Friday, December 16, 2016

ஒரு கோபுர தரிசனம் ஒரு கோடி புண்ணியம். அப்ப 21 கோபுரதரிசனத்துக்கு எத்தனை கோடியோ? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 107)

தளதளன்னு கீரைக்கட்டு!   வாங்கிட்டு போம்மான்னு  கீரைக்காரம்மா  சொன்னாலும்....  ஹயக்ரீவாவில் சமைக்க விடுவாங்களான்னு  தெரியாதே....  கண்ணால் தின்னுட்டுக் கோபுரவாசலைக் கடந்து உள்ளே போனேன்.


ஒவ்வொரு கோபுரவாசலைக் கடக்கும்போதும் உள்ளே இருக்கும் சிற்பவேலைகளை நின்னு ரசிக்க முடியாத நிலை. எதோ சாதாரண வாசலைப்போல தாண்டி வரணும்:-(  நிக்க முடியாதபடி ரெண்டு பக்கமும்  தரையில் சாக்கை விரிச்சு எதோ ஒரு வியாபாரம் .........  இதுலே டு வீலர்களின் போக்குவரத்து வேற.  போதாததுக்கு வண்டிகளை அங்கேயே நிறுத்தி வச்சுக்கறாங்க.    :-( முதல்வேலை முதலில்னு நேராப்போய் கேமெரா டிக்கெட்  ஒன்னு.  தினமும் இப்படித்தான்.  பசி அடங்கலையாமே அதுக்கு :-) மேலே போய் கோபுர தரிசனம் பார்த்தாச்சான்னு கேட்டாங்க கவுண்டரில் இருந்தவங்க. தினமும்  கெமெரா டிக்கெட் மூலம்,  அவுங்களோடு ஒரு பழக்கம் உண்டாகி இருந்துச்சு. போனமுறை பார்த்ததுதான். இந்த முறை  வேணுமான்னு யோசிக்குமுன் நம்மவர் ரெண்டு டிக்கெட் வாங்கிட்டார். மேலே போனோம்!
கோபுரதரிசனம் கோடி புண்ணியமாம். ஒரு கோபுரத்துக்கே  கோடின்னா....  இங்கே  ரங்க விமானத்தையும் சேர்த்து  இருபத்தியொரு கோடி  நமக்கெல்லாம் கிடைச்சுருச்சு:-)
எப்படி ஒரு வரிசையில்  கூட்டல்  குறி போலக் கட்டி இருக்காங்க பாருங்க.  அதிலும் ரங்கவிமானம் நடுநாயகமா  இருக்கு!!


போனமுறை  நகர்ந்தும், உடைஞ்சும் போயிருந்த  டைல்ஸ் எல்லாம் மாற்றி  ரிப்பேர் வேலை நடந்துருக்கு!  போன வருச கும்பாபிஷேகத்துக்கு வேலையை முடிச்சுட்டாங்களாம். சேதி சொன்னது ராணி! மேல்தளத்தைக் கூட்டிப்பெருக்கி சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க ராணியம்மாள். எனக்கும் அறுபத்தியோரு க்ளிக்ஸ் ஆச்சு :-)


அங்கங்கே போட்டு வச்சுருக்கும் ஒயர்களையும், கேபிள்களையும்  ஒரு ஒழுங்குமுறையில் வச்சுப் 'பிடிப்பிச்சு இருந்தால்  கொள்ளாம்' என்று எனக்கொரு தோணல்.   தளத்தில்  இன்னும் மேலேறிப் பார்க்கும் படிகள் அஞ்சாறு என்றாலுமே  ஒரு   கைப்பிடி வச்சுருக்கலாம். சின்னப்பிள்ளைகள் பாதுகாப்பு முக்கியமில்லையோ!  காத்துதான் அப்படித் தள்ளுதே!


 மேலே இருந்து  உள் ஆண்டாள்  சந்நிதி, ரெங்கவிலாஸ் மண்டப முற்றம் எல்லாம் பார்க்கும்போது  வித்யாசமா ஒரு தோற்றம். இந்தாண்டை புதுசா ஒரு  கட்டடம் முளைச்சுருக்கு. என்னன்னு போய்ப் பார்க்கணும்....


கீழே  போய்ப் பார்த்தால் இது புது சாப்பாட்டுக்கூடம்!  இப்பதான்  ஒரு அஞ்சு மாசத்துக்கு முன்னால்(15-9-2015) 'அம்மா' திறந்து வச்சுருக்காங்க 'அண்ணா'வின் பிறந்த தினத்துலே!!!!நல்ல வசதியான பெரிய கூடம். பந்தி ஆரம்பிக்குமுன் காத்திருக்க ஒரு இடம், சாப்பிடும் கூடமுன்னு ரெண்டு பகுதிகளா  நல்லாவே இருக்கு!  பகல் பத்து  மணியில் இருந்து  பந்தி ஆரம்பிக்குமாம். ஒரே சமயத்தில் 250 பேர் சாப்பிடலாம், இன்னொரு 250 பேர் அடுத்த பந்திக்குக் காத்திருக்கும் வசதின்னு அருமையாக் கட்டி இருக்காங்க. காத்திருப்போருக்குப் பொழுது போகணுமேன்னு  டிவி வச்சுருக்காங்க அந்த வெயிட்டிங் ஹாலில்!  சாமி சமாச்சாரமான படங்கள் கோவில் விஷயங்கள் இப்படி அதுலே ஓடும். எதானா என்ன.... நம்ம மக்களுக்கு டிவின்னு ஒன்னு இருந்தால் போதாதா  என்ன?  நானும் பல இடங்களில் பார்த்துருக்கேன்.... ஆள் இருக்கோ இல்லையோ   டிவி மட்டும்  ஓடிக்கிட்டே இருக்கும் !  சில வீடுகளிலும் இப்படித்தான்....  :-(

இந்தப் புதுக் கட்டடம் கட்ட 1.6 கோடி செலவாம்.  பழைய அன்னதானக்கூடத்தை வேற எதாவது அலுவலுக்கு மாத்தப்போறதாப் பேச்சு.  பழைய அன்னதானக்கூடம்  கோவிலின்  கிழக்குப் பகுதியில், வெள்ளைக்கோபுரம் இருக்கே அந்தப் பக்கம்தான் இருந்துச்சு. அவ்வளவா வெளிச்சம் போதாத இடம்தான்.  அப்போ 2012 இல்  எடுத்த படம் ஒன்னு கீழே இருக்கு பாருங்க!

அடுத்து  இந்தப்பக்கம் இருக்கும் உள் ஆண்டாள் சந்நிதிக்குப்போய்  தூமணி மாடத்து பாடி (மனசுக்குள்ளில்தான்!)ஆண்டாளை ஸேவிச்சுக்கிட்டு  அடுத்தாப்லே இருக்கும் கலைப்பொக்கிஷங்களையும் க்ளிக்கி முடிச்சேன்:-)உடைஞ்சு போன (உடைக்கப்பட்ட) சிலைகளை சீர்படுத்தறோமுன்னு  சிமெண்டைப்பூசி வச்சுருக்காங்க.  இதுக்கு அப்படியே விட்டுருந்தால் கூட நலம்.......  ப்ச்....
வேணுகோபாலனின் சந்நிதி இதுக்குள்ளே! உள்ளே போய்  கும்பிட்டோம். சீரங்கத்துக்கோவிலுக்குள்ளே கலைநயம் அதிகமா உள்ள சிற்பங்கள் இருக்குமிடம் இந்த வேணுகோபாலன் சந்நிதியும், சேஷராயர் மண்டபமும்தான்!  எத்தனை முறை பார்த்தாலும் புதுமை! நம்ம கெமெராவுக்கோ  ஆசை அடங்கறதில்லை...........
குழலூதும் வேணுகோபாலன் சங்கு சக்ரங்களுடன்!
அடுத்த பக்க வழியா வெளியேறினதும் சக்கரத்தாழ்வார் சந்நிதியாண்டை  வந்துட்டோம்.

கோபுரதரிசனங்களையும்,  வேணுகோபாலன் சந்நிதியையும் தனித்தனி ஆல்பமா ஃபேஸ்புக்கில் போட்டு வச்சுட்டு  இங்கே லிங்க் கொடுக்கப்போறேன்.  ஹம்மா..... என்ன  அழகு.... என்ன  அழகு!  கொடுத்தாச்!  எல்லாம் அப்படிக்கப்படியே....  அன் எடிட்டட் !!!

கோபுரதரிசனம்....  நம் பார்வையில் :-)


வேணுகோபாலன் சந்நிதி  !!!

 அங்கிருந்து நேரா நடந்தால் ஆர்யபடாள் வாசல்.  விடுவிடுன்னு நேராப்போய்க் கொடிமரத்தாண்டை ஆரம்பிக்கும் வரிசையில் போய் நின்னுட்டார்  நம்மவர்.  எதுக்குன்னதுக்கு,  மத்யானம் கிளம்பிடப்போறோம். இன்னொருக்காப் பெருமாளைப் பார்த்துடலாமாம். இது இருநூத்தியம்பது ரூ வரிசைன்னால்....  'போயிட்டுப்போறது போ...... ஏன் இப்படிக்  கஞ்சத்தனமா  இருக்கே?'ன்னு எதிர் கேள்வி.

ஒருமணி நேரம் வரிசையில் நின்னு பெருமாளை  கால் நிமிசம் கண்டு  வெளியே வந்தோம். போயிட்டு வரேன்டான்னு  சொல்ல மறக்கலை.  இன்னும் ஒரு சுத்துன்னு  மேலப்பட்டாபிராமர் சந்நிதி, முதலாழ்வார்கள் சந்நிதி, தன்வந்த்ரி, பரமபத வாசல், சந்திரப்புஷ்கரணி, வாசுதேவப்பெருமாள், உக்ரநரசிம்மர், கம்பர் மண்டபமுன்னு  இப்படியும் அப்படியுமா இலக்கு இல்லாமல் போனேன். பேய்க்கு வாழ்க்கைப்பட்ட    நம்மவர் ஒன்னும் சொல்லலை....  கூடவே வந்தார் :-)
தாயார் சந்நிதியில் கட்டணமில்லா தரிசனத்துலே ' நம்ம  அம்மா 'வைக் கும்பிட்டோம். ஹஸ்பெண்ட் பண்ணும் அடாவடியைக் கேக்கமாட்டாளாமே!
அஞ்சுகுழி மூணுவாசலில் இன்னொரு ட்ரை :-)

இன்றே இப்படம் கடைசின்ற நினைப்பு வந்ததும் சும்மானாச்சுக்கும் இன்னொருக்கா இன்னொருக்கான்னு  திறந்துருந்த சந்நிதிகளுக்குள்ளில்  போய் வந்தேன்.  இவர் அங்கங்கே  உக்கார்ந்து  செல்லை முறைச்சுப் பார்த்துக்கிட்டு இருந்துட்டு நான் திரும்பினதும் என்னோடு கிளம்பிருவார்.

அரங்கனின் பிரசாதவகைகளைப் படிச்சுட்டு அப்படியே ரெங்கவிலாஸ் மண்டபத்தின் கடைசியில் இருக்கும் பிரஸாத ஸ்டாலுக்கு  வந்துருந்தோம். மணி பனிரெண்டேகால் ஆச்சு. இங்கேயே எதாவது பிரசாதம் வாங்கி லஞ்ச் முடிச்சுக்கலாமான்னு  கேட்டவருக்கு  ஓக்கே சொல்லிட்டு, என்ன இருக்குன்னு ஆராய்ந்ததில்  தோசை, மிளகுவடைன்னு இருந்தாலுமே எனக்கொன்னும் சரி வரலை.

ஹயக்ரீவா திரும்பி, பாலாஜி பவனில்  அதே தயிர் சாதம்.  ஆச்சு. ஒரு மணிக்குக் கிளம்பறோம். பைபை ஸ்ரீரங்கம்தான்.

 மூணு மணி நேரப் பயணத்தில் இன்னொரு திவ்யதேசம் போக ரெடியா இருங்க:-)

தொடரும்...........  :-)

16 comments:

said...

புகைப் படங்கள் அருமை!

by www.viyanpradheep.com

said...

கோபுரங்கள், சிற்பங்கள் கண்டேன். நேரில் சென்றாலும் காணமுடியாத அளவு அனைத்து புகைப்படங்களும் அருமை.

said...

fb படங்களையும் ரசித்தேன்....அனைத்தும் அழகு...


இரவில் மிளிரும் சேஷராயர் மண்டபம்..
(https://anu-rainydrop.blogspot.in/2016/12/blog-post.html) எனது பதிவில்...

said...

// ஹஸ்பெண்ட் பண்ணும் அடாவடியைக் கேக்கமாட்டாளாமே // அந்தக்காலத்து அம்மையார். அடங்கி இருக்காங்க. ம்ம்ம் (பெருமூச்சு)

// பேய்க்கு வாழ்க்கைப்பட்ட நம்மவர் ஒன்னும் சொல்லலை// ஹிஹிஹி

said...

இந்த அளவுக்கு ஸ்ரீரங்கக் கோவிலை அக்கு வேறாக ஆணிவேறாக ரசிக்க முடியுமா

said...

கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் எமக்கும் தான். நன்றி.

said...

இந்தப் பயணம் முடித்து அடுத்த பயணத்திலும் சந்திக்க வாய்த்தது மகிழ்ச்சியான விஷயம். அடுத்த திருவரங்கப் பயணம் எப்போது! :)

அழகிய படங்கள். எத்தனை முறை சென்றாலும், இங்கே இருக்கும் சிற்பங்களை எத்தனை படம் எடுத்தாலும் அலுப்பதில்லை!

said...

அரங்கனிடம் ஒரு முறை சென்றால் மறுபடியும் மறுபடியும் அழைப்பான் என்பதை தங்கள் பரவச விவரிப்பு உணர்த்துகிறது . ரங்கா ரங்கா

said...

வாங்க வியன் ப்ரதீப்.

வணக்கம்.

முதல்வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

அள்ள அள்ளக்குறையாத சுரங்கமாக இருக்கே!

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க அனுராதா ப்ரேம்குமார்.

சுட்டிக்கு நன்றி! சூப்பர்!!

said...

வாங்க விஸ்வநாத்.

ஹாஹா.... நம்ம பொழப்பு சிரிப்பாச் சிரிக்குது :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கண்டது அங்கே கடுகளவுதான். இன்னும் ரசிக்க ஏராளமா இருக்கு!

அதான் தொண்டரடிப்பொடியாழ்வார், ஸ்ரீரங்கத்தை விட்டு நகரவே இல்லை!!!!!

said...

வாங்க மாதேவி.

எத்தனை 'கோடி' இன்பம் வைத்தாய்னு பாடிட்டாங்க :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

டிஜிட்டல் கேமெராவா இருக்கக்கண்டு பொழைச்சோம். பழைய கால ஃப்ல்ம்ரோல் போடணுமுன்னா.... இங்கே வீட்டை விற்கும்படி ஆகி இருக்கும்போல :-)

said...

வாங்க நன்மனம்.


ஆஹா.... அப்படியா.... ஆனால் என்னை 40 வருச இடைவெளி விட்டுட்டு அழைச்சானே.... அவனை என்ன செய்யலாம்... சொல்லுங்கோ !!!