Monday, October 21, 2019

சூரியன்தான் கண்கண்ட தெய்வம்.... !!!!(பயணத்தொடர், பகுதி 158 )

இன்றைக்குக் காலையில்  வேறொரு இடத்துக்குப் போயிட்டு வந்துறலாமுன்னு ஒரு திட்டம்.  நாமொன்று நினைக்க..... 'அவன்'  வேறொன்னு  சாதிச்சுட்டான்.   ராத்திரி முழுசும் இடைவிடாத பேய் மழை. மழைச்சத்தம் கேட்டாலும் எழுந்து போய் பால்கனியில் நின்னு பார்க்க  'நம்மவர் ' விடலை.  பயங்கரக் காத்து.... கதவைத் திறந்தால் திரும்ப மூடுவது கஷ்டமுன்னார். அதுவும் சரிதான்.... நேத்து அறைக்கு வந்தவுடன்  பால்கனிக் கதவைத் திறந்துட்டு, திரும்ப சாப்பிடப்போகுமுன் மூடக் கொஞ்சம் கஷ்டமாத்தான் ஆச்சு.  ரொம்ப பலமா இழுக்கணும். வெஜிடேரியன்... பலமில்லை...கேட்டோ :-)


காலையில்  எழுந்ததும் முதல்வேலையா வண்டி ஒன்னு பத்துமணிக்கு வேணுமுன்னு உள்ளூர் ட்ராவல்ஸுக்குச்  சொல்லிட்டார். பேச்சுச் சத்தம் கேட்டுத்தான் நானே கண் முழிச்சேன்.  மழை விட்டதான்னு பால்கனி கர்ட்டனைத் திறந்து பார்த்தால்.... பால்கனி முழுசும் தண்ணீர் தேங்கி நிக்குது. சின்ன நீச்சல் குளம்.

ஈரத்தால் 'பிடிச்சுக்கிட்ட'க் கதவை ஒரு வழியாத்திறந்து பார்த்தால்  எதிரே கடற்கரையில் யாருமில்லை. கீழே லான் முழுசும் இன்னொரு நீச்சல் குளம்.  இன்னும் குனிஞ்சு பார்த்தால் ஹொட்டேல் பின்புறத்தில் கேஸ் சிலிண்டர்கள் எல்லாம் மிதந்துக்கிட்டு இருக்கு.  அங்கேதான் ரெஸ்ட்டாரண்டின் அடுக்களை  இருக்கு போல....

குளிச்சுட்டு ரெடி ஆனோம்.  கீழே  ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போகலாமுன்னு கிளம்பினால்.... ஹொட்டேல் பணியாளர்  கையில் மெனுவை வச்சுக்கிட்டு  அறைக் கதவைத் தட்டறார்.  கீழே முழுசும் வெள்ளக்காடாம்.  டைனிங் ரூம் முழுக்கத் தண்ணீர்.  உக்கார இடமில்லை. நமக்கு என்ன வேணுமுன்னு  மெனு பார்த்துச் சொன்னால்  மேலே கொண்டு வந்து கொடுப்பாராம்.

கொஞ்ச நேரத்துலே ப்ரேக்ஃபாஸ்ட் அறைக்கு வந்துருச்சு.  சொன்னதுக்கும் அதிகமாகவே  உணவு வகைகள்.  ஒருவேளை லஞ்சுக்கும் சேர்த்தோ?  :-)
முடிஞ்சவரை சாப்பிட்டு முடிச்சதும்  ரெண்டு பணியாளர்கள் வந்து அறையைச் சுத்தம் செஞ்சு, பால்கனி தண்ணீரை வெளியேத்திட்டுப் போனாங்க.  ஹௌஸ்  அரஸ்ட் நமக்கு. பவர் இல்லை.  வைஃபையும் வேலை செய்யலை......

இதுக்குள்ளே  ட்ராவல்ஸில் இருந்து ஃபோன்.  வழியெல்லாம்  தண்ணீர் இருக்காம். சாலையில் வெள்ளம் வடிஞ்சபிறகு வண்டியை அனுப்புவாங்களாம். ஸ்டேண்ட் பை.....

லானில் இருந்த மணல் எல்லாம்  அப்படியே  சுரங்கப்பாதையில் இறங்கி  கீழே  ஹொட்டேல் வெராண்டாவில்  வந்து சேர்ந்துருக்கு.... கடற்கரையில் செல்லம்ஸ் இருவர்.  கொஞ்ச நேரத்தில் ஒரு டூரிஸ்ட் பஸ் கூட்டம் கடற்கரையில்.....  சாலை வெள்ளம் வடிஞ்சுருச்சோ.....
பத்தரை வரை பார்த்துட்டு,  மெள்ளப் படிகளில் இறங்கிக் கீழே போனோம். கார்பார்க் என்ட்ரியில் இருந்த தண்ணீரையெல்லாம் அப்புறப்படுத்திட்டாங்க. வெளியில் திட்டுத்திட்டாத் தேங்கிய பள்ளங்கள்.  நம்ம ஹொட்டேல் பக்கவாட்டில் ஒரு பாதை பீச் பக்கம் போகுது.  அந்தக் கோடியில்  பூரிநகர சபை கட்டி விட்டுருக்கும் பொதுக்குளியல், கழிப்பறைகள்.  அதான் டூரிஸ்ட் பஸ்கள் பயணிகளைக் கொண்டுவந்து இறக்கி இருக்கு.
முத்தும் பவளமும் வித்துக்கிட்டு இருக்கார் நாகேஸ்வரராவ்.  விசாகப்பட்னம் சொந்த ஊராம்!  நமக்கும் அந்த ஊருக்கும் ஒரு பந்தம் இருக்கே !  அது விட்டுப்போக வேணாமேன்னு  ரெண்டு சரம் முத்தும் நாலு பவளமும் வாங்கினேன்.  நெஜப்பவளமான்னு தெரியலை.... நாகேஸ்வரராவ் சம்மதிப்பாரோ?


சின்ன உலா போனோம்.  கடற்கரையில் ஒரு நல்லது என்னன்னா..... எவ்ளோ மழை பெய்ஞ்சாலும் தண்ணீர் தேங்காது. மணல் அப்படியே உள்ளே இறக்கிக்கும். ஆனால் நாம் மணலில் உக்கார முடியாது....  ஈரம்....  அரை மணியில் அறைக்குத் திரும்பிட்டோம்.


இன்னும் ஹொட்டேல் பின்னம்பக்கம் சுத்தம்  செய்யலை..... வேலையாட்கள் வேற மழை காரணம் வரலையாம்...... என்னடா இப்படி ஆகிப்போச்சேன்னு  உக்காரவேண்டியதாப் போயிருச்சு.  பவர் இல்லாததால்  எதையும் சார்ஜ் செஞ்சுக்கவும் முடியலை.....

ட்ராவல்ஸில் இருந்து அரை மணிக்கொருக்கா சேதி வருது....  'தண்ணீர் இன்னும் வடியலை.....  எப்படியும் கொஞ்ச நேரத்தில் வந்துருவோம்'........
பகல் சாப்பாட்டுக்கு ஆர்டர் எடுக்க ரூம் பையர் வந்தார். ஒரு தவ்வா ரோட்டியும் தாலும் கொஞ்சம் சோறும் சொன்னோம்.  அது வந்ததும் சாப்பாடும் ஆச்சு.
ஒருவழியா ஒன்னே முக்கால் போல வண்டி வந்துருக்குன்ற சேதியை  ஹொட்டேல் பணியாளர் ஒருவர் அறைக்கு வந்து சொன்னார். எங்கே ....இன்ட்டர்காம் கூட வேலை செய்யலையே....


வண்டியை ஓட்டிவந்த ட்ரைவர் பெயரை இந்தக் களேபரத்தில் கேட்க மறந்து போயிட்டேன்.......  கிளம்பிப் போறோம் உலகப்புகழ் பெற்ற சூரியன் கோவில் இருக்கும் கொனார்க் என்ற ஊருக்கு ! ஒரு முப்பத்தியேழு கிமீ தூரம்தான்.
வழியெல்லாம்  பல இடங்களில் தண்ணீர் தேங்கி அப்படியே நிக்குது. தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் மூட்டை முடிச்சுகளுடன்  பக்கத்து சாலையில் வந்து உக்கார்ந்துருக்காங்க.



ஊரைவிட்டு வெளியில் வந்ததும் சாலை நல்லாவே இருக்கு. டோல் ரோடு ! கிளம்பின ஒரு மணியில் வந்துருந்தோம்.
கார்பார்க்கில் வண்டியை விட்டதும் ட்ரைவர் செல்நம்பரை நம்ம செல்லில் பதிஞ்சுக்கிட்டு நாம் கோவிலை நோக்கிப் போறோம். ட்ரைவர்  வரலையாம். மற்ற வண்டிகளின் ட்ரைவர்களுடன் பேசிக்கிட்டு இருப்பாராம். எல்லோரும் நண்பர்கள்தானாம்....
நமக்கு ஆளுக்கு நாப்பது ரூபாய் கட்டணம். ம்யூஸியம் பார்க்கணுமுன்னா இன்னொரு பத்து ரூ.     டோக்கன் கொடுத்தாங்க. அதை Turnstile கேட்டில் நுழைச்சுட்டு உள்ளே போகணும்.



வரிசையா இருக்கும் கடைகளைக் கடந்து போறோம்.
கோவில் விவரங்கள் போட்டு வச்சுருக்காங்க.  ஏழு குதிரை பூட்டிய பெரிய ரதம் சூரியனுடையது. இருபத்திநாலு சக்கரங்கள் ! பதிமூணாம் நூற்றாண்டுலே கட்டுனதாம்.  இந்த ஏழு குதிரைகள்தானே  சூர்யரஸ்மியில் உள்ள ஏழு வண்ணங்கள் ? நிறப்பிரிகை?

நடசாலா  என்னும் முகமண்டபம்  மேற்கூரையில்லாமல் இருக்கு!  நல்ல உயரமான கட்டடம். பத்திருபது படிகளில் ஏறிப்போகணும்.  படிகளின் ஆரம்பத்தில் யானையும் சிங்கமுமா ரெண்டு பக்கங்களிலும்.
நல்ல கூட்டம்.   ராஜஸ்தான் பயணிகள்  வந்துருக்காங்க. இவ்ளோ கூட்டத்தில்  யாரும் ஃப்ரேமுக்குள் வராம படம் எடுப்பது மஹா கஷ்டம்.....  ஆனாலும் விட்டுருவோமா?  'சட்னு வந்து நில்லுங்க' ன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன். கிடைக்கும் விநாடி இடைவெளியில்தான் க்ளிக்ஸ் :-)

சிற்பங்களைப் பற்றி ஒன்னும் சொல்றதுக்கில்லை. ஒரே சொல்தான்     'ஹைய்யோ ' !

எப்படித்தான் இடைவெளி இல்லாம சின்னச்சின்னதாச் செதுக்கித் தள்ளினாங்களோ?  யானையே நம் ஆள்காட்டி விரல் அளவு!  மனுஷர்கள் ஒரு சாண் !

 எதிரே கொஞ்ச தூரத்தில் இன்னொரு தனிக்கட்டடத்தில்  சூரியனுக்கான கோவில்!  ஜகமோஹனாவுக்குப்பின் கருவறை....  உள்ளே போக  வழி இல்லை.  நேரா ஒரு மாடம்  மட்டும் இருக்கு. அதுவும் காலியாக.  சூரியனைக் காணோம்..... உண்மையில் கண்கண்ட தெய்வம் இவனையன்றி வேறு யார் ?
நாம் குஜராத் பயணத்தில் மொதேரா என்ற ஊரில் இருக்கும் சூரியன் கோவிலுக்குப் போனது உங்களுக்கு நினைவிருக்கோ?   தங்கமும் வைரமுமா செய்த அங்கத்துச் சூரியனை, அந்நியமதக்காரர்கள் நாட்டைப் பிடிச்சுக்கிட்டப்போக்  கொள்ளையடிச்சுக்கிட்டுப் போயிட்டாங்க.  ஒருவேளை இங்கேயும் தங்கத்தில் செஞ்சு வச்சுப் பறி போயிருக்குமோ? அதே மதத்து ஆட்சியாளந்தான்  இங்கேயும் கோவிலை பெருமளவில் அழிச்சது.... ப்ச்.... எப்படி மனசு வந்துருக்கும்? ....

உள்ளே போக வழி இருந்து அதைச் செங்கல் வச்சு மூடி இருக்காங்களோ...... ஙே......
கோவில் பாதுகாப்புக்காக  பிரிட்டிஷார், கோவிலுக்குள் மண்ணை நிரப்பி ஸீல் வச்சுட்டதாகவும் சொல்றாங்க. இங்கே ஒரு புதுக்கதை என்னன்னா.....  இந்தப்பக்கத்தில் வரும் ப்ரிட்டிஷ் கப்பல்கள் எல்லாம் கடலில் மூழ்கிப்போகக் காரணம்  இந்தக் கோவிலில் இருக்கும் சூரியன்தானாம்.  என்னவோ போங்க.....  அவரவர் கட்டிவிடும் கதைகள்....

இவ்ளோ அழிவுக்குப்பின்னும் கூட  இத்தனை அழகா
இருக்கும் கோவில் உலக அதிசயமாத்தான் இருக்கணும்.....
அழகெல்லாம் வெளிப்புறச் சுவர்களில்தான்!

உயரமேடைமேல் கோவில். கோவில் இருக்கும் மேடைதான் ரதத்தின் கீழ்ப்பகுதி.  கீழே சுத்தி வரப் பார்த்துக்கிட்டே போறோம்.  விரிஞ்ச கண்கள் இன்னும் அகலமா விரிஞ்சுக்கிட்டே போகுதே தவிர இமைக்க மறந்து போயிருது!
  சீக்கிரம் பார்த்துட்டு இடத்தைக் காலி பண்ணுங்க... தினம் இதே சல்யம்.....என்றார் ஆஞ்சி !

கீழ்தளத்தில் சக்ரங்கள் ஒவ்வொன்னும் ஒன்பதேமுக்கால் அடி விட்டத்தில்! நுணுக்கமான சிற்ப வேலைகள் நிறைஞ்சுருக்கு!


பாலியல் சிற்பங்களுக்குக் கணக்குவழக்கில்லை..... சிற்பிகளின் 'செக்ஸ் அறிவு'  இப்படித்தான் இருந்துருக்கு..... ப்ச்...

தொல்லியல் துறையின் பராமரிப்பில் தோட்டம் அருமை !
யானை மேடை, குதிரை மேடைன்னு அட்டகாசம் எல்லாமே!

சூரியனின் மனைவிகள் உஷா, சாயா தேவிகளுக்கும் சந்நிதிகள் இருந்துருக்கு. இப்ப இல்லை......


அருணனோ?  இல்லையாம்....  கோவிலின் மூணு பக்கங்களிலும் இப்படி பெரிய சைஸில் இருப்பவன் சூரியனே. காலையில் ப்ரம்மனாகவும், மட்ட மத்யானத்திலே சிவனாகவும், சாயங்காலம் விஷ்ணுவாகவும் இருக்கானாம்.
கோவிலைச் சுத்தி ஏகப்பட்ட ( Scaffolding)சாரம் கட்டி விட்டுருக்காங்க. பழுது பார்க்கறதுக்கா இல்லை ஏற்கெனவே பழுதாகிக்கிடக்கும் கட்டடம் மேலும் இடிஞ்சு விழாமல் தாங்கிப் பிடிக்கறதுக்கான்னு தெரியலை.

கோவிலின்  உச்சியில் ஒரு  அம்பத்திரெண்டு டன் கனமுள்ள காந்தக் கல் வச்சுருந்தாங்கன்னும், அதை போர்த்துக்கீஸியர்  பெயர்த்தெடுத்ததால் சப்போர்ட் இல்லாமல் கோவில் இடிஞ்சு போச்சுன்னும் சொல்றாங்க.  கலிங்க நாட்டுக் கட்டடக்கலையின்படி, உயரமான ரேகா/விமானம் கூட இருந்துருந்து, அப்புறம் அழிஞ்சு போச்சுன்னு....

 ஸ்கஃப்போல்டிங் அடைச்சுப் போட்டுருப்பதால் கோவிலின் பின்பகுதி (ரேகா இருக்கவேண்டிய இடம்)படங்கள் தெளிவா இல்லை.

கலிங்கநாட்டு மன்னர் நரசிம்ஹதேவா காலத்தில் கட்டுன இந்தக் கோவிலை, முழுசும் கட்டிமுடிக்க பனிரெண்டு வருஷங்கள் ஆச்சாம்.
 ஸ்ரவணன்?

அப்பப் பார்த்து ஊரில் இருந்து மச்சினர் மனைவி  செல்லில் கூப்புட்டாங்க, எப்போ சென்னைக்குத் திரும்பறோமுன்னு கேட்க.  சென்னையில் ஒரு பெருந்தலை சாமிகிட்டே  போயிட்டதாகவும், மறுநாள் நாம் திரும்பறோமுன்னா....  சென்னையில் கொஞ்சம்  களேபரம் இருக்கலாமுன்னும்........ 

  அடடா....    அதீத துக்கமுன்னா அடுத்தவங்களை இம்சை செஞ்சாத்தானேத்  தீரும்..... அமைதியா இருந்தால் அது துக்கத்துலே சேர்த்தி இல்லை பாருங்க...  பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியே ஆகணுமே.....   'இல்லை. நாளைக்கும் பூரியில்தான்'னு சொன்னதும்  தங்கைக்கு மன சமாதானம் ஆச்சு !

சுமார் ஒன்னரை மணி நேரம் சுத்திப் பார்த்துட்டுக் கிளம்பிட்டோம்.  வாரக்கணக்கில் தங்கி பார்த்து ரசிக்க வேண்டிய சமாச்சாரம்  இது....
கடைகளில் என்னென்னவோ நினைவுப்பொருட்கள் கொட்டிக்கிடக்குன்னாலும் நாம் ஒரு சின்ன   பலராம், சுபத்ரா, ஜகந்நாத் சிற்பம் (!) பொம்மை வாங்கிக்கிட்டு, அப்படியே ஒரு கடையில் இளநீர் ஒன்னு குடிச்சுட்டுக் கிளம்பறோம்.

திரும்பிப் போற வழியில் ..........

தொடரும்........ :-)

PINகுறிப்பு:  ஒரு அறுநூறு படங்கள் எடுத்துருக்கோம்.  ஒருநாள் ஆல்பம் ஒன்னு போடவா? 



9 comments:

said...

ஸ்ரீராம் அவர்களின் பின்னூட்டம் என்னமோ பப்ளிஷ் ஆகலை.... இதோ காப்பி & பேஸ்ட்.

ஸ்ரீராம். has left a new comment on your post "சூரியன்தான் கண்கண்ட தெய்வம்.... !!!!(பயணத்தொடர்,...":

அழகிய இடங்கள்... அழகிய படங்கள்...(அம்மாடி... எவ்ளோ படங்கள்... வழக்கம்போல!)


அச்சச்சோ...... அதுபாட்டுக்கு எழுதிக்கிட்டே போய் படங்களையும் சேர்த்துக்கிச்சே....... பொல்லாத சூரியன் :-)

said...

படங்கள் அட்டஹாசம். மிக நல்ல பதிவு. மீண்டும் வந்து படங்களைப் பெரிது பண்ணிப் பார்க்கணும்.

இரண்டு பதிவுகளாகப் போட்டிருக்கலாம்.

சந்தியாவந்தனம் பண்ணும்போது காலையில் ஹம்ச வாகனத்தில் காயத்ரியாகவும், மதியம் ரிஷப வாகனத்தில் சிவனாகவும் மாலை கருட வாகனத்தில் விஷ்ணுவாகவும் தியானித்து காயத்ரீ மந்திரம் சொல்வது நினைவுக்கு வந்தது.

said...

சூரிய கோவில் மிக அழகு. அவன் கர்மயோகி என்பதால் கோவிலும் அழகாக அமைந்ததுவோ என நினைக்கத் தோன்றுகிறது.

சிற்பங்கள் சொல்லவார்தை இல்லை.சக்கரங்களும் அதற்கு நிகரே.

said...

அருமை நன்றி

said...

சக்ரங்கள் ஒவ்வொன்னும் ஒன்பதேமுக்கால் அடி விட்டத்தில்...ஆஹா



படங்கள் எல்லாம் அட்டகாசம் ..எத்தனை கலை நுணுக்கமான வேலைகள் ...பிரமாண்டம்..

குட்டி வெள்ளை சிலைகள் ரொம்ப அழகு மா

said...

வாங்க நெல்லைத்தமிழன்.

எங்கே பாகம் பிரிக்கணுமுன்னு முழிச்சதால் ஒரே பதிவாப் போடவேண்டியதாப் போயிருச்சு!

said...

வாங்க மாதேவி.

கர்மயோகி.... சத்தியமான வார்த்தை ! அவன் மட்டும் சுணங்கினால் அவ்ளோதான்.....

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க அனுப்ரேம்,

ரொம்ப அழகான கோவில்ப்பா. காலத்தில் கொஞ்சம் சிதைவு. மனிதனால் முக்கால் சிதைவு...ப்ச்.....