Monday, April 06, 2015

ரெவியிண்டெ ஸ்வந்தம் ம்யூஸியம் போகாம், வரூ ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 36)

இந்தியா வந்துட்டோமுன்னா நம்ம நித்தியப்படி சமாச்சாரங்களில் ஒன்னு  அண்ணனுக்கு தினமும் ஃபோன் பண்ணுவது. நாம் பத்திரமா இருக்கோமுன்னு  சொல்லிக்கிட்டே,  ஊர் சுத்துவோம். அநாவசியக் கவலையை அவுங்களுக்கு  ஏன் கொடுக்கணும், இல்லையா?

மரியா வந்து சேர்ந்ததையும், அம்முவின்  பூனை சமாச்சாரத்தையும் சொன்னேன். அண்ணனும் அண்ணியும்  Zeus விவரம் கேட்டு  ரொம்ப வருத்தப்பட்டாங்க. சரி நடந்தது நடந்துபோச்சு அதுக்கு அவ்ளோதான் ஆயுசுன்னு  ஆறுதல் சொன்னகையோடு,  'கருணாகரன் ம்யூஸியம் கட்டாயம் போய்ப் பார். உனக்கு ரொம்பவே பிடிக்குமு'ன்னதும், அதைப் பற்றிய விவரம் கேட்டுக்கிட்டேன். அங்கேதான் போறோம் இப்ப.


காம்பவுண்டை விட்டு வெளியே வர்றோம். தண்ணீரெல்லாம் வடிஞ்சுபோய் பாதை கண்ணுக்குத் தெரிஞ்சது!  படகுத்துறை கடந்து குரிசடி வரை வந்துட்டு  வலக்கைப் பக்கம் திரும்பணும்.மரியாவில் இருந்து ஆலப்புழாவுக்கு வெறும் 20 கிமீ தூரம்தான்.  ஊருக்குள்ளே வந்ததும்  வழியை விசாரிக்கலாமுன்னு ஒரு பைக் நபரிடம் கேட்டதுக்கு, நான் அந்த வழிதான் போறேன். பின் தொடர்ந்து வாங்கன்னார்.  ஃபாலோ மி பிஹைண்ட்:-)))


சரியா அங்கே கொண்டுவிட்டதும் நன்றிகள் சொன்னோம்.  தெரு என்னவோ சாதாரணமாத்தான் இருக்கு.  கம்பி கேட்டுக்கு அப்புறம்  வெள்ளை அன்னம் போல் பெரிய கட்டிடம்!  வாசலில் சின்னதா ஒரு தோட்டம்.  ஆறு இத்தாலிய மங்கைகளின்  பளிங்குச் சிலைகள் தாங்கி நிற்கும் ஒரு  கூடார மண்டபம். சின்னதுதான்.
அதுக்கு அந்தாண்டை ஒரு அல்லிக்குளம். நடுவில் ஒரு சிலை. தகப்பனும் மகனுமா! பைபிள் கதையில் வரும்  மந்தையில் இருந்து பிரிந்துபோன ஆடு, மறுபடி வந்ததுபோல்  வீட்டையும் தகப்பனையும் விட்டுப்போன மகன், பாகம் பிரிச்சுக்கொண்டு போன காசு அத்தனையும் தொலைச்சுட்டு வீடு திரும்பின சம்பவம். தகப்பன்,  செல்வம் போனால் போகட்டும். நீ திரும்ப வந்ததே பெரிய சொத்து என்று அணைச்சு வரவேற்கிறார். ஏழடி உசரத்தில் இந்த வெண்கலச் சிலை, 1400 பவுண்ட் கனம்  உள்ளதாம்.  உலகப்புகழ் பெற்ற சிற்பி ஸாம் ஃபிலிப்  இந்தச் சிலையை (The Prodigal Son)  செஞ்சுருக்கார்.ஆறு பெரிய தூண்கள் அணிவகுத்து நிற்கும் முகப்புக் கட்டிடம்.  பக்கவாட்டுஅறையில்   அனுமதிச்சீட்டு வாங்கிக்கணும்.  150 ரூபாய் ஒரு ஆளுக்கு.  நாங்க மூணு டிக்கெட் வாங்கிக்கிட்டோம்.  தனியார்  சேகரிப்பு இந்த ம்யூஸியத்தில் இருக்கு. நம்மை உள்ளே அழைச்சுக்கிட்டுப் போறார்  ம்யூஸியத்து வழிகாட்டி.


படங்கள் எடுக்க அனுமதி இல்லை. மனசு சோக கீதம் பாடியது உண்மை. ஆனால் இவுங்க வலைப்பக்கத்துலே  கொஞ்சம் படங்கள்  போட்டு வச்சுருக்காங்க. கூடவே தகவல்களும்.


கிருஷ்ணன் முதலாளி  என்பவர்தான்  கேரளாவில்  தேங்காய் நார் பயன்படுத்தித் தயாரிக்கும் தொழிலுக்கு (Coir products) முதல் தொழிற்சாலை  ஆரம்பிச்சவர்.  இதுக்கு முன்னே இந்தத் தொழில்  ஐரோப்பியர்  கைவசம் இருந்தது. கைத்தறி நெசவு போல் ஆரம்பத்தில் இருந்த  தொழிலை,  நவீனமயமாக்குனது இவரது மகன் கருணாகரன்.  இவர் முதலில்  இங்கிலாந்து (Birmingham University)  படிச்சு முடிச்சு மேற்படிப்புக்காக ஜெர்மனி போனார். அங்கே படிப்புமுடிஞ்சதும், ஒரு ஜெர்மானியப்பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டார். இவருக்கு ஆணும் பெண்ணுமாய் ரெண்டு மக்கள்.  ரெவி,லீலா.

தகப்பனின்  மறைவுக்குப்பிறகு  தொழிற்சாலை ரெவியின் கைகளுக்கு வந்தது. தொழிலை இன்னும் நல்லா விரிவு படுத்தி ஓஹோன்னு இருந்துருக்கார். மனைவியின் பெயர்  Betty. இவருக்கு ஒரே மகள்,  Lullu.

தொழில் சம்பந்தமா பலநாடுகளுக்குப்போய் வர்றார். கலைப்பொருட்கள் மீதுள்ள ஆசையால் ஒவ்வொரு பயணத்திலும் பொருட்கள் சேர்ந்துக்கிட்டே வருது.  தன்னுடைய 72 ஆம் வயசில்  (2003) ரெவி காலமாகிட்டார்.

கடைசியில் இவ்வளவையும் வீட்டுலே வச்சுக்கிட்டு என்ன பண்ணறது?  நாலு பேர் பார்த்து சந்தோஷப்படட்டுமேன்னு  அவருடைய மனைவி Bettyயும் மகளுமா  திட்டம் போட்டு, தனியா ஒரு கட்டிடம் கட்டி  மக்கள் பார்வைக்கு வச்சுருக்காங்க. 2006 ஆம் ஆண்டு மேகாலயா கவர்னர்  வந்து திறந்து வச்சுருக்கார்.
கீழ்தளத்தைப் பார்த்து முடிச்சதும், மாடிக்குக் கூட்டிப் போனார் வழிகாட்டி. விளக்கைப் போட்டதும்.....   கண் எதிரில் ஒரு மாயாலோகம்! க்றிஸ்டல், பளிங்கு, தந்தம், போர்ஸலீன், வெள்ளி  இப்படி பலவகைகளில்  சின்னச்சின்ன சிற்பங்கள். எல்லாம் அழகா கண்ணாடிப் பொட்டியில் தூசு படாமல் வச்சுருக்காங்க. பார்வையாளர்கள் ஒரு கஷ்டமும் இல்லாமல் நிம்மதியா சுத்திச்சுத்திப் பார்க்கும் வகையில் அமைப்பு. நம்ம சீனிவாசன்  ஒரு சுத்துப் பார்த்துட்டு  கீழே  போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.


நாங்க  இந்த மாடியில் ஒவ்வொரு  கண்ணாடிப்பொட்டிக்கு முன்னும் நின்னு  ஆஹா...ஓஹோன்னு  சொல்லிக்கிட்டு இருக்கோம்.

ஒவ்வொன்னும் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது!  எதைச் சொல்ல எதை விட?  வெண்ணையில் செய்ததைப்போல தந்தத்தில் அப்படியே இழைச்சு வச்சுருக்காங்க. ஒரு அலமாரியில்  கஜுராஹோ சிற்பங்களைப்போல் முழுசும் தந்தத்தில்!  இத்துனூண்டு சிற்பங்களில் என்ன ஒரு வேலைப்பாடு!
கடவுளர் சிலைகளுக்குக் கணக்கு வழக்கே இல்லை!  அவதார் என்ற பெயரோடு ஒன்னு இருக்கு பாருங்க..... ஹைய்யோ!!!!!நம்ம கோபால் எப்பவும், நான்  சின்னச்சின்ன பொம்மைகளையும் பொருட்களையும்  சேகரிப்பதைப் பார்த்து,  எவ்ளோ ஜங்க்(!) சேர்த்து வச்சுருக்கேன்னு சொல்வார்.  இதெல்லாம் அவர் பார்வைக்கு ஜங்க்காமே ஜங்க். பேசாம என் காலத்துக்குப் பிறகு இப்படி  அழகா டிஸ்ப்ளே செஞ்சுருங்க. உங்களுக்கு வருமானமுமாச்சுன்னு  சொன்னேன். பொழுதும் போனமாதிரி இருக்குமே!  ஜஸ்ட் ஒரு டாலர் தான் எண்ட்ரி ஃபீ:-)

இந்த மாடியின் பின்பகுதியில்   கேரளா  ஹால் ஒன்னு  இருக்கு. பொதுவா கேரளத்தைப் பற்றி இதுவரை தெரிஞ்சுக்காதவங்களுக்காகன்னு வச்சுக்கலாம். தரை முழுக்க  பாலீஷ் செஞ்ச டெர்ரகோட்டா டைல்ஸ் போட்டு  உள்கூரை நல்ல தேக்குமரத்தில் பாரம்பரிய வேலைப்பாடுகளோடு  அழகோ அழகு!   இதற்கடுத்து இதை ஒட்டினாப்போல ஒரு பெயிண்டிங் கலெக்‌ஷன். ஓவியங்கள் ப்ரமாதம்.

இதே கட்டடத்தின்  பின்பகுதியில்  ரெவி கருணாகரனின்  குடும்பம் வசிக்கிறாங்க. ஒரே மகள்தானே.  ஆனால் அவுங்களுக்கு  ஒரு விதமான   உடல்நிலைக் கோளாறு. நெருங்கிய உறவினரின் கவனிப்பில் இருக்காங்களாம். தன்னுடைய  சொத்து சுகங்களோ, இத்தனை அபூர்வமான  கலைச்செல்வங்களோ  இருக்கு  என்ற விவரம் கூடப் புரிந்துகொள்ள முடியாத  ஒருநிலை.ப்ச்.... எனக்கு  ஐயோன்னு  இருந்தது:(

லீலா பேலஸ் ரிஸார்ட்டுகள் உட்பட ஏகப்பட்ட  பெரிய பெரிய நிறுவனங்களை ஏற்படுத்திட்டுப் போயிருக்கார் ரெவி.

ம்யூஸியம் பார்க்க  உள்ளூர்க்காரர்கள்  வருவது அபூர்வமாம். ஆனால் வெளிநாட்டினர் அநேகர் வருவதுண்டாம்.  இங்குள்ள தந்த சிற்பங்களின்  விவரம் எல்லாம் அரசாங்கக் கணக்கெடுப்புக்கு  உட்பட்டதுன்னார்.

வார விடுமுறையாக  திங்கட்கிழமை  லீவு .பார்த்து வச்சுக்குங்க. மற்ற நாட்களில் தினமும் காலை 9 முதல் மாலை 5 வரை திறந்துருக்கும்.


ஒன்னேகால் மணி நேரம்போனதே தெரியலை. கீழ்தளத்தில் ரெஸ்ட் ரூம்  நல்ல வசதிகளோடு நீட்டா இருக்கு!வெளியே தோட்டத்திலும் சில சிற்பங்களை  வச்சுருக்காங்க.ஒரு அம்மிக்கல்லும் ஆட்டுக்கல்லும் கூட இருக்கு. பழையகால சாமான்களை இனி இப்படிப் பார்த்தால்தான் உண்டு.


சரி கிளம்பலாமுன்னு காருக்கு வந்தா....சீனிவாசன் நல்ல தூக்கத்தில்!
இனி ஒரு   அரைமணிக்கூர்  பயணம் செஞ்சு கோவிலுக்குப் போறோம்.
எண்டே க்ருஷ்ணா.... இதா வருந்நு...

தொடரும்........:-)

PINகுறிப்பு:  நாம் ரவி, ரமா என்பதை,  ரெவி, ரெமான்னுதான்  கேரளத்தில் சொல்றாங்க.

சொல்ல மறந்துட்டேனே.......   'உள்ளே ' படங்கள் எல்லாம் இவுங்க பக்கத்தில் சுட்டது!  வேற வழி இல்லை.  மாப்பு ச்சோதிக்குந்நு   ரெவிமுதலாளி!

16 comments:

said...

தங்களுக்கே உரிய துள்ளலான நடையில் அழகான அருங்காட்சியக பதிவு. நாங்களும் உடன் வந்த உணர்வு ஏற்பட்டது

said...

அலுப்பே இல்லாத வகையில் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச்சென்ற வகையில் எங்களை சுற்றிக் காட்டியமைக்கு நன்றி. அருமையான புகைப்படங்கள்.

said...

நல்லெண்ணம்... யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக... நன்றி அம்மா...

said...

மியுஸியம் பற்றிய படங்கள் தகவல்கள் மிக அருமை..

said...

சிறப்பான இடமாகத் தோன்றுகிறது. அரசு பராமரிக்கும் அருங்காட்சியகங்களில் பராமரிப்பு என்பதே இல்லை என்று சொல்லி விடலாம் இது போன்ற தனியார் அருங்காட்சியகங்களில் தான் நல்ல பராமரிப்பு.

புகைப்படம் எடுக்க பல இடங்களில் அனுமதிப்பதில்லை என்பதில் மன வருத்தம் எனக்கும் உண்டு! :)

said...

அழகோ! அழகு! இது கண்டுட்டில்லா. விவரங்களுக்கு மிக்க நன்றி! அழகான நடையில் சுத்திக் காட்டிட்டீங்க! பகிர்வுக்கு மிக்க நன்றி!

said...


அருங்காட்சிய புகைப்படங்கள் அனைத்தும் அருமை மேடம் நலம்தானே ?

said...

வாங்க செந்தில் குமார்.

ரசிப்புக்கு நன்றீஸ்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

பகிர்ந்தால் மகிழ்ச்சி கூடுதே! விடமுடியுதா?

said...

வாங்க ரமா ரவி.

ரசித்தமைக்கு நன்றீஸ்ப்பா.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உண்மைதான்.அரசு பராமரிப்பில் அலட்சியம் அதிகம்:(

மூன்றாம் கண் இல்லைன்னா...மனசே உடைஞ்சு போகுது!

said...

வாங்க துளசிதரன்.

அடுத்த பயணமா ஊர்ப்பக்கம் போனால் போயிட்டு வாங்க.

ரசிக்க, ஏராளமானவை இருக்கு அங்கே!

said...

வாங்க கில்லர்ஜி.

நலம். நலமா?

ஆலப்புழை என்றதும் படகு வீடுகள் தான் மனசில் வருவதால்....பலரும் இதைத் தவற விட்டுடறாங்க போல!

வருகைக்கு நன்றி.

said...

நானும் பழைய பொருட்களையெல்லாம் சேத்துச் சேத்து வைக்கிறேன். எல்.பி.ரெக்கார்டுகளைச் சொன்னேன். எனக்குப் பிறகு அதையெல்லாம் எடுத்து மியூசியம் வெச்சா நல்லாத்தான் இருக்கும். வரலாறு என்ன சொல்லுதுன்னு பாப்போம்.

ஆட்டுக்கல்லு அம்மியெல்லாம் கூட மியூசியத்துல வைக்க வேண்டிய பொருட்களாயிருச்சே!

said...

வாங்க ஜிரா.

பேசாம பதிவர் ம்யூஸியம் ஒன்னு கட்டினால் தேவலை:-)

ஆட்டுகல் ஆர்த்தரைட்டீஸுக்கு நல்லதுன்னு சொல்லலாம். யூஸ் இட் ஆர் லூஸ் இட்ன்னுதான் இங்கே டாக்குட்டர்ஸ் சொல்றாங்க.