Sunday, August 26, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 13

எங்கெங்கே லைட், ப்ளக், ஹீட்டிங் எப்படி, 'அவன்' அடுப்புக்கு மின் இணப்பு அப்படின்னு வரைஞ்சு வச்சிருந்ததை கோபாலுடன் சேர்ந்து விளக்கியாச்சு. இனி துடைப்பம்தான் சொல்லணும் அதுக்கு என்ன செலவாகும்னு! எனக்கு வீடுன்னா நல்ல வெளிச்சமா இருக்கணும். ஃபோட்டோ எடுத்தா, அது பளிச்சுன்னு இருக்கணும். அதுதான் நான் வெளிச்சத்தை அளக்கற ஸ்கேலு. இருட்டு இருட்டா 'மணி ரத்னம்' படம் போல இருக்கற லைட்டிங் எஃபெக்ட் எனக்குப் பிடிக்காது. பாக்கலாம், எப்படி இருக்கப்போதுன்னு.


அப்புறம் ஃபார்மல் லவுஞ் & டைனிங் ரெண்டுலேயும் ஜன்னல் கண்ணாடியை இன்னும் கொஞ்சம் டார்க்காப் போடலாம்னு தோணுச்சு. ஏன்னா பக்கத்து வீடு, ரொம்பப் பக்கமா இருக்கற மாதிரியும், அங்கேயிருந்து கை நீட்டுனா நம்மத் தொட்டுடலாம் மாதிரியும் இருக்கு! வேலியில் இருந்து மூணு மீட்டர் இடைவெளி இருக்கு. ஆனா இப்ப நாம இருக்கற 311லே பக்கத்து வீடுன்னு ஒண்ணு இருந்தாலும், அவுங்களுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை. யாரோ ரெண்டு மாசம், மூணு மாசமுன்னு வாடகைக்கு இருக்குறாங்க.. ....இப்பப் புது வீட்டுலே பக்கத்துவீடு, நிஜமாவே 'பக்க்க்கத்த்து' வீடா இருக்கு!


பில்டிங் பேப்பர் போட்டு முடிச்சாச்சு! சாஃபிட் வீட்டைச் சுத்தி அடிச்சாச்சு! கராஜ்லே கதவு வர்ற இடத்துலே ஃப்ரேம் போட்டிருக்கு.வீடு முழுசும் நல்லா துடைப்பத்தாலெ பெருக்கி வச்ச மாதிரி சுத்தமா இருந்துச்சு!
நேத்து, நம்ம 'துடைப்பம்' வந்து பாத்துட்டுப் போனதால வந்த எஃபெக்டோ?


ஊஞ்சல் இடத்துலெ இன்னொரு மரச்சட்டம் போடறதுக்கு ஞாபகப் படுத்தணும் 100வது முறையா!

ஓடு வேலை இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு!


மத்தியானம் 'சென்ட்ரல் வாக்குவம் க்ளீனர்' போடறத்துக்கு ஃபைனலைஸ் செஞ்சாச்சு. $2300 ஆகுது! அடுக்களையிலே வர்ற குப்பையை அப்படியே உறிஞ்சற vac pan க்கும் சேர்த்துதான் இது. வாக்குவம் க்ளீனரை இழுத்துக்கிட்டுப் போக வேணாம். அந்த ஹோஸ் மட்டும் கொண்டுபோய்
அங்கங்கே சுவரில் இருக்கும் 'இன்லெட்'லே பொருத்திக்கலாம்.நாளைக்கு கோபால் லீவ் எடுத்திருக்காராம். நாளக்குப் போய் இன்னும் 'கராஜ் டோர்' பாக்கணும்! வீடு கட்டும் வைபவத்துக்கு அப்பப்ப ஒண்ணு ரெண்டுநாள் லீவு எடுத்துக்கிட்டா என்ன தப்பு? சனி ஞாயிறுன்னா எல்லா நிறுவனங்களும் திறக்கறதில்லையே.காலேல 9 மணிக்கெல்லாம் 'கராஜ் டோர்' இடத்துக்குக் கிளம்புனோம். போற வழிலே கார்பெட், வைனல் விக்கற கடைக்குப் போனோம். வைனல் டைல்ஸ் புது மாதிரியா அட்டகாசமா இருக்கு. விலை தோராயமா 150 டாலராம் ஒரு சதுர மீட்டருக்கு! 'மாவுக்கேத்த பணியாரம்!' அங்கேயிருந்து, அந்த பெரியவர் 'பில் ( phil)' சொன்ன இடத்துக்குப் போனோம். அவுங்கதான் இதை இங்கே இறக்குமதி செய்யறவங்களாம். இங்கிலாந்துலே இருந்து வரணுமாம். அதைப் போடறதுக்குத் தனிக்கூலி!


அப்புறமா 'கராஜ் டோர்' இடத்துக்குப் போனோம். அங்கெ ஒரு விதமா டிஸைனைத் தேர்ந்தெடுத்துட்டு, பேரமெல்லாம் பேசி, புதுசா வந்திருக்கற 'ஓப்பனர் பேரு கோப்ரா' நல்லா இருக்குல்லே, (கோபாலுக்கு பாம்புன்னாவே பயம்) அதையும் சேர்த்துத் தரேன்னதும் அக்ரிமெண்ட்லே கையெழுத்து போட்டுட்டு திரும்புனோம். அவங்க வந்து அளவெல்லாம் எடுத்துப்பாங்க.ஹார்வி நோர்மன் அப்படின்னு இங்கே ஒரு பெரிய கடை இருக்கு. பெரும்பாலான கடைகளில்' எங்களிடம் வந்து வீட்டுச் சாமான்களை வாங்கிக் கொள்ளுங்கள். 2006 வருடம் பணம் கட்டினால் போதும்' என்றெல்லாம் விளம்பரம் செய்து, நம்மை இழுக்கப் பார்க்கிறாங்க. அதுபோல விளம்பரம் செய்யும் கடைதான் இது. ( இப்ப 17 மாசத்துக்கு வட்டியில்லாம பொருட்கள் தர்றோம்,வா வான்னு விளம்பரம் செஞ்சுருக்காங்க) அங்கெ ஒரு எல்.ஜி. வாஷிங் மெஷின் $700 இருக்கிறது.அதைவிடக் கொஞ்சம் பெரிசு $1100 ! ஒரு கிலோ துணி கூடுதலாக துவைக்குமாம்! அதில் ஏதாவது ஒன்று வாங்கிக்கணும். வீடு கட்டுறது ஒரு பக்கமுன்னா, அங்கே போட வேண்டிய சாமான்களுக்கு அலையறது இன்னொரு பக்கம்.

மத்தியானம் நம் 'கிச்சன் கிங்' தயாரித்து வைத்திருந்த சமையலறை கப்போர்டுகளை, அவர் வீட்டுக்குப்போய் பார்வையிட்டோம். ச்சும்மா சொல்லக்கூடாது! ரொம்ப நன்றாக மிகவும் உயர்தரத்தில் சூப்பரா இருக்கு. 'பாண்ட்ரி' பலகைகள் பெருசா இருக்கு. ரயிலில் தூங்கறமாதிரி பெர்த்லே ஏறி படுத்துக்கலாம். அந்தக் காலத்துலே முன்பதிவு இல்லாத ரயில் பயணத்துலே, சாமான்கள் மட்டும் வைக்கும் வலைபோட்டச் சின்னத் தட்டுலே ஆளுங்க வளைஞ்சு, உடம்பை குறுக்கிப் படுத்துக்கிட்டு வருவாங்க. அந்த இடத்தைப் பிடிக்கவே ஒரு அடிதடியாகும்:-) கிச்சன் மேசையா வரப்போகும் பகுதி, மரத்தில் செஞ்சுருக்கு. கை வச்சா மழ மழன்னு வழுக்கிக்கிட்டு போகுது. ரொம்ப நல்லா செஞ்சிருக்கார் 'ராசா'
ஏற்கெனவே ரெடிமேடா தயாரிச்சு இருக்கும் அடுக்களைன்னா மலிவாவே கிடைக்கும். எல்லாத்துக்கும் ஒரு ஸ்டேண்டர்டு சைஸுலே செஞ்சுருக்கும். நானோ உயரம் கம்மி. வீட்டுக்குள்ளே செருப்பு போட்டுக்கும் பழக்கமும் இல்லை. உயரம் என்னதான் 10, 15 செண்டி மீட்டர் கூடுனாலும், கை வலி, தோள்பட்டை வலி வந்துருது. அதுக்காகவே என்னுயரத்துக்குத் தகுந்தமாதிரி ஸ்பெஷலா செய்யறோம். (அதானே.........பதிவு எழுதும் கைக்கு வலி வரலாமா? )இன்னைக்குப் பொழுது விடிஞ்சவுடனெ செஞ்ச காரியம் என்ன தெரியுமா? புது வீட்டிலே போய் கண்ணு திறந்தது! என்ன ஆச்சுன்னா, நேத்து 'ப்ளம்பர்' வரேன்னு சொன்னாருன்னு கிரேக் சொன்னதால அரக்கப் பரக்கன்னு ஓடி அவுங்க சொன்னநேரத்துக்குப் போய் உக்காந்துகிட்டு இருந்தோம்! அதுக்குள்ளே ஃபர்னிச்சர் எல்லாம் போட்டாச்சான்னு கேட்டு வயித்தெரிச்சலைக் கிளப்பாதீங்க! காருக்குள்ளெதான் உக்காந்து இருந்தோம். சொன்ன நேரம் தாண்டிப் போச்சு. யாரையுமெ காணோம். பிறகு, ஃபோன் செஞ்சா, அவரு சொல்றாரு அடுத்த வியாழக்கிழமைன்னு தானே சொன்னேன். 'காது காதுன்னா லேது லேது'ன்னு இல்லாம எல்லாம் சரியாக் கேட்டுக்கணும்னு நினைச்சுகிட்டு, இன்னைக்கு வரமுடியுமா, கோபாலு நாளைக்குச் சீனா போறாரேன்னு சொன்னதும், அவரு' ஐயோ இன்னைக்கு நான் 'மெளண்டன் பைக்'லே சவாரி போறேனே' அப்படின்னார். அப்ப போறதுக்கு முன்னாலே முடியுமான்னு வேண்டிக்கேட்டதுக்கு, சரி காலையிலே 7.30 மணிக்குன்னு முடிவாச்சு.அந்த ஆளு பேரு 'மேட் Matt' நல்ல ஆளா(?) இருந்தாரு. நம்ம குளியலறையிலே தரையை கழுவிவிடற தண்ணி போறதுக்கு வழி வேணும்னு பிரத்தியேகமா சொல்லி அதை ட்ராயிங்குலேயும் போட்டிருக்கு. அதைக் கவனிக்காம இந்த க்ரேக் சிமெண்ட் போட்டாச்சு!வெள்ளைக்காரங்களுக்கு இந்த கழுவறது என்னன்னு தெரியாது.'எல்லாமே தொடைச்சுப் போடறதுதான். 'க்ரேக் என்கிட்டே எங்கே சம்ப் வருதுன்னு கேட்டதுக்கு நடுவிலேன்னு சொன்னேன். அப்படியும் இந்த மாதிரி செஞ்சிட்டாரு.


இந்த மேட், அதை சரிபண்ணிக் கழுவி விடற மாதிரி பைப் வச்சுடறென்னு சொல்லி வயித்துலே பாலை வார்த்தார்.ஆனாலும் 'கெஸ்ட் டாய்லெட்'டைத் தொடைச்சுதான் ஆகணும். அங்கே ஒண்ணும் செய்ய முடியாது!


இன்னைக்கு கோபால் 'ச்சீனா'வுக்குப் போறார். வர 10 நாளாகும். அதனாலே காலேல 9 மணிக்கு( கோயிலுக்குப் போறதுக்கு முன்னாலே) போனோம். நான் நினைச்சுகிட்டு இருக்கேன், நாளின் வேற வேற நேரத்துலே போய்ப் பார்த்தாதான் எவ்வளவு வெய்யல், எங்கெங்கே வருதுன்னு தெரியும்.
சாமி இடத்துக்கு நல்ல வெய்யில் இருக்கு. எங்க படுக்கை அறையும் பரவாயில்லே. ஆனா எங்க பாத்ரூமுக்கு அட்டகாசமா வெய்யில் வருது!
டைனிங், கிச்சன் பரவாயில்லே. நல்ல வெயில். லிவிங் ஏரியா ரொம்பவும் சுமார்தான்!

தொடரும்....................

13 comments:

said...

இன்றும,் வீட்டுக்கு மத்தியில் "முற்றத்தில்" வரும் வெளிச்சம் தான் எனக்கு பிடித்த வீடு.
வெளிச்சம் நன்றாக வந்தாலே வியாதி அவ்வளவாக வராது என்று என் தாத்தா சொன்ன ஞாபகம்.
ஏங்க, கிச்சன் உயரம் உங்களுக்கு மட்டும் மாதிரி 15~20 சி.மீ குறைக்கிறீங்க உங்க மறுபாதி வந்தா அவருக்கு இடுப்பு வலி வராதா? :-))
Centralised Vacuum Cleaner- இப்போது தான் கேள்விப்படுகிறேன்.அப்படி என்றால் சுவர் உள்ளேயே ஏதாவது குழாய் போகுமா?

said...

கிச்சன் எதுக்கு உங்க உயரத்துக்கு? புரியலையே. எதுக்கும் உங்க அவர் கிட்ட போன் பண்ணிப் பேசிக்கிறேன்.

said...

ஏங்க எல்லாரும் இப்படி க்கேக்கராங்க...
அவரு சமைப்பதா இருந்தா லீவ் போட்டுட்டு பாத்து பாத்து செய்யமாட்டாரா ...நீங்கள் பாத்து பாத்து செய்துட்டு படமெல்லாம் எடுத்து என்னவோ வீட்டை நாங்க கூட இருந்து கட்டினா மாதிரி ஃபீல் பண்ணவச்சிருக்கீங்க..

said...

வாங்க குமார்.

வீட்டுக்கு மின்சார ஒயரிங் செய்யறமாதிரியே பெரிய 6 செ.மீ விட்டம் வரும் குழாய்களை
அங்கங்கே போட்டு எல்லாமே ஒரு பெரிய பேரல் மாதிரி வரும் கண்டெய்னரில் சேருது.
இன்லெட்லே ஹோஸை நுழைச்சதும் ஆட்டோமெடிக்கா 'சக்' பண்ணும். கிச்சன்லே வரும்
தரை தூசி தும்புகளைப் ப்ரஷ் செஞ்சு அந்த வாக்பேன் கிட்டே சேர்த்துட்டு காலாலே அங்கிருக்கும்
பட்டியைத் தள்ளுனா அதையெல்லாம் அப்படியே 'சக்' பண்ணிக்கும். ஒரு ஆறு மாசத்துக்கு ஒரு முறை,
பேரலின் அடிப்பாகம் உருவிக் குப்பையை வெளியே கொட்டிறலாம். தனியா குப்பை சேகரிக்கும் பையை
அந்த பேரல் ட்ரம்மின் உள்ளெ லைன் பண்ணினால் வேலை மிச்சம். நல்ல பவர்ஃபுல் மோட்டார் வச்சுருக்கு.

ஆ...........மாம். மறுபாதி அடுக்களைக்குள்ளே வந்துட்டாலும்:-)))))

ச்சும்மா.............
கொஞ்சம் உயரம் கம்மியா இருந்தா வேலை செய்யற எல்லாருக்குமே சுலபமாத்தான் இருக்கும். முக்கியமாத்
தோள்பட்டை வலி வராது.

said...

வாங்க கொத்ஸ்.

//கிச்சன் எதுக்கு உங்க உயரத்துக்கு?//

பின்னே ஆக்கி எடுக்கறது யாரு? அவர்தான் பாதிநாள் ச்சீனாவுலேயே இருக்காரே:-))))
வேணுமுன்னா ச்சீனர்கள் உயரத்துக்குச் செஞ்சோமுன்னு சொல்லிக்கலாம்:-)))

ஆனா..இப்ப புதுத்தலைமுறை ச்சீனர்கள் நல்லா உயரமாவே வளர்றாங்க.

said...

//2006 வருடம் பணம் கட்டினால் போதும்' என்றெல்லாம் விளம்பரம் செய்து, நம்மை இழுக்கப் பார்க்கிறாங்க. அதுபோல விளம்பரம் செய்யும் கடைதான் இது//

2006னு சொல்றிங்க அப்போ ரொம்ப நாள் முன்னரே வீட்டைக்கட்டி முடிச்சாச்சா,? நான் இப்போ தான் வேலை நடக்குது லைவ் ரிலே பண்றிங்கனு இருக்கேன்!

said...

வாங்க முத்துலெட்சுமி.

நம்ம சாப்பாட்டு முறைக்கு உயரம் குறைவான அடுப்புதானே நல்லது? அதுவும் சப்பாத்தி எல்லாம்
திரட்டுறப்ப கை நோகாதா?

சமீபத்துலே ஆம்பிளைகள் கொஞ்சம் அடுப்படியிலே உதவறாங்கதான். ஆனா நாங்கதான்போன தலைமுறையாச்சே.
அவரே சமையல் செய்யறேன்னு சொன்னாலும், அதை யார் சாப்புடுவா? :-)

said...

வாங்க வவ்வால்.

லைவ் ரிலே எங்கே? அப்பத்தான் பயித்தியம் பிடிச்சுப் பாயைச் சுரண்டற நிலையில் இருந்தமே:-)))
வீடு கட்ட ஆரம்பிச்சது 2004 ஜூலை 1. அப்ப நடந்ததைத்தான் டயரி மாதிரி எழுதி வச்சிருந்தேன்.
நம்ம டிபிஆர்ஜோ அவரோட வீடு கட்டுனதைத் திரும்பிப் பார்த்துக்கிட்டு இருந்தாரில்லையா? ஒரே சமயம்
ரெண்டு (நாலு) வீடுகட்டுறது வேணாமுன்னு இருந்துட்டு, இப்ப அதையே 'நடை'யை மாத்திப்
போட்டுக்கிட்டு இருக்கேன்:-)

said...

ஆஹா இப்படி ஏமாத்திட்டிங்களே, சுவற்றுக்கு செங்கல் வைப்பாங்களா மாட்டாங்களானு கேட்டதற்கு இப்போ தான் செங்கல் வருது , இனிமே தான் தெரியும்னு சொன்னிங்க,

இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல!

said...

வவ்வால்,

//இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல! //

இல்லையே:-)))))))))))))))))

எப்படி? சம்பவத்தை எழுதறப்ப நிகழ்ச்சிகளை வரிசையாத்தானே நடந்தது நடந்தபடி எழுதணும்.
பின்னாலெ வரப்போகும் விஷயத்தை முன்னாலே ( என்னதான் நடந்துச்சுன்னு எனக்குத் தெரிஞ்சாலும்)
எப்படிங்க சொல்றது?

ஆள்காட்டி விரலாலே (தெனாலியில் வர்றதுமாதிரி) காத்துலே வட்டவட்டமா சுழிச்சுக்கிட்டே படிங்க.
ஃப்ளாஷ் பேக்.............. மூன்று வருடங்களுக்கு முன்பு:-)))))))))))))

said...

//பின்னாலெ வரப்போகும் விஷயத்தை முன்னாலே ( என்னதான் நடந்துச்சுன்னு எனக்குத் தெரிஞ்சாலும்)
எப்படிங்க சொல்றது? //

ஆனாலும் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?
புல்லரிக்க வச்சுட்டிங்க :-))

said...

இப்பல்லாம் இங்கேயும் Centralised Vacuum Cleaner தான் எல்லஎடத்துக்கும் இழுத்துகிட்டு போகவேண்டாம்..

said...

வாங்க அரவிந்தன்.

//....எல்லஎடத்துக்கும் இழுத்துகிட்டு போகவேண்டாம்.. //

அப்புறம்தான் தெரிஞ்சது அந்த ஹோஸ் பயங்கர கனமா இருக்குன்னு:-))))