Monday, June 24, 2024

செயற்கரிய செயல் செய்தவருக்கு (மட்டும்) சிலை வைப்பதுதான் சரின்னு.......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 6 )

க்ரான்வில்லில் இருந்து கிளம்பி சைனாடவுன் போறோம். போறவழியில் உள்ளூர் ஸ்டேடியம் இருக்கு. பெரிய ராக்ஷஸக் கொப்பரை  வடிவில் இருப்பதில் கொஞ்சூண்டு,  நம்ம பார்வையில் இருந்து தப்பமுடியாது. BC Place stadium இது. இதைக் கடக்கும்போது வாசலில் நாலு பேர் ஓடுவதுபோல் நாலு சிலைகள் கண்ணில் பட்டன.  போறபோக்கில் க்ளிக்கிட்டுப் பார்த்தால் நால்வரும் ஒருவரே !  கவனிச்சுப்பார்க்கும்போதுதான் தெரிஞ்சது, ஒரு கால் செயற்கைக்கால்னு :-( அடராமா.....
அப்படியே விட்டுடமுடியுதா ?   விவரங்கள் வேணாமோ ? வலைவீசித்தான் ஆகணும்போல ! 

டெர்ரிஃபாக்ஸ் (Terry Fox )என்ற பெயருள்ளவர். ஓட்டப்பந்தய வீரர். கூடைப்பந்து விளையாடுபவரும் கூட !   மாரத்தான் ஓடுவதே இவருடைய லட்சியமா இருந்தது.   ஆனால் பதினெட்டு வயசானபோது, புத்துநோய் இவருடைய காலில் வந்துருக்கு.   இதுக்குக் கொஞ்சநாட்களுக்கு  முன்னால், கார் ஓட்டும்போது  ஒரு ட்ரக்கில் இடிச்சுக்கிட்டார்னு சொல்றாங்க.  இவருடைய வண்டிக்கு சேதாரம் அதிகம்.  இவருக்கு முழங்காலில் கொஞ்சம் வலி. அப்போ அதைச் சரியாக் கவனிக்காம விட்டதில் புத்து பீடிச்சுருக்கலாமுன்னு ஒரு பேச்சு இருக்கு.  ஆனால் மருத்துவர்கள் அப்படி ஆக வாய்ப்பில்லைன்னு மறுத்துருக்காங்க.  
எப்படியோ நோயின் தீவிரம் காரணம், காலில் ஒரு பகுதியை இழக்கும்படி ஆச்சு.  ஆனாலும் எப்படியும் ஓடியே தீருவேன்னு மனதில் உறுதியா இருந்துருக்கார்.  புத்துநோய்க்குக் சிகிச்சை எடுத்துக்கிட்டே, செயற்கைக்காலுடன்  ஓட்டப்பயிற்சியும் தொடர்ந்துருக்கு. செயற்கைக்கால் அமைப்பதில், அதைச் செஞ்சவர் பெரிதும் உதவி செஞ்சு ஓடுவதற்குப் பயன்படும் அளவில் மாற்றிக்கொடுத்துருக்கார்.

எனக்கு இதை வாசிச்சபோது நம்ம சுதா சந்திரன் (மயூரி ) நினைவுக்கு  வந்தாங்க ! 

மாரத்தான் கனவுதான்  நிறைவேறாமல் போயிருக்கு.  புத்துநோய் விழிப்புணர்வுக்கும், அந்நோய்க்கான  ஆராய்ச்சிக்காகவும் நிதி சேர்த்துத் தர்றதுக்காக  'க்ராஸ் கன்ட்ரி ரன்' என்று கனடா நாட்டின் குறுக்கே மேற்கில் இருந்து கிழக்கு முனைவரை , அட்லாண்டிக் சமுத்திரத்தில் காலை நனைச்சுட்டு ஓட ஆரம்பிச்சு , பஸிஃபிக் சமுத்திரத்தில் கால் நனைச்சு ஓட்டத்தை நிறைவு செய்யறதா ஒரு திட்டம்.  இவருடைய நண்பர், ஒரு பாட்டிலில் அட்லாண்டிக் சமுத்திரத் தண்ணீரை நிரப்பி எடுத்துக்கிட்டாராம்,  பஸிஃபிக்கில் ஓட்டம் முடியும்போது இந்தத் தண்ணீரை அங்கே கலந்து விடணும். 

நம்ம பக்கங்களில் ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு குடம் தீர்த்தம்  எடுத்துக்கிட்டுக் காசி யாத்திரைக்குப் போய், அங்கிருந்து ஒரு குடம் கங்கையைக் கொண்டுவந்து ராமேஸ்வரம் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் செய்யும் வழக்கம் உண்டு. அப்படி ஒருமுறை அபிஷேகம் செய்யும்போது, நாங்கள் மூலவர் சந்நிதியில் இருந்தோம் !!!


ஆனால்...... 143 நாட்கள் 5373 கி.மீதான் ஓடமுடிஞ்சது. உடல்நிலை ரொம்பவே மோசமானதால் ஓட்டத்தை நிறுத்தவேண்டி வந்துருக்கு. மருத்துவ சிகிச்சை தொடர்ந்து நடந்தும், நோய் மற்ற இடங்களில் பரவி  முற்றிப்போனதால் தன்னுடைய 22 வது வயசில் சாமிகிட்டே போகும்படி ஆச்சு. ப்ச்... இன்னும் ஒரு மாசம் இருந்துருந்தால் 23 ஆகி இருக்கும்.
PC :  Google Images  
இவருடைய தன்னம்பிக்கை,  தைரியம், சேவை மனப்பான்மை எல்லாம் பாராட்டும் விதமா கனடா நாட்டின் Order of Canada என்னும் உயர்ந்த விருதைக் கொடுத்துருக்கு அரசு ! மேலும் நாட்டின் பல நகர்களிலும் இவர் சிலையை நிறுவியிருக்காங்க.  அவற்றில் ஒன்றுதான் நாம் இப்போ பார்த்தது !   தபால்தலை, 5$ டாலர் நோட் இப்படி பல வகைகளிலும் இவர் படம் போட்டு கௌரவம் செஞ்சுருக்கு அரசு !

கடைசியில் டெர்ரி ஃபாக்ஸின் கனவை நனவாக்கியது நம்ம நியூஸிக்காரர் , 32 வயதான Jon Nabbs அவர்களே !  போனவருஷம் 2023,   26 மே மாதம் ஓடத்துவங்கி, இந்த வருஷம் 2024, மார்ச் 3 ஆம் தேதி  மொத்தம் 305 நாட்கள் ஓடி நிறைவு செஞ்சுருக்கார். இவருடைய பெற்றோர்கள் இருவரும் இதே நோய்க்குப் பலியானவர்கள்தான்.  உண்மையில் டெர்ரி ஃபாக்ஸ் பற்றி விவரம் தேடிபோய், நம்மூர்க்காரரைப்பத்தியும் இப்பதான்  தெரிஞ்சுக்கிட்டேன்.

ஒரு சிலை எவ்வளவு சேதிகளைச் சொல்லவச்சுருச்சு பாருங்க !

 
அடுத்துப்போறது சைனா டவுன் என்றதும் 'கத்தி'  கட்டாயம்னு நெனப்பு. ஆனால் சைனா டவுன் தெருக்களில் வண்டியை எங்கேயுமே நிறுத்தலை......  இப்ப டவுனில் யாருமே இல்லையாம். ஒரு அடையாளம் மட்டும்தானாம்.  Town is dead !   விளக்குத்தூண்களில் இருக்கும் தங்க ட்ராகனும், மரங்களில் தொங்கும் சிகப்பு லேண்டர்ன்களும் கப்சுப்னு.....


இதையொட்டியே இருக்கும்  Gas Town என்ற இடத்துலே வண்டியை நிறுத்தியும், யாரையும் இறங்கவிடலை. ச்சும்மா ஒரு ஸ்டாப். அதுவும் ஒரு  மணிக்கூண்டுக்கு முன்னால்.  மணி இப்போ ஒன்னேகால் தாண்டியாச் !    கொஞ்சம்  கூட்டம் பரவலா இருக்கு அங்கே !    
அந்த கடிகாரம்தான் இப்போ டூரிஸ்ட் அட்ராக்‌ஷன் !  ஒவ்வொரு  காமணிக்கும்  நீராவி புஸ்னு வெளியேறி, முழுமணிக்கும் ரயில் கூவறதுமாதிரி மணியடிக்குமாம்!  நாம்தான் காமணி கடந்து லேட்டா வந்துருக்கோமே.... ப்ச்.....

நானும் யூ ட்யூபில் தேடி எப்படித்தான் மணியடிக்குதுன்னு பார்த்தேன் !  இதோ அது உங்களுக்காகவும். சுட்டி... கீழே !

https://www.youtube.com/watch?v=iTvkCd1ACAE

அது இருக்கட்டும்.... இந்த இடத்துக்கு கேஸ்டவுன் என்ற பெயர் எப்படி வந்துச்சாம் ?  பெட்ரோலியம் கேஸ் எடுக்கறாங்களோ ? இல்லையே.....  

இந்த இடம்தான் வான்கூவர் நகரின்  முதல் குடியிருப்புப் பகுதியாம்.  நீராவிப்படகு ஓட்டிக்கிட்டு இருந்த Jack Deighton என்ற யார்க்‌ஷைர் கடலோடி,  1867 லே இங்கே வந்து ஒரு ஸலூன் (B பார்) ஆரம்பிச்சுருக்கார்.  இவரை "Gassy" Jack Deightonனு செல்லமாக் கூப்பிடப்போக அதுவே அவர் பெயராகி இருக்கும்போல !  அப்படியே இந்த இடத்தை Gassy's Town னு குறிப்பிடப்போய் மெல்ல மெல்ல அது Gastown ஆகி, உள்ளூர் வரலாற்றில் இடம் பிடிச்சுருக்கு !

அப்ப அந்த கடிகாரம் ?  அதானே... அதைவிட முடியுமோ ? அந்தக் காலத்துலே மின்சாரம் எல்லாம் ஏது ? எல்லாத்துக்கும் நீராவிதானே ?  குளிர்காலத்தில் இடங்களை சூடுபடுத்திக்க ஏற்பாடு செஞ்சுருந்த நீராவி சிஸ்டத்தில் இருந்து ,  பூமிக்கடியில்  நீராவி வெளியேறும் இடத்தை க்ரில் போட்டு வச்சுருக்காங்க.  புஸ்ஸூன்னு எப்ப நீராவி வெளியேறுமுன்னு தெரியாதுதானே.... அப்போப் பார்த்து யாராவது அந்த  க்ரில் இருக்கும் நடைபாதையாண்டை இருந்தால் ஆபத்து இல்லையோ ? அதனால் க்ரில்லுக்கு மேலே ஒரு சின்ன மணிகூண்டு வைக்கப்போய், நீராவி மூலம் இயங்கும்  கடிகாரமாகி, இப்போ நீராவி மூச்சு விட்டுக்கிட்டுக் கூவுது !  (இப்ப கூவறதுக்கு மட்டுமே நீராவின்னு நினைக்கிறேன் ! )

இந்தவகை கடிகாரம் உலகிலேயே ரெண்டோ மூணோதான் இருக்குன்னும், அந்த  ரெண்டாவதுதான்  இதுன்னும் சொல்றாங்க.  ஏற்கெனவே இங்லேண்டில் ஒரு Pub பக்கத்தில் 19 ஆம் நூற்றாண்டில் செய்த நீராவி கடிகாரம் இருக்கு.  அதே தொழில்நுட்பத்தோடு கனடா நாட்டைச் சேர்ந்த Raymond Saunders என்பவர் 1977 இல் தயாரிச்ச இந்த கடிகாரம், இப்போ டூரிஸ்ட்டு அட்ராக்க்ஷன் ஆகி இருக்கு ! போதாக்குறைக்கு சினிமாவில் வேற நடிச்சுருக்கே (!!!)  1991 Chuck Norris action film The Hitman. 

அடுத்த ரெண்டாவது நிமிட், வண்டி வேகம் குறைஞ்சு நிக்கறமாதிரி பாவ்லா காட்டுச்சு.  என்ன இருக்கு இங்கே..... ஆஹா.... இன்னுமொரு சிலை ! போரில் வீழ்ந்த வீரர் ஒருவரைத் தன் கையில் தாங்கிப்பிடிச்சுருக்கும் தேவதை !  Angel  of Victory னு பெயர்.  இந்த இடம் CPR  ( Canadian Pacific Railways )  Waterfront station சமீபம்.
இது ஒரு போர்கால நினைவுச்சின்னம்.  இதை ஏன் இங்கே வச்சுருக்காங்கன்னா....   ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்த ரெயில்வே கம்பெனி ஊழியர்கள்,  அரசரின் அழைப்பை ஏற்று, முதலாம் உலகப்போரில் கலந்துகொண்டு நாட்டுக்காக வீரமரணம் அடைந்திருக்காங்க. ப்ச்..... அந்த தியாகத்தை மதித்து, நன்றியுடன் நினைவுச்சின்னம் அமைச்சுருப்பதைத்தான் இப்போ பார்க்கிறோம். இரண்டாம் போர் நடந்து முடிந்தபின் அந்த ஆண்டுகளையும் இதில் சேர்த்துருக்காங்க.

இதேமாதிரி சிலைகள்  மூணு செஞ்சுருக்காங்க. ஒன்னு மான்ட்ரியல் நகரிலும், மற்றது Winnipeg நகரிலும் நிறுவியிருக்காங்க.
வண்டி மெல்லத்திரும்புனது நம்ம தெருவில் ! Burrard Street. சரியா பகல் ஒன்னரைக்கு நம்ம ஹொட்டேலில் இறக்கிவிட்டாங்க. நம்ம அரைநாள் டூர் முடிஞ்சது.  

அந்த க்ரான்வில்லில் அவ்ளோ நேரம் இருக்கவிட்டதுக்குக் கொஞ்சம் நேரம்  மிச்சம்பிடிச்சு, கடிகாரம் கூவுறதைப் பார்க்க விட்டுருக்கலாம், இல்லே ? கடைசியில் எல்லாம் அவசர அடி....  ப்ச்... என்னவோ போங்க....

 தொடரும்.......... :-)


8 comments:

said...

இந்த வயதிலும் அயராது மராத்தான் ஓடும் தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியம் காலில் மல்டிபிள் பிராக்சர் ஆகி மீண்டு வந்து ஓடுபவர்.  எனக்கு அவரும் நினைவுக்கு வந்தார்.  பதிவின் விவரங்கள் சுவாரஸ்யமாக இருந்தன.

said...

அருமை நன்றி

said...

தகவல்கள் அனைத்தும் சிறப்பு. இது போன்ற Conducted Tour-களில் சில அசௌகர்யங்களும் உண்டு என்பதை உணர்ந்திருக்கிறேன். நம் இஷ்டத்திற்கு செல்வது தனிப்பட்ட முறையில் செல்லும் போது மட்டுமே சாத்தியம்.

தொடரட்டும் பயணமும் தகவல்களும். நானும் தொடர்கிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்,

அமைச்சர்.....அட !!! எனக்குப் புதிய செய்தி !!!!

நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

சில சமயங்களில் இப்படி ட்ராவல் கம்பெனி டூர்கள் தவிர்க்க முடிவதில்லை. ப்ச்...


தொடர்ந்து வருவது மகிழ்ச்சி. நன்றி!

said...

டெர்ரிஃபாக்ஸ் சம்பவங்கள் மனதை கனக்கவைத்தது.

நீராவிக் கடிகாரம் கூவுவது நேரடியாக பார்க்க கிடைத்திருந்தால் மிகவும் சூப்பராக இருந்திருக்கும்.

said...

வாங்க மாதேவி,

டெர்ரி ஃபாக்ஸின் மன உறுதி பிரமிப்பா இருக்குப்பா !

உண்மையில் அந்த நீராவிக் கடிகாரம், நம்ம ஹொட்டேலில் இருந்து ரொம்ப தூரம் கூட இல்லை. ஒருநாள் போயிருக்கலாம். அப்போ என்னமோ தோணவே இல்லை. ப்ச்...