Monday, April 20, 2015

கொரட்டி முத்தி என்னும் கன்னிமேரி மாதா ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 41)

  கருகுட்டியில் இருந்து  அடுத்த   ஊர் நோக்கிப் போகிறோம். கொரட்டி முத்தி   என்னும்  மாதாவின் க்ஷேத்ரம் உள்ள ஊர் இது.  ஊருக்குப்பெயரே கொரட்டிதான். நாங்க  இந்த ஊரிலும் ஒரு வருசம் இருந்துருக்கோம்!  எப்படிடா இவ எல்லா ஊர்லேயும்  இருந்தான்னு வியப்பா இருக்கா?  இங்கே வந்ததுக்குக் காரணம் ஒரு மூணரை கிமீ தூரத்தைக் குறைக்கவே!

இதுக்கு முன்னால் இருந்த முரிங்கூரில்  (!)  இருந்து கோபாலின் ஃபேக்டரிக்கு 10 கிமீ தூரம். அப்போ இதுக்குப் பயண நேரம்  அரை மணியா இருந்துச்சு.  பஸ்ஸில் போறதுதான். ட்ரெய்னிகிட்டே சொந்த வண்டிக்கெல்லாம் காசு ஏது?  அதுவும் அங்கிருந்து போகும் பஸ் எப்பவும் மூச்சுவிட இடமில்லாம அடைச்சுக்கிட்டு இருக்கும். காரணம் ஜமுனா கோட்ஸ் நூல் ஆலை.  இது மதுரா கோட்ஸ் நடத்தும் மில்தான். மில் தொழிலாளிகள் அனைவரும் கொரட்டியில் இறங்கிருவாங்க. அதுக்குப்பிறகு பஸ் கொஞ்சம் காலியா இருக்கும்.

கொரட்டியில்  வீடு  கிடைக்குமுன்னு தெரிஞ்சதும்  முரிங்கூரில் இருந்து  வீடு மாத்திக்கிட்டு வந்துட்டோம். போல் (Paul)மாஸ்ட்டர் வீடுன்னு  இதுக்கு ஒரு பெயர்.  ட்யூப்லெக்ஸ் மாடல். ஒரு வீட்டிலே  மதுரா கோட்ஸ் ஆலையில் வேலை செய்யும்  சகோதரர்கள்  குடும்பம். ஒரு ஜோடி மில்லில். இன்னொரு ஜோடியில்  அண்ணன்  போல்ஸன் டிஸ்டிலரியிலும், அண்ணி  காலடியில் ஒரு பள்ளிக்கூடத்தில்  டீச்சராகவும் இருந்தாங்க.

இந்த வீட்டு வாசல் இருக்கும் தெருவின்  இடப்பக்கம் ஒரு அஞ்சு நிமிட் நடையில் ஒரு சர்ச் இருக்கு. வலப்பக்கம்  ரெண்டு நிமிட் நடந்தா மெயின் ரோடும் அதுலே இருக்கும் பஸ் ஸ்டாப்பும் . நமக்கு  நல்ல வசதி!
கோபாலின் ஃபேக்டரியில் வேலை செய்யும் ஒருவர், அங்கே  வீடு காலி இருக்குன்னதும் போய்ப் பார்த்தோம். வாடகை என்னவோ  அப்போ கொடுத்துக்கிட்டு இருந்ததைவிட பத்து ரூ அதிகம்தான். ஆனால் வேலைக்குப் போக வர  கொஞ்சம் எளிது. பத்து நிமிச நேரமும்  கூடவே நாப்பது  காசும்  (போகவர) மிச்சப்படுத்தலாம்:-)

ஞாயித்துக்கிழமைகளில்  கொஞ்சம் லேட்டா எழுந்து கையில் காப்பியோடு வாசத்திண்ணையில் உக்கார்ந்தால்  மின்னலடிக்கும் வெள்ளை உடுப்போடு பள்ளிக்கு (சர்ச்சுக்கு)  சாரிசாரியாப் போகும்  அம்மச்சிகளைப் பார்க்கலாம்.
ஞாயித்துக்கிழமைக்குப் போகறதுக்கு வார மத்தியிலேயே ஒரு நாள், பள்ளிக்குன்னு மட்டுமே உடுத்தற வெள்ளை முண்டு, மேல்சட்டை ரெண்டையும் வாஷிங் சோடா, சவக்காரம் எல்லாம் போட்டு ஊறவச்சு அலக்கி விருத்தியாக்குவாங்க. சனிக்கிழமைஅதைப் பொட்டி போட்டுத் தேச்சு, ச்சின்னச்சின்ன ஃப்ரில் கொசுவம் வச்சு நேர்த்தியா மடிச்சு வச்சுருவாங்க.

ஞாயிறுகாலையிலே அந்தக் கொசுவம் பின்பக்கம் வரும்படியா அந்த முண்டு உடுத்து, மேல் சட்டை அணிஞ்சு ,மேல் காதுலே எப்பவும் போட்டுருக்கற 'மேக்க மோதரம்' 'பளிச்'ன்னு காதுலே ஆடக் கிளம்பிருவாங்க. ச்சுண்டுவிரல் தடிமனா இருக்கற இந்த மேக்க மோதரம் பார்க்கத்தான் குண்டா இருக்கே தவிர, உள்ளே 'Bபோல்'தானாம். கனமே இல்லாமத்தான் இருக்குமாம். இதை 'குனுக்கு'ன்னு சிலபேர் சொல்றாங்க. இப்ப இது ஃபேஷன் இல்லையாம். கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுக்கிட்டு வர்ற நகையாம்.

நாங்க இங்கே எங்க கேரளா சங்கத்தில்  இதையெல்லாம் சொந்தமா தயாரிச்சு (!) ஒருநிகழ்ச்சிகூட  2005 கிறிஸ்மஸ்  விழாவுக்கு நடத்தி இருக்கோம்.   

மேக்க  மோதிரம் எப்படி இருக்குமுன்னு போட்டுப் பார்த்தேன்:-)


இவ்ளோ சொல்றேனே தவிர அப்பெல்லாம்  இந்தச் சர்ச் வரை  வாக்கிங் போறதோடு சரி. ஒருநாளும் உள்ளே போய்பார்க்கத் தோணலை:(
போல்  மாஸ்ட்டர் வீட்டை விற்கப் போட்டதும்,  அடுத்த வீட்டு மக்கள் அவுங்க இருந்த வீட்டையே வாங்கிக்கிட்டாங்க. நாங்க ? வீடு வாங்கும் நிலையிலா இருந்தோம்?  வேற ஒருத்தருக்கு  விற்க முடிவு செஞ்சதும் வீடு தேடவேண்டியதாப்போச்சு. அப்பவும்  நம்ம கோபாலின்  கேபிள் ஃபேக்டரியில் வேலை செய்யும் ஒருத்தர்தான்  உதவிக்கு வந்தார்.  இந்த வீட்டுக்குப் பின்பக்கமிருக்கும் தெருவில் அவருடைய  அக்கா வீடு வாடகைக்கு தயாரா இருக்குன்னதும் போய்ப் பார்த்தோம். இந்த வீட்டில் இருந்து பார்த்தாவே தெரியும் வீடுதான். ரெண்டு தெருவுக்கும் இடையில் ஒரு அகழி (!) இருந்துச்சு.
உடனே அங்கே போயிட்டோம். நல்ல ஜாலியான  குட்டி மக்கள்ஸ் உள்ள வீடு அது.  அன்னம்மா ச்சேச்சிதான் வீட்டு உடமஸ்த்தர். கணவன் மனைவி  கோர்ட்ஸில்தான் வேலை. மூணு பிள்ளைகள். ஜோஷி,ஜோஜோ மின்னி. இதுலே ஜோஜோ பள்ளிக்கூட வயசு ஆகாததால் என் சங்காதியாக எப்போதும் என்னுடன்.  சுருக்கத்தில் அவன் ஒரு ரஜ்ஜூ:-)

அவர்களையெல்லாம் பார்க்கப்போகும்  மகிழ்ச்சியை கோபாலுடன் பகிர்ந்துகிட்டே அந்த 6.5  கிமீ பயணித்தோம். இப்ப இந்த சாலை  ஹைவே ஆனதால் கொரட்டிக்குப் போகும்  எக்ஸிட் இருக்கான்னு கவனிச்சுப் பார்த்ததில் வழி  தெரிஞ்சது. அதுவே ஒரு மேம்பாலத்துலே போறமாதிரி இருக்கேன்னு பார்த்தால் வண்டிபோய் நின்னது ஒரு பெரிய தேவாலயத்துக்கு முன்னே!

சட்னு பார்த்தால் ' பள்ளிவாசல்' போல் தெரிஞ்சது. ஆனால் சிலுவை கண்ணில் பட்டதே!   இந்தப்பக்கம் பளபளன்னு உசரமா ஒரு கொடிமரம். அதன் உச்சியிலும் ஒரு சிலுவை!  இங்கே கொரட்டி முத்தி பள்ளின்னு  விசாரிக்கறதுக்குள்ளே  கைகூப்பி நிற்கும் மாதா கண்ணாடிக் கூண்டுக்குள் இருப்பதைப் பார்த்துட்டேன்.

கோவில் பரிசரம்(சுற்றுப்புறம்)எல்லாம் கொம்ப்ளீட்டாச் சேஞ்சாகிக்கிடக்கு! ஏகப்பட்ட கடைகள். பார்த்தால் திருவிழாக் கடைகளைபோல் தெரியுது. சட்ன்னு நினைவுக்கு வந்தது இது அக்டோபர் மாசமில்லையோன்னு. 'அக்டோபர்  8 கழிஞ்சுவருன்ன  ஞாயறாழ்ச்ச'ன்னு   38 ஆண்டுகளுக்கு முன் பார்த்த தகவல் பலகை நினைவுக்கு வந்துச்சு. காலப்போக்கில்  ஞாயிறு மட்டும் நடந்த திருவிழா இப்போ அக்டோபர் 8 முதல் 26 வரை இந்தவருசம் நடந்துருக்கு.  அடடா.... ரெண்டுமூணு  நாளைக்கு  முன்பே  வராமப் போயிட்டோமேன்னு  இருந்தது உண்மை.

கொரட்டி முத்தின்னு சொல்லும் இந்த மாதாவை  கொரட்டித் தம்புராட்டின்னும் சொல்வாங்க. கிறிஸ்துவர்கள் மட்டுமில்லாமல் ஏராளமான ஹிந்துக்களும்  பள்ளிக்கு வந்து போவது உண்டு. அதுவும் திருவிழாக் காலத்துலே  வேண்டுதல்கள் செலுத்த வருவாங்க. இப்ப இதுக்குப் பேரு செயிண்ட் மேரீஸ் ஃபோரேன் சர்ச்!  (St Mary's Forane Church, Koratty) வேளங்கண்ணி மாதா,  ஃப்ரான்ஸ்லே இருக்கும்  லூர்து மாதாவைப்போல்  நம்ம கொரட்டி முத்தி மாதாவும்  சிலபலருக்குக் காட்சி கொடுத்துருக்காங்கன்னு  சொல்றாங்க.  ஹிந்துமதத்திலும் சில சாமிகள் சிலருக்கு ப்ரத்யக்ஷம் என்று  கேள்விப்பட்டுருக்கேன். அந்த சிலரில் நான் இல்லையாக்கும், கேட்டோ!

கோவிலுக்குள்ளே போனோம். நடந்து முடிஞ்ச  திருவிழாவின் அலங்காரங்கள் இன்னும் அப்படியே இருக்கு!  ஆல்ட்டரின் அலங்காரங்கள் ப்ரமாதம்!   பழையபள்ளியில் இப்படி இருந்திருக்க வாய்ப்பே இல்லை.  மாதாவின் சிலையே அப்போ முக்கியமா இருந்துருக்கணும்.


பக்கவாட்டில் இருந்த கதவின் வழியாக உள்ளே நுழைஞ்சால்.......எவ்ளோ பெரிய ப்ரமாண்டமான ஹால்!  பளபளன்னு படுசுத்தமான பளிங்குத்தரை! கோவிலின் கருவறை பீடம் நமக்கு வலதுபக்கம். இதுக்கு நேரா ரொம்ப தூரத்தில் கோவிலுக்கான வாசல். எப்படி..... வாசல்பக்கம் நாம்  பார்த்த கட்டிடத்தின் சுவருக்கு நேர்ப்பின்னம்பக்கம்தான்  கருவறை பீடமா இருக்கு!  ஆனால் கொடிமரம்  சாமிக்கு முன்புறமா  இல்லை!
ஆல்ட்டருக்கு  நேரா இருக்கும் வாசலை நோக்கிப்போனால் அங்கே ஒரு  கல்லில் வடிச்ச சிலுவை!

அந்த வாசலில் இருந்து நுழையும் பக்தர்கள் , குறிப்பாகப் பெண்கள், முழங்காலிட்டபடி முட்டியால் நடந்தே ஆல்ட்டர் வரை வர்றாங்க.  படம் எடுக்கலாமான்னு தயக்கம் ஒருபக்கம் இருந்தாலும்  அங்கே சுவரோரமாப் போட்டுருக்கும் இருக்கைகளில் அமர்ந்து பேசிக்கிட்டு இருந்த ரெண்டு கன்யாஸ்த்ரீகளிடம் போய்ப் படம் எடுக்க அனுமதி வாங்கினேன்.

உடலை வருத்திக்கிட்டு சாமி கும்பிடுவதில் இவர்களும் இந்துக்கள் போலவே!  அங்கப்ரதக்ஷணம், அடிப்பிரதக்ஷணம், அலகு குத்திக்கறது, நெருப்பில் நடக்கறது, பரிக்ரமான்னு கோவிலை வலம் வரும்போது பாதையெல்லாம் கீழே விழுந்து கும்பிட்டு, எழுந்து கும்பிட்டுன்னு  பல கிலோமீட்டர்கள் போவதுன்னு எத்தனை  எத்தனை வகை இருக்கு  ஹிந்துக்களுக்கு!

ஆல்ட்டரின் ஒரு குத்துவிளக்கு  நடுவே இருக்கும் பாதை முடிவில்!  உச்சியில் இருக்கும் சிலுவையை மறந்துட்டால்.... அப்படியே நம் வீடுகளில் இருக்கும் விளக்கு வகைதான்!

கற்சிலுவை இருக்கும் வாசலுக்கு திரும்பவும் வந்து  பார்த்தேன். கண்முன்னே நேரே தெரியும் மண்சாலை... ஒருவேளை  இதுதான்  நாம்  இருந்த போல்  மாஸ்ட்டர் வீட்டுக்குப் போகுதோ !

கோவில் வளாகத்தில் இன்னொரு அழகான கட்டிடத்தில் துலாபாரம் என்று எழுதி வச்சுருக்காங்க.  அடுத்த பக்கம் அலங்கார வாசலுடன்  ரோஸரி வில்லேஜ் இருக்கு.  இப்ப இந்தப்பள்ளி விரிவடைஞ்சு இருப்பதோடு,  ஒரு பில்க்ரிம் செண்ட்டராகவும் மாறி இருக்கு. வில்லேஜ் வாசல் முகப்பில்  பெரிய கருப்புக் கல்லின் மேல் இருந்து  பிதாவை நோக்கி  ஜெபம் செய்யும் யேசுவும்,  யூமுறைப்படி இருக்கும்   ஏழுகிளை விளக்கும் புடைப்புச் சிற்பமா வச்சுருக்காங்க.

உள்ளே மகதலேனா மேரி, சிலுவையில் இருந்து இறக்கிய யேசுவின் உடலை  தன் மடியில் கிடத்தி வச்சுருக்கும் மைக்கேல் ஏஞ்சலோவின் புகழ் பெற்ற சிற்பம் Pieta வின்  நகலை வச்சுருக்காங்க.

மேலே இருப்பது அசல்!

ஒரிஜினல் சிற்பத்தை  வாடிக்கன் சிட்டி போனபோது செயின்ட் பீட்டர்ஸ் பாஸிலிகாவில் பார்த்துருக்கேன். அது ஆச்சு 16 வருசம். ப.மு.காலம்!

தமிழ்நாட்டு மக்களும்  இங்கே தீர்த்தயாத்திரைக்கு  வர்றாங்க போல!

தொடரும்............:-)

பள்ளி = சர்ச்

PINகுறிப்பு:  பதிவின் நீளம் கருதி மீதி நாளை!


16 comments:

said...

மோதிரம் நல்லாவே இருக்கு அம்மா...

படங்களே ப்ரத்யக்ஷம் தான்...

said...

வழக்கம் போல் படங்களும் பயண அனுபவங்களும் அருமை. அதிலும் வாட்ச் மோதிரம் கூடுதல் அழகு

said...

அருமையான பயணம், அழகிய புகைப்படங்கள்.மாதா கோயில் வெகு அழகு.

said...

ம்ம் சூப்பர் மோதிரம் மோதிரத்தைக் காதில் போடுவாங்களா:) என்னப்பா உங்க வீட்டைக் கண்டுபிடிச்சீங்களா இல்லையா.

said...

மேடம் சூப்பர் மேக்க மோதிரம் இப்போது தான் கேள்விப்படுகிறேன்

said...

ஒக்க நான்னாயிட்டு உண்டு.

மலயாளம் சரிதன்னே.

said...

படங்கள் அனைத்துமே அருமை.

பயணத்தில் தான் எத்தனை எத்தனை அனுபவங்கள்.....

தொடரட்டும் பயணங்கள். நானும் தொடர்கிறேன்.

said...

பழைய மலையாளப் படங்கள்ள மேக்க மோதிரத்தைப் பாத்திருக்கேன். ஷார்ட் குர்த்தா மாதிரி வெள்ளையா ஒரு மேலாடை போட்டு தலைப்பா கட்டிய பெண்கள் அணிஞ்சிட்டு வர்ரதா பாத்த நினைவு.

கிருத்துவ மதம் நம்மூர்ல பல உள்ளூர் சமாச்சாரங்களை உள் வாங்கியே வளந்திருக்கு. சரி தப்புன்னு விவாதம் பண்றது லேசு. ஆனா பண்பாட்டு விழுமியங்கள் தொடர்ந்து வருங்குறதுக்கு இதுவொரு எடுத்துக்காட்டு.

தமிழ்நாட்டிலேயே சிலுவை வெச்ச விளக்குகள் கிடைக்குது. கடைல பாத்திருக்கேன்.

பழைய நினைவுகள் இனிமைதான். பழைய இடங்களையும் பழைய மக்களையும் பாக்கப் போறது இனிமைதான்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இப்பக் கடைகளில் கிடைக்குதான்னு பார்க்கணும். சென்னையிலும் செம்மன்னூர் ஜுவல்லரி இருக்கே!

said...

வாங்க செந்தில் குமார்.

ஆஹா.... வாட்ச் மோதிரம்! இதை மேக்க மோதிரமுன்னு சொல்றாங்க.

அளவைப் பார்த்தா.... குழந்தைக்குக் காப்பு போல போட்டுவிடலாம். தக்கை:-)

said...

வாங்க மகேஸ்வரி.

மாதா கோவில் எனெக்கென்னமோ பள்ளிவாசல் மாதிரிதான் தெரிஞ்சது:(

ரொம்பவே மாடர்ன் ஆகிப்போச்சு!

said...

வாங்க வல்லி.

காது மோதிரம்தானேப்பா இது!

ரிங் ரிங்:-)

வீடு கிடைக்கலையே:(

said...

வாங்க கார்த்திகேயன்.

வருகைக்கு நன்றி.

பழைய நகைகளிலும் வெவ்வேற மதத்துக்கு வெவ்வேற நகை!

அந்தந்த மதக்காரர்கள் மட்டுமே போட்டுக்கறாங்க.

நேத்து ஒரு இடத்தில் மூக்கில் சின்னதா புல்லாக்கு போட்ட சீனப்பெண்ணைப் பார்த்தேன்!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

மலையாளம் சரிதன்னே! நன்னி:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அனுபவங்கள் ஆயிரமாயிரம். அத்தனையும் வாழ்க்கை! இல்லையோ?

said...

வாங்க ஜிரா.

ரைட்டு ரைட்டு!

சிலுவை விளக்குகள் தூத்துக்குடி, தின்னவேலி பக்கங்களில் கிடைக்குமுன்னு நினைக்கிறேன். சென்னையில் பார்த்த நினைவில்லை!