Wednesday, August 29, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 15

27/9 ரெண்டு மூணுநாளா அப்படி ஒண்ணும் பெருசா நடந்துடலே. நான் மட்டும் சும்மாப் போய்வந்துக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு கோபாலும் ச்சீனாவிலிருந்து திரும்பி வந்துட்டார். நேத்து சிங்கப்பூர்லேருந்து கூப்பிட்டார். ஊஞ்சல் சங்கிலி விசாரிக்கறேன்னு சொல்லியிருந்தாருல்லே! யானை போட்ட சங்கிலி இருக்காம். ஆனா நீளம் இல்லையாம்! அதனாலே பித்தளையிலே ஒரு அடி, அரை அடி இப்படி தனித் தனியா இருக்கற கம்பிங்க மாதிரி இருக்கறதும் இன்னும் மாட்டற கொக்கி, பலகைக்குப் போடற குமிழ்ன்னு எல்லாம் பாத்துப் பாத்துதான் வாங்கிட்டு வந்திருக்கார்!
அரை அடி இருக்கும் கம்பிக்கு எனாமல் வேலை செஞ்சு, மரூன் கலரில் ரொம்ப நல்லா இருக்கு.


ஊஞ்சப் பலகைமட்டும் இங்கே நம்ம 'கிங்'குகிட்டே செய்யச் சொல்லணும். அது எப்படி இருக்கும்னு காமிக்கறதுக்கு ஃபோட்டோக்கள் எடுத்து வந்திருக்கார். நாளைக்குதான் நிதானமா அதுகளைப் பாக்கணும்.
ஊர்லே இருந்து வந்தவுடனே பெட்டிங்களைப் பிரிச்சு சாமான்களை எடுத்து வைச்சுட்டு, ஒரு 'டீ' குடிச்சுட்டு வீட்டைப் பார்க்கப் போனோம்! வேலை நடந்துக்கிட்டு இருந்தது! 'மார்னிங் கோர்ட்'க்கு சா·பிட் போட மரம் வச்சி ஃப்ரேம்க்கு அடிபாகத்துலே சேர்த்து அடிச்சுக்கிட்டு இருந்தாங்க. இதுவரை நடந்ததைப் பார்வையிட்டாரு. 'கேஸ்' கன்ட்ரோல் பேட்' விஷயம் சொன்னதும் அதை நாமே மாத்தி வைக்கலாமேன்னார். இவருகிட்டே சொல்றேன், 'முதல்லே அந்த கேஸ் ஆளுக்கு ஃபோன் செஞ்சு வரவேணாங்கணும்' . சொல்லி வாய் மூடலை, அந்தஆளு வந்து நிக்கறாரு. நாங்களே செஞ்சுடறோம்னு சொன்னதுக்கு சரின்னாரு. ஆனா வந்துட்டுப் போனதுக்கு நாம காசு கொடுத்தரணுமாம்.சரி, நீங்களே வேலையை முடியுங்கன்னு சொல்லிட்டோம். ரெண்டு நிமிஷ வேலை. போச்சு 40 டாலர்!அங்கேயிருந்து, 'பாலி ப்ரொடக்ட்ஸ்' போனோம். யானை டிஸைனு பாத்தோம். புள்ளையார்கூட செய்யலாமாம்! நெட்லே பார்த்து கொஞ்சம் படம் எடுத்துக் கொடுக்கணும். கராஜ்க்கு மேலே யானை, மெயின் வாசலுக்கு மேலே பிள்ளையார்னு இருக்கேன்.


அப்புறம் திரும்பிப் போய் 'மாஸ்டர் டிரேட்'லே பாத்ரூம் சாமான்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். 'வேனிட்டீ'தான் மனசுக்குப் பிடிச்சமாதிரி அமையலெ. பாத்ரூமுக்கு இருக்கற 'நக்கரா'வைப் பத்தி தனியா எழுதணும்!

வார்ட் ரோப் கதவுங்க, லாண்டரி & கோட் கப் போர்டுங்களுக்குக் கதவுங்க எல்லாம் ஆர்டர் கொடுக்கற நேரம் வந்தாச்சு. அதை இன்னும் ஒருதடவை அளவெடுத்துக்கிட்டுப் போலாம்னு திருப்பி அங்கிட்டுப் போனோம். அளந்தா 1100மிமீ வருது. ஜெ & ஜி கடையிலே போய் ஆர்டர் கொடுத்தாச்சு! எந்த நிறுவனத்தில் வாங்கப்போறோமுன்னு முடிவு செஞ்சதுக்கப்புறம், வீட்டு வேலை நடக்க நடக்க, அந்தந்தப் பொருட்களின் தேவை வரும்போது சப்ளை செய்யும்படி கேட்டுக்கறதுதான் நடைமுறை. இல்லேன்னா, அந்தப் பொருட்கள் வந்து காத்துக் கிடக்கும். சமயம் வரும்வரை அதைக் காப்பாத்தணும்னு சில தொல்லைகள் இருக்கு. பொதுவா இங்கே சப்ளை செய்ய ஆறுவார காலம் எடுத்துக்கறதாலே, நமக்கு வேண்டிய சமயத்துக்கு ஆறுவாரம் இருக்கறப்ப ஒரு ரிமைண்டர் கொடுக்கவேண்டி இருக்கும்.

ஜன்னல், கண்ணாடிக்கதவுகள் எல்லாம் டபுள் க்ளேஸிங் செஞ்சு வாங்கறோம். வீட்டுக்குள்ளே இருக்கும் உஷ்ணம் நஷ்டப்படாம இருக்க இது உதவுது. மேலும் இங்கேதான் வானத்துலே பெரிய ஓட்டை விழுந்துருக்காமே. ஒஸோன் லேயர்லே ஓட்டை. அதனாலே வெய்யிலு கொஞ்சமா வந்தாலும் அதுலே இருக்கற UV கதிர்கள் உடலைத் துளைச்சுருதாம். எக்கச்சக்க ஸ்கின் கேன்ஸர் இருக்குன்றதாலே சிட்டிக் கவுன்சிலும் இனிமே கட்டும் வீடுகளுக்கு டபுள் க்ளேஸிங் கட்டாயம் இருக்கணுமுன்னு விதி கொண்டு வந்துருக்கு இப்ப. நாங்க இன்னும் கொஞ்சம் கூடுதல் பாதுகாப்புக்காக டிண்ட்டட் கண்ணாடியாப் போடறோம். UV வடிகட்டி? Condensation, mould and extreme heat loss ன்னு இருக்கறதைத் தடுக்கும் சமயம் வெளியே இருந்து வரும் சத்தத்தின் அளவையும் குறைச்சுரும். இதுலே ரெண்டு கண்ணாடிக்கு நடுவுலே எதோ ஒருவகையான வாயுவை நிரப்பறாங்களாம். ஆர்கானிக் கேஸ். அது கண்ணாடியைப் பாதுகாக்குமாம். (அதுக்குத் தனிக் காசு) என்ன தமாசுன்னா, அந்த வாயுவுக்கு மணம் கிடையாதாம். கண்ணாடி உடைஞ்சாலும் வெளியேறும் வாயுவால் சுற்றுப்புறச் சூழலுக்கும், நமக்கும் ஆபத்து இருக்காதாம்.ரொம்ப சுத்தம்:-)))))))))))) எனெக்கென்னவோ 'எம்பரர்ஸ் க்ளொத்' கதை ஞாபகம் வருது:-)))) இருக்கட்டும், அது இப்போதைக்கு வேணாம்.


இந்தியாவில் ஜன்னலுக்குக் க்ரில் கம்பி போடுறது ஒருவிதப் பாதுகாப்பா இருக்குன்ற எண்ணத்தாலே, நாங்களும் கம்பிப் பாதுகாப்போடு கண்ணாடி ஜன்னல் வைக்கலாமுன்னு முடிவு செஞ்சோம். க்ரில் கொள்ளையர்களைப் பத்தி அப்ப பேப்பரில் படிச்ச ஞாபகம் இல்லை.கம்பிகளில் அழுக்குப் படிஞ்சு அதைத் துடைக்கும் வேலைக்குப் பயந்துகிட்டு, ரெண்டு கண்ணாடிகளுக்கு இடையில் கம்பி வர்றதுபோல டிஸைன் செய்யச் சொன்னோம்.இங்கே வீட்டுவேலைக்கு உதவியாளர்கள் வச்சுக்கக் கூடிய அளவுக்கு நமக்கு வசதிகள் இல்லை. கம்பி உள்ளே இருக்கறதாலே,ரெண்டு பக்கமும் கண்ணாடியை மட்டும் (கோபால்) துடைச்சாப் போதுமே:-) துடைப்பவர் கையிலும் கம்பி இடிச்சு வலிக்காதே! நல்ல எண்ணமா, இல்லையா? :-)))

30/9
ப்ளம்பர் மேட்' வந்து ஒரே நாளிலேயே எல்லா பைப் கனெக்ஷன் கொடுத்தாச்சு. காசாக் கொடுத்தம்னா கொஞ்சம் குறைக்கிறேன்னு சொன்னாரு. நாங்க கொடுத்தோம். டேங்க் கிடையாது. மெயின் ப்ரெஷர். வீட்டைச் சுத்தி நாலு இடத்துலே வெளியேக் குழாய்களும் போட்டாச்சு. தோட்டத்துக்குத் தண்ணி ஊத்தணுமே. மெயின்லே இருந்து கராஜ் வழியாத் தண்ணி வீட்டுக்குள்ளே வருது. அங்கேயே ஒரு ஸ்டாப்பர் வால்வ் போட்டதாலே, தேவைப்பட்டா வெளியே தெருவுக்குப் போகாமலேயே, தண்ணியை நிறுத்தமுடியும்! இந்த ஆளு தனக்கு யாரையுமே உதவியாளரா வச்சுக்கலை. ஏன்னு கேட்டதுக்கு அது ரொம்பத் தொந்திரவாம். தனியாச் செய்யறது ரொம்ப லகுவா இருக்காம். கத்தாமக் கொள்ளாம நிம்மதியா விஸிலடிச்சுக் கிட்டே ப்ளாஸ்டிக் குழாய்களை சீலிங் வழியா இழுத்துக்கிட்டு இருந்தார். ப்ளாஸ்டிக்கைப் பார்த்ததும் எனக்கு பயம் வந்துருச்சு. அதெல்லாம் ஒண்ணும் ஆகாதாம். சூடு தாங்கும் ப்ளாஸ்டிக் தானாம்.

1/10
இன்னைக்கு இவர் சாயந்திரம் வந்து சொல்றாரு, வீட்டுக்கு முன்னாலே மண்ணு கொட்டிவச்சிருக்குன்னு! என்னன்னு போய்ப் பார்த்தா, ஒரு 'ட்ரக் லோடு' மண்ணு யாரோ கொண்டுவந்து கொட்டியிருக்காங்க! 'க்ரேக்'கிட்ட கேட்டால் யாரு போட்டாங்கன்ற விவரம் இல்லே.

2/10
காலையிலே கோவிலுக்கு போறதுக்கு முன்னே போனோம். மண்ணு இருக்கு. யாரோ தப்பான இடத்துக்கு டெலிவரி செஞ்சிருக்காங்க.'ஸ்க்ரீன்' செய்யாத மண்ணு. யாரும் வந்து கேக்கலைன்னா, நம்மத் தோட்டத்துக்கு ஆச்சு.
அப்படியே, 'பாலிகட் polycut' போனோம். பிள்ளையார் படம் நான் அனுப்புனதை ரொம்ப அட்டகாசமாச் சின்னதும், பெருசுமா ரெண்டு செஞ்சு வச்சிருந்தாங்க.zig zag puzzle மாதிரி தனித்தனியா இருக்கு. தனியா வட்டமான வளையம் வேற. வட்டத்துக்குள்ளே வச்சு இணைச்சுத் தருவாங்களாம். அதுக்குமேலே ப்ளாஸ்டரிங் செஞ்சுக் கலர் அடிச்சுக்கலாமாம். அதையே ஒண்ணை வீட்டு முகப்புக்கும், ஒண்ணை கராஜ் மேலே வர்ற இடத்துக்கும் போடலாம்னு முடிவாச்சு. அங்கேயே 'ஃப்ளூட்டட் காலம்'னு அலங்காரத் தூண்கள் வச்சுருக்காங்க. பேசாம அதை வச்சு ஒரு கல்யாண மண்டபம் மாதிரி செட் செஞ்சுக்கிட்டா, உள்ளூர்லே நடக்கும் இந்துக் கல்யாணத்துக்கு அட்டகாசமா அமையும். ஒரு அடி உயரத்தில் ரெண்டு துண்டு தூண் அறுத்து வாங்கிட்டு வந்தோம். அதை மரக்கலருலே பெயிண்ட் அடிச்சு, அதும் மேலே நம்மூட்டு ஹனுமார், பிள்ளையார் விக்கிரகங்களை வச்சா, நல்லா பெடஸ்டல் போல இருக்கும். சும்மாத்தான் தந்தாரு 'ட்ரெவர்'. அதை வீட்டுக்குக் கொண்டுவந்து தங்கநிறமாக்கறேன்னு 'கோல்டன் கலர் ஸ்ப்ரே செஞ்சப்ப, அப்படியே அந்த தெர்மாக்கோல் கரைஞ்சு பொந்துபொந்தாக் குழி விழுந்துருச்சு(-: ( அப்புறம் கேட்டப்பச் சொல்றாங்க, அதை ஒரு 20 செமீ. தூரத்துலே வச்சு ஒரு ஆங்கிளில் ஸ்ப்ரே செய்யணுமாம்.)

3/10
மறுநாள் ஊஞ்சல் போட மேலே கம்பிக்கு அளவெடுக்கப் போனோம். 'ஜீபூம்பா' !!!! மண்ணைக் காணோம். யாரோ சுத்தமா எடுத்துக்கிட்டுப் போயிருக்காங்க. கொடுத்தவனே எடுத்துக்கிட்டாண்டீ:-))) மரச்சட்டத்தை அளந்து, எங்கே கொக்கி வருதுன்னு குறிச்சிட்டு, அளவை எழுதிக்கிட்டு வந்தோம். மழை பேய்ஞ்சு முன்னாலே ரூம்லேயும், கராஜ்லேயும் தண்ணி தேங்கி இருக்கு.இன்டர்னல் கட்டரிங் போட்டாதான், ஃபேஷியா போடுவதை முடிப்பாங்களாம். அப்புறம்தான், ஓடு வேயற வேலையும் முடிப்பாங்களாம்.எல்லாம் ஒண்ணுக்கு ஒண்ணு தொடர்பான விஷயம். தண்ணி தேங்கறது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கலே. ரூஃப்க்கு கறுப்புப் பேப்பர் போட்டு ஏழு நாளைக்குள்ளே ஓடு போடணுமுன்னு இவுங்கதானே சொன்னாங்க?

4/10
மறுபடி இந்த ஒருவாரமா ரொம்ப வேலை ஒண்ணும் நடக்கலே. இன்னைக்கு, காலையிலே ஃபேஷியா முடிச்சாச்சு. ஓடும் கிட்டத்தட்ட முடிச்சாச்சு. இன்னும் கொஞ்சமா பாக்கி இருக்கு. ஜஸ்ட் ஃபினிஷிங் செய்யணுமாம்.

5/10
ச்சும்மாப் போய் பாத்தாச்சு, வெளியிலே இருந்தே! வேலை ஒண்ணும் நடந்த அடையாளம் இல்லை.
6/10
அடுத்தநாள் இவரு, கராஜ் கதவு போடற ஆளுங்களுக்கு ·போன் போட்டுக் கேட்டாராம், எப்ப வேலையை ஆரம்பிக்கப் போறாங்கன்னு? அதுக்கு வந்த பதில் என்ன தெரியுமா?

நேத்தே வந்து போட்டுட்டுப் போயிட்டாங்களாம்! நாங்க வெளியிலே இருந்து பாத்ததாலே ஒண்ணும் தெரியலே. கதவைப் போட்டுட்டு, அதை மேலே இழுத்து வச்சிட்டுப் போயிருக்கறாங்க! ஓப்பனர் இன்னும் போடலை, ஒயரிங் செய்யணுமே.

அப்புறமா சாயந்திரம் போய்ப் பார்த்துட்டு வந்தோம். நல்லா தான் இருக்கு! வொயரிங் வேலையும் ஆரம்பிச்சாச்சு. 'துடைப்பம்' கேட்டதொகை 20,000 $ இது கூலி மட்டும்தான். ரொம்பவே அதிகம். தேவையான ஒயர்கள் நாங்களே வாங்கித் தருவோம். கோபால், அவரோட கம்பெனியில் இருந்து வாங்கிப்பார். நல்ல தள்ளுபடியில் நமக்குக் கிடைக்குது. அங்கே இத்தனை வருசம் வேலை செஞ்சதுக்குண்டான லாபம்:-)))) தேடுனதில் வேற ஆளு கிடைச்சிருக்கு! இவர் பெயர் கேரி.
கதவுக்கு கைப்பிடி, வாசக்கதவு பூட்டு எல்லாத்துக்கும் ஆர்டர் கொடுத்தாச்சு. 3 நாளுலே தரேன்னு சொன்னாங்க.' நாப்ஸ் அண்ட் நாக்கர்ஸ்' இதுதான் கடையோட பேரு!


ஊஞ்சலுக்கு க்ளாம்ப்ஸ் போட ஒருத்தர் வந்து அளவெடுத்துகிட்டுப் போனாராம்!

தொடரும்...................

12 comments:

said...

//இந்தியாவில் ஜன்னலுக்குக் க்ரில் கம்பி போடுறது ஒருவிதப் பாதுகாப்பா இருக்குன்ற எண்ணத்தாலே, நாங்களும் கம்பிப் பாதுகாப்போடு கண்ணாடி ஜன்னல் வைக்கலாமுன்னு //

ஆஹா..
//ஊஞ்சப் பலகை//
ஹ்ம்ம் இதுதான் சொந்த வீட்டினால லாபம்.

said...

ரொம்ப விறுவிறுப்பா நடக்குதே. எப்ப முடியப்போகுது, எப்ப கிரகபிரவேச கேசரின்னு காத்துக்கிட்டு இருக்கேன்!!

said...

வாங்க இளா.

சொந்த வீடு இல்லைன்னாலும், இப்ப ஃப்ரீ ஸ்டேண்டிங் ஊஞ்சல் வந்துருக்கே,
அதைப் போட்டுக்கலாம்.

தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் ( அண்ணா சாலை) ஷோ ரூமில் ஒரு ஊஞ்சல்
அட்டகாசமா இருக்கு. விலையும் ரொம்பக் கூடுதல். சரி போனாப் போகட்டுமுன்னு பார்த்தா,
அதை இங்கே கொண்டு வர்றதுக்கு வீட்டையே விக்கணுமோ என்னவோ?

said...

வாங்க கொத்ஸ்.

கிரகப்பிரவேசக் கேசரிக்குன்னா இன்னும் நாலைஞ்சுமாசம் காத்திருக்கணும்:-)

நவராத்திரிக்கேசரி வந்துக்கிட்டு இருக்கு:-)

said...

கேஸ் வைத்து வீடு கட்டுகிறதை முதல் தடவையாக கேள்விப்படுகிறேன் அதுவும் ஜன்னல் கதவுக்குள்.இங்கும் உண்டு ஆனால் எனக்கு தெரிந்தவரை கண்ணாடிக்கு இடையில் ஏதும் இருக்காது.
பல விபரங்கள் உணமையிலே தெரிந்துகொள்ள வேண்டியவை ஆனால் நாங்க வீடு
கட்டினால் இதெல்லாம் ஞாபகத்து வராமல் முட்டி மோதி தான் வருவோம்.

said...

கம்பி உள்ளே இருக்கறதாலே,ரெண்டு பக்கமும் கண்ணாடியை மட்டும் (கோபால்) துடைச்சாப் போதுமே:-) துடைப்பவர் கையிலும் கம்பி இடிச்சு வலிக்காதே! நல்ல எண்ணமா, இல்லையா? :-)))//

enna ThuLasi ithu. ippo poyi solRInga.
enga veettu jannal kambiyila en peyar ezhuthi vaiththu irukku:))

hmm. Naanum oru veedu vaanggaren unga oorila.
idam irukka??:)))

said...

வாங்க குமார்.

//எனக்கு தெரிந்தவரை கண்ணாடிக்கு இடையில் ஏதும் இருக்காது.//

எனக்கு இந்த கேஸே உண்மையா இல்லை கேஸ் விடுறாங்களான்னு தெரியலை:-)))

அதான் இப்போதைக்கு வேணாமுன்னு சொல்லியிருக்கோம்.

//நாங்க வீடு
கட்டினால் இதெல்லாம் ஞாபகத்து வராமல் முட்டி மோதி தான் வருவோம்.//

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் இல்லையா? பட்டுத் தெரிஞ்சுக்கிட்டதுதான்
என் கதை. இங்கே கஷ்டமில்லாமக் கம்பெனியை வச்சு வீடு கட்டி வாங்குனவுங்கதான் ஏராளம்.

said...

வாங்க வல்லி.

கம்பி, கண்ணாடின்னு எனக்கு ஆபத்தில்லாத விஷயங்கள் பலதும் கவனிச்சு வச்சுக்கிட்டேன்ப்பா.
குழாய்கூட இப்படித்தான், எதுவுமே திருகு டைப் கிடையாது. லீவரை மேலே கீழே இறக்கும் டைப்தான்.
கைவலி இருக்குல்லே? அதுவும் ஆர்த்தரைட்டீஸ் வந்த கை(-:

இப்பெல்லாம் நோகாம நோம்பு கும்பிடுவது கை வந்த கலை:-))))

வர்றீங்களா? வாங்கப்பா. இடத்துக்கு என்ன பஞ்சம்? முழுநாட்டுக்குமே ஜனம் 41 லட்சம்தான்:-))))

said...

நீங்க நீட்டமா எழுதறீங்கம்மே... ஆடுமாடு திருட்டுத்தனமா வயல்ல போய் விழுந்துடக்கூடாதேன்னு அங்க ஒரு கண்ணு இங்க ஒரு கண்ணுன்னு படிசக்க வேண்டியிருக்கு. இதனால ஒரேடியா படிச்சு முடிக்க முடியலை. ரெண்டு நாள் ஆகுது. அப்புறம் ஆர்டர் எடுத்தவங்க வந்தாங்களா இல்லையா?
-ஆடுமாடு
http://aadumaadu.blogspot.com

said...

அட்டகாசமான ஐடியாதுளசி ரெட்டைகன்ணாடி நடுவில் கம்பி ...ம்...
தூக்கற மாடல் குழாய் ...
முன்யோசனை முனியம்மா வாஇருக்கீங்க...

said...

வாங்க ஆடுமாடு.

இங்கென்னங்க ஒரு பக்கக் கதையா எழுதறேன்?
எல்லாம் பெரிய ப்ராஜெக்ட்டுங்க. அதான் மூணு பக்கம் வருது:-))))

சரி. போட்டும். உங்களுக்காக(வே) அடுத்தபதிவு அரைப் பக்கத்துக்கு வருது:-)

said...

வாங்க முத்துலெட்சுமி.

//முன்யோசனை முனியம்மா ...//

இது நல்லா இருக்கே:-)))))

எல்லாம் பட்டுத் தெரிஞ்சுக்கிட்டது. வீடு நிறைய அங்கங்கே இருக்கு.
அந்தக் கட்டங்களில் வரும்போது எடுத்து விடறேன்:-)))