Friday, June 22, 2012

காரணம் வேணும் கடைக்குள் போக ((ப்ரிஸ்பேன் பயணம் 6)

நாங்க ஒரு பெஞ்சுலே உக்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கோம். இது குவீன் தெருவின் கடைசி. பக்கத்துலே ஒரு தெரு குறுக்காப் போகுது. ஜியார்ஜ் தெரு, இதைக் கடந்தால் பெரிய முற்றப்பகுதி முழுக்கக் கல் பாவியது. இதுக்கு ப்ரிஸ்பேன் சதுக்கம் என்று பெயர். நமக்கிடது பக்கம் கருவூலம் (இருந்த ) பழையகாலக் கட்டிடம். 1883 லே திட்டம் போட்டுக் கட்டி முடிச்சது 1889லே. அப்போ ரெண்டு மாடிகள் தான். எல்லா அரசு அலுவலகமும் இதுக்குள்ளே இருக்கும்படி அமைச்சது. சட்டசபை கூட இதுக்குள்ளேதானாக்கும். ரொம்பவே பெருசு. கட்டிடத்தின் நாலு பக்கமும் நாலு தெருக்கள். ஒரு முழு ப்ளாக்! இதுக்கு ஒரு தோழி போல இன்னொரு பழங்காலக் கட்டிடம் இந்தப்பக்கம் இருக்கு. பேங்க் ஆஃப் நியூ சௌத் வேல்ஸ்! ரெண்டுக்கும் இடையில் ஜியார்ஜ் தெரு ஓடுது. அப்போ எல்லாம் பார்த்துப் பார்த்துதான் கட்டி இருக்காங்க. இல்லே?

இதுக்குள்ளேதான் ப்ரிஸ்பேனின் சூதாட்ட விடுதி கஸீனோ 1995 முதல் இயங்குது. வலப்பக்கம் கஸீனோ ஹொட்டேல். அங்கேயே தங்கிக்கிட்டு மனம் போல் ஆடலாம். அதிகபட்ச அறை வாடகை ஆயிரத்துக்குப் பத்து குறைச்சல். உள்ளே ஆறு ரெஸ்டாரண்டுகளும் அஞ்சு பார்களும் இருக்கு. யதேஷ்டம் இல்லையோ?

தொட்டடுத்துப்போகும் ப்ரிஸ்பேன் ஆறு. அதைக் கடந்து போக விக்டோரியா பாலம். குளுகுளு காத்து கேரண்டீ! அஞ்சு நிமிச நடையில் ஆற்றின் தென்கரைக்குப் போயிடலாம்.

சூட்கேஸ்களை உருட்டிக்கிட்டு சனம் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் போய்க்கிட்டே இருக்கு. பார்த்தால் கஸீனோ ஹொட்டேலில் தங்குபவர்களாத் தெரியலை. இதுக்குள்ளே மாலை மயங்கி இருள் சூழத் தொடங்கிக் கஸீனோக் கட்டிடம் கலர் கலரா ஜொலிக்க ஆரம்பிச்சது. ஆரவாரமில்லாத அழகான மிதமான ஒளி.


கோபாலுக்குத் துணையா அவருடைய ப்ளாக்பெர்ரி இருக்கேன்னு நான் சாலையைக் கடந்து என்ன ஏதுன்னு பார்க்கப்போனேன். பழம்பொருள் அங்காடி! சூட்கேஸைத் திறந்து தேவைப்படாத பழைய உடைகள், நகைகள்(??) காலணிகள், காதலர் கொடுத்த அன்பளிப்புகள்(!!) இப்படிச் சாமான்களைப் பரத்தி வச்சு வித்துக்கிட்டு இருக்காங்க. 95 சதமானம் பெண்களே! ஆம்பிளைக்கு ஏது இவ்வளோ உடைகளும் பொருட்களும்?


விலைபோகலைன்னாவோ இல்லே போரடிச்சாவோ பொட்டியிலே எல்லாத்தையும் அடைச்சுக்கிட்டு உருட்டிக்கிட்டே கிளம்பிப் போயிடறாங்க. அந்தக் கூட்டத்தில் ஹரே க்ருஷ்ணா பக்தர்கள் ஒரு கடை விரிச்சு எல்லோருக்கும் மோட்சத்துக்கு வழிகாட்டிக்கிட்டு இருந்தாங்க. ரெண்டு பேரும் இந்தியர்கள்தான். அவுங்ககிட்டேயும் ரெண்டு சூட்கேஸ்கள்:-)

என்ன ஏதுன்னு கொஞ்சம் விசாரிச்சேன். ஹரே க்ருஷ்ணா கோவில் இப்போ வேற இடமுன்னு வலையில் பார்த்தேனே..... ன்னு விசாரிச்சதில் பழைய இடம் குடி இருப்புப்பகுதி. இங்கே இனிமேல்பட்டுக் கோவில் நடத்த அனுமதி இல்லைன்னு கவுன்ஸில் சொல்லிருச்சாம்.

1972 லே இந்த இயக்கத்தினர் ஒரு வாடகைவீட்டில் ஆரம்பிச்ச கோவில். அப்புறம் 1985 வது ஆண்டு சொந்தமா ஒரு வீட்டை க்ரேஸ்வில் என்ற இடத்தில் (95 Bank Road, Graceville) வாங்கி கொஞ்சம் உள்பகுதியில் மாற்றங்கள் செஞ்சு ஒரு பெரிய ஹால் அமைச்சு அதுலே சாமி சிலைகளை வச்சு கோவிலாக்கிட்டாங்க. பார்க்க ஒரு தோட்டமுள்ள வீடுதான். கோவிலின் அடையாளங்கள் ஒன்னும் இருக்காது. தோட்டத்தின் ஒரு பக்கத்தில் ஓடும் ப்ரிஸ்பேன் நதி. யமுனைக்கரையில் கண்ணன் இருப்பதுபோல ஒரு தோற்றம் தரும்.

அப்போ கோவில் நடத்திக்க அனுமதி கொடுத்த கவுன்ஸிலுக்கு இப்போ என்ன ஆச்சாம்? ஒருவேளை அக்கம்பக்கத்தார் புகார் கொடுத்து நெருக்கி இருக்கலாம். ஞாயிறு ஆனால் ஏகப்பட்ட வண்டிகள் தெருமுழுசையும் அடைச்சு நிற்பது பிடிக்கலை போல:(

செவன்ட்டீன் மைல் ராக்ஸ் என்ற இடத்தில் 37 ஜென்னிஃபர் தெரு என்ற இடத்தில் இப்போ கோவில் நடத்தறாங்களாம். நகர மையத்தில் இருந்து முந்தி கோவில் இருந்த இடத்துக்கு ஒரு பதினொரு கிலோமீட்டர் தூரம். இப்போ இன்னும் ஒரு அஞ்சு கிலோமீட்டர் அதிகமாப் பயணிக்கணும். ஞாயிறு. மாலை விருந்து இப்போ சனிக்கிழமையா மாறி இருக்குன்னாங்க..

இங்கே எலிஸபெத் தெருவில் கோவிந்தாஸ் ரெஸ்ட்டாரண்ட் இன்னும் நடக்குதான்னு கேட்டேன். அது நல்லாவே நடக்குது. ஞாயிறுகளில் மாலை அங்கே விருந்து வைக்கிறோம். இன்னிக்கு ஞாயிறுதானே? முடிஞ்சால் வாங்களேன்னு சொல்லி விவரம் கொடுத்தார். நம்மைப்பற்றி விசாரிச்சதில் நான் கிறைஸ்ட்சர்ச்காரின்னு தெரிஞ்சதும் ஐயோ என்ற பாவம் அவர் முகத்தில்.. கோவில் இடிஞ்சு போன விவரம் தெரிஞ்சுருக்கு. உள்ளே வேலை நடக்குது. தாற்காலிகமா ஒரு கம்யூனிட்டி ஹாலில் ஞாயிறு பூசை நடத்தறோமுன்னு சொன்னேன்.

மாசத்தின் முதல் ஞாயிறு இங்கே பழம்பொருள் விற்க கடை விரிச்சுக்கலாமுன்னு சிட்டிக்கவுன்ஸில் அனுமதி கொடுத்துருக்காம். இலவசம்தான். வாடகை ஒன்னும் இல்லை. அடடா.... ப்ரிஸ்பேன்வாசியா இல்லாமப் போயிட்டோமேன்னு நினைச்சேன். நம்மகிட்டே சூட்கேஸ்களே எக்கச்சக்கமா இருக்கே!

ஒவ்வொருத்தருக்கும் ஒரு வீக்னெஸ் இருக்கும். எனக்கு ஃப்ரையிங் பேன். கோபாலுக்கு பை அண்ட் சூட்கேஸ். ஒரு நாள் பயணம் முதல் 365 நாள் பயணம்வரை விதவிதமா அடுக்கடுக்கா வச்சுருக்கார். அஞ்சு நாள் பயணமுன்னா அதுக்கு நாலுநாள் பயணத்துக்கானதோ இல்லை ஆறுநாள் பயணத்துக்கானதோ கூடாதாம். கொண்டுபோகும் துணிகளின் கொள்ளளவுக்கேத்தமாதிரி கச்சிதமா இருக்கணுமாம்!

எங்கே பொட்டி விக்கும் கடையைப் பார்த்தாலும் உள்ளே நுழையாமல் திரும்பமாட்டார். நானும் அந்த சமயம் ஹோம் அண்ட் கிச்சன் பகுதிக்கு போயிருவேன்:-) கிச்சன் காட்ஜெட்ஸ் எனக்கு இன்னொரு வீக்னெஸ் கேட்டோ:-)

இங்கே இருந்தவரை நம்ம தூயாவின்ட சமையல்கட்டில் இருக்கும் விரல்காப்பாளனைத் தேடிக்கிட்டே இருந்தேன். சூப்பர்மார்கெட்டில்கூடக் கிடைக்குமுன்னு சொல்லி இருந்தாங்களே.... கண்ணில்பட்ட ஒரு சூப்பர்மார்கெட்டையும் விட்டுவைக்கலை. காரணம் ஒன்னு வேணும் கடைக்குள் போக:-)))))



கடைசியில் டேவிட் ஜோன்ஸ் என்ற கடையில் ஜெய்மீஆலிவரின் கண்டுபிடிப்புன்னு ஒன்னு பார்த்தேன். ப்ளாஸ்டிக்:( அதுக்கே 9 டாலராம்! கோபால் விரலை வெட்டிண்டால் பரவாயில்லைன்னு வாங்கிக்கலை:-) 25 வருசம் காரண்ட்டீன்னு வேற போட்டுருக்கு. தொலையட்டுமுன்னு வாங்கி இருக்கலாம் இல்லே? நம்மூர்லே கிடைக்குதான்னு பார்க்கணும்



மணி ஆறாச்சு, கடைகளும் மூடியாச்சு. மகள் ஒருவழியாக எங்களைத்தேடி வந்தாள். எல்லோருமாப்போய் ஈவ்னிங் பஸார் பார்த்தோம். அப்படியே விக்டோரியாப் பாலத்தில் ஒரு சிறுநடை! ராச்சாப்பாட்டுக்கான ஏற்பாடு என்னன்னு சொன்னது மகளுக்குப்பிடிக்கலை. அவள் ஒரு அக்னோஸ்டிக். நியூஸியில் இளவயது ஆட்கள் இப்படிச் சொல்லிக்குவாங்க. இது கூட ஒரு ஃபேஷன் போல! இளவயதுன்னு இல்லே...... ஒரு ரெண்டுமூணு தலைமுறைன்னு சொல்லிக்கலாம். போன பிரதமரும் இதேதான். ஆனால் கம்யூனிச சிந்தனை உள்ள தொழிற்கட்சியாச்சே அவுங்களோடது.


சர்ச்சுகளில் கிறிஸ்மஸ் நாளுக்குக் கூட கூட்டமே இருக்காது. நாங்கதான் மனசு கேக்காம கிறிஸ்மஸ் ஈவுக்கு சர்ச்சுக்குப் போய் வருவோம். புது வருசமோ கேக்கவே வேணாம். எல்லாம் காவோ பீவோ மஜா கரோ தான்.

நிலநடுக்கம் வந்தபிறகு , போன கிறிஸ்மஸ் அன்னிக்கு நாங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு சர்ச்சுக்குப்போனால் எள் போட்டா எண்ணெயாகும் அளவுக்குக் கூட்டம். ஒருவேளை ஜட்ஜ்மெண்ட் டே வந்துருச்சுன்னு நினைச்சுக்கிட்டாங்களோ என்னவோ? தெய்வபயம் கூடி இருக்கலாம்.

நம்பிக்கை இல்லைன்னா போகுது. அட்லீஸ்ட் சாப்பாடு நல்லா இருக்கும் வான்னு கூப்பிட்டால் மாட்டேன்னுட்டாள். அறைக்குப்போய் கொஞ்சம் வலை மேய்ஞ்சுட்டு அங்கே ரூம் சர்வீஸ் எதாச்சும் வாங்கிக்கறேன்னுட்டு போயிட்டாள்.


நாங்க ரெண்டு பேரும் கோவிந்தாஸ் தேடிப்போனோம். மாலுக்கு அடுத்த தெருதான். மாடி ஏறிப்போனால் சத்சங்கம் நடந்துக்கிட்டு இருக்கு. நல்லவேளை நாற்காலிகள் போட்டு வச்சுருந்தாங்க. Food Yoga என்னும் புத்தகத்தைப்பற்றி விளக்கி ஸ்லைட் ஷோ காமிச்சுக்கிட்டு இருந்தார் ஒருத்தர். உணவே மருந்துன்னு நாம் நினைச்சால் அதுவே யோகான்னுட்டாங்க. நமக்குத்தான் யோகா செய்ய நல்லா வருதே:-)

நாம சங்கீர்த்தனம் ஆரம்பிச்சு மகாமந்த்ர பஜனை நடந்துச்சு ஒரு கால் மணி நேரம். அப்புறம் இருக்கைகளை எல்லாம் ஓரமா ஒதுக்கிட்டு பந்தி போட ஆரம்பிச்சாங்க. ஓரத்தில் சரிகை பார்டர் வச்சுத் தைச்ச குட்டி மெத்தைகள், முடிஞ்சவரை எல்லோரும் தரையில் உக்கார்ந்தபிறகு தட்டு, டம்ப்ளர், ஸ்பூன் தொடங்கி சாப்பாடு வர ஆரம்பிச்சது.

ஃப்ரைடு ரைஸ், பனீர் கீரைக் கறி, காலிஃப்ளவர் கறி, பருப்புக் கறி, வடாம், க்ரோக்கேன்னு சொல்லும் பனீர் வெஜிடபிள் உள்ளே வச்ச போண்டா மாதிரி ஒன்னு, பஜ்ஜியா, ஸாலட் இப்படி ஏகப்பட்ட வகைகள். பால்பாயஸம், கேசரி, பால்ரவா லட்டுன்னு நாலு இனிப்பு வகைகள் எல்லாம் படு பிரமாதம்!



இது பக்கா ரெஸ்ட்டாரண்ட் என்பதால் இத்தனையையும் சமைக்க அருமையான கிச்சன் இருக்கு. சாப்பிடும்போதே ஒருத்தர் சின்ன ட்ரே எடுத்துவந்து மக்கள் கொடுக்கும் அஞ்சு டாலர்களை வாங்கிக்கிட்டே நகர்ந்தார். நுழைவுக் கட்டணம் அஞ்சு டாலருன்னு விளம்பர நோட்டீஸ்லே போட்டுருந்தாலும் நிர்பந்தமில்லை.


அப்புறமா நான் அந்த நோட்டீஸைச் சரியாக் கவனிச்சப்ப...... அந்த ஃப்ளையர் கொண்டு வர்றவங்க இன்னொரு நண்பரையும் கூட்டிவந்தால் ரெண்டு பேருக்கும் சேர்த்தே அஞ்சு டாலர்ன்னு போட்டுருக்கு. பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ:-)



உண்ட மயக்கம் தீர மெது நடையாக் கிளம்புனோம். டர்போ தெரு வந்தவுடன்.... படிகளில் ஏறிப்போகலாமான்னு கேட்ட கோபாலை..... ஒன்னும் சொல்லாம படியேற ஆரம்பிச்சேன். சரியா 97 படிகள்! திருப்பதி மலை நடைபாதைன்னு நினைச்சுக்க வேண்டியதுதான். கோவிந்தா கோவிந்தா......

அறைக்குப் போனால்.... மகள் பீட்ஸா ஆர்டர் செஞ்சுருக்காளாம். ரெடி ஆனதும் கீழே ரெஸ்ட்டாரண்டில் இருந்து கூப்பிட்டு நீங்க வந்து எடுத்துக்கிட்டுப் போறீங்களா இல்லே நாங்க கொண்டு வரணுமான்னு கேக்கறாங்க. இது என்னடா ரூம் சர்வீஸ்? என்ன விவரமுன்னால்.... அவுங்க லிஃப்ட் ஏறி வந்து கொடுத்தால் அதுக்கு சர்வீஸ் சார்ஜ் ஆறு டாலராம். அடப்பாவிகளா?

நாம் ஆறாவது மாடி என்றதால் ஆறு டாலரோ? அப்ப எட்டாவது மாடின்னா?

அங்கேயே வை இதோ வர்றேன்னு கோபால் அதே லிஃப்டில் போய் எடுத்துக்கிட்டு வந்தார்:-)

ம்ம்ம்ம் சொல்ல மறந்துட்டேனே..... கடைசியிலே மாலுக்குப்போகும் வழியில் ஒரு குடை  வாங்கிக்கிட்டோம். மழையை நிறுத்த வேற வழி தெரியலை:-)))))


சரி சரி எல்லோரும் பொழுதோட தூங்குங்க. நாளைக்கு நிறைய நடக்கணும். தொடரும்..................:-)

20 comments:

said...

"காரணம் வேணும் கடைக்குள் போக ((ப்ரிஸ்பேன் பயணம் 5)"


ப்ரிஸ்பேன் பயணம் 5?????

-ப்ரிஸ்பேன் பயணம் 6

said...

வாங்க அரவிந்தன்.

ஆஹா..... உங்களுக்குப் பின்னூட்ட ஒரு காரணத்தைக் காமிச்சுட்டேனே!!!!

பிழையைத் திருத்திவிட்டேன்.

கவனிப்புக்கு என் நன்றிகள்.

said...

உக்காந்து சாப்பிடறது யோகாவா??!!!!

கோபால் சாரோட ஐடியா சூப்பர். லிஃப்ட்ல கீழே போய் பிட்சா கொண்டுவந்த்தைச் சொன்னேன். :))

said...

நாம் ஆறாவது மாடி என்றதால் ஆறு டாலரோ? அப்ப எட்டாவது மாடின்னா?

இப்படி ஒருகணக்கு !

said...

படங்களை பார்த்தவுடன், கூடவே சாப்பிட்டாமாதிரி ஒரு நிறைவு.;-)

இந்த இடத்தை பற்றி அதிகம் தெரியாது. படிக்க, வழக்கம் போல, சுவாரசியமாக இருக்கிறது.

நம்ம பதிவுகள் பக்கமும் வந்து , என் பது முயற்சியை, ஆதரியுங்கள்பா!
http://vetrimagal.blogspot.in/2012/05/blog-post.html

said...

//மாசத்தின் முதல் ஞாயிறு இங்கே பழம்பொருள் விற்க கடை விரிச்சுக்கலாமுன்னு சிட்டிக்கவுன்ஸில் அனுமதி கொடுத்துருக்காம். இலவசம்தான். வாடகை ஒன்னும் இல்லை. அடடா.... ப்ரிஸ்பேன்வாசியா இல்லாமப் போயிட்டோமேன்னு நினைச்சேன். நம்மகிட்டே சூட்கேஸ்களே எக்கச்சக்கமா இருக்கே!//

இது நல்ல ஐடியாவா இருக்கே... :))

இங்கே செங்கோட்டை பின்புறம் “சோர் பஜார்” என்று ஒன்று நடக்கும்.... சில வருடங்களுக்கு முன்பு அங்கிருந்து எடுத்து விட்டார்கள்... பெயர் தான் அப்படியே தவிர திருடாத பொருட்களும் விற்பனைக்கு இருக்கும்!

said...

நெதர்லாந்துல இருந்தப்போ அஞ்சாறு வாட்டி அங்கயிருக்கும் பிரபல காசினோவுக்கு போயிருக்கேன். அம்பது அல்லது நூறு யூரோ எடுத்துட்டுப் போயி ரௌலட் விளையாடுவேன். அந்தப் பணம்தான் லிமிட். அதை வெறும் பொழுது போக்கா மட்டும் பாக்கலாம்.

அகோனிஸ்ட்டா யாரும் இருக்குறது தப்பில்லை. அகோனியாத்தான் இருக்கக் கூடாது. :)

அந்த வெங்காய வெட்டி கேடயம் அருமை. சரவணா ஸ்டோர்ஸ் கண்ணுல காமிச்சிட்டா பத்து ரூவாய்க்கு செஞ்சி வித்துருவாங்க. அதப் போயி ஒம்போது டாலரு கொடுத்து எப்படி வாங்குறது? :)

said...

சூட்கேஸ் கடைகள் செளகரியம்தான் வியாபாரிகளுக்கு. நம் ஊரில் திடீரென போலீஸ் விரட்டுகையில் வியாபாரிகள் கடையை மூட்டை கட்டத் திண்டாடுவதைப் பார்த்திருக்கிறேன்.

பயண நாட்களுக்கேற்ப பல பல பெட்டிகள்... எங்கள் வீட்டிலும்:).

said...

பக்கத்துல இருந்து, 'கேட்டியால கேட்டியால'ன்னு எங்க ஆச்சி கதை சொன்ன மாதிரி இருக்கு துளசிம்மா. தொடர்ந்து வாரேன்.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

நான் தினமும் மூணு வேளை யோகா செய்றேன்:-)

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

மனித உழைப்பு மகத்தானதுன்னு அதுக்கு மதிப்பு கூடுதல்.

சம்பளமும் குறைந்தபட்சம் இவ்வளவுன்னு அரசு நிர்ணயிச்சு இருப்பதை கொடுத்துத்தான் ஆகணும் நிறுவனங்கள்.

என்ன ஒரு ஆறுதல் என்றால் இங்கே நியூஸியிலும், ஆஸியிலும் டிப்ஸ் கொடுக்கும் பழக்கம் இல்லை. வேலை முடிஞ்சதும் யாரும் கைநீட்ட மாட்டாங்க.

said...

வாங்க வெற்றிமகள்.

இதோ... உங்கூட்டுப் பக்கம் வந்துக்கிட்டே இருக்கேன்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆஹா.... இந்தச் சோர் பஸார் பூனாவில் கூட ஒன்னு இருந்த நினைவு.

said...

வாங்க ஜீரா.

சென்னையில் கைக்கேடயம் தேடணும்!

பொதுவா நான் எங்கூர் கஸீனோ போனால் என் லிமிட் 20 டாலர்தான். அதுவும் போட்டகாசு கிடைச்சவுடன் தனியா எடுத்து வச்சுக்குவேன். அதுக்கும் மிஞ்சி எதாவது இருந்தால் அதைவச்சு விளையாடுவதுதான்.

வெளிநாட்டுலேன்னா பத்துடாலர் லிமிட்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நம்மூர்போல இங்கே கண்ட இடத்தில் கடைவிரிக்க முடியாது. பழைய பொருட்களை கராஜ் ஸேல் என்று நம் வீட்டு முன்பக்கத்து வாசலில் வச்சு விற்கலாம். அது சனிக்கிழமையா இருக்கணும். அதுவுமில்லாம யாரு வருவாங்கன்னு தேவுடு காக்கணும். இதெல்லாம் சரிப்படுமான்னு தெரியலை.

ஆனாலும் நண்பர் ஒருவருக்காக நம்ம வீட்டில் ஸேல் நடத்த இடம் கொடுத்த அனுபவம் உண்டு. ஒரு நாளைக்கு எழுதணும்:-)))))

ஸூட் கேஸ்களுக்கே ஒரு வீடு கட்டணுமேப்பா:-)))))

said...

வாங்க ஆடுமாடு.

என்ன ரொம்பநாளா மேய்ச்சலுக்கு வரவே இல்லை? நலமா?

அப்படியே மேய்ஞ்சுக்கிட்டே பின்னாடியே வர்றீங்க!!!!!

நன்றிகள்.

said...

அந்த ரெண்டாவது படம் அருமையாயிருக்கு துள்சிக்கா,..

கேடயம் ஜூப்பர். மத்த காய்கறிகளை விட வெங்காயம் வெட்ட மட்டுமே விதவிதமா கிடைக்குது பார்த்தீங்களா :-))))))

said...

யோகா நன்றாக இருக்கின்றது.

said...

வாங்க அமைதிச்சாரல்.

இந்த வெங்காயம்தானே அழவைக்குது;-))))

said...

வாங்க மாதேவி.

உங்களுக்கும் மூணு நேரம் யோகா உண்டுதானே? :-)