Wednesday, April 06, 2005

இளமையும் முதுமையும்!!!

ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் தொடர்ச்சி. பாகம் 7.

"பாட்டிக்கு இங்கிலீஷ் தெரியாது. அதுவும் உன் கிவி ஆக்ஸென்ட் சுத்தமாப் புரியாது. அதனாலே அவுங்க
ஏதானும் கேட்டா, நீ தமிழிலே பதில் சொல்லணும். சரியா?"

" ஐ வில் ட்ரை"வழக்கமா வெளிநாடுகளில் இருக்கற முக்காவாசிக் குடும்பங்களிலே இந்த கதிதான்! எங்க வீட்டிலும் டிட்டோ!!
நான் லோலோன்னு தமிழிலே கத்திக்கிட்டு இருப்பேன். பதிலுங்க மட்டும் இங்கிலீஷ்லே வரும். காலப் போக்கிலே
இது ரொம்பவே பழகிட்டதாலே வித்தியாசமாவே உணரலை நாங்க! இதையும் நான் கண்டுபிடிச்சது இன்னொருத்தர்
சுட்டிக் காமிச்ச பிறகுதான்.

மறைந்த எழுத்தாளர் மணியன் அவர்கள் நியூஸிலாந்து பயணக்கதைக்காக இங்கே வந்திருந்தபோது நம்ம வீட்டுலே
தங்கியிருந்தார்.( அப்பப்ப சமயம் கிடைக்கறப்ப பெருமையாச் சொல்லிக்கறதுதான்!எழுத்தாளர்களோட தொடர்பு அப்பவே இருந்துச்சுன்னு!) அவரை இங்கே சில இடங்களுக்கு
நான் கொண்டு போனேன். மகளுக்கு அப்ப அஞ்சு வயசுதான். இங்கே 16 வயசுக்குட்பட்டக் குழந்தைகளைத்
தனியாக வீட்டில் விட்டுட்டுப் போகக்கூடாது. பேபி சிட்டர் வைக்கணும். அதுக்குச் செலவழிக்க மாட்டாமதான்
நான் எங்கே போனாலும் மகளையும் கூடக் கொண்டு போவேன். (மேலும் குழந்தையைக் கவனிக்கணும் என்ற
ஒரே காரணத்துக்காக வெளிவேலைக்குப் போக மறுத்தவ நானு!) அப்பத்தான் ஒரு நாளு மணியன் கேட்டார்,
'நீங்க தமிழிலேயே பேசறீங்க. உங்க பொண்ணு இங்கிலீஷ்லேயே பதில் சொல்றாளே'ன்னு. அட! அப்பத்தான்
உறைக்குது என்ன நடக்குதுன்னு! குறைந்த பட்சம் நாம பேசறது புரியுதேன்னு மனசைச் சமாதானப் படுத்திக்கிட்டது
வேற விஷயம்!!!

தாத்தா, பாட்டிக்கு நாலுவருசத்துக்கு முன்னே 'சதாபிஷேகம்' நடந்தது. பத்திரிக்கை அனுப்பியிருந்தும், சில காரணத்தாலே
போகமுடியலை! அதுக்கு அப்புறமும் சிலமுறை சிங்கை போனப்பவும் அவுங்களைச் சந்திக்கற சந்தர்ப்பம் அமையலை.
இந்த முறை பழைய நட்புகளைப் புதுப்பிக்கறதும் நம்ம ஹாலிடே அஜண்டாவுலே இருந்துச்சு! அவுங்க, ஊருலெ இருக்கணுமேன்னு
வேண்டிக்கிட்டு ஃபோனைப் போட்டேன்.'அம்மா' இருக்காங்களான்னு கேட்டதும், நீங்க யாருன்னு கேட்டாங்க ஃபோனை
எடுத்தவங்க. நான் துளசின்னு சொன்ன மறுவினாடியே, அம்மா லைன்லே வந்துட்டாங்க.' ஏம்மா துளசி.நியூஸிலாந்திலேருந்து
எப்பம்மா வந்தே? வேணுகோபால் வந்திருக்காரா? அலமு எப்படி இருக்கா?'ன்னு மடமடன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க!
என் மகளொட ஜாதகப் பேரு அலர்மேல் மங்கை. அதைத்தான் சுருக்கி அலமுன்னு கூப்பிடுவாங்க அவுங்க!!

'நீங்க இப்ப வீட்டுலே ஃப்ரீயா இருந்தா வரேன்'னு சொன்னேன். அதென்ன, அம்மா வீட்டுக்கு வர்றதுக்கு
ஃப்ரீயான்னு கேக்கறே'ன்னு பிடிச்சுட்டாங்க ஒரு பிடி! இது,இது, இதுதான் எனக்கு அவுங்ககிட்டே பிடிச்சது. எனக்கு
ஒரு தாய் போல இருக்கறது. அந்த மாறாத அன்பு!

வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். எதிர்பார்த்துக்கிட்டே வெளியே நிக்கறாரு ஐயா! அம்மா, ஒரு 'பாய்'லே உக்கார்ந்துக்
கிட்டு இருக்காங்க. எங்களைப்பார்த்ததும், முகத்திலே அப்படி ஒரு சிரிப்பு! சிலதைத்தவிர பல்லெல்லாம் கொட்டியிருக்கு!
இப்பெல்லாம் எழுந்து நடமாடவே முடியறதில்லையாம். வீட்டு வேலைக்கு ஒரு பொண்ணை ஊருலேயிருந்து
கொண்டு வந்திருக்காக. இடுப்பு எலும்பு ஒரேடியாத் தேய்ஞ்சு போச்சாம். ஆபரேஷன் பண்ணிக்க வேண்டிய
வயசுலே, அதைச் செஞ்சுக்காம தள்ளிப் போட்டதுக்கு இதுதான் பலன்! இப்ப ரொம்பவே வயசாச்சு. இனிமே
ஒண்ணும் செய்யமுடியாதுன்னு ஆகிருச்சு நிலமை!

ஐயா, எம்பத்திநாலு வயசுக்குப் பரவாயில்லே. தளர்ந்துட்டாரு. ஆனாலும் நடக்கக் கொள்ள கஷ்டம் இல்லை!
அம்மாதான் பாவம்! எப்படி இருந்த உடம்பு! எவ்வளவு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வாங்க.ஓய்வுன்னு
உக்காந்து நான் பார்த்ததில்லை! ஒருநாளைக்கு நூறுதடவை மாடியேறின காலுங்க இப்ப உக்காந்த இடத்துலே!
முதுமையை நினைச்சு மனசுக்குள்ளே அப்பப்ப வந்து போற பயம் இப்பவும் வந்துச்சு! கொஞ்சம் ஸ்ட்ராங்கா!

கணீரென்ற குரல் மட்டும் அப்படியே இருக்கு! இப்பெல்லாம் கோயில் குளமுன்னு போறதும் நின்னுருச்சாம். போன
முறை, கோயிலிலே நம்ம கணேசன் பார்த்துட்டுச் சொன்னாராம், நான் வந்து போனேன்னு! 'என்னடா, அம்மாவுக்கு
ஒரு ஃபோன்கூடப் போடலையெ'ன்னு நினைச்சுக்கிட்டாங்களாம். எனக்கே என் செய்கையை நினைச்சு வெக்கமாயிருச்சு!
மனுஷ வாழ்க்கையிலே அன்பா நாலு வார்த்தை பேசறது எவ்வளவு எளிமையான காரியம்! காசா, பணமா?

அப்பத்தான் சொன்னேன், அவுங்க ஃபோன் நம்பர் மாறுனதை நான் எழுதிவச்சுக்க தவறிட்டேன்னு. இப்பவும்,
நேத்து கணேசன் வீட்டுக்கு விசிட் செஞ்சப்பத்தான் இவுங்க நம்பரைக் கேட்டு எழுதிக்கிட்டு வந்தேன்னு! அம்மாவுக்கு
அதைக் கேட்டதும் திருப்தியா இருந்துச்சுன்னு சொல்லுச்சு அவுங்க முகம்!!!!

கணேசனுக்குப் பையன் பிறந்திருக்கறது தெரியுமான்னு கேட்டாங்க.இமெயில் வந்த விவரம் சொன்னேன். இப்ப
ஆறுவாரம் ஆச்சு பையனுக்கு. நேத்துப் போய்ப் பார்த்தேன். அச்சு அசலா அவன் அப்பா மாதிரியே இருக்கான்.
எப்படியோ, ஒவ்வொருமுறை இங்கே வர்றப்பையும் கணேசனைத் தவறாமப் பார்க்கறதுக்கு அமைஞ்சிருது'ன்னும்
சொன்னேன்.

நாங்க இருந்த கொஞ்ச நேரத்துலே வீட்டுக்கு உதவியா இருந்த லட்சுமியை உக்காந்த இடத்துலே இருந்தே ஓடஓட
விரட்டிக்கிட்டு இருந்தாங்க!!!! மரத்துலே இருந்து நெல்லிக்காயைப் பறிச்சுக்கிட்டு வந்து அலமுக்குத் தா!
தோட்டத்துலே இருந்து பூவெல்லாம் பறிச்சுச் சீக்கிரமாத் தொடுத்து துளசிக்குக் கொடு, திங்கறதுக்கு பக்கோடா போடுன்னு
ஏகப்பட்ட விரட்டல்!!!

நான் சொன்னேன், 'அம்மா, எனக்கும் வயசாகிகிட்டு வரலையா? இப்பெல்லாம் எண்ணெய்ப் பண்டம் ரொம்ப(!)
சாப்பிடறது இல்லே. வெறும் டீ மட்டும் போதும்'னு. அதுக்குள்ளே அப்பம், முறுக்கு எல்லாம் தட்டுலே வந்துருச்சு!
மககிட்டே கேட்ட கேள்விக்கெல்லாம், தமிழிலேயே அழகாப் பதில் சொல்லிக்கிட்டு இருந்ததை, நான் கவனிக்காத
மாதிரி கவனிச்சுக்கிட்டு இருந்தேன். எனக்கு ரொம்ப மனசுக்குச் சந்தோஷமா இருந்துச்சு!

சதாபிஷேக ஃபோட்டோக்கள் இருக்கற ஆல்பத்தைக் கொண்டுவந்து கொடுக்கச் சொன்னாங்க! மகளும் என்கூடச்
சேர்ந்து எல்லாப் படங்களையும் பொறுமையாப் பார்த்தா. அவுங்க பேத்தி கட்டிக்கிட்டு இருக்கற நீலக் கலர் புடவை
மாதிரி தனக்கும் இருக்கறதைச் சொன்னா.'நீயும் என் பேத்திதானே! அதான் உனக்கும் அதேமாதிரி புடவை
அமைஞ்சிருக்கு'ன்னு அம்மா சொன்னாங்க!

சந்தடி சாக்குலே நானும், மககிட்டே இந்த 'சதாபிஷேகம், அறுபதாங்கல்யாணம்'இதைப் பத்தியெல்லாம் சொல்லி,
இதை நடத்தறது புள்ளைங்களொட பொறுப்பு. நம்ம வீட்டுலே ஆணாயும் பொண்ணாயும் இவ மட்டுமே இருக்கறதாலே
இதை நடத்தறது இவ பொறுப்புத்தானு நைஸாச் சொல்லிவச்சேன்! பாட்டியும் அதை ஆமோதிச்சுச் சொன்னாங்க.

அறுவதுக்கு இன்னும் காலம் இருக்கேம்மான்னு அம்மா சொன்னப்ப, நான்'அறுவது வரைக்கும் இருப்போமான்னு
தெரியலைமா. அதுக்குப் பொறுமையும் இல்லை. அதாலே அம்பத்துநாலு செஞ்சுக்கிட்டா என்னன்னு யோசனையா
இருக்கு'ன்னு சொல்லி அர்த்தத்தோட மகளைப் பார்த்தேன்.-)))))

பாட்டிக்கு ஞாபக சக்தி அபாரம்!!!! சதாபிஷேக ஃபோட்டொண்ணு எனக்கு அனுப்பியிருந்தாங்கல்லே அது எதுன்னு
கூடச் சரியாச் சொன்னாங்க!!! பழங்கதைகளைப் பேசிக்கிட்டு இருந்ததுலே நேரம் போனதே தெரியலை. மகளும்
தாத்தா, பாட்டியோட பேச்சுலே கலந்துக்கிட்டா. தாத்தாகிட்டே மட்டும் இங்கிலீஷூ!!!!

ராத்திரிக்குச் சப்பாத்திப் போடச் சொல்றென். சாப்பிட்டுட்டுத்தான் போகணுமுன்னு சொன்னப்ப, (பாவம் லட்சுமி.
வேலைச் சுமையை அதிகரிக்கக்கூடாதுன்னு) இப்ப அவுங்களையெல்லாம் பார்த்துப் பேசுனதிலேயே மனசு நிறைஞ்சுடுச்சு.
பசியே இல்லை. அடுத்தமுறை சாப்பிடறேன்னு சொல்லி, அவுங்க கிட்டே ஆசீர்வாதம் வாங்கிகிட்டுக் கிளம்புனோம்.
நான் சொல்லாமலேயே, தாத்தா பாட்டி காலுலே விழுந்து மகள் ஆசீர்வாதம் வாங்குனதுலே எனக்கு மனசும், கண்ணும்
நிறைஞ்சுடுச்சு! ( சபாஷ்! மகளை சரியாத்தான் வளர்த்திருக்கே!'ன்னு என் மனசு குதிக்குது!!!)

கிளம்பினப்ப, அடுத்தமுறை பார்க்க முடியுமோன்னு கலக்கமா இருந்துச்சு. ஆண்டவன் போட்ட கணக்கு யாருக்குத்
தெரியும்? அதுவரை, உடம்பை ரொம்பப் படுத்தாம இருக்கணுமுன்னு கடவுளை மனசுக்குள்ளே வேண்டிக்கிட்டேன்.

திரும்பி செரங்கூன் ரோடு வந்து, ராச்சாப்பாட்டுக்கு, 'ஆனந்தபவன்' போனோம். மகள் மட்டும் பானிப்பூரி,
ரோஸ்மில்க், பரோட்டான்னு சாப்பிட்டா. நானு, அங்கெ கல்லாவுல இருந்தவுங்க பேச்சைக்கேட்டு அன்றைய
ஸ்பெஷலான 'மஹாராஜா மசாலா'வை கொண்டுவரச் சொன்னேன். 'யக்... நல்லாவே இல்லை! மகளுக்கு
இருக்கற புத்திச்சாலித்தனம் தாய்க்கு இல்லையேன்னு ஒரு பெருமிதத்தோட உண்மையை ஒத்துக்கிட்டு
( மனசுக்குள்ளேதான்)வெளியே வந்து ஒரு இளநியைக் குடிச்சுக்கிட்டே தங்கற இடத்துக்கு வந்து சேர்ந்தோம்.


4 comments:

Anonymous said...

இன்னும் உங்களோட பூர்வீகம், பிறப்பு, வளர்ப்பு, வசிப்பு-ன்னு ஒண்ணும் புரியல (அல்லது மேலும் குழப்பம்). ஒவ்வொரு பதிவு படிக்கும்போதும், எதாவது ஒரு தகவல் புதுசா இருக்கு:) அதனால திரும்பவும் நேரம் கிடைக்கிறப்ப துளசிதளத்தை துறுவிப் பார்த்துட்டு அப்புறம் கேக்குறேன், எதாவது சந்தேகம்னா...

நெஜமாலுமாவா!? உங்க மங்கை வாயில்லருந்து தமிழ் வார்த்தை வருமா!? அன்னிக்கு மருந்துக்கு கூட (தமிழ்)வாய் திறக்கலியே? அதனால்தான் நம்ப அரை குறை ஆங்கிலம் உதவாதுன்னு அவ்ங்க இருந்தபக்கமே நான் நகரலை:)

பரவாயில்லை... நீங்க வேடிக்கையா சொன்னாக்கூட இப்படி ஒரு தமிழ்பெண்ணாய், குறைந்தபட்சம் பாரம்பரியம் தெரிந்து வளர்ப்பது இந்தக்காலத்தில் மிகவும் கடினம், பலர் செய்வதில்லை. அந்த விதத்தில் உங்களைப்பாராட்டதான் வேண்டும். வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

said...

ரொம்ப நல்லா இருந்தது இந்த பதிவு. பெரியவங்களுக்கு மதிப்பு குடுக்கறது நம்ம பண்பாடோட ஒரு தனித்தன்மைன்னே சொல்லலாம். வெளிநாட்டிலிருந்தாலும் அதை பாதுகாத்து பேணி வருவது பாராட்டப்பட வேண்டிய ஒரு குணம்தான். பெருமைக்குரியவர்கள்தான் நீங்களும் உங்கள் பெண்ணும்.

said...

உங்கள் பயண அனுபவங்கள் அழகிய தொடராகிறது. உங்கள் ஜோகூர் அனுபவங்களை ரசித்துப் படித்தேன்

said...

சாரி(யா சோரியா) எதுவோ...
அந்த அனாமதேய பின்னூட்டம் என்னோடததுதான்...

என்றென்றும் அன்புடன்,
அன்பு