Wednesday, February 10, 2010

.ஜெய் சோம்நாத் ...... (குஜராத் பயணத்தொடர் 19)

நாலடுக்குப் பாதுகாப்பு! கோவிலுக்கு முந்தின தெருவோடு வண்டியை நிறுத்தி என்ன ஏதுன்னு விசாரிப்பு. நேரா ஒரு தெரு. இடப்பக்கம் ஒரு தெரு பிரிஞ்சு போகுது. இடப்பக்கம் போறவங்களை 'சரி. போ'ன்னு விடறாங்க. சோம்நாத் கோவிலுக்குப் போறவங்க நேராப்போய் வலப்பக்கம் திரும்பணும். ஆனா வண்டியை இங்கேயே விட்டுட்டுத்தான் நடையில் போகணும்.

சரின்னு இறங்கி நடந்தோம். நேர் தெருவில் கண்ணுக்கு நேரா ஒரு பெருமாள் கோவில். கோவில் முகப்பில் அநந்தனின் மேல் படுத்து இருக்கும் பதுமநாபன். சுதைச் சிற்பம். வலது பக்கம் திரும்பினால் அங்கேயும் காவல்துறை ஆட்கள். பெரிய அகலமான சாலைதான். ஒரு 500 மீட்டர் நடக்கணும் கோவில் வளாகம் வாசலில் இன்னும் கொஞ்சம் போலீஸ். உள்ளெ நுழைஞ்சதும் நல்ல மார்பிள்தரையோடு படுவிஸ்தாரமா அழகா இருக்கு. இடதுபக்கம், நம்ம பொருட்களைப் பாதுகாத்துத்தரும் லாக்கர்கள். அதுக்குப் பக்கத்துலே செருப்புப் பாதுகாப்பு. எல்லாமே இலவசம்தான். கைப்பையைக்கூட உள்ளே கொண்டுபோகக்கூடாது. காசை மட்டும் 'எல்லாம்' எடுத்துக்கிட்டு கொடுங்கன்னு சொல்லி, நம்ம பையை வாங்கி ஒரு லாக்கரில் வச்சுப்பூட்டிச் சாவியை நம்மகிட்டே கொடுத்துடறாங்க.
வளாகம்
உள்ளே போகும் நுழைவுவாசலுக்கு முன்னே, வளாகத்தில் சர்தார் வல்லப் பாய் படேல் அவர்களின் உருவச்சிலை. நாடு சுதந்திரம் அடைஞ்ச பிறகு இந்தக் கோவிலை புதுப்பிச்சுக் கட்டுவதற்கு பெரும் உதவி செஞ்சுருக்கார். இப்பவும் அப்போ ஆரம்பிச்ச ஸ்ரீ சோம்நாத் ட்ரஸ்ட்தான் கோவில் நிர்வாகம். அன்னியர்களின் ஓயாத படையெடுப்பால் சீரழிஞ்சுப்போய் பலமுறை மீண்டும் மீண்டும் கட்டப்பட்ட கோவில் இது.
கோவில் நுழைவாசல் (வலதுபக்கம்)

எலெக்ட்ரானிக் கேட் வழியா நுழைஞ்சதும் இன்னொரு முறை தொட்டுத்தடவி ஆறத்தழுவிட்டு உள்ளே விடறாங்க. அது என்ன பாதுகாப்போ! பளிங்குத்தரைகளும் பூச்செடிகளும் நடைபாதைகளுமா அழகோ அழகு. வலதுபக்கம் ஒரு அனுமன் சந்நிதி. பயத்தோடு எட்டிப்பார்த்தேன். சும்மாத்தான் நிக்கிறார்! பிள்ளையாருக்கும் ஒரு சந்நிதி இருக்கு இங்கே.

நேராப்போனால் முன்மண்டபத்தைத் தாண்டிக் கருவறை. வழக்கமான சிவன் கோவில்களைப்போல்தான் சிவலிங்கம். ஆனால் லிங்கம் ரொம்பச் சின்னதுன்னு கீதாவின் ஆன்மீகப்பக்கங்களில் வாசிச்ச நினைவு, வெள்ளியால் செஞ்ச சிலிண்டர்போல உள்ள கவசம் போட்டு வச்சுருக்காங்க. இடைவிடாமல் தண்ணீர் சொட்டும் அபிஷேக அமைப்பு. லிங்கத்தின் பின்புறம் கருவறைச் சுவரில் பார்வதி தேவியின் பளிங்குச்சிலை. அழகான நந்தியும் அவருக்கு ஒரு எட்டு முன்பாக ஆமை ஒன்னு தரையோடு தரையாக!
வெளியே வந்து கோவிலை வலம்வந்தோம். கோபுரத்திலும் முகப்பிலும் அருமையான சிற்பவேலைப்பாடுகள். கருவறைக்குப் பின்னே காலாவதியானதைப்போல் இடிஞ்சு நிக்கும் ஒரு மேடை. இதுதான் முன்பு ஒரிஜனல் சந்நிதி இருந்த இடமாம். பெரிய மேடையாகத்தான் இருக்கு. இதுக்கு எதிர்ப்புறமா கோவிலின் வலதுபக்கம் அழகான மாடங்கள் போல வடிவமைச்ச ஒரு கட்டடத்தில் வரிசையா 18 சிவன் கோவில்கள். கதைகள்ன்னு அலங்கரிச்சு வச்சுருக்காங்க. ஒரு மாடத்தில் மயில்மேல் முருகன் பிள்ளையார் எல்லாம் இருக்காங்க. 12 ஜ்யோதிர்லிங்கங்கள் உள்ள இடங்களும் இந்த 18 இல் அடக்கம். இங்கே குஜராத்தில் ஜ்யோதிர்லிங்கக் கோவில்கள் ரெண்டு இருக்கு. இந்த சோம்நாத் லிங்கம் இந்த ரெண்டிலே ஒன்னு. இன்னொண்ணு ரெண்டு நாளுக்கு முன்னால் பார்த்தோமே அந்த நாகேஷ்வர்.

ப்ரபாஸ க்ஷேத்ரம் என்று இதுக்குப் பழங்காலப்பெயர் ஒன்னு இருக்கு. சோமன் தவமிருந்து கும்பிட்டதால் இவருக்கு சோம்நாத் என்று பெயர் வந்ததாகவும் வச்சுக்கலாம். சோமன் கும்பிட்ட கதை என்னவா இருக்கும்?

சோமனுக்கு 27 மனைவிகள். அது என்ன இந்த 27ன்ற எண்ணிக்கைமேலே இவ்வளோ ஆசைன்னு தெரியலையே! அங்கே என்னன்னா..... சுதாமருக்கு 27 குழந்தைகள். இங்கே என்னன்னா....தக்ஷன் என்ற அரசனுக்கு 27 பெண்மக்கள், 27 மாப்பிள்ளை பார்க்கச் சோம்பல் பட்டுக்கிட்டோ என்னவோ ஒரே மாப்பிள்ளைக்குக் கலியாணம் கட்டிக் கொடுத்துட்டான். தொல்லைவிட்டதுன்னு ஜாலியா இருந்துருப்பான் இல்லே?

சோமவாரத்துக்கு அதிபதியான சோமன் (எல்லாம் இந்த சந்திரந்தான்) அந்த 27 பேரையும் அன்பா அரவணைச்சுக் 'குடும்பம்' நடத்தாம ஒரே ஒரு மனைவியைமட்டும் தலையில் தூக்கிவச்சுக் கொஞ்சிக்கிட்டு இருந்தான். சக்களத்திகள் என்னதான் உடன்பிறப்பு, ஒரு தாய் மக்கள் என்றாலும்...... புருஷன் அன்பு கிடைக்கலைன்னா எரிச்சல் வரத்தானே செய்யும்? சக்களத்திகளுக்குன்னு இருக்கவேண்டிய பொறாமைக்குணம் இல்லைன்னா இதுகள் என்ன சக்களத்திகள்? அந்தப்புரத்தில் ஒரே களேபரம்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துச் சகிக்கமுடியாமல் மற்ற 26 பேரும் தகப்பன் தக்ஷனிடம் போய் முறையிட்டாங்க.

"என்ன நைனா... இப்புடிச் செஞ்சுட்டே? ஏழை பாழையா இருந்தாலும் தனித்தனிப் புருஷனா எங்களுக்குக் கட்டிவச்சு இருந்தால், இருக்குதோ இல்லையோ எவ்வளோ சந்தோஷமாக .இருந்துருப்போம். இப்படி ஒருத்தனுக்கே எங்க எல்லோரையும் கட்டிவச்சு இப்போ நாங்க படும் கஷ்டத்தைப் பாரு நைனா."

"கண்ணுகளா.... என்னாங்கடா இப்படிச் சொல்றீங்க?"

"ரோகிணி மட்டும்தான் சோமனுக்குச் செல்லப் பொண்டாட்டி. நாங்க எல்லோரும் ஒப்புக்குத் தாலிகட்டுன மனைவிகளாக் கிடந்து அழுதுக்கிட்டே இருக்கோம்.நீ கண்டி அந்த ஆளைக்கூப்புட்டுக் கண்டிச்சு வைக்கலைன்னா நடக்கறதே வேற "

"அடப்பாவி. இப்படியா இருக்கான்? கூப்புடு அவனை"

சோமனுக்கு நல்ல டோஸ் கிடைச்சது. எல்லாரிடமும் ஒரே மாதிரி ப்ரியம் காமிக்கணுமுன்னு கட்டளை இட்டார் மாமனார். எல்லாம் நடக்கற காரியமா? சின்னக் குடும்பங்களில் கூட தாய்க்கு எல்லாப் பிள்ளைகளும் சமம்ன்னு சொல்லிக்கிட்டாலும் செல்லப்பிள்ளைன்னு ஒன்னு கொஞ்சமே கொஞ்சம் கூடுதல் செல்லத்தோடு இருக்கறது உண்டுதானே?

சொன்னபேச்சைக் கேக்காத மருமகனைக் கூப்பிட்டு, 'என் கட்டளையை மீறிநடந்த உன்னுடைய பிரகாசம் மங்கிப்போகக் கடவது'ன்னு சாபம் விட்டார். தினமும் கொஞ்சம் கொஞ்சமா ஒளி மங்கி அமாவாசை ஆனான் சோமன்.( அதுக்குப்பிறகு தினம் கொஞ்சம் கொஞ்சமா ஒளிவந்து பவுர்ணமி ஆனானேன்னு யாரும் கேக்கப்பிடாது ஆமாம்.) திரும்ப ஒளிவருமுன்னு தெரியத பயபிள்ளை பயந்துருச்சு. தடாலுன்னு மாமனார் காலடியில் விழுந்து சாபவிமோசனம் சொல்லுன்னு அழுதான்.. அந்தக் காலத்துலே சாபம் விட்டவுடன் அதுக்கு விமோசனமும் சொல்வாங்க. இந்தக்கலியுகத்தில்தான் சாபம் மட்டுமே வருது, விமோசனத்தைக் காணோம்!

"அதெப்படி.... நான் போட்ட சாபம் போட்டதுதான். அதை வேணுமுன்னாக் கொஞ்சம் மாத்தி அமைக்க சிவனால்தான் முடியும். பூலோகத்தில் ஒரு புனிதமான இடம் இருக்கு. நீ என்ன செய்யறே...நேரா அங்கே போய் அங்கே பூமியில் புதைஞ்சு கிடக்கும் சிவனைப் பூஜிக்கணும். ஒரு மாசத்துலே உனக்கு ஒளி திரும்ப வரும். ஆனா இது பர்மெனண்ட் இல்லை. ஒளி, குறைஞ்சு கூடி, குறைஞ்சு கூடின்னு உன் ஆயுசு முழுசுக்கும் இப்படித்தான் இருப்பே. போ..போய் பிரம்மதேவனைக் கேளு. சிவன் இருக்குமிடம் சரியாக் காமிச்சுருவார்!"

ப்ரம்மாவும் வந்து பூமியில் புதையுண்டு கிடந்த சிவலிங்கத்தைக் காமிச்சுக்கொடுத்தாராம். அதைக் கொஞ்சமா வெளியில் கொண்டுவந்து வச்சு சந்திரன் பூஜை செஞ்சு வழிபட்டாராம். அப்போவும் இங்கே தனியா வராம அந்தச் செல்ல மனைவியுடன்தான் வந்து கும்பிட்டதா ஒரு கதை இருக்கு. பிரகாசம் திரும்பக்கிடைச்சதால் இது ப்ரகாச க்ஷேத்ரமுன்னு ஆகி இருக்கலாம். 'ஸ்பூனிங்' ஆச்சோ என்னவோ? ப்ரபாஸ க்ஷேத்ரமுன்னு ஆகிப்போச்சு.

சந்திரன் தங்கக்கோவில் கட்டி வழிபட்டானாம். வெகுகாலத்துக்குப் பிறகு ராமாவதாரக் காலத்தில் நம்ம ராவணன், இங்கே வெள்ளியால் கோவில் கட்டி வழிபட்டானாம். கிருஷ்ணாவதாரக் காலத்துலே த்வாரகை மன்னன் சந்தனமரத்தால் கோவிலைக் கட்டி வழிபட்டான்னு சொல்றாங்க.

இந்தக் கோவில்தான் வல்லப் பாய் காலத்துலே கட்டுனதுன்னு சரித்திரம் சொல்லுதேன்னு நினைச்சுக்கிட்டே, கோவில் நுழைவுவாசல் மண்டபத்துலே இருந்த பழையகாலச்சரித்திரம் கொஞ்சம் சொல்லும் புகைப்படக் கண்காட்சியை எட்டிப்பார்த்தால் இடிபாடுகளோடு அழிஞ்சு கிடக்கும் அரைகுறைக் கோவிலையும், தொல்பொருள் இலாகா தோண்டுன இடங்களையும் படங்களா வச்சுருக்காங்க. அதிலே ஒரு விவரமும் கிடைச்சது. ஒரிஜனல் கோவில் வளாகத்துக்குள்ளே நுழையும்போதே வலப்பக்கம் அகல்யா மந்திர்ன்னு ஒன்னு இருக்கே அதுதானாம்.



'ச்சலோ'...அதையும் பார்க்கலாமுன்னு போனோம்.குறுகலான மாடிப்படிகள் ஏறி மேலே போனால் உயரம் குறைவான அறை ஒன்னில் பெரிய சிவலிங்கம் ஒன்னு இருக்கு. 'அடப்பாவமே..... நீர்தான் அந்த பனிரெண்டில் ஒருவரோ! ஆளரவமே இல்லாமல் அம்போன்னு இருக்கிறீரே சாமி!' நாமே சாமியைத் தொட்டுப் பூஜிச்சுக்கலாம். நோ ப்ராப்ளம்!

அவரை வலம்வந்து கீழே போகும் இன்னொரு படிக்கட்டில் இறங்கிவந்தால் அந்தக் கோவில் கட்டடத்தின் பின்பக்கம் உள்ளப் பசுக்கொட்டிலுக்குப் போய்ச் சேருவோம். அதிலிருந்து பக்கவாட்டுச்சந்தில் வந்தால் புதுக்கோவில் வளாகத்துக்கு வந்துரலாம்.
இதனருகிலே ஒரு கட்டணக்கழிப்பறையும் இருக்கு. கம்பித்தடுப்பைத் தாண்டி அந்தப் பக்கம் போனால் ஒரு ஷாப்பிங் வளாகம். இருந்துட்டுப் போகட்டும்.

பயணம் தொடரும்..............:-)))))

பி.கு: பதிவின் நீளம் கருதி இதன் தொடர்ச்சி, நாளை........

28 comments:

said...

//
சோமனுக்கு 27 மனைவிகள். அது என்ன இந்த 27ன்ற எண்ணிக்கைமேலே இவ்வளோ ஆசைன்னு தெரியலையே! அங்கே என்னன்னா..... //

அம்மா.. சோமன் என்றால் சந்திரன், சந்திரன் ராசி ம்ண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரத்தில் பயணிப்பார். சந்திரனின் நட்சத்திரங்களில் முதன்மையானது ரோகிணி.

இந்த வானவியல் விளக்கத்தை தான் அவர்கள் புராணமாக்கி இருக்கிறார்கள். சந்திரனில் உள்ள படிமம் போன்ற கற்கலால் ஆனது சோமனாத் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

உங்கள் விளக்கம் நகைச்சுவையுடன் அழகு.

said...

வாங்க ஸ்வாமிஜி.

இடுகைக்கு உங்க அருள் & ஆசி கிடைச்சுருச்சு. ரொம்ப மகிழ்ச்சி.

ஆஹா...... அது மூன் ஸ்டோனுங்களா!!!!

said...

தரிசனம் நிறைவா இருக்கு..

//எலெக்ட்ரானிக் கேட் வழியா நுழைஞ்சதும் இன்னொரு முறை தொட்டுத்தடவி ஆறத்தழுவிட்டு உள்ளே விடறாங்க. அது என்ன பாதுகாப்போ!//

கொஞ்ச நாளா வட இந்தியாவை அலைக்கழிக்கும் வன்முறைச்சம்பவங்களால் மால்கள், தியேட்டர்கள்,கோவில்கள்ன்னு நிறைய இடங்களில் கைப்பை முதற்கொண்டு திறந்து பார்த்து சோதனை போட்டபிந்தான் அனுமதிக்கிறார்கள்.

Anonymous said...

சோமன் கதைக்கு நன்றி. சுவைபட சொல்லியிருக்கீங்க

said...

//எல்லாமே இலவசம்தான்.//

தெரிஞ்சா சரி!!

said...

இந்த ஆறத்தழுவலில் தான் இளைச்சு வந்து இருக்கீங்க துளசி. ஒரிஜினல் ஸ்வாமி சின்னதா இருக்காரே! கஜினி இத்தையாவது மிச்சம் வச்சாரே

said...

வாங்க அமைதிச்சாரல்.

'நிறைவான தரிசனத்துக்குத் துளசிதளம் கேரண்டீ'ன்னு விளம்பரம் கொடுக்கலாமா?:-)))))

வன்முறைக் கொடுமைகளால் இயல்பான மனித வாழ்க்கையே கெட்டுப்போயிருச்சே:(

said...

//கம்பித் தடுப்பைத் தாண்டி அந்தப் பக்கம் போனால் ஒரு ஷாப்பிங் வளாகம் இருந்துட்டுப் போகட்டும்//

அதென்ன அப்படி சொல்லி விட்டீர்கள்?
உங்களை நம்பி கடை நடத்துகிறார்கள்!

said...

வாங்க சின்ன அம்மிணி..
இன்னொரு கதையும் நாளைக்கு வருதுப்பா:-)

said...

வாங்க கொத்ஸ்.

இலவசத்துக்கே இலவசம்தானாம் அங்கே:-)))))))

said...

வாங்க வல்லி.

இளைச்சுட்டேனா?????

வாங்கோ...வந்து கட்டிக்கோங்கோ.... இன்னும் கொஞ்சம் இளைக்கவேண்டி இருக்கு எனக்கு:-))))

சிவலிங்கத்தையெல்லாம் கஜனியின் தளபதிகள் விட்டுவைக்கலைன்னு கீதா எழுதுனதைப் படிக்கலையா? அச்சச்சோ.....

said...

//உங்களை நம்பி கடை நடத்துகிறார்கள்//

Paavam Rangs

said...

த்ரயம்பகேஷ்வர், பீமாசங்கரம்,சோமனாதம் மல்லிகார்ஜுனம் சின்ன Deity னு நினைக்கிறேன்

said...

waiting for the continuation eagerly

said...

தலைப்புக்கு ராயல்டி எங்கே???ஜெய் சோம்நாத்

said...

//ஆனால் லிங்கம் ரொம்பச் சின்னதுன்னு கீதாவின் ஆன்மீகப்பக்கங்களில் வாசிச்ச நினைவு,//

தப்பு, தவளை, தஞ்சாவூரு மாப்பிள! :))))))))))

ஏராளமான சிற்பங்களைக் கொண்ட அந்த சபா மண்டபத்தில் ஆங்காங்கே பக்தர்கள் அமர்ந்து யாகங்கள், ஹோமங்கள், யக்ஞங்கள் என்று நடத்திக் கொள்ளுகின்றார்கள். அந்தச் சபா மண்டபத்தைத் தாண்டினால், திறந்த கருவறையில் பெரிய அளவிலால் ஆன சோமநாத லிங்கம் காணப் படுகின்றது. பக்தனுக்காகப் புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட எம்மான், இங்கே கல்லாலும், வில்லாலும், சொல்லாலும், கத்தியாலும், எத்தனை முறைகள் அடித்து நொறுக்கப் பட்டிருக்கும் என்பதை நினைத்தால் கண்ணீர் ஆறாய்ப் பெருகுகின்றது.
இங்கே

said...

வாங்க கீதா.

ராயல்டி யார் யாருக்குன்னு கொடுப்பேன்? அங்கே கோவில் முழுசும் ஜெய் சோம்நாத் ன்னு போச்டர்களும் படங்களும் இருக்கேப்பா.

ஆனாலும் சகபதிவருக்கு இல்லைன்னு சொல்லாம ராயலா ஒரு டீ கொடுத்துறலாம். பிரச்சனை இல்லை.

ஆமா...

//பிரபாஸ காண்டம் மேலும் இந்த சோமநாத லிங்கத்தைப் பற்றி வர்ணிக்கும்போது சொல்லுவது என்னவெனில்:” ஒரு கோழிமுட்டை அளவே உள்ள இந்தச் சுயம்புலிங்கமானது பூமிக்கு அடியில் மறைந்திருந்தது. ஸ்பரிஸ லிங்கம் என்ற பெயருடன் இந்த லிங்கமானது ஒரு பாம்பு சுற்றிய வண்ணமும், சூரியனுடைய கிரணங்களின் பிரகாசத்துடனும் ஒளி மிகுந்து காட்சி அளித்தது.பூமிக்கு அடியில் இருந்த இந்த ஸ்பரிஸ லிங்கம் சந்திரனுக்காக பிரம்மா வெளியே கொண்டு வந்தார்.//

இந்தக் கோழி முட்டைதான் மனசுலே உக்கார்ந்துக்கிட்டு இந்தப் பாடு படுத்தியிருக்கு!!!!!

said...

வாங்க எல் கே.

ரங்ஸ்க்கு கவலையைத் தரலை.
அதான் ஒன்னுமே வாங்கிக்கலையே!

said...

வாங்க ஜயஸ்ரீ.

நானும் அப்படித்தான் நினைச்சேன். கீதா இதோ கையில் குச்சியோடு வந்துக்கிட்டே இருக்காங்க:-))))

said...

வாங்க ஹென்றி.

அஞ்சு டாலரா? அம்மாடியோ!!!!!!!

said...

வாங்க ப்ரசன்னா.

நாளை இதே இடம், இதே நேரம் ஓக்கே?

டன்:-)

said...

வாங்க கோமதி அரசு.

நம்பினோர் கெடுவதில்லை!

10 ரூபாய்க்குப் பர்ச்சேஸ் ஆகிருச்சு:-)

said...

டீச்சர்,குஜராத் பயண நினைவுகளோட,விருப்பமிருந்தா உங்க டீனேஜ் பயண நினைவுகளையும் பகிர்ந்துக்கங்க.

you are tagged.

http://amaithicchaaral.blogspot.com/2010/02/blog-post_10.html

said...

//நம்ம ராவண, இங்கே வெள்ளியால் கோவில் கடி வழிபட்டானாம்// Since its Ravan, did "கட்டி" became "கடி"?
And when do we get to see the pictures of purchases as well? And we do miss Gopal sir in the pictures!

said...

அழைப்புக்கு நன்றி அமைதிச்சாரல்.

வத்தலகுண்டு நினைவுகள் ஏற்கனவே அங்கே இங்கேன்னு எழுதியிருக்கேன்.

விட்டுப்போனதை எழுத இதுவும் ஒரு சான்ஸ்.

பார்க்கலாம். நேரம் அமைவதைப் பொறுத்து.

அழைப்புக்கு மீண்டும் நன்றி.

said...

வாங்க சந்தியா.

குஜராத் எக்ஸ்ப்ரெஸ் ஓடும் வேகத்தில் ஒரு சில தட்டச்சுப்பிழை கண்ணுலே தட்டுப்படலைப்பா:(

திருத்திட்டேன். கவனிப்புக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

said...

சோம்நாத் கோயில் விசாலமாக இருக்கிறதே.

said...

வாங்க மாதேவி.

வெறும் 30 கோடி இருந்தப்பக் கட்டுன கோவில். அதான் இடம் தாராளமாக் கிடைச்சிருக்கு!