Wednesday, November 16, 2005

துளசிக்குக் கண்ணாலம்!

என்ன திகைச்சுப் போயிட்டீங்களா? மெய்யாலும்தாங்க , இன்னிக்கு நம்ம துளசிக்குக் கல்யாணம்.இன்னிக்கு என்ன நாள் பார்த்தீங்களா? கார்த்திகை மாசப் பவுர்ணமி.


இது ஒரு அஞ்சுநாள் நடக்கற பழையகாலத்துக் கல்யாணம். அந்தக் காலத்து அஞ்சு நாள் கல்யாணம் எல்லாம்இப்ப அரைநாளா மாறிக்கிட்டு இருக்கறது வேற விஷயம்.


துளசியைக் கட்டிக்கப்போறது யாரு?


சாக்ஷாத் அந்த மஹா விஷ்ணுவேதான்! வேற யார்?


சரி. கதையைப் பார்க்கலாம்.


ஜலந்திரன்னு ஒரு ராஜா இருந்தார். இவர் சமுத்திரங்களுக்கு, ஜலத்துக்கு ராஜாவானவர். அமிர்தம் எடுக்கறதுக்காக பாற்கடலைக்கடைஞ்ச கதை உங்களுக்குத் தெரியும்லெ. அப்போ அமிர்தம் திரண்டு வர்றதுக்கு முன்னாலே 14 வகை செல்வங்கள்வந்துச்சாம். உங்களுக்கு வேண்டியது அமிர்தம் மட்டும்தானே. அதனாலே இந்த 14 செல்வங்களும் எனக்குரியது. எங்கிட்டேதந்துரணுமுன்னு சமுத்திரராஜா ஜலந்திரன் மஹாவிஷ்ணுகிட்டே கேட்டார். தேவர்களுக்குக் கொடுக்க மனசில்லை.( சரியானஅல்பம்!)


அசுர ராஜாவான ஜலந்திரனுக்கு, இந்த சொத்து விஷயமா தேவர்கள்கிட்டே மனஸ்தாபம் தோணிடுச்சு. எப்படியாவதுபோரிட்டு, நமக்குச் சேரவேண்டிய செல்வங்களை அடைஞ்சே தீரணுமுன்னு முடிவு செஞ்சார்.
ஜலந்திரனோட மனைவி வ்ருந்தா( பிருந்தா). ஜலந்திரனுக்கு ஒரு வரம் கிடைச்சிருந்தது. அது என்னன்னா, அவருடையமனைவி கற்போடு இருக்கும்வரை ஜலந்திரனுக்கு மரணம் இல்லை.


இந்த இடத்துலேதான் இந்தக் கதைக்கு ரெண்டு வேரியேஷன் வருது. ஒவ்வொண்ணாப் பார்க்கலாம்.


ஜலந்திரன் போருக்கு வரான்னதும் தேவர்களுக்குக் கிலி பிடிச்சுக்கிட்டது. வழக்கம்போல் மஹாவிஷ்ணுகிட்டேமுறையிடுறாங்க. ஜலந்திரனுடைய வரத்தைப் பத்தித் தெரிஞ்சிருந்த விஷ்ணு, ஜலந்திரன் இல்லாத நேரமாப்பார்த்து, தந்திரமா ஜலந்திரனுடைய ரூபத்திலே போய், வ்ருந்தாகூட இருக்கறார். பாவம் வ்ருந்தா. இது தன்னுடையபுருஷன் இல்லைன்ற விவரம் அவளுக்குத் தெரியலை. தெரியாம நடந்தாலும், கற்பிழந்துபோனதாலே ஜலந்திரனைப்போரில் தேவர்களால் கொல்ல முடிஞ்சது.
அதுக்கப்புறம் நடந்ததையெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட வ்ருந்தா, விஷ்ணுமேலே கோபம் கொண்டு அவரைக் கல்லா ஆகும்படிசபிக்கிறாள். அந்த சாபம் அப்படியே பலிச்சு, கண்டகி நதியிலே கறுப்புக் கல்லாக் கிடக்குறார். இந்தக் கல்தான் 'சாலிகிராம்'அதுக்கப்புறமும் வ்ருந்தாவை மறக்க முடியாம அவளை துளசிச் செடியா மாத்திக் கல்யாணம் செஞ்சுக்கறாராம்.


அடுத்த கதை என்னன்னா,


கற்புக்கரசியும், பேரழகியுமான வ்ருந்தா மேலே ஆசைவச்ச மஹா விஷ்ணு, ஜலந்திரன் போருக்குப் போனப்ப, தன்னையேஜலந்திரனா மாத்திக்கிட்டு வ்ருந்தாவைப் பார்க்க வர்றார். விஷ்ணுவோட கெட்ட எண்ணத்தையும், இது ஜலந்திரன் ரூபத்தில்வந்த வேற்றாள் என்பதையும் தன்னுடைய கற்பின் வல்லமையாலே தெரிஞ்சுக்கிட்ட வ்ருந்தா, தன்னை உடனே ஒரு செடியாகமாத்திக்கிறாள். இதுதான் துளசிச் செடி. தன்னுடைய எண்ணம் தோத்துப் போனதை விஷ்ணுவாலே தாங்க முடியலை. சரி ,எதா இருந்தாலும் விடப்போறதில்லைன்னு தீர்மானிச்சு, துளசி இலைகளை மாலையாக்கித் தன் கழுத்துலே போட்டுக்கறார்.தனக்குப் பிரியமான வ்ருந்தா, மாலைரூபத்துலேயாவது தன்னோடு நிரந்தரமா இருக்கணுமுன்னு இந்த ஏற்பாடு.அதனாலேதான் பெருமாளுக்கு எப்பவும் துளசிமாலை விசேஷமா அணிவிக்கறது.


எப்படியோ இந்த ரெண்டு வர்ஷனிலும் துளசிச் செடியும், சாலிக்ராமும் வந்துருது. விருந்தாவாகிய துளசிக்கும்,விஷ்ணுவாகிய சாலிக்ராமுக்கும் அப்புறம் கல்யாணம்( அதான் ரெண்டுபேரும் வேற பிறவி எடுத்தாச்சே!) நடந்துச்சாம்.


கார்த்திகைப் பவுர்ணமிக்கு இந்த துளசி விவாஹம் நடக்குது. இதுக்கு முந்தி வர்ற ஏகாதசிமுதல் பவுர்ணமிவரை அஞ்சுநாள் விசேஷப் பண்டிகைக் காலம். அதான் அஞ்சுநாள் கல்யாணமுன்னு சொன்னேனே. இந்தியாவுலே வடக்கே 'சிம்லா' ன்றஊர்லேதான் இது ரொம்ப விசேஷமாக் கொண்டாடப்படுதாம். ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் இதுக்காகவே அங்கே கூடறாங்களாம். அங்கே ஏகாதசியன்னிக்கே கல்யாணம் நடந்துருது. அதுக்கடுத்துவர்ற நாலுநாளும் பண்டிகைக் காலம்.வட இந்தியாவுலே, வருஷாவருஷம் கல்யாண சீஸன் ஆரம்பிக்கறது இதுலே இருந்துதானாம்.


உண்மையான கல்யாணங்களில் நடக்கும் சாஸ்த்திரம் சம்பிரதாயம் ஒண்ணும் விடாம இந்தக் கல்யாணம் நடக்குமாம். இதைநான் கேள்விப்பட்டிருக்கேனே ஒழிய, நேரில் ஒருநாளும் பார்த்ததில்லை.


ஆனாப் பாருங்க, இந்த வருஷம் இங்கே நம்ம ஹரே கிருஷ்ணா கோவிலிலே துளசிக்கும், சாலிகிராமுக்கும் கல்யாணம்ஏற்பாடு நடக்குது. எனக்கு ஒரு விசேஷ அழைப்புவேற வந்திருக்கு. கிறைஸ்ட்சர்ச்சிலே எத்தனை ஹிந்துக் கல்யாணம்நடந்திருக்கு? எனக்குத் தெரிஞ்சு இதுவரை மூணு? ம்ம்ம்ம் ...... இல்லே நாலு.


இதுலே ஒண்ணு ஃபிஜி இந்தியக் கல்யாணம். புரோகிதர் ஃபிஜியிலிருந்து வந்திருந்தார்.


அடுத்த ரெண்டும் இலங்கைத்தமிழர் கல்யாணம். இதுலே ஒரு கல்யாணத்துக்கு இலங்கையிலிருந்து இங்கே வந்து செட்டிலான புரோகிதர்.
இன்னொண்ணு, நம்ம ஹரே கிருஷ்ணா கோயில் பண்டிட் நடத்தி வச்சார்.


இது மூணுக்கும் நமக்கு அழைப்பிதழ் வந்து போனோம். இதுலே ஒரு கல்யாணத்தை( ஹரே கிருஷ்ணா பண்டிட் நடத்திவச்சது)இங்கே எங்கள் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து ஆளுக்கொரு வேலையாச் செஞ்சுகொடுத்து ஒரு கம்யூனிட்டிக்கல்யாணமா ஆக்கிட்டோம். ரொம்ப சிறப்பா அமைஞ்சது. எல்லோருக்கும் ஒவ்வொரு'ரோல்' இருந்துச்சு.நானும், மற்றொருதோழியும் சேர்ந்து மணமாலைகள் தயாரிச்சோம். அழகான ரோஜாப்பூ மாலைகள்!!


இதெல்லாம் இல்லாம ரெண்டு சிவில் மேரேஜ் நடந்துச்சு. நம்மைப் பொறுத்தவரை அதை ஒரு நிச்சயதார்த்த நிகழ்ச்சியாவும்,சட்டத்தைப் பொறுத்தவரை அது ஒரு ரெஜிஸ்தர் கல்யாணமாவும் இருந்துச்சு. அதுலேயும் ஒரு நிச்சயம்/கல்யாணத்துக்கு நானே மாப்பிள்ளை வீட்டுக்காருங்களா இருக்கவேண்டியதாப் போச்சு. மாப்பிள்ளை வெளிக்கிட்டது நம்ம வீட்டில் இருந்துதான். மாப்பிள்ளை இங்கிலாந்திலிருந்து வந்திருந்தார். அவருக்கு ஒரு வீடு வேணுமில்லையா, அது நம்மதாப்போச்சு:-)


நானும் மாப்பிள்ளைவீடுன்ற கர்வத்தோட இருந்தேன் அன்னைக்கு!


ஒருநாள் (அன்னிக்கு வெள்ளிக்கிழமையா இருந்துச்சு)ச்சும்மா டவுன்வரைக்கும் போலாமுன்னு சிட்டிசென்டருக்குப்போனேன். இங்கேதான் ஒரு நூறுவருஷத்துக்குமேலே பழசான சர்ச் இருக்கு. அதுக்கு முன்னாலே எல்லா ஐரோப்பியநகரங்களிலும் இருக்கறமாதிரி ஒரு சதுக்கம். அந்தப் பக்கம்போனா வழக்கமா சர்ச்( இதுவும் ஒரு கோயில்தானே?)க்கு எப்பவும் ஒரு விஸிட் இருக்கு. பழக்கத்தை மாத்தமுடியுமா? அப்படிப்போனப்பப் பார்க்கறேன், அந்தச் சதுக்கத்துலே மேடை போட்டுஒரு இந்துக் கல்யாணம் நடந்துக்கிட்டு இருக்கு. என்னடான்னு பார்த்தா, ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்தரெண்டுபேருக்குக் கல்யாணம். பொதுவுலே வச்சுட்டாங்க. நானும் 'டாண்'னு போய்ச் சேர்ந்திருக்கேன் பாருங்க!கொஞ்சநேரம் நின்னு அவுங்க சம்பிரதாயத்தைப் பார்த்துட்டு மணமக்களுக்கு ஆசி வழங்கிட்டு கிளம்புனா, இருந்துகல்யாணச் சாப்பாட்டைச் சாப்புடணுமுன்னு கேட்டுக்கிட்டாங்க. நல்ல சைவச் சாப்பாடு. அங்கிருந்த எல்லாருக்கும்போகவர இருந்த அத்தனைபேருக்கும் அன்னிக்கு அடிச்சது லக்.
ஆனா நான் பார்த்த நாலு கல்யாணத்துலேயும் ரொம்ப மனமகிழ்ச்சியைக் கொடுத்தது, நாங்க எல்லாம் சேர்ந்துவேலைகளைப் பகிர்ந்துக்கிட்டுச் செய்த கம்யூனிட்டிக் கல்யாணம்தாங்க. இனிமே நம்ம புள்ளைங்களுக்குக்கல்யாணம் கார்த்தின்னா இந்தியாவுக்கு ஓடவேணாம். இங்கியே நல்லபடியா நடத்தவும் முடியும், நம்மசம்பிரதாயங்களுக்குக் குறைவில்லாமன்ற எண்ணத்தைக் கொடுத்தது அந்தக் கல்யாணம்தாங்க. அதுமட்டுமா?சும்மா சொல்லகூடாது. நடத்திவச்ச ஹரே கிருஷ்ணா பண்டிதரும் ரொம்ப அருமையா மந்திரங்களைச் சொல்லி,அது ஒண்ணொண்ணுக்கும் ஆங்கில விளக்கமும் சொல்லி எல்லோருக்கும் புரிய வச்சார். வந்திருந்த வெள்ளைக்காரங்க அப்படியே அசந்து போயிட்டாங்கல்லெ. இத்தனைக்கும் அந்தப் பண்டிதர் 'ஸ்வீடன்' நாட்டைச் சேர்ந்தவர்.


இப்படித்தாங்க, நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தாலும் எனக்குன்னு வருதுபாருங்க வாய்ப்புங்க!


இன்னிக்கு இந்தத் துளசி கல்யாணத்தையும் கட்டாயம் பார்த்துரணும். நான் போய் கல்யாணத்துக்குக் கிளம்பரவழியைப் பார்க்கறேன். என்ன புடவை?....ம்ம்ம்ம்.


அங்கே, இன்னும் ஏதாவது சுவையான சமாச்சாரம் மாட்டுனா சொல்றேன்.

உங்ககிட்டே சொல்லாம பின்னே வேற யார்கிட்டே சொல்றதாம்?

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

22 comments:

said...

periyamma,
title parthutu oodi vanthan moochu vanguthu.

said...

சரி. வந்தது வந்தாச்சு. இருந்து கல்யாணத்தைப் பார்த்துட்டு 'மொய்' எழுதிட்டுப் போங்க:-))))

said...

azhaga ezhuthi irukeenga..
Ung kalyana naalonu nenaichu vandhen.

Amaa saapadu podama ippi moi kekareengale..

Idhenna background picture lam pottu Kalakareenga ponga...programmingla irangiteenga pola irukke

said...

மொய் எழுதணுமா? ஆஹா... கெளம்பிட்டாங்கய்யா... கெளம்ப்பிட்டாங்கய்யா..!

said...

உங்களின் திருமண நாள் என்றல்லவா நினைத்தேன்!

said...

வாங்க, வாங்க, டுபுக்கு,

என்னங்க, 'மூல்த்தானி மெட்டி'யெல்லாம் போட்டு முகத்தைப் பொலிவாக்கிக்கிட்டுக் கல்யாணத்து வந்துருக்கீங்க:-)))

ப்ரோக்ராம் எல்லாம் இல்லீங்க. ஏதோ பெரிய இடத்து தயவு.யானை, பூனைன்னு படங்கள் எல்லாம் போட்டுத் தராங்க.

said...

ஏங்க மாயவரத்தாரே,

உங்க ஊர்லே 'மொய்' எழுதறது இல்லீங்களா?

இல்லேன்னு மட்டும் சொல்லிப்புடாதீக, ஆமாம்.

( கொஞ்சம் நீட்டி தில்லானா மோகனாம்பாள் மனோரமா ஸ்டைலில் படிங்க)

said...

மூர்த்தித்தம்பி,

வாங்க வாங்க.

இனிமே வருசத்து ரெண்டுதரம் கல்யாண நாளைக் கொண்டாடலாமுன்னு கோபால்கிட்டே சொல்லிரலாமா?

ஹை. ரெண்டு புடவை கிடைக்குமுல்லே?

said...

// துளசியைக் கட்டிக்கப்போறது யாரு?

சாக்ஷாத் அந்த மஹா விஷ்ணுவேதான்! வேற யார்? //

ஆஹான்னு ஒரு நிமிஷம் கோபால் (விஷ்ணு எ கோபாலன் இல்லீங்க, நம்ம கோபால்) சந்தோஷப்பட்டிருப்பாரு.. அப்புறம் முழுக்கதையும் சொல்லி, பாவம்...

said...

முகமூடி,

ஏங்க நீங்க வேற.

//ஆஹான்னு ஒரு நிமிஷம் கோபால் (விஷ்ணு எ கோபாலன் இல்லீங்க, நம்ம கோபால்) சந்தோஷப்பட்டிருப்பாரு.. அப்புறம் முழுக்கதையும் சொல்லி, பாவம்... //

முப்பத்தியொன்னரை வருஷத்துக்கு முந்தி செஞ்ச தப்பை, நினைச்சு நினைச்சுத் துக்கப்படறவரை இன்னும் வெறுப்பேத்தணுமாக்கும்?

said...

மலர்களே நாதஸ்வரங்கள் பதிவிலே இந்த துளசியை எப்படியோ விட்டுட்டேன் பாருங்க ஞாபகபடுத்திட்டீங்க. பெருமாள் கோயிலுக்கு துளசி மாலை நிறைய கட்டி குடுத்து புண்ணியம் தேடிகிட்டுருக்கேன், ஆனா அவருக்கு உகந்தது எப்படிங்கற கதை இப்பதான் தெரிஞ்சுக்க முடிஞ்சுது. நல்லது எனக்கும் துளசி அனுபவம் நிறைய இருக்கு, அப்புறம் பதிவா போடுறேன்.

said...

உதயகுமார்,

//பெருமாள் கோயிலுக்கு துளசி மாலை நிறைய கட்டி குடுத்து புண்ணியம் தேடிகிட்டுருக்கேன், ...//

பார்த்தீங்களா, இந்தப் புண்ணியம்தான், இப்ப வாழ்க்கை நல்லவிதமா அமைஞ்சிருக்கு.

நல்லா இருங்க. பதிவைச் சீக்கிரம் போடப்பாருங்க.

said...

டீச்சர், எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுலயும் துளசிக்கு வாழப்பழம் பூவு எல்லாம் வெச்சிருந்தாங்க டீச்சர். வாழப்பழத்தை எடுக்கலான்னு நெனச்சேன் டீச்சர். ஆனா எறும்புங்க வந்து எடுத்துட்டுப் போயிருச்சு டீச்சர்.

அப்புறம் ஒரு சந்தேகம் டீச்சர். துளசிக்குக் கல்யாணம் ஆச்சே. அப்புறமா நடக்க வேண்டியதெல்லாம் நடந்ததா டீச்சர்? (நான் மறுவீடு போறதைக் கேக்குறேன் டீச்சர்.) (ராகவன் ரொம்ப கெட்ட பையன்னு நீங்க நினைக்கிறது எனக்குக் கேக்குது டீச்சர். )

said...

ராகவன்,

இந்தியாவுலே ஸ்கூல்களிலே இன்னும் செக்ஸ் எஜுகேஷன் வைக்கலைதானே?

எல்லோரும் அமைதியா உக்காந்து 'கேப்டன் குக்' எங்கெங்கே போனார்ன்னு படியுங்க.

மூச். சதம் வரக்கூடாது:-)))

கந்தனா ஸ்கந்தனான்னு பக்திப் பழமா இருக்கரவங்களையெல்லாம் நம்பக்கூடாது போல:-)))

said...

// எல்லோரும் அமைதியா உக்காந்து 'கேப்டன் குக்' எங்கெங்கே போனார்ன்னு படியுங்க. //

டீச்சர் இன்னோரு சந்தேகம். கேப்டன் குக்கா டீச்சர்?

// கந்தனா ஸ்கந்தனான்னு பக்திப் பழமா இருக்கரவங்களையெல்லாம் நம்பக்கூடாது போல:-))) //

பக்திப் பழம் எந்தக் கடைல கிடைக்குமுன்னும் சொல்லுங்க டீச்சர். ஒரு டஜன் வாங்கனும். பெங்களூருல ஆரஞ்சு ஆப்பிள் பழங்கதான் நெறைய கெடைக்குது டீச்சர். இப்ப ஆரஞ்சு சீசன் போல. நெறைய வெச்சு விக்குறாங்க.

said...

கல்யாண வாழ்த்துக்கள் :) இங்கிருக்கும் துளசிக்கு மொய் எழுதிவிட்டேன்; அங்கு வந்து சேரும் என நம்புகிறேன். ஆமாம்,நியூசி.யில் துளசி செடி உண்டா?

said...

மணியன்,

துளசிச்செடி ( Basil) இங்கே சிலசமயம் கிடைக்கும். நானும் ஒரு மாடத்தில் வச்சிருந்தேன். சம்மருக்கு வரும் . குளிர் ஆரம்பிச்சவுடனே மண்டையைப் போட்டுருது.

இங்கே ஹரே கிருஷ்ணா கோவிலில் வச்சிருக்காங்க.

அதான் வீட்டுலே 'நானே' இருக்கேனே:-)))))

said...

'துளசி'க்குத் திருமண வாழ்த்துகள். No மொய் please. Bad habit.

ஹா...ஹா...ஹா...டீச்சர்..டீச்சர்...காதைத் திருகாதீங்க டீச்சர்.....

அப்புறம் எப்ப நீங்க எங்க வீட்டுக்கு வரப் போறீங்க டீச்சர்?

said...

துளசி
கல்யாணம் நல்லா இருந்தது. துளசி பேசில் இல்லை, பேசில் நம் ஊர் விபூதி பச்சிலை.

said...

பத்மா,

இங்கே விபூதி பச்சிலை பேஸில் இருக்கு. ஆனா துளசியை 'ஹோலி பேஸில்'னு சொல்லறாங்க.

கல்யாணம் கோயில்லே நல்லா நடந்தது. மொத்தம் 3 சாளகிராம் இருந்துச்சு.

said...

வாவ்.... நல்ல விளக்கங்கள். இரண்டு விதமான கதைகளும் படிச்சேன். நான் என் பக்கத்தில் வெளியிடாததற்குக் காரணம் நீங்க எழுதி இருப்பீங்கன்னு தான்! :)

said...

நல்லாதா நடந்தது கல்யாணம்:(

லின்க் அனுப்பினதுக்கு ரொம்ப நன்றிம. பாதிக்கப் படறது பெண்கள் தான்.

துளசியைக் கும்பிட்டுக்கறேன்.