Wednesday, August 01, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 3

போன பதிவுக்குப் பின்னூட்டப் பெட்டி வரலைன்னு நண்பர்கள் சொன்னாங்க. என்ன, எங்கே பிழையென்று புரியலையேங்க.



சரி, விஷயத்துக்கு வர்றேன். இப்ப எங்கிருக்கோம்? ஆங்! 'பில்டர்'


பேப்பர்லே பாத்து, நாலைஞ்சு ஆளுங்களைக் கூப்பிட்டோம். தனித் தனியாத்தான்! மூணு ஆளுங்க வந்தாங்க.



ஒரு ஆளு, இதுக்கு முதல்லே 'க்வீன்ஸ்டவுன்'ங்கற ஊர்லே சில வீடுகள் கட்டிய அனுபவத்தோட இந்த ஊருக்கு வந்திருக்கார்.அவரு கல்யாணம் பண்ணப்போற பொண்ணுடைய ஊரு இதுதான்னதாலெ இங்கே வந்துட்டேன்னு சொன்னார். ஆளைப் பார்த்தா நல்லவர் போல இருக்குதுன்னு என் உள் மனசு சொன்னது.'மாஸ்டர் பில்டர்' சான்றிதழ் இருக்கான்னு கேட்டப்ப இன்னும் அதுக்குரிய தகுதியை அடையலேன்னு சொன்னார். இன்னும் சில வீடுகள் முடிக்கணும்னு சொன்னார்.



சில குறிப்பிட்ட எண்ணிக்கை வீடுகளைக் கட்டி முடித்துவிட்டு, இதற்காக விண்ணப்பித்தால், அவர்கள் வேலையின் தராதரத்தைப் பரிசோதித்து 'மாஸ்டர் பில்டர் அசோஸியேஷன்' இந்தத் தகுதியை வழங்கும். இது இவர்களது திறமைக்குக் கொடுக்கப்படும் சான்றிதழ். இதனால், நமக்கு சில அனுகூலங்களும் உண்டு. கட்டிடம் சரியாகக் கட்டப்படவில்லை என்றால்புகார் செய்தால், நடவடிக்கை எடுப்பார்கள். நமக்கு நஷ்டஈடும் கொடுப்பார்களாம். நாம நஷ்டஈடு வாங்கவா வீடு கட்டறோம்?



அடுத்த ஆளு, இங்கேயே இருக்குறாரு. 'மாஸ்டர் பில்டர்' சான்றிதழ் வாங்கியிருக்கார். ஆனா ஆளோட பேச்சும், நாம சொல்றதைப்புரிஞ்சு நடக்கறதும் சரியில்லைன்னு ( அதுதான், உள்மனசு சொல்லுமே!) தோணுச்சு. கொஞ்சம் கெத்தா உக்காந்துருந்தாரோ? தொழில் தெரிஞ்சவங்களுக்கு இருக்கும் கர்வமோ என்னவோ?


மற்ற ஆளு, ஒரு சதுர மீட்டருக்கு 50 டாலர்னு சொன்னார். நம்ம வீடு 261 சதுர மீட்டர் வருது. இவ்வளவு கொஞ்சமா சொல்றாரேன்னு சந்தேகமா இருந்துச்சு.



நமக்குப் பாருங்க, 'நிறையக்கேட்டால், ஏமாத்துறான், கொஞ்சமாக் கேட்டா வேலை தெரியாதவன்'. இப்படியெல்லாம் நிறைய சந்தேகங்கள் வந்துருது!



யோசிச்சு(!)பாத்தப்ப, முதல்லே வந்த ஆளுக்குத்தான் என் மனசு(!) நிறைய 'மார்க்'( தப்பா நினைக்காதீங்க, இது வேற மாதிரி மார்க்)போட்டிருந்துச்சு. அவரையே ஏற்பாடு செஞ்சிறலாம்னு முடிவு செஞ்சோம். அவரைக் கூப்பிட்டு, விஷயத்தைச் சொன்னோம். அவருகிட்டே எந்த வேலைக்கு எவ்வளவு செலவுன்னு விளக்கமா 'லிஸ்ட்'எழுதச் சொன்னோம். எழுதிக் கொண்டுவந்தாரு.



'பில்டரு'டைய வேலைத் திறமையைப் பாத்துட்டு, அதாவது அவராலெ கட்டப்பட்ட வீடுங்களைப் பார்த்துட்டு முடிவு செய்யணும்னு எல்லா வீடு கட்டற புஸ்தகங்களிலேயும் போட்டிருக்கு.இங்கேதான், 'டூ இட் யுவர் ஸெல்·ப்'னு எல்லா வித வேலைக்கும் புஸ்தகங்கள் எக்கச்சக்கமாக் கிடக்குதே. அதப் பாத்துதான் விஷயங்களைத் தெரிஞ்சுகிறது.வாராவாரம் உள்ளூர் லைப்ரெரிக்குப் போய் ரெண்டு பேர் கார்டுலேயும் 'வீடு கட்டும் விதம்' புத்தகங்களை ஆளுக்கு இருபதுன்னு அள்ளிக்கிட்டு வருவோம். நம்ம 'பில்டர்' இந்த ஊருலே ஒரு பெரிய வீடு கட்டியிருக்கார். அது இந்த நாட்டுலே 'ரக்பி' விளையாடுறவருடைய அண்ணன் வீடாம்! அங்கே கூட்டிட்டுப் போய் காட்டறேன்னார். ஒரு நாள் போனோம். வீடா அது? பிரமாண்டமான மாளிகை. இதுக்கு முன்னாலே நம்ம வீடு ச்சும்மா ஒரு அவுட் ஹவுஸ் தான். இதையெல்லாம் பார்த்து மனம் தளர்ந்தால் எப்படி? நம்மூர் க்ரிக்கெட் ஆளுங்க மாதிரி இங்கே ரக்பி ஆளுங்க சம்பாத்தியம். 'ரக்பி அண்ணன்'னா ஐவேஜ்க்கு என்ன கொறைச்சல்? பில்டர் முந்தி இருந்த ஊர்லே'க்வீன்ஸ்டவுன்' சில வீடுகள் கட்டுனார்னு சொன்னார்லே, அவுங்க ·போன் நம்பரும் கொடுத்தார். நாங்க ·போன் போட்டுக் கேட்டோம்.அவுங்க சொன்னது," நல்லா கட்டிக் கொடுத்தார். நல்ல ஆளு, நேர்மையானவர்"



நாம தேர்ந்தெடுத்த ஆளு நல்லவர்னு தெரிஞ்சதுலே ஒரு திருப்தி வந்துச்சு. இப்பவும் இங்க சில வீடுங்களை ஆரம்பிச்சிருக்கறதாலே ஜூலை மாசம் 26க்குத்தான் நம்ம வீட்டை ஆரம்பிக்க முடியும்னு சொன்னாரு.


மொத்தம் அவருக்குத் தர வேண்டியது எவ்வளவுன்னு பேசி முடிச்சோம்.. இது அவருக்குண்டான கூலி/சம்பளம் மட்டும். மத்த சாமான்கள் எல்லாம் நாமே தெரிவு செஞ்சு, அது அதுக்கு தனியா நாமே வாங்கிக் கொடுக்கறதுன்னு ஏற்பாடு. கலர் தெரிவுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஜன்னல் ஃப்ரேம்களுக்கு என்ன கலர்னு முதல்லே முடிவு செஞ்சுறணும்.அப்புறம் கூரையும் அதே கலர்லே வந்துரும். சுவருக்கு அடிக்கும் கலர்களை வீட்டோட உள்புறம், வெளிப்புறத்துக்கு இந்தக் கூரையோடு மேட்ச் ஆகறமாதிரி செஞ்சுக்கணும். கூரைக்கும் என்னமாதிரி டிஸைன்லெ ஓடு வேணுமுன்னும் பார்க்கணும். ஓடுகள் இணையும் இடம் எந்த டிஸைன் வரணுமுன்னு முடிவு செய்யணும். இதுக்கெல்லாம் ஒரே வழி,புது வீடுகள் வந்துக்கிட்டு இருக்கும் ஏரியாவில் போய் அங்கே இருக்கும் வீடுகளுக்கு எப்படி போட்டுருக்காங்க, எது நமக்குப் பிடிச்சிருக்குன்னு பார்த்து மிக்ஸ் & மேட்ச் பண்ணிக்கிறதுதான். கிடைக்கும் கொஞ்ச ஓய்வு நேரத்தில் 'வீடு பார்க்க'ஓடறதும் முக்கியம்.



ஒரு வீடுகட்டற செலவு என்னன்றதுக்கு 'ஸ்கை இஸ் த லிமிட்'ன்னு சொல்லலாம். எந்த மாதிரி ஜன்னல், கதவு, கதவுக்குப் போடற கைப்பிடி, எந்த மாதிரி வேலைப்பாடு,அடுக்களையிலே எந்த மாதிரி அடுப்பு, மத்த வசதின்னு ஆயிரம் இருக்குல்ல!நம்மகிட்ட இருக்கற 'ஐவேஜ்'ஜைப் பொருத்துத்தானே செய்யணும்? நடுத்தர 'பட்ஜெட்'ன்னு பார்த்தாலுமே, ஒரு ச.மீ.க்கு 1000 டாலர்னு ஆகுமாம். சரி அப்படியே வச்சாலும், நம்ம வீட்டுக்கு 261,000 ஆகும். இதுக்குள்ளேயே முடிச்சா அதிர்ஷ்டம்தான்! ஆனா............ நாம் நினைக்கற மாதிரி இருக்காது(-: எல்லாம் மாவுக்கேத்த பணியாரம்.



இருந்திருந்து ஆசையாக் கட்டற வீட்டுக்கு, நல்ல தரமான சாமான்களெப் போடவேண்டாமா? நூறு டாலர் விலையிலே ஒரு குழாய் ( பைப்)இருக்குன்னு வையுங்க. அதைவிட இன்னும் நல்லா இருக்கறது 150. ரொம்பவே நல்லா இருக்கறது 400 அப்படின்னு ஏறிகிட்டே போகுது.இப்ப நாம முடிவு செய்யவேண்டியது, 400 இல்லாட்டியும், குறைஞ்சது ஒரு 200 லே இருக்கறதையாவது போடணும்லே.



இப்படி ஒவ்வொரு பொருளாப் பாத்து பாத்து 'லிஸ்ட்' போட்டதுலே, ஐய்யய்யயோ..........என்னா செய்யறது?



மறுபடி, கவனமாப் பாத்து, எதை எதைக் குறைக்கணும்னு இன்னொரு'லிஸ்ட்' போடறதுதான்!


குரங்கு அப்பம் புட்ட கதைதாங்க! என்னதான் குறைச்சாலுமேக் கையைக் கடிக்குது.(குரைக்கும் நாய் கடிக்காதுன்னு யாரோ ச்சும்மாச் சொல்லி வச்சுருக்காங்க!) இது வீட்டுக்கு மட்டும்.இது இல்லாம இடத்துக்குத் தனிக்காசு.நல்லவேளையா முன்னாலேயே இந்த இடத்தை வாங்கிப் போட்டுருந்ததாலே தப்பிச்சோம். தற்சமயம் வீடு, நிலம் எல்லாம் தாறுமாறா விலை ஏறிக்கிடக்குது!



யானை அசைஞ்சு தின்னும், வீடு அசையாமத் தின்னுமுன்னு ச்சும்மாவா சொன்னாங்க !!!!


இந்தியக்காசுக்குக் கணக்குப் போட்டா **** ரூபாய்க்கு மேலே போயிடுது. இவர் சொல்றாரு," **** ரூபா வீட்டுக்கு சொந்தக்காரிஆகப்போறே" (ஆமாமாம்......டாலர்லே கணக்குன்னா நம்பர்ஸ் ச்சின்னதா இருந்துருமே(-:......... பெருசாச் சொல்லணுமுன்னா 'டகால்'னு ரூபாய்க்கு மாத்திக்கறது ஒரு டெக்னிக்)



நினைச்சாவே பிரமிப்பா இருக்கு, எனக்கு வந்த 'வாழ்வை'ப் பாத்தியான்னு! எங்களுக்குக் கல்யாணம் ஆன புதுசுலே, நாங்க 'குடி' போன வீடு(???) நாலடிக்கு எட்டடி இருந்த ஒரு வெராண்டாவை ஒரு கதவு மட்டும் வச்சு ரூமா மாத்தியதுதான்! அங்கிருந்து ஆரம்பிச்ச வாழ்க்கை.கொஞ்சம் கொஞ்சமா ( ரொம்பக் கொஞ்சமா,ஆமையாட்டம்) முன்னேறி இப்ப இந்த க்ஷணம் நாலு படுக்கை அறை இருக்கற வசதியான வீட்டுலெதான் இருக்கோம். ஆனா என்ன.......... வீடு பழசு. கட்டி அம்பது வருசத்துக்குமேலெ ஆயிருக்கும். பழைய வீடு= குளிர் !



இப்ப முப்பது வருஷம் கழிச்சு, பெருமாள் அனுக்ரஹம் செஞ்சிருக்கார்! இதுவும் நாலு படுக்கை அறைதான். ஆனா, புத்தம் புதுசு! குளிரா இருக்காது! ( அப்படின்னு ஒரு நினைப்பு)



ஜூலை மாசம் வீடு கட்ட ஆரம்பிக்கணும்னா, அங்கே இருக்கற பழைய வீட்டை அப்புறப் படுத்தணுமே! குடித்தனக்காருங்க இருக்காங்களே!குறைஞ்சது ஆறு வாரத்துக்கு முன்னாலே அவுங்களுக்குச் சொல்லணும்னு சட்டம் இருக்குது.அதனாலே ஜூன் மாசம் கடைசியிலே குடி இருக்கறவங்களைக் 'காலி' செய்யறதுக்கு, மே மாசம் நடுவிலே நோட்டீஸ் கொடுத்தோம்.



இங்கெல்லாம், பழைய வீடுங்களை முக்கியமா மரத்தாலேயே முழுக்க முழுக்கக் கட்டப்பட்ட வீடுங்களை அப்படியே 'அலேக்கா' தூக்கிடுவாங்க! பெரிய்ய்ய்ய்ய 'ட்ரக்' வண்டியிலே வீடுங்க அப்படியே போகறதைப் பார்த்துருக்கேன். இதை அப்படியே ஒரு இடத்துலே வச்சு விற்பாங்க! சிலபேரு அப்படியே வாங்கி அவுங்க இடத்துலே வச்சிட்டாங்கன்ன வீடு பழையபடி வசிக்க ஏற்றதா ஆயிரும்.நம்ம வீட்டுக்குக் காசும் தருவாங்க. ஆனா அவுங்க விக்கறப்ப நல்ல விலைக்கு விற்பாங்க. இதுவும் இங்க ஒரு வியாபாரம்தான்.



இதையும் 'தூக்கலாம்'னு சில 'ரிமூவல் கம்பெனி'களைக் கேட்டோம். அவுங்களும் வந்து பாத்துட்டுப் போனாங்க. அதுலே மத்தவுங்களைத் தவிர ஒருத்தருமட்டும் நமக்கு 7000 தாரேன்னு சொன்னார். அந்தக் காசை , இடத்தை சீராக்கறதுக்கு வச்சுக்கலாம்னு இருந்தோம்.அப்புறம் அவுங்க ' வீட்டு இன்ஸ்பெக்ஷன்' வந்தப்ப, 'அந்த வீட்டை தூக்க முடியாது. காங்க்ரீட் கல்லுக்குள்ளே சிமெண்ட் வச்சுக் கட்டியிருக்குது. இடிச்சுத்தான் அப்புறப் படுத்தணும்'னு சொல்லிட்டு, 'இப்ப நீங்கதான் இடிக்கறதுக்கும் காசு தரணும்'னு சொல்லிட்டாங்க! இடிபாடுகளையெல்லாம் அகற்றி சுத்தம் செஞ்சு மரங்களையெல்லாம் வேரோடு அப்புறப்படுத்தி, நிலத்தை சீராக்கி, சமப்படுத்திக் கொடுக்கறதுக்கும் சேர்த்து ( பேரம் பேசிதான்)10,500ன்னு முடிவாச்சு. செலவு இன்னும் கூடிப்போச்சேன்னு நான் வருத்தப்பட்டப்ப, கோபால்தான் சமாதானப்படுத்துனார்.



காங்க்ரீட், சிமெண்ட் சம்பந்தப்பட்ட கழிவுகளையெல்லாம் அதுக்குன்னே தனியா இருக்கும் இடத்துலே கொண்டுப்போய் போடணும். இந்த 'டம்பிங்' செய்யறதுக்கு காசு கூடுதல். மரம் மட்டைக் கழிவெல்லாம் நிலத்தை ஒண்ணும் செய்யாதுன்னு அதுக்குன்னு இருக்கற இடம் கொஞ்சம் மலிவு. நாம் கொடுக்கற காசுலே முக்காவாசி இதுக்கே போயிரும். காவாசிதான் அவுங்களுக்குக் கூலி.

தொடரும்.................

22 comments:

said...

//நமக்குப் பாருங்க, 'நிறையக்கேட்டால், ஏமாத்துறான், கொஞ்சமாக் கேட்டா வேலை தெரியாதவன்'. இப்படியெல்லாம் நிறைய சந்தேகங்கள் வந்துருது/
இப்படி ஒரு உண்மைய எவ்வளவு சுலுவா சொல்லிட்டீங்களே டீச்சர். எல்லாம் அனுபவம்தானே. கத்துக்கனும்.....
இடிக்க இம்புட்டு செலவா? அட போங்கப்பா...

said...

ஹ்ம்ம்ம்!!
இனிமையான அனுபவம் தான்!!

நாங்க வீடு கட்டின நாட்களை ஞாபகப்படுத்தறீங்க! :-)

said...

வாங்க நட்சத்திரமே.

அனுபவங்களின் சேர்க்கைதான் வாழ்க்கை. ஒவ்வொண்ணும் ஒரு விதம்.

said...

வாங்க CVR.


அதுவும் சில வருஷம் கழிச்சு நினைச்சுப் பார்த்தால் பிரமிப்பாவும், சிரிப்பாவும்
இருக்கும். ஒவ்வொண்ணுக்கும் எப்படி ஓடுனோமுன்னு பாருங்க.:-)))

Anonymous said...

//யோசிச்சு(!)பாத்தப்ப, முதல்லே வந்த ஆளுக்குத்தான் என் மனசு(!) நிறைய 'மார்க்'( தப்பா நினைக்காதீங்க, இது வேற மாதிரி மார்க்)போட்டிருந்துச்சு.//
தப்பில்ல டீச்சர். மனசு என்னிக்கும் இளமையா இருக்கணுமாக்கும்.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

//தப்பில்ல டீச்சர். மனசு என்னிக்கும் இளமையா இருக்கணுமாக்கும்//

அப்டீங்கறீங்க? அதுவுஞ்சரி:-)))))

said...

பின்னூட்டப்பெட்டி எனக்கு மட்டும் உள்ள பிர்ச்சனை என்று நினைத்தேன்,ஆனால் இன்று ok.
1 ச.மீ. டாலர் 50 டாலர் என்னவாயிற்று?அப்படியே கயட்டிவிட்டீங்க.மார்க் எல்லாம் போட்டு மீண்டும் டீச்சர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.:-))
ஓஹோ! மாஸ்டர் பில்டர் எல்லாம் இருக்கா?
உடைக்கிற விலையெல்லாம் கேட்டா அங்கு ஓடி வந்துவிடலா என்று இருக்கிறது.
அதென்ன? ஐவேஜ்?பாடம் சரியாக படிக்கவில்லையோ என்னவோ!

said...

வாங்க குமார்.

வீட்டுக்கு ஒதுக்கி வச்சுருந்த காசுதாங்க நம்ம ஐவேஜ். தினமும் ஏடிஎம் லெ பாலன்ஸ்
எவ்வளோன்னு பார்த்துட்டுப் போடற கணக்குதான். ஒவ்வொரு செக்கா அட்வான்ஸ்க்குக்
குடுக்கும்போது கிடுகிடுன்னு கீழே இறங்குதே நம்ம நிலமை:-)))

said...

வாங்க டெல்ஃபீன்.

உங்க பின்னூட்டம் பார்த்துட்டுத்தான் நாலு படத்தைச் 'சுட்டு'ப்போட்டுருக்கேன்.

இவை டெல்ஃபீன் ஸ்பெஷல்ஸ் :-))))))

said...

என்னங்க டெல்ஃபீன்.........

'நெட்டில் இலாதது யாவுள?'

யார் வீடானா என்ன, ஒரே தூக்கல்தான்:-)

said...

வீட்டைக் கட்டிப் பார் அப்படின்னு சொல்லுவாங்க. உங்க ஊரில் வீட்டை இடித்துப்பார் அப்படின்னு சொல்லணும் போல இருக்கே. ஆனாலும் இந்த வீடு கட்டறது சூப்பர் அனுபவம்தாங்க டீச்சர்.

said...

//அதுவும் சில வருஷம் கழிச்சு நினைச்சுப் பார்த்தால் பிரமிப்பாவும், சிரிப்பாவும் இருக்கும். ஒவ்வொண்ணுக்கும் எப்படி ஓடுனோமுன்னு பாருங்க.:-)))//

ஆமாங்க டீச்சர்..
இப்ப நினைச்சா ஒரே சிரிப்பா வருது... ஆனா அப்ப இருக்குற டென்சன்-ல ஏதோ நாம தான் உலகத்துலேயே மொத முறையா வீடு கட்டறா மாதிரி...அப்பப்பா...

நம்ப வேண்டியவங்கள நம்பாம, எல்லாத்துக்கும் தானே முன்ன முன்ன போயி நின்னு.....இது எல்லாத்துக்கு அப்புறம் அன்னைக்கு இரவு தூங்கப் போகும் போது....மனசுக்குள்ள ஒரு தனி ரீல் ரீப்ளே வாக ஓட்டி...ஒரே சிரிப்பு தான் போங்க! :-)

said...

//போன பதிவுக்குப் பின்னூட்டப் பெட்டி வரலைன்னு நண்பர்கள் சொன்னாங்க. என்ன, எங்கே பிழையென்று புரியலையேங்க.//

நாமெல்லாம் வந்து ஒழுங்கா அட்டெண்டன்ஸ் குடுத்தோமே. இப்ப போயி பார்க்கறேன்.

said...

டீச்சர் (ஹ்ம்ம்ம்... நானும் ஆரம்பிச்சுட்டேன்!),
அந்த ஊர்ல, பேஸ்மென்ட் வச்சு கட்ட(பொருத்த?) மாட்டாங்களா?

said...

//வீட்டை அலேக்கா தூக்கிடுவாங்க//

வீட்டை என்னா ரோட்டையே, விட்டா நாட்டையே அலேக்கிற
ஆளுங்க இருக்காங்க டீச்சர்........

said...

மார்க் போட்டா இளமையா. அப்படின்னா நான் ரொம்ப வயசு குறைஞ்சு போயாச்சு.
இதென்னப்பா இத்தனை செலவு இழுத்திருக்கு வீடு.

மகா பொறுமையப்பா உங்க ரெண்டு பேருக்கும்.
படங்கள் அத்தனையும் சூப்பர். வீட்டையே தூக்கிப்போற டிரக்கை இப்பத்தான் பார்க்கிறேன்.

said...

வாங்க கொத்ஸ்.

// உங்க ஊரில் வீட்டை இடித்துப்பார் அப்படின்னு சொல்லணும் போல இருக்கே//

ஆமாங்க. இதுலே ஏகப்பட்ட த்ரில் இருக்கு:-))))

said...

வாங்க KRS.

//....மனசுக்குள்ள ஒரு தனி ரீல் ரீப்ளே வாக ஓட்டி...ஒரே சிரிப்பு தான் போங்க! :-) //

இதுலே நம்ம பண்ண முட்டாள்தனத்தை(யும்) நினைச்சு சிரிச்சுக்க வேண்டியதுதான்:-))))

said...

வாங்க தஞ்சாவூரான்.

//டீச்சர் (ஹ்ம்ம்ம்... நானும் ஆரம்பிச்சுட்டேன்!)//

ஊரோடு ஒத்து வாழ்வது இப்படித்தாங்க :-))))


//அந்த ஊர்ல, பேஸ்மென்ட் வச்சு கட்ட(பொருத்த?) மாட்டாங்களா? //

இஷடம்போல இடம் இருக்கு. என்னாத்துக்குக்குழி தோண்டணுமுன்னு இருக்காங்க.

ஆனால், சிலசமயம் நகர் மத்தியில் (CBD) பேஸ்மெண்ட்லே,
கார் பார்க்கிங் வச்சுக்கறாங்க.

said...

வாங்க சிஜி.

ஊரென்ன, நாடென்ன? நம்ம 'அட்லாஸ்' பார்க்கலையா?
உலகை அலேக்காத் தூக்கித் தோளில் சுமக்கிறாரே:-))))

said...

வாங்க வல்லி.

இப்படி இழுக்கறதுக்குப் பேர்தான் வீடு:-)))))

வீட்டைத் தூக்கிப்போற ட்ரக் நம்மூரில் 'சுட்ட' படம்.
நமக்கு இந்த பாக்கியம் இல்லை(-:
'இடி' தான் வாய்ச்சது:-)

said...

நல்லா எழுதியிருக்கீங்க.. முக்கியமா அங்கேயும் இங்கேயும் நீங்க சேர்த்திருக்கிற பழமொழிகளை படிக்க சுவாரஸ்யமா இருக்கு டீச்சர். :-)