நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 2)
மத்திய கைலாஷ் கோயிலை இடிக்கப் போறாங்களாமே. வேற இடத்துலே கோயிலை மாத்திக்கறதுக்குக் கோயில் நிர்வாகம் சம்மதிச்சுட்டாங்கன்னு படிச்ச நினைவு. எதா இருந்தாலும் சம்பவம் சம்பவிக்குமுன் போய்ப் பார்த்துட்டு வந்துறலாமுன்னு வருஷக்கடைசியன்னிக்குக் கிளம்பினோம்.
அடையார் போகும் வழியில்ராஜ்பவன் எல்லாம் தாண்டிப் போனால் சி.எல்.ஆர்.ஐக்கு( இதைப் பார்த்தவுடன் நம் மா.சிவகுமார் ஞாபகம்வந்தது. ஆட்டோவில் பயணித்த ஒவ்வொரு முறையும் சிவகுமாரின் நினைவு வந்ததைத் தடுக்க முடியலை.காரணம் அப்புறம் ஒரு பதிவில் சொல்றேனே)எதிரில் கோயிலும், கோயிலைச் சுத்திப் புதுசா ஒரு ரோடும் இருக்கு. அனாவசியமா எதுக்குக் கோவிலை இடிக்கணுமுன்னு, அதைச் சுத்தி ரோடு போட்டுட்டாங்களாம். நல்லதுதான்.போற வர்ற வண்டிகளுக்கு கோயில் சுத்துன புண்ணியம் கிடைக்கும்:-)
உள்ளே நடுவில் ஒரு பிள்ளையார் சன்னிதியும், வெளியே அங்கங்கே சிவன், ஸ்ரீ ராமர், சக்தி, முருகன், ஆஞ்சநேயர், பைரவர் ன்னு தனித்தனியாக சந்நிதிகள் சுத்திவர இருக்கு. இங்கே என்ன விசேஷமுன்னா, பிள்ளையார் சதுர்த்திதினம், சூரியனுடைய கிரணங்கள் பிள்ளையார் சந்நிதியில் இருக்கும் மூலவர் மேல் விழுகிறதாம். அதுவுமில்லாமல் 'இன்னொரு சந்நிதி அத்யந்த ப்ரபு'வுக்கு இருக்கு. ஹரனும் ஹரியும் பாதிப்பாதி உருவமா இருக்கற ஹரிஹார்( கர்நாடகா) மாதிரி பிள்ளையாரும் ஹனுமானும் பாதிப்பாதி உருவமா இணைஞ்சிருக்காங்க.
உள்ளே படங்கள் எடுக்க அனுமதி இல்லை. ஆனா வெளியில் இருந்து கோயிலையாவது எடுத்துருக்கலாம். என்னமோ விட்டுப்போச்சு. இந்தக் கோயிலுக்கு ஒரு வெப்சைட் கூட இருக்கு.
புதுப்புதுக் கோயில்கள் பெருகி வர்றதைப் புரிஞ்சுக்க முடியுது. மக்கள் தொகை பெருகிவரும் வேகத்தைப் பார்க்கறப்ப,அதுக்கு ஈடா, நம்பிக்கையை வளர்க்கக் கோவில்களும் எண்ணிக்கையில் வளரத்தானே வேணும். அதே சமயம் எத்தனையோ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பழைய கோயில்கள் கவனிப்பாரில்லாமல் எப்போ இடிஞ்சு விழுமோ என்ற நிலையில் இருக்கறதைப் பார்க்கும்போது, 'நம்ம ஜனங்கள் இதையும் கொஞ்சம் சீரமைச்சுக் கொண்டாடினால் என்ன?' ன்னு இருக்கு.
இங்கே இருந்து காந்தி நகர் பக்கம்தானே............ பத்மநாபசுவாமி கோயிலுக்குப் போகலாமுன்னு ஒரு ஆட்டோக்காரரை நிறுத்திக் கேட்டாச்சு. 'எனக்குத் தெரியும் சார். அது பெசண்ட் நகர்லே இருக்கு'ன்னு சொல்லி எங்களைக் கொண்டுபோய் விட்ட இடம் திருவான்மியூர்லே பாம்பன் சுவாமிகள் சமாதியான இடம்!
இப்படி ஒரு இடம் இருக்குன்னே தெரியாத எங்களுக்கு இன்னிக்கு இங்கே வரணுமுன்னு விதிச்சிருக்கு. உள்ளே போனோம். நல்ல பரந்த வெளி. முன் பக்கம் அழகான சின்ன தோட்டம். செயற்கைக் குளம், அதில் மிதக்கும் அல்லி ஆம்பல். இடதுகைப் பக்கம் சுவாமிகள் ஜீவ சமாதியான இடம். சின்ன மண்டபத்தில் பெரிய திருவுருவப் படம். அதுக்குமுன் செவ்வக வடிவில் தியான மண்டபம். சில குழந்தைகள் குழுவா உக்கார்ந்து என்னமோ படிக்கிறாங்க.அவருடைய உபதேசங்களா இருக்குமோ? மண்டபத் தூண்களில் உபதேசங்கள் சில எழுதி வச்சிருந்தாங்க. விதானத்துலே தாமரை அலங்காரத்தில் தமிழ் எழுத்துக்கள். என்னன்னு படிக்கணுமுன்னு தெரியலை. புதிர் போல இருக்கு!
மூணு பக்கமும் படிக்கட்டுகள் அருகில் யானைகள். கொள்ளை அழகு. இந்த சுவாமிகள் ராமேஸ்வரம் பக்கத்தில் பாம்பன் என்ற ஊரில் 1848 லே பிறந்தவராம். அப்ப அவர் பெயர் அப்பாவு. அருணகிரிநாதரை தன்னுடைய மானசீக குருவா ஏத்துக்கிட்டு முருகன்மேல் தீராத பக்தியுடன் இருந்தாராம். முப்பது வயசுலே கல்யாணம். அப்புறம் மூணு குழந்தைங்க.
சம்சாரியா இருந்து அப்புறம் சந்நியாச வாழ்க்கைக்கு மாறிட்டாராம். முருகன் மேல் 6666 பாடல்கள் எழுதி இருக்காராம்.அதுலெ ரொம்பக் குறிப்பிடத்தக்கது ஷண்முகக் கவசம். 1929ல் தன்னுடைய 81 வது வயசில் தன்னுடைய சீடர்களிடம் பொறுப்பை ஒப்படைச்சுட்டு உயிரோடு சமாதிக்குள்ளே இறங்கிட்டாராம்.
இந்த மண்டபத்துக்குப் பக்கத்தில் ஒரு முருகன் கோவில் இருக்கு. ஆறுமுகத்தோடு இருக்கார். அங்கேயும் ஒரு பெரிய ஷெட் போட்டு வச்சுருக்காங்க. விசேஷ நாட்களில் அங்கே பந்தி போட்டு அன்னதானம் நடைபெறுமாம்.நல்ல அருமையான கடற்கரை மணலும், தெங்குமா அந்த இடம் ரொம்பக் குளுமையா இருக்கு. அங்கே ஒருகட்டிடம் கட்டி அதை அலுவலகமாவும், சுவாமிகளின் உபதேசங்கள், பாடல்கள் எல்லாம் புத்தகமாவும் போட்டு விற்பனைக்கும் வச்சுருக்காங்க.
இவரைப்பத்தி ஒரு அற்புத நிகழ்ச்சியும் சொன்னாங்க. ஒரு சமயம் இவருக்குக் காலுலே அடிபட்டு, சென்னை பொது மருத்துவமனையில் சேரும்படி ஆச்சாம். அப்போ பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியாக இருந்த காலக்கட்டம். காலை வெட்டி எடுத்துறணுமுன்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்களாம். இவர் மட்டும் விடாம ஷண்முகக்கவசம் பாடிக்கிட்டே இருந்தாராம்.கடைசியில் அந்த மருத்துவர்கள் அதிசயிக்கிற மாதிரி இவர் கால் குணமாயிருச்சாம். அவர் இருந்த வார்டு சுவற்றில் முருகனுடைய உருவம் தென்பட்டதாம். அங்கெ இருந்த எல்லாருமே அதைப் பார்த்தாங்களாம். இன்னைக்கும் அந்த குறிப்பிட்ட வார்டில் அந்தக் குறிப்பிட்ட நாளில் பூஜை செய்றாங்களாம்.
வாயைத் திறக்காம எல்லாத்தையும் கேட்டுக்கிட்டோம். இன்னிக்கு பத்மநாபனைப் பார்த்தே தீரணுமுன்னு மறுபடி ஒரு ஆட்டோவைப் பிடிச்சு, 'விளக்கு விளக்குன்னு விளக்கி' அடையாறு காந்தி நகர் ரெண்டாவது மெயின் ரோடில்இருக்கும் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். கோயிலை அடைக்க இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு.
வாசலுக்கு நேரா பாம்பின் மீது பள்ளி கொண்ட பதும நாபர். மனசுக்குள்ளே பிரமாண்டமாக் கற்பனை செஞ்சு வச்சுருந்தேன். கொஞ்சம் 'பொசுக்'குன்னு ஆகிருச்சு. திரு அனந்தபுரத்தில், பள்ளிகொண்டவனை மூன்று வாசலில் பார்க்கணும். தலை ஒரு வாசல், இடை ஒரு வாசல், கால் ஒரு வாசல்ன்னு. அதையே மனசுக்குள்ளே இத்தனை நாளும் போற்றிப் பாதுகாத்தது தப்பாப் போச்சு. ரெண்டு நாளைக்கு முன்னாலெகூட நம்ம திருப்பது தேவஸ்தானக் கோயிலிலே பின் வாசலிலே ஒரு பள்ளிகொண்டவனைப் பார்த்தது நினைவு வந்தது. இங்கேயாவது எதோ பரவாயில்லை என்ற சைஸ். அது (தி.நகரில்) ரொம்பக் குட்டியூண்டு. ஆறடி இருந்தாலே கூடுதல். வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷலா இருக்குமுன்னு நினைச்சேன்.
இடது பக்கம் பிள்ளையார். சிகப்பு, பச்சை, வெள்ளைன்னு கற்கள் பதிச்ச கவசத்தோடு ஒரே ஜொலிப்பு. ஓஹோ......நல்ல காசு இருக்கற கோயில்தான் போல. வலம் வரும்போது கவனிச்சது சக்கரத்தாழ்வாருக்கு வெள்ளிக் கவசம் மாட்டி விட்டுக்கிட்டு இருக்காங்க. கோவில் நிர்வாகி( அப்படித்தான் இருக்கணும்) மேற்பார்வை பார்த்துக்கிட்டு இருக்கார்.அவர்கிட்டே, இந்தக் காட்சியைப் படம் எடுக்கலாமா?'ன்னு கேட்டதுக்கு 'தாராளமா எடுத்துக்குங்கோ'ன்னு சொன்னார். கூடவே 'வைகுண்ட ஏகாதசியன்னிக்கு தங்கரதம் இழுத்தோம். பிரமாதக் கூட்டம். அன்னிக்கு வந்துருக்கலாமே'ன்னு சொன்னார். தங்கரதம் அங்கேயே ஒரு கண்ணாடி அறையில் நிக்குது. க்ளிக் க்ளிக் க்ளிக். சின்ன ரதம்தான். ஆனா தங்கமாச்சே! கருவறையின் வெளிப்புறம் மூணு பக்கச் சுவத்திலும் இருக்கும் கடவுளர் உருவங்களுக்கு வெள்ளிக் கவசங்கள் போட்டு வச்சுருக்காங்க. கொடுப்பினை.
சாமிகள் கூட நல்ல இடத்தில் இருந்தாத்தான் அலங்காரமும் அமர்க்களமும். இந்தப் பிள்ளையாரையே எடுத்துக்குங்களேன்,எவ்வளவு ஜோரா இருக்கார். எத்தனை இடத்துலே காத்துக்கும் மழைக்கும் பாதுகாப்பில்லாம, ஏன் ஒரு விளக்கு ஏத்தி வைக்க நாதி இல்லாமல்கூட இருக்கற பிள்ளையார்களைப் பார்த்திருக்கேன்...........ப்ச். 'எல்லாம் இருக்கும் இடத்தில்இருந்துவிட்டால் எல்லாம் சொர்க்கமே'ன்னு கவிஞர் கண்ணதாசன் பாட்டு மனசுலே ஒரு மூலையில் வந்து நின்னுச்சு.
பரமபத வாசல் எல்லாம் புதுசா வர்ணம் பூசி நின்னது. கருடவாகனம் கண்ணுலே பளபளப்போடு. அவ்வளவாக் கூட்டமில்லை.ஒரு பத்துப்பதினைஞ்சு பேர் இருக்கலாம். நின்னு நிதானமாப் பார்த்துட்டு வந்தோம். இன்னிக்கான கோயில் தரிசனம்ஆச்சு. இனி ...............
படங்கள் சிலதை இதில் போட்டுருக்கேன். இன்னும் உங்களுக்குக் காமிக்கணுமுன்னு விரும்புற படங்களை வெறும் படப்பதிவாப் போட்டுறலாமுன்னு ஒரு எண்ணம்.
தொடரும்.
Wednesday, March 07, 2007
பாம்பனும் பாம்பனும்
Posted by துளசி கோபால் at 3/07/2007 01:19:00 PM
Labels: அனுபவம்/நிகழ்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
அந்த ஆட்டோகாரர் நினைவாக "பாட்ஷா" என்று தலைப்பின் பெயர் வைத்திருக்கலாம்.
"நன்றிக்கடன்"
2 வருஷத்துக்கு முன்ன இந்தியா போனப்ப நானும் பாம்பன் சுவாமிகள் கோயிலுக்கு போயுருக்கேன். சாயந்திரம் முருகனுக்கு பூசை எல்லாம் பார்த்தென். Enjoyed .சீன வம்சாவளி மலேசியர்கள் கூட வந்திருந்தாங்க
வாங்க குமார்.
ஆட்டோக்காரர்களைப்பத்தி ஒரு தனிப்பதிவுக்கு விஷயம் இருக்கு:-))))
வாங்க ச்சின்ன அம்மிணி.
அருமையான இடம் இல்லை? அதுவும் சாயந்திரமுன்னா நல்லா 'குளுகுளு'ன்னு
கடல்காத்து வீசி ஜோரா இருந்திருக்குமே!
//எத்தனையோ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பழைய கோவில்கள் .......//
உண்மைதான்....யார் எப்படி மணி கட்டுவார்கள் என்பதுதான் புரியவில்லை
வாங்க சிஜி.
நம்ம ஊருலே மக்கள்சக்தி எவ்வளோ இருக்கு. ஆன்மீகம்ன்னு இல்லாட்டியும் ஒரு சமூகசேவையா
நினைச்சு எல்லாரும் ஒரு கை கொடுத்தா எவ்வளவோ செய்யலாம். குறைஞ்சபட்சம் சுத்தம் செய்து,
செடிகொடிகளை வச்சாக்கூடப் போதும். பளிச்சுன்னு ஆயிறாது?
நம்ம ஜெயசந்திரசேகரன்( பதிவர்) ஒரு குழு வச்சுக்கிட்டு இதைச் செய்யறாங்களாம். இன்னும் பலர்
இதுலே முன்வந்து செய்யலாம்.
'ஊருக்கு உபதேசம் பண்ணறியே,நீ என்ன செய்தே'ன்னு கேட்டீங்கன்னா, என்னை மாதிரி வெளி இடங்களில்
இருக்கறவங்க கூடியவரை பொருளுதவி செய்யலாம்.
பாம்பன் சுவாமிகள் சமாதி திருவான்மியூரில் இருக்கிறதா? ஆகா...பக்கத்தில் இருந்தும் பார்க்காமல் போனேனே. நான் இன்று ஐதராபாத் வந்திருக்கிறேன். அலுவலக வேலை தொடர்பாக. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு. ம்ம்...அடுத்து சென்னைக்குப் போகையில் பார்க்க வேண்டும்.
சண்முகக் கவசத்தை டி.எம்.எஸ் பாடிக் கேட்க வேண்டும். அண்டமாய் அவனியாகி என்று கம்பீரமாக அழகாகப் பாடியிருப்பார். கேட்கக் கேட்டப் பேரின்பம். ஒலிப்பேழை கிடைத்தால் கண்டிப்பாக வாங்கிக் கேளுங்க. கண்டிப்பாக. மிக அருமையாக இருக்கும்.
நீங்கள் சொன்ன கால் குணமான செய்தியை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இறைவன் அருள் இருந்தால் எதுதான் நடக்காது? அருணகிரிப் பெருமானின் திருப்புகழ் ஒவ்வொன்றும் தித்திக்கத் தித்திக்கச் சொல்லி மகிழ்ந்தாலே போதும்.
அனந்தபத்மநாப சுவாமி கோயில் சென்னையில் வீட்டிற்குப் பக்கம். ஆகையால் சென்னைக்குச் சென்றால் அங்கும் செல்வதுண்டு. அந்தக் கோயிலைப் பற்றி முன்பு நான் எழுதிய பதிவு இங்கே.
http://gragavan.blogspot.com/2005/08/blog-post_10.html
சென்னையை நின்னு நிதானிச்சு பார்க்க இன்னும் குடுத்துவைக்கலை. குறிச்சு வச்சுக்கிறேன் இதெல்லாம்.
நீங்க சொன்ன இரண்டு இடங்களுமே 'நம்ம வூட்டாண்டதான்'. அதனால நல்லா போயி பாத்திருக்கிற கோயில்கள்.
உள்ளேன் டீச்சர்.
துளசி,
கிழக்குக் கடற்கரை சாலை முழுவதும் அத்தனை கோவில்கள் வந்து இருக்கின்றன.
பாம்பன் சுவாமிகள் கோவிலுக்கு எல்லா மத பக்தர்களும் வருவார்கள் என்று கேள்வி.
நீங்கள் குறிப்பிட்டதுபோல அடையார் கோவிலுக்கு வசதி அதிகம்தான். எல்லோருக்கு வேணும்கிற மாதிரி சாமிகள்.:-)
எங்க ஊரு எல்லை அம்மனைப் பாத்தீங்களா? மகா சக்தி அம்மா. ரொம்ப அழகா அலங்காரம் செய்வாங்க. பக்கத்திலேயே ஸ்ரீராகவேந்திரா மடம்.
சென்னைக்கு முதன்முதலா வந்தது.சீக்கிரம் படங்கள் போடுங்கள்.
அட, கொத்தனார்,இராகவன் எல்லோரும் நம்ம பேட்டைதானா ? எங்கூரு (அடையாரு) கோவில்களை படம்பிடித்து ஊர்நினைவுகளை கிளப்பி விட்டீர்கள். பாம்பன் சுவாமி சமாதி நா ன் ஞாயிறுதோறும் சென்று கொண்டிருந்தேன். பௌர்ணமிநாட்களில் பூசை சிறப்பு.
அதுபோல் அறுபடை வீடுகள் அமைந்த கோவிலொன்றும் பெசன்ட் நகரில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆட்டோகாரருக்கு நன்றி சொல்லுங்கள்.
வாங்க ராகவன்.
ஹை...தராபாத்தா? ஹுசைன்சாகர் லே ஒரு புத்தா வச்சிருக்காங்களாமே.
பார்த்தீங்களா? நான் இன்னும் அந்தப் பக்கம் வரலைப்பா(-:
டி எம் எஸ் அவர்களின் தமிழ் உச்சரிப்பு எவ்வளோ அருமை. நல்லா அழுத்தம்
திருத்தமாப் பாடறவர்.
நம்மூட்டுலே முருகன் பாட்டுன்னா டி எம் எஸ், பிள்ளையார்ன்னா சீர்காழின்னு
இருக்கோம். ஷண்முகக்கவசம் கேட்டதில்லை. கட்டாயம் கேக்கணுமுன்னு
ஒரு ஆசை வந்துருக்கு.
உங்க அரங்கன் பதிவை ஏற்கெனவேப் படிச்சிருக்கேன். இப்ப மீண்டும் ஒருமுறை படிச்சேன்.
சந்தர்ப்பம் கிடைச்சால் திருவனந்தபுரம் போய் அரங்கனைப் பாருங்கள்.
வாங்க முத்துலெட்சுமி.
இன்னும் சென்னையிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு.
முந்தி மாதிரி ச்சென்னைன்னதும் 'செத்தகாலேஜ், உயிர்க்காலேஜ், பீச்'ன்னு
இருந்துறமுடியாது:-))))
கொத்ஸ் வாங்க.
வூட்டாண்டையா? அப்ப நான் எழுதுனது சரியான விவரமா? இல்லெ ஏதாவது
விட்டுப்போச்சா?
வாங்க வல்லி.
கிழக்குக் கடற்கரைச்சாலை முழுசும் கோயில்களா?
அப்ப மெரீனா முழுசும் சமாதிகளா?
என்னவோ போங்க:-)))))
ராகவேந்திர மடம் இன்னும் போகலைப்பா(-:
வாங்க மணியன்.
அறுபடை வீடுகள் கோயிலா?
அடுத்தமுறை போறதுக்குள்ளே கட்டி முடிச்சுருவாங்க. நானும் போயிட்டுவந்து
எழுதுவேன்:-))))
பெசண்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோயிலும் நல்லாவே இருக்கு.
நிறைய வலைஞர்கள் அடையார்லே இருக்கறதாலெ அடுத்த
வலைமாநாடு அடையார்தான்:-))))
அதாங்க, 'அன்னிக்கு அங்கே போகணுமுன்னு ப்ரோக்ராம் போட்டுட்டாரு
கடவுள்'ன்னு நினைச்சுக்கிட்டு, ஆட்டோக்காரருக்கு நன்றி சொல்லிட்டோம் அப்பவே:-)))
தலைப்பு 'பாம்பனும் பாம்பணையனும்' என்று இருந்திருக்கலாமோ ?
//சாமிகள் கூட நல்ல இடத்தில் இருந்தாத்தான் அலங்காரமும் அமர்க்களமும். இந்தப் பிள்ளையாரையே எடுத்துக்குங்களேன்,எவ்வளவு ஜோரா இருக்கார். எத்தனை இடத்துலே காத்துக்கும் மழைக்கும் பாதுகாப்பில்லாம, ஏன் ஒரு விளக்கு ஏத்தி வைக்க நாதி இல்லாமல்கூட இருக்கற பிள்ளையார்களைப் பார்த்திருக்கேன்.........//
அக்கா!
இது சாமி குறைபாடில்லையாம்; அந்த கோவிலைக் கட்டியவர் ஜாதகக் குறையாம்; எனப் படித்ததாக ஞாபகம்.
திவ்விய தரிசனமாக இருக்கிறது.
ஆமாங்க மணியன்.
முதல்லே'பாம்பனும் பள்ளி கொண்டானும்'ன்னு வைக்கலாமுன்னு இருந்தேன். அப்புறம் ரெண்டுமே
பாம்பனாப் போயிருச்சேன்னுதான் 'பாம்பனும் பாம்பனும்'னு வச்சுட்டேன்.
பாம்பனும் x 2 ன்னு ஏர்லைன் டிக்கெட் மாதிரியும் வச்சுருக்கலாம்:-))))
வாங்க யோகன்,
இதென்ன கட்டுனவரின் ஜாதகக்குறை? (-: கோவில் கட்ட மனசு வந்து
செய்யறவங்களுக்கு ஜாதகம் உதவி செய்ய வேணாமா?
அதான் என்னப்போல உள்ளவங்க மனசுலேயே 'கோவில் கட்டுறது' :-)))))
தினம் அங்கே அபிஷேகமும் அலங்காரமும் ஆரத்தியும்தான்!
என்னமோ போங்க.
//வாங்க மணியன்.
அறுபடை வீடுகள் கோயிலா?
அடுத்தமுறை போறதுக்குள்ளே கட்டி முடிச்சுருவாங்க. நானும் போயிட்டுவந்து
எழுதுவேன்:-))))//
பெசண்ட் நகரில் அறுபடை வீடு முருகன் கோவில் கட்டி முடித்து, திறந்து ரொம்ப நாளாச்சு. நான் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். அஷ்ட லஷ்மி கோவிலுக்கு அருகிலேயே இருக்கிறது. அடுத்த முறை தவறாமல் வந்து பாருங்கள். இந்த கோவில் நிறைய திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் கூட வந்திருக்கிறது. அன்று ஒரு நாள் ராதிகா நடித்த ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அது அனேகமாக செல்வி(அரசி) தொடரில் வரும் (அல்லது ஏற்கனவே வந்திருக்கலாம்)
வாங்க பிரசன்னா.
கோவில் கட்டி முடிச்சு, அது சினிமாவிலேயும் நடிச்சுருச்சா? :-)
அடுத்தமுறை கட்டாயம் பார்க்கவேண்டிய பட்டியலில் எழுதிவச்சுட்டேன்.
நன்றி பிரசன்னா.
கலிபோர்னியா வந்து 5மாதமாகிற்து.
ஊர் ஞாபகத்தை கிளறிவிட்டீர்கள்!..அதுவும் எங்க பேட்டையை(அடையாறு).ப்ரார்த்தனாவுக்கு
பாம்பன் சுவாமிகள் கோவிலைத்தாண்டி எத்தனை முறை போயிருக்கிறேன்!!!போகவேண்டுமென்று தோன்றியதேயில்லை.ஊர் திரும்பியதும் முதல்வேலை அதுதான்.
ஆட்டோக்களுக்காக ஒரு மெகா பதிவேபோடலாம்!
வாங்க நாநானி.
//போகவேண்டுமென்று தோன்றியதேயில்லை//
அதான்.............. நமக்குப் போகணுமுன்னு இருக்கற நாள் வந்துச்சுன்னா, தானா அங்கே போய் நிப்போம்:-))))
அக்கா. பாம்பன் சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசிக்கும் பாக்கியம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது. எனக்கும் அந்த வாய்ப்பு விரைவில் கிடைக்க வேண்டும்.
மத்திய கைலாசத்தை இடித்து வேறு இடத்தில் கட்டப் போகிறார்களா? அடடா... நான் விரும்பிச் செல்லும் கோவிலாயிற்றே. ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பாடற அளவுக்கு நிறைய இருக்கே. அதெல்லாம் என்ன ஆறது?
வாங்க குமரன்.
பாம்பன் சுவாமிகள் சமாதி தரிசனம் எப்படியோ தானே அமைஞ்சது!!!!
மத்திய கைலாஸ் இடிக்க மாட்டாங்க. அதைச் சுத்தி ரோடு போட்டாச்சு.
இப்ப பூரா ட்ராஃபிக்கே கோயிலை வலம் வருது:-)))))
Post a Comment