Wednesday, March 14, 2007

விளக்கேத்தி வச்சாச்சு.



மூணு வாரமாகுது புதுவருஷம் வந்து. இன்னமும் ஆர்ப்பாட்டம் அடங்கலை. எங்க ஊருலே இந்த வார இறுதின்னு குறிச்சுட்டாங்க. சனிக்கிழமை கொஞ்சம் வேலையாப் போச்சு. அதுக்குள்ளே மகள் மின்னஞ்சல் அனுப்பிட்டா போகும்போது மறக்காம கேமெரா எடுத்துக்கிட்டுப் போன்னு!
நான் மின்னஞ்சல் மட்டும் தவறாமப் பாக்குறேனாம். அதுனாலே இப்ப 'கம்யூனிகேஷன் எல்லாம் த்ரூ இமெயில்தான்:-))))


விழாவைப் பகலிலும் பார்க்கணும், இரவிலும் பார்க்கணுமுன்னு முடிவாச்சு. அடடா..........
என்னா ஒரு அலங்காரம்!!!!! சரஞ்சரமா ச்சைனீஸ் லேண்டர்ன் நல்லா குண்டு குண்டாச் சிகப்புப் பூசணிக்காய்மாதிரி வரிசை கட்டி இருக்கு. விக்டோரியா சதுக்கம் முழுசும் அங்கங்கே பாண்டாக் கரடிகளின் ஆட்டம், கிளிகளின்கூட்டம், கிராமத்துக் காட்சின்னு நாலு செம்மறி ஆடும், கறுப்புவெள்ளைப் பசுவும், அதுகளை மேய்க்கிற 'ஷீப் டாக்'கும்,நத்தைக்கூடு, கேரட்டை வச்சிருக்கும் பக்ஸ் பன்னி, அண்டார்ட்டிக்கா பெங்குவின், கருப்பு & சிகப்புச்சேவல், தங்கக்கலருலே சிங்கம், அன்னப்பறவைகளின் கூட்டம், பெலிகன்களின் இசைக்கச்சேரி, ஆமைகளின் வாத்திய இசை,சீறிவரும் ட்ராகன், தண்ணீரில் மிதக்கும் வர்ணமயமான தாமரைகள், வெள்ளையானை, ஒட்டச்சிவிங்கி,வரிக்குதிரை,நெருப்புக்கோழின்னு எங்க Zoo வைப் பத்திச்சொல்லும் மிருகங்கள், அழகழகான இஞ்சி வைக்கும் ஜாடிகள்ன்னு அமர்க்களமா ஆடாம அங்கங்கே நிக்குது. கம்பிக்கூடு வச்சு அருமையாச் செஞ்சிருக்காங்க. ராத்திரி அதுக்குள்ளே விளக்கு எரியும்போது இன்னும் அழகா ஜொலிக்கப் போகுது. ஒரு மரத்தையும் ச்சும்மா விட்டு வைக்கலை. விளக்குக்கூடுகள் விதவிதமாய்த் தொங்குது. தர்ப்பூசணியை வெட்டிவச்சது போல ஒரு மரம் முழுசும் அமர்க்களம். பட்டாம்பூச்சிகள் மரத்தோடு ஒட்டிப்பிடிச்சு இருக்கு.


ஒரு கூடாரம் முழுசும் விதவிதமான லேண்டர்ன்ங்க தொங்குது. பார்த்தா அப்படி தொழில்முறை ஆட்கள் செஞ்சது போலஇல்லையேன்னு கவனிச்சா........... அது இங்கத்து ஆரம்பப்பள்ளி மாணவமாணவிகள் செஞ்சு கொடுத்ததாம். ஊர்லே இருக்கற பள்ளிக்கூடங்கள் எல்லாமெ ஆர்வமா இதுலே பங்கெடுத்துக்கிட்டாங்களாம். 'ஊர் கூடி தேர் இழுக்கறது'இப்படி ஆரம்பிச்சா வருங்கால சந்ததிகளுக்கு ஒற்றுமை உணர்வு வரும். அதுவும் இங்கே நியூஸிபோல பலவித இனங்களையும் கலாச்சாரங்களையும் கொண்டுள்ள மக்கள் குடிவரும் நாடுகளுக்கு இது ரொம்ப முக்கியம், இல்லீங்களா?


கொண்டாட்டம், விழான்னு சொன்னா.அதுலே சாப்பாடு இல்லாமப் போகுமா? ஒரு பக்கம் பூரா ஸ்டால்கள் காலியாநிக்குது. சாயந்திரம் அஞ்சரைக்கு ஆரம்பமாம். இன்னொரு பக்கம் பிரமாண்டமான அரங்கும் மேடையும். இந்தநிகழ்ச்சிக்காகவே பீஜிங்லே இருந்து வந்துருக்காங்களாம் கலைஞர்கள்.
அப்படியே வேடிக்கைப் பார்த்துக்கிட்டே விக்டோரியா சதுக்கத்தைச் சுற்றி வந்தோம். இங்கே கிறைஸ்ட்சர்ச் நகரத்தின் மத்தியில் இருக்கு இந்த இடம். விக்டோரியா மகாராணியின் உருவச்சிலை வச்சுருக்காங்க. நாங்க இங்கே வந்தபிறகுஇந்த 20 வருஷத்துலே ஒரு தடவை இடம் மாத்தி இருக்காங்க இந்தச் சிலையை. எல்லாம் அங்கேயேதான், கொஞ்சம் அந்தப் பக்கமாத் தள்ளி:-) இங்கே ஒரு செயற்கை நீரூற்றும் இருக்கு. கடல்காக்கைகள் தண்ணி குடிக்கவும், குளிக்கவுமுன்னு எப்பவும் கூட்டம் கூடி நிக்கும். இந்தச் சதுக்கத்தைச் சுத்தி ஒரு பார்டர் போட்டதுபோல உள்ளூர் ஆறு ஒண்ணு ஓடுது.ஏவான்( AVON) நதி. இந்த நதிக்குள்ளெயே ஒரு பவுண்டென் வச்சு 24 மணி நேரமும் தண்ணீர் பீச்சும் ஒரு அலங்காரமும் இருக்கு. இந்த நதியில் விழாக்களுக்கு ஏத்தபடி அலங்கார மிதவைகள் வைக்கறது ஒரு வழக்கமா இருக்கு. இப்பவும் அதையே செஞ்சிருந்தாங்க. தங்க மீன்கள், வாத்துகள்ன்னு மிதவைகள். இந்த இடம் நம்ம தமிழ்ச்சினிமாப் புகழ் பெற்றது. (தெனாலியில் கமல் ஜ்யோதிகா பாட்டு) நதிக்கரையில் punting படகில் போகலாம். ரெண்டு பக்கமும் வில்லோ மரங்கள் நிக்கும். இது வீப்பிங் வில்லோ மரங்கள். சரஞ்சரமாத் தொங்கும் இலைகள்(கிளைகள்?) அழகாவே இருக்கும்.அப்படியே கரையில் நடந்து வரும்போது இதுவரைக் கண்ணில் படாத ஒரு பாறை! புதுசா இருக்கேன்னு பார்த்தா.......வில்லோ மரச் சரித்திரம் பதிவு செஞ்சு இருக்கு!


1838லே பிரெஞ்சுக்காரர்களின் கப்பலில் கொண்டுவந்த மரக்கிளையாம். எங்கே இருந்து எடுத்துவந்தாங்களாம்? நம்ம நெப்போலியனோட சமாதி, செயிண்ட் ஹெலனாத் தீவுலே இருக்குல்லையா? அங்கே இருந்து கொண்டு வந்ததாம். அதை அக்கரோவா( இங்கத்து ப்ரெஞ்சு டவுன்) ன்னு சொல்ற ஊர்லே நட்டு வளர்த்து மரமாகி இருக்கு. அதுலே இருந்து மறுபடிக் கிளைகளை எடுத்து இங்கே நதிக்கரையில் நட்டுப் பயிராக்கினதாம். அந்த பிரெஞ்சுக்காரர்களின் கொள்ளு( எள்ளூ?)ப்பேத்தி, சம்பவத்தை நாமெல்லாம் நினைவுகூரணுமுன்னு இங்கே செதுக்கி வச்சுட்டாங்க விவரங்களை. இதைத் திறப்புவிழா செய்தவங்க பேரும் போட்டுருந்துச்சு. கவனிச்சுப் பார்த்தப்ப எனக்கு ஒரே ஆச்சரியமும் ஆனந்தமும். ஏன் இருக்காது?'ஸாலி பக்', நம்ம நகரக் கவுன்சிலர் மட்டுமில்லை, என் நெருங்கிய தோழியும் கூட. சரித்திரம் படைச்சது மரம் மட்டுமில்லை,நம்ம ஸாலியும் கூடத்தான்!!! பார்றா.........ஆறு வருசமாயிருக்கு இந்தப் பாறைக்கு. நான் இதுவரை எப்படிக் கவனிக்காம விட்டேன்?(-:


புதுவரவா இன்னொண்ணும் இருக்கு. சுற்றுலாப் பயணிகளுக்காக தகவல் தரும் I station City Guide Booth வச்சிருக்காங்க.எல்லாம் டச் ஸ்க்ரீன். எதுக்கெடுத்தாலும் மெஷீன்னு ஆகிப்போச்சு. விஷமிகள் உடைச்சுப் போடாம இருக்கணும்.


படங்கள் எடுத்துக்கிட்டு வந்தோம். நல்லவேளையா இந்தச் சதுக்கத்துக்கு முன்னாலே ஒரு அடுக்குமாடி பார்க்கிங் வசதிஇருக்கு. பார்க்கிங்ன்னு சொல்றப்ப இன்னொண்ணும் நினைவுக்கு வருது. நம்ம சிட்டிக் கவுன்ஸில் பார்க்கிங் இருக்கு பாருங்க, இங்கெல்லாம் காரை நிறுத்துனோமுன்னா முதல் ஒரு மணி நேரம் இனாம். அடுத்து வர்ற நேரத்துக்குத்தான் அரைமணிக்கு இவ்வளொன்னு சார்ஜ். நாம்தான் எங்கே பார்க் செஞ்சாலும் 55 நிமிஷத்துலே வண்டியை வெளியே எடுத்துருவோமே:-))))


இங்கே இப்பப் போனமாசம்தான் சம்மர் முடிஞ்சது. இப்ப மார்ச் முதல் இலையுதிர்கால ஆட்டம். சீக்கிரம் இருட்டித் தொலையாது.எட்டுமணிக்குக் கிளம்பிப் போனோம். அதே பார்க்கிங்தான்! ஸ்டேஜ் ஷோ நடந்துக்கிட்டு இருக்கு. ஜல்ஜல்ன்னு சிங்கநடன ம்யூசிக்.(யூ ட்யூப் சேர்க்கையில் குழப்பம். இங்கே 'கிளிக்' செஞ்சால் காட்சி கிடைக்கும்) நல்ல கூட்டம். எப்பவும் என்னோட ஃபேவரிட் அயிட்டம் இந்த டான்ஸ். சிங்கங்கள் ரெண்டு ஆடுதுங்க. ஹூம்...கொஞ்சம்சீக்கிரமா வந்துருக்கலாம். நடனம் முடிஞ்சு சிங்கத் தலையை எடுத்துச்சுங்க பசங்க. அதுலே ஒரு வெள்ளைக்காரப் பையனும் இருக்கான். இந்த நாலுபேரும் இங்கே லோக்கல் பசங்கதானாம். உள்ளூர்லே ச்சீனக் கலாச்சாரப் பள்ளியில் படிக்கிறாங்களாம்.அடுத்த அயிட்டம் என்னன்னு ஒருத்தர் ஒரே வரி ஆங்கிலத்தில் சொன்னதை, ஒரு அஞ்சு நிமிஷம் விடாமச் சீனமொழியில் மொழிபெயர்த்துச் சொன்னது, இன்னொரு செஞ்சட்டைப் போட்டுருந்தச் சீனப்பொண்ணு.


கூட்டம் எக்கச்சக்கம். ஒரு நாலாயிரம் பேர் இருக்கலாம். சாப்பாட்டுக் கடைகளில் வியாபாரம் கனஜோராய் நடக்குது.நம்மூர் கையேந்திபவன் மாதிரி பிரமாண்டமான இட்டிலிப் பாத்திரத்துலே வெந்துக்கிட்டு இருக்கு ச்சைனீஸ் ஸ்டீம் பன்.இட்டிலி வடையா இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும்? இது உள்ளே வெவ்வேற இறைச்சி வகைகள்.அதெல்லாம் எனக்குச் சரிப்படாதுன்றதாலே படங்களாச் சுட்டுக்கிட்டேன். விளக்குகள் உள்ளெ ஒளிர அலங்காரங்கள் கண்ணைப் பறிக்குது. ஒரே க்ளிக் க்ளிக் க்ளிக்தான். 'ச்சைனீஸ்

லேண்டர்ன் ஃபெஸ்டிவல்'ன்னு பேர் இருக்கறதாலே ரெண்டு டாலருக்கு 'லேண்டர்ண்' வித்துக்கிட்டு இருந்தாங்க. உள்ளே மெழுகுத்திரி ஒண்ணு எரியுது. விளக்கைத் தூக்கிட்டுப்போக ஒரு பிரம்புக்குச்சியும் தந்தாங்க. நானும் ஒண்ணு வாங்கிக்கிட்டேன். அப்புறம் பொம்மைகள், ச்சின்னச் சின்னஜாடிகள்ன்னு செஞ்சு விக்கற கடை ஒண்ணு இருக்கு. பித்தளைபோல ஒரு உலோகத்துலே செஞ்சு, ச்சின்னக் கம்பியாலே வெளிப்புறம் பூவேலைப்பாடுகள், அதுக்கு பலவித வர்ணம் தீட்டுனதுன்னு கைவேலைப்பாடுள்ள ஒரு ஜாடி வாங்குனேன்.


அடுத்து 'பீஜிங் கலைஞர்களின் ட்ரம்'ன்னு ஒலிபெருக்கி சொல்லுச்சு. ரெட் பாப்பீஸ் குழு! என்னா அடி, என்னா அடி!!தூள் கிளப்பிருச்சுங்க. இதுலே விசேஷம் என்னன்னா பின்னணியிலே ஒரு ஹிந்திப் பாட்டு போல ஒண்ணு கேக்குது!ஒரே மாதிரி சிவப்புக் கலர் ச்சீன உடைகள், பார்க்கறதுக்கும் அநேகமா ஒண்ணுபோல இருக்கும் முகங்கள், அநேகமாஒரே உயரம்னு அதுவும் நல்லாத்தான் இருக்கு. எல்லாரும் ரொம்பச் சின்னப் பசங்களாப் பதின்ம வயதுக்காரரா என் கண்ணுக்குத் தெரிஞ்சாங்க.

Red Poppys(யூ ட்யூப் சேர்க்கையில் குழப்பம். இங்கே 'கிளிக்' செஞ்சால் காட்சி கிடைக்கும்)



கட்டக் கடைசியா, எங்க கேண்டர்பரி பல்கலைக்கழகத்து மலேசிய மாணவ மாணவியரின் நடனம். இது அச்சு அசல் ஹிந்திப் பாட்டு ம்யூஸிக்கேதான்! மகிழ்ச்சியா ஒரு மாலைப் பொழுது கழிஞ்சது. திரும்பி வரும்போது.............
ச்சீனர்களுக்குள்ளெ இருக்கும் ஒத்துமை ஏன் நம்ம இந்தியர்களில் இல்லைன்னு மண்டைக் குடைச்சல். இப்போ ஒரு பத்து வருஷமாத்தான் ச்சீனர்கள் நிறையப் பேர் வந்துக்கிட்டு இருக்காங்க. ஆனாலும் போன வருஷக் கணக்கெடுப்பின்படி மொத்த ஜனத்தொகையில் 3.7% ச்சீனர்களாம். இந்தக் கணக்குப்படிப் பார்த்தாலே ஒன்னரை லட்சம் ச்சீனர்கள் இருக்கலாம்.எங்க ஊருலே எப்படியும் பத்தாயிரத்துக்கும் அதிகமாவே இருப்பாங்க.


உழைப்புக்கு அஞ்சாத மக்கள். அரசாங்கத்துலே என்னென்ன சலுகைகள் கிடைக்குன்னு கவனிச்சுப் பார்த்து சோம்பல் இல்லாமஅதையெல்லாம் தன் இன முன்னேற்றதுக்குப் பயன்படுத்திக்கிறாங்க. இந்தமாதிரி விழாக்கள் கலைநிகழ்ச்சிகள்ன்னு எதைச் செஞ்சாலும் நறுவிசாச் செஞ்சு நல்லபேர் வாங்கிக்கறாங்க. இதெல்லாம் பாராட்டிப்போற்ற வேண்டிய அம்சங்கள்தானே? ஒருவேளை அவுங்களுக்கு ஒரே மொழின்னு இருக்கறதாலே ஏற்பட்ட ஒற்றுமையோன்னு நினைச்சால் அப்படியும் இல்லையாம்!


நமக்கு.............. மொழிகள் ரொம்பக் கூடிப்போச்சு. போதாக்குறைக்கு வடக்கு, தெற்குன்னு மனசுலே ஒரு பிரிவினை.எல்லாரும் சேர்ந்து நின்னு எதாவது செய்யலாமுன்னு நினைச்சுக் கூடினாலும் அங்கே தாந்தான் உசத்தின்னு ஒருஎண்ணம் வந்து அடுத்தவனை (அவன் எவ்வளவுதான் நல்ல விஷயத்தைச் சொன்னாலும்) கொஞ்சம்கூட சட்டைசெய்யாமல்தான் பிடிச்ச முயலுக்கு மூணு, இல்லையில்லை ஒரே காலுன்னு நிக்கறது.............................


ஒரு தீபாவளியை அல்லது வேற எதாவது(??)இந்தியப் பண்டிகையை இப்படிக் கோலாகலமா ஊரோடு சேர்ந்து கொண்டாடுனா எவ்வளோ நல்லா இருக்குமுன்னு பொருமிக்கிட்டே வீடுவந்து சேர்ந்தேன். பேசாம இதையே ஃபெஸ்டிவல் ஆஃப் லைட்ன்னு வச்சுக்கலாமா?

25 comments:

said...

//எங்க ஊருலே இந்த வார இறுதின்னு குறிச்சுட்டாங்க. //

நமக்கெல்லாம் விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை. இவங்களுக்கு மட்டும் சனிக்கிழமை போல இருக்கு!! :))

said...

வாங்க கொத்ஸ்.

வெள்ளி என்ன சனி என்ன? நமக்கு எல்லா நாளும் ஒண்ணுதானேப்பா?

நாளும் கிழமையும் நல்லவர்க்கு இல்லை.:-)

நலிந்தாரை நல்லவர்களா மாத்திட்டேன்:-)

said...

//ச்சீனர்களுக்குள்ளெ இருக்கும் ஒத்துமை ஏன் நம்ம இந்தியர்களில் இல்லைன்னு மண்டைக் குடைச்சல்//

இத்தூனுண்டு நாட்டுல புது வருஷமே ஒரே நாளுல வரது இல்ல... சித்திரைன்னு ஒரு பக்கம்... உகாதின்னு இன்னொரு பக்கம்... தீபாவளின்னு ஒருத்தவங்க, பைசாகின்னு இன்னொருத்தவங்க...... ஆக எங்கேயிருந்து ஒத்துமை???

said...

தேன்கூடு சுடர்
உங்களிடம் வந்துவிட்டதென்று நினைத்து(உ)வந்தேன். :-)

said...

துளசி மேடம்!! வெலிங்டன்ல வருஷா வருஷம் தீபாவளி சிட்டி கவுன்சில் ஃபன்டிங்ல நடக்குது. இந்த வருஷம் வரும்போது சொல்றேன். கண்டிப்பா வாங்க. ஒரே கோலாகலமா இருக்ககும். பாலிவுட் நடனத்தில இருந்து இந்திய சாப்பாடு வரை.

said...

கொத்தனார்!! ‍‍கோளறு பதிகம் படிங்க எல்லா நாளும் நல்ல நாள் ஆகிரும்

said...

அருமையா எழுதி இருக்கீங்க துளசி. மகளிர் பக்கம் பார்க்கலையா (பொன்ஸ் பதிவில்)
வாழ்த்துக்கள் எல்லாத்துக்கும்:))

said...

வாங்க கஸ்தூரிப்பெண்ணே.

மொழிகளின் எண்ணிக்கை 'ரொம்பவே' கூடிப்போனதால்தான்
இந்த மாதிரியோன்னு இருக்கு.

said...

வாங்க பாலரஜன் கீதா.

தேன்கூடு -சுடரா?

பயமா இருக்கு. பதில் சொல்லத்தெரியாத
கேள்விகளைக் கேட்டுட்டாங்கன்னா?

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

இங்கேயும் தீபாவளிக்கு சிட்டிக்கவுன்ஸில் ஃபண்டிங் கிடைக்குது. போன தீபாவளிக்குப் புது ஹை கமிஷணர்
(இந்தியா) வந்துருந்தார். மேளா நல்லாத்தான் நடந்தது. கூடுதல் விவரம் ஒண்ணு சொல்லிக்கறேன்.

இங்கே இருக்கும் இந்தியன் சோஸியல் & கல்ச்சுரல் க்ளப்தான் இதை நடத்துது. இதை ஸ்தாபித்தவர்
நம்ம (துளசியின்)கோபால்தான். இந்த வருஷம் சுதந்திரதினம் வந்தால் பத்து வருஷம் முடியுது.

கொத்தனார் உங்களுக்குப் பதில் சொல்வார்.இல்லீங்க கொத்ஸ்?

said...

வாங்க பத்மா.

நீங்க சொன்னபிறகுதான் மகளிர் சக்தி பார்த்தேன். காலையில் மதியின் பக்கம் போனப்ப,
'நீ தேடுவது இங்கில்லை'ன்னு ஒரு செய்தி வந்துச்சு:-)

சக்தியைக் 'கொடு கொடு'ன்னாலும் இணைக்க மாட்டேங்குதே(-:

பொன்ஸ்கிட்டே கேக்கணும்.

வாழ்த்துகளுக்கு நன்றி பத்மா.

said...

//கொத்தனார் உங்களுக்குப் பதில் சொல்வார்.இல்லீங்க கொத்ஸ்?//

டீச்சர், என்ன இது? கேள்வி அவுட் ஆப் ஸிலபஸா இருக்கும் போல இருக்கே!!

ஏற்கனவே ஒரு இடத்தில் போயி இந்த ஒத்துமையைப் பத்திப் பேசப் போயி நமக்கு புத்திசாலிப் பட்டம் கிடைச்சு இருக்கு. இனிமே வாழ்க்கையில் ஒற்றுமை பத்தி பேசுவேன்!!!!

said...

//"வேயுறு தோளியபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லந்தென்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாராவர்க்கு மிகவே"//

அம்மிணி, இதெல்லாம் தெரியும் அம்மிணி. அதுவும் மதுரை மணி ஐயர் (இதுதாங்க அவர் பெயர், அதுக்காக எனக்கு முத்திரை குத்தாதீங்கப்பா) பாடக் கேட்க நல்லாவே இருக்கும்.

உள்ளேன் டீச்சர் போடறதுக்குப் பதிலா எதாவது சொல்லலாமுன்னு பார்த்தா இந்த ஓட்டு ஓட்டறீங்களே!! :))

said...

என்னங்க கொத்ஸ்........

புத்திசாலின்னா ஒற்றுமையைப் பத்திப் பேசக்கூடாதா?

அவுட் ஆஃப் சிலபஸ்? நானும் அதான் தள்ளி நின்னு பார்க்கிறேன்.

said...

அட அங்க வாங்குன பட்டம் வெறும் புத்திசாலி இல்லைங்க. புத்திசாலி !

புத்திசாலி ஒற்றுமையைப் பத்திப் பேசலாம். ஆனா ஒருத்தன் ஒற்றுமையைப் பத்திப் பேசுனதுனாலயே பெரீய்ய்ய்ய்ய்ய புத்திசாலி ஆனா?!!

என்ன புரியுதா? :))

said...

"தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்."
என‌க்கு அஷ்ட‌மத்து ச‌னியாம். ந‌ல்ல‌வ‌ங்க‌ 4 பேர் ப‌டிக்க‌ சொல்லி அட்வைஸ் தந்தாங்க!! அதோட‌ விளைவுதாங்க கொத்தனார்.ஹிஹி

said...

//என‌க்கு அஷ்ட‌மத்து ச‌னியாம்.//

ஆஹா! உஷாக்கா பதிவு போட்ட அன்னைக்கு எனக்கும் இதான் போல! நமக்கு யாரும் இதெல்லாம் சொல்லாம விட்டுட்டாங்களே!! :)))

said...

\\நான் மின்னஞ்சல் மட்டும் தவறாமப் பாக்குறேனாம் அதுனாலே இப்ப 'கம்யூனிகேஷன் எல்லாம் த்ரூ இமெயில்தான்:-))))//



இது நல்லாருக்கே.:-)

said...

திறப்புவிழா செய்தவங்க பேரும் போட்டுருந்துச்சு. கவனிச்சுப் பார்த்தப்ப எனக்கு ஒரே ஆச்சரியமும் ஆனந்தமும். ஏன் இருக்காது?'ஸாலி பக்', நம்ம நகரக் கவுன்சிலர் மட்டுமில்லை, என் நெருங்கிய தோழியும் கூட. சரித்திரம் படைச்சது மரம் மட்டுமில்லை,நம்ம ஸாலியும் கூடத்தான்!!! பார்றா.........ஆறு வருசமாயிருக்கு இந்தப் பாறைக்கு. நான் இதுவரை எப்படிக் கவனிக்காம விட்டேன்?(-:
அதானெ!! துளசி கண்ணில படாம எப்படிப் போச்சு?

நானே அங்க வந்து பார்த்த மாதிரி எழுதிட்டீங்க துளசி.
சரித்திரம்னா சரித்திரம்தான்.

மகளோடையும் இ மெயிலா.
சரிதான்.:-0)

said...

வாங்க முத்துலெட்சுமி.

த டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்டு ஸோ மச்:-))))))

வேற விஷயமா மெயில் வந்து அதை வீட்டுலே இவுங்ககிட்டே சொல்ல சிலநாள் மறந்துருது.
அதனாலெ இப்பெல்லாம் உடனுக்குடன் ஒருத்தருக்கொருத்தர் ஃபார்வேர்ட் செஞ்சுடறோம்:-)))

said...

வாங்க வல்லி.

எப்பப்பார்த்தாலும் 'தமிழ்மணமே கதி'ன்னு இருந்தா......... இப்படித்தான் நிறைய விஷயம்
கண்ணுலெ படாமப் போயிருது:-))))))

said...

//'ஊர் கூடி தேர் இழுக்கறது'இப்படி ஆரம்பிச்சா வருங்கால சந்ததிகளுக்கு ஒற்றுமை உணர்வு வரும்.//
நல்லாச் சொன்னீங்க, துளசி.
இந்தகைய போக்கு நம்ம ஆட்களிட்டை இல்லாதது துரதிஷ்டம், இல்லையா.

ஆரம்பப்பள்ளி மாணவர்களோட விளக்கு ரொம்பவே கலக்குது!

எம்மையும் அங்கு கூட்டிச் சென்றதற்கு(எழுத்தினால்) மிக நன்றி, துளசி.
அன்புடன் செல்லி

said...

இப்பதான் உங்க தளம் பார்த்தேன்.பேருக்கு ஏற்றார் போல் பொருத்தமான பெயரை உங்க தளத்துக்கு வச்சிருக்கீங்க.இந்த பேர்ல ஒரு பிரமாதமான நாவல் இருக்கே படிச்சிருக்கீங்களா?

said...

வாங்க செல்லி.

மாறிவரும் உலகத்துக்கேற்ப மக்களோட எண்ணங்கள் மாறும் செல்லி.
என்ன........ கொஞ்சம் காலம் ஆகும். இல்லேன்னா
வாழ்க்கை நடத்தறதே பிரச்சனையாப் போயிரும் இல்லையா?

said...

வாங்க கோயிந்து.

முதல்முறையா வந்துருக்கீங்க. உக்காருங்க. என்ன
சொல்லட்டும் காபியா இல்லே டீயா?

இந்தப்பேரில் ஒரு நாவல் வந்ததும் அதை அப்ப தொடர்ச்சியாப் படிக்கலை.
விட்டுவிட்டு படிச்சது தான் நினைவிருக்குங்க.
கொஞ்சம் பயமா வேற இருக்கும் கதையின் போக்கு.
ஆனா முழுக்கதையும் நினைவில் இல்லைங்க(-: