Wednesday, April 01, 2015

வெஜிடேரியன்னதும் வெலவெலத்துப் போனால் எப்படி? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 35)

அறைக்கதவைத் தட்டிய ரெமா (இவுங்கதான் இங்கே மேனேஜர்)  பகல் சாப்பாட்டுக்கு என்ன வேணுமுன்னு கேட்டாங்க. சிம்பிளா கொஞ்சம் பருப்பும் சாதமும் என்றேன். 'மீன் கறி இங்கே  நல்லா இருக்கும். வைக்கட்டுமா'ன்னாங்க.  அடராமா......  வெஜிடேரியன் சாப்பாடுன்னதும் முகம் கொஞ்சம் வாடிப் போச்சு. வெள்ளை அரிசியா இல்லை சிகப்பா?  வெள்ளைன்னேன். பச்சரின்னும் சொல்லி வச்சேன்.  இன்னும் ஒரு மணி நேரத்தில்  சாப்பிடலாமுன்னு சொல்லிப் போனாங்க.

வைஃபை இருக்குன்னதும்  நாங்க  கொஞ்ச நேரம் மெயில் பார்த்துட்டு,மகளுக்கு ஆறுதலா ஒரு கடிதம் அனுப்பினேன். ஒரு ஏழெட்டு மெயில் இங்கும் அங்குமாப் போச்சு. ஜூபிட்டர் எப்படி இருக்கான்னதுக்கு அவன் கொஞ்சம் சோகமா இருக்கறமாதிரி இருக்குன்னாள். 'அவனுக்கு  இவனைக் காமிக்கலைதானே? ஆமாம்.  நல்லது,  அவன் மனசில் இவன் காணாமப் போனதாகவே இருக்கட்டும்.'

க்ரெமெடோரியம் ஆள்  வந்து கொண்டு போயிட்டாராம். அஸ்தியை,  மகளின் வெட்னரி க்ளினிக்குக்கு அனுப்பிருவாராம். 'அங்கே இருந்து கூப்பிடுவாங்க'ன்னு சொல்லிப் போனாராம்.  கவலைப்படாதே. Zeus க்கு  நல்ல கதி கிடைக்கும்.  அவன் ஆயுசு அவ்ளவுதான்.  நான் பெருமாளிடம் நல்லபடி வேண்டிக்கறேன்,  என்றேன்.

மரியா ஒரு  அழகான நாலுகெட்டு வீடு. கேரள பாரம்பரியத்தில்  ரொம்பவே பிரஸித்தி உள்ளது இந்த நாலுகெட்டு டிஸைன்கள். வாசலில்  வருபவர்கள் உக்கார  சுற்றிலும் அகலக்குறைவான  திண்ணை போல் ஒரு அமைப்பு இருக்கும். இங்கே திண்ணைச்சுவருக்குப் பதிலா  மரத்தில் பெஞ்சு போல ரெண்டு பக்கங்களிலும் அமைச்சு இருக்கு.வாசலைக் கடந்தால் அகலமான வெராந்தாக்கள் நாலுபுறமும்  ஓட நடுவில் ஒரு திறந்த வெளி முற்றம், பளபளக்கும் நாலு தூண்களுடன்.வலது பக்கத்தில் வெராந்தாவில் (இது   ஒரு ஹாலின் அளவில் இருக்கு)  ஸிட்டிங்ரூம் பர்னிச்சர்களா   மூணு  மூங்கில் ப்ளாச்சுகள் பின்னிய  ஆசனங்கள்.

 முற்றத்தையொட்டி ஊஞ்சல். இது சதுரப்பலகை!   முற்றத்தின் பக்கம் காலைத் தொங்கவிட்டும் உட்காரலாம்.  முற்றம் நிறைய கூழாங்கற்களை நிரவி வச்சு, ஓரம் முழுசும் மணி ப்ளாண்ட் செடிகள். பார்க்கவேஅழகு!
இதுக்கு நேர் எதிரா இருக்கும் வெராந்தாவில் சாப்பாட்டு மேஜை. பத்து நபர்கள் சேர்ந்து சாப்பிடலாம்.வாசக்கதவுக்கு நேரா முற்றத்தைக் கடந்தால்  பின்கட்டுக்குப் போகலாம். இங்கேயும் உம்மரத்தில் உள்ளதுபோல்  திண்ணைபெஞ்சுகள். சாரு கஸேரைகள் (ஈஸிச்சேர்)போட்டு வச்சுருக்காங்க. எதிரே அழகான தோட்டம். தெங்குகள் எல்லாம் பதினெட்டாம்பட்டை வகை. தென்னங்கன்னு வளர்க்கும்போது  பாளை ஒவ்வொன்னா வருது பாருங்க. அதுலே பதினெட்டாவது முளைச்சு வரும்போது, தெங்கு காய்க்கத் தொடங்கிரும்.
தோட்டத்துக்கு அந்தப்பக்கம் பாடங்கள் (வயல்கள்).  குட்டநாடு நெல்வயல்கள். இப்போ கொய்த்து முடிஞ்சு அடுத்த நடவுக்குக் காத்திருக்கு நிலம்.
மற்ற இரண்டுவெராந்தாக்களிலும்  அலங்காரப்பொருட்கள். ஒரு பழையகால மரத்தொட்டில் கூட இருக்கு. வெராந்தாக்கள் சேரும் நாலு மூலைகளிலும்  படுக்கை அறைகள். ஒரு மூலையில் மட்டும் அறைக்குப் பதிலாக அடுக்களை!
அறையும் நல்லாப் பெருசாதான் இருக்கு. இதுக்குள்ளேயேபெட்டிகள் வச்சுக்க ஒரு சின்ன அறை.  பக்கத்தில் குளியலறை. இங்கேயும்  ஷவருக்கு அப்புறம் கூழாங்கல்போட்டு மேற்புறம் மூணு பட்டைகளாகத்  திறந்த அமைப்பு. மழை வந்தால் அது உள்ளேயும் வரும் வகை:-)

படுக்கை அறைப்பகுதியில்  எழுதும் மேஜை, நாற்காலிகள். டிவி, ஏஸி எல்லாம்  அதது வேண்டியபடி. பின்பக்கக் கதவைத் திறந்தால்  நல்ல சைஸில் சிட் அவுட்.  எனக்குப் பிடிச்ச திண்ணைபெஞ்சு. ஐ சிம்ப்ளி லவ் திஸ் ப்ளேஸ்!
வெயில் கண்ணை உறுத்தாமலிருக்க  சின்ன மூங்கில்பட்டைகளால் ஆன திரை! ப்ரைவஸிக்கும் ஆச்சு,  இல்லையோ!


முன்வாசலுக்கு வெளியே எட்டிப் பார்த்தால்  காம்பவுண்ட் சுவருக்கு  அந்தப்பக்கம் அகலமாக ஓடும் ஆறு! பம்பா நதி! மணிமாலா ஆறு என்ற ஒன்னு  பம்பாவின் துணையாறு போல்  பம்பாவில் வந்து சேர்ந்துருது. அதனால் எல்லாமே பம்பா பம்பாதான். காசிக்கு கங்கை எப்படியோ அப்படி இந்தப் பக்கங்களில்  இதுவும் ஒரு புனிதம் என்பதே!  சேரநாட்டு மலைகளில் மழை பெய்ய ஆரம்பிச்சவுடன், நீர்வரத்து அதிகமாகி  பொங்கிப்பெருகி பாதைகளைக்கூட மூடிருது. அதான் நாம் வழி தெரியாமல் முழிச்சதன் காரணம்.

வீட்டின்ற உடமஸ்தர்  துபாயில் இருக்காராம். அவரது பலநாள் கனவாம் இப்படி ஒன்னு அமைக்கணும் என்பது. பலநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து தங்கிட்டுப் போறாங்களாம். இப்போதான்  முதல்முறையா நியூஸி மக்கள் வந்துருக்காங்க:-)   இந்த வீட்டைத் தவிர்த்து தோட்டத்தில் தனித்தனியா நாலு காட்டேஜ்கள் இருக்கு.  முக்கியப்பட்ட பல சினிமா தாரங்கள் மோகன்லால், மம்மூட்டி போன்றோர்  பத்துநாளைக்கு  வந்து தங்கி ஓய்வெடுத்துக்கறது  பதிவு.  ( பதிவு = வழக்கம்)  இங்கேயே ஆயுர்வேத மஸாஜ், போட் ஹவுஸ் அனுபவிக்கணுமென்றால் அதற்கான ஏற்பாடுகள், ஊரைச் சுற்றிப்  பார்க்கணும் என்றால்  அதுக்குத்தகுந்தபடின்னு  எல்லா வசதிகளையும் செஞ்சு தர்றாங்க. காட்டேஜ்களில் இப்ப யாரும் இல்லை. உள்ளே பராமரிப்பு வேலைகள் நடக்குதுன்னு சொன்னாங்க. டிசம்பர் சீஸனுக்கு ரெடியா  இருக்கணுமாம்.

நமக்கு என்னென்ன தேவைன்னு கேட்டு செஞ்சு தற்றாங்க. நாங்க சிம்பிளான வெஜிடேரியன் சாப்பாடுன்னதும் ரெமா கொஞ்சம் வெலவெலத்துப் போயிட்டாங்க:-) மீன்கறின்னு சொல்லி இருந்தால் வாசலில் ஓடும் நதியிலேயே மீன்  பிடிச்சுச்  சமைச்சுருவாங்களாம்!

சமையல் ஆகும்வரை கொஞ்சம் வாசலுக்கு வந்து க்ளிக்கிட்டு இருந்தேன். வாசலில் நின்னு பார்த்தப்ப இடதுபக்கம்  கொஞ்சதூரத்தில் அழகான ஒரு சர்ச்!  நதியின் வளைவில் இருப்பதால் தண்ணிக்குள்ளே நிற்பதுபோல் இருக்கு. அக்கரைக்குப் போனால் பார்க்கலாம். போயிருக்கலாமேன்னு இப்பத்தோணுது எனக்கு. தனியார் படகுகள் இங்கே அங்கேன்னு  நதியைக் கடக்கப் போய் வருதுதான். இதைத்தவிர  புளின்குன்னு வெலியநாடு ஃபெர்ரி சர்வீஸொன்னு இக்கரைக்கும் அக்கரைக்கும் போய் வருது.


அந்த அழகான சர்ச் ஒருசினிமாவில் நடிச்சுருக்காமே!   சிம்புவின் படம் என்றார்கள். 'விண்ணைத்தாண்டி வருவாயா'ன்னு நினைக்கிறேன் என்றார் , சினிமாப்ரேமியான நம்மவர். ஸெயிண்ட் மேரீ'ஸ் ஃபோரேன் சர்ச்.வலியபள்ளி  (St.Mary's Forane Church, Valiyapally)


ஒன்னேகாலுக்கு சாப்பாடு ரெடி. பருப்பு, முட்டைக்கோஸ்  தோரன், பீட்ரூட் தயிர்பச்சடி, ரஸம், சோறு, கடுமாங்கா அச்சார்.  நமக்கு இது யதேஷ்டம். சமையலுக்கும் மற்ற வேலைகளுக்கும் பணியாளர்கள்  இருக்காங்க. இப்போதைக்கு  அங்கே கெஸ்ட் நாம் மட்டும் என்பதால் மற்ற ஆட்கள் வீடுவரை போயிருக்காங்களாம்.  ஃப்ரான்ஸிஸ், ஸோஸம்மா ரெண்டு பேரும் சேர்ந்து சமையல் செஞ்சாங்களாம். நம்ம ஸ்ரீனிவாசனுக்கு  அடுக்களையில் இருக்கும்  ஊணுமேசையில் சாப்பாடு பரிமாறினாங்க.

ராத்திரிக்கு என்ன வேணும்? சப்பாத்தி செய்யட்டுமான்னு கேட்டாங்க. ஆய்க்கோட்டே!

சாப்பாடு ஆனதும் ரெண்டு மணிக்கு நாம் கிளம்பி வெளியே போறோம். ரெடியா இருங்க.

தொடரும்.....:-)
26 comments:

said...

சாப்பாட்டு நேர இடைவெளியில் கூடபுகைப்படங்கள். அழகான இடங்கள். மனதில் நிற்கின்றன.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பயணங்களில் நமக்குத்தான் சமையல் வேலை இல்லையே.அதான் க்ளிக்கோ க்ளிக்:-)

said...

அடடா...! என்னவோர் அழகான இடம்...!

பார்க்க பார்க்க ஆனந்தம்...! பறவை போல உற்சாகம்...!

browser-ல் bookmark-களை நன்றாகவே பிரித்து வைத்துள்ளீர்கள் அம்மா...! (எல்லாத்தையும் கவனிப்போமில்லே... கவனிச்சோ...? ஹிஹி)

said...

சமையல் மெனு அட்டகாசம்! தங்குமிடம் சொர்க்கம்!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இன்னும் ரெண்டு நாள் தங்கி ஓய்வெடுக்கத் தகுதியான இடம். பொடிநடையில் படகுத்துறைக்கு வந்து வேடிக்க பார்த்துக்கிட்டு இருந்தாலே நேரம் பறந்துரும்.

அதர் புக் மார்க்ஸ்ஸில் இன்னும் ஏகப்பட்டது ஒளிஞ்சுருக்கே:-)))))

said...

ஆக.. இப்ப நீங்க இருக்கும் எடம் எர்ணாகொளமா? அங்கதான் எடுத்தாங்கன்னு நெனைக்கிறேன்.

நான் எர்ணாகொளம் போயிருந்தப்போ ஒரு போட்டில் ஏறி அந்தப் பக்கம் போய்ப் பாத்த நினைவு இருக்கு.

பதிவுன்னா வழக்கமா. நாமல்லாம் வழக்கமா பதிவு போடுறோம். அது தெரிஞ்சுதான் மலையாளம் பிரிஞ்சப்போ வழக்கத்துக்கு பதிவுன்னு சொல்லத் தொடங்கிட்டாங்க போல :)

என்னோட நண்பன் ஒருத்தன் சேலம் பக்கத்துல ஒரு கிராமத்துத் திருவிழாவுக்குப் போனான். அவனோ முட்டையைத் தவிர எதுவும் தின்றறியாச் சைவம்.

திருவிழாக்கு வந்துட்டு கறி சாப்பிட மாட்டேங்கிறீங்களேன்னு ஊரே கூடி வருத்தப்பட்டிருக்கு. அப்புறம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒவ்வொரு சைவப் பதார்த்தம் வந்து சாப்பிட்டிருக்கான்.

இந்த கெஸ்ட் ஹவுஸ் ரொம்ப அழகா இருக்கு. மலையாளிகள் கொடுத்து வைத்தவர்கள்.

said...

வாங்க கீதா.

உண்மைக்குமே அருமைதான்ப்பா. அடுத்தமுறை ஒரு நாலுநாள் தங்கி ஆயுர்வேத மஸாஜ் பண்ணிக்கிட்டு புத்துணர்ச்சி பெற ஆசை:-)

said...

வெஜிடேரியன்னதும் வெலவெலத்துப் போனால் எப்படி? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 35)- துளசி தளம் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மேடம் Tulsi Gopal.

said...

வாங்க ஜிரா.

இது ஆலப்புழைக்குப் போகும் வழியிலிருக்கும் 'புளிக்குன்னு' என்ற இடம்.

கொச்சி-எரணாகுளம் சர்ச் வேற. இது இங்கே புளிக்குன்னுவில் இருக்கு.

இதை நாமும் அனுபவிக்கக் கொடுத்து வச்சுருக்கு என்பதே மகிழ்ச்சிதானே!

said...

காட்டேஜ் அருமையா இருக்கு.

said...

அழகுனா இப்படி ஒரு அழகா. படங்கள் ம் மனசுக்கு இதம். ஒரு குட்டி மசாஜ் செழ்துட்டு வந்திருக்கலாம் துளசி. அங்க இருக்கிற ஈசி சேர ஆஜியோடது மாதிரி இருக்கு. இன்னும் கொஞ்சம் நீள கூடி இருக்கும். படு கம்பீரம். சர்ச் ரொம்ப அழகு.

said...

பெரிய வீடுகள் எனக்கு ஆச்சரியமளிப்பதில்லை. காரணம் நான் ஊரில் வாழ்ந்த வீடு,நான் பார்த்த காரைக்குடியில் உள்ள வீடுகள் என்பது போன்ற பல தரப்பட்ட பெரிய வீடுகள் இயல்பான ஒன்றாகவே இருந்தது. ஆனால் இரண்டு தலைமுறைக்கு முன்னால் எதை எதையோ மனதில் வைத்து எங்கோ அலைந்து சம்பாரித்து கொண்டு வந்து சேர்த்த அத்தனை சொத்துக்களையும் வீடுகளாக மாற்றியவர்களின் இன்றைய வீடுகள் ஆள் ஆரவற்ற கவனிப்பார் இன்றி அதை நிர்வகிக்க ஆட்கள் இன்றி தடுமாறிக் கொண்டிருக்கும் வீடுகளைப் பார்க்கும் போது தான் பல வித எண்ணங்கள் என் மனதில் வந்துள்ளது.

நான் ஏற்கனவே பணிபுரிந்த நிறுவன(மலையாளி) மிகவும் ரசனைக்காரர். பம்மை(கேரளா) போகின்ற வழியில் இருபது கோடி ரூபாய் செலவில்கட்டிய வீட்டை ஒரு முறை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அவர் இருப்பதே வளைகுடா நாட்டில். இங்கே கவனிக்க இரண்டு வேலையாட்கள் மட்டுமே. இவர்கள் இருவரும் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க அவரோ தேசம் தேசமாக சுற்றிக் கொண்டிருக்கின்றார்.

எங்கள் வீட்டைப் பார்த்து இருப்பீங்களே? இதற்கு முன்னால் பங்களா டைப்பில் பெரிய வீட்டில் சகல வசதிகளோடும் இருந்தோம். ஆனால் பள்ளி என்ற பெரிய பிரச்சனை உருவாக இவர்களை அழைத்து வர கொண்டு வந்து சேர்க்க தினந்தோறு ரணகளமாக மாற அவர்களின் வசதிக்காக சகலத்தையும் பொறுத்துக் கொண்டு பள்ளிக்கருகே வாழ வேண்டியிருந்தாலும் மனதில் பரிபூரண திருப்தி.

படங்களைப் பார்த்த போது இங்கே வாழ்ந்த சென்ற திருப்தி. மறுபடியும் கூலாக மாற்றிமைக்கு நன்றி.

said...

புகைப்படங்கள் அருமையோ அருமை! ஏதோ தேம்ஸ் நதிக்கரை போன்றும், ரோமில் கூட நதியை ஒட்டி வீடுகள் அதற்கு படகுகளில் தானே வீட்டுக்கே செல்ல வேண்டும் என்பது போன்றுதான் கேரளாவிலும்...நல்ல பங்கி கேட்டோ...

அது தன்னே! ஆ சர்ச்ச் தன்னே! விண்ணைத் தாண்டி வருவாயா படம்....சகோதரி தமிழிலிருந்து பிரிந்தது தானே மலையாளம். கேரளத்தில் கூட முன்பு தமிழ்தான் இருந்தது. அதில் சமஸ்கிருதம் கலந்து, பின்னர் மலையாள எழுத்துருக்கள் என்று நவீன மலையாளத்தை உருவாக்கியவர் துஞ்சத்து இராமனுசன் எனப்படும் எழுத்தச்சன். இப்போதும் கூட நிறைய வடமொழி வார்த்தைகள் இருக்கின்றது.

கேரளத்தில் அதுவும் தெற்கிலிருந்து வடக்கே செல்லச்செல்ல அதாவது கடற்கரை ஓரமாக அமைந்துள்ள மாவட்டங்களில், வெஜிட்டேரியன் உணவகங்கள் தேடத்தான் வேண்டும்.

அருமையான விவரணம்.

said...

வாங்க ரத்னவேல்.

உங்கள் பக்கத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

நாங்கள் காட்டேஜில் தங்கலையே.

வீட்டுக்குள்ளேதான் இருந்தோம். காட்டேஜில் பராமரிப்பு வேலைகள் நடப்பதால் போய்க்கூடப் பார்க்கலை:(

said...

வாங்க வல்லி.

ரொம்பவே நல்லா இருந்ததுப்பா. இன்னும் ரெண்டுநாள் தங்கி இருந்தால் அட்லீஸ்ட் கோபாலுக்காவது மஸாஜ் செஞ்சு விட்டுருக்கலாம்:-)

எண்ணெய் போட்டுத் தேய்க்கும் வேகத்தில் கைகால் எல்லாம் பிய்ஞ்சு வராமலிருக்கணுமே!

said...

வாங்க ஜோதிஜி.

அவுங்க இழந்துவிட்ட வாழ்க்கையை மீண்டும் திருப்பிக் கொண்டு வரும் மனோபாவம்தான் பெரிய பெரிய வீடுகள்.

என்ன ஒன்னு.....சந்ததிகள் வேறு ஊரில் வேர்பிடிச்சு நின்னதால் இதைப் பராமரிக்கவோ, தங்கவோ ஆளில்லாமல் போயிருது:(

ராஜஸ்தானில்,பெரிய பெரிய அரண்மனைகள் கூட இப்படித்தான் பணியாட்கள் வசம்தான்.

C/O Badal Palace என்று விலாசம் போட்டுக்கலாம் என்று முன்பு ஒருக்கில் எழுதி இருக்கேன்!

பள்ளி அருகில் இருப்பதால் பிள்ளைகளுக்கு வசதி. அதனால் நாம் பொறுத்துத்தான் போகணும்.

said...

வாங்க துளசிதரன்.

இங்கே வீட்டில் சமையல் வேலைகள் க்றிஸ்தியானிகள் என்பதால் பச்சக்கறி வைக்கான் இத்திரி மடியாணு!

நமக்கும் அங்கே ஒருநாள்தானே தங்கல் என்பதால் பிரச்சனை இல்லை. அதிக நாள் என்றால் நானே சமைக்க சகாயம் செஞ்சுருப்பேன்:-)

வெனிஸ் நகரில்தண்ணிக்கு நடுவிலேயே வீடுகள். சொந்தக் கார் போல் சொந்த போட் தான் அனைவருக்கும். ஆனால் அந்த தண்ணீரின் துர்கந்தம்.... வளரே மோசமாணு:(

said...

படங்கள் அழகு. நல்ல விளக்கங்கள்...

said...

Wow!! Looks wonderful.
வெப்சைட் ஏதாவது இருக்கா? அதே போல காரைக்குடில ஒரு வீட்டில உணவு சாப்பிட்டதை எழுதியிருந்தீங்களே சுட்டி கிடைக்கலை. குடுக்க முடியுமா?
நன்றி

said...

மிக அழகிய படங்கள்.உங்கள் வர்ணனை அருமை..

said...

அழகான இடம்.....

வெளியுலகத் தொடர்புர்களை மறந்து இரண்டு நாள் அங்கே வசிக்கத் தோன்றுக்கிறது.

said...

வாங்க கே பி ஜனா.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க அகிலா.


காரைக்குடி பங்களா சாப்பாடு

http://thulasidhalam.blogspot.co.nz/2009/04/2009-12.html


மரியா ஹெரிட்டேஜ்

http://mariaheritage.com/

said...

வாங்க ரமா ரவி.

இடத்தோட அழகு அப்படியே பதிவில் வந்துருக்கு :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அது எங்கே நம்மால் முடியுது? வெளியுலகத் தொடர்பை விட்டுட முடியாதே....பதிவர்களுக்கு இது ஒரு வியாதி, கேட்டோ:-)