Friday, April 17, 2015

அரைமுட்டை போடும் அதிசயக்கோழி! (தலைநகரத்தில்: பகுதி 2)

'ரொம்ப நன்றி கிவியன். நாங்க  கார் ஏற்பாடு செஞ்சுருக்கோம். ஹொட்டேலுக்குப் போனதும் பேசறேன்'னு  சொன்னேன். நமக்கு வண்டி சாவி கிடைக்க ஒரு காமணி காத்திருக்க  வேண்டியதாப் போச்சு.

கார்பார்க் போய் வண்டியைக் கண்டுபிடிச்சுக் கிளம்பினோம். நம்ம கோபால் அடிக்கடி வேலை விஷயமா வந்துபோகும்போது  இப்படி கார் ஏற்பாடு செஞ்சுக்கறது வழக்கம் என்பதால் பாதை எல்லாம் நல்லாவே தெரிஞ்சுருக்கு(ம்)  என்றாலும்...........  கூட நாம் எதுக்கு இருக்கோம்? அப்பப்ப  ரைட் லேனுக்கு  போங்க. இன்னும் கொஞ்ச தூரத்துலே லெஃப்ட் எடுக்கணும் என்றெல்லாம்  வாயால் ஓட்டிக்கிட்டே  வந்தேன்.  எத்தனைமுறை வந்தால்தான் என்ன? அது ஆஃபிஸ்  & ஏர்ப்போர்ட் தானே?  சிட்டிக்குள்ளே இருக்கும் ஹொட்டேலுக்கு  வர்றாரா என்ன?


விமான நிலையத்தில் இருந்து  நகர மையத்துக்கு  அஞ்சு கிமீ தூரம்தான். வழியில் ஒரு  சுரங்கப்பாதையைக் கடக்கணும். ஊரைச்சுத்தி ஏகப்பட்ட மலைகளும் குன்றுகளுமா இருக்கு. அதுலே மலை ஒன்னைத் துளைத்து  பாதை போட்டுருக்காங்க. இந்த மலைக்குப்பெயர்  மவுண்ட் விக்டோரியா.

 வெள்ளையர் நியூஸி வந்து இறங்குன  சமயம்  இங்கிலாந்தை ஆண்டு கொண்டிருந்தவங்க மாட்சிமை பொருந்திய மஹாராணி விக்டோரியா அவர்களே! உடனே மலைக்கு  மஹாராணியம்மா பெயரை இவுங்க வச்சுட்டாலும், உள்ளூர் மவோரிகள் ஏற்கெனவே வச்ச பெயர் ஒன்னுமிருக்கு. Tangi Te Keo.  தமிழில் சொன்னாச் சரியா வரலைப்பா:(

மவுண்ட் விக்டோரியா டன்னல்! அறுநூற்று இருபத்திமூணு மீட்டர்  (623 ) நீளம். ரெண்டே லேன்.  ஒரே நிமிசத்தில் கடந்து போயிரலாம்.

 196 மீட்டர் உயரமான மலைக்கு ரெண்டு பக்கத்தில் இருந்தும் ரெண்டு குழுவினர்  துளைக்க ஆரம்பிச்சு  நடுவில் ஒரே இடத்தில் சந்திச்சது சரித்திர சம்பவம். கொஞ்சூண்டு தடம் மாறி வெவ்வேற திசையில் போயிருந்தால்  கதை கந்தல்!  சீச்சீ..... ரெண்டு சுரங்கம் கிடைச்சிருக்கும்:-)

ஒன்னேகால்  வருசத்துலேயே துளைச்சுக் கட்டும் வேலை முடிஞ்சு 1931 ஆம் ஆண்டு உள்ளூர் மேயரைக் கொண்டு  திறந்துருக்காங்க. ஸோ அண்ட் ஸோவால் கட்டப்பட்டதுன்னு  சலவைக் கல்வெட்டு வைக்கத் தெரியலை பாருங்க:(

இந்த இடத்தில் எங்கூர் பெருமையைச் சொல்லாட்டி எனக்குத் தலை வெடிச்சுரும், ஆமா.  எங்கூர்லே ஒரு டன்னல் இருக்குன்னு முந்தி எழுதினது யாருக்காவது நினைவு இருக்கோ? 

போர்ட் ஹில்ஸ் என்ற 330 மீட்டர்  உசரமான மலையை துளைச்சு போட்டுருக்கும் லிட்டில்டன் டன்னல் , இதைப்போல மூணு மடங்கு நீளம். கிட்டத்தட்ட  ரெண்டு கிலோ மீட்டர்! சரியாச் சொன்னால் 1970 மீட்டர். இதுதான் நியூஸியிலேயே நீளமான சுரங்கப்பாதை!  நம்ம வீட்டு விருந்தினரா வெளிநாட்டு மக்கள் யார் வந்தாலும்  சுரங்கப்பாதையைக் கொண்டுபோய் காமிக்காமல் இருக்கமாட்டொம்லெ:-) என்னமோ நாங்களே கடப்பாரையைப் பிடிச்சு தோண்டுன பெருமை!

போனவருசம்தான் (2014)  பொன்விழா கொண்டாடுனோம்.  கட்டுனகாலத்தில்  இதுக்குள்ளே போக சுங்கவரின்னு  20 செண்ட் கொடுக்கவேண்டி இருந்துச்சாம். 15 வருசத்துலே கட்டுன  செலவுக்கு சரியாப்போச்சுன்னு  1979 லே  சுங்கம் வாங்கறதை  நிறுத்திட்டாங்க. (சுங்கம் தவிர்த்த சோழனிடம்.........  வசனம் நினைவுக்கு வருது.... எப்பப்பார்த்தாலும்  சினிமா சினிமா, இந்த பாழாப் போன சினிமா ....)

முந்தி ஒரு காலத்தில் க்ரிக்கெட் விளையாடும் இடமா இருந்த பேஸின் ரிஸர்வ் ( இப்ப இங்கே க்ரிக்கெட் ம்யூஸியம் இருக்கு) தாண்டி நகர மையத்துக்கு வந்து சேர்ந்தோம். ஏற்றமும் இறக்கமுமா சாலைகள்.

 (என்னதான் சொன்னாலும் எங்கூர் மாதிரி வருமா? கேண்ட்டர்பரி ப்ளெய்ன்ஸ்ன்னு சமதளமாவே இருக்கும் ஊர்ப்பா நம்மது. அதான் சைக்கிள் ஓட்டுவது சுலபமுன்னு சைக்கிளுக்குன்னே சாலையில் தனி லேன் போட்டு வச்சுருக்கொம்லெ!)

சிட்டிமேப்பைக் கையில் வச்சுப் பார்த்துக்கிட்டு சாலைகளில் எங்கெங்கெ திரும்பணுமுன்னு வழி சொல்லிக்கிட்டே  (யாரோ சொன்னாங்களே... பெண்களுக்கு  மேப் பார்த்து வழிசொல்லத் தெரியாதுன்னு.... நெசமாவா?) நாம்  ஹொட்டேலைக் கண்டுபிடிச்சோம். சரியாச் சொன்னால்...ஹொட்டேல் பெயர் போட்ட அடுக்குமாடி கார் பார்க்கை:-)  கிடைச்ச இடத்தில் வண்டியை  நிறுத்திட்டு எங்கே இருக்கோமுன்னு பார்த்தால் ஒன்பதாம் மாடி. நினைவு வச்சுக்கணும்.

லிஃப்ட்கிட்டேவரும்போது, கார்பார்க் ஊழியர் ஒருத்தர்  அங்கே இருந்த பார்க்கிங் மீட்டர் மெஷீனைக் காமிச்சு  'இதுலே  காசு போட்டு ச்சீட்டு எடுத்து அதை வண்டி டேஷ் போர்டில் வச்சுருங்க'ன்னார். அதான் நம்மூர்லேயும் இருக்கே!  வீக் எண்ட் ஸ்பெஷலா ராத்திரி 11 வரைக்கும்  மூணு டாலர்னு எழுதி இருக்கேன்னு காசைப்போட்டால்  அது  காசைத் துப்பிருச்சு. இன்னொரு முறை போட்டாலும் அதே!

அந்த ஊழியர் வந்து 'காசு ஏன் எடுக்கலைன்னு தெரியலை. க்ரெடிட் கார்டுலே போட்டுருங்க'ன்னார். கார்டுலே  போட்டால்  தண்டனையா ஒரு அம்பது செண்ட்  எடுத்துக்குமாம். தொலையுது போன்னு  சீட்டு வந்ததும்  காரில்  வைக்கத்திரும்புனா.... அதே ஆள் திரும்ப வந்து ' நீங்கஹொட்டேல் விருந்தினர் என்றால்  காலை எட்டுவரை வண்டியை இங்கேயே நிறுத்திக்க  வசதி இருக்கு'ன்னார்.  அரைத்தூக்கத்துலே எழுந்து வரவேணாமேன்னு அந்த நபர்  பட்டனை அழுத்த நாங்க இன்னொரு முறை கார்டு  மெஷீனுக்குள் போட்டோம். இன்னொரு மூணரை.  ஒரு டாலர் தண்டம்.  ரெண்டு சீட்டையும் வெளியே தெரிவது போல் வச்சுட்டு  வந்தார் கோபால்.  இது  இங்கே முதல் கொள்ளைன்னு அப்போ தெரியாது நமக்கு!

பொட்டியை இழுத்துக்கிட்டு லிஃப்ட்டுக்குள் நுழைஞ்சால் ஹொட்டேல் லாபி எந்த மாடின்னு  தெரியலை. எழுதிப்போடக் கூடாதோ? எப்படியும் தரைத்தளமா இருக்குமுன்னு  கீழேவந்தால் அதுவும் கார் பார்க். அப்புறம் ஒவ்வொரு மாடியாப் போறது, வெளியே எட்டிப் பார்த்தால் கார் பார்க் என்னும் விளையாட்டில் எட்டாவது மாடி வந்துச்சு .  இவர் பெட்டியோடு  உள்ளே இருந்து லிஃப்ட் கதவை  ஓப்பன்  மோடில் வச்சுருப்பார். நான் வெளியே ரெண்டெட்டு வச்சு  பார்த்துட்டு வருவேன்:-) இங்கேயும்  கார் பார்க். என்னடா கதை? நாம் ஒன்பதில்தானே  வண்டியை விட்டுருக்கோமேன்னு ...  நினைச்சுக்கிட்டே திரும்பிப்பார்த்தால்  வலப்பக்கம்  ஒரு ஆங்கிளில் ட்ராவல் லாட்ஜ் பெயர் தெரிஞ்சது.  அட ராமா......  ஒரு போர்டு வச்சுருக்கப்டாதோ?

வரவேற்புக்குப் போனோம். வழக்கமான பதில்.  செக்கின் டைம் பகல் 2 மணி.  இன்னும் உங்க அறை தயாராகலை. அடிஷனல் நியூஸ்: இப்ப  ஈஸ்ட்டர்  ஹாலிடேஸ் பாருங்க. அதனால்  வேலையாட்கள் குறைவு.

யம்மாடி.... நான் என்னான்னு  சொல்வேன். இப்ப மணி  பதினொன்னே முக்கால். ரெண்டு மணி வரை தெருவுலே சுத்தச் சொல்றியா?  எங்கேன்னு போவேன்?

"பெட்டியை அங்கேயே  க்ளோக் ரூமில் வச்சுட்டு  நீங்க  வெளியே போய் எதாவது பார்க்கணுமுன்னா பார்த்துட்டு வாங்களேன்.  உங்களுக்காக அறையை ஒரு ஒன்னரை  மணிக்குத் தந்துடறேன்."

மகராசி. நல்லா இரு.

எதிர்ப்பக்கம் கை  காமிச்சு 'அந்த லிஃப்ட்டுலே கீழே போங்க. இது  தெருப்பக்கம் கொண்டு விட்டுரும். வரவேற்புக்கு எண் ஏழை  அழுத்தவும்!'

கீழே போறோம். கதவைத் திறந்து வெளியே வந்தால்  நிறைய படிகள் இறங்கிப்போனால்தான் தெருவே வருது!  போதுண்டா சாமி! தெருவுக்குப் போய் சேரும் வழியில்  எஜமானரும் அவருடைய செல்லமும்  இருக்காங்க. பெயர் சொல்லிக் கூப்பிடவரை நோக்கி  ஆவலுடன் தரையில் 'கால்கள் பாவாமல்'  தாவிக் குதிக்கும் செல்லம்! வெங்கலச்சிலை!

படத்தைப் பாருங்க...... இவுங்களுப் பின்னாலே ஹொட்டேலுக்குப்போகும் படிகளையும் பாருங்க:(

நகரின் முக்கியமான தெரு இது.  Lambton Quay. பெரிய பெரிய கடைகளும்  வங்கிகளும் ரெண்டுபக்கமும் நிறைஞ்சு இருக்கு.  எங்கூர் கணக்கில் இதுதான் எங்க கொழும்புத் தெரு:-)  திரும்பிவர ஒரு அடையாளம் வேணுமேன்னு பார்த்தால் எதிரில் ஸ்டார்பக் காஃபிக் கடை!  வலமா இடமான்னு பார்த்து இடம் எடுத்தோம்.  இன்றைக்கு  சனிக்கிழமை. வீக் எண்ட் சனிக்கிழமைதான். நேற்றைய குட் ஃப்ரைடே போலவோ, நாளைய ஈஸ்ட்டர் போலவோ  ரிலிஜியஸ் முக்கியம் இல்லாதது.  கொஞ்சம் கடைகள் திறந்து வச்சுருக்காங்க.

இங்கெல்லாம்  பெரிய கடைகள்  நாடு முழுசுக்குமான செயின் ஸ்டோர்ஸ் என்பதால் அவ்வளவா ஆர்வமில்லை. இதே பொருள்  இதே கடையில்  நம்மூரிலும் இருக்குதானே? கடைகளில் பொம்மை மனிதர்கள் வரப்போகும் குளிர்கால ஃபேஷன் உடைகளை  அணிஞ்சு தரிசனம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க.  ஒருமாதிரி  எலுமிச்சை நிறம் கலந்த இளம்பச்சையாம் இந்த வருசக் கலர்.

ஊரூலகமெல்லாம்  இவுங்க சொல்ற வண்ணத்தைத்தான் போட்டுக்கிட்டு அலையும். இல்லைன்னா ஜாதிப்ரஷ்டம் ஆகிடாதோ? (வீட்டுக்குப்போய் நம்ம உடுப்புகளில்  இந்த நிறம் இருக்கான்னு பார்க்கணும். இருக்குமுன்னு தோணுது. எதாயிலும் பச்சை வகைதானே:-))))

நடைபாதையில்   பஸ்க்கர்ஸ் எனப்படும் ஆட்கள் அங்கங்கே உக்கார்ந்துருக்காங்க. ஜக்ளிங், கிதார் வச்சுக்கிட்டு பாட்டு,  சீன ஸ்டைல் கொட்டாங்குச்சி வயலின் இப்படிக் கலைகளைக் காமிச்சு மனசை மகிழ்விக்கும் மக்களாம்.  எங்க ஊரில் இப்படி எல்லாம் இல்லவே இல்லை. இந்தக் கூட்டத்தில் ஒன்னுமே செய்யாம ஒரு நாற்காலியைப்போட்டு உக்கார்ந்திருக்கும் சிலரும் இருக்காங்க. 'தருமம் போடுங்க ஐயா'  என்ற குரல் மட்டும் இல்லை.  'எதாவது வேலை இருந்தால் சொல்லுங்க'ன்னு கூட எழுதி வச்சுக்கிட்டு ஒரு பெண்மணி.  படமெடுத்தால் நல்லா இருக்காதுன்னு  ச்சும்மா இருந்துட்டேன்.

ஒரு அரைக்கிலோ மீட்டர் வரை  வேடிக்கை பார்த்துக்கிட்டே நடந்து போனோம்.  போதுமுன்னு  சாலைக்கு எதிர்பக்கம் போய் திரும்பி  நடந்தோம். என்னென்ன எந்தப்பக்கம் என்ற விவரங்கள் எல்லாம் பக்காவா எழுதி வச்சுருக்காங்க.  இந்த நாட்டில் இதுதான் ஒரு கஷ்டம், வேணுமுன்னு விரும்பினாலும் காணாமப்போக முடியாது. வசதியான இடம் இருக்கேன்னு ஒரு  பய  நோடீஸ் அடிச்சு இதன்மேலே  ஒட்டிற மாட்டான்:(

இந்த ஊரும் நிலநடுக்கத்துக்குப்பேர்  போனது! இப்போ ரெண்டு வருசத்துக்கு முன்னே  வெலிங்டன் நகரிலிருந்து  பதினோரு கிமீ தூரத்தில் நடந்த பூகம்பத்தால் இதே தெருவில்  முப்பத்தி அஞ்சு   பெரிய கட்டிடங்கள் இடிஞ்சு சாலை முழுசும் கண்ணாடித்துண்டுகள் சிதறிக் கிடந்துச்சாம். இதை நினைவூட்டுவது போல்  ஒரு அமைப்பு  தெருவில்  கிடக்கு .

1855 வது ஆண்டு  ஒரு பெரிய நிலநடுக்கம் வந்து போனதுன்னு  ஆவணங்கள் சொல்லுது.  வெள்ளையர் வந்தபின் வந்த முதல் நடுக்கம். அப்போ அவ்ளோ பெரிய கட்டிடங்களோ, நிறைய மக்கள் தொகையோ இல்லாததால்  உயிர்ச்சேதம்  ரொம்ப இல்லை.  அஞ்சு முதல் ஒன்பது பேர் மரணமாம்.  எப்படி  இப்படி ஒரு கணக்கும் இல்லாமன்னா....   அந்தப்பகுதியில் இருந்த மவோரிகள் சிலர் இறந்த விவரம் சரியானபடி கிடைக்கலைன்னு சொல்றாங்க.

வெலிங்டன் நகரம் நிறுவி பதினைஞ்சு வருசம் ஆனதையொட்டி ரெண்டுநாள் விடுமுறை  இருந்துருக்கு.  ரெண்டாம் நாள்  இரவு  ஒன்பது மணிக்குத்தான் பூமாதேவி ஆடத்தொடங்கி இருக்காள்:(   ஆஃப்டர்ஷாக் மட்டுமே மாசக்கணக்கில் இருந்துருக்கு.  இந்த ஃபால்ட் லைன் சமாச்சாரங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்படாத காலக் கட்டம் அது! நகரம் என்னன்னா.... அதே ஃபால்ட்லைன் மேலே உக்கார்ந்துருக்கு:(

சிப்பிகள் என்றொன்னு செஞ்சு வச்சுருக்காங்க. கலைக்கண்ணோடு பார்க்கணும்! இந்த முக்கிய சாலையில் அங்கங்கே சிற்பங்களுக்கும்  சிலைகளுக்கும் பஞ்சமே இல்லை! உலோக  உடுப்பில் ஒரு பொண்ணு நல்லாவே இருக்காள். மிட்லேண்ட் பார்க் என்ற ஷாப்பிங் செண்டர் வளாகத்திலொரு  முட்டை வச்சுருக்காங்க.  இது எங்கூர் ஒட்டைச்சிவிங்கி போல!  பல இடங்களில்  இருக்காம்.  இதுக்கு ஒரு apps வேற  வச்சு  நகரம்முழுசும் அங்கங்கே வச்சுருக்கும் ஈஸ்ட்டர்  முட்டைகளை வேட்டையாடணுமாம். இதுலே கடைசியில் கிடைக்கப்போகும் வருமானம்  ஆக்லாந்து நகர் குழந்தைகள் மருத்துவமனைக்குப் போகுதாம்.
புல்வெளிகளில் புறாக்கூட்டங்கள். இதுலே ஒன்னு மட்டும்  வேறு நிறத்தில்! கண்ணில் பட்டவைகளை க்ளிக்கிக்கிட்டே ப்போறோம்.

ஒரு கடை மட்டும்  எங்க ஊரில் இல்லாதது.  கிர்க்கடேல் & ஸ்ட்டெய்ன்ஸ் லிமிட்டட்.  1863 இல் ஆரம்பிச்சது.  நியூசியில்  வெள்ளையர் வந்து செட்டில் ஆகத் தொடங்குன  சமயம். உள்ளே நுழைஞ்சோம். ஏகப்பட்ட நல்ல நல்ல பொருட்கள். விலையும் அதைப்போலவே. கடைக்குள்ளேயே போய் விண்ட்டோ ஷாப்பிங் மட்டும்தான் செய்ய முடியும்:(  ஆனா சும்மாச் சொல்லக்கூடாது.... அட்டகாசமான  பொருட்கள்.


கிளிக்கூண்டுலே இருக்கும்  கிளியை வெளியே எடுத்தவுடன், கீ கீன்னு மெல்லிசா கூப்புடுது. உள்ளே திரும்ப வச்சுட்டால்  சைலண்ட் ஆகிரும்.  இந்தப் பறவை ஒரு டீ வடிகட்டி!  இதை மட்டும் வாங்கினோமுன்னா.... அப்புறம் வாழ்க்கையில் டீ குடிக்கக் காசே இருக்காது:-)

இதுக்குள்ளே ரெண்டு முறை நம்ம கிவியன் செல்லில் கூப்புடுட்டார்.  'எங்கே இருக்கீங்க?  நான் வந்து உங்களை வீட்டுக்குக் கூட்டிப்போறேன். சாப்பாடு இங்கே'ன்னார்.

'நாங்க ச்சும்மா ஊர்ச்சுத்திக்கிட்டு இருக்கோம்.  (கன்னத்தைத் தடவியபடி) அறை இன்னும் கிடைக்கலை. ஒன்னரைக்குக் கிடைக்கும். சாப்பாடு ப்ரச்சனையே இல்லை.  இங்கேயே எதாவது பார்த்துக்கறோம். நோ ஒர்ரீஸ் . அறைக்குப் போனதும் தாக்கல் விடறோம்.'

ஈஸ்ட்டர் ஷாப்  என்று மூன்றாம்  மாடியில்  தனி இடம். எட்டிப்பார்த்தோம். கோழி ஒன்னு  உக்கார்ந்துருக்கு. அதுக்குப் பக்கத்தில் இருக்கும் குழாய் உண்டியலில் ஒரு டாலர் நாணயத்தைப் போட்டால்... கொக் கொக் என்று சின்னக்குரல் கொடுத்துக்கிட்டே மெள்ள எழுந்து  உடம்பை ஒரு ஆட்டு ஆட்டி, பிரஸவ வலியில்  சின்னக் கூப்பாடுபோட்டு உக்கார்ந்து க்ளக்ன்னு ஒரு முட்டை போட்டு  அடுத்துள்ள வாளிக் கிண்ணத்தில் வெளியே தள்ளுது.  மார்ஷ்மல்லோ எக்ஸ். அதுவும்  முட்டையை  நெடுக்குவாக்கில் ரெண்டாப் பிளந்து ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியா  ஃபாயிலில் சுற்றிவேற தருது!   க்ரேட் கோழி!   நானும் ஒரு டாலரைப்போட்டு கோழி இட்ட முட்டைத் துண்டுகள் வாங்கிக்கிட்டேன். சின்னப் பசங்க கூட்டம் முழுசும் இங்கேதான்:-)


ஆளுக்கு அரை முட்டையைத் தின்னபடியே இன்னும் கொஞ்சம் நடந்து, நம்ம ஹொட்டேலையும் கடந்து போனால்  குறுக்கே இன்னொரு சாலை. வில்லீஸ் தெரு. முனையிலேயே  'டேஸ்ட் ஆன் வில்லீஸ்' என்று ஒரு ஃபுட் கோர்ட். கட்டிடத்தின்   அடியில் பேஸ்மெண்டில்  கட்டி விட்டுருக்காங்க.

இதைப்போன்ற இடங்களைப்  பார்க்கும்போதெல்லாம்  சென்னை மெரினாவில்  காந்தி சிலைக்குப் பக்கத்தில் அலங்காரத் தோட்டம் போட்டுருக்காங்களே... அதுக்கடியில் இதைப்போல ஒன்னு கட்டி விட்டு, தீனிக்கடைகளை இதுக்குள்ளே அனுப்பி இருந்தால்  கடற்கரையாவது  சுத்தமா இருக்குமே என்ற ஏக்கம் வழக்கம்போல் வந்து தொலைச்சது:(

உள்ளே நமக்கான உணவு எதுவும் இல்லை. துள்சியும் மூடிக்கிடக்கு.   வீக் எண்ட் விடுமுறை. சிட்டிக்கு ஆட்கள்  வரமாட்டங்களாமே! கஸ்ட்டமர்ஸ் முழுக்க முழுக்க CBDயில் வேலை செய்யும் மக்கள்ஸ்தானாம்!  வெளியே வந்து எதிர்வாடையில் இருக்கும் ஸப்வேயில்  ஆளுக்கொரு  ஆறு இஞ்ச்  வெஜிடபிள் ஃபில்லிங்ஸ் வச்ச ப்ரெட்டைக் கையில்  வாங்கிக்கிட்டு ஹொட்டேலுக்குத் திரும்பிப் போனோம். மாடி எண் ஏழு!

அறை ரெடி. இப்ப அதே லிஃப்ட்டில்  பத்தொன்பதாம்  மாடிக்குப்போகணும். அறை எண் 1903:-)

சாண்ட்விச் தின்னுக்கிட்டு இருக்கும்போது மறுபடியும் கிவியனின் கால். வந்துட்டாராம்.   கீழே இருக்கேன்னதும் அறைக்கு வரச்சொல்லி  எண்களை ஒப்பிச்சாச்சு.  காமணி நேரமாச்சு ஆளைக் காணோம்! சரி நாமாவது போய்ப் பார்க்கலாமுன்னு நினைக்கும்போது அழைப்பு மணி. வந்துட்டார்! போனமுறை பார்த்ததுக்கு ரொம்பவே இளைச்சுப்போய் இருந்தார். பயங்கர  எக்ஸர்சைஸ் போல!

 ஹொட்டேலுக்கு வழி தெரியாமல் சுற்றிக்கிட்டு இருந்தாராம். போச்சுரா! ரெண்டு நிமிசப் பேச்சுக்குப் பின்  'தங்க்ஸ்' காரில் வெயிட்  செய்யறாங்கன்னதும்,  'அக்கா'வைத் தூக்கி அவர் கையில் கொடுத்துட்டு,  கீழே போனோம்.


ஒல்லி உடம்போடு விடுவிடுன்னு நடக்கும் அவர் பின்னால் ஓடறோம். ஹொட்டேலை வலம் வர ஏதோ வேண்டுதல் போல!  படிகளில் மளமளன்னு ஏறிப்போறார். லிஃப்ட் இருக்கான்னு ஒன்னுரெண்டு முறை அங்கங்கே கட்டடத்துக்குள் போய் எட்டிப் பார்த்துட்டு,  இங்கேவழி கொஞ்சம் குழப்பம்தான். பேசாம நான் வந்த வழியிலேயே போயிடலாம் என்றார்.

ஏத்தத்தில் ஏறிப்போக முடியாமல் மூச்சு இறைக்க , நெஞ்சு தடதடக்க  , ஆஸ்மா வரட்டுமான்னு எட்டிப் பார்க்க  துவண்டுபோய் பின்னால் போறேன். அவரைப் பார்த்து ஒரு ஒன்பதரை வருசமாகுது . இவ்ளோ நாள் காத்திருந்தது போல  பழி வாங்கிட்டாருபா!

தொடரும்...........:-)


18 comments:

said...

உங்களுடன் பயணிக்கும்போது கிடைக்கும் அனுபவங்களே தனி. புகைப்படங்கள் வழக்கம்போல அருமை. இந்த இடத்தில் எங்கூர் பெருமையைச் சொல்லாட்டி எனக்குத் தலை வெடிச்சுரும் என்ற சொற்றொடர் எங்களை பதிவோடு இன்னும் நெருக்கமாக அழைத்துச்சென்றது.

said...

படங்கள் அனைத்தும் பிரமாதம்... நம்ம ஊரையும் மறக்காம இருக்கிறீங்க அம்மா...

said...

நீங்கள் கண்டது அனைத்தும் நாங்களும் காண ஒவ்வொரு விவரமும் சொல்லி கூடவே அழைத்து செல்கிறீர்கள் துளசி. படங்கள் இடங்கள் விவரங்கள்அனைத்தும் அருமை நன்றிகள் பல !!

said...

கஷ்டங்கள் நண்பர்கள் மூலமாகத்தான் வரும்.

said...

பயணத்தில் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் ரசிச்சு நினைவில் வெச்சிருந்து அதைப் பகிரும் உங்கள் பாங்கு போதையூட்டும் Bபாங்கு(ஒங்கள மாதிரியே எழுதியாச்சு) :)

அந்தப் பதிவர் பேரை அடுத்த பதிவில சொல்லிடுங்க :)

said...

நல்ல அனுபவங்கள்..... ஊர் பூரா அழகு!

தொடர்கிறேன்.

said...

படங்களின் அழகும், ஒரு டூரிஸ்ட் கைட் போல் விவரமாக எழுதிப்போகும் விதமும் எங்களை பாஸ்போர்ட் விசா இல்லாமல் நியூசியை சுற்றி பார்க்க வைத்தது.

said...

நன்னா சுத்திப் பார்த்தோம் கேட்டேளா....அந்த மெட்டல் மாமியும், கோழியும் ரொம்ப பேஷ்!!

said...

அருமையா நாங்களும் சுத்தி பார்த்தோம். அருமை. வாழ்த்துக்கள்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

இதுதான் நான் எதிர்பார்ப்பது. சரியாச் சொல்லிட்டீங்க! மனதுக்கு அண்மையான பதிவின் நெருக்கம்.
நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

மறக்க முடிஞ்சாத்தான் பிரச்சனையே இல்லையே! நிம்மதியா இருக்கமாட்டேனா?

said...

வாங்க சசி கலா.

நான் கண்ட காட்சி நீர்/நீரும் காண வேண்டும்!

வெற்றி வெற்றி!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

இந்த மாதிரி வரும் கஷ்டங்களை நம் பதிவில் போட்டுக்க முடியும் என்பதே ஆறுதல்:-)))

said...

வாங்க ஜிரா.

நம்ம மௌனம் சுரேஷ்தான் அவர் என்பதை அடுத்து வந்த பதிவில் கண்டுபிடிச்சு இருப்பீங்களே:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நியூஸி கொஞ்சம் அழகான நாடுதான். அதான் நமக்கு லட்டு:-)

said...

வாங்க செந்தில் குமார்.

நியூஸி விஸா கொடுப்பதில் கொஞ்சம் கெட்டிதான். சூரியனுக்கே வருசத்தில் மூணு மாச விஸாதான்னா பாருங்களேன்:-)

said...

வாங்க துளசிதரன்.

மெட்டல் மாமி! சூப்பர். நோ ச்சான்ஸ். எனக்குத் தோணலையே!!!

said...

வாங்க மகேஸ்வரி.

வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.