Monday, November 28, 2005

வாங்க 'பாட்டு'க் கேக்கலாம்!!!!!

நண்பர் ஒருவரிடம் 'ச்சாட்' டில் இருந்தேன். வழக்கமா விசாரிப்பு இருக்குமுல்லே அங்கேயும் இங்கேயும்.நலாமா? சாப்பிட்டாச்சா? இப்ப அங்கே என்ன மணி?( ஆமா இது ரொம்ப முக்கியம்:-) ! இப்படிச் சின்னப்பேச்சு.அதாங்க 'ஸ்மால் டாக்' அப்ப எதேச்சையா அவர் சொன்னாரு' பாட்டுக் கேட்டீங்களாமா?'ன்னு. என்ன பாட்டு? என்ன ஏதுன்னு விசாரிச்சப்ப ஒரு லிங்க் அனுப்புனாரு. அதுலே போனா பாட்டு அட்டகாசமா வந்துக்கிட்டு இருக்கு.


என்னதான் நாம் வீட்டுலே சி.டி, டேப்புன்னு போட்டுக் கேட்டாலும், அடுத்த பாட்டு என்னன்னு மனப்பாடமா ஆயிருதே. ரேடியோலே வர்றது மாதிரி ஆகுமா? அதுலே ஒரு எதிர்பார்ப்பு, அடுத்து வரப்போறது என்னன்னு!



இங்கே கொஞ்ச நாளு ரேடியோ ப்ரோக்ராம் நடத்திக்கிட்டு இருந்தேன். இந்தியாவை விட்டு வெளியிலே வந்துட்டா எல்லாமே 'ஹிந்தி'ன்னுஆன நிலமையிலே இதுவும் 'கீத் மாலா'ன்ற ஹிந்தி நிகழ்ச்சிதான். வாரம் ஒரு நாள், ஒரே ஒரு மணி நேரம்.இங்கே இருக்கற ஒரு இந்தியன் க்ளப்( இதை ஆரம்பிச்சவர் யாருங்கறீங்க? நம்ம 'கோபால்'தான். சமயம் பார்த்துகொஞ்சமே கொஞ்சம் தம்பட்டம் அடிக்கத்தாவலையா?) ரெண்டு மூணு பேர் ஆளுக்கு ஒருவாரமுன்னு நடத்துவோம். அப்ப அவுங்கெல்லாம் ஒரேடியா ஹிந்திப் பாட்டுங்க மட்டுமே போடுவாங்க. எனக்கோ ஒரே கடுப்பு. இந்தியான்னாஎல்லா மொழிகளும் இருக்கற நாடில்லையா, அதென்ன ஹிந்தி மட்டும் போடறதுன்னு? என் முறை வரும்போதுஒரு தமிழ்ப் பாட்டு, ஒரு மலையாளம், ஒரு தெலுங்கு, ஒரு குஜராத்தின்னு' கலந்துகட்டி அடிச்சுருவேன். அப்புறம்இது எல்லாருக்கும் பிடிச்சுப்போய், மத்தவங்களும் நம்மகிட்டே தமிழ்ப் பாட்டு வாங்கிட்டுப்போய் போட ஆரம்பிச்சாங்க.ஆனா அது என்ன பாட்டு, அதுக்கு அர்த்தம், பாடற காட்சி அமைப்பு, நடிகர், நடிகை யாரு,என்னன்னு எல்லாம் எழுதிக் கொடுக்கணும். அவுங்களும் அதுக்கொரு ச்சின்ன இண்ட்ரோ கொடுத்துட்டு அந்தப் பாட்டைப் போடுவாங்க. எப்படியோ ஒரு தமிழ்ப்பாட்டாச்சும் ரேடியோவுலே வருதேன்னு ஒரு சந்தோஷம்!!


இன்னிக்குப் பாட்டைக் கேட்டுக்கிட்டே இருந்தேனா,அப்படியே 'அந்தக் காலம்' போயாச்சு! இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்புலே மாஞ்சுமாஞ்சுப் பாட்டுக் கேட்ட காலம்.அதிலும் நமக்கு ஃபேவரைட்டா இருக்கற 'ஜாக்கி'ங்கன்னு சிலபேர். இன்னைக்கு யாரு வரப்போறான்றதுலேயே ஒருச்சின்னப் போட்டி. நாம சொன்னவங்க வந்துட்டாங்கன்னா தோழிகள் மத்தியிலே 'ஏதோ ஜெயிச்சுட்டோம்'ன்ற வெற்றிப் பார்வைவுடறதுன்னு இப்படியெல்லாம்........ஹூம்.


கே.எஸ், ராஜா வரும்போதே, அவரோட 'சிக்னேச்சர் ட்யூன்' கேட்டவுடனே ஒரு பரபரப்புத் தொத்திக்கும். அழகான இலங்கைத்தமிழ். அடுத்து வருவதுன்னவுடனே பாட்டோட தொடக்கம் இக்குனூண்டு கேட்டவுடனே பாட்டு, படம்,பாடுனவங்க பேருன்னு எல்லாத்தையும் ஒப்பிச்சுருவோம். இந்தக் கவனம் மட்டும் படிப்புலே இருந்திருந்தா,இப்ப நம்ம 'ரேஞ்சே' வேறயாயிருக்கும்:-)


இங்கேயும்தாம் எப்பப்பார்த்தாலும் 'லோலோ'ன்னு ரேடியோவும் , டிவியும் போய்க்கிட்டு இருக்கு.ஆனா நம்ம வீட்டுலே நான் வண்டியிலே ஏறுனதும் மொதவேலையா ரேடியோவை ஆஃப் செஞ்சுருவேன்.'ஆமா, பொல்லாத பாட்டு. இளையராஜாம்யூசிக் பாருங்க'ன்னு சொல்லி 'டப்'னு அதை அணைச்சாத்தான் கார் சீட் பெல்ட்டே போடமுடியும்:-)


நான் பாட்டுக்கு ஏதேதோ அளந்துக்கிட்டு இருக்கேன் பாருங்க. இந்தப் பாட்டு வர்றது ஷ்யாம் ரேடியோ. 24 மணி நேரமும்வருதாம்.டவுன்லோடு ஒண்ணும் செய்யவேணாம் . அப்படியே வரும்ன்னு சொல்றாங்க.


பாட்டுக் கேட்டுட்டு, குத்தங்குறை சொல்லாம இருக்கமுடியாதுல்லே. உடனே ஒரு 'மயில்'தட்டிவுட்டேன். 'இந்தமாதிரி உங்க சேவை நல்லா இருக்குப்பா. ஆனா போட்ட பாட்டையே ரிப்பீஈஈஈஈஈஈஈட்டு செஞ்சுகிட்டே இருக்கீங்களே.புதுப்பாட்டு ( ஆமாம். இது என்னாத்துக்கு? சிலதைத்தவிர மத்ததெல்லாம் ஒரே இரைச்சல்தான்), பழைய பாட்டுன்னு (மனசுலே அச்சாப் பதிஞ்சுபோன 70, 80களிலே வந்ததுங்க என்னமா இருக்கு. ஆஹா... .....அங்கெ யாரோ வயதுபோன ஆக்களுக்கு வேற வேலை இல்லைன்னு முணங்கறாங்க.....) எவ்வளோ இருக்குன்னு அதுலே போடுங்கப்பா'ன்னு.


என்ன ஆச்சரியம். உடனே அங்கிருந்து பதில் 'மயில்' வந்துருச்சு! நீங்க நியூஸியிலே இருந்து பாட்டைக் கேட்டுட்டு எழுதுனதுரொம்ப சந்தோஷமாயிருச்சு. உங்களுக்கு எதுனா 'இஷ்டப்பாட்டு' இருந்தாச் சொல்லுங்க . நேயர் விருப்பத்துலெ போட்டுரலாம்னு.நல்ல மரியாதைப்பட்ட மனுஷங்கதான்.


ஏதோ 'சப்ஸ்க்ரிப்ஷன்'ன்னு சொன்னதையும் கேட்டேன். அதிகமா ஒன்னுமில்லே. அதைப் பத்தியும் கொஞ்சம்யோசிக்கணும். நீங்களும் முடிஞ்சாக் கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வாங்க. அப்புறம், 'இந்த அக்கா' இதைச் சொல்லாம வுட்டுட்டான்னுபேசக்கூடாது, ஆமாம்.
இதைப் பதிவு செய்யற நேரம் பாடுறது, 'சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது'!!!!

http://www.shyamradio.com/


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

14 comments:

said...

நீங்க என்னதான் சொன்னாலும் அந்த காலத்துல (இந்த வயசானவங்க சேர்ந்துட்டாலே 'அந்த காலத்துலேன்னு ஆரம்பிச்சிருவீங்களே'ம்பா ஏம் பொண்ணு. வயசு 23 வயாசுவுது இன்னமும் சின்ன பிள்ளையாட்டமா அழிச்சாட்டியம் பண்ணுது.) இலங்கை வானொலியில ராத்திரி பத்து மணிக்குமேல 'தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே'ன்னும் 'வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா. அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா'ன்னு காதுக்கு பக்கத்துல டிரான்சிஸ்டர் வச்சிக்கிட்டு கேட்ட சுகம் இப்ப வருமா,என்ன? அந்த சுகமே சுகம்தான்.

said...

இன்னைக்கு யாரு வரப்போறான்றதுலேயே ஒருச்சின்னப் போட்டி. நாம சொன்னவங்க வந்துட்டாங்கன்னா தோழிகள் மத்தியிலே 'ஏதோ ஜெயிச்சுட்டோம்'ன்ற வெற்றிப் பார்வைவுடறதுன்னு இப்படியெல்லாம்........ஹூம்

தூர்தர்ஷனின் சென்னை ஒளிபரப்பில் செய்தி மற்றும் செய்திச்சுருக்கம் வாசிக்க யார் வருவாங்கன்னு எங்க வீட்டிலயும் போட்டி வச்சுக்கிடுவோம்.எங்க சித்தியும் பாட்டியும் இன்னொரு படி மேலே போய் என்ன கலர் பொடவை கட்டிட்டு வருவாங்கன்னு அடிச்சுக்கிடுவாங்க பார்க்கணுமே.கண் கொள்ளாக் காச்சி அது.

said...

நல்லாயிருக்கு துளசியக்கா!

அப்புறம் 24 மணி நேர சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 தெரியும்தானே?

http://www.oli.sg

said...

துளசி,
திடீர்னு என்ன வானொலி பக்கம் சாஞ்சுட்டீங்க? `இரவின் மடியில்' கேட்ட காலங்கள் நமக்கு இனிமையானவைதான்.

said...

டி.பி.ஆர்.ஜோசஃப்,

ஆமாங்க. அந்தக் காலத்துலே ராத்திரி 10 மணிக்குமேலேதான் நல்ல அருமையான
பாட்டுங்க வரும். நம்ம ஹாஸ்டலில் ராத்திரி 10 மணிக்கு லைட் ஆஃப் & சைலன்ஸ்.
( அப்பெல்லாம் இந்த ஹாஸ்டல்ங்க விதிமுறைகளே தனி. அதுக்கே ஒரு பதிவு போடலாம்!)
தலைக்குப்பக்கத்திலே ட்ரான்சிஸ்டர் மெதூஊஊஊஉவாப் பாடும். ஆனாலும் அப்பப்ப வார்டன் வந்து
பார்ப்பாங்க. அவுங்க பக்கத்துலே வந்துட்டமாதிரி தெரிஞ்சா, அப்படியே தூங்கறபாவனையிலே கிடப்போம்.
தூங்கிடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு, அந்தம்மா ரேடியோவை ஆஃப் செஞ்சுட்டுப் போவாங்க. ஆனா அசையாம
தூங்கறமாதிரி கிடக்குறது ரொம்பக் கஷ்டங்க:-)

said...

சுதர்சன்,

இப்பவும் சித்தியும் பாட்டியும் இந்தப் போட்டியிலே ஈடுபாடா?
சொன்னா நம்பமாட்டீங்க. நான் இதுவரை தூர்தர்ஷன் சென்னை ஒளிபரப்பு
பார்த்ததில்லை.அப்புறம் ஊரெல்லாம் செய்தி வாசிக்கிற ஷோபனா புடவைகளைப்
பத்திப் பேசுனதைப் படிச்சேனே தவிர அந்த ஷோபனா ரவியை இன்னும் பார்க்கலை.

ரொம்ப நஷ்டப்பட்டுட்டேன் இல்லே?

said...

ஜோ,

உங்க சிங்கை வானொலி ரியல் ஆடியோவுலே வருதுல்லே. அப்பப்ப 'கட்' ஆயிருது(-:

ஷ்யாம் தொடர்ச்சியா வருதுங்களே.

நட்சத்திரமா ஜொலிக்கிறீங்க, வாழ்த்துக்கள்.

said...

தாணு,

எல்லாம் 'நான் பெற்ற இன்பம் பெறுக நம் தமிழ்மணம்' என்ற நல்ல எண்ணம்தான்.

இப்பவும் 'பாட்டு' ராத்திரியிலே கேக்கறீங்களா?

said...

ஹா ஹா அற்புதமான ஒரு வானொலியை தளத்தில் இட்டதற்கு நன்றி அம்மா :) வணக்கமுடன்
ஸ்ரீஷிவ்.....:)

said...

நன்றி சிவா. இந்த ஷ்யாம் ரேடியோவை அறிமுகம் செஞ்சுவச்சதுக்கு.

said...

நன்றி சகோதரி. எனக்கு இந்த ரேடியோவினை சகோதரி சைலஜா முன்பே அறிமுகப் படுத்தினார் சென்ற மாதம். அதுமட்டுமா? தன் சொந்தக் குரலில் பாட்டு வேறு பாடி இருந்தார்!

said...

மூர்த்தித்தம்பி,

அடடா நான் 'மிஸ்' செஞ்சுட்டேனே(-:

ஷைலஜா நல்லாப் பாடுவாங்களே.

said...

அட! டீச்சர் ரேடியோ போடுறீங்களே. நாங்கூட ஒரு ரேடியோ வாங்குனேன் டீச்சர். போன மாசம். சாட்டிலைட் ரேடியோ. அதுல நல்ல பாட்டுகள ஒம்பது மணிக்கு மேல போடுறாங்க. கே.எல். ரேடியோன்னு பேரு. ஆனா பாருங்க. பாட்டுக்கு நடுவுல தமிழ்ல பேசுறாங்க. அதுவும் நல்ல தமிழ்ல. சென்னைக்குப் போனா...பாட்டுக்கு நடுவுல பேசுறது எப்படி இருக்குன்னு நான் சொல்ல வேண்டியதில்லை.

said...

:) ஷைலஜா அக்காவிற்கும் இந்த ரேடியோ கொடுத்தது நாந்தேன் ;)
ஸ்ரீஷிவ்...