Showing posts with label Kerala. Show all posts
Showing posts with label Kerala. Show all posts

Wednesday, April 22, 2015

கொசுவத்திக்கே கொசுவத்தி ஏத்தும்படியாப்போச்சே:-) ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 43)

எல்லாமே புதுசாத் தெரியும் இந்த ஏரியாவில்  வீட்டைக் கண்டுபிடிப்பது கஷ்டம் என்று கோபால் சொன்னதைக் கேட்டவள் சோகமாப்போய் வண்டியில் உக்கார்ந்தேன்.  விசாரிச்சுப் பார்க்கலாமுன்னா கண்ணில் பட்டவர்கள் எல்லாம்  நாப்பது வயசுக்குட்பட்ட மக்களாகவே இருந்தாங்க. கொஞ்சம் வயசன்மார் கண்ணுலே ஆப்டலை:(

இந்தப் படம் மட்டுமே அவர்கள் நினைவாக என்னிடம் இருக்கு.  அதுவும் நாங்கள் ஊர்மாறி வரும்போது, ஜோஜோ ஏங்கிப்போயிருவானேன்னு  அன்னம்மாச் சேச்சி வற்புறுத்தி நம்மை ஸ்டூடியோவுக்குக் கூட்டிப்போய் எடுத்த படம்.  இப்ப எல்லோரும் எப்படி உருமாறி இருப்பாங்களோ!!!!

சரின்னு அடுத்த வேட்டையை ஆரம்பிச்சோம். முரிங்கூர் போறோம்.  அங்கேதான்  நாம் கேரளா வந்திறங்கி குடிவந்த முதல்வீடு இருக்கு.

 கோபால் கேபிள் ஃபேக்டரிக்கு ட்ரெய்னிங் எடுக்க வந்துட்டார்.  நான் சென்னையிலே இருக்கேன். நமக்குத் தெரிஞ்சவங்க எல்லோரும், தனியாவா கேரளாவுக்கு அனுப்பிட்டேன்னு  என் தலையைத் தின்னதுமில்லாமல்  மலையாளியோ  **யாளியோன்னு ரைமிங்கா பழமொழி சொல்லிப்பயமுறுத்திக்கிட்டே இருக்காங்க. ரெண்டு வாரம் கூட என்னை நிம்மதியா இருக்க விடலை.

இந்த அழகிலே  எனக்கொரு ஆசை என்னன்னா எனக்கு மணி ஆர்டர்  வந்து, அதைக் கையெழுத்துப்போட்டு வாங்கிக்கணும். அதனால் கேரளா கிளம்பும்போது பத்து ரூபாயைத் தனியா இவரிடம் கொடுத்து போனவுடன் எனக்கு மணி ஆர்டர் பண்ணுங்கன்னு சொல்லிட்டு, தினமும்  மணி ஆர்டர் வரும் வருமுன்னு  பார்த்துக்கிட்டு இருக்கேன். இன்னமும்தான்:-))))


அப்பெல்லாம் செல்ஃபோன்  என்ற சமாச்சாரமே தெரியாத காலக்கட்டம். வீட்டுலே பண்ண அமர்க்களத்துலே ....   நான் நாளைக்குப் புறப்பட்டு வர்றேன்னு ஒரு தந்தி கொடுத்துட்டு மறுநாள் கிளம்பிட்டேன். சின்னதா ஒரு  அட்டைப்பொட்டியில்  ஒரு ப்ரெஷர் குக்கர், கொஞ்சம் பாத்திரங்கள். ஒரு சின்ன ஸூட்கேஸில் துணிமணி.

ரயில் திருச்சூர்  ஸ்டேஷனில் நிற்கும்போதே  அங்கமாலியில் இறங்கணுமுன்னு  சீக்கிரமாத் தயாராகிட்டேன். அடுத்து இரிஞ்ஞாலகுடா கடந்து சாலக்குடி ஸ்டேஷனில் வண்டி நிக்குது. இவர்  பெட்டிபெட்டியா தலை நீட்டிக்கிட்டு என்னைத் தேடிக்கிட்டு இருக்கார். எனக்கோ ஆச்சரியப்படணும். ஆனா  அதுக்கு இப்போ நேரமில்லை.' சடார்னு இறங்கு'ன்றார். உள்ளே வந்து சாமான்களை எடுத்துக்கிட்டதும் இறங்கிட்டோம்.


பார்த்திருக்கும் வீடு இங்கே பக்கத்தில்தான் இருக்கு. சாலக்குடின்னா  ப்ரோப்பர் ச்சாலக்குடி இல்லையாக்கும். தொட்டடுத்து ஒரு குக்கிராமம்!  முரிங்கூர் என்னானு  பெயர். அதான் காலையில் கிளம்பி  இங்கேயே உன்னை இறக்கிடலாமுன்னு வந்துட்டேன் என்றார்.  இவர் கூடவே ட்ரெய்னியா இருக்கும் இன்னொரு  இளைஞர். ரூம் மேட். திருவனந்தபுரத்துக்காரர்.  ஒருவழியா வாடகைக்குப் பார்த்திருந்த வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தோம்.

வீட்டுக்காரம்மா.... அவ்ளோ சீக்கிரம் குடிவருவோமுன்னு எதிர் பார்க்கலை. வீடு இன்னும் சுத்தப்படுத்தலைன்னு  தொட்டடுத்து இருக்கும் மகள் வீட்டில் எங்களைக் கொஞ்சநேரம் இருக்கச் சொன்னாங்க.

புது இடத்திலே திருதிருன்னு முழிச்சுக்கிட்டு  உக்கார்ந்திருக்கோம்.  வீட்டுக்காரம்மா பெயர் மீனாட்சி அம்மா.  மகள் பெயர்  மணிச்சேச்சின்னு மட்டும் தெரிஞ்சுக்கிட்டேன். குளிமுறி காமிச்சுக் கொடுத்ததும் குளிச்சுட்டு  உடை மாத்திக்கிட்டு  பத்து எட்டு நடந்து   மீனாட்சியம்மா வீட்டுக்குப் போனோம். வீட்டுப்பணி செய்யும் பெண்  மாடியைச்  சுத்தப்படுத்தினதும்  அங்கே போய்  எதெதை எங்கே வைக்கலாமுன்னு  யோசனை.  இருக்கும் நாலைஞ்சு பாத்திரங்களை எங்கே வச்சால் என்ன?
 ( மாடி இப்படி இருக்கும். சுட்டபடம்.  பட ஓனருக்கு நன்றி.)


 பெரிய தரவாடு  வீடு இது.  வாசல் முற்றத்தில் ஒரு துளசிமாடத்தில்  நான். அதைக்கடந்து  வீட்டு முன்கதவை நோக்கிப்போனால்  சின்னத் திண்ணைகளுடன்  முன்பக்க ஹால். சிமெண்ட்பால் போட்டு கண்ணாடி போல் மின்னும் தரை.ஹாலில் ஒரு சாமானும் இல்லை.  ஜஸ்ட் ஹால்!  மின்னும் ரெண்டு பெரிய மரத்தூண்கள் மட்டுமே! நடுவில் வாசக்கதவுக்கு நேரா இன்னொரு உள்வாசல் கதவு. அதைக் கடந்தால் அங்கேயும் ஒரு ஹால். ஆனால் அளவில் சின்னது. இடது கைப்பக்கம் இன்னொரு அறை. சின்ன ஹாலில் ஒரு பக்கமா கட்டில் எதிரே ஒரு மேசையில் ரேடியோ.

இங்கேயும் எதிர்ப்புறச்சுவரில் கட்டிலை ஒட்டியே  ஒரு வாசல். அதைக்கடந்தால்  வராந்தா. இடதுபக்கம்  மாடிக்குப்போகும் மரப் படிக்கட்டுகள். மாடிக்குப்போனால் மூணுபக்கம் விசாலமான வெராந்தாவும் நட்ட நடுவில் ஒரு பெரிய ஹாலும்.  ஹாலின் ஒரு பக்கம் வெராந்தாவுக்கு பதிலா ஒரு நீள அறை. நாலாவது பக்கத்துக்குள்ள வெராந்தாவைத்தான் அறையா வச்சுருக்காங்க போல!  ஹாலுக்கு ரெண்டு பக்கமும் நேருக்கு நேரா கதவு. வீட்டின் முன்பக்க வெராந்தாவுக்குப்போகும் வழி ஒன்னுன்னா இன்னொண்ணு வீட்டின் பின்பக்கத்து தோட்டம் பார்க்குது. முன்பக்கம் நின்னு பார்த்தால்  கீழே  துளசி மாடம் அதுக்குப்பின்னே போகும் அகலமான மண்பாதை. தூரக்கே ஒரு கம்பி கேட்!  இடதுபக்கம் மணிச்சேச்சி வீடு. காங்க்ரீட் கட்டிடம்.

கதவில்லாத சுவரில் பெருசா ரெண்டு ஜன்னல்கள்.  வெராந்தாவுக்கு சுற்றிவர கைப்பிடிச்சுவர்கள்  அழகான மண்கூஜாக்களை வரிசையா வச்சதுபோல். நல்ல அகலமான  கட்டைச்சுவர். நாம் ஏறி, தூணில் சாய்ஞ்சுக்கிட்டுக் காலை நீட்டி உக்கார்ந்துக்கலாம்.  வீட்டைச் சுத்தி மரங்கள். பலாப்பிஞ்சுகள் தொங்குது! ஹைய்யோ!!! இன்னொரு மரத்தில் மாம்பிஞ்சுகள்.  இது ஃபிப்ரவரி மாசம்! தென்னையும் கமுகுமா  கண்னைக் கட்டுது.மாடிஹாலில் காத்து அப்படியே பிய்ச்சுக்கிட்டு போகுது.

ஆஹா என்ன ஒரு அருமையான வீடு ! கண்டதும் காதலில் விழுந்தேன் என்றுதான் சொல்லணும். என் வரவை முன்னிட்டு கோபால் அன்றைக்கு லீவு எடுத்துக்கிட்டார்.  கம்பெனிக்கு அறைத்தோழரிடம் சமாச்சாரம் சொல்லி அனுப்பிட்டார். இப்ப குடித்தனம் ஆரம்பிக்க  மளிகை சாமான்களும்  முக்கியமா சமைக்க ஒரு அடுப்பும் வேணும்.

இந்த வீடு இருக்கும் தெருவின் வலதுபக்கம் போனால்.... ரயில்பாலம் வரும். இடதுபக்கம் போனால்  நாலு வீடுகள். அதைக் கடந்தால் போகும் பாதை ஒரு சின்ன ஏற்றத்தில் போய்  மெயின் ரோடில் சேருது. இங்கே இடது பக்கம் திரும்பினால் ஒரு பாலம்.  சாலக்குடி புழை பாலத்தினடியில் ஓடுது.  வலப்பக்கம் திரும்பினால்  அது  கொச்சி வரை போகும்  நெடுஞ்சாலை. கோபாலின்  ஃபேக்டரிக்கு  இதில்  போகணும்.

பாலம் தாண்டி நேராப்போனால் கொஞ்ச தூரத்தில் சாலக்குடி  டவுன்!  2.8 கிமீ தூரம். நாங்க பேசிக்கிட்டே நடந்து போனோம்.  அங்கே டவுனில் ஒரு  ஹொட்டேலில்   தோசையும் காஃபியும் முடிச்சுக்கிட்டு,  அடுப்பு, அரிசி பருப்பு, சில காய்கறிகள், முக்கியமா மண்ணெண்ணெய்  எல்லாம் வாங்கிக்கிட்டு  ஒரு ஆட்டோ புடிச்சு வீடுவரை வந்து சேர்ந்தோம்.  முரிங்கூரில் எங்கேன்னு கேட்ட ஆட்டோக்காரருக்கு  பாலத்தைக் கடந்து  கீழே ரயில்பாலம் போகும் வழி என்றதும்   அங்கே யார் வீடுன்னார்.  உப்பத்துன்னு சொன்னதும்  மறு பேச்சில்லாம நேராக் கொண்டுவந்து இறக்கி விட்டுட்டார்.  சின்ன ஊரா (அப்போ) இருந்தபடியால்  வீட்டுப்பேரைச் சொன்னதும் எல்லோருக்கும் வழி தெரிஞ்சுருது.  கடைக்காரர்களும் புது ஆட்களைப் பார்த்ததும் என்ன ஏது எங்கிருக்கோமுன்னு தீர விசாரிக்காம  இருப்பதில்லை.  இப்படியாக நம்ம கேரள வாழ்க்கை ஆரம்பிச்சது.

நமக்கு மலையாளம் புரியுமுன்னாலும் சரியாப் பேசவராது. அதனால் வீட்டு ஆட்களோடு இங்லீஷூதான். வீட்டு ஓனர் மீனாட்சியம்மா அருமையா ஆங்கிலம் பேசறாங்க. அவுங்க வீட்டுக்கு வேலைக்கு வரும் விமலாவையே நமக்கும் வேலைக்கு ஏற்பாடு செஞ்சுட்டாங்க. நம்ம வீட்டுக்குப் பின்புறம்தான் சாலக்குடி புழை ஓடுது. அங்கேதான் காலை மாலை இருவேளைக் குளியல்.

புழைக்கும் வீட்டுக்கும் இடையில் இன்னொரு  சின்ன வீடு. தரவாடு இருக்கும் பரம்பு  ஒருகாலத்தில் புழை வரை இருந்ததாம். அதுலே  கொஞ்சூண்டு இடத்தை வித்துருக்காங்க. அதுலே  அந்தப்பன் என்றொருத்தர்,  மனைவி,மூணு பெண்மக்களுடன்  இருக்கார்.   ரெண்டு பசுக்களை வச்சுப் பால்வியாபாரம். அவர்தான் நமக்கு பால் சப்ளை!

கோபால் காலை ஏழரைக்கெல்லாம் கிளம்பிப்போயிருவார்.  அவருக்கு எதாவது கலந்த சாதம் கட்டிக்கொடுத்தால்  என் வேலை ஆச்சு.  அவரை வழி அனுப்ப கீழே துளசிமாடம் வரை வந்து டாட்டா காமிச்ச கையோடு  மீனாட்சியம்மா வீட்டு மேலடுக்களைக்குள் போனால்.......... அவ்ளோதான். அங்கே இருக்கும் சாப்பாட்டு மேசை ஸ்டூலில் உக்கார்ந்திருக்கும் அம்மா மாத்ருபூமி  தினசரியை வாசிச்சுக்கிட்டு இருப்பாங்க. கையில் ஒரு கட்டன் காஃபி.

என்னையும் காஃபி குடிக்கிறயான்னு கேப்பாங்க..... நம்ம நாக்கு  வணங்கிட்டாலும்.........  எல்லாம் காலையில் ப்ரேக்ஃபாஸ்டோடு ஆச்சுன்னுட்டு  தினசரியைப் படிக்க ஆரம்பிப்பேன். நம்ம க, ம, வ, எல்லாம் அதுலே இருக்கும். ஆனால் சிலவற்றின் உச்சரிப்புகள் வேற. ன ண எல்லாம் சுழிக்காமல் இருக்கும் அப்படியும் எது என்னன்னு கொஞ்சம் கொஞ்சமா பெரிய எழுத்துகளில் இருப்பதை மட்டும் வாசிக்கத்தொடங்கி ஒரு வாரத்திலே பிடி கிட்டிப்போயி!

மீனாட்சி அம்மாவையும் விட்டு வைக்காம எழுதி இருக்கேன். பார்த்துக்குங்க.



கொரட்டியில் இருந்து புறப்பட்டு சாலக்குடி போகும் சாலையில் வர்றோம். பாலம் தூரக்கே கண்ணில் பட்டது.  அடுத்து வரும்போதே  லெஃப்ட்டுலே  இறக்கத்துலே போயிருங்கன்னு சீனிவாசனிடம் சொன்னார்.  இது இல்லையோன்னு எனக்கு ஒரு சம்ஸயம். இதுதான்னு இவர் சாதிக்கிறார். அந்த மண் ரோடில் ஒரு பக்கம் மட்டுமே நாலைஞ்சு வீடுகள் இருக்கும். அதில்  நம்ம தரவாடைத்தவிர  மற்றவை காங்க்ரீட் கட்டிடங்கள்தான்.  இப்ப என்னன்னா....   கசகசன்னு   சின்னச்சின்னதா  ஏழெட்டு  வீடுகள் ரெண்டு பக்கமும்.


உத்தேசமா  ஒரு இடத்தில்  காரை நிறுத்தச் சொல்லி இறங்குன கோபால்,  கீழே கொஞ்சம் பள்ளத்தில் இருக்கும் சின்ன வீட்டு  வாசலில் நின்னுக்கிட்டு இருந்த பெண்ணிடம், உப்பத்து வீடு எவிடேன்னு  கேட்டதும்,  மேலேறி வந்து எதிரேன்னு கை காமிச்சாங்க.



பார்த்தால் தரவாடு வீட்டைக் காணோம்!  பச்சை வண்ணச் சுவருள்ள ஒரு காங்க்ரீட்  வீடு  அங்கே!   வலப்பக்கம் இருந்த இன்னொரு வீட்டின் பின்புறம் இருக்கும் கிணத்தடியில் ஒரு  வலியம்மா (மூதாட்டி)  தண்ணி இறைச்சுக்கிட்டு இருந்தாங்க. இவர் வேகமா அங்கே போய்  என்னவோ கேட்டுட்டு,  இங்கே சீக்கிரம் வான்னு கை ஆட்டினார்.  ஓடிப்போய்ப் பார்த்தால் அந்த  முத்தச்சிதான்  நம்ம மணிச்சேச்சி!

கூர்ந்து கவனிச்சால் முகத்தில் பழைய அடையாளம் எஞ்சி இருப்பது தெரிஞ்சது. தொடை வரை தொங்கும் நீளக் கூந்தலை  கேரள ஸ்டைலில் காதோர முடியிழைகளை  மட்டும் சேர்த்து முடிபோட்டு,  அப்படியே விரிச்சு விட்டுட்டு, எளிமையான காட்டன் புடவையில்  கையில் ஒரு சின்ன பர்ஸும் வச்சுக்கிட்டு, விசுக் விசுக்ன்னு நடந்து போன சேச்சியா இது! சேச்சியும் ஜமுனாவில்தான் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  முதலில் அவுங்களுக்கு  நம்மை அடையாளம் தெரியலை.

மணிச்சேச்சியின் கணவர் சந்த்ரச்சேட்டன் எப்படி இருக்கார்னு கேட்டால்  ச்சேட்டன் இவிடெல்லா,  பெரும்பாவூர் தரவாட்டிலேயான்னு  சொன்னது  சட்னு மனஸிலாகாம, எப்போ வருவார்னு கேட்டுட்டேன்.   இனி  இவிடே வரில்லைன்னதும் மனசுக்குக் கஷ்டமாப்போச்சு. பிள்ளைகள்  எங்கே இருக்காங்கன்னா...  ஒரு மகன் தில்லி, இன்னொரு மகன் பாம்பே!  இங்கே சேச்சி ஒற்றைக்கா.....தாமஸம்.  மணிச்சேச்சின்னு கூப்பிடுவோமே தவிர அவுங்க பெயர் இந்துமதி. கணவர் சரத் சந்த்ரன்.  என்ன பொருத்தமான பெயருன்னு அப்பெல்லாம் சொல்லிச்சொல்லி சந்தோஷப்பட்டுருக்கேன்.

தரவாடு வீடு என்னாச்சுன்னு கேட்டால்....  தம்பி அதை இடிச்சுட்டுத்தான்  அந்த வீட்டைக் கட்டிட்டாராம்  பாஸி  என்னும் பாலபாஸ்கரன். சின்ன வீடாகப் போனதால் பின்னால் இருக்கும் பரம்பையும் வித்துட்டாங்களாம். அட ராமா......:(

சின்னப்பறம்பிலும்  நிறைய மரங்கள்  இருக்கு என்பதே மகிழ்ச்சி.




பாஸி எங்கே? வீட்டுக்கதவு சாத்தி இருக்கேன்னால்....  பாஸி மகனுக்குக் கல்யாணம் அடுத்த வாரம். மற்ற சொந்தங்களுக்குக்  கல்யாணப்பத்திரிகை கொடுக்கப்போயிருக்காங்க. கதவு சும்மாத்தான் சாத்தி இருக்கு. வீடு எப்படி இருக்குன்னு உள்ளே போய்ப் பாருங்கன்னு சொன்னாங்க.  வேணாம்  என்றேன்.  என் மனசில் உள்ள தரவாடுவீடு அப்படியே இருக்கட்டும் கனவைக் கலைக்க விருப்பமில்லை:(

வீட்டுப்பின்பக்கம் ஏறக்கொறைய இப்படி இருக்கும்.  சுற்றிவர வெராண்டா உண்டு.  ச்சும்மா ஒரு  சாம்பிளா இதை வலையில் சுட்டேன்.  அந்த வீடுபோல வேறெதுவுமே ஆப்டலை:(  அது ஒரு ப்யூட்டி கேட்டோ!


அப்போ.... அந்தப்பன்?

இவுங்க வித்த பரம்பை வாங்கினது அந்தப்பன்தானாம். பின்னால் நல்ல வீடு கட்டியிருக்காராம். தனியா  ஒரு கேட் போட்ட பாதையைக் காமிச்சு அதுவழியாப் போகணுமுன்னு சொன்னாங்க.

உடம்பெல்லாம்  எண்ணெய் தேய்ச்சுக்கிட்டு குளிக்கப்போகும் நேரத்தில் நாம் போயிருக்கோம். கேரளாவில் இந்தப் பழக்கம் எனக்கு ரொம்பப்பிடிக்கும். நமக்குத்தான்  எதுக்குமே நேரம் இருப்பதில்லை:(  குளிச்சுட்டு வந்து வீட்டைக் காமிக்கவான்னாங்க. எதுக்கு? நமக்குத்தெரியாத இடமா என்ன?

கேட்டைத்திறந்து உள்ளே  கொஞ்சதூரம் போனதும் அழகான வீடு!  கதவெல்லாம் திறந்தே இருக்கு.  இங்கெல்லாம் எப்பவுமே இப்படித்தான்.  காலையில் திறக்கும் வாசக்கதவை இரவு படுக்கப் போகுமுன்தான்  அடைப்பது  வழக்கம். கதவைத்தட்டினதும்  வாசலுக்கு வந்து பார்த்து அந்தப்பனேதான். முதலில் நம்மை அடையாளம்  தெரியலை.  உப்பத்து வீட்டு மோளில் என்று ஆரம்பிச்சதும்  ஆச்சரியம்தான் முகத்தில்.  கோபால் அப்படியேதான் இருக்காராம். நாந்தான் ஏகத்துக்கும் மாறி இருக்கேன். தடிவச்சுப் போயல்லோ என்றார்! நல்லாவே எங்களை நினைவுக்கு  வந்துருச்சு:-)

சாய எடுக்காம்னு கிளம்பின அந்தப்பன் மனைவி  ரீத்தாவிடம் அதொக்க  வேண்டா,  இரிக்யூ,  நமக்கு சம்ஸாரிக்காமுன்னு  கொஞ்சம் பழங்கதைகள் பேசினேன்.  பெரியவள் மேரி, கல்யாணம்  பண்ணி குடும்பத்தோடு ஆலுவாவில்  இருக்காளாம்.  ரெண்டாமவள் பெட்டி, லண்டனில்.  மாப்பிள்ளைக்கு அங்கே வேலை!   மூன்றாமவள் மேகி, கன்யாஸ்த்ரீ  ஆகிவிட்டாராம். தங்கல் ஒரு மடத்தில்.

பால்வியாபாரம் ஒன்னும் இப்போ இல்லை. மகள்கள்  இனி ஓய்வெடுத்தால் போதுமுன்னு கண்டிப்பாகச்  சொல்லிட்டாங்களாம்.  மூவரும் பண உதவி செஞ்சு (முக்கியமாக மூன்றாமவள்) இந்த பரம்பு  பாஸியிடமிருந்து  வாங்கி, வீட்டையும் கட்டிக் கொடுத்துருக்காங்க.  வீட்டு செலவையும்  மூணு பொண்ணுங்களே பார்த்துக்கறாங்கன்னார்.

இருங்க. இன்றைக்கு சாப்பாடு இங்கேன்னார்.  இல்லை வேற வேலை இருக்குன்னு கிளம்பினதும்,  அதொக்க கழிஞ்சுட்டு இவிடே வந்நால்  நமக்கொன்னு கூடாமல்லோ என்றார்.  அந்த அன்பு ஒன்னு போதாதா?


 வண்டிக்குத் திரும்பும்போது ரெண்டு பேரும்கூடவே வந்தாங்க. அடுத்த பக்கம் இருக்கும் இன்னொரு  வீட்டில் இருக்கும், தேவகியைக் கூப்பிட்டு, இது யாரா பறயூன்னதும்  கொஞ்சம் முழிச்சவங்க, உப்பத்து மாடின்னதும்  இப்ப ஓர்ம வந்நுன்னு சந்தோஷப் பட்டாங்க. அதுவரை நான் தேவகியைக் கொம்ப்ளீட்டா  மறந்துருந்தேன் என்பதே உண்மை:(


மூணுபேரும்  வண்டிவரை வந்து வழிஅனுப்புனது   மனசிலேயும் கேமெராவிலேயும் சித்திரமா பதிவானதே  நிஜம்:-)

எல்லோர் முகத்திலும்  உண்மையான மகிழ்ச்சி!

தொடரும்............:-)






Monday, April 20, 2015

கொரட்டி முத்தி என்னும் கன்னிமேரி மாதா ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 41)

  கருகுட்டியில் இருந்து  அடுத்த   ஊர் நோக்கிப் போகிறோம். கொரட்டி முத்தி   என்னும்  மாதாவின் க்ஷேத்ரம் உள்ள ஊர் இது.  ஊருக்குப்பெயரே கொரட்டிதான். நாங்க  இந்த ஊரிலும் ஒரு வருசம் இருந்துருக்கோம்!  எப்படிடா இவ எல்லா ஊர்லேயும்  இருந்தான்னு வியப்பா இருக்கா?  இங்கே வந்ததுக்குக் காரணம் ஒரு மூணரை கிமீ தூரத்தைக் குறைக்கவே!

இதுக்கு முன்னால் இருந்த முரிங்கூரில்  (!)  இருந்து கோபாலின் ஃபேக்டரிக்கு 10 கிமீ தூரம். அப்போ இதுக்குப் பயண நேரம்  அரை மணியா இருந்துச்சு.  பஸ்ஸில் போறதுதான். ட்ரெய்னிகிட்டே சொந்த வண்டிக்கெல்லாம் காசு ஏது?  அதுவும் அங்கிருந்து போகும் பஸ் எப்பவும் மூச்சுவிட இடமில்லாம அடைச்சுக்கிட்டு இருக்கும். காரணம் ஜமுனா கோட்ஸ் நூல் ஆலை.  இது மதுரா கோட்ஸ் நடத்தும் மில்தான். மில் தொழிலாளிகள் அனைவரும் கொரட்டியில் இறங்கிருவாங்க. அதுக்குப்பிறகு பஸ் கொஞ்சம் காலியா இருக்கும்.

கொரட்டியில்  வீடு  கிடைக்குமுன்னு தெரிஞ்சதும்  முரிங்கூரில் இருந்து  வீடு மாத்திக்கிட்டு வந்துட்டோம். போல் (Paul)மாஸ்ட்டர் வீடுன்னு  இதுக்கு ஒரு பெயர்.  ட்யூப்லெக்ஸ் மாடல். ஒரு வீட்டிலே  மதுரா கோட்ஸ் ஆலையில் வேலை செய்யும்  சகோதரர்கள்  குடும்பம். ஒரு ஜோடி மில்லில். இன்னொரு ஜோடியில்  அண்ணன்  போல்ஸன் டிஸ்டிலரியிலும், அண்ணி  காலடியில் ஒரு பள்ளிக்கூடத்தில்  டீச்சராகவும் இருந்தாங்க.

இந்த வீட்டு வாசல் இருக்கும் தெருவின்  இடப்பக்கம் ஒரு அஞ்சு நிமிட் நடையில் ஒரு சர்ச் இருக்கு. வலப்பக்கம்  ரெண்டு நிமிட் நடந்தா மெயின் ரோடும் அதுலே இருக்கும் பஸ் ஸ்டாப்பும் . நமக்கு  நல்ல வசதி!
கோபாலின் ஃபேக்டரியில் வேலை செய்யும் ஒருவர், அங்கே  வீடு காலி இருக்குன்னதும் போய்ப் பார்த்தோம். வாடகை என்னவோ  அப்போ கொடுத்துக்கிட்டு இருந்ததைவிட பத்து ரூ அதிகம்தான். ஆனால் வேலைக்குப் போக வர  கொஞ்சம் எளிது. பத்து நிமிச நேரமும்  கூடவே நாப்பது  காசும்  (போகவர) மிச்சப்படுத்தலாம்:-)

ஞாயித்துக்கிழமைகளில்  கொஞ்சம் லேட்டா எழுந்து கையில் காப்பியோடு வாசத்திண்ணையில் உக்கார்ந்தால்  மின்னலடிக்கும் வெள்ளை உடுப்போடு பள்ளிக்கு (சர்ச்சுக்கு)  சாரிசாரியாப் போகும்  அம்மச்சிகளைப் பார்க்கலாம்.
ஞாயித்துக்கிழமைக்குப் போகறதுக்கு வார மத்தியிலேயே ஒரு நாள், பள்ளிக்குன்னு மட்டுமே உடுத்தற வெள்ளை முண்டு, மேல்சட்டை ரெண்டையும் வாஷிங் சோடா, சவக்காரம் எல்லாம் போட்டு ஊறவச்சு அலக்கி விருத்தியாக்குவாங்க. சனிக்கிழமைஅதைப் பொட்டி போட்டுத் தேச்சு, ச்சின்னச்சின்ன ஃப்ரில் கொசுவம் வச்சு நேர்த்தியா மடிச்சு வச்சுருவாங்க.

ஞாயிறுகாலையிலே அந்தக் கொசுவம் பின்பக்கம் வரும்படியா அந்த முண்டு உடுத்து, மேல் சட்டை அணிஞ்சு ,மேல் காதுலே எப்பவும் போட்டுருக்கற 'மேக்க மோதரம்' 'பளிச்'ன்னு காதுலே ஆடக் கிளம்பிருவாங்க. ச்சுண்டுவிரல் தடிமனா இருக்கற இந்த மேக்க மோதரம் பார்க்கத்தான் குண்டா இருக்கே தவிர, உள்ளே 'Bபோல்'தானாம். கனமே இல்லாமத்தான் இருக்குமாம். இதை 'குனுக்கு'ன்னு சிலபேர் சொல்றாங்க. இப்ப இது ஃபேஷன் இல்லையாம். கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுக்கிட்டு வர்ற நகையாம்.

நாங்க இங்கே எங்க கேரளா சங்கத்தில்  இதையெல்லாம் சொந்தமா தயாரிச்சு (!) ஒருநிகழ்ச்சிகூட  2005 கிறிஸ்மஸ்  விழாவுக்கு நடத்தி இருக்கோம்.   

மேக்க  மோதிரம் எப்படி இருக்குமுன்னு போட்டுப் பார்த்தேன்:-)


இவ்ளோ சொல்றேனே தவிர அப்பெல்லாம்  இந்தச் சர்ச் வரை  வாக்கிங் போறதோடு சரி. ஒருநாளும் உள்ளே போய்பார்க்கத் தோணலை:(
போல்  மாஸ்ட்டர் வீட்டை விற்கப் போட்டதும்,  அடுத்த வீட்டு மக்கள் அவுங்க இருந்த வீட்டையே வாங்கிக்கிட்டாங்க. நாங்க ? வீடு வாங்கும் நிலையிலா இருந்தோம்?  வேற ஒருத்தருக்கு  விற்க முடிவு செஞ்சதும் வீடு தேடவேண்டியதாப்போச்சு. அப்பவும்  நம்ம கோபாலின்  கேபிள் ஃபேக்டரியில் வேலை செய்யும் ஒருத்தர்தான்  உதவிக்கு வந்தார்.  இந்த வீட்டுக்குப் பின்பக்கமிருக்கும் தெருவில் அவருடைய  அக்கா வீடு வாடகைக்கு தயாரா இருக்குன்னதும் போய்ப் பார்த்தோம். இந்த வீட்டில் இருந்து பார்த்தாவே தெரியும் வீடுதான். ரெண்டு தெருவுக்கும் இடையில் ஒரு அகழி (!) இருந்துச்சு.
உடனே அங்கே போயிட்டோம். நல்ல ஜாலியான  குட்டி மக்கள்ஸ் உள்ள வீடு அது.  அன்னம்மா ச்சேச்சிதான் வீட்டு உடமஸ்த்தர். கணவன் மனைவி  கோர்ட்ஸில்தான் வேலை. மூணு பிள்ளைகள். ஜோஷி,ஜோஜோ மின்னி. இதுலே ஜோஜோ பள்ளிக்கூட வயசு ஆகாததால் என் சங்காதியாக எப்போதும் என்னுடன்.  சுருக்கத்தில் அவன் ஒரு ரஜ்ஜூ:-)

அவர்களையெல்லாம் பார்க்கப்போகும்  மகிழ்ச்சியை கோபாலுடன் பகிர்ந்துகிட்டே அந்த 6.5  கிமீ பயணித்தோம். இப்ப இந்த சாலை  ஹைவே ஆனதால் கொரட்டிக்குப் போகும்  எக்ஸிட் இருக்கான்னு கவனிச்சுப் பார்த்ததில் வழி  தெரிஞ்சது. அதுவே ஒரு மேம்பாலத்துலே போறமாதிரி இருக்கேன்னு பார்த்தால் வண்டிபோய் நின்னது ஒரு பெரிய தேவாலயத்துக்கு முன்னே!

சட்னு பார்த்தால் ' பள்ளிவாசல்' போல் தெரிஞ்சது. ஆனால் சிலுவை கண்ணில் பட்டதே!   இந்தப்பக்கம் பளபளன்னு உசரமா ஒரு கொடிமரம். அதன் உச்சியிலும் ஒரு சிலுவை!  இங்கே கொரட்டி முத்தி பள்ளின்னு  விசாரிக்கறதுக்குள்ளே  கைகூப்பி நிற்கும் மாதா கண்ணாடிக் கூண்டுக்குள் இருப்பதைப் பார்த்துட்டேன்.

கோவில் பரிசரம்(சுற்றுப்புறம்)எல்லாம் கொம்ப்ளீட்டாச் சேஞ்சாகிக்கிடக்கு! ஏகப்பட்ட கடைகள். பார்த்தால் திருவிழாக் கடைகளைபோல் தெரியுது. சட்ன்னு நினைவுக்கு வந்தது இது அக்டோபர் மாசமில்லையோன்னு. 'அக்டோபர்  8 கழிஞ்சுவருன்ன  ஞாயறாழ்ச்ச'ன்னு   38 ஆண்டுகளுக்கு முன் பார்த்த தகவல் பலகை நினைவுக்கு வந்துச்சு. காலப்போக்கில்  ஞாயிறு மட்டும் நடந்த திருவிழா இப்போ அக்டோபர் 8 முதல் 26 வரை இந்தவருசம் நடந்துருக்கு.  அடடா.... ரெண்டுமூணு  நாளைக்கு  முன்பே  வராமப் போயிட்டோமேன்னு  இருந்தது உண்மை.

கொரட்டி முத்தின்னு சொல்லும் இந்த மாதாவை  கொரட்டித் தம்புராட்டின்னும் சொல்வாங்க. கிறிஸ்துவர்கள் மட்டுமில்லாமல் ஏராளமான ஹிந்துக்களும்  பள்ளிக்கு வந்து போவது உண்டு. அதுவும் திருவிழாக் காலத்துலே  வேண்டுதல்கள் செலுத்த வருவாங்க. இப்ப இதுக்குப் பேரு செயிண்ட் மேரீஸ் ஃபோரேன் சர்ச்!  (St Mary's Forane Church, Koratty) வேளங்கண்ணி மாதா,  ஃப்ரான்ஸ்லே இருக்கும்  லூர்து மாதாவைப்போல்  நம்ம கொரட்டி முத்தி மாதாவும்  சிலபலருக்குக் காட்சி கொடுத்துருக்காங்கன்னு  சொல்றாங்க.  ஹிந்துமதத்திலும் சில சாமிகள் சிலருக்கு ப்ரத்யக்ஷம் என்று  கேள்விப்பட்டுருக்கேன். அந்த சிலரில் நான் இல்லையாக்கும், கேட்டோ!

கோவிலுக்குள்ளே போனோம். நடந்து முடிஞ்ச  திருவிழாவின் அலங்காரங்கள் இன்னும் அப்படியே இருக்கு!  ஆல்ட்டரின் அலங்காரங்கள் ப்ரமாதம்!   பழையபள்ளியில் இப்படி இருந்திருக்க வாய்ப்பே இல்லை.  மாதாவின் சிலையே அப்போ முக்கியமா இருந்துருக்கணும்.


பக்கவாட்டில் இருந்த கதவின் வழியாக உள்ளே நுழைஞ்சால்.......எவ்ளோ பெரிய ப்ரமாண்டமான ஹால்!  பளபளன்னு படுசுத்தமான பளிங்குத்தரை! கோவிலின் கருவறை பீடம் நமக்கு வலதுபக்கம். இதுக்கு நேரா ரொம்ப தூரத்தில் கோவிலுக்கான வாசல். எப்படி..... வாசல்பக்கம் நாம்  பார்த்த கட்டிடத்தின் சுவருக்கு நேர்ப்பின்னம்பக்கம்தான்  கருவறை பீடமா இருக்கு!  ஆனால் கொடிமரம்  சாமிக்கு முன்புறமா  இல்லை!
ஆல்ட்டருக்கு  நேரா இருக்கும் வாசலை நோக்கிப்போனால் அங்கே ஒரு  கல்லில் வடிச்ச சிலுவை!

அந்த வாசலில் இருந்து நுழையும் பக்தர்கள் , குறிப்பாகப் பெண்கள், முழங்காலிட்டபடி முட்டியால் நடந்தே ஆல்ட்டர் வரை வர்றாங்க.  படம் எடுக்கலாமான்னு தயக்கம் ஒருபக்கம் இருந்தாலும்  அங்கே சுவரோரமாப் போட்டுருக்கும் இருக்கைகளில் அமர்ந்து பேசிக்கிட்டு இருந்த ரெண்டு கன்யாஸ்த்ரீகளிடம் போய்ப் படம் எடுக்க அனுமதி வாங்கினேன்.

உடலை வருத்திக்கிட்டு சாமி கும்பிடுவதில் இவர்களும் இந்துக்கள் போலவே!  அங்கப்ரதக்ஷணம், அடிப்பிரதக்ஷணம், அலகு குத்திக்கறது, நெருப்பில் நடக்கறது, பரிக்ரமான்னு கோவிலை வலம் வரும்போது பாதையெல்லாம் கீழே விழுந்து கும்பிட்டு, எழுந்து கும்பிட்டுன்னு  பல கிலோமீட்டர்கள் போவதுன்னு எத்தனை  எத்தனை வகை இருக்கு  ஹிந்துக்களுக்கு!

ஆல்ட்டரின் ஒரு குத்துவிளக்கு  நடுவே இருக்கும் பாதை முடிவில்!  உச்சியில் இருக்கும் சிலுவையை மறந்துட்டால்.... அப்படியே நம் வீடுகளில் இருக்கும் விளக்கு வகைதான்!

கற்சிலுவை இருக்கும் வாசலுக்கு திரும்பவும் வந்து  பார்த்தேன். கண்முன்னே நேரே தெரியும் மண்சாலை... ஒருவேளை  இதுதான்  நாம்  இருந்த போல்  மாஸ்ட்டர் வீட்டுக்குப் போகுதோ !

கோவில் வளாகத்தில் இன்னொரு அழகான கட்டிடத்தில் துலாபாரம் என்று எழுதி வச்சுருக்காங்க.  அடுத்த பக்கம் அலங்கார வாசலுடன்  ரோஸரி வில்லேஜ் இருக்கு.  இப்ப இந்தப்பள்ளி விரிவடைஞ்சு இருப்பதோடு,  ஒரு பில்க்ரிம் செண்ட்டராகவும் மாறி இருக்கு. வில்லேஜ் வாசல் முகப்பில்  பெரிய கருப்புக் கல்லின் மேல் இருந்து  பிதாவை நோக்கி  ஜெபம் செய்யும் யேசுவும்,  யூமுறைப்படி இருக்கும்   ஏழுகிளை விளக்கும் புடைப்புச் சிற்பமா வச்சுருக்காங்க.

உள்ளே மகதலேனா மேரி, சிலுவையில் இருந்து இறக்கிய யேசுவின் உடலை  தன் மடியில் கிடத்தி வச்சுருக்கும் மைக்கேல் ஏஞ்சலோவின் புகழ் பெற்ற சிற்பம் Pieta வின்  நகலை வச்சுருக்காங்க.

மேலே இருப்பது அசல்!

ஒரிஜினல் சிற்பத்தை  வாடிக்கன் சிட்டி போனபோது செயின்ட் பீட்டர்ஸ் பாஸிலிகாவில் பார்த்துருக்கேன். அது ஆச்சு 16 வருசம். ப.மு.காலம்!

தமிழ்நாட்டு மக்களும்  இங்கே தீர்த்தயாத்திரைக்கு  வர்றாங்க போல!

தொடரும்............:-)

பள்ளி = சர்ச்

PINகுறிப்பு:  பதிவின் நீளம் கருதி மீதி நாளை!


Wednesday, April 08, 2015

அம்பலப்புழா ஸ்ரீ க்ருஷ்ணன் ( ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 37)

ஆலப்புழாவில் இருந்து அம்பலப்புழா வந்து சேர,  சரியா   அரைமணி நேரம் ஆச்சு. தெக்கோட்டு ஒரு பதினாறு கிமீ பயணிக்கணும்.  ரொம்பவே பிஸியான ட்ராஃபிக். பள்ளிக்கூடம் விட்ட நேரம் என்பதால் கடந்து வந்த சிற்றூர்களில் எல்லாம்  பள்ளிக்கூடச் சீருடைகளுடன்  பிள்ளைகளின் கூட்டம்.
ஸ்ரீ க்ருஷ்ணன் கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம்.


இங்கேயும்  பள்ளிக்கூடப் பசங்கள்தான். மணி இப்போ நாலரை. அஞ்சு மணிக்குத்தான் கோவில் திறக்கறாங்க.  கோவிலுக்கு ஒரு  அலங்காரவாசல் போல் இருக்குமிடத்தில் உள்ளே போனால் ரெண்டு பக்கங்களிலும் ஏகப்பட்ட கோவில் கடைகள்.


இந்தப்பக்கம்  வெளியேயும்  கடைகளோ கடைகள், கலகலன்னு இருக்கு. இன்னும் அரைமணி நேரம் இருக்கேன்னு பார்த்தால்.... அங்கே ஒரு டீக்கடை. நாயர் கடை டீயும்  பருப்பு வடையும் நமக்கு இங்கேதான் போலன்னு  ஒரு கடைக்குப்போனோம். வெளியே நின்னுதான்  டீ குடிக்கணும்.  பெட்டிக் கடையாட்டம்தான் இருக்கு:-)

பளபளக்கும்   செம்பு பாய்லர் காலம் எல்லாம் போச்சு. காஸ் அடுப்பு வச்சு வேலை நடக்குது. வடையைக் காணோம்.மூணுபேரும் ஆளுக்கொரு டீ வாங்கிக்கிட்டோம். குடிச்சு முடிச்சுட்டு கோவில்கடைகளை ஒரு பார்வை பார்க்கலாமுன்னு போனால்.... ஏகப்பட்ட க்ருஷ்ணன்கள்.

 ஆவலோடு ஓடிய என்னைத் தொடரும் மிரட்டும் குரல்.

 "ஏற்கெனவே வெயிட்  அதிகமா இருக்கு!"

ஹாஹா...


அதுக்குள்ளே  கோவில் திறந்து மக்கள்ஸ் உள்ளே போறாங்க. நாலே முக்கால்தான். அஞ்சு மணிக்கு நடை திறப்பாங்களாம். சரி.பார்க்கலாமுன்னு  கோவிலுக்குள்ளே போறேன். லக்ஷார்ச்சனை  தொடங்குச்சு
." நீபாட்டுக்கு ஏகப்பட்ட சாமான்களை வாங்கிக் குவிச்சுக்கிட்டே போறே. (?!) ஏற்கெனவே மீனாக்ஷி வாங்கிட்டு ஏகப்பட்ட கனம். உனக்கு புத்தகங்கள் வேற வாங்கிக்கணும் என்றால்...இப்ப ஒன்னும்  வாங்காமல் இருந்தால்தான் நல்லது..........."

"ஏன் உங்க முப்பது கிலோ சும்மாத்தானே கிடக்கு?  அதுலே...."

"தைக்கக் கொடுத்த துணிகளை  எப்படிக் கொண்டு போவே?  அந்த முப்பதெல்லாம் எப்பவோ  முடிஞ்சாச்சு. சரி, எதாவது ஒன்னு மட்டும் வாங்கிக்கணும். இதுதான் கடைசிப் பர்ச்சேஸ். "

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....(இந்தக் கோவிலுக்குக் கடைசின்னு மனசில் சொல்லிக்கிட்டேன்)



கூடாதுகள் எழுதிப் போட்டுருக்காங்க. நிறைய தமிழர்கள் வர்றாங்க போல! தமிழிலும்  கையால் எழுதிப்போட்டுருக்கே:-)

ஓலை வேய்ந்த ஒரு மண்டபம் கடந்து போறோம். இடதுபக்கம் கம்பீரமா ஒரு யானை! ஸ்ரீ க்ருஷ்ணனுக்குச் சேவை செய்து, கடைசியில் வைகுண்டம் போனவன்.




ஒரு பெரிய வெண்சங்கு!   பாஞ்சஜன்யம்!




வெளிப்பிரகாரத்தில்  ஒரு சுத்து நமக்கு. இடப்பக்கமெல்லாம்  ஓடுகள் போட்ட தனித்தனி கட்டிடங்களும் அதில் சின்னச்சின்ன வாசல்களுமா இருக்கு.






கோவிலுக்குப் பின்பக்கம் அட்டகாசமான குளம். அதுக்கு அந்தாண்டை யானைக்கொட்டில்.  இளவயசுக்காரன்  ஒருவன் அங்கே!  கிட்டப்போய்ப் பார்க்கலாமுன்னா, கோவில் மணி முழங்க ஆரம்பிச்சது. நடை திறந்துட்டாங்கன்னு ஜனங்க பாயறாங்க.
  கெமராவில் Zoom செய்து அவனைக் கிட்டக்கக் கொண்டு வந்து பார்த்தேன். மிடுக்கன். ஒரு 25 வயசு இருக்கும்!



சரி,  தரிசனம் முடிச்சுட்டு வந்துடலாமுன்னு போறோம். வலப்பக்கமாவே போறோம். தேவஸ்தான கவுண்ட்டரும், தொட்டடுத்து  அடைச்சுப்பூட்டி இருக்கும் பால்பாயாஸம் கவுண்ட்டரும்.  ஏற்கெனவே  சொல்லி வச்சால்தான் கிடைக்கும். அதுவும் அதிர்ஷ்டம்  இருந்தால்தான் என்று கேட்டுட்டுண்டு.


பாயஸம் கழிச்ச  ஆயாஸமாணோ  ஈ  பூச்சைக்கு?

தேவஸ்தான கவுண்ட்டர் திறந்து இருக்கு. அங்கே இருந்த கோவில் ஊழியரிடம், 'பாயஸம் கிட்டுமோ'ன்னால்  'நூறு ருப்யா 'என்ற பதில். 'ஆஹா......தராம்.  பாயஸம் உண்டோ?'ன்னு  திரும்பவும்  கேட்டதும் உவ்வு ன்னு ஒரு தலயாட்டல். காசை வாங்கியவர்  உள்ளே போன சிலநொடிகளில்,

எங்க அதிர்ஷ்டத்தைச் சொல்லிச்சொல்லி மாய்ஞ்சு போய் நிக்கறேன். துளிப் பாயஸம்தான் வரும். சட்னு கை நீட்டி வாங்கி குடிச்சுட்டு(!) அப்புறம் க்ருஷ்ணனை தரிசிக்கலாமுன்னு சொல்லி வாய் மூடலை.... ஒரு  பெரிய ப்ளாஸ்டிக் கண்டெய்னரில் பாயஸம் வருது! ஒரு லிட்டர் இருக்கும்!
உடம்பெல்லாம் பதற  கைநீட்டி வாங்கிக்கிட்டேன். சின்ன தொன்னையில் வருமுன்னு பார்த்தால்.....

எப்ப உண்டாக்கியதுன்னு கேட்டதுக்கு 'உச்சைக்கு' என்றார். அதுதான் கடைசி பாட்டிலாம். எண்டே க்ருஷ்ணா....   என்ன மனசுடா உனக்கு!   வீட்டுக்கு எடுத்துப் போகலாமுன்னதும் சீனிவாசன் ஓடிப்போய் காரில் வச்சுட்டு வந்தார்.

பால்பாயஸத்துக்கு  இங்கே  கதை(யும்) உண்டு. இதுலேயும் பல வகைகள் உண்டு, கேட்டோ!   இப்ப ஒரு ரெண்டண்ணம் காணாம்.

அதுக்கு முன்னே ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கே வந்த விவரம் சொல்லணுமே!

வில்வமங்களம் ஸ்வாமிகள் ன்னு ஒரு  பக்தர் இருந்துருக்கார். அவருக்குக் குருவாயூரப்பன்  'கண்கண்ட' தெய்வம். நினைச்சப்பல்லாம்  இவருக்குப் பிரத்யக்ஷமாவானாம்! ஒரு சமயம் இவரும், இந்தப் பகுதியை அரசாண்ட  செம்பகஸேரி ராஜாவும் ஒரு ஆற்றிலே படகில் போய்க்கிட்டு இருக்காங்க.  கரைக்குப் பக்கமா  தண்ணீரில் இருக்கும் ஒரு ஆலமரத்தைக் கடக்கும் சமயம் காதுக்கு இனிய புல்லாங்குழல்  இசை  கேக்குது அப்போ!  என்ன ஏதுன்னு சுத்தும்முத்தும் பார்க்கும்போது ஆலமரத்தின் ஒரு கிளையில் க்ருஷ்ணன்  உக்கார்ந்து  குழலூதிக்கிட்டு இருக்கான். இந்தக்  காட்சி வில்வமங்கலம் ஸ்வாமிகளுக்கு மட்டும் தெரியுது. 'அதோ க்ருஷ்ணன்'னு சொல்றார். ராஜாவுக்கு  ஒன்னுமே புலப்படலை. தனக்கும்  காட்சி கொடுக்கணுமுன்னு வேண்டியதும்  அவருக்கும் தரிசனம்  கிடைச்சது.

உடனே அங்கே  க்ருஷ்ணனுக்கு ஒரு கோவில் கட்டலாமுன்னு  அந்தப் பகுதி நிலத்துக்குச் சொந்தக்காரரிடம் ஒரு தொகை கொடுத்து நிலத்தை வாங்கி அங்கே கோவில் ஒன்னு கட்டிட்டார். புழைக்குப் பக்கம் அம்பலம்!  அம்பலப்புழா!  (புழை = ஆறு.அம்பலம் = கோவில்)  இந்த ஆலமரம் இன்னும் கோவிலுக்குப் பின்புறம் 'கணபதி ஆல்' என்ற பெயருடன் இருக்கு.

சம்பவம் நடந்தது பதினேழாம் நூற்றாண்டில். மாடு மேய்க்கும்  கண்ணன்  சிலையை உள்ளே ஸ்தாபிக்கலாமுன்னு  சிலை செய்யறாங்க.  சிலை செஞ்சு முடிஞ்சபிறகு  ஒரு நம்பூதிரி வந்து பார்த்து, சிலையில் குறைபாடு இருக்குன்னு சொல்றார்.  "என்ன குற்றம் கண்டீர்?  நிரூபியும்!"   இதோன்னு  ஒரு கைப் பக்கம் லேசா விரலால் தட்டியதும், அந்தச் சிலையின் கை உடைஞ்சு விழுந்துருது:(

இன்னொரு புதுச்சிலை இப்போ வேணுமே! குறிச்சி என்னும் பகுதியில் சிலை கிடைக்கும் என்று தகவல். அங்கத்து ராஜாவுக்கும்  செம்பகஸேரி ராஜாவுக்கும் எதோ விரோதம். பேச்சு வார்த்தை கிடையாது. பணிக்கர் ஒருவர்  அங்கிருந்து  சிலையைக் கடத்திக்   கொண்டு வந்துடறார். ஆனால் மாடு மேய்க்கும் கண்ணனா இல்லாமல் பார்த்தஸாரதியா இருந்துருக்கு ! பகல் நேரத்தில் சிலையை யாருக்கும் தெரியாமல்  எங்கேயாவது  ஒளிச்சு வச்சுக்கணுமேன்னு பார்த்தால் 'இட்டித் தோமன்' என்ற கிறிஸ்தியானி வீட்டில்  இடம் கிடைச்சுருக்கு. இப்பவும்  அந்த வீட்டில் க்ருஷ்ணன் ஒளிஞ்சுருந்த அறையைப் புனிதமாகக் கருதி தினமும்  அங்கே  தீபம் ஏற்றி வைக்கிறாங்க(ளாம்)

பணிக்கர் குடும்பத்துக்கு கோவிலில் தனிப்பட்ட  மரியாதையும் கோவிலுக்குத் தலைமைப் பொறுப்பான கொய்மா என்னும் பதவியும்  கிடைச்சு, அவர் வாரிசுகளுக்கு  இப்பவும்  தொடர்ந்தே வருதுன்னு கேள்வி.

கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த செம்பகஸேரி ராஜா, வில்வமங்கலம் ஸ்வாமிகளிடம் 'க்ருஷ்ணனை தனக்கும் காமிக்கணும்' என்று விண்ணப்பிக்க, 'என் கையைப் பிடிச்சுக்கோ'ன்னாராம். கையைப் பிடிச்சதும் கண்ணன் தெரிஞ்சானாம். உடனே தன் அரசு முழுவதும்  ஸ்ரீ கிருஷ்ணனுக்கே  சொந்தமுன்னு அறிவிச்சு, அவன் பிரதிநிதியா 'தேவ நாராயணன்' என்ற பெயரைத் தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக்கிட்டு ஆட்சி செய்யறார்.  இப்பவும் அவர் வாரிசுகளில் முதல் மகன்கள்,  தேவநாராயணன் என்ற பெயரோடுதான் இருக்காங்க. (திருவனந்தபுரம்  அரச வம்சமும் பத்மநாப தாஸர் என்னும் பெயரோடு இருப்பது நினைவுக்கு வருது)

சிலையை பீடத்தில் வைக்கும்போது  சமநிலை இல்லாமல் ஒரு பக்கம் சாயுது. அப்போ அங்கே வந்த  முனிவர் ஒருவர்  ஒரு வெத்திலையை அடிப்பாகத்தில் வச்சதும்  சிலை ஆடாமல் அசையாமல் பொருந்தி நின்னுருக்கு. அதனால்  இந்தக் கோயிலுக்குத் தாம்பூலப்புழான்னு பெயர்  ஏற்பட்டு அது மரூவி  அம்பலப்புழான்னு  வந்துருச்சுன்னும் ஒரு கதை உண்டு.

சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணனே, அர்ஜுனனுக்குக் கொடுத்த மூணு சிலைகளில்  இதுவும் ஒன்னு என்றும் கேள்வி. கோவில்களில் கதைக்குப் பஞ்சமா என்ன?

சரி.இப்போ பால்பாயஸத்தைப்  பார்க்கலாம். தினமும் 100 லிட்டர் பாயஸம் செஞ்சு  ஸ்ரீகிருஷ்ணனுக்கு நிவேதனமாப்  படைச்சுட்டு, அப்புறம் பிரஸாதமா பக்தர்களுக்கு விநியோகம் செய்யறாங்க. ஆதிகாலத்தில் ரொம்ப முக்கியப்பட்டவர்களுக்கு மட்டுமே கிடைச்சுக்கிட்டு இருந்த  இந்தப் பால்பாயஸத்தை 1959 ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு ஒரு சிறிய தொகைக்கு விற்பனை செய்ய ஆரம்பிச்சுருக்கு தேவஸ்தானம். ஆரம்பத்தில் 32  ரூபாய்க்குக் கிடைச்சுக்கிட்டு இருந்தது இப்போ  விலைவாசி காரணம் 100க்கு வந்துருக்கு.

பால்பாயஸத்தினு காத்திரிக்கும்  மனுஷ்யர்!  இப்படி இல்லாமல் நாம் போன நேரம் கவுண்ட்டர்  காலி!  இது சுட்டபடம்.

இந்தப் பாயஸத்தின் சுவைக்காகவே ஸ்ரீ குருவாயூரப்பனும், திருவார்பு  ஸ்ரீ க்ருஷ்ணனும்  தினமும்  உச்சி பூஜை சமயம் இங்கே வந்து போறாங்கன்னு ஒரு ஐதீகம்!

தினமும் காலையில் குளிச்சு முடிச்சு வெண்ணிற ஆடைகள் அணிஞ்ச  பெண்கள் , கோகுலத்தின் கோபிகைகள் போல பால்குடங்களை ஏந்தி  கோவிலுக்குக் கொண்டுவந்து தர்றாங்க.

கோவிலுக்குள் மணிக்கிணறு ஒன்னு ப்ரகாரத்தில் இருக்கு.பாயஸத்துக்குத் தண்ணீர் இதுலே இருந்துதான். பாலின் அளவைப்போல் நாலு மடங்குத் தண்ணீரைச் சேர்த்து , ஒரு பிரமாண்டமான வெங்கல உருளியில் வச்சு விறகடுப்பு மூட்டி  காய்ச்சறாங்க. அஞ்சு மணி நேரத்தில் எல்லாத் தண்ணீரும் வத்திப்போய் பால்மட்டும் மீந்துருக்கும் சமயம் நல்லாக் கழுவி வச்சுருக்கும் அரிசியைப்போட்டு வேகவைக்கணும். முக்கால் மணிக்கூறு ஆனதும்  'வாசுதேவா' ன்னு  பெருமாளைக் கூப்பிட்டபடி கண்டசாரி சக்கரையை (இது ஒருவிதக் கல்கண்டுன்னு நினைக்கிறேன்) சேர்த்து  பாயஸம் செஞ்சு முடிக்கறாங்க.  மொத்தம்  6 மணி நேரமாகுதாம்.

 சமீப காலமா விறகடுப்புக்குப் பதில் கேஸ் அடுப்பில்  பாயஸம் செய்யறாங்கன்னு சொன்னாங்க.

PIN குறிப்பு: பதிவின் நீளம் கருதி  நம்ம க்ருஷ்ணனை ரெண்டாப் பிரிச்சுட்டேன்.  அடுத்த பகுதியை நாளைக்கே  போட்டால் ஆச்சு. ஸ்பெஷல் க்ளாஸ்:-)

தொடரும்...........:-)