Friday, February 28, 2020

பதிவர், பதிவர் குடும்ப சந்திப்புகள் (பயணத்தொடர் 2020 பகுதி 20 )

நம்ம மரத்தடிகாலத் தோழியருடன் மத்யானம் ஒரு சந்திப்பு இருப்பதால்  காலையில் ஒரு வேலையாக எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ மால்வரை போயிட்டு வந்தோம். கிறிஸ்மஸ் அலங்காரம் பண்ணி இருந்தாங்க.
அந்நிய செலாவணிக்குக் கொஞ்சம் காசு தேவைப்படுது.  யானை வாங்குனவர் அங்குசம் வாங்கறதும் உண்டே!  ஆனா என் 'யானை' பலமுறை வெவ்வேற செலவு வச்சுக்கிட்டே இருக்கு.  சாம்ஸங் கடையைப் பார்த்ததும், ஒரு ஸ்பேர் சார்ஜிங் கேபிள்  வேணுமுன்னு நுழைஞ்சதில்,  ஸ்க்ரீன் கவர் ஒன்னும் வாங்கவேண்டியதாப் போயிருச்சு. பழசு நல்லா இருக்குன்னாலும்  சிலபல இடங்களில்  எண்ணெய்க் கறை போல  இருக்கு. என்னதான் தொடைச்சாலும் போறதில்லை (அது தவிர நம்ம எஸ் 9+ போய், இப்பப் புது மாடல்கள் வந்துருக்கே..... அதுலே ஒன்னு.... கிடைச்சால் தேவலைன்ற நப்பாசைதான் உண்மை ) 
அங்கிருந்த நபர், இந்த எஸ் 9+ நல்லாவே இருக்கு. எதுக்கு புதுசுன்னதோடு ( நல்லா வியாபாரம் பண்றாங்க போங்க ! ) மேலே போட ஸ்க்ரீன் கவர் மட்டும் ஒரிஜினல் வந்துருக்கு. அதைப் போட்டுக்குங்கன்னார். கண் கண்ணாடி துடைக்கும் மிருதுவான துணியில் துடைச்சால் போதுமாம். 'நம்மவருக்கு' ஒரே மகிழ்ச்சி. ஆயிரங்கள் தப்பிச்சது, ஆஹா....
'நாத்திகர்களை எப்போதும் கனிவாகவே பார்க்கிறான் நாராயணன்' என்பது இன்னொரு முறையும் நிரூபணமாச்சு.

  "உங்களுக்குத்தாம்ப்பா இது பிரசாதம். எனக்கெல்லாம்  இது வெறும் ஸ்வீட்தான்.  எனக்குத் திருப்பதி லட்டு பிடிக்கும்."
(இது எப்படி இருக்கு?  லட்டு மட்டும் பிடிக்குமுன்னா, தெருவோரக்கடையில் வாங்கித் தின்னக்கூடாதா? திருப்பதி லட்டுவில் சேர்மான சமாச்சாரங்கள் தவிர, அது சாமியின் 'நேரடிப் பார்வையில்'  பிரசாதமாத் தயாராகுதே அதுதானே அந்த சுவைக்குக் காரணம், இல்லையோ? )  



ஆனா ஒன்னு... இவுங்களைச் சந்திக்கும்போதெல்லாம் எப்படியே என் வசம் தி.ல. இருக்குது என்பது(ம்) உண்மை!
ஆனால் இது எதுவும் நட்புக்குப் பங்கமில்லை, கேட்டோ !

வரேன்னு சொன்ன நால்வரில் மூவர் வந்தாங்க. கூடிப்பேசிக் களித்துச் சிரிச்சுன்னு நேரம் போச்சு. 'நம்மவர்' ஆஃபீஸ் வரை போனவர், சீக்கிரமாவே திரும்பி வந்துட்டார். வெ. பஜ்ஜி என்ற  அபூர்வ ஸ்நாக்கும் காஃபியுமா  உபசாரமும் ஆச்சு!  வெ. விக்கற விலைக்குக் கேட்டால் அடி விழுமோன்னு பயந்து நான் வாயைத் திறக்கலை.

கீழே லோட்டஸின் கிச்சன் பணியாளர்தான் வெ.பஜ்ஜிக்கு ஐடியாக் கொடுத்தாங்க.  ஆறு மணி போல தோழிகள்  கிளம்பிப்போனதும் மனசுக்குள் சட்னு ஒரு வெறுமை வந்தது உண்மை.

நாங்களும் ஏழுமணிக்குக் கிளம்பி நம்ம பதிவர் சிஜி அண்ணன் வீட்டுக்குப் போனோம். அண்ணன் இப்போ, இந்தப் பூவுலகில் இல்லை. ஆனால்  அந்த அன்பு அப்படியே அந்த வீட்டுலே நிறைஞ்சுருக்கே!  வாசலில் அமைதியாகக் கார்த்திகை தீப ஒளி   !
அண்ணி லேடி எம்ஜிஆர்  வேஷத்தில் !   கண் சிகிச்சை நடந்துருக்கு. அண்ணன் மகர்  ப்ரசன்னாவைத்தான் பார்க்க  முடியலை. அவசர வேலையா வெளியூர் போயிருக்கார். நாளைக்கு வந்துருவாராம். ஆனால் நாம் நாளைக்கு வெளியூர் போறோம்.  அண்ணியின் தம்பி ஊரில் இருந்து வந்துருந்தார்.  நம் பயணத்தில் அவர் ஊருக்கும் போகப்  போறோம் !
குழந்தைகள்  வளர்ந்துட்டாங்க.  கார்த்திகை தீபத்துக்குப் பள்ளிக்கூடத்தில் கைவேலை செஞ்சு  கொண்டுவந்த அகல் நல்லா இருக்கு!

எல்லோரும் நல்லா இருக்கணும் என்ற ஆசிகளோடு பெருமாளின் லட்டு சமர்ப்பித்தோம். அண்ணிக்குக் குரல் தழுதழுத்தது....
முன்னேற்பாட்டின்படிக் காலை எட்டுமணிக்கு வண்டியை சதீஷ்  அனுப்பிட்டார். வழக்கமா நமக்கு சீனிவாசனே சாரதியாக  வருவார் இல்லையா.... இப்போ  மருமகன் முருகனின் சாரத்யம்.  பூலோக வைகுண்டத்தில் ஸ்ரீரங்கனின் பாதம் பணியக் கிளம்பினோம். முருகன் ஒன்னும் சாப்பிடாமல் வந்துருக்காரேன்னு நம்ம  'கீதா'வுக்குப் போகலாமுன்னா, இதே தெருவோரக் கடையில் சாப்பிட்டுக்கறேன்னார். சுடச்சுட இட்லிகள்  பொட்டிக்குள் இருந்து  வருது .  சதுரப்பொட்டிதான் இட்லிக் குக்கர்! அட!
சென்னை திருச்சி ஹைவேயில் நடுவில் ஒரு இடத்தில்  முருகனுக்கு டீ ப்ரேக்.  அஞ்சு மணி நேரத்தில்  ஸ்ரீரங்கத்துக்குள் நுழைஞ்சாச்சு. விண்ணை முட்டும் ராஜகோபுரம் பார்த்ததும் மனசு கூத்தாடுனது உண்மை!
ஹொட்டேல் ஹயக்ரீவா போய்ச் சேர்ந்தோம்.  கல்யாண சீஸனாம். மார்கழி வருதேன்னு இந்த மாசம் ஏகப்பட்டக் கல்யாணங்கள்.  அதனால் ஹயக்ரீவாவில் இடம்  ஒரே ஒருநாளுக்கு மட்டுமே கிடைச்சது. இதே காரணத்தால்  அடுத்தடுத்து நாம் தங்குன இடங்களிலும் ஓர் இரவே !
முதலில் பகல் சாப்பாடுன்னு கீழே பாலாஜி பவன்.  சாப்பாடானதும்  நம்ம பதிவர் வெங்கட் நாகராஜின் வீட்டுக்கு ஒரு சின்ன விஸிட். மூணு பதிவர்கள் இருக்கும் குடும்பம்  அவுங்கது.  நம்ம கீதா சாம்பசிவம்  அம்பேரிக்கா போயிருக்காங்க. இங்கே பெருமாளைத்தவிர வேற சொந்தம் இல்லாத நமக்கு, இப்போ ரெண்டு பதிவர் குடும்ப சொந்தம் கிடைச்சாச்சு.  வரும்போதெல்லாம் எட்டிப் பார்த்துட்டுப் போனால்தான் திருப்தி.

ஒரு நாள் மட்டும் தங்கல் என்பதால் முதலில்  வெங்கட் வீட்டுக்குப் போய் எட்டிப் பார்த்துட்டு வந்துட்டோமுன்னால், சாயங்காலம் தொடங்கி இரவு வரை பெருமாளின் மாளிகையாண்டை இருக்கலாமுன்னு  'வரட்டுமா?'ன்னு சேதி அனுப்பினேன்.   'வாங்க'ன்னு பதில்.


வீட்டுக்குப் போனால் ரோஷ்ணியம்மா இருக்காங்க.  மகளுக்குப் பரிட்சை என்பதால் பள்ளிக்கூடம் போயாச்சு.  மகள் வரும்வரை இருந்து பார்த்துட்டே போகணும்னு 'நம்மவர்' சொல்லிட்டார்.  நாங்க நாலுபேரும்  நேரிலும், ஃபோனிலுமாப் பேசிக்கிட்டு இருந்தோம்.  வீட்டைக் கண்ணாடி போல் பளிச்ன்னு வச்சுருக்காங்க.  சுவரில்  அலங்காரங்கள்  அருமை. அமேஸானில் வாங்கினதாம். இங்கே நியூஸிக்கு அமேஸான் சமாச்சாரம்  வர்றதில்லை.
ரோஷ்ணி வந்தவுடன் கொஞ்ச நேரம் இருந்துட்டு, வச்சுக்கொடுத்ததை வாங்கிக்கிட்டு கிளம்பினோம்.
அடுத்ததாகப் பெருமாள். ரங்கா கோபுரம் வழியாக உள்ளே போறோம்.   செல்ஃபோன்  கெமராவுக்கு  டிக்கெட் கிடையாதாம்.  ஒரு இருபது ரூபாயாவது வசூலிக்கலாம் என்பது என் எண்ணம். கோவிலுக்கு வருமானம் ஆச்சு, இல்லையோ?

ரெங்கவிலாஸ் மண்டபம் கடந்து அகலங்கன் வீதி போனால்  பனை மட்டைகள் கட்டிக்கிட்டு சொக்கப்பனை தயாரா இருக்கு! ஆஞ்சி சந்நிதிக்கும், கார்த்திகை கோபுரத்துக்கும்  கொஞ்சம் தென்ன ஓலைகளால் மறைப்பு.


முதலில் கருடமண்டபத்தில்   நம்ம  பெரிய திருவடியை வணங்கி, அந்தாண்டை ஆர்யபட்டாள் கோபுர வாசலாண்டை போறோம். பெரியவரை தரிசனம் பண்ணிக்கிட்டால் அக்கடான்னு மத்தவங்களைப் பார்க்கலாம்.  இனிமேல் இன்றைக்கு தரிசனம் இல்லைன்ற அறிவிப்போடு கோபுரவாசலை மூடி வச்சுருக்காங்க.  அட ராமா........   என்ன ஆச்சு ?

இன்றைக்குச் சொக்கப்பனை கொளுத்தும் விழா இருக்கே அதுக்கு நம்பெருமாள் வந்து பார்த்துட்டுப் போவாராம். கொழுந்து விட்டு எரியும் தீயில் எல்லாம் களேபரமா இருக்கும்  என்பதால் பெரியவருக்கு லீவு போல !

பார்க்க ரொம்பவே அகலமாப் பெருசா இருக்கு சொக்கப்பனை சமாச்சாரம்.  பத்து நாளைக்கு முன்னேயே  இதுக்கான  'முஹூர்த்தக்கால்' நடும்  விழா நடக்குமாம்.  சுமார் இருபதடி உயர தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம் பூசி, மாவிலை, பூமாலை, மற்ற மங்கலப்பொருட்கள் கட்டிவிட்டு, வேதமந்திரம் முழங்க தீர்த்தம் தெளிச்சுட்டு  அந்த மரத்தை நட்டு வைப்பாங்களாம். அப்ப 'நம்ம ஆண்டாள்'  வந்து நின்னு கையை உயர்த்தி மரியாதை செய்வாளாம்.

படம்:  கூகுளாண்டவர் அருளிச்செய்தது:-)

அப்புறம்  அந்த மரத்தண்டைச் சுத்தி கம்பி ஃப்ரேம்  வச்சு அதன் மேல்  பனையோலை மட்டைகளை அடுக்கி விட்டுருவாங்க. சொக்கப்பனை ரெடி !

விஷ்ணுவும் பிரம்மனும் தங்களுக்குள்  யார் பெரியவன் என்ற போட்டியில்  சிவனின் அடிமுடி காணப்போனப்ப, சிவன்  அக்னி ஸ்வரூபமாய்  அடிமுடி தெரியாதபடி நின்னதைத்தான் நாம் சொக்கப்பனை விழாவா நடத்தறோம். அதே  ஜோதிமயம்.

பனை ஓலை என்றதால்  எரியும்போது படபடன்னு தெறிக்கும் என்பதால் கோபுரங்களுக்கு ஒரு பாதுகாப்பு வேணுமுன்னு பச்சைத் தென்ன ஓலை மட்டைகளைப் போர்த்தி வச்சதும் நல்லதே!

நாம் பிரகாரம் சுத்தி வரலாமுன்னு முதலில் போனது துலாபார மண்டபம் கடந்து,  களஞ்சியம்/ கொட்டாரம் இருக்கும் இடத்துக்கு!  செங்கமலவல்லித் தாயார், ஸ்ரீராமர் இங்கே இருக்காங்க. இங்கேயே ஒரு மண்டபத்தில் பெரிய அளவு  காலணிகள் தொங்கவிட்டுருக்காங்க.  பெரியவருக்கானது.


திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை அடுத்த நந்தக்கோட்டை கிராமத்துலே இருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் செஞ்சு, தலையில் சுமந்துக்கிட்டு  வந்து பெருமாளுக்குச் சமர்ப்பணம் செய்யறாங்க.  ஒன்னரை அடி நீளம், முக்கால் அடி அகலம் உள்ளவை.  மூணு ஆட்கள், ஏழுநாள் விரதம் இருந்து இதைத் தைச்சுத் தருவாங்களாம். அதுவும் பெருமாள் தனக்கு செருப்பு வேணுமுன்னு 'கனவில்' ஆர்டர் கொடுத்தால்தான்.  எழுபத்தியெட்டு வருஷங்களுக்குப்பின் புதுச் செருப்பு.  2017 ஆம்  வருஷம்  கிடைச்சுருக்கு.

(பக்தர்கள் குறை தீர்க்கவும், உலக நடப்புகளைப் பார்த்து சீர் செய்யவும் அப்பப்ப வெளியில் போனால்தானே செருப்பு தேயும். கிடந்தபடியே  ஞானக்கண்ணால் பார்த்தால் போதுமுன்னு இருந்தால்......  ஆனாலும் பெருமாளுக்கு ரொம்பத்தான்  இல்லே? )

இந்த சமூகத்தினரின் பக்தியை ஊருலகத்துக்குச் சொல்லத்தான்  ஏழாவது ப்ரகார  கோபுரவாசலுக்கு (கலியுகராமன் வீதி/ மேற்கு சித்திரை வீதி) சக்கிலியன்கோட்டை வாசல் னு பெயர் வச்சுருக்காங்க, அந்தக் காலத்தில்.

(இப்ப ஜாதியைச் சொல்ற வழக்கமில்லை, கூடாதுன்னு அரசு அறிவிச்சபடியால்  யாரும் சொல்றதில்லை. ஜாதியே கூடாதுனு சொல்லும் அரசு, ஜாதிச் சங்கங்களும், கட்சிகளும்  தொடங்கிக்க  அனுமதி கொடுக்கறது என்ன டிஸைன்னு தெரியலை!  ஒரு சமயம்  அஞ்சு பொண் பெற்றால் அரசனும் ஆண்டின்னு இருக்கும் பழமொழியை ஒரு பதிவில் சொல்லப்போக....  ஒரு வாசகரால்  ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன்....  போதுண்டா சாமி....  )



அஞ்சு களஞ்சியங்களையும் புதுப்பிச்சு, இடத்தையும் சீர்படுத்தி இருக்காங்க.  அங்கே ஒரு வெள்ளைக்குதிரை, கல்கியை ஞாபகப்படுத்துச்சு :-)
தொடரும்..........:-)


5 comments:

said...

அருமை சிறப்பு நன்றி

said...

மனதில் நினைப்பதை அப்படியே எழுத்தில் வடிக்கும் லாவகம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை.உங்களுக்கு அது அருளாகி இருக்கிறது..அதனால் எங்களுக்கு பாக்கியமாகி இருக்கிறது..தொடர வாழ்த்துகளுடன்..

said...

நெருங்கிய சொந்தமாகவே மாறிவிட்ட டீச்சரையும், சாரையும் சந்திப்பதில் எப்போதுமே மகிழ்ச்சி தான்..இது என்றும் தொடரணும் என்று ரங்கனை பிரார்த்திக்கிறேன்..

said...

ஆஹா... இன்றைக்கு நம் வீட்டில் சந்திப்பு பற்றிய விஷயங்கள்.

தொடரட்டும் சந்திப்புகள்.

நட்பில் தொடர்ந்து இணைந்திருப்போம்.

படங்கள் வழமை போலவே அழகு!

said...

இனிய தரிசனம். களஞ்சியங்களும் இடமும் புதிப்பித்து இருப்பது சிறப்பு.

நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி.