Monday, December 04, 2006

எவ்ரிடே மனிதர்கள் -25 நாகரத்தினம்

40 வயசு ஸ்ரீநிவாசனைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு அந்தவீட்டில் வலதுகாலை எடுத்து வச்ச 15 வயசு நாகரத்தினத்துக்குக் கிடைச்சது ரெடிமேடா மூணு பசங்கள். பன்னெண்டும், பத்தும், எட்டுமா. நாகரத்தினத்தின் புடவை முந்தாணியை ஏற்கெனவே பிடிச்சுக்கிட்டு நின்னுருந்த பத்துவயசுச் சிவராமனுக்கு முதல்லே ஒண்ணும் சரியாப் புரியலைன்னாலும்,அக்கா வீட்டுலே கூட விளையாட இன்னும் மூணுபேர் இருக்காங்கன்ற சந்தோஷம்.'ரொம்பச் சின்னபொண்ணா இருக்காளே? அதெல்லாம் கல்யாண வளர்த்தியிலே வளர்ந்துருவா'. இது அம்மா தனத்தோட நினைப்பு.தனத்துக்குக் கொஞ்சம் கஷ்ட ஜீவனம்தான். சிவராமனுக்கு நாலு வயசு அவனோட அப்பா செத்தப்ப. இந்த ஆறு வருஷமாப் படாத கஷ்டம் இல்லை. இதுலே நாகரத்தினம் மூத்தாள் பொண்ணு.இதென்ன, இந்தக் குடும்பத்துக்கு மட்டும் 'ரெண்டாந்தாரம்' சாபமா? தனத்துக்குக் கல்யாணம் ஆனதும் இப்படித்தான். நாகரத்தினத்துக்கு அப்போ மூணு வயசாம். ஆறே வருசத்துலே புருஷன் போனப்ப ரெண்டு குழந்தைகளோட நின்ன தனத்துக்குச் சாப்பாடு போட்டதே 'சாப்பாட்டுக்கடை'தானாம்.


இந்த ஊர் ஒரு சின்ன டவுன். அக்கம்பக்கத்துலே ச்சின்னச்சின்ன பட்டிதொட்டிகளிலே இருந்து வியாபார விஷயமா டவுனுக்கு வந்து போற ஆளுகளுக்காக தெருவுக்கு நாலு 'சாப்பாடு தயார்'ன்ற போர்டுதான் பிரதானம். ஓட்டல் சோறுமாதிரி இல்லாம வீட்டுச் சமையல். வியாபாரம் பகல் பொழுது மட்டும்தான்.ஒரு சோறு, குழம்பு,ரசம், மோர், பொரியல்,அப்பளம், ஊறுகாய்தான். வீட்டுக்கு ஆக்கற அதெ மாதிரி, கொஞ்சம் நிறைய சமைச்சாப் போதுமாம். ஒரே நேரச் சமையல்.பகல் சாப்பாட்டுலே மிஞ்சுனது ராத்திரி வீட்டாளுங்களுக்கு ஆச்சு. சந்தை கூடுற நாள் மட்டும் இன்னும் கொஞ்சம் கூடுதலா சமைக்கணும்.


ஜனங்களுக்கும் ருசி பிடிச்சுப்போய், ஒவ்வொரு கடைக்கும்(??) வழக்கமா வந்து சாப்புடறவங்க கணக்கு ஒரு மாதிரி தெரிஞ்சிருக்கும். மேஜை, நாற்காலி எல்லாம் இல்லை. கூடத்துலெ தரையிலே இலை போட்டுத்தான் சாப்புடறது. பல வீடுகளிலே இது ஒரு சைடு பிஸினெஸ். நம்ம தனத்துக்கும் இப்ப வேற வழி இல்லாம இதுதான் பிழைப்பாப் போச்சு.


அம்மா கூடவே தினமும் சமையல் வேலையெல்லாம் செஞ்சு, சமைக்கறதுலே கில்லாடியாயிட்டா நாகரத்தினம்.
இப்பக் கல்யாணம் முடிச்சுப்போற வீட்டுலே 'சோத்துக்கடை' இல்லேன்றதே பெரிய ஆறுதலா இருந்துச்சாம். ஆனா தலைவலி போய் திருகுவலி வந்தாப்புலே, ஸ்ரீநிவாசனுக்கு மிட்டாய் வண்டி வியாபாரம். தினம் வெங்காயம் பச்சமிளகாய்மட்டும் கூடைகூடையா வெட்டணும். வாழ்க்கையை நினைச்சு அழுவறதா, இல்லே வெங்காயத்தை உரிச்சு அழுவறதா?மூணு புள்ளைங்களும் கூடவே இருந்து வேலை செய்யுமாம். புருஷனும் உழைக்கப் பயந்தவர் இல்லை. காலையிலேபத்து மணி போல வேலையை ஆரம்பிச்சா, சாயந்திரம் அஞ்சு மணிக்கு பக்கோடா, மிச்சர், ஓமப்பொடின்னு பலகாரவண்டிக்குத் தேவையான அத்தனை சமாச்சாரமும் ரெடி.
அதுக்கப்புறம் குளிச்சு முடிச்சு, நல்ல சலவைச் சட்டையோட மிடுக்கா நடந்து வண்டியைத் தள்ளிக்கிட்டு சினிமாத் தியேட்டர் பக்கம் போயிருவார். ஆளும் நல்ல உயரமா, லட்சணமான மனுஷர். சிரிச்ச முகம். சினிமாலே முதல்காட்சித் தொடங்குனதுக்கப்புறம் அப்படியே வண்டியைத் தள்ளிக்கிட்டு ஊருக்குள்ளெ போறதுதான். 'உஸ் உஸ்'ன்னு பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தோட மினுங்கலா வர்ற வண்டிக்குன்னு அங்கங்கே வாடிக்கையாளர். பக்கோடா மட்டும் நிமிசத்துலே காலி ஆயிருதாம். பாதிப்பேர் வீட்டுலே தொட்டுக்க அதுதானே!


ஒரு சுத்து சுத்தி, திரும்ப சினிமாக் கொட்டாய்க்கிட்டே வர்றதுக்கும், ஆட்டம் விடறதுக்கும் சரியா இருக்குமாம். சரசரன்னு வியாபாரம், ராத்திரி ரெண்டாவது ஆட்டம் தொடங்குறதுவரை. வீடு வந்து சேர எப்படியும் ராத்திரி பதினோரு மணியாகும். புள்ளைங்க அதுக்குள்ளெ சாப்புட்டுத் தூங்கி இருக்கும். இவரும், பொண்டாட்டியுமாச் சாப்புட்டுட்டு, அன்னிக்கு கல்லாவை எண்ணுவாங்களாம். ஒரு கும்பா நிறைய, எல்லாம் சில்லரைங்களாத்தான் இருக்கும். எண்ணி முடிக்கவே நடுராத்திரியாயிருமாம்.இப்படியே வருசங்கள் ஓடிப்போச்சு. தம்பி சிவராமன் மட்டும் கொஞ்சம் நல்லாவே படிச்சு, வாத்தியார் வேலைக்குப் போயிட்டார். நாகரத்தினத்துக்குன்னு குழந்தைங்க இல்லை. அதான் மூணு பையனுங்க இருக்காங்களே. அவுங்களும் இப்ப பெரியவங்களா வளர்ந்தாச்சு. வியாபாரம் இன்னும் அதேதான். ஆனா நாலு பலகார வண்டிங்களா ஆயிருச்சு.பலகாரம் செய்ய உதவிக்குன்னு ரெண்டு மூணுபேர் வேலைக்கும் இருக்காங்க.
நல்ல வருமானம். இப்பெல்லாம் ராத்திரி காசை எண்ணி முடிக்க நேரஞ் செல்லுது. சிலசமயம், கும்பாங்களை அப்படியே எடுத்துப் பீரோவுலே வச்சுட்டு, மறுநாள் காலையில் உக்காந்து எண்ணிக்கிட்டு இருப்பாங்க நாகரத்தினம். ஸ்ரீநிவாஸனுக்குகொஞ்சம் ஓய்வுதான் இப்பெல்லாம். வீட்டு வாசலிலேயே ஒரு கடை போட்டுக்கிட்டார். உக்காந்த இடத்துலே வியாபாரம்.பசங்க வண்டிகளை எடுத்துக்கிட்டுப் போறாங்க.அறியாத வயசுலே கட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்த 'குழந்தைப் பொண்டாட்டி'க்கு அன்பையும் ஆதரவையும் தாராளமாவே கொடுத்த ஸ்ரீநிவாசன், தன் தம்பிக்கு எப்பவும் உதவி செஞ்சுக்கிட்டு இருந்த மனைவியை ஒரு நாளும் கடிஞ்சு ஒண்ணும் சொன்னதே இல்லையாம். அவர் கணக்குலே மச்சினனும் இன்னொரு குழந்தை.


நல்ல வசதி வந்தபிறகு, மனைவியைக் கூட்டிக்கிட்டு வட இந்தியாவுக்கு யாத்திரை போயிட்டு வந்தார். அது ஒரு அம்பது வருசத்துக்கு முன்னாலே. அந்தக் காலக் கட்டத்துலே, அவுங்க ஊர்லே இருந்து அமர்நாத், பத்ரிநாத், காசி, கயா, டில்லி, ஆக்ரான்னு போய் வந்தவுங்களை விரல்விட்டு எண்ணிறலாம். ஒவ்வொரு இடத்தைப் பத்தியும்சுவாரசியமாக் கதை போலச் சொல்லுவாங்க. தாஜ்மஹாலைப் பத்திக் கனா மட்டுமே கண்டுக்கிட்டு இருந்த நாங்க நாகரத்தினம் சித்தியையே ( நாங்கெல்லாம் அப்படித்தான் கூப்புட்டுக்கிட்டு இருந்தோம்) அதிசயமாப் பாப்போம்.என்னதான் வேலைகளுக்கு ஆளுங்கன்னு வந்துட்டாலும் பலகாரங்களை செய்யும்போது கவனமாப் பக்கத்துலே இருந்து பார்ப்பாங்க. முக்கியமானதுகளுக்குப் பதம் சொல்றதும், தேவைப்பட்டா, சுணங்காம அடுப்புக்குப் பக்கத்துலேபோய் உக்காந்து வேலையைச் செய்யறதும் பார்க்கவே அருமையா இருக்கும். நான் சின்னப்பொண்ணா இருக்கும்போது கூடவே இருந்து எல்லாத்தையும் கவனிச்சிருக்கேன். எனக்கு பலகாரம் செய்யவும், திங்கவும் ஆர்வம் வந்ததுக்கு நாகரத்தினம் சித்திக்கூட ஒரு காரணம்.அடுப்பு வேலையெல்லாம் முடிச்சு, குளிச்சு ஒரு நல்ல சேலை எடுத்துக் கட்டிக்கிட்டு, மிதமான அலங்காரத்தோடு கோவிலுக்குக் கிளம்பிருவாங்க. கதைன்னா எனக்கு உசிரு. கதை பேசிக்கிட்டே போய்வருவோம். லீவு விட்டுட்டா எனக்குக் கொண்டாட்டம்தான்.


அந்த ஊர்லே இன்னொரு பழக்கம்கூட இருந்துச்சு. பட்டிதொட்டிலே இருந்து காய்கறி, மோர், கீரைன்னு வியாபாரம் பண்ணவரும் பெண்கள், காலையிலே சுமையோடு நடந்து வரும்போதே வழியிலே இருக்கற மரங்களிலே எது இருக்கோ அந்தந்த சீஸனுக்குத் தகுந்தாப்புலே புளியம்பழம், எலந்தைப் பழம், மாங்காய், மல்லாக்கொட்டைனு எதையாவது கொஞ்சம் பறிச்சு மடியிலே கட்டிக்கிட்டு வருவாங்க. சரக்கை வித்துட்டு வீட்டுக்குப்போற வழியிலே நாகரத்தினம்மா வீட்டாண்டை வந்து,அதைக் கொடுத்துட்டு, ஒரு பொட்டலம் காராசேவு, ஓமப்பொடின்னு ஒரு பண்டமாற்றல். நடைக்கஷ்டம் தெரியாம அதைத் தின்னுக்கிட்டே ஊர் போய்ச் சேர்ந்துருவாங்களாம்.இப்படிச் சேரும் புளி, கடலை வகைகளை வெய்யிலிலே காய வச்சு நல்லா சுத்தம் செஞ்சு வீட்டுச் சமையலுக்குப்போக பாக்கியை அம்மா தனத்துக்கும், தம்பி வீட்டுக்கும் அனுப்புவாங்க.


சிவராமனுக்கும் கல்யாணம் ஆச்சு. புள்ளைங்களும் பொறந்தாங்க. அந்தப் புள்ளைங்களுக்கு வேண்டிய எல்லாத் துணிமணி நகை நட்டு எல்லாம் இவுங்க வாங்கித் தந்ததுதான். தம்பி பொண்டாட்டி மேலே அவ்வளோ பிரியம்.இல்லேன்னா மட்டும் வாத்தியார் சம்பளத்துலே ஏழு புள்ளைங்களை வளர்த்துட்டாலும்........ இதுலே சிவராமனுக்கு நாடகப் பைத்தியம் வேற. அதுக்கேத்த மாதிரி நண்பர்கள். தானே கதை, வசனம், டைரக்ஷன், நடிப்புன்னு சதா அமர்க்களம்தான். இவரைப் பத்திக்கூட ஒரு நாள் எழுதலாம்:-)))நாகரத்தினத்துக்கு நிறைவேறாத ஆசை ஒண்னு இருந்துச்சுன்னா, அவுங்களை 'அம்மா'ன்னு வாய் நிறைய யாரும் கூப்புடலைங்கிறது. ஸ்ரீநிவாசனோட மூணு புள்ளைங்களும் அம்மான்னு கூப்புடாம எல்லாம் சிவராமனைப் பார்த்துக் 'காப்பி அடிச்சு' அக்கான்னு கூப்புட்டுக்கிட்டு இருந்துச்சுங்க. பேரப் புள்ளைங்களையாவது பார்க்கலாமுன்னா இன்னும் பசங்க யாரும் கல்யாணம் கட்டலை. கல்யாணப் பேச்சை எடுத்தாலே கத்தறாங்களாம்.


அதுக்கப்புறம் நாங்களும் ஊரைவிட்டு வந்துட்டு அவுங்களோட தொடர்பே இல்லாமப்போச்சு. ஸ்ரீநிவாசன் இறந்துட்டாருன்னும்,பசங்க சொத்தையெல்லாம் பாகம் பிரிச்சுக்கிட்டாங்கன்னும், நாகரத்தினம் 'சித்தி', சிவராமன் வீட்டோடையே வந்துட்டாங்கன்னும் சில வருசங்களுக்கு முன்னே கேள்விப்பட்டதுதான்.

-------------
முடிவுரை:


இது இந்த 'எவ்ரிடே மனிதர்கள் தலைப்புலே 25 வது பதிவு.


இனியும் வேணுமா? வாழ்க்கையிலே நான் இதுவரை எத்தனையோ பேரைச் சந்திச்சிருக்கேன்.அவுங்க ஒவ்வொருத்தரையும் பத்தி எழுதணுமுன்னா ஒரு ஆயுட்காலம் போதாது. மனசுலே அப்பப்ப யாராவது வந்து போய்க்கிட்டுத்தான் இருக்காங்க. ஒவ்வொருத்தர்கிட்டே இருந்தும் ஒவ்வொரு நல்ல குணங்களைப் படிச்சிருக்கேன்.சிலர்கிட்டே இருந்து எப்படியெல்லாம் இருக்கக்கூடாதுன்னும் படிச்சிருக்கேன். வாழ்க்கை முழுசுமே ஒரு படிப்பினைதான்.


இப்ப யோசிச்சுப் பார்க்கறப்ப, நல்லா மனசுக்குள்ளெ அனுபவிச்சு எழுதுன தொடர் இதுதான். ஒவ்வொண்ணும் எழுதறப்ப அந்தந்தக் காலங்களுக்கே போயிருவேன். அப்ப அனுபவிச்ச ஒவ்வொரு உணர்வும் அப்படியே மனசுக்குள்ளெ வந்து உக்காந்துக்கும். பல நாள் எழுதமுடியாம அந்த நினைவிலேயே ஆழ்ந்து போயிருக்கேன். முதல் வாரமே அடுத்தவாரம் யாரைப் பத்தி எழுதப் போறேன்னு தீர்மானிச்சு அவுங்கப் பேரைப்போட்டு அனுப்பிர்றதாலே, அவுங்க நினைவாவே அந்த வார முழுசும் இருந்துருக்கேன். எனக்கே இது ஒரு புது அனுபவம்தான்.


உள்மனசுலே இருந்தவங்க சிலரையாவது உங்களுக்குக் காமிக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த நம் தமிழோவியம் ஆசிரியருக்கு என் உளமார்ந்த நன்றி. மீண்டும் எப்பவாவது சந்திப்போம்தானே?
உங்கள் அனைவரிடம் இருந்தும் அன்போடு விடை பெறும்,
துளசி கோபால்.


நன்றி: தமிழோவியம்
-------------


நமக்குள்ளே இருக்கட்டும்: மேலே சொன்ன முடிவுரை தமிழோவியத்துக்கு மட்டும்தான். உங்களுக்கு இல்லை(-:

தப்பிக்க முடியாது. இன்னும் எத்தனை பேர் இருக்காங்க. அப்படியெல்லாம் வுட்டுற முடியுமா? பின்னே பதிவுஎதுக்கு வச்சுருக்கோம்?

கொஞ்ச நாள் கழிச்சு மீண்டும் இதே தொடரில் உங்களை ( கொடுமைப்) படுத்துவேன்,ஆமா:-)))))

15 comments:

said...

test

Anonymous said...

Thulasi Madam

I was shocked first to see your Mudivurai. (Gundai thuki podathinga) Then realised it's only for Tamiloviam. Pls do write about Sivaraman too.

said...

இது என்ன ஒரு நாளும் இல்லாத திருநாளா நீங்களே டெஸ்ட் காமெண்ட் போட்டுக்கிட்டீங்க?

அதெல்லாம் அழுகுணி ஆட்டம். நாந்தான் முதல். சரி போகட்டும்.

இந்த நாகரத்தினம் அம்மா (நானாவது சொல்லறேனே) மாதிரி எத்தனையோ பேர் வாழ்க்கை. அட்லீஸ்ட் அவங்களை நல்லாவாவது வெச்சுக்கிட்டாரே அவங்க புருஷன். அது வரை சந்தோஷம்தான்.

என்னாடா, டீச்சரே மேட்டர் காலின்னு சொல்லறாங்களேன்னு நினைச்சேன். நல்லவேளை நம்ம கிளாசுக்கு இல்லைன்னு சொல்லியாச்சு. எங்களுக்கு விடுமுறை கூட வேண்டாம். தொடர்ந்து பாடத்தை நடத்துங்க. :))

said...

அப்பா முடிச்சிட்டீங்க, அடுத்தது தமிழ்மணத்தில் சந்தித்த மனிதர்கள்னு என் பேரிலருந்து ஆரம்பிங்க!

said...

வாங்க சின்ன அம்மிணி.

பின்னூட்டம் சரி. ஆமாம் தமிழ் எழுத்து என்னாச்சு? வகுப்புக்குக்
கலப்பை எடுத்துக்கிட்டு வரலையா? :-))))

சிவராமன் ரொம்ப சுவாரஸியமானவர். கட்டாயம் எழுதணும்,அவரைப் பத்தி.

said...

வாங்க கொத்ஸ். நீங்கதான் மொதல். அதுலே சந்தேகம் என்ன? இப்படிச்
சொல்லமுடியாதபடி, நம்ம சின்ன அம்மிணி முந்திக்கிட்டாங்க:-)

நேத்து ராத்திரி பதிவைப் போட்டுட்டு இப்ப வந்து பார்த்தா 'கப்சுப்'னு கிடக்கு.
அதான் தபால்பெட்டி வேலை செய்யுதான்னு பார்த்தேன்:-)

'சித்தி'யைப் பார்த்தா, நீங்க 'அம்மா'ன்னு கூப்புட்டதைச் சொல்றேன்.

நம்ம பதிவில்லாம இன்னொருத்தருக்கு எழுதறதா இருந்தா, காலக்கெடு,
கமிட்மெண்ட்ன்னு ஆகிப்போதில்லே? அதான் 'ஜகா' வாங்கிக்கினேன்.

said...

வாங்க உதயகுமார்.

//....அடுத்தது தமிழ்மணத்தில் சந்தித்த மனிதர்கள்னு ...//

இதுகூட ஒரு நல்ல ஐடியாதான்:-)))) ஒவ்வொரு பதிவரைப் பத்தியும் நம்ம மனசுலே
ஒரு 'பிம்பம்' இருக்குல்லெ?

நேரில் சந்திக்காட்டா என்ன? அவுங்களைப் படிச்சே ஒரு கருத்து வந்துருதில்லையா?

Anonymous said...

Madam

I have been doing X-mas shopping to buy presents. (Office'la Naaliku X-mas Lunch- Secret Santa present vaanga). Did not get a chance to browse internet last weekend.

said...

இனி தமிழோவியத்தில் முன்னமே படித்துக் கொள்ள முடியாது :(
ஆனால் இனிவரும் மனிதர்கள் தமிழ்மணத்திற்கு exclusive என மகிழ்ச்சிதான் :)))))

45 வயதில் 15 வயது பெண்ணுடன் திருமணமா ? போக வேண்டிய தூரத்தையேப் பார்த்துக் கொண்டிருந்ததில் வந்த தூரம் திரும்பிப் பார்த்தால் மலைப்பாகத் தான் இருக்கிறது.

said...

Links
Google News
Edit-Me
Edit-Me

டீச்சர்...உங்கள் துளசிதளத்தில் இப்படி வலப்பக்கம் இருக்கிறதே...இதை மாற்றவேண்டும் என்று தோன்றவில்லையா ? தேசி பண்டிட்டுகோ அல்லது விக்கி பசங்களுக்கோ லிங்க் தரலாம் இல்லையா ?

நான் உதவி செய்யவா ?

உங்கள் அடைப்பலகையை திறந்து "Google News" என்று தேடுங்க...கிடைத்ததும் அதற்க்கு பதில் விக்கி பசங்களோட உரலை கொடுத்துவிடுங்க...முடிந்தது விஷயம்...பார்ப்போம்...டீச்சர் எப்படி க.க.க.போ வா இருக்காங்கன்னு..

Anonymous said...

துளசி அக்கா

நானெல்லாம் எவ்ரிடே மனிதனா இருக்கவே போராட வேண்டியிருக்கு... நீங்க எவ்ரிடே மனிதர்கள்னு 25 பதிவு போட்டாச்சு...க்ரேட் அக்கா

அப்புறம் தமிழ்மணம் குறிச்சொற்கள் பகுதியிலே உங்க அன்புத்தம்பி அகத்தீய பாத்தீங்களா? எல்லாம் உங்க புண்ணியந்தேன்...மிக்க நன்றி.

said...

ஆமாங்க சின்ன அம்மிணி, அதான் பண்டிகைகாலம் தொடங்கிருச்சே.
ஒரு பத்து கிறிஸ்மஸ் பார்ட்டியாவது போய்த்தான் தீரணும்.

இந்த வருசம் என் மகளோட ஒரு குழுவிலே 'ரீசைக்கிள்ட் கிஃப்ட்' தீம் வச்சுருக்காங்க.
நமக்கு ஏற்கெனவே வந்த வேண்டாத பல பரிசுகளைக் கழிச்சுக் கட்டிரலாம்:-))

கப்போர்டைத் திறந்து பார்த்து 'நிறைய சாய்ஸ் இருக்கு'ன்னு மாய்ஞ்சு போயிட்டாள்!

said...

வாங்க மணியன்.

//போக வேண்டிய தூரத்தையேப் பார்த்துக் கொண்டிருந்ததில்
வந்த தூரம் திரும்பிப் பார்த்தால் மலைப்பாகத் தான் இருக்கிறது.//

இந்த ரெண்டு வருஷமே திரும்பிப் பார்க்கும்போது மலைப்பா இருக்கு
எனக்கு. இதுலே மொத்த வாழ்க்கையையும் நினைச்சா....? !!!!! அம்மாடியோவ்!

said...

ரவி,

டீச்சர் க.கை.நா.ன்னு இப்படிப் போட்டுக்கொடுக்கணுமா? :-)))

அதுவும் நட்சத்திர வாரத்தில்?

செஞ்சு பார்த்துறலாம். முடியலைன்னா நீங்க இருக்கீங்கதானே?

அதுக்கு முன்னே,

//கிடைத்ததும் அதற்க்கு பதில் விக்கி பசங்களோட //

அதற்க்கு= அதற்கு

said...

வாங்க அகத்தீ.
ஜோதியிலே கலந்துட்டீங்க. வாழ்த்து(க்)கள்.

25 மனிதர்களே ரொம்பக் கம்மி. என் லிஸ்ட்டுலே ஒரு 500 பேர்
இருக்காங்க,என்னையும் சேர்த்து:-)