Friday, October 10, 2008

சுப்பைய்யா வாத்தியார்! ( மரத்தடி நினைவுகள்)

ஒரு வருசம் மேலூர்லே இருந்துட்டு, மறுபடியும் வத்தலகுண்டுக்கேத் திரும்பி வந்தோம்னு முன்னயெ சொல்லியிருக்கென்ல!

இந்த வருஷம் நான் 'ஹைஸ்கூல்'க்கு போறேன்! ஆறாப்பு! நானும் அண்ணனும் இனிமே ஒரே ஸ்கூலு! லீவு முடிஞ்சிருச்சு. பள்ளிக்கூடம் திறக்குற நாளும் வந்துச்சு. அதுக்கு ரெண்டுவாரத்துக்கு முன்னாலெ இருந்தே தினமும் எனக்கு 'உபதேசம்' தொடங்கிடுச்சு!

'இப்பப்போறது ஹைஸ்கூலாம். முன்னே மாதிரி பசங்களை அடிச்சுட்டு ஓடிவர வேலையெல்லாம் வச்சுக்கக் கூடாதாம்! அண்ணனும் அதே ஸ்கூலுன்றதாலே மரியாதையா நடக்கக் கத்துக்கணுமாம்!'

'ஹைஸ்கூலு ரொம்ப தூரத்துலெ இருக்கறதாலே, ரோட்டுலெ நடந்து போறப்ப கவனமாப் போகணுமாம்! முக்கியமா மெயின் ரோடை ஒரு இடத்துலெ தாண்டிப் போகும்போது ரொம்பக் கவனமா ரெண்டுபக்கமும் பாத்துட்டு ரோடைக் கடக்கணுமாம்!'

இன்னும் என்னென்னவோ சொல்லிகிட்டேஏஏஏஏஏஏஏஇருக்காங்க!

அதுலே ஒண்ணுலெயும் என் கவனம் இல்லே. சும்மாத் தலையெத் தலையெ ஆட்டிகிட்டு இருக்கேன்.

"அண்ணன் கூடவே போயிட்டு, அவருகூடயே திரும்பி வரணும்"

ஐய்யய்யோ.... ஆபத்தாச்சே! பராக்குப் பாக்காம போகணுமே! இதென்ன அக்கிரமம்! என்னாலெ முடியாத ஒண்ணை எப்படிச்செய்யறது?

சரி பாக்கலாம். அண்ணன் பெரிய வகுப்பு. நாம இப்பத்தானேஆரம்பிக்குறோம்.

ஹைஸ்கூலுன்னா ஒரே 'ஜாலி'தான் போல! இனிமே சிலேட்டு கிடையாது! எல்லாம் 'நோட்டு'தான்! எழுதறதுக்குப் புதுசா '·பவுண்டன் பேனா' கிடைச்சிருக்கு! நேத்தே எல்லா பொஸ்தகமும் வாங்கியாச்சு! அண்ணந்தான்
பிரவுண் பேப்பருலே அட்டையெல்லாம் போட்டு,எல்லாத்துக்கும் பேரு எழுதிக் குடுத்தாரு! அண்ணன் கையெழுத்து பட்டாட்டம் ரொம்ப அழகா இருக்கும்! நாளைக்குப் பொழுது விடிஞ்சா பள்ளிக்கூடம். சீக்கிரம் தூங்கப்போணும்னு சொல்லிட்டாங்க!

பொழுதும் விடிஞ்சிச்சு! நல்லா வெள்ளையும் சள்ளையுமாப் போட்டுகிட்டு 'ரெடி'யா நிக்கறேன். பக்கத்துலெ ஒரு பையிலே 'எல்லாப் பொஸ்தகமும், நோட்டும்' நிறைச்சு வச்சிருக்கேன். அண்ணன் கையிலெ ஒரு சின்ன
நோட்டு மட்டும் இருக்கு. 'கிளம்பு'ன்னாரா, நான் பையைத் தூக்கமுடியாமத் தூக்கித் தோள்லெ மாட்டுனேன்.

ஐயோ அம்மா, என்னா கனம் கனக்குது! எப்படி நடக்கப்போறேன்னு தெரிலையே!

"எதுக்கு எல்லாத்தையும் கொண்டுவரே? சும்மா ஒரு நோட்டு போதும்! இன்னைக்கு முதல் நாள்தானே,பாடம் ஒண்ணும் நடக்காது. 'டைம் டேபிள்' தருவாங்க. நாளைக்கு என்ன பாடமோ அதைமட்டும் கொண்டுபோனாப்
போதும்!"

சரின்னு நானும் அண்ணன் மாதிரி 'ஸ்டைலா' ஒரே நோட்டை மட்டும் எடுத்துக்கிட்டுக் கிளம்புனேன்.

"எழுதறதுக்குப் பேனா வேணாமா?"

"மறந்துட்டேண்ணே, இப்பக் கொண்டாரேன்"

ரெண்டுபேருமாப் புறப்பட்டு, ஆஸ்பத்திரி வெராண்டாவுலே 'அவுட் பேஷண்ட்'பாக்கற அம்மாவைப் பாத்து, சும்மா கையை ஆட்டிக் காமிச்சிட்டுப் போனோம்.

மெயின் ரோடுலே ரொம்ப தூரம் போய்க்கிட்டே இருக்கணும். அப்புறம் பொரிகடலைக் கடைக்குப் பக்கத்துலேப் பிரியற பாதையிலே நேராப் போணும்.அந்த இடத்துலெ வீடுங்க ஒண்ணும் கிடையாது. மொட்டையா இருக்கும். போயிகிட்டே இருந்தா பள்ளிகூட'கேட்'லே போயி முட்டிக்குவம். 'கேட்'க்கு ரெண்டுபக்கமும் மருதாணிச் செடிங்க நீளவாக்குலெ வரிசையா வேலிபோட்டமாதிரி அடத்தியா நிக்கும். இலைங்களை உருவிட்டே போனா பள்ளிகூடத்து முன்வாசல்லே போயி நின்னுருவோம்.

என்ன இருந்தாலும் ஹைஸ்கூல் ஹைஸ்கூல்தான்! 'க்ரில் கேட்டு'போட்ட பெரிய வாசல். நுழைஞ்சவுடனே ரெண்டுபக்கமும் ரெண்டு ரூமுங்க சின்னதா இருக்கு.அதுலே சோத்துக்கைப் பக்கமிருக்கறது 'கேர்ள்ஸ் ரூம்'ன்னு போர்டு மாட்டிகிட்டு இருந்தது. அப்ப இன்னொண்ணு 'பாய்ஸ் ரூம்'ன்னு நானா நினைச்சுகிட்டேன்!


மொதல்லெ அண்ணனும், நானும் மாடிக்குப் போய் 'ஹெட்மாஸ்டரை'ப் பாத்தோம். அவரு ஒரு பெரிய மேஜைக்குப் பின்னாலெ உக்காந்திருந்தார். அண்ணன்கிட்டே என்னமோ கேட்டார். நானு அந்த ரூமிலெ இருக்கற பெரிய ஜன்னல் வழியாப் பாக்குறேன்.
எனக்கு ஒரே ஆச்சரியமாப் போச்சு! அங்கேயிருந்து பாத்தா,நேரா பள்ளிகூடத்து 'கேட்' மருதாணிச்செடிங்களோடு இருக்கற பாதை,
கேட்டுக்கு அப்புறம் இருக்கற செம்மண்ரோடு எல்லாம் அப்பட்டமா தெரியுது. அப்புறம் அண்ணன் என்னை என் வகுப்புக்குக் கொண்டுபோய் விட்டார். போறப்பவே சொல்லிகிட்டு வந்தார்,மத்தியானம் சாப்பாட்டுக்கு மணி அடிச்சவுடனே'கேர்ள்ஸ் ரூம்' வாசல்லெ வந்து நிக்கணும்னு.

வகுப்புலே ஒரு வாத்தியார் இருந்தார். அவர்கிட்டே கொண்டுபோய் அண்ணன் என்னை விட்டுட்டு என்னவோ சொன்னார். நானு,மெதுவா தலையைத்திருப்பி அங்கெ இருக்கற மத்தபசங்களைப் பாக்கறேன். ஹைய்யா, எல்லாம் எனக்குத்தெரிஞ்ச பசங்க! நானு மூணாப்பு, நாலாப்புலெ இருந்தப்ப என் கூடப்படிச்சவுங்க. உள்ளுக்குள்ளெ இருந்த கொஞ்ச நஞ்ச பயமும் போயிருச்சு! எப்படீ வந்தே? எப்படீ வந்தென்னு எல்லோரும் கத்தறாங்க.'கேர்ள்ஸ்'எல்லாம், இங்கே உக்காரு, என் பக்கத்துலேன்னு ஆளாளுக்கு என்னை இழுக்கறாங்க! 'பாய்ஸ்' கூட்டத்துலெ நம்ம வைத்திகூட இருக்கான்.ஆனா சரோஜாவைக்
காணோம். புதுசா சில பொண்ணுங்களும் இருந்தாங்க. அதுலெ ஒரு பொண்ணு என்னப் பாத்து சிநேகமா சிரிச்சுச்சு. அதைப் பாத்ததும் எனக்குப் பிடிச்சிருச்சு! எல்லா 'கேர்ள்ஸ்'ம் எங்க 'ஏ செக்ஷன்'தான். 'பி செக்ஷன்'லே 'பாய்ஸ்' மட்டும்தான்!

அண்ணன் சொன்ன மாதிரியேதான் இருந்துச்சு! பாடம்னு ஒண்ணும் பெருசா நடக்கலே. 'டைம்டேபிள்' எழுதிப்போட்டாரு வாத்தியார். நாங்கெல்லாம் நோட்டுக்குப் பின்னாலெ இருக்கற டைம்டேபிளுக்குன்னு இருக்கற கட்டத்துலெ எழுதிக்கிட்டொம். புதுப்பேனா ஜோரா எழுதுது!

தமிழு ரெண்டுவகையாப் போட்டிருக்கு! என்னன்னா அதுலெ ஒண்ணு சிறப்புத்தமிழ்! ஆனா எனக்கு அது கிடையாதாம்.
நானு 'சான்ஸ்க்ரீட்' படிக்கப் போறேனாம்! அப்படிதான் அண்ணன் எழுதிக் கொடுத்துருக்காராம்! என்னான்னு விளங்கலெ.
மத்தியானச் சாப்பாட்டுக்கு மணி அடிச்சதும் நான் ஓடிப்போய் 'கேர்ள்ஸ் ரூம்' வாசலிலெ நின்னேன். அண்ணன் வந்ததும் வீட்டுக்குப் போனோம்.


அண்ணன் விரு விருன்னு நடக்கறாரு. நானு கூடவே ஓடுறேன்.நாங்க காலேல வந்த வழியாப் போகாமே, பள்ளிகூடத்துக்குப் பின்னாலெ இருக்கற ஒத்தையடிப் பாதையிலெ போறோம். எங்களுக்கு முன்னாலேயும் பின்னாலேயுமா நிறையப்பேரு இருக்காங்க!
அந்தப்பாதையிலெ கொஞ்சதூரம் வந்தவுடனே ஒரு இடத்துலே புகையா இருக்கு.ரொம்ப சூடாவும் இருக்கு. என்னென்னு பாத்தா
குதிரை வண்டிக்காரங்க, இரும்புலே ஆன பெரிய வளையத்தை, வண்டிச்சக்கரத்துக்கு மாட்டிக்கிட்டு இருக்காங்க! அதுக்கு என்னவோ
பேரு சொன்னாரு அண்ணன். எனக்கு மறந்துபோச்சு! இரும்பு வளையத்தை தரையிலெ வச்சு, அதும்மேலெ வறட்டியெல்லாம் போட்டு, தீ வைச்சுருவாங்களாம். அது அந்த சூடுலெ கொஞ்சம் விரிஞ்சு வருமாம். அப்போ அதுக்குள்ளெ மரச்சக்கரத்தை மாட்டி, உடனே பச்சைத்தண்ணீய ஊத்திருவாங்களாம். அப்ப அது கொஞ்சம் சுருங்கி, மரச்சக்கரத்தை 'கப்'புன்னு புடிச்சுக்குமாம்! இப்ப நேரம் இல்லை. நாளைக்கு இங்கெ நின்னு வேடிக்கைப் பாக்கணும்!

இந்த இடத்தைத் தாண்டுனதும் ஒரு செங்கல் சுவர் குறுக்கால நீளமா இருக்கு. அதுலெ ஒரு இடத்துலெ கல்லெல்லாம் சரிஞ்சு உடைஞ்சு இருந்தது. அதும் வழியா ஆளுங்க போறதும் வாரதுமா இருக்காங்க. நாங்களும் அதும்வழியாப் போனோம்.


அட! இது நம்ம 'பஸ் ஸ்டாண்டு'! அதுக்குள்ளெ போனா 'மெயின் ரோடு'. அதைக் குறுக்கால கடந்தா நம்ம ஆஸ்பத்திரி இருக்கற தெரு. அப்புறம் நம்ம வீடுதான்!

காலேல அரைமணி நேரம் நடந்தவங்க, இப்ப ஒரு 10 நிமிசத்துல வீட்டுக்கு வந்துட்டோம்! கொஞ்சம் அழுக்கான பாதைன்றதால, அதும்வழியா காலேல போகலையாம்! நாங்க ரெண்டு பேரும் சாப்டுட்டு, அதே பாதையிலெ மறுபடியும் பள்ளிக்கூடத்துக்கு வந்துட்டோம்.

போக வர நேரம் சரியா இருக்கு. ஆனா வெளையாடறதுக்கு 'டைம்'இல்லே!

அன்னைக்கு சாயந்திரமே நம்ம ஏரியாவிலெ இருந்து 'ஹைஸ்கூல்'போறவுங்க விவரம் கிடைச்சிருச்சு. பாட்டி வீட்டுக்குப் போயிருந்த சரோஜா வந்துட்டா. அவளுக்குதான் இதெல்லாம் தெரிஞ்சிருந்தது! என்ன இருந்தாலும் அவ இந்த ஊர்க்காரியாச்சே! அதுவும் போனவருஷம் நாந்தான் வேற ஊர்லே இருந்தேனே, எனக்குத் தெரியாம என்னென்னவோ நடந்திருக்கு! ம்ம்ம்ம்...


நம்ம வீட்டுக்குப் பக்கத்துத் தெருவிலெ ஒரு 'தமிழ் பண்டிதர்' வீடு இருக்காம். அவருக்கு மூணு பொண்ணுங்களாம். அதுலெ மூத்த ரெண்டுபேரும் எங்க ஸ்கூலுதானாம். நாங்க உடனே அவுங்க வீட்டுக்குப் போனோம். அங்கெ யாரைப் பாத்தேன்னு நினைக்கிறீங்க? காலேல என்னப் பாத்துச் சிரிச்ச பொண்ணுதான். அவ பேரு சிலம்புச் செல்வி. நாங்க சிலம்புன்னு கூப்பிட்டோம்.
அவுங்க அக்கா, நம்ம அண்ணன் வகுப்புலே! ரொம்ப சந்தோசமா விளையாடிட்டு, இருட்டறப்ப அவுங்கவுங்க வீட்டுக்கு ஓடுனோம்.

ஹைஸ்கூல்லே நடைமுறை எல்லாம் வேற மாதிரி இருக்கும்லெ. வேற வேற வாத்தியாருங்க ஒரோரு பாடத்துக்கும் வந்தாங்க! பொதுத்தமிழ்க்கு ஒரு டீச்சர் வந்தாங்க. சிலம்புவோட அப்பா இருக்கார்லெ, அவரு பெரிய வகுப்புக்கு வாத்தியாராம்!


சிறப்புத்தமிழ் 'பீரியடு'வந்தா மட்டும், நானு, வைத்தி, சங்கரன்,சுந்தர்,கிருஷ்ணன், இன்னும் ஒரு பையன், பேரு மறந்துபோச்சு, நாங்கெல்லாம் மாடிக்குப் போய் அங்கே இருக்கற ஒரு சின்ன ரூமுக்குப் போகணும். அங்கெதான்'சான்ஸ்க்ரீட்' வகுப்பு!

பரங்கிப்பழமாட்டம் சிகப்பா குள்ளமா, பஞ்சக்கச்சம் கட்டின 'சார்'தான் எங்களுக்கு 'சான்ஸ்க்ரீட்' வாத்தியார்!

நாங்க ஆறே பேருங்கறதாலே ரொம்பக் கண்டிப்பு எல்லாம் கிடையாது. ஜாலியாப் படிச்சுகிட்டு இருந்தோம்.

இப்பல்லாம் நான் அண்ணன்கூட வர்றதில்லை.நானு, சரோஜா, சிலம்பு மூணுபேரும் நல்ல 'திக் ·ப்ரெண்ட்ஸ்'ஆயிட்டதாலெ நாங்களே எங்க வழியைப் பாத்துப் போக ஆரம்பிச்சோம். ஆனாலும் பகல் சாப்பாட்டுக்கு மட்டும் அந்தக் குறுக்கு வழிதான்!
அண்ணன் முன்னாலே, அவருடைய 'திக் ·ப்ரெண்ட்ஸ்'ங்களோட பேசிகிட்டே போவார், நாங்க கொஞ்சம் இடைவெளி விட்டுப் பின்னாலே.

சிறப்புத்தமிழ் எடுக்கற சுப்பையா வாத்தியார் ரொம்ப பயங்கரமானவராம்! ஆளும் பாக்கறதுக்கு அப்படித்தான் இருப்பார். பெரிய மீசை, நல்ல கருகருன்னு நிறம், கொஞ்சம் முட்டையா பெரிய கண்ணுன்னு! வேஷ்டி முனையை ஒரு கையிலெ பிடிச்சுகிட்டு, மறுகையாலெ மீசையை முறுக்கிகிட்டே நடப்பார்! 'அய்யனார் சிலை'க்கு உசிரு வந்து நடந்துவர்ற மாதிரி இருக்கும்!

வீட்டுப்பாடம் எழுதலேன்னாலும், வகுப்புலே கேக்கற கேள்விங்களுக்குப் பதிலு தெரியலைன்னாலும் மிரட்டுவாராம்! சிலசமயம் பையன்களுக்கு அடியும் கிடைக்குமாம்!

எனக்கு ரொம்ப அதிருஷ்டமாம்! நானு அவரு கிளாசுலே இருந்து தப்பிட்டேனாம்! இதெல்லாம் சொன்னது சிலம்பும், சரோஜாவும்தான்.

ஒருநாளு, நம்ம 'சான்ஸ்க்ரீட் சார்' லீவு போட்டுட்டார்! அன்னைக்கு எங்களுக்கு சிறப்புத்தமிழ் வேற இருக்கு. நாங்க என்னெ செய்யறதுன்னு
தெரியாம முழிச்சுகிட்டு இருந்தோம்! சுப்பையா வாத்தியார் வகுப்புலே நாங்களும் இருக்க வேண்டியதாப் போச்சு!

அவரைப் பாத்தா பயமா இருந்தாலும், வாயை மூடிக்கிட்டு இருக்கமுடியுதா என்ன? கொஞ்சம் கொஞ்சமா பேச்சு சத்தம் கேட்டுகிட்டே இருக்கு.
'கேள்ஸ்'ங்களெ சும்மா இருக்கச் சொல்லி மிரட்டுனாரு. யாரும் அடங்குறமாதிரி இல்லே. அவருக்கு என்ன தோணுச்சோ தெரியலெ.

" இருங்க உங்களுக்கு சரியான தண்டனை தரேன். பையன்களுக்கு நடுவிலே உக்காரவச்சா அவமானத்துலே பேசாம இருப்பீங்க"

நாங்க என்னன்னு புரியாம முழிச்சோம். நாங்க 'கேள்ஸ்'எல்லாம் ஒரு பக்கமா நாலு 'பெஞ்சு'லே உக்காந்திருப்போம். எங்களை அங்கிருந்து எழுப்பி,ரெண்டு ரெண்டு 'பாய்ஸ்'க்கு நடுவிலே ஒவ்வொரு'கேர்ளா' உக்கார வச்சுட்டார்.

நாங்க திடுக்கிட்டு,ஒரு அஞ்சு நிமிசம் வாயடைச்சு உக்காந்துருந்தோம். அப்புறம் எங்க திகிலு மெள்ளப் போயிருச்சு. இந்த'பாய்ஸ்' எல்லாம் எங்களுக்கு நல்லாத் தெரிஞ்சவங்கதானே! இதுவரைக்கும் ஒண்ணாத்தானே படிச்சுகிட்டு வர்றோம்ன்னு தோணிப்போச்சு போல. அந்தப் பசங்ககூட பேச ஆரம்பிச்சுட்டோம். மொதல்லேயாவது 'கேர்ள்ஸ்'பக்கம்மட்டும் சத்தம். இப்ப? மொத்த வகுப்புமே ஒரே சத்தம்!

சுப்பையா வாத்தியார் மொதமுறையா 'தோத்துப் போயிட்டார்!'

நன்றி: மரத்தடி செப். 2004

பிகு: இதில் போட்டுருக்கும் படங்கள் ஒரு ரெண்டரை வருசத்துக்கு முந்தி எடுத்தவை. கால ஓட்டத்தில் எல்லாமே மாறிப்போச்சு. எங்கே போச்சு என் வத்தலகுண்டு? ன்னு புலம்பி இருக்கேன், பாருங்க.

23 comments:

said...

வாத்தியாருக்கு வந்த சோதனை இப்படியா?

முன்னாலே வரவேண்டியவர் வரிசையில் பின்னாலே இருக்கார். ஒருவேளை ஜூனியருக்கு முன்னுரிமை கொடுத்துட்டார் போல:-)

said...

எப்படித்தான் இத்தனையும் ஞாபகமா வெச்சு இருக்கீங்களோ தெரியல :)

said...

வாங்க இளா.

//எப்படித்தான் இத்தனையும் ஞாபகமா வெச்சு இருக்கீங்களோ தெரியல :)//

எல்லாம் வயசுக் கோளாறுதான்:-))))))

அம்பது ஆச்சுன்னாவே பழைய நினைவுகள் வர ஆரம்பிச்சுருது. ஒருவேளை ஆண்களுக்கு அறுபதில் வருமோ என்னவோ!!!


பொறுங்க. உங்களுக்கும் காலம் வரும்:-)))))

said...

நான் வலைப்பதிவுக்கு வந்தப் புதுசுல மருதாணிச் செடியெல்லாம் காணோம், வீதி சிறுசாகிருச்சுன்னு பதிவு போட்டதே ரொம்ப காலம்னு தெரியுது.. ரசிச்சு ருசிச்சு வாழ்ந்தா எல்லாம் ஞாபகத்துக்கு இருக்குமோ?

said...

துளசி மேடம்

குழந்தையாகவே மாறி எழுதி இருக்கீங்க. ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், வர வழியில் என்னென்ன இருந்தது போன்ற சின்ன விஷயங்களை கவனமாக பார்த்து எழுதி இருக்கீங்க. சிறு வயதில் தான் நம்மால் Attention to details கொடுக்க முடியும். வளர வளர இப்படி சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் ரசிக்கும் பொறுமையும், ரசனையும் போய்விடும்.
ரொம்ப நல்ல பதிவு!

said...

A meme invite:
India Films to Indie Movies - Meme « Snap Judgment

முன்கூட்டிய நன்றிகள் பல :)

said...

இதெல்லாம் தெரிஞ்சிருந்தா நானும் சமஸ்கிருதம் எடுத்திருப்பேன். தமிழ் வாத்தியார்ட்ட அடி வாங்குறதிலருந்து தப்பிச்சிருக்கலாம்..

எங்க ஸ்கூல்லயும் இது தான் ஆனா கொஞ்சம் உல்டாவா.. ரொம்ப பேசுனா பொண்ணுங்க நடுவுல உக்கார வச்சிருவாங்க...இதுக்கு பயந்துக்கிட்டே நான் ரொம்ப நல்லவனா இருந்துட்டேன் :0(

said...

உங்க ஞாபகத்தை படிச்ச ஒரே பொறாமையாக இருக்கு..;)

யப்பா..யம்மா பெரிய பதிவுன்னு நினைச்சிக்கிட்டே படிச்சேன்..உங்க எழுத்து அந்த நினைப்பை மறக்க வச்சிட்டுச்சி.

அனுபவத்தை எழுதுவதில் டீச்சருக்கு நிகர் டீச்சர் தான் ;)

said...

வாங்க க.ஜூ.

பிள்ளைகளுக்கு இருக்கும் கவனிப்பு பெரியவங்களுக்கு இல்லை என்றது உண்மைதான்ப்பா.

மகள் அவள் நண்பர்களைச் சொல்லும்போது முடி எப்படி இருந்துச்சு, என்ன நிறம் என்றெல்லாம் சொல்வாள். நான், 'நாயைக்கூடவே கொண்டுவந்தானே அந்தப் பையனா, (ஒருபையனை ஜெஹோவா விட்னெஸ்கார குழுன்னு நினைச்சுக்கிட்டேன்) சர்ச் க்ரூப் பையனான்னு கேப்பேன்.

அவளுக்கு மட்டும் சக்'தீ' இருந்துருந்தா நான் எப்பவோ சாம்பலா ஆகி இருப்பேன்:-)

said...

வாங்க பாபா.

அழைப்புக்கு நன்றி. அடுத்தவாரம் செஞ்சுறலாம்:-))))

said...

வாங்க அதுசரி.

டைம் மெஷீன் கிடைச்சா எவ்வளோ நல்லா இருக்குமுன்னு நினைக்கிறீங்களா இப்ப:-))))

said...

வாங்க கோபி.


அப்பாடா..... உங்களை(யே)நாலைஞ்சுவரி பின்னூட்டம் எழுதவச்சுட்டாரே நம்ம சுப்பைய்யா வாத்தியார்:-))))

said...

நல்ல கொசுவத்தி டீச்சர்.. அப்படியே என்னை நான் ஆறாம் கிளாஸ் சேந்த காலத்துக்கு கொண்டு போயிட்டீங்க..

said...

பள்ளிக்கூடம் போனது, நண்பர்கள் பெயர் எல்லாம் நினைவில் வைத்து இருக்கீங்க... நல்ல விஷயம்..:)
ஸ்கூல் போட்டோக்கள் சூப்பர்!

said...

வாங்க வெண்பூ.

எல்லார் மனசிலும் 'கொசுவத்தி' ஏற்றிவைப்பது என் கடமை:-))))

said...

வாங்க தமிழ் பிரியன்.

பதிவை வெளியிடும்போது உங்களை நினைச்சுக்கிட்டேன்.

குண்டு இன்னொரு குண்டுவை மறக்கமுடியுமா?:-))))

said...

அப்ப பேச ஆரம்பிச்ச டீச்சர்.நல்லா இருக்கு டீச்சர். நானும் 1 முதல் 5 வரைன்னு என்னுடைய தொடக்கப்பள்ளி நினைவுகளை எழுதலாம் என நினைக்கிறேன்.

said...

ஹ்ம்ம், என்னோட ரஜினி,சந்திரலேகா,செம்பகம் எல்லாம் வந்துட்டுப் போனாங்க. உங்க ஸ்கூல் நல்ல கம்பீரமா இருக்கே துளசி.

நங்க எல்லாம் பெண்கள் போர்ட் ஸ்கூல். ஆண் வாடையே இல்லாத அல்லிராஜ்யம்:)
அப்படியே மருதாணி எனக்கு அனுப்பி இருக்கலாமில்ல. நான் பக்கத்தில திண்டுக்கல்லுல இருந்தேன்.:)))

said...

****அந்தப் பசங்ககூட பேச ஆரம்பிச்சுட்டோம். மொதல்லேயாவது 'கேர்ள்ஸ்'பக்கம்மட்டும் சத்தம். இப்ப? மொத்த வகுப்புமே ஒரே சத்தம்!

சுப்பையா வாத்தியார் மொதமுறையா 'தோத்துப் போயிட்டார்!'***

ஒரு ஆறாப்பு பொண்ணாவே ஆகிவிட்டீங்க இத எழுதும்போது!

ரொம்ப நல்லாயிருக்கு. என் கண் பட்டுவிட்டது உங்க "எளிய அழகான எழுத்தை" ப்பார்த்து! :-(

அதனால, மறக்காம கோபால் சாரை உங்களுக்கு சுத்திப்போடச் சொல்லுங்க! :-)

said...

//
துளசி கோபால் said...
வாங்க அதுசரி.

டைம் மெஷீன் கிடைச்சா எவ்வளோ நல்லா இருக்குமுன்னு நினைக்கிறீங்களா இப்ப:-))))

//

டைம் மெஷின்லாம் கிடைக்காதுங்க..அதனால, நானே ஒண்ணு கண்டுபிடிக்கலாம்னு இருக்கேன் :0)

said...

படித்த பள்ளியும் ஆரம்ப கால மொழி ஆசிரியர்களும் எப்போதும் அழியாத நினைவுகள். என்னை மிகவும் கவர்ந்த அம்சம் தங்களுடைய சரளமான மொழி நடை.

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

அந்த நினைவுகள் எல்லாம் கல்வெட்டு!!

மங்கிப்போகுமே தவிர அழியும் வாய்ப்பு குறைவு.

நடை......

ஆரம்பக்காலத்தில் வெவ்வேறு நடைகளில் எழுதிப்பார்த்தேன். ஆனா இந்த நடைதான் வாசகரின் மனசுக்குப் பக்கத்தில் இருக்கும் உணர்வு தந்துச்சு.
இலக்கண இலக்கிய வரைக்குள்ளே வரலைன்னாலும் இதுதான் எனக்குன்னுப் பிடிச்சுக்கிட்டேன்.

முதல்லே நாம் எழுதுவது நமக்கே பிடிக்கணும், இல்லையா?

said...

நானும் வதிலையில் தான் 9ஆவது வரை படித்தேன்.
நானும் இந்த ஸ்கூலில் தான் 9ஆவது படித்தேன் ( 2 மாதம் மட்டுமே, 1999-இல் ),
நாங்கள் படிக்கும்போது அது ஆண்கள் பள்ளி தான் ...

அப்புறம் எங்கள் சொந்த ஊருக்கு குடி பெயர்ந்து விட்டோம்.

அன்புடன்
அருண் பிரசாத்