Friday, March 16, 2007

அக்ஷர்தாம்.





நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 4)

இடியும் மின்னலும் மழையுமா இருந்த ஒருநாள் இரவு, அப்பா, அம்மா, அண்ணன், தம்பின்னு சொந்தபந்ததையெல்லாம் உதறித்தள்ளி வீட்டை விட்டு வெளியேறுன கன்ஷ்யாம் பாண்டேவுக்கு வயசு வெறும் 11. வீட்டுக் கதவை மெதுவாச் சாத்திட்டு மழைத் தண்ணியிலே கால் வைக்கும்'சளக்' துல்லியமாக் கேக்குது. பாதம் பட்டுத் தெறிக்கும் தண்ணீர் முத்துக்கள் அப்படியே எழுந்துத்திரும்பவிழுது. 65 அடி உயரம், 85 அடி அகலமுள்ள பெரிய திரையில் படம் பார்த்துக்கிட்டு இருக்கோம்.


அயோத்திக்குப் பக்கத்தில் ஒரு ச்சின்ன கிராமத்தில் பிறந்த இவருக்குப் பெயர் சூட்டும்போதேஹரி, கிருஷ்ணா, ஹரி கிருஷ்ணா, நீல்கண்ட்ன்னு கூட நாலு பேரையும் சூட்டுனாங்களாம்.
ஏழுவருஷம், ஒரு மாசம், பதினோருநாள் பாரதத்தின் கிழக்கும் மேற்கும், வடக்கும் தெற்குமா எட்டாயிரம் மைலுக்கு மேலே நடந்தே யாத்திரை செஞ்சிருக்கார். இந்தப் பயணத்தில் இவரை 'நீல்கண்ட்'ன்னே மக்கள் அறிஞ்சிருந்தாங்க.


இதுக்கு முந்தி ஐமேக்ஸ் திரையில் படம் பார்த்த அனுபவத்தைவிட இது முற்றிலும் வேறாய் இருக்கு. 55 நிமிஷம் ஓடும் இந்தப் படத்துலே பனி அப்படியே உறைஞ்சு கிடக்கும் இமயமலை முதல்,பசுமையான கேரளம் வரை நாமும் கூடவே பயணிக்குறோம். எல்லாமே விஸ்தாரமாவும், விவரமாவும் இருக்கு. ரொம்ப நேர்த்தியான படப்பிடிப்பு. தியேட்டரின் சவுண்டு சிஸ்டம் பிரமாதம். 'நம்மூர் சினிமாஅரங்குகளில் நம்ம காதைச் செவிடாக்கிட்டுத்தான் அனுப்புவோமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காங்களொ'ன்னு இப்ப ஒரு புது சந்தேகம் முளைச்சது.


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....... இப்ப எங்கே இருக்கேன்? ........ டெல்லியில் இருக்கும் அக்ஷர்தாம் கோயிலில்!!


என்றுமே நிலைத்து நிற்கும் பரம்பொருளான இறைவனின் வீடுன்னு இதுக்கு அர்த்தமாம். தற்காலத்தியக் 'கட்டடமுறையில் இல்லாம கொஞ்சம்கூட ஸ்டீல் பயன்படுத்தாம முழுக்க முழுக்க பளிங்கும், ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட 'பிங் ஸ்டோனு'மா இழைச்சு வச்சிருக்கு. இந்த ஆரஞ்சு நிறம்(லேசான காவி நிறமுன்னு சொல்லலாம்) பக்தியையும்,பளிங்கு வெள்ளை பரிசுத்தத்தையும் அடையாளப்படுத்தவாம்.


இன்னிக்கு இங்கே போய்வரலாமுன்னு முடிவு செஞ்சதும் எங்க இவர் ஒரு மாதிரி நேரம் அட்ஜெஸ்ட் செஞ்சுக்கிட்டு எங்கூடவே புறப்பட்டுட்டார். இதுக்குத்தான் வேலையையும் சுற்றுலாவையும் ஒண்ணா சேர்த்துப் பயணம் போகக்கூடாதுன்றது.டெல்லிக்கு வெளியே போகணுமுன்னு சொல்லிக்கிட்டே வந்தார் கார் ஓட்டுனர். ஆனா வெறும் இருபதே நிமிஷப்பயணத்துலே, ரிங் ரோடுலே டெல்லிக்குக் கிழக்கே போய் யமுனை நதிக்கு குறுக்கே இருக்கும் நிஜாமுதீன் பாலத்தைக் கடந்தவுடனே கோயில் கண்ணுலே பட்டது. இங்கே வலது பக்கம் போனா நொய்டா. போகும் பாதையில் ஒரே பனி மூட்டம். மசமசன்னு தெரியுது. இத்தனைக்கும் காலையில் பத்து மணிக்கு மேலே ஆச்சு. கோயில் வளாகத்துலே நுழையறதுக்கு முன்னே அறிவிப்புப் பலகைகள், வரப்போகும் காமன்வெல்த் விளையாட்டுக்கான ஏற்பாடுகள் அந்தப் பக்கம்தானாம். இன்னும் மூணு வருசம்தான் இருக்கு.



பெரிய காம்பவுண்டு சுவர்களைத் தாண்டி உள்ளே வந்தோம். கார் நிறுத்தும் இடம் பிரமாண்டமா இருக்கு. கோயிலையும் சேர்த்து 100 ஏக்கருக்கு மேலே நிலமாம். உள்ளே செல்பேசியோ, கேமெராவோ கொண்டுப்போகக் கூடாதுன்னு அறிவிப்புகள். சாப்பாட்டுச் சாமான்களுக்கும் அனுமதி இல்லை. சிகெரெட், புகையிலை,மதுப்பழக்கம் உள்ளவர்கள் இங்கே வரும்போது அதையெல்லாம் வெளியே விட்டுட்டு வரணும். நம்ம பைகளையும், கெமரா , செல்பேசி இதையெல்லாம் அங்கே இதுக்குன்னே இருக்கும் இடத்தில் ஒப்படைச்சுட்டுப் போகலாம். அங்கே பொருட்களைக் கொடுக்கறதுக்கு முந்தி, நம்ம பெயர், விலாசம்,என்னென்ன சாமான்கள் பையிலே இருக்குன்றதுக்கெல்லாம் ஒரு பட்டியல் போட்டுக் கொடுக்கணும்.அதுக்குன்னே ஒரு படிமம் வச்சுருக்காங்க. அதை வாங்கிப் பார்த்தப்ப எல்லாம் சரியாத்தான் இருக்கு, கடைசி ஒருவரியைத் தவிர. 'இங்கே ஒப்படைக்கும் பொருட்களுக்கு அவுங்க பொறுப்பேத்துக்க மாட்டாங்களாம். ' இது என்னடா பாதுகாப்பு? ( எல்லா இடத்துலேயும் இப்படித்தான் இருக்குன்றது வேற கதை) கார்லெயே சாமான்களை வச்சுட்டோம்.ஓட்டுனர் உள்ளே வரலைன்னுட்டார். 'காரைப் பூட்டிட்டுப் போகலாம் வாங்க'ன்னு சொன்னாலும் கேக்கலை.


பாதுகாப்புன்ற பேரில் வழக்கமா தொட்டுத் தடவல்கள் முடிஞ்சது. நல்லவேளை ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனின்னு நினைச்சுகிட்டேன். இன்னும் பனி விலகாததாலோ என்னவோ அவ்வளவாக் கூட்டம் இல்லை. காலணிகளை ஒரு இடத்தில் விட்டுப்போகணும். ப்ளாஸ்டிக் சாக்குலே வாங்கி வச்சுக்கிட்டாங்க. கோயிலுக்கு முன்னாலே நிக்கறேன், வாய் பொளந்து. அம்சம்னா அப்படி ஒரு அம்சம். படியேறிப்போனா, பூராக் கோயிலுமே கஜேந்திர பீடம்னுஒரு பெரிய பீடத்துமேலே நிக்குது. யானைகளா நின்னு கோயிலைத் தாங்குதுங்க. 'யானை சைஸிலேயே 148 யானைகளாம்'! அம்மாடியோவ்! இது இல்லாம தூண்களில் எல்லாம் குட்டிக்குட்டியா யானையோ யானை.



மொதல்லே கோயிலுக்குள்ளே போயிட்டு வந்துறலாமுன்னு நுழைஞ்சால், எங்கே திரும்ப வர்றது? அப்படியே கால்களைக் கட்டிப்போட்டுருது அங்கே இருக்கும் தூண்களும், கூண்டுபோல் மேலே இருக்கும் மேற்கூரைகளும்.'டோம்'களுக்குக் 'கிண்ணக்கூரை'ன்னு சொல்லலாமா? அண்ணாந்து பார்த்துக் கழுத்தே சுளுக்கிருச்சு. பால்போல பளிங்குக்கற்களால் செஞ்ச தூண்கள், சுவர்கள், அதுலே வேலைப்பாடுகள்ன்னு எதைச் சொல்ல எதை விட? ( வார்த்தை உபயம் :சிவசங்கரி)


தங்கத்தில் செஞ்சதுபோல ஜொலிப்புடன் நீல்கண்டின் உருவச்சிலை. சுவாமிநாராயண் சமிதியின் மற்ற குருக்களின் சிலைகள்,கையில் குழலோடு இருக்கும் வேணுகோபாலும் & ராதையும், ஸ்ரீ ராமரும் சீதையும், சிவனும் பார்வதியும்னு ஆளுயரப் பளிங்குச் சிலைகள். ஆடை அலங்காரங்கள் எல்லாம் அருமை. ராதை, சீதை,பார்வதி மூவருக்கும் முகஜாடை ஒரேமாதிரி இருக்கு. நாலுபக்கமும் பிரமாண்டமான கதவுகள். தங்கத்துலேயே இழைச்சுச் செஞ்சுட்டாங்களோ?



நுழைவாசலுக்கு நேராய் பின்பக்கம் இருக்கும் கதவுக்கு இந்தப்பக்கம் ஸ்வாமிஜி பயன்படுத்திய ருத்திராட்ச மாலை,பாதுகைகள், எழுதுகோல்ன்னு வச்சுருக்காங்க. வெளியே வர மனசில்லாமத்தான் வந்தோம். யானைகளைப் பார்த்ததும்மனசுக்கு ரொம்ப குஷியாப்போச்சு. ஹைய்யோ.......... எத்தனை விதவிதமான யானைகள்! 148 இருக்கான்னு எண்ணிப்பார்க்க ஆரம்பிச்சு நாலைஞ்சு முறை கணக்கைக் கோட்டை விட்டுட்டேன். சரி. அவுங்க சொன்னதை நம்புனா போச்சு.




வெளிப்பிரகாரம் முழுக்க ஒரு செண்டிமீட்டர் இடம் விடாம என்னமாதிரி அலங்காரம்! உத்துப்பார்த்துக் கண்ணு வலியே வந்துரும்போல இருந்தது. 'கூலிக்கு மாரடிச்சவங்க' செஞ்சதுல்லே இதுன்னு புரிஞ்சுபோச்சு. அப்படி ஒரு சிரத்தை, கவனிப்பு. எதோ அச்சுலே வடிச்சது மாதிரி ஒண்ணுபோல எப்படிச் செதுக்கி இருப்பாங்க? ஏழாயிரம் பேர் வேலை செஞ்சாங்களாம்.அஞ்சு வருசம். தன்னார்வத் தொண்டுக்கு நாலாயிரம்பேர். 200 கோடி செலவாச்சாம். உலகம் முழுக்க இருக்கும் குஜராத்திகள் சேர்ந்து செலவு செஞ்சுருக்காங்க. இப்படிக் கொடுக்கவும் மனசு இருந்துருக்கு பாருங்க. மனசுக்குப் பரிச்சயம்உள்ள கடவுளர் உருவங்களும், ச்சின்ன வயசுலே இருந்து கேட்டறிஞ்ச இதிகாச புராணக்கதைகளும் ஞாபகம் இருக்கறதாலே சுத்துச்சுவர்களில் இருக்கும் 'குட்டிக்கதைகளைப் புரிஞ்சுக்க முடிஞ்சது' கூடுதல் மகிழ்ச்சி. நின்னு நிதானமாப் பார்க்கணுமுன்னாஒரு மாசம் வேண்டி இருக்குமோ என்னவோ? 234 அலங்காரத் தூண்கள். ஒரு தூணுக்கு ஒரு நாளுன்னு வச்சுக்கிட்டா...........பேசாம அங்கேயே குடி இருக்க வேண்டியதுதான் போல!



கோயிலைச் சுத்தி செயற்கை நீர் ஊற்றுகள். கோமுகத்தில் இருந்து சன்னமா விழும் நீர்த்தாரைகள். அங்கங்கே தாமரை மலர்கள்.சாயந்திரத்தில் இசைக்கு நடனமாடுமாம். பார்க்க நமக்கு நேரம் இருக்குமான்னு தெரியலை.படிகள் இறங்கி வந்து காலணிகளை வாங்கி அணிஞ்சோம். இடது கைப் பக்கம் கலாச்சார மையம். அங்கே போய்ப் பார்க்க 125 ரூபாய்க் கட்டணம் வச்சுருக்காங்க. அந்த வளாகத்துலே நுழைஞ்சால் எதோ 'அம்யூஸ்மெண்ட் பார்க்' வந்ததுபோல இருக்கு. காபி டீ வியாபாரம் சுறுசுறுப்பா நடக்குது. சிப்ஸ், சாக்லேட்ன்னு பிள்ளைகளுக்கான தீனிகள் ஒரு பக்கம். கூட்டம் அவ்வளவா இல்லேன்னு சொன்னேனே........ எல்லாரும்இங்கே இருக்காங்க!



மொத்தம் மூணு பிரிவுக்கு டிக்கெட் கொடுத்துருக்காங்க. முதல் பிரிவுக்குள்ளெப் போக ஒரு கூட்டம் அங்கே போட்டுருக்கும் இருக்கை வசதிகளில் காத்திருக்கு. நாங்களும் ஜோதியில் கலந்தோம். அங்கேதான் இந்தத் திரைப்படம் பார்த்தோம்.


இந்தக் கோயிலை நினைக்க நினைக்க மூச்சடைக்குது. ஹப்பா.............பாக்கியை அடுத்த பதிவில் சொல்றேன்.


தொடரும்...........

35 comments:

said...

கொஞ்ச மாதங்களுக்கு முன்பு தனிமெயிலில் இதன் படங்கள் வந்தது,அது தானா இது என்று தெரியவில்லை.
உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.பாருங்கள்.

said...

எனக்கும் தனிமடலில் இது வந்தது. எத்தனை அழகு என்று திரும்பத்திரும்ப பார்க்க தூண்டிய படங்கள்

said...

வாங்க குமார்.

இந்த 'டோம்'களைப் பத்தி இன்னிக்கு எழுதும்போது உங்களைத்தான் நினைச்சேன்!

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

எனக்கும் இந்தப் படங்கள் முந்தி வந்தன. அதனாலேதான் அதுலே வராத
படங்களாப் பார்த்துப் பதிவுலே போட்டேன்.

said...

இந்த அக்ஷர்தான் கோயில்கள் உலகம் முழுதும் இருக்குங்க. எங்க ஊரில் கூட உண்டு. இங்க தீபாவளி அன்னிக்கு சாப்பாடு செஞ்சு சாமிக்கு படைப்பாங்க பாருங்க. ஒரு பெரிய அறை முழுதும் தட்டுக்களால நிறைஞ்சு இருக்கும். படம் கிடைச்சா அனுப்பறேன்.

said...

வாங்க கொத்ஸ்.

இங்கே ஆக்லாந்துலேகூட இவுங்க கோயில் இருக்குங்க. ஆனா கலாச்சாரமையம்
கிடையாது. ச்சும்மா கோயில் மட்டும்தான். நானும் முந்தி ஒரு பதிவு இந்த
'அன்னக்கூட்' திருவிழாப்பற்றிப் போட்டுருக்கேன்.

இங்கே பாருங்களேன்


உலகம் முழுசும் ஸ்வாமிநாராயண் கோவில்
கட்டிக்கிட்டு இருக்காங்க. லண்டன்லே கூட பிரமாண்டமாக் கட்டி இருக்காங்க. எப்போ மனசுவந்து எங்க
ஊருக்குக் கோயில் வருமோ தெரியலை(-:

said...

டீச்சர், இது நான் அங்க போட்ட பின்னூட்டம்.

//டீச்சர்,
இங்க எங்க வீட்டு கிட்டேயும் ஒரு அக்ஷர்தான் கோயில் இருக்கு. தீபாவளிக்கு அடுத்த நாள் எல்லாம் பக்கமே போக முடியாது. அவ்வளவு கூட்டம். ஒரு பெரிய ஹால் நிறையா இந்த மாதிரி பதார்த்தங்கள் செஞ்சு வைப்பாங்க. போட்டோ தேடி அனுப்பறேன்.//

என்ன இன்னும் தேடிக்கிட்டே இருக்கேன். சாப்பாடு எல்லாம் முடிஞ்ச பின்னாடி 'சர்ஃப்' போட்டு கழுவிட்டாங்க போல! :)))

said...

துளசியக்கா..ரொம்ப அர்புதமான பதிவு
நாங்கள் அகமதாபாதில் இருந்த போது... monthly 1-2 visit உண்டு.. அங்கே நிலவும் ரம்யமான சூழ்ல் தான் இந்த ரிபீட்-விசிட்டுக்கு காரணம்...

2002 லெ அக்ஷர்தாமில் தீவரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்காங்க ன்னு டி.வி லெ hot news கேட்டப்போ ..உண்மையாவே நம்பவே முடியவில்லை...இவ்வளவு ரம்யமான இடத்திலே துப்பாக்கியா..அதுவும்...ஒரு சாதாரண நாளில்..சொல்லப்போனா..அன்றைய குறிப்பிட்ட தேதியில் அரசியல்வாதியோ..அரசியல்-சார்ந்த மானாடோ ..ஒண்ணுமே இல்லை... எல்லாம் regular tourists உம்..அங்கே தீம்-பார்க்கில் விளயாட ஆசையோட வரும் பிள்ளைகளும் - பெற்றோர்களும் தான்

உங்க பதிவை படிச்சு..அந்த பீதியெல்லாம் போய்..மறுபடியும்..அக்ஷர்தாமுக்கே உரிய சாந்தமான இயல்புநிலை திரும்பிடுச்சுன்னு தெரிஞ்சுக்கிரப்போ மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..

said...

பல பேர் சொல்லி கேட்டுள்ளேன், இப்போ உங்களோட எழுத்துக்களிலும் படிக்கிறேன். உடனடியாக போகவும் முடியவில்லை. பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.


எல்லா பதிவுகளையும் படித்தாலும் இப்போ வேலை மாற்றமானதால் என்னால் பின்னூட்டமிட முடியவில்லை. தினமும் எல்லா (பதிவர்களின்) பதிவுகளையும் கூகுள்-ரீடரில் படித்து விடுகிறேன்.

said...

கொத்ஸ்,

இந்த தீபாவளிக்குப் படம் எடுத்துப் போட்டுருங்க.

said...

வாங்க தீபா.

இங்கே டெல்லியிலும் ஆமதாபாத்திலும் ஒண்ணுபோலதான் இருக்குன்னு சொன்னாங்க.

2002லே தீவிரவாதிகளா? அடடா.............

அதான் இங்கே ரொம்பக் கவனமாத் தடவல்கள் நடக்குதோ?

டெல்லிக் கோயில் இப்ப 2005லேதான் கட்டி முடிச்சாங்க.

said...

வாங்க சிவமுருகன்.

என்னங்க நீங்க அங்கே பக்கத்துலே இருந்துமாப் போய்ப் பார்க்கலை?

நீங்க இதுபற்றி ஒரு பதிவு போடப்போறதாச் சொன்ன ஞாபகம்.

எழுதியாச்சா?

said...

அட்டெண்டன்ஸ் போட்ருங்க

said...

அடேங்கப்பா. என்ன அழகு. பார்க்க நூறு கண்ணு பத்தாது. என்ன அழகாச் செதுக்கீருக்காங்க. காசு பணம் நெறையா வெச்சிருக்குறவங்க குஜராத்திக்காரங்க. அள்ளிக் கொட்டுவாங்க. நம்ம போய்ப் பாத்துட்டு வந்தாப் போதும்.

நிஜாமுதீன் பாலத்துல இருந்து யமுனை எப்படி இருந்தது? ஒரே புழுதியா இருக்குமே அந்த எடம். அதுலயும் எதோ ரோடு போடுறதாச் சொல்லி...என்னவோ செஞ்சுக்கிட்டிருக்காங்க.

வடக்கத்திக் கிராமங்களும் நம்ம ஊர் பட்டிக்காடுகளும் ரொம்பவே வேறுபட்டவை. ரொம்ப வித்யாசமா இருக்கும். என்னன்னு சொல்லத் தெரியலை. ஆனாலும் வித்யாசந்தான்.

said...

துளசியக்கா!
இந்தக் கட்டுரையும் படங்களும் மிக இதமானவை! இந்தப் படங்களைப் பார்த்தபோது எனக்கு லண்டன்
சுவாமி நாரயணன் கோவில் நினைவு வந்தது. இந்த வட இந்தியப்பாணிக் கோவில்களில் சிலைகள் கூட வெண்பளிங்கில் இருக்கும்;இந்தக் கண்ணன் ராதா சிலை கொள்ளை அழகு;எனக்கு தனிமடலின் அதை அனுப்பமுடியுமா?? அடுத்து இந்த யானைச் சிற்பங்கள்..கம்போடிய; தாய்லாந்து இந்துக் கோவில்களில்
12 நூற்றாண்டில் சிற்பமாக உண்டு; அதே கட்டிட ஓரம்,கோவிலைச் சுற்றி..விவரணச் சித்திரத்தில் பார்த்தேன். எங்கள் கதிர்காமத்திலும் கோவில் மதிலைச் சுற்றி யானைத் தலை அலங்காரம்.
ஏன்? யானை அலங்காரம்...எங்கும்..

said...

இங்க பார்த்தீங்களா? http://travel2.nytimes.com/2006/06/08/travel/08letter.html?ei=5070&en=92f408af034c818d&ex=1150430400&emc=eta1&pagewanted=all

எப்ப கட்டி முடிச்சாங்க துளசி? நான் இருந்தப்போ (84-89)டெல்லியில இந்த கோவில் கேட்ட மாதிரி இல்லை.

said...

வாங்க சிஜி.

இப்படி வெறுமே அட்டெண்டண்ஸ் கொடுத்தா என்ன அர்த்தம்?

புரியலையே(-:

said...

வாங்க ராகவன்.

வடக்கத்தி கிராமங்கள் நம்மதைவிட ரொம்பவே வித்தியாசம்தான்.

யமுனையை பத்தி என்ன சொல்றது? கரை ஓரங்களில் ஏழைபாழைகளின் குப்பம்,
சலசலன்னு ஓடுமுன்னு நான் நினைச்சு ஏமாந்து போன யமுனைன்னுதான்
இருந்துச்சு(-:

said...

வாங்க யோகன்.


பிள்ளையார் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர், அதனாலே யானைக்கு நம்ம கலைகளிலும்,
புராணங்கள் இதிகாசங்களிலும் ஒரு விசேஷ இடம் அமைஞ்சு போச்சு போல இருக்கு. அதான் நம்ம
கோயில்களிலே யானைச் சிற்பங்கள் பரவி இருக்குன்னு நினைக்கிறேன்.

சென்னையில் முகளிவாக்கம் பக்கம் ஒரு கோயிலிலும் வெளிப்புறம் சுவர்களில் யானைத்தலைகள்
இருக்கு. இத்தனைக்கும் அது ரொம்பப் பழைய கோயில் இல்லை. ஒரு 20 வருஷமாயிருக்கலாம்.

said...

வாங்க பத்மா.

இது புதுக் கோயில் பத்மா.

2000 மே மாதம் வருஷம் பூமி பூஜை,

2005 ஜூலை முக்கிய மூர்த்திகள் பிரதிஷ்டை ஆச்சு.

2005 நவம்பர் 6 நம்ம குடியரசுத் தலைவர் திறப்புவிழா செஞ்சுருக்கார். ரெண்டு நாள்
கழிச்சு நவம்பர் 8 முதல் நமக்குத் திறந்து விட்டுருக்காங்க.

உங்க சுட்டிக்கு நன்றி பத்மா. பார்த்தேன். நல்ல விவரங்கள் இருக்கு.

said...

துளசி
//கோயிலைச் சுத்தி செயற்கை நீர் ஊற்றுகள். கோமுகத்தில் இருந்து சன்னமா விழும் நீர்த்தாரைகள். அங்கங்கே தாமரை மலர்கள்.சாயந்திரத்தில் இசைக்கு நடனமாடுமாம்.//
அழகான கோமுகங்களும், அவற்றிலிருந்து வரும் நீர்த்தாரைகள் கொள்ளை அழகு.

said...

கோயிலைப் போலவே நீங்க எழுதினதும் நல்லா இருக்கு..

இரவில் விளக்குகளுடன் தங்கமாக ஜொளிக்கும் அழகே அழகு....

said...

துளசியக்கா,

பண்டைய பாரதத்தின் பாரம்பரியக் கட்டடக்கலை இன்றைய நவீன பாரதத்தில் மீண்டும் வெகு சிரத்தையோடு சுவாமி நாராயண் அமைப்பினரால் டெல்லி அக்ஷர்தாம் கோவில்+கலைவளாகத்தின் மூலம் மீண்டும் உலகத்தின் பார்வைக்கு எடுத்து வரப்பட்டு இருக்கிறது.

உங்கள் பதிவின் மூலம் வலைப்பதிவர்கள் பலரின் பார்வைக்கு எடுத்துவரப்பட்டிருக்கிறது மீண்டும்!

வர்ணனை உடன் இருந்த பார்த்து, ரசித்த மாதிரியான ஒரு அன்னியோன்யத்தைத் தந்தது.

said...

துளசி, அகமதபாத் அருகில் இருக்கும் அக்ஷர்தாம், (இங்கிட்டுதான் தீவிரவாதிகள் பக்தர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்) பெங்களூர் ஹரே ராமா ஹரே கிருஷ்னா கோவில் இரண்டையும் பார்த்தப்போது கோவில் என்பதைவிட வேடிக்கைப் பார்க்கும் உணர்வே அதிகம் இருந்தது. (இவ பெரிய பக்திமான்னு திட்டாதீங்கப்பா) வந்த
கூட்டத்தை நடவடிக்கையும் அப்படியே இருந்ததுப் போல எனக்கு தோன்றியது.

said...

வாங்க செல்லி.

மொத்தம் 108 கோமுகங்கள் வச்சிருக்காங்க.
வரிசையாப் பார்க்கறப்ப ரொம்ப அழகா இருந்துச்சுங்க.

said...

வாங்க மங்கை.
நீங்க உள்ளூர் வாசி. ராத்திரியில் ஜொலிக்கிறதைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க.

நான் கற்பனைதான் செஞ்சுக்கணும்.

ஆனா...........விடறதில்லை. ஒருமுறை மாலை நேர விசிட் அடிக்கத்தான் வேணும்.

said...

வாங்க ஹரிஹரன்.

//வர்ணனை உடன் இருந்த பார்த்து, ரசித்த மாதிரியான
ஒரு அன்னியோன்யத்தைத் தந்தது. //

அந்த அழகுலே பேச்சுவராம நின்னுட்டேன். இன்னும் சரியா எழுதியிருக்கலாமோன்னு
இருக்கு.

'கண்டவர் விண்டிலர்' அதாவது சரியானபடி 'விண்டிலர்'ன்னு வச்சுக்கணும்:-))))

said...

வாங்க உஷா.

அழகை ரசிக்க பக்திமானாத்தான் இருக்கணுமா என்ன?
எந்த 'மானா' இருந்தாலும் சரிதான்.

தெகிட்டத் தெகிட்ட அழகா இருந்தா வேடிக்கைப் பார்க்க மனசு ஓடாதா என்ன?

அதெல்லாம் பிரச்சனையே இல்லை. பார்த்தா அனுபவிக்கணும், அவ்வளவுதான்.

said...

இந்த ஊரிலேயும் ஸ்வாமி நாரயண் மந்திர் பிரமாதமா இருக்கு.
வார நாட்களில் போனதால் சுற்ற முடிந்தது.
''இழைச்சிருக்காம்பா''
இது கூட வந்த ஒரு தோழி சொன்னது. உண்மையில் எட்டு மாதங்கள் உழைத்து இவ்வளவு பெரிய கோயிலைக் கட்டினார்களாம்.
நல்லா இருந்தது துளசி நீங்க எழுதி இருக்கிறது.

said...

பார்த்தே ஆகவேண்டுமென்ற ஏக்கத்தை மேலும் வளர்க்கிறது உங்கள் பதிவு.

//பெங்களூர் ஹரே ராமா ஹரே கிருஷ்னா கோவில் இரண்டையும் பார்த்தப்போது கோவில் என்பதைவிட வேடிக்கைப் பார்க்கும் உணர்வே அதிகம் இருந்தது. (இவ பெரிய பக்திமான்னு திட்டாதீங்கப்பா) //

பக்தி இல்லை என்று சொல்வது பரவாயில்லை ஆனால் கலையை ரசிக்கக் கூடவா முடியவில்லை? வேடிக்கை என்ற சொல், நெஞ்சை அள்ளும் இக்கலை வடிவங்களுக்கு பொருத்தமாக இல்லையே!

ஏளனம், எள்ளல், இகழ்ச்சி, கேலி, கெக்கலிப்பு, நிந்தை, அவமதிப்பு, பரிகாசம் இவை எல்லாம் இந்த ஒற்றை சொல்லில் சொல்லப்படுகிறதாக எனக்குத் தோன்றுகிறது

said...

வாங்க வல்லி.

உங்க சப்போர்ட் பதிவும் அருமையா இருக்கு.

இப்படிச் 'சேர்ந்திசை'க்கறதுக்கு நன்றி.

said...

வாங்க ஓகை.

மனிதர்கள் கூடும் இடங்களில் எல்லாரும் ஒண்ணுபோல இருப்பாங்களா?

அவுங்க நடவடிக்கைகளைத்தான் வேடிக்கைன்னு சொல்லி இருக்காங்க ன்னு நினைக்கிறேன்.

கலையை ரசிக்க யாருக்குத்தான் பிடிக்காது?

டெல்லி போகும் சந்தர்ப்பம் கிடைச்சால் விட்டுறாதீங்க. பார்க்கவேண்டிய
இடங்களில் இது ரொம்ப முக்கியம்.

said...

போட்டோ எல்லாம் எப்படி எடுத்தீங்க ;)

said...

வாங்க பாபா.

உலகம்பூராவும் சுத்திச் சுத்தி வலைப்பதிவர் சந்திப்பு நடத்திக்கிட்டு இருக்கீங்க!
எப்ப இந்த பக்கம் வர்ற ஐடியா?

படங்கள் நாம் எடுக்கத்தான் அங்கே தடா. அவுங்களே எடுத்து அங்கே கிஃப்ட் ஷாப்லே
விக்கறாங்க. போஸ்டர் எல்லாம் பிரமாதம். அதை வாங்கி ஸ்கேன் பண்ணினது,
வெளியே இருந்து நாமே எடுத்தது, வலையில் சுட்டது இப்படி எல்லாம் கலந்து கட்டி ஆடுனதுதான்
நம்ம ஆட்டம்:-)

உங்க தனிமடலுக்கு லிங்க் அனுப்பவா?

said...

அருமை மேடம்; மிக விரிவாய் அற்புதமா எழுதிருக்கீங்க