Friday, October 03, 2008

திருப்பதிக்குப் போயிவந்தேன் நாராயணா!!!!!(மரத்தடி நினைவுகள்)

பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு இந்தப் பதிவை மரத்தடி நினைவுகளில் பகுதியில் மீள்பதிவு செய்கின்றேன். உங்கள் அனைவருக்கும் சிங்கைச் சீனு அருள்புரிவார். திருப்பதியில் கால்வைக்க முடியாத அளவு கூட்டம். அதான் சிங்கைக்குப் போயிறலாம். சரியா?


திருப்பதிக்குப் போயிவந்தேன் நாராயணா!!!!!

முன் குறிப்பு: சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல், ரத்தினச் சுருக்கம் இப்படிப்பட்டதெல்லாம்
எனக்கு வராது. எல்லாத்தையும் 'விஸ்தரிச்சுச்' சொல்லணும் எனக்கு. அப்பத்தான்
என் மனசு ஆறும்! எச்சரிக்கை செஞ்சாச்சு! இனி உங்க இஷ்டம்!


எங்களுக்கு ஃபிஜித்தீவில் போய் வேலை பார்க்கும் வாய்ப்பு வந்தது. ஒரு மூன்று வருஷ ஒப்பந்தம்.
இதற்கு முன்பும், சில வெளிநாடுகளுக்குப் போக வாய்ப்புகள் வந்தாலும், ஏனோ அங்கெல்லாம் போகத்
தைரியம் வரலை. ஆனால் இந்த தடவை போகலாம் என்று முடிவே செய்தோம். ஹூம்,
விதி யாரை விட்டுச்சு!

முதல் வேலையாக, வீட்டுச் சாமான்களை எங்கே போட்டுவிட்டுப் போகலாம் என்று யோசனையாக
இருந்தது. அப்போது நாங்கள் 'பூனா' வில் இருந்தோம். அனேகமாக அங்கே எல்லோருக்குமே சின்ன
வீடுகள் (!!!!!!!)தான். (நீங்கள் தப்பாக நினைத்துக் கொண்டால் அது என் தப்பல்ல)

ஆனால், எங்களுக்கு 'காட் ஃபாதர்' மாதிரி இருந்த ஒரு நண்பர், போனால் போகட்டும்
என்று, அவர் வீட்டில் பரண்மேலே கொஞ்சம் இடம் கொடுத்தார். நமக்கு அது போதுமே. நம்மெல்லாம்
யாரு? இருக்க இடம் குடுத்தா.....

அடுத்த கவலை, நம்ம 'ரோல்ஸ் ராய்ஸ்'. கட்டாயம் வித்துடணும்.ஏன்? வழிச்செலவுக்குக் காசு
வேணாமா? எங்ககிட்டே இருந்த 2 சக்கரவண்டிக்கு, நாங்க செல்லமா வச்ச பேருதான் 'ரோல்ஸ் ராய்ஸ்'
நீங்க 'அடச்சீ, சைக்கிளுக்கா இந்தப் பேருன்னு ?' அப்டின்னு நினைச்சிங்க தானே? அதுதான் இல்லே.
நம்ம 'ஹீரோ ஹோண்டா' தான் அது. அதை வாங்கறதுக்கு நாங்க பட்டபாடு..ஐயோ! தலையால
தண்ணி குடிச்சுட்டோம். அப்ப நாங்க ரெண்டுபேரும் ரொம்பவே ஒல்லியாவேற இருந்தமா, அதனாலே
அந்த வண்டியே பொருத்தம்தான். பெரியவண்டியா இருந்திருந்தா, அதைத்தூக்கி நிறுத்தக்கூட நம்மாலே
முடிஞ்சிருக்காதே! 'வெஜிடேரியன், பலமில்லை' ஞாபகம் வருதா?

ஊருக்குப் போகறதுக்கு முன்னாலே, வீட்டுலே சொல்லிட்டுப் போகவேணாமா? போனோம். அப்படியே
குலதெய்வத்துகிட்டேயும் போய் சொல்லிகிட்டு கிளம்பலாம்னு திருப்பதிக்கும் போனோம்.

ராத்திரி சுமார் பத்தரைமணிக்கு, திருப்பதி ரயில்வே ஸ்டேஷனில் நிக்கறோம். எங்களைப் பார்த்தவுடனே
ரொம்பவும் தெரிஞ்சமாதிரி சிரிச்சுகிட்டே ஒரு பையன் வந்தான். "மலைக்குதானேக்கா போகணும்? "
அப்படின்னு 'சுந்தரத்தெலுங்கில்' கேட்டான். நானும் "அவுனு" அப்படின்னு சொல்லிவச்சேன்.
தெலுங்குல பதில் வந்ததுமெ அவனுக்கு இன்னும் சந்தோஷமா இருந்ததுன்னு நினைக்கிறேன்.'கட கட'ன்னு
பேச ஆரம்பிச்சுட்டான். எங்க இவருக்கு, தெலுங்கு கொஞ்சம் புரியும்.ஆனா எனக்குத் தாய்மொழி தெலுங்குதான்.
ரொம்ப நாளா, தெலுங்குலே பேச வாய்ப்பு இல்லாமல் இருந்தேனா, இதுதாண்டா 'சான்ஸ்'னு நானும் அந்தப்
பையன்கூட 'லொடலொட'ன்னு பேசிகிட்டே இருந்தேன்.

வாங்க அக்கா, நம்ம(!) வண்டி இருக்கு. மேலெ போயிரலாம். சுப்ரபாதத்துக்கு நீங்க கோயிலுக்குள்ளெ இருப்பீங்கன்னான்.
ஆஹா! நமக்கு அது போதுமே! எவ்வளவு காசுன்னு பேரம் பேசி முடிச்சு, 'கார்' இருக்கற இடத்துக்கு வந்தோம்.

சுமாரான ஒரு வண்டி இருட்டிலே நின்னுகிட்டு இருந்தது.'ட்ரைவர் ஸீட்'லே இன்னொரு பெரிய பையன் இருந்தான்.
நாங்க ஏறி உக்காந்தாச்சு. வண்டியும் கிளம்பிச்சு! கடைகள் இருக்கற பக்கமா வண்டியை நிறுத்தினான்.

"நீங்க சாப்பிட்டாச்சாக்கா?" ன்னு ரொம்ப அக்கறையாக் கேட்டான்.

"இல்லே! ஏதாவது பழம்,கிழம்(!) கிடைச்சாப்போதும்"

"அதுக்குத்தான்கா இங்க நிறுத்துனோம். ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?"

ஆஹா...... என்ன உபசரிப்பு! 'எங்கிருந்தோ வந்தான் கண்ணன்'னு பாடாத குறைதான்!

அந்த ரெண்டு பையன்களும் எங்களை வண்டியிலேயே விட்டுட்டு " இதோ வந்துடறோம்' னு போனானுங்க.

ஒரு பத்து, பதினைஞ்சு நிமிஷத்துலே திரும்பிவந்து வண்டியை கிளப்பிட்டானுங்க. ஒரு இருட்டான இடத்துலெ
வண்டி நின்னுச்சு. பாத்தா,தேவஸ்தானம் 'பஸ் ஸ்டாண்ட்' கொஞ்ச தூரத்துலே தெரியுது.

ஒரு பையன் மட்டும், (அதுதான் என் தம்பி! ) இறங்கிப்போனான்.'டிரைவர்' ஏதோ பாட்டை முணுமுணுத்துகிட்டு
தாளம் போட்டுகிட்டிருந்தான்! கொஞ்ச நேரம் கழிச்சு, அவனும் வண்டியைவிட்டு இறங்கி வெளியே போய் நின்னுகிட்டான்.

நாங்க காத்திருந்தோம்! காத்திருந்தோம்! ஆளு வரலே! இருட்டுலெ கொட்டக் கொட்ட முழிச்சுகிட்டிருக்கோம்!

'டிரைவர் பையன்' இப்ப இருட்டுலே கர்ம சிரத்தையா வண்டியைத் துடைச்சுகிட்டுருக்கான்!

ரெண்டு மூணு நாளா ரொம்ப அலைஞ்சோமா, சொந்தக்காருங்க வீடு, பழைய சினேகிதங்களைப் பாக்கறதுன்னு.
என் வீட்டுக்காரருக்குத் தூக்கம் கண்ணைச் சுத்திகிட்டு வருது. 'போனவன் போனாண்டி'ன்னு நான் இருக்கேன்.

'டிரைவர் பையன்' திடீர்னு ஓடுறான். என்னன்னு பாத்தா, இருட்டுலே மூணுபேரு வந்துகிட்டிருக்காங்க. இவன் அவுங்க
கிட்டேதான் போறான். 'இதென்னடா வம்பாப் போச்சு'ன்னு நான் 'திக் திக் 'னு அடிக்கற நெஞ்சோடு உக்காந்துருக்கேன்!

கிட்ட வந்தவுங்களைப் பாக்கறேன். 'என் தம்பி'யும், ஒரு ஆளும், ஒரு பொம்பளையும்! ஒரு அம்பது வயசு இருக்கும் அந்த
அம்மாவுக்கு. அந்த ஆளுக்கு என்ன வயசுன்னு அனுமானிக்க முடியலே. ஸ்வெட்டர் போட்டு, ஒரு குல்லாவும் வச்சிகிட்டு
ஒரு 'ஷால்' வேற போத்திகிட்டுருந்தார். முகம் சரியாத் தெரியலை.

'என் தம்பி' சொல்றான் "அக்கா இவுங்களும் மலைக்குத்தான் போறாங்க. நீங்க ரெண்டே பேருதானே, இன்னும் ரெண்டுபேரு
இருந்தா, கொஞ்சம் பணம் கூடக் கிடைக்குமேன்னுதான். கோவிச்சுக்காதீங்க"

அடப் பாவி! "இதை சொல்லிட்டுப் போகக்கூடாதா?"

"இல்லைக்கா, நீங்க வேண்டாம்னு சொல்லிட்டா என்னா செய்யறதுன்னுதான்..... பெட்ரோல் விலை எல்லாம் ஏறிப்போச்சுக்கா!
கட்டுப்படியாவறதில்லை"

"அதுக்கு ஏன் இவ்வளோ நேரம்?"

"ரெண்டுபேராக் கிடைக்கலைக்கா. மூணு நாலுபேராத்தான் இருக்காங்க. அவ்வளவு பேருக்கு இடமில்லையே!"

" தொலையட்டும். இவ்வளவாவது நினைச்சுப்பார்த்தியே"

அவுங்ககிட்டே இவன் என்ன சொன்னானோ, அவுங்க என்ன புரிஞ்சிகிட்டாங்களோ தெரியாது. நான் எங்க வீட்டுக்காருக்கு
இதையெல்லாம் தமிழ்லே மொழிபெயர்த்துச் சொன்னப்பதான் அவுங்களுக்கும் புரிஞ்சதாம்!

"இப்பவே எவ்வளோ நேரம் போயிருச்சு. சீக்கிரம் கிளம்பு"ன்னு சொன்னேன்.

"கவலைப்படாதேக்கா! சுப்ரபாதத்துக்கு உங்களை மேலெ கொண்டுபோய் சேர்த்துடுவேன்"

வண்டி கிளம்பியாச்சு.நாங்க நாலுபேரும் பின்னாலே அடைச்சு உக்காந்திருக்கோம். முன்னாலே 'என் தம்பி' டிரைவர் பக்கத்துலே
உக்காந்துகிட்டு, ஒரு துணியைவச்சு, 'கியர்' கம்பியைப் பிடிச்சுகிட்டு இருக்கான். நான் அதை இப்பத்தான் கவனிக்கிறேன்!
என்னன்னு கேட்டா,'அப்படிப் பிடிக்கலைன்னா வேற 'கியர்' மாறிடுமாம். ஏதோ ரிப்பேர் பண்ணனுமாம். நாங்க பயப்பட வேணாமாம்!
கரெக்ட்டா சுப்ரபாதத்துக்கு மேலே கொண்டுபோய் சேர்த்துடுவானாம்!

கொஞ்ச தூரம் மலை மேலே போய்க்கிட்டிருக்கு வண்டி. ஒரே கும்மிருட்டு! அப்பல்லாம் மலை ஏறவும், இறங்கவும் ஒரே பாதைதான்!
எப்பன்னா, இருவத்திமூணு வருசத்துக்கு முன்னாலே! மணி ரெண்டாகப் போகுது.

முக்கி, முனகி மெதுவா ஏறிக்கிட்டிருந்த வண்டியை ஒரு இடத்துலே நிறுத்திட்டான். அவன் எங்க நிறுத்துனான்? அதுவே நின்னு போச்சு!

'என்ன ஆச்சு'ன்னு மூணு குரலும், 'ஏமையிந்தி'ன்னு ஒரு குரலுமா கேக்கறோம்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லே. பயப்பட வேண்டாம். கரெக்ட்டா சுப்ரபாதத்துக்கு மேலெ போயிடலாம்"

பையனுங்க ரெண்டுபேரும் இறங்கி என்னவோ பேசுனாங்க. எங்க வீட்டுக்காரருக்கும் தூக்கம் போயிருச்சு.அவரும் இறங்கி என்னன்னு
பாத்தார். மூணு பேருமா வண்டியை மெதுவாத் திருப்பி நிறுத்துனாங்க. இப்ப மலைப் பாதையிலே வண்டி இறக்கம்பாத்து நிக்குது.
திருப்பி,நாம் கீழே போறோம்னு நினைச்சேன். ஆனா,வண்டி மெதுவா மேலெ ஏறுது. எ.வீ ( எங்க வீட்டுக்காரர்)இப்ப முன்னாலே
'என் தம்பி'பக்கத்துலே உக்காந்துகிட்டு, கியரைப் பிடிக்க கை கொடுத்துகிட்டிருக்கார்!

'ரிவர்ஸ்'லே வண்டி மேலெ போகுது! இருட்டுலே எங்கெ இருக்கோம்னு கூடத்தெரியலே!

"ஐயோ... என்ன இப்படி ஓட்டறே? ஏன்? ஏன்?" பதட்டமா இருக்கு.

இப்போ, பக்கத்துலே உக்கார்ந்திருந்த அம்மா, "பகவானே என்னடா சோதிக்கறே? வண்டி ஒழுங்காப் போய்ச்சேர்ந்துடுமா?"

நான் ரொம்பப் பெரிய மனுஷியாட்டம் சொன்னேன், " அதான் சுப்ரபாதத்துக்கு மேலெ போயிடலாம்னு சொல்றானே"

இப்ப அந்தம்மா சொன்னாங்க, " இவருக்கு ஹார்ட் ஆபரேஷன் முடிஞ்சு இன்னைக்குத்தான் வேலூர்லே இருந்து திரும்பிப்
போயிண்டிருக்கோம். வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி 'ஸ்வாமி தரிசனம்' பண்ணின்டு போறதா வேண்டுதல். அதுதான்
ஆஸ்பத்திரிலேந்து நேரா வந்திருக்கோம். நல்லபடியா நடக்கணுமேன்னு பயம்மா இருக்கு"

எனக்கு 'திக்'ன்னு ஆயிருச்சு. ஏதோ பெரிய உதவி பண்ணற மாதிரி, தள்ளி உக்காந்து, அவுங்க ரெண்டுபேருக்கும் தாராளமா
இருக்க இடம் கொடுக்கறேன்!

நல்லவேளையா, எந்த வண்டியும் மேலே இருந்து கீழே அதுவரைக்கும் வரலே! எங்க வண்டியும் கொஞ்சம் கொஞ்சமா மேலே
'ரிவர்ஸ்'லேயே போய்கிட்டிருக்கு.

'உயிரைக் கையிலே பிடிச்சுகிட்டு இருந்தோம்'னு சொல்வாங்க பாருங்க, அதைத்தான் செஞ்சுகிட்டிருந்தோம். ஹார்ட் ஆபரேஷன்
மாமா வேற ஏதோ முனகிக்கிட்டு இருக்கார். ஏதோ 'ஸ்லோகம்' மாதிரி கேட்டது.

'டொக்'ன்னு சத்தம்போட்டு வண்டி நின்னுபோச்சு. முன்சீட்டு மூணு பேரும் இறங்கி என்னன்னு பாத்தாங்க. 'ஸீட்'டுக்கு அடியிலே
தேடி ஒரு தகரடப்பாவை எடுத்து, என்னவோ செஞ்சான் 'ட்ரைவர் பையன்'

என்னன்னு கேட்டத்துக்கு 'பெட்ரோல்' ஊத்துனானாம்!

மேலே போறப்போ, வழியிலே ஒரு புள்ளையார் சந்நிதி. மலைப்பாறையிலே இருக்கும். அங்க வந்ததும் நாங்க எல்லாருமெ கீழே இறங்கி சாமி
கும்பிட்டோம். அந்தம்மாவுக்கு தொண்டைகம்மி, அழற குரலிலே 'பகவானே பகவானே'ன்னு சொல்றாங்க!

நான் கோவமா 'ட்ரைவர்'பையன்கிட்டேயும் 'என் தம்பி'கிட்டேயும் சத்தம் போட்டேன். அக்கா, அக்கா கோபம் வேணாம். இன்னும் கொஞ்ச
தூரம்தான்னு கெஞ்சறானுங்க!

அப்பதான் சொல்றான், வண்டியிலே பெட்ரோல் குறைவா இருந்துச்சாம். ரிவர்ஸ்லே மேலே போனால் வண்டியோட இஞ்சின் பகுதி கீழே
பாத்து இருக்கும். அப்ப அதுலே இருக்கற பெட்ரோலை வச்சே சமாளிச்சு இஞ்சினை ஓட்டிக்கலாமாம்! இது எப்படி இருக்கு? இதுவரைக்கும்
இந்தமாதிரி ஒரு விஷயம் நாங்க கேள்விப்பட்டதேயில்லை!( நமக்குதான் அப்ப 'காரை'ப்பத்தி ஒண்ணும் தெரியாதே!)

'கவலைப் படாதீங்க. மேலே போயிரலாம், மேலே போயிரலாம்'னு சொல்றானே, "பெருமாளே ! எந்த 'மேலே'யைச் சொல்றான்னு
தெரிலையே"

ஏன் எல்லாரும் சட்டுனு திரும்பி என்னைப் பாக்கறாங்க? சத்தமா சொல்லிட்டேனா?

திரும்ப எல்லாரும் வண்டிக்குள்ள வந்து உக்காந்தோம். பழயபடி மெதுவா மலை ஏறிகிட்டு இருக்கு வண்டி. ரொம்ம்ம்ம்ப நேரமான இப்படியெ
போச்சு.

பொழுது 'பலபல'ன்னு விடிய ஆரம்பிச்சது. எங்க இருக்கோம்னு தெரிலே. ஆனா வெளிச்சம் வந்துகிட்டு இருக்கறதால பயம் கொஞ்சம்
போறமாதிரி இருந்தது. ஆனாலும், 'ரிவர்ஸ்'லே பாக்கறப்ப அந்த மரக்கூட்டங்களும், அதல பாதாளமா இருக்கற பள்ளங்களும்.....
ஐயோன்னு வயித்தைக் கலக்குது. இன்னும் நிஜமாவே கொஞ்ச தூரம்தான்னு சொன்னான். அப்ப மேலெ இருந்து வண்டிங்க ஒண்ணொண்ணா
கீழே வர ஆரம்பிச்சது. மத்த வண்டிங்களைப் பாத்தவுடனே சந்தோஷம் வந்துச்சு.அந்த சந்தோஷத்தை உடனே அமுக்கற மாதிரி நம்ப வண்டி
நின்னே போச்சு.

நல்லவேளையா ஏத்தம் இல்லாத இடமா இருந்தது! கீழே இருந்தும் வண்டிங்க வர ஆரம்பிச்சு, எங்களைத் தாண்டிகிட்டு போகுதுங்க! சூரிய
உதயம் ஆகி, கரகரன்னு வெயிலு மேலே ஏறுது!

அப்பதான், இந்தப் பசங்களை நல்லாப் பாக்கறேன். ரெண்டும் சின்ன பையனுங்க! டிரைவர்க்கு ஒரு இருவது வயசுகூட ஆகியிருக்குமான்னு
சந்தேகம். என்னடா பண்ணப் போறீங்கன்னா, சொல்லுதுங்க, கொஞ்சம் பெட்ரோல் மட்டும் இருந்தா மேலெ போயிரலாமாம்! பயப்படத்தேவை
இல்லையாம். இதுபோல நிறையதடவை வண்டியை ஓட்டியிருக்காங்களாம்.வழக்கமா மேலெ போறவரைக்கும் இருக்கற பெட்ரோலு
இன்னைக்குன்னு பாத்து கம்மியாயிருச்சாம். நாங்க மேலே போற வண்டி எதையாவது நிறுத்தி, கொஞ்சம் பெட்ரோல் கடன் வாங்கிக்
கொடுத்தா, மேலெ போனவுடனே அங்க இருக்கற பெட்ரோல் பங்க்லே வாங்கிக் குடுத்தடலாமாம்.

"அடப் பாவிங்களா! நீங்களே போய் கடன் வாங்குங்கடா"

" அக்கா, அக்கா நாங்க போய் கை காட்டுனா யாரும் வண்டியை நிறுத்தமாட்டாங்க. நீங்க கேளுங்கக்கா"

நானும் இவருமா வண்டியை விட்டு இறங்கி நின்னுகிட்டு போற வர்ற வண்டிங்களைக் கொஞ்சநேரம் வேடிக்கை பாத்துகிட்டு இருந்தோம்.

அப்ப மேலே போற கார் ஒண்ணு எங்களைக் கடந்து போறப்ப கொஞ்சம் மெதுவாப் போனது போல இருந்துச்சா, நான் கையை நீட்டுனேன்.
உடனே அந்த வண்டி நின்னுச்சு. என்னன்னு விஷயத்தைச் சொன்னோம். நல்லவங்களா இருந்தாங்க.தமிழ்க்காரங்கதான்! எங்க கதையைக்
கேட்டுச் சிரிச்சுட்டு,அவுங்க வண்டிலேந்து, அவசரத்துக்குன்னு வச்சிருந்த பெட்ரோலை குடுத்தாங்க.ஒரு லிட்டர் இருக்கலாம். மேலே போனதும்
திருப்பித்தறோம்னு சொன்னோம். அதெல்லாம் வேண்டாம். பத்திரமாப் போய்ச்சேருங்கன்னு சொல்லிட்டாங்க.

அப்புறம் வண்டியைக் கிளப்பி,திருப்பி நிறுத்தி, எல்லா வண்டியும் நேராப் போறது போல மேலே போய்ச் சேர்ந்தோம்.அப்ப மணி என்னன்னா
எட்டு. 'சுப்ரபாதத்து'க்கு, அதாவது மறுநாள் சுப்ரபாதத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துட்டான்!

'பெட்ரோல் பங்க்'கைப் பாத்தவுடனே, 'நிறுத்துங்கடா, பெட்ரோல் போடலாம்'னு சொன்னதுக்கு அவனுங்க சொன்னது என்னன்னா,
கீழே போய் போட்டுக்குவாங்களாம். மேலே விலை ஜாஸ்தியாம்!

எப்படிடா போவீங்கன்னா அதுக்கும் பதிலை ரெடியா வச்சிருக்கானுங்க. கீழே போறப்ப இஞ்சினை ஆ·ப் செஞ்சிறலாமாம். இறக்கம்ன்றதாலே
அந்த வேகத்துலேயே வண்டி போயிடுமாம். சவாரி கிடைச்சவுடனே கிளம்பிடுவானுங்களாம்!

'எப்பக்கா நீங்க திரும்புவீங்க? நாங்க வேணா 'வெயிட்' பண்ணட்டா'ன்னு கேட்டான் பாருங்க ஒரு கேள்வி!

என்றும் அன்புடன்,
துளசி.

நன்றி: மரத்தடி. ஆகஸ்ட் 2004மூலவர்


உற்சவர்கோயில் முன்மண்டபம்

லட்சதீபம் ஏற்றும் அன்பர்கள்.

43 comments:

said...

ஆஹா, ஈதண்டி சேவா.

ரொம்ப சிரிப்பு வரதால எழுத முடியல தாயே:)

said...

சிரிப்பா சிரிச்சாச்சு... ;)))))
நல்ல சுப்ரபாதம் கேட்டீங்க.. :))))

said...

சும்மா கலக்குங்க!

said...

வாங்க வல்லி.

இன்னிவரைக்கும் அந்த சுப்ரபாத சேவா போகவே முடியலைப்பா.

பார்க்கலாம் எப்ப 'நிஜமாவே' வாய்க்கப்போதோ??????

said...

வாங்க தமிழ் பிரியன்.

இப்படிப் புலம்ப வச்சுட்டானேப்பா 'என் தம்பி' :-)))))

said...

வாங்க ஜோதி பாரதி.

இதெல்லாம் ஒரு கலக்கலா? 'சம்பவம்' நடந்த சமயம் எங்க நாலுபேரோட வயிறு கலக்குனதை நீங்க பார்த்துருக்கணும்:-)))))

படங்கள் எல்லாம் உங்கூர் கோயிலில் போன எடுத்தது!

said...

டீச்சர் சூப்பர் தரிசனம் போல!! ;))

இந்த முறை ஊருக்கு போன போது நானும் அம்மாவும் சொன்றோம். எல்லாம் ட்ராவல்ஸ் மூலமாக தான். சென்னையில் பெரிய ட்ராவல்ஸ்னு தான் பெயர் ஒன்னும் சரியில்லை. ஒரு தலைக்கு 450 ரூபாய். வண்டி தாம்பரம் கடந்ததும் வண்டி கைடு வண்டி இங்க நிக்கும் இத்தனை மணிக்கு தரிசனம் அது இதுன்னு மூணு மொழியில பேசிட்டு "எனக்கு ஒரு 25 ரூபாய் கொடுக்கனும்னு சொன்னார் எதுக்கு கேட்ட இப்ப சொன்னதுக்குன்னு சொன்னார். அடப்பாவிகளான்னு ஆயிடுச்சி...வர வர காசு தான். ஒரு இடத்தில் கூட அவர்களின் வேலை இல்லை. நாமே தான் டிக்கெட் எல்லாம் எடுத்து போகனும்.


\\சுப்ரபாதத்துக்கு நீங்க கோயிலுக்குள்ளெ இருப்பீங்கன்னான்\\

அதான் சுப்ரபாதம் மாதிரி இதையே சொல்லிக்கிட்டு வந்திருக்கான் போல!!! ;))

said...

//'எப்பக்கா நீங்க திரும்புவீங்க? நாங்க வேணா 'வெயிட்' பண்ணட்டா'ன்னு கேட்டான் பாருங்க ஒரு கேள்வி!//

கிட்டதட்ட ஒரு 4 மணி நேரம் உங்களுடன் இருந்திருக்கிறார்கள், ரொம்ப அப்பிராணியாக தெரிஞ்சிருக்கும், இந்த அக்கா ரொம்ப நல்லவர்னு நெனச்சிருப்பாங்க போல

:)))))

said...

//'எப்பக்கா நீங்க திரும்புவீங்க? நாங்க வேணா 'வெயிட்' பண்ணட்டா'ன்னு கேட்டான் பாருங்க ஒரு கேள்வி!//

எவ்வளவு பொறுப்பான தம்பி பருங்க :-)) இதுதான் வாடிக்கையாளர் சேவைங்கிறது.

said...

முன்னமே படிச்சதுதானே!! கோவிந்தா கோவிந்தா!!

said...

ரொம்ப சூப்பர்....இப்போ படித்தாலும், இன்னும் 10 வருஷம் கழித்துப் படித்தாலும் சிரிக்கவைக்கும் நிகழ்வு. :-)

said...

வாங்க கோபி.

ராவோட ராவா நேராப்போய்க் கோவிலில் நிக்கமுடியாமச் செஞ்சுட்டான். அதுக்கப்புறம் குளிக்க, உடைமாத்திக்கன்னு வசதிக்காக அறைக்கு அலைஞ்சது தனிக்கதை.

ஆனா இப்ப நினைச்சுப்பார்த்தா பயமாத்தான் இருக்கு. அந்த இருட்டில், ரிவர்ஸ் போகும் காருக்கு
விபத்து நடந்துருக்கும் வாய்ப்பு அதிகம்தான். பெருமாளே கருணையோடுக் காப்பாத்திட்டார்ன்னு நினைச்சுக்குவேன்.

said...

வாங்க கோவியாரே.

கணக்குலே இப்படி வீக்கா இருந்தா எப்படி?

இரவு பத்தரை முதல் காலை எட்டுவரை தம்பியோடு இருந்தோம். அதான் படைக்கும் அஞ்சவில்லை:-))))

said...

வாங்க ஸ்ரீதர் நாராயணன்.

அப்ப இந்த அவுட்சோர்ஸிங் கூட வராத காலம். ஆனாலும் சேவை அற்புதம். இல்லையா? :-)))

said...

வாங்க கொத்ஸ்.

oops.......நவராத்திரி சமயம் 'பழைய சோறு' தின்னக்கூடாதோ?

அடடா........

said...

ஏங்க இது நெசமே நெசமா?

ரொம்ப 'புரியலத்துவம்' இருக்கற ஆளா நீங்க?

அதுதான் அரசுப் பேருந்து நிலையத்தில் 'தம்பி' நிறுத்தினானே,பஸ்ல ஏறி தேமேன்னு உட்கார வேண்டியதுதானே?

மன்னிச்சுடுங்க,கேட்காம இருக்க முடியல...

said...

திருப்பதி நினைவுகள் எனக்கும் நிறைய இருக்கு....

//'எப்பக்கா நீங்க திரும்புவீங்க? நாங்க வேணா 'வெயிட்' பண்ணட்டா'ன்னு கேட்டான் பாருங்க ஒரு கேள்வி!//

:-))))

ஒவ்வொரு பிரம்மோற்சவத்துக்கும் 9 நாள் அங்க தான் இருப்பேன்...தில்லி வந்த நாளிலிருந்து இந்த பிரம்மோற்சவம் மிஸ் பண்றேன்.. இப்பவும் நாளு நாளா குடும்பமே அங்க இருக்கு...:-(

ஆனா அந்த நினைவுகளே அத்தன ஒரு சுகத்தை கொடுக்குது...

பதிவுக்கு நன்றிங்கோவ்.....

said...

'எப்பக்கா நீங்க திரும்புவீங்க? நாங்க வேணா 'வெயிட்' பண்ணட்டா'ன்னு கேட்டான் பாருங்க ஒரு கேள்வி!

அந்த தம்பிங்க கேட்டதுல என்னங்க தப்பு இருக்கு !
பெட்ரோல் இல்லாமையே மேல கொண்டுவந்த
அவங்களுக்கு ,திரும்ப கீழ வரது சாதாரண விஷயம் தானே ?

அதோட உங்களைபோல ஒரு ''நல்ல'' சவாரி அவங்களுக்கு கிடைக்காதுன்னு
அந்த தம்பிங்களுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கும் !!

said...

திடீர் தம்பியுடன் சென்ற போது கிடைத்த திகில் அனுபவத்தை இப்படி எல்லோரும் சிரித்து மகிழக் கொடுத்து புண்ணியம் தேடிக்கத்தான் அன்று சுப்ரபாதம் கொடுத்து வைக்கலயோ என்னவோ:))! கண்டிப்பா அடுத்த முறை வரும் போது அது வாய்க்கும் பாருங்க!

said...

என்னை மாதிரி புது பதிவர்களுக்காக இதை மீள் பதிவு செஞ்சதுக்கு ரொம்ப நன்றி...
இதே மாதிரி கியருக்கு பதிலாக screw driver யூஸ் செஞ்சது, பின் சீட்டில் அமர்ந்து பிரேக் கயிர் கட்டி இழுத்தது போன்ற பல அனுபவங்கள் எனக்கும் இருக்கிறது :)

said...

திருப்பதி போனா திருப்பம்தான்..ஆனாலும்,வண்டிய இப்படித்
திருப்பியிருக்கக்கூடாது:-))

said...

வாங்க அறிவன்.

அதான் எவ்வளோ வெள்ளந்தியா இருந்துருக்கோம் பாருங்க. எல்லாம் மனிதர்கள் மேல் வச்ச நம்பிக்கைதான்.
என்னதான் இருந்தாலும் நாங்க, உங்களையெல்லாம்விட ஒரு தலைமுறை முந்தியவங்களாச்சே.


பஸ் ஸ்டாண்டைப் பார்த்தும் அங்கே தாவிக் குதிக்கத் தோணலையேப்பா(-:

கோபால், உங்க பின்னூட்டம் பார்த்துட்டு என்ன சொன்னார் தெரியுமா?

" இப்படி புத்தியில்லாத பொம்பளையா இருந்துருக்கியே" ன்னு அர்த்தமாம்.

"நல்லா இருக்கு. அப்ப நான் மட்டுமா இருந்தேன். கூடவே நீங்களும்தானே இருந்தீங்க? குசேலன் படத்தில் வரும் சந்தானபாரதி நீங்கதான்"னு சொன்னேன்.

said...

வாங்க மங்கை.

அங்கேயே 9 நாள் தங்கலா? எப்படி? எப்படின்னேன்.......

அவ்வளோ கூட்டத்தில் தாக்குப் பிடிக்க முடியாதுப்பா. அதான் தேவஸ்தானம் வெளியிட்ட ப்ரம்மோத்ஸவ கேஸட் ஒன்னு வாங்கியாந்து அதைப் போட்டுப் பார்த்துக்கறதுதான்.

said...

வாங்க ஜீவன்.

எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்பது தங்கத்'தம்பி'க்கும் புரிஞ்சுருந்துச்சு:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அதுக்கப்புறம் ஒருமுறை அர்ச்சனை, இன்னொருமுறை தோமால சேவைன்னு தரிசனம் கிடைச்சது. ஆனாலும் இன்னும் சுப்ரபாதம் வாய்க்கலை.

ஒருமுறை இப்படி இன்னொரு வண்டியில் ஒழுங்காப் போய்ச் சேர்ந்தோம். அங்கே தங்குமிடம் ஏற்கெனவே சென்னையில் தேவஸ்தானம் அலுவலகத்தில் ஏற்பாடு செஞ்சுக்கிட்டோம். அந்த டாக்ஸிக் காரருக்குத் தெரிய வேணாம் நாம் தங்கும் இடமுன்னு டபாய்ச்சுட்டு வேற ஒரு டாக்ஸியில் ரூமுக்குப் போனோம். அது கொஞ்சம் ஒதுக்குப்புறமான காட்டேஜ்.

சாமான்களை அறையில் போட்டுட்டு
சும்மாச் சுத்திப்பார்த்துட்டுச் சாப்பிட்டுட்டு வரலாமுன்னு கிளம்பி எதாவது வண்டி கிடைக்குமான்னு பார்த்துக்கிட்டே வந்தால்.....

ஆண்ட்டின்னு ஒரு குரல். இங்கே யாருப்பா நமக்குத் தெரிஞ்சவுங்கன்னு பார்த்தால்............. நாம் யாருக்கு நம்மிருப்பிடம் தெரியக்கூடாதுன்னு டபாய்ச்சமோ அந்தப் பையன்:-))))

காலையில் அங்கப்பிரதக்ஷணம் பண்ணிக்கன்னு அங்கேயே இரவு தங்கிட்டானாம். இது எப்படி இருக்கு!!!

said...

வாங்க அருண்.

//இதே மாதிரி கியருக்கு பதிலாக screw driver யூஸ் செஞ்சது, பின் சீட்டில் அமர்ந்து பிரேக் கயிர் கட்டி இழுத்தது போன்ற பல அனுபவங்கள் எனக்கும் இருக்கிறது :)//

ஹைய்யோ ஹைய்யோ..... எழுதுங்களேன் இதைப் பத்தி. அப்பத் திகிலா இருந்தவைகளை இப்ப நினைச்சாச் சிரிப்பா வருதுல்லே?

ஆமாம். முதல்முறையா நம்ம பதிவுப்பக்கம் வந்துருக்கீங்க போல!!! நன்றிப்பா.

said...

வாங்க தங்க்ஸ்.

இப்ப போக வரன்னு தனித்தனி வழி இருக்கு. நல்லதாப் போச்சு. ஆனாலும் ரொம்பவே திருப்பிட்டான் தம்பி:-)

said...

வாங்க மதுரையம்பதி.

நீங்க இப்படின்னா கொத்ஸ் பார்த்தீங்களா..... பழையதுன்றார்!!!

said...

அருமையான சுப்ரபாத சேவையா துளசியம்மா.

சூப்பர் சிரிப்பு போங்க.

ஃபிஜி படங்கள் அருமை.

said...

வாங்க கைலாஷி.

இவர் நம்ம சிங்கைச் சீனு.

சிங்கப்பூர் ஸ்ரீனிவாசபெருமாள்.

said...

நன்றி மேடம் கொலுவுக்கு அழைத்தைமக்கு.. .நாங்கள் சிட்னியில் வசிக்கிறோம்.நான் பதிவுலகிற்கு புதியவள்.உங்களது மற்றும் உங்கள் வலை நண்பர்கள் பதிவுகளின் வாசகி நான்.எங்கெங்கோ இருப்பவர்களை எழுத்தாலும் எண்ணத்தாலும் நட்புற செய்யும் வலையுலகம் வாழ்க!

said...

சிரிப்போ சிரிப்பு துளசி...

நாங்க கொஞ்ச நாள் முன்ன திருப்பதி போனப்போ ...சொந்தக்காரங்க ஒரு இடத்தில புக் செய்திருந்தாங்க.. அவங்க ஒருத்தங்களுக்கு 1000 ரூ ன்னு எதோ வாங்கிகிட்டு ஒரு வேன்ல கூட்டிட்டுபோய் கூடவே சுத்திக்காட்டி லட்டும் வாங்கிகுடுத்து கொண்டுவந்து விட்டுருவாங்கன்னாங்க.. கையில் வச்சிருந்த டிக்கெட் வேற .. கூட்டிட்டு போன வழி வேற .. என்னமோ தகிடுதத்தம் செய்து .. கடைசி நேரத்தில் நாம என்ன சொல்ல முடியும்ன்னு ..பிசினஸ் பண்ணிடறாங்க.. அவங்க பிழைப்பு அவங்களுக்கு...

said...

//இது எப்படி இருக்கு!!!//

எல்லாம் அவன் செயல்னு இருக்கு:)))!

said...

வாங்க பானு.

பக்கத்தூட்டுக்காரரா ஆகிட்டீங்க. இந்தப் பக்கம்வந்தா, இங்கே நம்ம வூட்டுக்கும் வந்து போகணும்.ஆமா. நானும் அங்கே வரும்போது தாக்கல் விடுவேன்:-)

said...

வாங்க கயலு.

என்னதான் காசு கொடுத்துச் சாமியைப் பார்க்கக்கூடாதுன்னு இருந்தாலும், அம்மும் கூட்டத்தை ஜெயிக்கமுடியலைப்பா. இதைப் பயன்படுத்திக்கிட்டு எத்தனை கூட்டம் பிழைக்குதுன்னு பாருங்க!!!!

said...

ராமலக்ஷ்மி,

'அவனன்றி ஓர் அணுவும் அசையாது'

said...

>>கோபால், உங்க பின்னூட்டம் பார்த்துட்டு என்ன சொன்னார் தெரியுமா?

" இப்படி புத்தியில்லாத பொம்பளையா இருந்துருக்கியே" ன்னு அர்த்தமாம்.

"நல்லா இருக்கு. அப்ப நான் மட்டுமா இருந்தேன். கூடவே நீங்களும்தானே இருந்தீங்க? குசேலன் படத்தில் வரும் சந்தானபாரதி நீங்கதான்"னு சொன்னேன்.>>

சார் கண்டுபிடிச்சுட்டாரா?

:)))))

சும்மா,உளவாக்கட்டிக்கி..
நாங்கள்ளாம் சொல்லாம வேற யாரு சொல்லப் போறாங்க..>>அதான் எவ்வளோ வெள்ளந்தியா இருந்துருக்கோம் பாருங்க. எல்லாம் மனிதர்கள் மேல் வச்ச நம்பிக்கைதான்.
என்னதான் இருந்தாலும் நாங்க, உங்களையெல்லாம்விட ஒரு தலைமுறை முந்தியவங்களாச்சே>>

இது சொன்னீங்களே,ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தையா சொல்லிட்டீங்க !

எங்க வீட்டிலேயும் அப்பா இப்படித்தான்.

அப்பா,அந்த ஆளு ஏமாத்தப் போறான்,நம்பாதீங்கன்னு சொன்னா கேக்க மாட்டார்;சே,அப்படில்லாம் செய்ய மாட்டாண்டா' அப்படிம்பார்.

ஆனால் பெரும்பாலும் நான் சொல்வதுதான் நடக்கும்.

ஆனாலும் மறுபடியும் எல்லாரையும் நம்பத்தான் ரெடியா இருப்பார்.

நேர்மையின் நம்பிக்கைகள்,மனிதத்துவம் இரண்டுமே நம்மிடம் குறைந்து கொண்டு வருகின்றன என்பது விசனிக்க வேண்டிய உண்மை.

said...

இந்த பதிவை படிக்க தொடங்கும் போதே ஒரு வரியை காப்பி பண்ணினேன் ஆனால் தொடர்ந்து படிக்கையில் எதை செலக்ட் பண்ணறதுன்னு தெரியாமல் விட்டுவிட்டேன் , உங்களின் பல சொல்லாண்மை என் அம்மாவை ஒத்ததாகவே இருக்கிறது, என் அம்மாகூட அப்படித்தான்
மிக நல்லப்பதிவு , ஆன்மிகம் என்னும் பெருங்கடலை உங்களை விட யாரும் இத்தனை லாவகமாக கையாளமுடியாது , அபாரம்
மிக்க நன்றி இதன் சுட்டி அனுப்பியதற்கு .

said...

வாங்க ஏ ஆர் ஆர்.

ஆன்மீகம் பெருங்கடல். ரொம்பச் சரி. அதில் கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறுதுளி நான்.

வருகைக்கு நன்றி.

said...

நல்ல தரிசனம் .

said...

வாங்க ஷன்முகவேல்.

வருகைக்கு நன்றி.

said...

sirichu sirichu kannula thanni :D
I thought I am going to read abt thirupathi .had gone to thirupathi many times .(oru dhadavai nadandhu kooda from keezh to mael dhaan not from madras . ) but thought i might get some interesting stories and information i clicked the page but ... aanaaromba nalla irundhudhu . thanks :)sorry for english . comp some problem with google tamil font .:(

said...

வாங்க சசிகலா.

நம பொழைப்பை இப்படிச் சிரிக்க வச்சுட்டானேன்னு இருக்கு.

திருப்பதி பற்றிய இன்னொரு பதிவு (இது 3 பாகமாய் வரும். நூல் பிடிச்சுப்போங்க)

http://thulasidhalam.blogspot.co.nz/2011/06/1.html