Monday, December 19, 2016

ஓங்கி உலகளந்த உத்தமனைத் தேடி..... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 108)

கரும்பு இனிக்குதா?  ஆலைக்குப் போகும் கரும்பு வண்டி......யில்....
போகும் வழியில் எதாவது சாவு எதிரில் வந்தால் சகுனம் ரொம்ப நல்லதாமே! அதுக்காக யாராவது  செத்து எதிரில் வரணுமா?    சொர்க ரதம்  ஆளில்லாம எதிரில்   வந்தாலும்  சகுனம் நல்லதுன்னு  நினைச்சுக்கிட்டா என்ன தப்பு?
காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளி, திருவெண்ணெய்நல்லூர் கடந்து மூணாவது நிமிட்லே கண்ணில் பட்ட சொர்கரதம்..........  அட...  போகட்டும்.....    திருவெண்ணைநல்லூர் என்ற பெயர்  ரொம்பத் தெரிஞ்சமாதிரி இருக்கே......
எங்கே கேட்டோமுன்னு  கொஞ்சநஞ்சம் இருக்கும் மூளையைக் கசக்கிக்கிட்டே இருந்ததில்....   கொஞ்சம்  மனசுக்குள் வெளிச்சம் வந்துச்சு....  பித்தா பிறை சூடி.... திருவருட்செல்வர்  படத்தில்  சிவாஜி பாடும் ஸீன் ஒன்னு  இருக்கே....  உண்மையைச் சொன்னால்  இது தேவாரப்பாடல். அதென்னவோ சினிமாவில் வந்துட்டால்தான் மனசில் படியுதோ?  எப்பப் பார்த்தாலும் என்ன சினிமா வேண்டிக்கிடக்கு....  

இப்படி வேண்டாத நினைவுகளில் இருந்தப்ப.... திருக்கோவிலூர் நேராப் போ. 25 கிமீ என்ற நெடுஞ்சாலை போர்டுலே  இடதுபக்கம் 600 மீட்டரில் திருவெண்ணெய்நல்லூர் இருக்குன்னும் போட்டுருக்கு.   வெறும் அறுநூறுன்னால்  அங்கே  போயிட்டுப் போகலாமேன்னு சொன்னப்ப, 'நாம் திரும்பி இதே பாதையில்தான்  ஹைவேயில் போய்ச் சேர்ந்துக்கணும். அதனால் அங்கே முடிச்சுட்டு இங்கே வரலாமு'ன்னு சொன்னார் நம்மவர்.

ஒவ்வொருமுறையும் இந்தப் பக்கம் விழுப்புரம் வழியாகப் போகும்போதும்   வரும்போதும் தவறவிட்ட கோவில் இது. 108 திவ்யதேசக் கோவில்களில் இதுவும் ஒன்னு  என்பதால் கட்டாயம் போகணும்தான். ஆனால் வேளை இப்பதான் வாய்த்தது.  விழுப்புரத்தில் இருந்து உள்ளே ஒரு 37 கிமீ போகணும் என்பதால்.... தள்ளிப்போய்க்கிட்டு இருந்தது.....

மாலையில் கோவில் திறக்கும் நேரம் நாலு மணி என்பதால், அதுக்கேத்தமாதிரி  ஸ்ரீரங்கத்தில் இருந்து மதியம் ஒருமணிக்குக் கிளம்பி வரலாம்னு பக்கவா திட்டம் போட்டுருந்தார் நம்மவர். அதே போல   ரொம்ப தூரத்தில் கோவில் கோபுரம் கண்ணில் பட்டபோது மணி 3.51 !


தமிழ்நாட்டில் இருக்கும் வைஷ்ணவக் கோவில்களின்     உயரமான கோபுர வரிசையில் இதுக்கு மூணாவது இடம்! 192 அடி உசரம்! ( நம்பர் 1 ஸ்ரீரங்கம் 236 அடி.    அடுத்து ரெண்டாம் இடம் ஸ்ரீவில்லிபுத்தூர், 193.5  அடி)
பதினொரு நிலை ராஜகோபுரம் கடந்து உள்ளே போறோம்.  அடுத்த பிரகாரமே தெருவாட்டம்தான் இருக்கு.   இது தெரியாமல் வழக்கம்போல காருக்குள் காலணிகளைக் கழ்ட்டிப்போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சது  கொஞ்சம் கஷ்டம்தான்.   நீளமண்டபத்தின் ஆரம்பத்துலே  'கட்டி'க் கற்பூரம் திகுதிகுன்னு எரியும் சட்டி வழியில் உக்கார்ந்துருக்கு!



அடுத்த கோபுரவாசல் வழியா கோவிலுக்குள் போறோம்.
பெரிய மேடையுடன் கொடிமரமும்  பலிபீடமும்!   கருவறை நோக்கிப் பாயறேன்....  ஓங்கி உலகளந்த த்ரிவிக்ரமன் உள்ளே இருக்கானே!

விக்ரமனும் 20 அடி உயரம். மரச்சிற்பம்!   வலது காலை சரியா இடுப்புவரை உசத்தி நீட்டி நிக்கறார்.  அளந்து பார்த்தால் ஒரு கோணம்தான்,  110 டிகிரி வரும் !  பாதம் மட்டும் உசத்திக் காமிக்க, பிரம்மன்  கங்கையை எடுத்து அபிஷேகம் பண்ணறார். வழக்கமான சங்கு சக்ரம் இடம்மாறி இருக்கு.  வலது கையில் சங்கு!  பூம்...............பூம்..........
'நின்ற, இருந்த, கிடந்த'ன்னு மூணு கோலங்களில்  பொதுவா சேவை சாதிக்கும் பெருமாள் இங்கே நடந்த கோலம் என்றும் சொன்னாங்க.  இப்படிக் கால் தூக்கி எப்படி நடக்க முடியும்?  ராணுவ வீரர்களில் ஒரு பிரிவு  இப்படித்தான் லெஃப்ட் ரைட் போட்டு நடப்பாங்கன்றது நாம் முந்தி அம்ருத்ஸர் பயணத்தில்  வாகா பார்டர் போயிருந்தப்ப, பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் நடத்தும் கொடியை இறக்கும் நிகழ்ச்சியில் பார்த்தமே!  அதைப்போலவா? ஹாஹா.....
இதைப்போல நின்றபடி நடந்த பெருமாள் சிலை ரொம்பவே அபூர்வமுன்னும் ஒரு பேச்சு.  காஞ்சிபுரம் உலகளந்தார் கோவிலில் பார்த்துருக்கோம்.  அங்கே சிலையின் உயரம் 30 அடி!  ஆனால் கற்சிலைதான்.   மரசிலை என்ற கணக்கில் இதுதான்  உலகிலேயே  நடந்த கோலங்களில் பெருசுன்னு ஒரு பெருமையும் லபிச்சுருக்கு!  ஆகக்கூடி ரெண்டு இடங்களில்தான்   தனிப்பட்ட கோவில்கள் என்று சொன்னாலும்....  நம்ம திருநீர்மலையில் நடந்த கோலம் காமிக்கும் சிலை இருக்கே!  அங்கே 'நின்ற கிடந்த  இருந்த நடந்த'ன்னு நாலு வகைகளையும் ஒரே கோவிலில் பார்க்கலாம் என்பது இன்னும் விசேஷம் இல்லையோ!

அது இருக்கட்டும்.... இப்ப எதுக்காக இந்த நடந்த கோலமாம்?   கதைக்குள் போகலாமா?  மஹாபலி ஆட்சி காலத்துக்குப் போகணும் இப்போ!

 ஏற்கெனவே  நம்ம துளசிதளத்தில் சொன்ன கதைதான். அதில் ஒரு மாற்றமும் இதுவரை இல்லை என்பதால்  அங்கே இருந்தே எடுத்துக்கலாம்.
புது வாசகர்களுக்குக் கொஞ்சம் சுலபமா இருந்துட்டுப் போகட்டும் :-)

அந்தக் காலத்துலே மகாபலி ன்னு ஒரு அசுர ராஜா நாட்டை ஆண்டுக்கிட்டு இருந்தார். ரொம்பவே நல்லவர்.அசுரனா இருந்தாக் கெட்டவனாத்தான் இருக்கணுமா என்ன? நாட்டுமக்களைக் கண்போல காத்துவந்தார்.வாரி வழங்குறதுலே அவர் கர்ணனைப் போலவே இருந்தார்.( அட, இது என்ன? அப்போ கர்ணன் பிறந்திருக்கவழியே இல்லையே? இது நடந்தது கிருஷ்ணாவதாரம் நடக்கறதுக்குக் கனகாலம் முந்தியாச்சே. புரிஞ்சுக்கிட்டீங்கெல்லெ) அவருடைய பெருமையையும் புகழையும் பார்த்த தேவர்களுக்குப் பொறுக்கலே. மஹா விஷ்ணுகிட்டே போய் போட்டுக் குடுத்தாங்க. 'இப்படி இவர் புகழும், பெருமையும்கூடிக்கிட்டே போகுது. நாளைக்கு அவரே நம்மையெல்லாம் தள்ளிட்டு மூணு லோகத்துக்கும் அதிபதியா வந்துட்டாருன்னா நமக்கெல்லாம் கஷ்டம்'னு! ( சரியான பொறாமை பிடிச்ச கூட்டம்?)

மஹாவிஷ்ணு பார்த்தார், என்ன செய்யலாமுன்னு. அப்ப மகாபலி ஒரு யாகம் செய்யத் தீர்மானிச்சு அதை நடத்திக்கிட்டுஇருந்தார். பொதுவா ஒரு யாகம் செஞ்சு முடிச்சவுடனே, அதுலே பங்கேத்து அதை நடத்திவச்ச அந்தணர்களுக்கும்,மற்றபடி யாசகம் பெறவந்தவங்களுக்கும் செல்வங்களை வழங்கறது பதிவு. அதிலும் இவர் வாரிவாரி வழங்கறதுலே மன்னராச்சே! எப்பவும் இல்லை என்ற சொல்லே இவர் வாயிலே இருந்து வராது. இதை நல்லாப் புரிஞ்சுக்கிட்ட மஹாவிஷ்ணு, ஒரு ச்சின்ன அந்தணச் சிறுவனா உருமாறி அங்கே யாகம் நடக்குற இடத்துக்குப் போனார்.

அப்ப கேட்டவங்களுக்கெல்லாம், கேட்டது கேட்டபடி தானம் நடந்துக்கிட்டு இருக்கு. ச்சின்னப்பையன் தானம் வாங்கவந்ததைப் பார்த்த மகாபலிச் சக்ரவர்த்திக்கு சந்தோஷம் தாங்கலே. குழந்தைப் பையன் முகத்துலே ஒரு வசீகரம் இருக்கு.இருக்காதா பின்னே? வந்திருக்கறது யாரு? ஈரேழு பதினான்கு லோகத்துலேயும் செல்வத்துக்கு அதிபதியான மஹாலக்ஷ்மியோடகணவனாகிய மஹாவிஷ்ணுவாச்சே!

என்ன வேணுமுன்னு பவ்யமாக் கேட்டாரு ராஜா. ச்சின்ன உருவமான 'வாமனர்' சொன்னார், பெரூசா ஒண்ணும் வேணாம். என் காலடிஅளவுலே ஒரு மூணடி மண் தானம் வேணுமுன்னு. ஆஹா..அப்படியே தந்தேன்னு சந்தோஷமாச் சொன்னார் மகாபலி. அப்ப அவருடைய ஆச்சாரியனான சுக்ராச்சாரியாருக்கு வந்திருக்கறது சாதாரணச் சிறுவன் இல்லேன்னு தெரிஞ்சு போச்சு. 'இது நல்லதுக்கில்லே. வேணாம்'னுராஜாகிட்டேத் தனியாப் பேசித் தடுக்கப் பார்த்தார். ராஜா சொல்லிட்டார், கொடுத்தவாக்கு கொடுத்ததுதான். வந்தவர் விஷ்ணுன்னாஎனக்கு இன்னும் சந்தோஷம்தான். எங்க தாத்தாவோட இஷ்ட தெய்வமாச்சே மஹாவிஷ்ணு. அவரே வந்து என்கிட்டே தானம்கேக்கறாருன்னா அதைவிட எனக்கு வேற பாக்கியம் வேணுமா'ன்னு சொல்லிட்டார். ராஜாவோட தாத்தா யாரு தெரியுமா?ஹிரண்யகசிபுவோட மகன் பிரஹலாதன். 'நாராயணா நமஹ' ன்னு எப்பவும் சொல்லிக்கிட்டு இருந்தாரே, அவர். அப்பதான்அவருடைய அப்பாவான ஹிரண்யனைக் கொல்ல மஹாவிஷ்ணு நரசிம்ஹ அவதாரம் எடுத்தது! இப்படி ஒவ்வொண்ணாச் சொல்லிக்கிட்டே போகலாம். இருக்கட்டும், இப்ப நடக்குற விஷயத்துக்கு வாரேன்.

அந்தக் கால வழக்கப்படி (தானம் வாங்கறவங்க கையிலே, கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு நீங்க கேட்டதைக் கொடுத்தேன்னு சொல்லணும்) தண்ணி ஊத்த கெண்டியைக் கொண்டுவரச் சொன்னார். சுக்ராச்சாரியாருக்குப் பொறுக்கலை. அரசனுக்குஆபத்து வருதேன்ற பதைப்புலே என்ன செய்யலாம் இதைத்தடுக்கன்னு யோசிச்சு, ஒரு வண்டு ரூபம் எடுத்து,அந்தக் கெண்டியிலே இருக்கற மூக்கு ஓட்டையை அடைச்சுக்கிட்டு உக்காந்துட்டார். ராஜா தண்ணி ஊத்தக் கெண்டியைச்சரிக்கிறார். வாமனர் கையை நீட்டிக்கிட்டு இருக்கார். தண்ணி வரலை. அதான் அடைபட்டுப் போச்சே! 

அப்ப ஏதோஅடைச்சுக்கிட்டு இருக்குன்னுட்டு, அங்கே யாகம் செஞ்ச இடத்துலே இருந்த தர்ப்பைப்புல் ஒண்ணு எடுத்து அந்தவளைஞ்ச கெண்டிமூக்கு ஓட்டையிலே குத்துறார் ராஜா. அது ஆச்சாரியருடைய கண்ணுலே குத்தி ரத்தமா வருது.திடுக்கிட்டுப் போய் உள்ளெ என்னன்னு பரிசோதிக்கிறாங்க. வெளியே தொப்புன்னு விழுந்த வண்டு பழையபடிஆச்சாரியனா உருமாறிடுது. ஒரு கண்ணுலே ரத்தம் வழியுது.( அதுக்குத்தான் பெரியவுங்க சொல்றது, யாருக்காவது எதாவது தானம் கொடுக்கறப்ப அதைத் தடை செய்யக்கூடாதுன்னு! நீ கொடுக்கலேன்னாப் போ. அடுத்தவன் கொடுக்குறதை ஏன் தடுக்கறே?)

அப்புறம் வேற கெண்டி கொண்டுவந்து தண்ணி ஊத்தி தானத்தை வழங்கிடறார் மகாபலி. மூணே மூணு அடி!

வாமனர் உருவம் விஸ்வரூபம் எடுக்குது. வளர்ந்து வளர்ந்து ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் நிக்கறார். முதல் அடி இந்த பூமி முழுசும். ரெண்டாவது அடி அந்த ஆகாயம் முழுசும் ஆச்சு. இப்ப மூணாவது அடி எங்கே வைக்கறது?

மஹாவிஷ்ணுவோட விஸ்வரூப தரிசனம் லேசுலே கிடைக்கிற சமாச்சாரமா? ஆனா அன்னிக்கு அங்கே இருந்த எல்லாருக்கும் லபிச்சது. 'ஆ'ன்னு வாயைப் பொளந்துக்கிட்டு எல்லோரும் மெய்மறந்து நிக்கறாங்க. அப்ப ராஜாமகாபலி , மூணாவது அடி என் தலையிலே (சிரசில்)வையுங்கன்னு பணிவாச் சொல்றார். 

( வீடுங்களிலேஎப்பவாவது, சில சாமான்களை எங்கே வைக்கறதுன்னு, நாம கைவேலையா இருக்கறப்ப யாராவது கேட்டாங்கன்னா,'ஏன், என் தலையிலெ வையேன்'ன்னு சொல்றோமே இதுகூட இந்த சம்பவத்தாலே வந்ததுதானோ?)

அப்ப மஹாவிஷ்ணு கேக்கறார், 'உன்னுடைய கடைசி ஆசை என்ன?'ன்னு.ஒரு உயிரைப் பறிக்கிறதுக்கு முன்னேகேக்கவேண்டிய நியாயமான கேள்வி. அப்ப ராஜா வேண்டுறார்,'நான் என் நாட்டு மக்களை ரொம்ப நேசிக்கிறேன்.அதனாலே வருசத்துக்கு ஒருமுறை இந்த நாளில்             ( அன்னைக்கு நட்சத்திரம் திருவோணமா இருந்தது. ஜனங்களை வந்து பார்த்துட்டுப் போறதுக்குஅனுமதி தரணும்'ன்னு. அப்படியே ஆகட்டும்னு சொல்லிட்டு அவர்தலைமேலே மூணாவது அடியை வச்சு அப்படியே அவரை பாதாள லோகத்துக்கு அனுப்பிட்டார் மஹாவிஷ்ணு. 

அப்படி அவர் வர்ற  தினம்தான் நாம் ஓணப்பண்டிகை கொண்டாடும் நாள்!   மேலே போட்டுருக்கும் கதை   கிபி 2005 வது வருசம் ஓணப்பண்டிகைக்கு எழுதுன பதிவில் இருந்து  காப்பி அண்ட் பேஸ்ட், கேட்டோ!

அந்த சம்பவம் நடந்த ஸீன்தான் இங்கே கருவறையில்!  ஆமாம்.... எப்பவோ வாமன அவதாரக் கதையை, ' நடந்தது என்ன?'ன்னு  இப்போ காமிக்கவேண்டிய அவசியம் என்ன?

மிருகண்டு மகரிஷிக்கு,  வாமனர் எப்படி விஸ்வரூபம் எடுத்து த்ரிவிக்ரமனா ஆகி  மூவுலகத்தை அளந்தார்னு  பார்க்கணுமாம். அதுக்காகத்  தவம் இருக்கார்  மனைவியோடு!   பலகாலம் இப்படித் தவம் இருந்தபின்  பெருமாள் உலகளந்த கோலத்தில் இப்படி காட்சி கொடுத்துருக்கார். முனிவரின் விருப்பப்படி,  அப்படியே இருந்து நமக்கும் அருள் செய்கிறார்!

வலதுகால் இடுப்புயரத்துக்குமேல்  தூக்கி நீட்டிக்கிட்டு இருக்க, இடதுகால் ஒரு தலையை அழுத்திக்கிட்டு நிக்குது.  யாரோட தலை?  மஹாபலியின் தலைதான்...  பூமிக்கு அடியில் இருக்கும் பாதாளலோகத்துக்கு  அனுப்பிக்கிட்டு இருக்கார். பக்கத்துலே ஒரு உருவம் கைகூப்பி நிற்குதேன்னு பார்த்தால் மஹாபலியின் மகன்  நமுசி !  பெரியபிராட்டி, அசுரகுரு சுக்ராச்சாரியார், மிருகண்டுமுனிவரும், அவர் மனைவியும், மற்றும் முதலாழ்வார்கள் என்னும் பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார் என்னும் மூவர்னு கருவறைக்குள்ளே ஒரே கூட்டம்!

இந்த முதலாழ்வார் மூவரும்  இங்கே இதே ஊரில்தான் கடைசி காலத்தில் ஒன்னாகவே வாழ்ந்து, பரமபதத்துக்குப் போயிருக்காங்க. இவுங்க மூணுபேரும் அடுத்தடுத்த நட்சத்திரத்தில், அடுத்தடுத்த கிழமைகளில் பிறந்துருக்காங்க. திருவோணம், அவிட்டம், சதயம். செவ்வாய் புதன் வியாழன் இப்படி. ஒரே வருஷமா இல்லை வெவ்வேற வருஷமான்னு தெரியலை. ஆனா வெவ்வேற ஊரில் பிறந்துருக்கணும். ஏன்னா இங்கே திருக்கோவிலூரில்தான் முதல்முதலா சந்திச்சாங்களாம் இந்த மூணு பேரும்!

பெரிய மழை நாளில் பொய்கை ஆழ்வார், இந்தப்பக்கம் பயணம் செஞ்சு வந்தவர் தங்க இடம் கேட்டு மிருகண்டு மஹரிஷியின் ஆஸ்ரமத்துக்குப் போயிருக்கார். இந்தக் கால ஆஸ்ரமங்களா என்ன....  அரண்மனை மாதிரி இருக்க?   இத்துனூண்டு இடைக்கழியில் இடம் கிடைச்சது. ஜஸ்ட் ஒருத்தர் கால்நீட்டிப் படுக்கலாம். ராத்திரி என்பதால் இருட்டு  வேற!

 கொஞ்சநேரத்துலே இன்னொருத்தர் வர்றார்.வந்தவர் பூதத்தாழ்வார்.   அவருக்கும் தங்க இடம் வேணுமாம். வேற இடம் ஏது? இங்கேயே ரெண்டுபேருமா உக்கார்ந்துகலாமுன்னு முடிவு பண்ணிக்கிட்டாங்க. அப்ப வர்றார் பேயாழ்வார்.  மூணு பேர் உக்கார இடம் போதாது. அப்படியே நின்னுக்கலாம்னு நெருக்கியடிச்சு நிக்கறாங்க.  யாரு என்னன்னு பேசிக்கிட்டு இருந்துருக்கலாம்.... அப்பப் பார்த்து  இன்னொரு ஆள்  அதே இடத்துக்குள்ளே நுழைஞ்சு நெருக்கறமாதிரி மூணுபேருக்குமே தோணுச்சு.
 கும்மிருட்டில் யார் ஓசைப்படாம உள்ளே நுழைஞ்சான்னு  தெரியலையே....ன்னு யோசிக்கும்போதே  பேரொளியோடு பளிச்னு பெருமாள் காட்சி கொடுக்கறார்!  பிரமிச்சுப்போன மூவரும்  அப்பவே பெருமாளைப் போற்றிப் பாடறாங்க!  ஆளாளுக்கு  நூறு என்ற கணக்கு!

 இந்த  முன்னூறு பாடல்களுடன் ஆரம்பிச்சதுதான் நாலாயிரப் பிரபந்தமுன்னு இப்ப நம்ம கொண்டாடுற திவ்யப் பிரபந்தங்கள்.  மொதமொதல்லே பாடின இடமுன்னு  திருக்கோவிலூருக்கு இன்னும்  ஒரு பெருமை கிடைச்சது!
இடைக்கழியை தேஹளின்னும் சொல்வாங்களாம். அதனால் இங்கே  காட்சி கொடுத்த பெருமாளுக்கு  தேஹளீசப் பெருமாள் என்ற பெயரும்  அமைஞ்சு போச்சு.   இங்கத்து உற்சவமூர்த்திக்கு  இந்தப் பெயர்தான்!  உற்சவத்தாயார் புஷ்பவல்லி!  முதலாழ்வார்களான இந்த மூவரும் கடைசி காலம்வரை இங்கேயே இருந்துட்டாங்க. அதான் கருவறையிலும் நிக்கறாங்களே!
தீபாராதனையில் பெருமாளை ஸேவிச்சுக்கிட்டோம். கூடவே குழுமி இருக்கும் மற்றவர்களையும் பட்டர்ஸ்வாமிகள் விளக்கினார்.

 முகம் பச்சை வண்ணத்தில் இருக்கு. சட்னு பார்க்கும்போது கதகளி அலங்காரம் போல இருந்தது.  அப்புறம் விசாரித்ததில்  பெருமாள் சிலை, மரச்சிலையாம். தாரு மரம்.  இதைத்தான் தேவதாரு மரம்னு சொல்றோமோ!  முந்தியெல்லாம் கலர் இல்லாமல் இருந்துருக்கார்.
இப்ப சில வருசங்களாத்தான்  கேரளாவில் இருந்து பச்சிலை மூலிகைகள் கொண்டுவந்து  பூசி வச்சுருக்காங்களாம்.  ஓ.... கேரளாவா? அப்ப நான் கதகளி  மேக்கப்ன்னு நினைச்சது  உண்மை :-)
அஞ்சு ஏக்கரில் இருக்கும் கோவில் இது. தாயார் சந்நிதிக்குப்போய் ஸேவித்தோம். பூங்கோவல் நாச்சியார்!  பிரகாரம் சுற்றி வந்தோம். லக்ஷ்மிநாராயணர், சேத்ரபாலனா நிற்கும் ஸ்ரீவேணுகோபாலன், அப்புறம் பெருமாள் கோவில்களில் வழக்கமா இருக்கும் மற்ற சந்நிதிகள்னு போய்க் கும்பிட்டாச்சு. ஆனால் ஆண்டாள் சந்நிதியைப் பார்த்த ஞாபகம் இப்போ இல்லையே.......  ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரைப் பாடியவளாச்சே  நம்ம ஆண்டாள்!

ஆமாம். ஆனால் அது  இவரைப்பற்றி இல்லையாமே!  காஞ்சிபுரத்து உலகளந்தானையாமே!  நெசமாவா?  இப்பதான் ஞாபகத்துக்கு வருது , காஞ்சியில் இடக்காலை தூக்கி நிற்கிறார்.  இடுப்பில் இருக்கும் வஸ்த்திரம்  மடிப்பு மடிப்பா   என்ன அழகா இருந்தது தெரியுமோ?  மொதல்முறை பார்க்கும்போது எண்ணெய்க்காப்பு முடிஞ்சு  மூலவரின் திரையைத் திறந்தநாளா அமைஞ்சு போயிருந்தது.   மினுமினுன்னு என்ன ஒரு  ஜொலிப்பு! இப்ப நினைச்சாலும் அது மனக்கண்ணில் வந்து நிக்குதே!  அதுக்கப்புறம்  போன பயணங்களில் அந்த ஜொலிப்போடு பார்க்கவே இல்லை :-(

ஹ.....ங்....  சொல்ல வந்ததை விட்டுப்புட்டேன் பாருங்க.....  உண்மையா நடந்த எபிஸோடில்  தூக்கின கால்    வலதா இடதா?
யோசிச்சுக்கிட்டே நின்னால்....   இருட்டிரும்.....   வாங்க   வழியில் போகணுமுன்னு நினைச்ச  டிவி நல்லூர் போகலாம் :-)

 தொடரும்...........  :-)



16 comments:

said...

திருக்கோவிலூர் சென்றுள்ளேன். திருவெண்ணைய்நல்லூர் செல்லவில்லை. தங்கள் பதிவு அக்கோயிலுக்குச் செல்லும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது.

said...

படங்கள் அழகு. விவரங்கள் சுவாரஸ்யம்.

//"செறுப்பு"// என்று எழுதி இருப்பதன் மூலம் ரொம்பக் கடுமையாகச் சொல்கிறார்களோ!

:))

said...

கருவறையின் பின்புறம் ஒரு சிறைய அறையில் வாமன மூர்த்தி இருப்பாரே. கோவில் பணியாளர்கள் அர்ச்சகரிடம் சாவி வாங்கி திறந்து காட்டுவார்கள்

said...

// தூக்கின கால் வலதா இடதா? //

முதல் அடி வலதுகால் ன்னா, இரண்டாவது அடிக்கு இடதுகால் தானே தூக்கியாகணும். அதனால தூக்கின கால் வலது இடது இரண்டும்தான் (ஒன்று மாற்றி ஒன்று)

said...

ஒரு நல்ல அரசனைக் கொல்ல ஒரு அவதாரமா என்று எப்பவும் எனக்குத் தோன்றும் நாமும் சிலாகிக்கிறோமே

said...

திருக்கோவிலூர் தரிசனம் அருமை. காஞ்சிப் பெருமாளையும் பொருத்தமாகப் போட்டிருப்பதை ரசித்தேன்.
செருக்கோடு போக்க்கூடாதா அல்லது செருப்போடு போக்க்கூடாதா?

said...

கொஞ்சம் வெளியூர்ப்பயணம் வந்ததால வகுப்புக்கு வரமுடியல டீச்சர். லீவு லெட்டரை அப்ரூவ் செய்யும்படி கேட்டுக்கிறேன்.

தூக்கிய கால் எடது காலா? முதலடிக்கு வலது கால். ரெண்டாவது அடிக்கு எடது கால். மூனாவது அடிக்கு மறுபடியும் வலது காலைத் தூக்கிருப்பாரா? இல்ல எடது காலையே இறக்கியிருப்பாரா? ஒன்னும் புரியலையே. எதாவது என்.டி.ராமாராவ் நடிச்ச தெலுங்குப்படம் பாத்தாப் புரியும்னு நெனைக்கிறேன்.

திருக்கோவிலூர் போகனும்னு ரொம்ப நாளா பேச்சு அடிபடுது. ஆனா போகல. எப்போ போகக் கிடைக்குதோ பாப்போம்.

செருப்பு - செறுப்பு. ஒன்னும் சொல்றதுக்கில்ல.

said...

ரசனையான பகிர்வு நன்கு ரசித்தேன்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வாய்ப்பு விரைவில் கிடைக்கட்டும்! நானும் திருவிடை மருதூர் போகணுமுன்னு நினைச்சுக்கிட்டே இருக்கேன்.. ஆனால் இன்னும் வாய்க்கலை. எல்லாத்துக்கும் வேளை வரணுமே!

said...

வாங்க ஸ்ரீராம்.

நல்லவேளை ... பிய்ஞ்சுடுமுன்னு எழுதி வைக்கலை !!!!

said...

வாங்க பிரகாசம்.

இந்த விவரம் எனக்கு முந்தியே தெரியாமல் போயிருச்சு :-(

அடுத்தமுறை அந்தப் பக்கம் போனால் பார்க்கலாம்.

தகவலுக்கு நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

நடந்தாத்தான் இப்படி அந்தக்கால் இந்தக்கால் னு மாற்றி வைக்கணும். நிக்கும்போது ஒரே காலால் மேலேயும் கீழேயும் அளக்கமுடியாதா என்ன? ச்சும்மா சுழற்றி அடிக்கலாம், இல்லே!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நல்லவங்களா இருந்தா தேவர்களுக்குப் பிடிக்காது.... பொறாமை பிடிச்ச கூட்டம். பதவிக்கு ஆபத்து வந்துருமுன்னு பயம்..... ப்ச் :-(

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ரெண்டும்தான் கூடாது...... கோவிலுக்குள் போறோமே!

said...

வாங்க ஜிரா.

திருக்கோவிலூரில் இன்னும் சில சுவாரஸ்யமான சமாச்சாரங்களும் உண்டு. மலையமான், அங்கவை சங்கவை, கபிலர், கபிலர் பாறை ன்னு...... அங்கெல்லாம் போகமுடியாமப் போச்சேன்னு இருக்கேன்.....

said...

வாங்க மாதேவி.

ரசனைக்கு நன்றிப்பா.