Wednesday, November 22, 2006

எவ்ரிடே மனிதர்கள் -23 ரகுநாதன்

நம்ம ரகுநாதனோட ஒரு பொண்ணொட பேர் துளசியாம். இதுவும்கூட ஒரு காரணமா இருக்குமோ அவர் அடிக்கடி நம்ம வீட்டுப் பக்கம் வந்துட்டுப் போறதுக்கு? போதாக்குறைக்கு அவரும் பூனைப் பிரியராம். செல்லப்பூனைகளை ஒரு சமயம் வளர்த்துக்கிட்டு இருந்தாராம்.


நல்ல உயரம். ஒல்லியான உடம்பு. தொப்பையே கிடையாது. யாருங்க அது, 40 வயசாச்சுன்னாவே மனுஷங்களுக்குத் தொப்பை வந்துருமுன்னு சால்ஜாப்பு சொல்றது? தலையில் முக்கால்வாசி வழுக்கை,பின் மண்டையில் கொஞ்சம் முடி. நல்ல தீர்க்கமான கண்கள். சக்கரை வியாதிக்காரர்னு அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். எப்பவும் நடைதான். இந்த நியூஸிக் குளிரிலும் அதிகாலை அஞ்சு மணிக்கு எந்திரிச்சு 4 கிலோ மீட்டர் ஓட்டம்( அதானே, அப்ப எப்படித் தொப்பை வரும்? நோ ச்சான்ஸ் )


இங்கே மகன் வீட்டில் வந்து கொஞ்ச நாள் தங்கி இருந்தார். இலங்கைவாசி. ஆனால் தமிழ்நாட்டின் மேலே அப்படி ஒரு பற்றுதல். தமிழ்நாட்டிலேயே பல வருஷங்கள் திருச்சி, சேலம்னு வாழ்ந்து வந்துருக்கார். வாத்தியார்தொழில். மொதல்லே ஜாம்பியா நாட்டுலே ஆசிரியரா பல வருஷங்கள் வேலை செஞ்சாராம். மனைவியும், மக்களும்ஊரில். தனியாப் பொங்கிச் சாப்பிட்டு ஒரு வாழ்க்கை.


இவருக்கு மனைவி மேலே ஒரு ஆழ்ந்த மரியாதை & காதல். ஆமா... இது எனக்கு எப்படித் தெரியும்? இங்கே நம்ம தமிழ்ச்சங்க மலருக்கு சில கதைகள், கட்டுரைகள் எழுதிக் கொடுத்தார். நாந்தான் அதைக் கணினியிலே தட்டச்சு செஞ்சு கொடுத்தேன். அளவுக்கு மீறாத வர்ணனைகள், விவரங்களொடு அருமையா எழுதி இருந்தார். அவருடைய கதைகளில் எல்லாம் நாயகன், நாயகியின் பெயர் ரகு & சாந்தா:-))))) அதுலேயும் 'பாண்'( இலங்கையில் ரொட்டியை இப்படித்தான் சொல்வாங்களாம்)னு ஒரு கதை எழுதி இருக்கார் பாருங்க.அடடா...... அவரைக் கேட்டுக்கிட்டு அந்தக் கதையை ஒரு நாள் இங்கே போடறேன்.


ஆன்மீக நாட்டம் இருக்கறவர். நிறையக் கோயில் குளமுன்னு வலம் வந்துருக்கார். நாமும்தான் போறொம். இல்லேங்கலே.ஆனா இவர் போய் வந்த ஒவ்வொரு கோயில்களைப் பத்தியும், அதன் தலப்புராணங்கள், அங்கே போய் வந்த விவரம்,எந்த ஊர்தியிலே என்னிக்குப் போனார்ன்ற வரையிலே விவரமா எழுதி வச்சுருக்காருன்னா பாருங்களேன். இதைப் பத்திப்பேச்சு வந்தப்ப, அவர் எழுதுன பல பகுதிகளைக் கொண்டுவந்து கொடுத்துப் படிச்சு,எதாவது பிழைகள் இருந்தால் திருத்தித் தரணுமுன்னு என்னைக்(????) கேட்டுக்கிட்டார். நானும் வாத்தியாருக்கே, வாத்தியாராம்மாவா இருக்கோமேன்னு கண்ணை உருட்டி விழிச்சுப் படிச்சேன். மனிதர் எதாவது தப்புன்னு செஞ்சுருக்கணுமே!!!


ஆனா சும்மாச் சொல்லக்கூடாது, காசி முதல் ராமேஸ்வரம் போய் வந்த விவரத்தை ஒரு கதை போலவே எழுதி இருக்கார்.எனக்கும் காசி போய்வந்த மாதிரியே இருந்துச்சுங்க.ஷாப்பிங் விவரத்தைக்கூட விட்டு வைக்கலை:-)
அந்தக் கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்ததும் எனக்கு நம்ம எஸ்.ராமகிருஷ்ணனின் நினைவு 'டக்'ன்னு வந்துச்சு.எஸ்.ராவின் கதை/கட்டுரைகளில் அடிக்கடி 'எறும்பு ஊர்வது போன்ற எழுத்து'ன்னு வர்றதைக் கவனிச்சிருக்கேன்.வெள்ளைத் தாளில் தேனைத் தடவி விட்டா, எப்படி எறும்புகள் வந்து மொய்ச்சுக்குமோ அதெ போல ச்சின்னச்சின்ன எழுத்துக்களில் ஒரேசீராக எழுதி இருப்பார். ஆரம்பம் முதல் கடைசி வரை எழுத்துக்கள் ஒரே ரகம். எதுக்குச் சொல்றேன்னா.....


நான் பேப்பரில் எழுத ஆரம்பிச்சால், முதல் வரி ரொம்ப நல்லா அழகாத் தெளிவா இருக்கும். ரெண்டாவது வரியிலேயேஅழகு கொஞ்சம் பிசுபிசுத்துப்போயிரும். மூணாவது வரியிலே அழகு மிஸ்ஸிங். நாலாவது வரியிலே தெளிவும் மிஸ்ஸிங்.நாலாவது வரியே இந்த லக்ஷ்ணமுன்னா அடுத்து வர்ற வரிகள்? கோவிந்தாதான். ஆனா அதைப் படிக்கிறவங்கதானே கவலைப்படணும்:-))) ( இப்படித்தான் நம்ம விடைத்தாளைப் படிச்சு மார்க் போட்ட எந்தரோ மகானுபவர்கள், அந்தரிக்கும் நன்றிகள்)


'பேசாம ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சுருங்க'ன்னு பலமுறை சொல்லிட்டேன். அவரோட எழுத்துகளில் இருந்து பல இடங்களைப் பத்தி பல அரிய விஷயங்கள் தெரிய வாய்ப்பிருக்கு. அவுங்க குடும்பத்துக்கு உரிமையான ஒரு கோயில்அங்கே யாழ்ப்பாணத்துலே இருக்காம். நீராவி விநாயகர் ஆலயம். அதுக்கு பூஜை புனஸ்காரங்கள்ன்னு எப்பவும் நடத்தணும் இல்லையா அதனாலெ நம்ம ரகுவும், சாந்தாவும் அநேகமா ஒண்ணாப் பயணம் செய்யறது இல்லையாம்.ஆனா கோயில் வழிபாடுகளைத் தொடர்ந்து நடத்த வேறு உறவினரை ஏற்பாடு செய்ய முடிஞ்சால் ரகுவும் சாந்தாவும் கோயில் யாத்திரை கிளம்பி விடுவாங்களாம். இப்ப சமீபத்துலே ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே கோயிலுக்குக் குடமுழக்கு செஞ்சுருக்காங்க. நமக்கும் பத்திரிக்கை அனுப்பி இருந்தார். கவருக்குள்ளே நல்லாத் தேடிப் பார்த்தேன்,டிக்கெட் இருக்கான்னு. ஊஹூம்........... காணலை! மறந்துட்டார் போல:-))


குரலை உயர்த்தாம எப்பவும் மிருதுவாப் பேசுவார். இங்கே வந்திருந்த சமயத்தில் அவரையும் பிடிச்சு நம்ம தமிழ்ச்சங்கத்துலே போட்டுட்டோம். ஒரு வருஷம் காரியதரிசியாவும், நம்ம தமிழ்ச்சங்கம் நடத்துற தமிழ்ப் பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியராவும் இருந்தார். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்குத்தான் இவரைப் பார்த்தான் பயமாப் போச்சாம். நிறைய வீட்டுப் பாடங்கள் கொடுத்துருவாரே:-))))) இங்கே தமிழ்ச்சங்க கலை நிகழ்ச்சிகளிலும் இந்த மாணவர்கள் பங்களிப்பு இருக்கணுமுன்னு நல்லா தயாரிச்சுருவார். பசங்க மேடைப்பேச்சுகளிலே கில்லாடி ஆயிட்டாங்க அவரோட 'ஆட்சி'யிலே!


அவருக்கும் எனக்கும் வயது வித்தியாசம் நிறையன்னாலும், கொஞ்சமும் மரியாதை குறையாமல் அன்பாப் பேசுவார்.மணிக்கணக்காக பல விஷயங்களைப் பற்றியும் பேசி இருக்கோம். இப்பவும் அவர் இங்கே வந்தாருன்னா உடனே தொலைபேசுவார். நல்ல மனிதர்கள்கூட பழக்கம் கிடைக்கறதுக்கும் போன ஜென்மத்தொடர்பும், புண்ணியமும் செஞ்சிருக்கணுமுன்னு அடிக்கடி சொல்வார்.


எப்பவும் உற்சாகத்தோட சிரிச்ச முகமா இருப்பார். இங்கே அவருக்குச் சமமான வயதுடைய சில தமிழ் நண்பர்கள் இருந்த சமயம், அவர்களையும் நடைப்பயிற்சிக்குக் கொண்டு போவார். அவர் ஊருக்குப் போனதும் அவரோட நண்பர்களுக்குத்தான் வெறுமையாப் போச்சாம்.


'ரகு வரப்போறார்'ன்னு அவரோட மகன் செய்தி சொன்னார். நல்ல அருமையான நண்பர். பிள்ளையாரோட பக்தர் ஆச்சே. அதனாலேயே எனக்கு அவரை ரொம்பவே பிடிச்சுப்போச்சு. யானை பக்தரை, யானையின் தோழிக்குப் பிடிக்காதா என்ன?


இங்கே என்னுடைய வெள்ளைக்கார நண்பர்களும், 'வாட் அ நைஸ் ஜெண்டில்மேன்'ன்னு சொல்லுவாங்க. அதான் எங்க லைப்ரரிக்குப் பேரனைக் கூட்டிக்கிட்டு அடிக்கடி வருவாரே. வயசும் ரொம்ப அதிகமில்லை. சில வருஷங்களில் எழுபதுதான் ஆகப்போகுது.


அடுத்தவாரம்: சகுந்தலா


நன்றி: தமிழோவியம்

9 comments:

said...

4 கிலோமீட்டர் நடந்த பிறகு தொப்பை விழுந்ததா? விழுந்ததால் நடையா?
:-))
அதென்னவோ தெரியலீங்க, நாகையில் இருந்து சிங்கை வரை யாராவது நமது இலங்கை சகோதரர்கள் நண்பர்களாக கிடைத்துவிடுகிறார்கள்.
ஒரு வேளை போன சமயத்தில் அங்கு பிறந்திருப்பேனோ என்னவோ?

said...

வாங்க குமார்.

//4 கிலோமீட்டர் நடந்த பிறகு தொப்பை விழுந்ததா?
விழுந்ததால் நடையா//

'நோ ச்சான்ஸ்' னு அங்கே வரணும். விட்டுப்போச்சு(-:

மாத்திரலாம்:-)

said...

//நான் பேப்பரில் எழுத ஆரம்பிச்சால், ...//

பேப்பரில் பிரிண்ட்தான் செய்ய முடியும்? எழுத முடியுமா? அதில் கீ போர்ட் எப்படி இணைக்க முடியும்? ஐயாம் தி கன்பியூஷன்.

இவண்
21ஆம் நூற்றாண்டு தலைமுறை

said...

கொத்ஸ்,

உமக்கே இப்படின்னா....?

இன்னும் வருங்காலத்துலே நம்ம புள்ளைங்களோட 'கதி'யை
நினைச்சுப் பாருங்க. 'எழுதறதே' இனிமேப்பட்டு 'தட்டறது'(-:

said...

முதல் வரி ரொம்ப நல்லா அழகாத் தெளிவா இருக்கும். ரெண்டாவது வரியிலேயேஅழகு கொஞ்சம் பிசுபிசுத்துப்போயிரும். மூணாவது வரியிலே அழகு மிஸ்ஸிங். நாலாவது வரியிலே தெளிவும் மிஸ்ஸிங்.நாலாவது வரியே இந்த லக்ஷ்ணமுன்னா அடுத்து வர்ற வரிகள்? கோவிந்தாதான்//

இங்கயும் அதேதேன்.. சுழிசுழியா தெரியுது.. ஒன்னுமே வெளங்கலையேங்க.. பேசாம நீங்க வாரம் ஒரு நாளே போனே செஞ்சிருங்க.. நான் மும்பையிலிருந்து எழுதிய கடிதங்களை படித்துவிட்டு.. என் மனைவி சொன்னது..

said...

பேப்பரில் பிரிண்ட்தான் செய்ய முடியும்? எழுத முடியுமா? அதில் கீ போர்ட் எப்படி இணைக்க முடியும்? ஐயாம் தி கன்பியூஷன்.//

கொத்தனார்னு பேர் வச்சிக்கிட்டு..

ஊர்ல கல்லும் களிமண்ணும் வச்சிக்கிட்டு கட்டிக்கிட்டிருந்தவருதான நீங்க:)

said...

வாங்க டிபிஆர்ஜோ.

உங்க வீட்டுலே நல்லாத்தான் சொல்லி இருக்காங்க.
போட்டும், அதுவாவது நீங்க எழுதுனது. இன்னொருத்தராலே படிக்க முடியலை.

என் கேஸ்லே, நானே எழுதுன குறிப்பை என்னாலெயே படிக்க முடியாது:-)))

விழாக்களுக்கு கொடுக்கற ஸ்பீச்லே 'கீ பாய்ண்ட்ஸ்' நோட் பண்ணிக்கிட்டு,
அதையே படிக்க முடியாம முழிச்சிட்டு, சமாளிச்சுருக்கேன்:-)))

ஓவர் டு கொத்ஸ்:

said...

//விழாக்களுக்கு...கீபாயிண்ட்ஸ்....முமுழிச்சிருக்கேன்..சமாளிச்சு...//

அப்படியே சமாளிச்சு படிச்சாலும்
கேட்கிறவங்க முழிக்கிற முழி இருக்கே..ஏ அப்பா!

said...

சிஜி,

அதெல்லாம் அப்படிச் சும்மாச் சொல்லக்கூடாதாக்கும்.
இந்த விழாவுக்கு நேரில் வந்துருந்து பார்க்கணும் ஆமா:-)))

பிழை பிடிக்கறதே வேலையாப் போச்சுப்பா இந்த பேராசிரியர்களுக்கு:-))))