Monday, June 11, 2012

அக்கரையில் ஒரு நவராத்ரி (ப்ரிஸ்பேன் பயணம் 1)

மனுசரை சும்மா இருக்கவிட்டாலும்.......பெரிய எழுத்தில் சின்னத் தொகையாக் காமிச்சுச் சுண்டி இழுக்கும் விளம்பரங்கள். கிட்டெமுட்டிப் போனால் அந்த சார்ஜு, இந்தச் சார்ஜுன்னு வாலெல்லாம் ஒட்டவச்சு வச்சுருவாங்கன்றது தனிக்கதை:(

 போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு நம்ம ஜிம்மும் (Karen) காரெனும்(நம்மூர் தொலைக்காட்சியில் காலநிலை சொல்லும் நபர்கள்) நம்ம ஊருக்கு ஒத்தைப்படை எண்ணையும் அண்டை நாட்டுக்கு ரெட்டைப்படை எண்களையும் காமிச்சு ஆசை ஊட்டுவாங்க. அந்த நாட்டுத் தொலைக்காட்சியில் நம்மளை சட்டையே செய்யமாட்டாங்கன்றது வேற விஷயம். நாங்கதான் அதுக்கு ரொம்ப மதிப்புக் கொடுத்து அங்கே யாராவது(???) தும்மிட்டாலும் இங்கே ஊரைக்கூட்டிச் சொல்லிருவோம்!

 உடம்பையும் மனசையும் ரீசார்ஜ் பண்ணிக்கப் பயணங்கள் தேவையாத்தானே இருக்கு. நாலைஞ்சு நாளுக்குள்ளே போய்வரும்படியா இதைவிட்டா வேற போக்கிடம் ஏதுன்னு கிளம்புனோம். மகளை (ஒரு பேச்சுக்கு) கூட வர்றியான்னு கேட்டா..... எஸ்ஸுன்னுட்டாள்:-) லாங்க் வீக் எண்டுக்கு முன்னாலும் பின்னாலும் ஒவ்வொரு நாளைச் சேர்த்துக்கிட்டோம். அதிகாலை விமானத்தைப் பிடிச்சால் முழுசா அஞ்சு நாட்கள்.
 

காலை அஞ்சேகாலுக்கு விமானநிலையம் போய்ச்சேர்ந்தால் பளிச்சுன்னு இருக்கு புதுக்கட்டிடம்.


எங்க பக்கத்தில் இப்போ கொஞ்ச நாட்களா ஸ்மாட்ர்ட்கேட்ஸ் ன்னு ஒரு விஷயம் ஆரம்பிச்சுருக்கு. அஸ்ட்ராலியா, நியூஸிலாந்து பாஸ்போர்ட் வச்சுருக்கவங்க விமானநிலையத்தில் இமிக்ரேஷன் வரிசையில் காத்து நிக்காம தாமாய் தாமாய் போய்வந்துக்கிட்டு இருக்கலாமாம். பொழுதன்னிக்கும் போய்வர்றதால் கோபாலுக்கு இதெல்லாம் அத்துபடி ஆகிக்கிடக்கு. நானும் மகளும் ரெண்டு வருசமா இங்கிருந்து எங்கேயும் போகலை:(

 வழக்கமான செக்யூரிட்டி செக் முடிஞ்சதும் ஒரு மெஷீனில் நம்ம பாஸ்போர்ட் ரெண்டாம் பக்கத்தைத் திறந்து உள்ளே வச்சால் சில நொடிகளில் ஒரு டிக்கெட்டைத் துப்புது மெஷீன். அதை எடுத்துப்போய் பக்க்த்தில் இன்னொரு இடத்தில் ஒரு ஆறடித் தூணுக்கு முன்னால் நின்னுக்கிட்டு நமக்குப் பக்கத்தில் இருக்கும் குட்டித்தூணில் இருக்கும் ஸ்லாட்டில் செருகிட்டு பெரிய தூணையே கண்கொட்டாமல் பார்க்கணும். கண்கண்ணாடியைக் கழட்டிறனும் என்பது முக்கியம்.
 

நம்ம முகத்தில் இருக்கும் எலும்பின் அமைப்பு, மூக்கின் நீளம், ரெண்டு கண்களுக்கிடையில் இருக்கும் தூரம் இப்படி பலவிஷயங்களை தூணுக்குள்ளெ இருக்கும் மூணு கேமெராக்கள் படம் எடுத்து நாம் நாம்தானான்னு சரி பார்த்து சில விநாடிகளில் சொல்லிருது. எல்லாம் சரின்னா.... சீட்டை எடுத்துக்கோன்னு எழுதிக் காமிக்குது. பிரச்சனை இங்கே தான். கண்ணாடி இல்லேன்னா கண்ணே தெரியாத என்னைமாதிரி ஆட்களுக்கு அது என்ன சொல்லுதுன்னு தெரியாம தேமேன்னு நிக்கணும். எழுத்து தெரியலையேன்னு கண்ணாடியை மாட்டினதும்  'சீட்டை உருவிக்கிட்டு போம்மே'ன்னு சொல்லிக்கிட்டு இருக்கு.பேசாம ஒரு பச்சை லைட்டைக் காமிக்கப்படாதோ?

 வழித்துணையா இந்த முறை நம்ம என்.சொக்கனையும் (என் நிலைக்கண்ணாடியில் உன் முகம்) அ.முத்துலிங்கத்தையும் (பூமியின் பாதி வயது)கூடவே எடுத்துக்கிட்டுப் போனேன். சிறுகதை/கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் எளிய வாசிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை!

ப்ரிஸ்பேன் நகர் வெறும் மூணரை மணி நேரப் பயணதூரம்தான். அதுவும் மேற்குத்திசைப் பயணம் என்பதால் காலையில் கிளம்பினால் காலையிலேயே போய்ச்சேர்ந்துடலாம். ஊர் விவரம் எல்லாம் இங்கே விலாவரியாக் கிடக்கு பாருங்க. அஞ்சு வருசப்புதுசு:-)


 தற்போதைய மக்கள்தொகை நகரத்துக்குள்ளே மட்டும் 1.8 மில்லியன். எங்களை மாதிரி வெறும் மூணரை லட்சம் மக்கள் இருக்கும்  'வில்லேஜில்'  இருந்து போகும் மக்களுக்கு அது மகா பெரிய ஊர்! மழையே காணாத ஊர். ஆனா..... பெய்ய ஆரம்பிச்சால் ஊரையே முழுக்காட்டிவிட்டுத்தான் அடங்கும். போன முறை வெள்ளம் (டிசம்பர் 2010,ஜனவரி 2011) ரெண்டு மாசமா ஆடி அடங்குச்சு. 38 பேர் மரணம், 6 நபர்களைக் காணோம். 30 பில்லியன் டாலர் நஷ்டம்:(


 நதிக்கரையில் பிறந்தது நாகரிகம் என்ற உண்மையைச் சொல்லும்விதமா வளைஞ்சு வளைஞ்சு போகும் பிரிஸ்பேன் நதிக்கரைகளை ஒட்டியே நகரம் வளந்து கிடக்கு. 344 கிலோமீட்டர் நீளம். நல்ல அகலமான நதின்னாலும் வெள்ளம் வந்தால் அம்பேல்தான்!

 ஸர் தாமஸ் ப்ரிஸ்பேன், நியூ சௌத்வேல்ஸின் கவர்னர் ஜெனரலா 1821 -1825 வரை இருந்தார். 1824 வது ஆண்டுதான் வெள்ளைக்காரர்கள் இந்தப் பகுதிக்கு குடிவரத் தொடங்குனதும், புது ஊருக்கும் நதிக்கும் இவர் பெயரையே வச்சுட்டாங்க. அதுக்குப் பிறகு மாநிலங்கள் பிரிய ஆரம்பிச்சு இந்தப்பகுதிக்கு குவீன்ஸ்லேண்ட் மாநிலமுன்னு பெயர் கிடைச்சு ப்ரிஸ்பேன் நகர் இதன் தலைநகரமாகவும் ஆச்சு. நகர மையப்பகுதின்னு பார்த்தால் கிழக்கும் மேற்கும் தெற்கும் என்று மூணு பக்கங்களிலுமா பார்டர் போட்டு ஓடும் ப்ரிஸ்பேன் நதிக்கிடையில் உள்ள நிலப்பகுதியும் அதுலே ஏழெட்டு தெருக்கள் குறுக்காவும் ஏழெட்டுத் தெருக்கள் நெடுக்காவும் உள்ளதுதான்.

நெடுக்கெல்லாம் ஆண்கள் பெயரிலும் குறுக்கெல்லாம் பெண்கள் பெயரிலும் இருக்கு, விதி விலக்கா ரெண்டு தவிர. எல்லாம் ராஜவம்சத்துப் பெயர்களே! என்ன ஒரு ராஜவிசுவாசம் பாருங்க. (நகரத்தைப்பற்றி முந்தி எழுதுனதை மீண்டும் வாசித்துப் பார்த்தால் முன்னதே பெட்டர்!) 

மகளும் கூட வந்ததால் தனியே சுத்திப்பார்க்கவும் ஷாப்பிங் செஞ்சுக்கவும் வசதியா இருக்கட்டுமேன்னு மையப்பகுதியிலே தங்குமிடம் தேடி, கோபால் போனமாசம் இங்கே வந்த பயணத்தில் ஒரு இடம் பதிவு செஞ்சுட்டு வந்திருந்தார். சரித்திரப்ரியைக்கும் பொருத்தமான இடமே! நல்ல உயரமான பகுதி. வெள்ளம் வந்தாலும் ஆபத்தில்லை கேட்டோ:-)))) இறக்கத்தில் மூணு தெரு கடந்தால் க்வீன் தெரு மால்!

ப்ரிஸ்பேன் விமானநிலையத்திலும் ஸ்மார்ட்கேட் ஆப்ஷன் இருக்கு. அதன் வழியா பத்தே நிமிசத்தில் பொட்டிகளை எடுத்துக்கிட்டு வெளியே வந்துடலாம். அஸ்ட்ராலியாவின் விர்ஜின் ஏர்வேஸில் டிக்கெட் எடுத்துருந்தோம். ஒரு ஏழுகிலோ கேபின் பேக் மட்டும் கொண்டு போகலாம். பெட்டிகள் (23 கிலோ) இருந்தால் ஒவ்வொன்னுக்கும் 25 டாலர் தனிச்சார்ஜ் கட்டணும். குடிக்கத் தண்ணி, காஃபி, டீ மட்டும் தருவாங்க. சாப்பாடு வேணுமுன்னா அதுக்கும் ஆளுக்கு 25 டாலர் கட்டணம். வரவர அல்பத்தனமா ஆகிக்கிட்டு இருக்கு சேவைகள். மூணரை மணி நேரத்துலே திங்கலைன்னா என்ன?அப்படியும் வேணுமுன்னா வெளியே இருந்தே வாங்கிப் போகலாம் தானே? நல்லவேளை. விமானத்தில் டாய்லெட் பயன்படுத்த தனிக்கட்டணம் கேக்கலை:-)

 கோபாலுக்கு கோரு க்ளப் கார்டு இருப்பதால் நமக்கு அவுங்க லௌஞ்சில் இலவசமாவே சாப்பிட்டுக்கலாம். 

 ஏற்கெனவே பதிவு செஞ்சுருந்த வண்டியை விமானநிலையத்தில் இருந்தெடுத்துக்கிட்டுக் கிளம்பினோம். கையிலே மேப்பை வச்சுக்கிட்டு(ம்) வழக்கம்போல பாதையைத் தவறவிட்டுட்டு ஒவ்வொரு இடத்தையும் ரெவ்வெண்டு முறை வலம் வந்து வணக்கம் சொல்லி, மோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். பின்னால் இருக்கும் கார் பார்க்கிங் வாடகை தனி. நாளொன்றுக்கு ஒன்பது டாலர். ரெண்டடுக்குலே 28 வண்டிகளுக்கான இடம். வந்து இறங்கின முதல் மழை ஒரே சல்லியம்.

அறை பகல் 2 மணிக்குத்தான் ரெடி ஆகுமாம். மூணு மணி நேரம் இருக்கேன்னு சாமான்களை ஒரு லாக்கர் ரூமில் வச்சுட்டு எதிர்வரிசையில் இருந்த கேஃபேக்குப்போய் ஆளுக்கொரு கப்புச்சீனோ குடிச்சுட்டு, 25 கிமீ தூரத்தில் இருக்கும் ப்ரௌன்ஸ் ப்ளெய்ன் என்ற இடத்துக்குப் போயிட்டோம். இந்தப் பக்கத்துலே நமக்கொரு சொந்த வேலை இன்னிக்கு இருக்கு.

 அட்டகாசமான மோட்டர் வே! ரெண்டு பக்கமும் பஸ்களுக்கான தனி வழி. மொத்த நீளத்துக்கும் பக்கத்துலே ஃபென்ஸ் போட்டு விட்டுருக்காங்க. யார் முழியிலும் படாம பஸ்கள் அதுபாட்டுக்கு போய்வருதுகள்!

 நல்ல ப்ரமாண்டமான ஒரு மால் (க்ராண்ட் ப்ளாஸா) இங்கே இருக்கு. இங்கிருக்கும் ஃபுட் கோர்ட்லேயே பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டதும் மகளுக்கான ஷாப்பிங் ஆரம்பிச்சது. மூணரை வரை வாங்க முடிஞ்சதை வாங்கினதும் கிளம்பி சொந்த வேலைக்கான அப்பாய்ண்ட்மெண்ட் டைம் வருதேன்னு அங்கே போய்ச் சேர்ந்தோம். புதுசா அங்கே ஒரு கொஆலா சரணாலயம் ஆரம்பிச்சுருக்காங்க. ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி.

 

மழையும் மப்புமா இருந்ததால் நெடுமரங்களைத்தவிர வேறொன்னும் என் கண்ணில் படலை. ஆனால் ரெண்டு கங்காருகள் இந்தப் பக்கமா ஓடுச்சுன்னு மகள் சொன்னதும், உள்ளே போய் வாலன்டியர் வேலை கேக்கலாமான்னு இருந்துச்சு. சொந்த வேலையை முடிச்சுக்கிட்டு அஞ்சுமணிக்கு மோட்டலுக்கு வந்து பொட்டிகளை எடுத்து அறைக்குக் கொண்டு போனோம்.

 நல்ல சௌகரியமான அறை. சமைக்கும் வசதிகளும் உண்டு. பால் காய்ச்சிக்க ஒரு சின்ன மைக்ரோவேவ் பாத்திரம் கொண்டு வந்திருந்தேன். இந்த காப்பி சனியன் இருக்கு பாருங்க...... சரியான ருசியில் இல்லைன்னா நாள் முச்சூடும் பாழ். இந்தப்பக்கங்களில் காபிக்குப் பச்சைப்பாலை ஊத்திக்கிறாங்க. கெட்டில், மைக்ரோவேவ் எல்லாம் இருந்தாலும் துளியூண்டு பச்சைப்பால் காப்பி எனெக்கென்னவோ வாயில் வச்சா வழங்கறதே இல்லை:(


 பழைய புலம்பல்ஸ் இது


 இந்தக் காபி டீ விஷயத்துலே, அங்கங்கே ஹொட்டல்களில் இப்பெல்லாம் அறையிலேயே இதுக்கு ஏற்பாடு இருக்குன்றதுஒரு நல்லதுன்னாலும், நம்ம 'ருசிகண்ட பாழாப்போன நாக்கு'க்குப் பச்சைப்பால் ஊத்திக் குடிக்கும் காஃபி இன்னும் பழகமாட்டேங்குது. டீ பரவாயில்லை, சமாளிச்சுரலாம். அதிலும் பால்னு ஒரு ரெண்டு ஸ்பூன் அளவு வரும்( ஒரு காஃபிக்கு இதுபோதுமாம்.யார் இந்தக் கணக்கைப் போட்டாங்களோ?)குட்டியான குப்பி மூணு, நாலைச் சேர்த்தால்தான் ஒரளவாவது நிறம்வரும். அதுக்குள்ளெ அந்தக் காபி, சூடாறி ஜில்லிட்டுப்போயிருது. ( எங்க பாட்டி இந்த சூட்டை, 'பூனை மூ* * *ம் னுசொல்வாங்க!) பரவாயில்லைன்னுட்டுக் கொஞ்சம் பாலை சூப்பர் மார்கெட்லே இருந்து வாங்கிக்கறதுதான். இங்கேயும் மைக்ரோவேவ் அவன் இருக்கு. நல்ல சூடாப் பாலைக் காய்ச்சி ஒரு காஃபி குடிக்கலாமுன்னா........... மைக்ரோ அவனுக்குண்டான பாத்திரம் இல்லை. அடுப்புலே வச்சுக் காய்ச்சணுமுன்னா காய்ச்சுக்கலாம். அதுக்கப்புறம் அந்தப் பாத்திரத்தைத் தேய்ச்சுக் கழுவணும். வாழைப் பழத்தை உரிச்சு மட்டும்தான் தருவாங்களாம். நாமே தின்னணுமாமே! 


 தொடரும்............:-)

28 comments:

said...

//காஃபிக்கு இதுபோதுமாம்.யார் இந்தக் கணக்கைப் போட்டாங்களோ?)குட்டியான குப்பி மூணு, நாலைச் சேர்த்தால்தான் ஒரளவாவது நிறம்வரும். அதுக்குள்ளெ அந்தக் காபி, சூடாறி ஜில்லிட்டுப்போயிருது. ( எங்க பாட்டி இந்த சூட்டை, 'பூனை மூ* * *ம் னுசொல்வாங்க!) //

சொன்னா தேவலாமுங்களே !! எங்க மாமியார் சொல்வாங்க ! அந்தக் காலத்துலே அவங்க மாமியார்
அப்படி ஒரு ஜில்லிட்டுப் போன காபியைக் கொடுத்தா, " எவடி எனக்கு இந்த பூனை மூ** ம் கொடுத்ததுன்னு
அப்படின்னு அந்த ஊரையே கூட்டிடுவாங்க... மோஞ்சிலே கடாசிட்டு, சூடா கொண்டாடி அப்படின்னு
சொல்வாகளாம்.

எங்க மாமியார் சொல்வாங்க.. நான் எங்க மாமியார்ட்டே கத்துகிண்ட பாடமெல்லாம் ஒண்ணுதான்.
நான் ஒரு நாள் மாமியார் ஆகப்போற போது, இந்த மாமியார் மாதிரி கண்டிப்பா என் மருமவள்ட்டே
நடக்கமாட்டேன். :

" அப்ப, நீங்க என்னதான் செய்வீங்க? " என்று ஒரு க்யூரியாஸிடிலே ஒரு நாளைக்கு கேட்டேன்.

" நானே அடுப்பண்ட போய், ஒரு சூடா காபி போட்டு, நானும் குடிப்பேன், என் மருமவளுக்கும் கொடுப்பேன்"
என்றாள்.

மீனாட்சி பாட்ட
http://menakasury.blogspot.com

said...

//பச்சைப்பால் ஊத்திக் குடிக்கும் காஃபி//

இதெல்லாம் ஒரு காப்பின்னு எப்பிடித்தான் குடிக்கிறாய்ங்களோனு இந்த ஆங்கிலேயர், அரேபியர்களை இப்பவும் அதிசயமா பார்க்கறதுண்டு. அது மட்டுமில்லை, அந்த ஆறி அவலாப்போன காப்பியையும் ஒரு மணிநேரம் வச்சு ‘ஸிப்பி’, ’ஸிப்பி’ குடிப்பாங்க, அப்ப நமக்கு வரும் பாருங்க ஒரு கடுப்பு!!

அவங்களுக்கு நடுவுல, ஆவிபறக்கச் ச்ச்சூடா ஒரு காப்பியைக் கோப்பையில் எடுத்துவரும்போதே ஒரு தனி கர்வம் வரும் நமக்கு!! :-)))))

said...

//யார் இந்தக் கணக்கைப் போட்டாங்களோ?//

நானும் பல இடங்களில் இப்படியேதான் அலுத்தபடி கூட 3 சாஷேக்களை சேர்ப்பேன்:)!

said...

//பேசாம ஒரு பச்சை லைட்டைக் காமிக்கப்படாதோ?//

லைட்டு மட்டும் போறுமா?.. அக்கம்பக்கத்தைக் கவனிக்கிறேன்னு பராக்குப் பார்த்துட்டுருக்கற ஆட்கள் லைட்டைக் கவனிக்காம இருக்க வாய்ப்பிருக்கே,.. அதனால ஒரு அனவுன்ஸ்மெண்டும் இருந்தா நல்லாருக்கும் :-))

said...

பிரிஸ்பேனில் இரண்டு வருடம் வசித்திருந்தாலும் அதைப் பற்றிய விவரங்கள் ஏதும் அவ்வளவாக தெரியாது. ஆஸ்திரேலியா வந்திறங்கிய புதிது. உங்கள் மூலமாக பல விவரங்கள் தெரியவருகிறது. இந்த மழையையும் குளிரையும் எப்படித்தான் சமாளித்தீர்களோ என்றுதான் வியக்கிறேன். உங்கள் பாணியில் தொடரும் சுவாரசியமான பயண அனுபவத்தை அறிந்துகொள்ள காத்திருக்கிறேன் மேடம்.

said...

பச்சைப் பால் காபி.... :(

நமக்கு இதெல்லாம் ஒத்து வராதே....

சுவாரசியமாக ஆரம்பித்துவிட்டது உங்கள் பயணம்... எங்களுக்கும் சுவாரசியம் ஆரம்பித்துவிட்டது உங்கள் கட்டுரை... தொடருங்கள்..

said...

வாங்க மீனாட்சி அக்கா.

உங்க மாமியார் சொன்னது ரொம்பச்சரி.

உங்க மருமகள் கொடுத்துவச்சவங்க!

டிகாஷன் இறங்கியாச்சான்னு போய்ப் பார்க்கணும். வரட்டா? :-)))

said...

வாங்க ஹுஸைனம்மா.

ஹையோ! ரொம்பச்சரியாச் சொன்னீங்க.

இண்டியன் கரீஸ்ன்னு சொல்லிக்கிட்டு ஒரு சமாச்சாரங்கள் உலகம் முழுசும் விக்குது பாருங்க அந்த வகைகளை, உள்ளூர்க்காரர்கள் புகழும்போது..... எனக்கு வரும்பாருங்க.....

உண்மையான ருசின்னா என்னன்னு உக்காரவச்சுச் சொல்லித்தரணும்,ஆமா:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ஆஹா.... நான் தனி இல்லைன்னதும் மனசுலே கர்வம் துளிர்க்குது:-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஊஹூம்.... அது மட்டும் நடக்காது. நாம் தலையை அப்படி இப்படித் திருப்பாம நேரா அந்தத் தூணையே வெறிச்சுக்கிட்டு இருக்கணும் என்பதுதான் சட்டம்!

பராக்கு பார்த்தால் தலையில் ஒரு குட்டு வைக்கும் மிஷின் வச்சுருவாங்க.

said...

வாங்க கீதமஞ்சரி.

போற போக்குலே கொஞ்சம் சரித்திர வகுப்பும் எடுக்காமப்போனால் நான் என்ன சரித்திரி சொல்லுங்க?

அப்பப்பக் கொஞ்சம் பூகோளத்தையும் சேர்த்துக்குவேன்:-)))))

சிட்னியில் இப்ப இருக்கீங்க போல! அக்ராஸ் த டிச் என்று கொஞ்சம் உங்கூர் விவரம் உண்டு நேரம் இருந்தால் வாசிச்சுச் சொல்லுங்க. வெறும் 8 பகுதிகள்தான். அதுலே கடைசி வெறும் படங்களே:-)

ஆ 'ரம்பம்' இங்கே:-)

http://thulasidhalam.blogspot.com/2006/10/t-d-1.html

said...

பிரிஸ்பேன் பயணமா.. கலக்குங்க.

ஒங்களோட பயணக்கட்டுரைகளைப் படிக்கிறதே ஒரு இன்பந்தான். எத்தனையோ ஊர்கள். அத்தனைக்கும் போக முடியுமா? போனவங்க மூலமா இப்படிக் கதையும் படமுமா தெரிஞ்சிக்கிறதுதான். :)

காப்பியத் தொட்டுட்டீங்களே டீச்சர். :) வெளிநாட்டுல இத்துணூண்டு சின்ன குப்பியில் பால் குடுப்பாங்க. சயனைடு குப்பி கூட கொஞ்சம் பெருசா இருக்கும் போல.

வெளிநாடு போயாச்சுன்னா நான் காப்புசீனோவிடம் சரணடைஞ்சிருவேன். வேற எதுவும் பிடிக்கிறதில்லை.

ஆம்ஸ்டர்டாம் போன புதுசுல நல்ல காப்பி கெடைக்காம.. கடகடையா ஏறி எறங்கி.. கடைசில ஒரு கடையில ஒரு டச்சம்மா என்னோட சோகக்கதையக் கேட்டு அவங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி காபி போட்டுக் கொடுக்க, அது அட்டகாசமா இருந்ததும் நினைவுக்கு வருது.

said...

பச்சைப் பால் காப்பி. கேட்கவே என்னமோ போல் இருக்கே.
எங்களுக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் சூடு சோற்றிலே சூடான காபியை பிசிந்து சாப்பிடுவார். குழந்தையிலேருந்து பழகிட்டாராம்... உவ்வே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இந்தக் காஃபி நம்மை இப்படி ஆட்டி வைக்குதே!

மைக்ரோவேவ் காலத்துக்கு முந்தி, ஒரு எவர்சில்வர் டம்ளர் கொண்டு போவேன்.
அறையில் இருக்கும் வெந்நீர் கெட்டில் மூடியைத் திறந்துட்டு (கூஜா டம்ப்ளர் மாதிரி) டம்ப்ளர் பால் வச்சால் தண்ணீர் கொதிக்கும்போது பால் சூடாகிரும்:-)

said...

வாங்க ஜீரா.
தொடாம எப்படி? காலையில் கண் முழிச்சதும் கடவுளுக்கு முன்னே காஃபிதானே வந்து நிக்குது மனசுலே:(

கப்புச்சீனோ வந்துச்சோ.... தப்பிச்சோமோ ன்னுல்லே இருக்கு:-)

said...

வாங்க மோகன்ஜி.

தொட்டில் பழக்கமா!!!!

நான் சுடு சாதம் சூடான பால் & உப்பு சேர்த்து சாப்பிடுவேன். தொட்டுக்க ஒரு வாழைப்பழம். கோபால் முகத்தை அப்பப் பார்க்கணுமே:-))))))

said...

///கோபாலுக்கு கோரு க்ளப் கார்டு இருப்பதால் நமக்கு அவுங்க லௌஞ்சில் இலவசமாவே சாப்பிட்டுக்கலாம். ///

ஹி ஹி ஹி:)))

பயணத்தை இனிதாக முடிச்சிட்டு வாங்க.பேஸ்புக் நினைவில் கன்னா பின்னான்னு லைக் போட லைக் பட்டனைத் தேடறேன் காணலை.
எல்லாமே லைக்க்க் துளசி
:)

said...

வாங்க கவிதாயினி..

எல்லாத்தையுமே நீங்க லைக் பண்ணது எனக்கு ரொம்ப லைக்கிருச்சு:-)))

ஃபேஸ்புக்கில் நம்ம சுவரில் யாரையும் விளையாடவிடலை:-))))

said...

காப்பியுடன் பயணமும் சுவைக்கின்றது.

said...

வழக்கம் போல் இத்தொடரும் நன்றாக இருக்கு.

said...

\\நானும் மகளும் ரெண்டு வருசமா இங்கிருந்து எங்கேயும் போகலை:(\\
என்ன கொடுமை இது. காப்புசீனு கொழுப்பு ஆச்சே.
\\விமானத்தில் டாய்லெட் பயன்படுத்த தனிக்கட்டணம் கேக்கலை:-)\\ கம்பெனி நட்டத்துல போகுதுன்னு சொல்லி சீக்கிரம் அதுக்கும் கேட்டாலும் கேப்பாங்க சொல்லமுடியாது.

said...

//நம்ம 'ருசிகண்ட பாழாப்போன நாக்கு'க்குப் பச்சைப்பால் ஊத்திக் குடிக்கும் காஃபி இன்னும் பழகமாட்டேங்குது. //

பெரும்பாலும் ஓட்டல் காலை உணவுகளில் கெல்லாக்ஸில் பச்சைப் பாலில் ஊற்றிச் சாப்பிடுவது தான் வழக்கம். அதுவும் ஒரு ருசியாகத்தான் இருக்கு.

காப்பிக்கு பால் சேர்கிற வழக்கம் ஆசிய நாடுகளில் தான் இருக்கு, மற்ற நாடுகளில் ப்ளாக் காப்பி தான் குடிக்கிறார்கள், கும்பகோணம் டிகிரி காப்பி குடிச்சிட்டு அதைக் குடிக்கச் சொன்னால் நமக்கு கசக்கும் தான்.

ஜிபிஎஸ் வசதி இல்லையா பின்னே ஏன் மோட்டலுக்குச் செல்ல தடுமாறீனீர்கள்

said...

வாங்க மாதேவி.

கூடவே வர்றதுக்கு நன்றிகள்.

said...

வாங்க குமார்.

முன்பு எழுதுனதில் உள்ளவைகளை விட்டுட்டு எழுதணுமுன்னுதான் பார்க்கிறேன்.

ஆனால்........


வருகைக்கு நன்றி.

said...

வாங்க கோவியாரே,

கார்ன்ஃப்ளேக்ஸ்க்கும் ம்யூஸிலிக்கும் பச்சைப்பால் ஓக்கே. ஆனா.... நீங்க சொன்னதுபோல் கும்பகோணம் டிகிரிக்காப்பி நாக்குக்கு மத்ததெல்லாம் எடுபடாது:-)

ஜிபிஎஸ் வச்ச வண்டி கிடைக்கலை. கேட்டால்.... அதான் மேப் இருக்கேன்னு சொல்றாங்க. போன முறையும் இதே கதிதான்.

பெரிய வண்டிகளில் ஜிபிஎஸ் இருக்கு. நாமோ ரெண்டு பேர்தானேன்னு சின்னதே எடுக்கறோம்.

ஆனா; கோபாலின் ப்ளாக்பெரியில் உள்ள ஜிபிஎஸ் மாதிரி சாலை காமிக்கும் லொகேஷன் மேப் மூலம் மகள்தான் அப்பாவை கைடு பண்ணிக்கிட்டு இருந்தாள்.

எனக்கு இன்னும் அதெல்லாம் பழக்கத்துக்கு வரலை.:(

செல்ஃபோன் தடுமாற்றம் நிறைய இருக்கு என்னிடம். பழைய நாய்க்குப் புது வித்தை கற்றுக்கொடுப்பது கஷ்டமே:-)

said...

வணக்கம் துளசி கோபால்.
முதலில் தங்கள் திருமணநாள் சோடிப்படம் கண்டேன்.
முதலில் பூவையும் வாழ்த்தையும் பிடியுங்கள்! நீடு நலமுடன் ஆரோக்கியமாக மகிழ்வாக வாழ்வு தொடரட்டும்.
பயணக்கதை இன்று 1 வாசித்தேன். இதில் காப்பிப் பிரச்சனை எனக்கும் நிறையப் பால் வேணும். இல்லாவிடில் 3.4. குப்பிகள் உடைக்க வேண்டும். மற்றும் படி சுவையாகப் போகிறது. நன்றி.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

said...

வாங்க வேதா,

வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

சோடிப்புறாக்களா இருக்கோமா:-))))

said...

வாங்க குறும்பன்.

ஆஹா.... கப்புசீனோ.....கொழுப்பைக் கொழுப்பாலேதான் அடிக்கணும். அதான் ஒரே அடி:-)

எப்பவாவதுதானே..... அதிலும் பயணங்களில் மட்டுமே. இல்லைன்னா காஃபி ஆறிப்போய் கிடைக்குதே!