட்டப்பெரிய இடம் வேணுமுன்னு தேடுனப்ப சரியா ஒன்னும் அமையாமப்போய், கடலில் இருந்து மீட்டெடுத்து நிலத்தைத் தர  ஹார்பர் போர்டு  1922 இல்  ஒத்துக்கிட்டதும்  ரெயில்வே துறை  வேலையை ஆரம்பிக்குது.  முதலில்  நிலத்தை ரீக்ளெய்ம் பண்ணும் வேலை,  அடுத்த வருசமே ஆரம்பிச்சு நடக்குது. மொத்தம் 68 ஏக்கர்  நிலம் கிடைச்சது.  இதில் ட்ராக் போடும் வேலைகள் பாக்கி இருக்கு. 1929 இல்  இங்கேயே ஸ்டேஷன் கட்டிக்கலாமுன்னு அரசாங்கம் ஒப்புதல் கொடுத்ததும் அதுக்கான டிஸைன்களை வரைஞ்செடுத்து  கட்டிடம் கட்டத் துவங்கி வேலை நடக்கும்போதே  அடுத்துள்ள நேப்பியர் என்னும் பகுதியில் 1933 இல் ஒரு பெரிய நிலநடுக்கம். நிலநடுக்கத்தில் பாதிச்ச மக்களை மீட்டெடுக்க  நிதி தேவைப்பட்டதால்  ரெயில் வேலைக்குக் கொஞ்சம் தடசம்.

ஆஹா....  நிலநடுக்கத்தைத் தாங்கும்விதமா வேலைகள் இருக்கணுமேன்னு  இன்னும் தீவிரமா  ஆராஞ்சு பார்த்து ஒருவழியாக் கட்டிடம் பூர்த்தியாகி அதை, ஜூன் மாசம்  1937 இல்  கவர்னர்  ஜெனரல் திறந்து வச்சுருக்கார். ஆகமொத்தம் 14 வருசங்கள் ஆகிருக்கு திட்டத்தை நடப்பில் கொண்டு வர!
அதுவரை சின்ன ஸ்டேஷன்களா வெலிங்டன் நகரின்ரெண்டு  வெவ்வேற பகுதிகளில்  ( Lambton , Thorndon)  இருந்தவைகளை மூடிட்டு இதையே மெயின் ஸ்டேஷனா வச்சுக்கிட்டாங்க.

திறந்து வச்ச மறு வருசம் எல்லாமே  மின்சாரத்துலே ஓடும் ரெயிலா மாத்திட்டாங்க.
நம்ம திருமலை நாயக்கர் மஹால் தூண்களைப்போல இருக்குல்லெ?


ரெயில்வேஸ்தான்   உலகமெங்கும் எப்பவுமே அதிகமான ஊழியர்களை வச்சிருக்கும் துறை என்பது  உண்மைதானே? இங்கேயும் 675 பேர்  வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க அப்போ.  அவர்களுக்குத் தேவையான  அலுவலக அறைகளும், பயணிகளுக்குத் தேவையான சகல வசதிகளுக்கும் குறைவில்லாமல் இருக்கணுமேன்னு  அஞ்சு ஏக்கர் இடம்  ஒதுக்கினாங்க. ஸ்டேஷன் கட்டிடம் மட்டும் ஒரு ஒன்னரை ஏக்கர் பெருசு! மீதி இடத்தில் முன்பக்கத்தோட்டம், கார்பார்க்கிங், உள்ளே ப்ளாட்ஃபாரங்கள் இப்படி.....  அதுதான்  68 ஏக்கர் தாராளமா இருக்கே!



(இந்த இடத்தில் கொஞ்சம் கடன்வாங்கித்தான் நீங்க க்ரிக்கெட் உலகக்கோப்பையில் பார்த்த வெஸ்ட்பேக் ஸ்டேடியம் கட்டுனது என்பது கொசுறுத்தகவல்.)

ரயில் வரும்வரை காத்திருக்கும் பயணிகளுக்கு   பெரிய டைனிங் ஹால், முடிதிருத்தகம், புத்தகக்கடை, பழக்கடை,  முதலுதவி அறை, கழிப்பறைகள்  எல்லாம் கட்டிவிட்டு மாடியில்  சின்னப்பிள்ளைகளுக்கான நர்ஸரியும் அமைச்சுட்டாங்க. பிள்ளைகளை விட்டுட்டு கடைகண்ணிக்களுக்குப் பெரியவர்கள் போய்வர சௌகரியமா இருக்குமாம்!

எனக்கென்னமோ நம்ம சென்னை சென்ட்ரல் ஞாபகம் வந்தது என்பது  நிஜம்.  எவ்ளோ அழகான  கம்பீரமான கட்டிடம்  இல்லை ! 


உள்ளே போய்ப் பார்த்தோம்.... எல்லாம் இப்பவும் படு நீட் தான்.  ஆனால் நிறைய ரயில்கள் இப்போ  பஸ்ஸா மாறிக்கிட்டு இருக்கு!  ரயிலுக்குப் பதிலா பஸ்ஸில் கொண்டு விடுவாங்க ரயில் ஸ்டேஷனில் இருந்து!  அதானே....    கூட்டமே இல்லைன்னா ..... நாப்பது பேருக்காக ரயில் விடமுடியுமா என்ன?

 போர்டைப் பார்த்தீங்களா? கோ  த ட்ரெய்ன்....  அதுதான்....   கோயிக்கிட்டே இருக்கு:(


1986 இல்  நியூஸியின் பாரம்பரியக் கட்டிடங்களில் ஒன்னாக இதைப் பதிவு செஞ்சுருக்கு ஹெரிட்டேஜ்  சொஸைட்டி.

பழக்கடை, புத்தகக்கடை எல்லாம் போய் ஒரு (ந்யூ வொர்ல்ட்)சூப்பர்மார்கெட் இப்போ கட்டிடத்துக்குள் இடம் பிடிச்சுருக்கு.  ரயில் விட்டு இறங்குனதும் கையோடு மளிகை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப்போகலாம்.  அண்டை நாடான அஸ்ட்ராலியாவிலும் இப்படி ரெயில்வே ஸ்டேஷன்களில் சூப்பர்மார்கெட் இருப்பதைப் பார்த்திருக்கேன்.

அஞ்சரைக்கு அறைக்குப்போய்ச் சேர்ந்தோம்.  இன்னிக்கு ஈஸ்ட்டர் என்பதால் ஊரே அமைதியாக் கிடக்கு.  கடைகண்ணிகள் ஒன்னுமே திறக்கலை. ஒரு டீ போட்டுக்குடிச்சுட்டு ராச்சாப்பாட்டுக்கு என்ன செய்யலாமுன்னு  யோசிக்க ஆரம்பிச்சோம். மகள், நம்ம ரஜ்ஜு சாப்பிட வந்தான்னு  ஃபோட்டோ எவிடென்ஸ் வாட்ஸப்பில் அனுப்பினாள்:-)  கூடவே ராச்சாப்பாட்டுக்கு   Genghis Khan  போகச்சொல்லி ஒரு பரிந்துரை:-)

அவ்ளோ தூரமெல்லாம்  இருட்டில் சுத்த வேணாமுன்னு  அக்கம்பக்கம் எங்காவது  ரெஸ்ட்டாரண்ட் இருக்கான்னு  (வலையில்) தேடியதில்  கூபாத் தெருவில்   ஏராளமா இருக்குன்னு  வெலிங்டன் பக்கம் சொல்லுது.

நம்ம  ஹொட்டேலில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரம்தான், என்றாலும் புது ஊரில் நடந்துபோய் (அதுவும் இருட்டினபிறகு!) தேவையில்லாம  ரிஸ்க் எடுக்கவேணாமுன்னு  வண்டியைக் கிளப்பிக்கிட்டுப் போனோம்.  ரெண்டே தெரு தாண்டினாலாச்சு. காரில் தொலைஞ்சு போகமாட்டோம் பாருங்க:-)

பப்ளிக் பார்க்கிங்லே வண்டியைக் கொண்டுபோய் நிறுத்தினால்....   மணிக்கு 4  டாலர் (24/7)போடுன்னு சொல்லுது. இது என்னப்பா அக்ரமம்? எங்கூரில்  அரசு விடுமுறைநாட்கள், ஞாயிறுகள் எல்லாம் ஃப்ரீ பார்க்கிங்தான்.  கோபால் பர்ஸை எடுக்கறார். 'நோ'ன்னு தடை போட்டேன். (சரியான கஞ்சி!)  வேற இடம் கிடைக்குதான்னு பார்க்கலாமுன்னு எதிர் தெருவில் நுழைஞ்சால்  பார்க்கிங் மீட்டர்களோடு தெருவோரப் பார்க்கிங் இருக்கு.  அங்கே எல்லா இடமும் காலி வேற. பார்த்தால் எங்கூர் போலவே  பப்ளிக் ஹாலிடேஸ் ஃப்ரீ.




கூபா  மால், கூபா ஸ்ட்ரீட் இங்கே  ரெண்டு தெருக்களை அடைச்சு  ஒரு  ( Pedestrian Mall) வாக்கிங் மாலா செஞ்சுருக்காங்க.  ட்ராஃபிக் இல்லாததால் ஜாலியா  இங்கேயுமங்கேயும் போய் வேடிக்கை பார்த்துக்கிட்டே ஷாப்பிங் செய்யலாம்.  நானும் நல்லாவே விண்டோ ஷாப்பிங் செஞ்சேன்னு தனியாச் சொல்லணுமா:-))))



நடந்துபோகும் நடுவழியில் குழந்தைகள் விளையாடுவதற்கான ஒரு அமைப்பு வைச்சதுடன் பக்கத்துலேயே  ஒரு  Bucket Fountain  இருக்கு.  1969 இல்  Burren and Keen என்ற இருவர் டிஸைன் செஞ்சது. கீழே தொட்டியில் இருக்கும் தண்ணீர்  சின்ன பம்ப் வழியா மேலேறி இந்த  பக்கெட்டுகளை நிரப்பும். எது முதலில் நிரம்பியதோ  அது கனம் தாங்காமல்  அப்படியே சரிஞ்சு தண்ணீரைக் கீழே கொட்டும்.  அந்தத் தண்ணீர்  தொட்டிக்குள் விழுமுன்  வழியில் இருக்கும் மற்ற  பக்கெட்டுகளைக் கொஞ்சம் நிரப்பிக்கிட்டே விழவும் செய்யும்.  எந்த பக்கெட் எப்ப சரியும் என்று  நம்மால்  சட்னு கண்டுபிடிக்க முடியாது. அதைச் சுற்றி இருக்கும் மேடைகளில்  ஏறி, பிள்ளைகள் விளையாடும்போது எதிர்பாராமல் தலைக்குக் குளிக்க வேண்டிவரும்.  இது பசங்களுக்கு ஒரே ஜாலி! அப்ப நமக்கு?

2003 லே இந்த ஃபவுண்டனை இன்னும் கொஞ்சம் மாத்தி அமைக்கலாமுன்னு சிட்டிக் கவுன்ஸில் அந்த பக்கெட்டுகளில் சிலவற்றை வேற கோணங்களில் வச்சுவிட்டுச்சு. எதிர்பாராத நேரத்தில் அக்கம்பக்கம் நடந்துபோகும் மக்கள்ஸ் மேலே தண்ணீர் வாரி இறைக்குது  இப்போ.  ஒரே ஜலக்ரீடைதான் போங்க:-)

சிலர் இந்தத் தொட்டித் தண்ணீரில்  கொஞ்சம்  பாத்திரம் தேய்க்கும் சோப்பு திரவத்தைக் கலந்து விட்டுருவாங்க. விசிறி அடிக்கும் தண்ணீரில் சோப் குமிழ்கள் பறந்து போவதும் ஒரு வேடிக்கை.  அதுவும் காற்றுக்குப் பேர்போன 'விண்டி வெலிங்டனில்'  கேக்கவா வேணும்?

ஒரு ஏழெட்டு  ரெஸ்ட்டாரண்டுகள் இங்கே  திறந்து இருந்துச்சு நம்ம லிட்டில் இண்டியா  அண்ட் துள்சி உட்பட.  இவைகள் எல்லாம் நாடு முழுசும் பெரிய நகரங்களில் இடம் பிடிச்சவைதான்.  எங்கே போகலாமுன்னு  ஒரு நிமிட் யோசிச்சு,  கோபால், துள்சி கையால் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சேன்னு துள்சிக்குள் நுழைஞ்சோம்.

மணி இப்போ ஏழரைக்குப் பக்கம். இவ்ளோ சீக்கிரம் சாப்பிடணுமான்னு யோசனை. பேசாமல் டேக் அவே வாங்கிக்கலாமுன்னு  ஆர்டர் செஞ்சால்....  நான்  & ரைஸ் ரெண்டுமே  ஃப்ரீ.  வெளியே போர்ட் வச்சுருக்கே. பார்க்கலையான்னார் நம்மை வரவேற்றவர். அதுக்குள்ளே  தலைமை சமையல்காரர் வந்து நம்மை  குசலம் விசாரிச்சுட்டு,  இந்தியாவில் இருந்து  இப்பெல்லாம் ஏராளமான டூரிஸ்ட்டுகள் வர்றாங்க.  நீங்க  இந்தியாவில் எங்கே இருந்து  வந்தீங்கன்னார். சௌத்லே இருந்து ...  மத்ராஸ் என்றேன்.

நானே உங்களுக்காக சமைச்சுத் தர்றேன். ஒரு  20 நிமிசம் ஆகும் என்றார்.  அதுவரை வேடிக்கை பார்க்கலாமுன்னு  நாங்க மாலில் சுத்திக்கிட்டு இருந்தோம்.  கொஞ்சம்  சுவாரஸியமான  சமாச்சாரங்கள் இருக்குமிடம்தான் போல.  ஜன்னல்  காட்சிகள் அப்படி!

சாப்பாட்டை வாங்கிக்கிட்டு  அறைக்கு வர  ஒரு கால் மணி ஆச்சு. எங்கே பார்த்தாலும் ஒன்வே என்பதால் கொஞ்சம் சுத்து அதிகம்.



நாளைக்குக் கொஞ்சம் சீக்கிரம் எழுந்துக்கணும். முக்கியமான ஒரு இடத்துக்கு உங்களைக் கூட்டிக்கிட்டுப் போறோம். சரியா?

 PINகுறிப்பு:  சாப்பாட்டைப் பற்றி ஒன்னும் சொல்லலியேன்னு  நினைக்கறவங்களுக்காக....   துள்சி சாப்பாடு சகிக்கலை.  ஒரேதா மஞ்சப்பொடியை வாரி இறைச்சுருக்காங்க. அளவும் கூடுதல்.  வாங்குனதில் பாதி வீணாத்தான் போச்சு:( 


தொடரும்.....:-)


10 comments:

said...

பிரமாண்டம்...! இதை விட சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா...

said...

station எவ்ளோ பெருசு !! எல்லா வசதிகளோடு சுத்தபத்தமா இருக்கு .
bucket fountain விளையாட்டு நன்றாகத்தான் இருக்கும் .நம்மேல் தண்ணீர் விழாதவரை .

said...

'நம்ம ஊர்லதான் காந்தித் தாத்தா சிலைய பார்லிமென்டில் வைத்துவிட்டு, நாங்கள் பண்ணும் அக்கிரமங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிரு என்று தண்டனை கொடுத்துள்ளார்கள் என்றால், நியூசிலாந்தையும் விட்டு வைக்கலையா?

சாப்பிட்டோம் என்று சொன்னால், சாப்பாடு படம் போடுவதுதான் சரி. உங்கள் ஊர் நன்றாக இருக்கிறது. பேசாம வெரைட்டி ரைஸ் கடை ஆரம்பித்தால் போணியாகுமா?

said...

வழக்கம்போல அசத்தல் படங்கள், அருமையான உரையாடல், உடன் அழைத்துச் செல்வது போன்ற உணர்வு. நன்றி.

said...

நல்ல பெரிய ஸ்டேசன். நீங்க சொன்ன மாதிரி திருமலை நாயக்கர் மகாலைத்தான் ஸ்டேசனா மாத்திட்டாங்க போல :)

ஆனா துப்புரவு ஒழுக்கமா இருக்கு. பாத்தாலே பளிச். இந்தத் துப்புரவு ஒழுங்கு நம்ம ஊர்ல எப்ப வரப்போகுதோ!!!!

மேரி மாதாவின் கருணை முகம் கனிவு. என் வணக்கங்கள்.

என்ன... ஒங்களுக்கு அவங்க ஒழுங்கா சமைச்சுப் போடலையா? தென்னாட்டுக்காரங்க எல்லாத்தையும் மஞ்ச மஞ்சளாச் சாப்பிடுவாங்கன்னு மஞ்சள் அள்ளிப் போட்டுட்டாங்க போல. குடுத்தது என்னவோ நார்த் இண்டியன் நானும் தாலும். சைடுல சோறு வேற டப்பால. துளசின்னு கடைக்குப் பேர் வெச்சுட்டு சமைக்கத் தெரியாம இருக்கானே. பேர மாத்தச் சொல்லுங்க டீச்சர்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

உண்மைதான்!

said...

வாங்க சசி கலா.

சுத்தம் நல்லதுன்னு ஏம்ப்பா மக்கள் புரிஞ்சுக்கலை:(

எதிர்பாராதவிதமா ஜில் தண்ணீர் மேலே விழுந்தால்....... நியூஸி குளிருக்கு நாம் அம்பேல்:-)

அதனால் புது சமாச்சாரமுன்னு கொஞ்சம் விலகி இருந்து நோட்டம் விடணும் முதலில்!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தாத்தா கொஞ்சம் குஷியாத்தான் இருக்கார். இன்னும் ஊழல் பட்டியலில் ஊர் வரலை பாருங்க:-)

//வெரைட்டி ரைஸ் கடை...//

ச்சான்ஸே இல்லை. நான் வாங்கினால் உண்டு. சூப்பர்மார்கெட்டில் ரைஸ் ஸாலட்ன்னு கிடைக்குது. மொச்சைக்கொட்டை அளவு அரிசி!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ஊக்கமூட்டும் பின்னூட்டதுக்கு நன்றிகள்.

said...

வாங்க ஜிரா.

இண்டியன் சாப்பாடுன்னாலே ஒரே நார்த் இண்டியன் வகைதான். இதுதான் இண்டியான்னு சாதிக்கிறாங்க பாருங்க வடக்கீஸ்:(

இந்த இண்டியன் மெனு எப்படி ஆரம்பமாச்சுன்னு தெரியலையே! எந்தப்புண்ணியவானின் கண்டுபிடிப்போ:(

எங்கூர் துள்சி நிலநடுக்கத்தில் காணாமப் போயிருச்சு.அதுக்கு பதிலா கொத்துமல்லின்னு கடை வந்தாச்சு. த கொரியாண்டர்!