Monday, June 17, 2024

டோசையம்மா டோசை............ (அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 3 )

அறை எண் 1917 இல் துல்ஸி.  பால்கனிக் கதவைத் திறந்துபார்த்தால்..... அடுக்குமாடிக் கட்டடங்கள் அதிகம் ! எங்கூரில் நிலநடுக்கம் வந்துபோனதில் இருந்து நாலுமாடிக்குமேல் கட்ட அனுமதி இல்லை.
அறை பரவாயில்லை.  கட்டிலில் ஏறிப்படுக்கத்தான் ஏணி வைக்க மறந்துருக்காங்க.
பெட்டிகளை  அறைக்குக் கொண்டுவந்த ஹொட்டேல் பணியாளர் (guest services attendant), 'நியூஸிலேண்டில் இருந்து வந்துருக்கீங்களே.... ஃப்ளைட் நல்லபடியாக இருந்ததா'ன்னு கேட்டார். அதான் பெட்டிகளில் ஏர்நியூஸி ஸ்டிக்கர் ஒட்டியிருக்கே !  'நானும் க்றைஸ்ட்சர்ச்தான்'னு  சொல்லும்போதே முகத்தில் மகிழ்ச்சி ஒட்டியிருக்கு !  எந்தப்பேட்டைன்னு கேட்டதும் சொன்னார். நம்ம பேட்டைப் பெயரைச் சொன்னதும்  மகிழ்ச்சி கூடுதலாச்சு ! இங்கே வேலைக்கு வந்து அஞ்சு வருஷமாச்சாம்.
காஃபி மெஷீன் எப்படி வேலைசெய்யுதுன்னு கேட்டுக்கிட்டேன்.  காஃபிதூள் கேப்ஸ்யூலா இல்லாம  பாக்கெட்டா இருக்கு.  ஒரு காஃபி போட்டுக் குடிச்சுட்டு,  சட்னு போய்க் குளிச்சுட்டு வந்ததும்தான் கொஞ்சம் களைப்பு போச்சு. முதல் வேலையா  வைஃபை கனெக்ட் செஞ்சு, மகளுக்கு சேதி அனுப்பினேன். மணி மாலை ஏழு. இங்கே வசந்தகாலம் என்றபடியால்  வெளிச்சம் இருக்கு.  இருட்டுமுன்னே கிளம்பிப்போய் எங்கியாவது டின்னரை முடிச்சுக்கலாம் என்றதும்  சரின்னு புறப்பட்டோம். காலையில் இருந்து ஒன்னும் சாப்பிடலை பாருங்க.... பசிக்கத் தொடங்கிருச்சு.


வலையில் பார்த்து வழி கண்டுபிடிச்சுப் போறோம். நம்ம ஹொட்டேல்  வால் சென்டர், ஷெராட்டன். நேரெதிரா இருக்கும் தெருவுக்குள் போய் கொஞ்சதூரத்தில் இடப்பக்கம் திரும்பி, கொஞ்சதூரம் நடந்தால் டேவீ ஸ்ட்ரீட் வருது. அதுலேதான் நிறைய  உணவகங்கள் இருக்காம். கூகுளார் காட்டிய வழியிலே போறோம்.  

எனக்கு ரொம்பப்பிடிச்ச ஒரு விஷயம், பாதசாரிகளுக்கான  ஸைன்போஸ்ட்.  நில் என்பதற்கு ' ஆரஞ்சுக் கை' போ என்பதற்கு 'வெள்ளைமனிதன்' !
ரொம்ப கலகலன்னு இருக்கு டேவீ ஸ்ட்ரீட்.  பலவகையான ரெஸ்ட்டாரண்டுகள் அங்கங்கே ! வேலைநேரம் முடிஞ்சு போச்சுன்னு அங்கங்கே கடைகள் மூடிக்கிடக்கு.  நைட் க்ளப்புக்குள் நுழைய ஒரு வரிசையில் சனம் காத்துக்கிடக்கு !  வயது வந்தவர்களுக்கான கடைகளுக்குக் குறைவில்லை.  உள்ளே போய் ஒரு இழுப்பு இழுத்துக்கிட்டுப்போகும் வகையில் 'மருந்து' கடைகள் வேற !   இங்கே சட்டப்படி இதுக்கு அனுமதி இருக்காமே! (எங்க நாட்டிலே Marijuana வை லீகலைஸ் பண்ணனுமுன்னு ஒரு அரசியல் கட்சி , அழிசாட்டியம் பண்ணிக்கிட்டு இருக்கு ! )
தெருவின் நாற்சந்திகளில் தரையில் வானவில் நிறத்தில் பெயின்ட் பண்ணி வச்சுருக்காங்க. இதுபோல  ரெண்டுமூணு இடத்தில் பார்த்தேன்.  அழகாத்தான் இருக்கு !  

நம்ம பேரக்குட்டன்  ரெயின்போ பேபி !  இங்கே நியூஸிலந்தில் இப்படி ஒரு பெயர் இருக்கு. ஒரு சில அபகடத்துக்குப்பின் பிறந்த குழந்தையை இப்படிச் சொல்றாங்க. அதனால்  வானவில் பார்த்ததும் 'அட'ன்னு இருந்தது உண்மை. நம்ம அறை பால்கனியில் நின்னு பார்த்தபோது கொஞ்சதூரத்தில் ஒரு கட்டடத்தில் வானவில் நிறங்களைப் பெயின் அடிச்சு வச்சுருப்பதையும் கவனிச்சேன்.
என்ன ஏதுன்னு கொஞ்சம் குடைஞ்சதில் 'இது அது இல்லை'ன்னு தெரிஞ்சது. LGBTQ  மக்களை ஆதரிக்கும் விதமா  இப்படிச் செஞ்சுருக்காங்களாம்.  ஆரம்பிச்சது 2013 ஆம் வருஷம். 

The first of many rainbow crosswalks in Canada.
Vancouver is the first city in Canada to have a rainbow crosswalk. In 2013, all four crosswalks at the intersection of Davie Street and Bute Street in Davie Village were painted in fabulous rainbow colors.
வேடிக்கை பார்த்துக்கிட்டே போனப்ப, ஒரு காய்கறிக்கடை கண்ணில் பட்டது. வாசலில் பூண்டு !  உள்ளே எட்டிப்பார்த்தால்...............  மாம்பழம் !







நிறையப்பழவகைகள்  இருந்தாலுமே.... கண்ணக்கட்டி இழுத்தது மாம்பழமே !  அதுவும் இங்கே நம்மூரில் பயணம் கிளம்புமுன், கடையில்  மாம்பழம் வந்துருக்குன்னு ஆசையாப்போய் ரெண்டே ரெண்டு பங்கனபள்ளி வாங்கி வந்து, ருசி ஒன்னும் இல்லாமச் சப்னு கிடந்த வயித்தெரிச்சலில் ( அந்த ரெண்டே பழம் $19  / 950 ரூபாய் ) கிடந்தேனா.....   சட்னு எடுத்து மோந்து பார்த்தால் வாசனை தூக்கியடிக்குது !  ஒரே ஒரு பழம் வாங்கிப்பார்க்கணும்.  நாலே டாலர்தான் ! அப்புறம் சின்னதா ஒரு ஷாப்பிங் அங்கேயே !  எல்லாம் பவுண்டுக் கணக்கு ! 454 கிராம் !  இங்கே எதுக்கு அமெரிக்கன் சிஸ்டம் ?  ஙே.....   

போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு எது வாங்கினாலும் கடைசியில் பில் போடும்போது தனியா ஜிஎஸ்டி சேர்க்கறாங்க. எங்க நியூஸி & ஆஸியில் வரிகள் உட்பட விலை இருக்கும். அதனால் தனியா வரி கொடுக்கறோம் என்ற நினைப்பே வராது. ஆங்..... இன்னொண்ணு.... டிப்ஸ் 20%ன்னு  பார்த்தேன்.  எங்க பக்கம் 'டிப்ஸ்' வாங்கும், கொடுக்கும் வழக்கமே இல்லை.  அப்படியே நினைவில்லாமல் (! ) நாம் கொடுத்தாலும் யாரும் வாங்கமாட்டாங்க. அது கேவலம் என்ற நினைப்பும் இருக்கு.
 'எதுக்கு இப்போ தக்காளி?'ன்னார். "பிடிச்சுருக்கு "!   இப்பெல்லாம் எதையும் வாங்கணுமுன்னா, பார்த்தவுடனே வாங்கிக்கணும். 'அப்புறம் வரும்போது பார்க்கலாம் ' என்பதெல்லாம் நடக்கறதே இல்லை என்ற ஞானம் வந்துருக்கு! 
House of Dosa   கடை பூட்டியிருக்கு. பக்கத்துக்கடைக்காரர், அதை மூடி ரொம்பநாளாச்சுன்னார். எதிர்வாடையில் கொஞ்சதூரத்தில் இன்னொரு 'டோஸா' இருக்குன்னார். 

அங்கே போனால், அது டேவீ டோஸா கம்பெனி !  வாசலில் மெனு பார்த்துட்டு உள்ளே போனோம்.  சுவரில் படம், இண்டியன்னு உறுதிப்படுத்துச்சு !




நுழைஞ்சதும் Bபார், பார்த்தேன் !  மெனு கார்டை நீட்டிய  (பாண்டிச்சேரி ) லக்ஷ்மணன், உடனே நண்பராகிட்டார். அவர் உள்ளே போய்த் தகவல் சொன்னதும்  ஓனர் சரவணன்  (லால்குடி) வந்து,  அவரும் உடனடி நண்பர் ஆனார். எட்டுவருஷமாச்சாம் இந்த வியாபாரம் ஆரம்பிச்சு !  நாலு முறை சிறந்த வியாபாரத்துக்கான அவார்டு கிடைச்சுருக்கு !    
ஆளுக்கொரு தோசை, பின்னே ஒன் பை டு  ஸ்பெஷல் சாய் !   

பெயர்தான் தோசைக்கடை. ஆனால்  மூணு வேளைக்கும் சாப்பாடு வகைகளும்  இருக்குன்னாங்க.  'நல்லது, வருவோம்' னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினோம். 

நம்ம ஷெராட்டனில்   காலை உணவுன்னு ஒன்னும் அறை வாடகையில் சேர்த்தி இல்லை. ஏற்கெனவே அறை வாடகை கொள்ளை என்பதால்  வேணாமுன்னு இருந்தோம்.  அதனால். காலைக்கு ஏதாவது வாங்கிக்கலாமுன்னு பேக்கரி ஏதும் கண்ணில்படுமான்னு போய்க்கிட்டு இருக்கும்போது, நம்ம ஹொட்டேல் இருக்கும் தெருப்பெயர் கண்ணில் பட்டது. தலையைத்ன் திருப்பிப் பார்த்தால்  அதோ.... நம்ம இடம் !  ஆஹா.... மத்யானம்  டாக்ஸி திரும்பிய இடம் இதுதான் !  அடுத்த திருப்பத்தில் பேக்கரி இருந்த ஞாபகம்.  போனால் , இருக்கு ! ஆனால் ஏகப்பட்டக் கூட்டம். வரிசையில் நிக்கணும்.  இது நமக்கில்லை. 

இந்தாண்டைப்பக்கம் 'ஒரு ஸெவன் லெவன்' இருந்ததே.... அங்கே போய் நம்ம பெயர் எழுதியிருந்த 'க்ராய்ஸென்ட்' ரெண்டண்ணம்  வாங்கிக்கிட்டு நம்ம தெருவில் நுழைஞ்சோம்.

நம்ம ஹொட்டேலுக்கு எதிர்வாடையில் ஆஸ்பத்ரி இருக்கு. St. Paul's Hospital.  இந்தப் பகுதியில் (ப்ரிட்டிஷ் கொலம்பியா ) ஆரம்பிச்ச முதல் மருத்துவமனை.  இருபத்தியஞ்சு படுக்கை வசதிகளுடன், 1894 இல் ஆரம்பிச்சது, இப்போ ப்ரமாண்டமா வளர்ந்து நிக்குது ! 548 படுக்கை வசதிகள் ! ஆம்புலன்ஸ் நடமாட்டம்  ஓயாது போல  
அதிலொரு நோயாளி , எதிர்வாடைக்கு வந்து அங்கே இருக்கும் ரெஸ்ட்டாரண்டில் சாப்பிட்டுட்டுத் திரும்பப் போறார்.  அவர் நோயாளின்னு எனக்கெப்படித் தெரிஞ்சதாம் ? ஹாஹா
வால் சென்டரில்  மரங்களெல்லாம் ஜிலுஜிலுன்னு வெளிச்சத்தோடு நிக்குதுகள் !  வேடிக்கை பார்த்துக்கிட்டு, ரொம்பவே நிதானமா நடந்து இங்கேவர அஞ்சு நிமிட் ஆச்சு ! 

அறைக்குப்போய், பழம் நறுக்க  ஒரு கத்தி வேணுமுன்னு  ஹொட்டேல்  ஹௌஸ்கீப்பிங்கில் கேட்டதுக்கு, அறைக்குக் கத்தி அனுப்பக்கூடாதுன்னு ஒரு  'விதி' இருக்காம். ப்ளாஸ்டிக் கத்தி அனுப்பறோமுன்னு  அனுப்புனாங்க. கூடவே நாம் கேட்ட நாலு சக்கரை & நாலு பால் !
காஃபி டிகாக்ஷன் கடுங்காப்பியா இறங்குது. எத்தனை பால்பாக்கெட் சேர்த்தாலும் தாங்கும்போல !  சக்கரையும் முந்தி ஒரு ஸ்பூன் இருந்ததை, இப்பெல்லாம் கால் ஸ்பூன் பேக்கா ஆக்கியிருங்க......  பால் வாங்கிக்கட்டுப்படி ஆகாதுன்னு ஒரு காஃபி போட்டு நாங்க  பை 2  ஆக்கிக்கிட்டோம்.

மறுநாள்  காலை உள்ளூர் சுற்றிப்பார்க்க ஒரு டூர் ஏற்பாடு செஞ்சுருக்கோம்.  அரைநாள் டூர்தான். ஒன்பதரைக்கு ரெடியா இருக்கணுமுன்னு சேதி அனுப்புச்சு ட்ராவல்  ஸைட்ஸீயிங் கம்பெனி !

ரெடியா இருங்க, நீங்களும் !   

தொடரும்........... :-)


12 comments:

said...

நாங்க ரெடி, நன்றி

said...

அலாஸ்கா படங்கள் எல்லாம் சூப்பர். இப்பதானே தொடங்கியிருக்கு...நானும் முழுவதும் வாசித்து விட்டு வரேன் படங்கள் என்னவென்று பார்த்துட்டு வரேன்

கீதா

said...

காய்கறிகள் எப்ப்பவுமே பார்க்க உற்சாகம். வெளிநாட்டில் தோசைக்கடை சந்தோஷம். ஆமாம், கட்டில் ஏன் அவ்வளவு உயரத்தில்? தூக்கத்தில் புரண்டு கீழே விழுந்தால் கூட நல்லா அடிபட்டுடும் போல...!!

said...

வாங்க விஸ்வநாத்,

இதோ வண்டி கிளம்பிருச்சு ! போகலாம்... ரைட்....

said...

வாங்க கீதா,

இன்றையப் பதிவையும் சேர்த்து வெறும் நாலுதான். வாசிக்க வேண்டுகின்றேன் !

said...

வாங்க ஸ்ரீராம்,

நானாவது உயரம் குறைச்சல். நம்மவருக்குமே உக்கார்ந்தால் கால் எட்டலைன்னா பாருங்க ? ஒருவேளை அங்கத்து மக்கள் எல்லோரும் ஏழடியோ ?

said...

//ஒருவேளை அங்கத்து மக்கள் எல்லோரும் ஏழடியோ ?//

ஹா..  ஹா... ஹா...   அப்படி இருந்தால் வெளியில் செல்லும்போதெல்லாம் உங்கள் கண்களில் படாமலா போயிருப்பர்கள்!

said...

தோசா - நம்மை விடாது! :)

காய்கறிகள்/பழங்கள் - பார்க்க நன்றாக இருக்கிறது!

தொடரட்டும் பயணம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

இட்லி தோசை நம்மை விடவே விடாது !!!!

எனக்கு எங்கே போனாலும் காய்கறி, பழங்கள் பார்த்துப் பெருமூச்சு விட்டாகணும் :-)

said...

@ ஸ்ரீராம்,

ஊர் முழுக்க எங்கே பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகள்தான் ! அதுலேயும் டேவீ'ஸ் தெருவில்..... ஹப்பா..... யாரையும் ரொம்ப உசரமாப் பார்த்த நினைவே இல்லை. அப்படியும்.........

said...

எங்கும் தேடி.....தோசை கடை சூப்பர்.

பழங்களும் கவர்கின்றன.

said...

வாங்க மாதேவி,

உண்மையில் தோசை, சுமார்தான். ஆனாலும் காணாததைக் கண்டமாதிரி இருந்தது அன்று !