Friday, April 15, 2005

உள்ளக் கடத்தல்( சினிமா விமரிசனம்?)

இந்தப் பேருலே ஒரு படம் வந்திருக்குன்னு நான் சொன்னா நீங்க நம்புவீங்கதானே?

வழக்கமா படங்களொட விமரிசனமும், முன்னோட்டம், பின்னோட்டம் எல்லாம்
சினிமா நியூஸ் கொடுக்கற பல தளங்களிலே வந்துருதுதான்.எனக்கு என்னமோ
அந்த விமரிசனக்களை, அதுவும் வணிக/வெகுஜனப்பத்திரிக்கைகளிலே வர்றதைப்
படிக்கவே தோணாது! ஒண்ணும் இல்லாத படங்களை ஒரேடியாத் தூக்கறதும்,
ஒண்ணுக்கும் லாயக்கில்லாததையெல்லாம் தலைமேல தூக்கி வச்சுக்கிட்டும் ஆடறதைப்
பார்த்தா, இந்த விமரிசனங்களை எழுதறவங்களைப் பத்தி ஒருவிதமான சந்தேகம்கூட
வருது!!!! என்னமோ நடக்குது, இதுக்குள்ளே புகுந்து பார்த்தாத்தான் தெரியும்!



அது போகட்டும். சினிமா என்றது பலபேரோட உழைப்பு. எந்தப் படத்திலையும் ஏதாவது
நல்லது, பாட்டோ, லொகேஷனோ, கதையோ, நடிப்போ, டான்ஸோ, இன்னும் எதுவோ ஒண்ணு
இருக்கத்தானே செய்யும்? சில பத்திரிக்கைகள் தான் படத்தோட வெற்றிக்கும் காரணமாயிடுது.
இது உங்களுக்கேத் தெரியும். நான் சொல்ல வந்தது என்னன்னா, ஏப்பையோ, சாப்பையோ,
குப்பையோ எந்தமாதிரி படமுன்னாலும், இந்த பேருலே ஒரு படம் வந்திருக்குன்னு
ஜனங்களுக்குச் சொல்லலாம்தானே!

இப்ப வந்திருக்கறது இந்த 'உள்ளக் கடத்தல்'

படத்துக்குப் பேரு வைக்கறதிலே கொஞ்சம் கவனம் காட்டியிருந்தால் நல்லா இருந்திருக்கும்.
இதுலே நடிச்சவங்க, குட்டி ராதிகா, யுகேந்திரன், விக்னேஷ் இன்னும் பலர்!

கதை என்னவோ காதலுக்கு எதிரியான பெற்றோர்களையும், அண்ணனையும் பற்றித்தான்!

கதாநாயகன் ஒரு அனாதை( வசதியாப் போச்சு!)

கதாநாயகிக்குக் குடும்பம் இருக்கு,. அப்பா, அம்மா, அண்ணன், அண்ணின்னு... கூடவே ஒரு உயிர்த்தோழியும்
இருக்காங்க.

முதலில் கதாநாயகி, தன் குடும்பத்தார் மேலே இருக்கற பாசத்தாலே, அவுங்க பார்த்துவைக்கற கழுதை, குதிரை
எதுவானாலும் கல்யாணம் பண்ணிக்கத் தயார்னு சொல்லிடறாங்க. அப்பாவும் அண்ணனும் மாப்பிள்ளையை முடிவு
செஞ்சிடறாங்க. இதுக்கு நடுவுலே கதாநாயகன் என்ட்ரியும், காதலும் வந்துடுது. காதலனா, குடும்பமான்னு பரிதவிப்பு.
அப்படியும் தன் காதலைக் குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தறாங்க. தவறான தகவலாலே, நாயகன் கெட்டவன்னு
நினைச்சுக்கறாங்க அப்பா & அண்ணன். கொஞ்சம் விசாரிச்சுப் பார்க்க வேணாமோ? இல்லை...

அப்பா சொல்றார், அந்தப் பையனைக் கல்யாணம் கட்டிக்கிட்டாச் செத்துப் போயிடுவேன்னு! அதுவும் அப்பாவியா
முழிக்கற அம்மாவையும் இவரே சேர்த்துச் சொல்லிக்கறார்! நானும் அம்மாவும் செத்துருவோம்!!!! அடப்பாவமே!!
அதே மாதிரி செத்தும் போயிடறார். இப்ப அண்ணன் தானும் செத்துருவேன்( இதுக்குள்ளேதான் கல்யாணம் ஆகி,
முதலிரவும் நடந்து, கதாநாயகி கர்ப்பம் ஆயிட்டாங்களே!!!)ன்னு சொல்லி தங்கையும், புருஷனையும் பிரிச்சு வைச்சு
சதி பண்றார்.

இந்தப் படத்துலே புத்திசாலித்தனமா நடக்கறது அண்ணிதான். நல்லா செஞ்சிருக்காங்க.அவுங்க பேருதான் தெரியலை!
அப்புறம் எப்படி நாயகனும், நாயகியும் ஒண்ணு சேர்றதுன்றதுதான் கதை.. அப்புறம் சுபம்!!!!

நடிக்கறதுன்னா என்னன்னு இப்ப எனக்கு சந்தேகம். நாயகன் சாதாரண மனுஷனா, நல்லவனா இருந்தா எப்படி
இருக்கும்? வீர சாகசம் காட்டுனாதான் நடிப்பா? நாம வாழ்க்கையிலே சந்திக்கற ஒருத்தராட்டம் இயல்பா இருந்தா
நடிக்கத்தெரியலைன்னு சொல்லிடுவாங்களோ? ஒரே கன்ஃப்யூஷன்!

இசை பரத்வாஜ். நாயகனும், நாயகியும் அவுங்களே வாயசைக்காம, பின்னணியிலே பாட்டு வருது. நாயகி சோக
கீதம் பாடாம, அதுவும் பின்னணியிலே பாட்டா வருது. இது நல்லாத்தானே இருக்கு ? பாட்டும் பரவாயில்லை!

கூட்டமான கோஷ்டி நடனம் வைக்கச் சான்ஸ் இருந்தும்( அதான் நாயகி காலேஜ்லே படிக்குதே!)வைக்கலே.
அப்பாடான்னு இருந்துச்சு!

நாயகனோட ஃப்ரெண்ட்ஸ் எதார்த்தமா இருக்காங்க. சொல்ல மறந்துட்டேனே, தோழியும் பரவாயில்லை!!!

அவ்ளொதான்... கிடைச்சா ஒருக்காப் பாருங்க.

எல்லாரும் சந்திரமுகி, மும்பை எக்ஸ்ப்ரெஸ்ன்னு இருக்கப்ப நான் இப்படி:-))))))


7 comments:

said...

துளசியக்கா,
இந்தப்படம் புதுப்படமா என்ன? படப்பேர் கேள்விப்பட்ட மாதிரி இருக்குது :-).

said...

எங்கேயோ படித்த நினைவு. 'உள்ளக் கடத்தல்' என தூய தமிழில் பெயர் வைத்தமைக்காக திருமாவளவன் பாராட்டுத் தெரிவித்தாராம். கதையைக் கேட்டிருந்தால், எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள் என துண்டைக் கானோம், துணியைக் கானோம் என ஓடியிருப்பார்.

>>அவ்ளொதான்... கிடைச்சா ஒருக்காப் பாருங்க.


ஏங்க...எத்தனை நாளா கோபம் எங்க மேல :)

said...

முத்து தம்பி,

புதுப்படம்தான்!

ராஜ் சந்திரா,

'நான் பெற்ற இன்பம் பெறுக...'
என்ற நல்ல எண்ணம்தான் :-))))

என்றும் அன்புடன்,
துளசி

said...

நாங்கள் எல்லாம் சந்திரமுகி,மும்பை எக்ஸ்பிரஸ்ன்னு பார்த்து சுபிட்சமா இருக்கோம். ஆனா நீங்க??? சே... உங்களை நினைச்சா தான் பாவமா இருக்கு :-)))

said...

இப்ப வந்திருக்கறது இந்த 'உள்ளக் கடத்தல்'

படத்துக்குப் பேரு வைக்கறதிலே கொஞ்சம் கவனம் காட்டியிருந்தால் நல்லா இருந்திருக்கும்.


இன்னா நியுஜில இருக்கிறதால என்னவேணா பேசலாம்னு நெனப்பா அல்லது மருத்துவரே விட்டுட்டாரு இனிமே என்னான்னு தெகிறியமா:)

உள்ளக்கடத்தல் - அருமையான தமிழ். அந்தப்படம் பார்க்கவில்லை (தமிழ் தலைப்புன்றதுக்காக பாத்துடுவோமா என்ன?) ஆனால், கதாநாயகர் யுகேந்திரன் எங்க ஊரு மாப்பிள்ளை என்பது மேல்தகவல் (சிங்கையின் முன்னால் வானொலி/தொலைக்காட்சிப் படைப்பாளர் ஹேமமாலினியைக் கட்டிக்கொண்டு, பிள்ளை குட்டியுடன் வளமாக இருக்கிறார்). மலேசியா வாசுதேவன் அவர்கள் மகன் யுகேந்திரன், இதுவரை வில்லனாகவே நடித்துவந்தவர் முதன்முதல் கதாநாயனாக மாறிய படம்.

said...

அட சொல்லுறவன் சொல்லுவான். நிங்கள் தோடர்ந்து இப்பிடி எழுதுங்கோ. புகழேந்தி தான் இயக்குநர். காற்றுக்கென்ன வேலி இயக்கியவர். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் கணனியில் சேமிச்சு வச்சிருக்கிறன். கட்டாயம் பாப்பன். சந்திரமுகியெல்லாம் பாக்கவே தேவயில்;ல. என்னென்ன எப்பிடியெப்பிடியெல்லாம் வரும் எண்டு அனுமானிக்க மூளையில சிறிதளவு கூட பாவிக்கத் தேவயில்ல. எல்லாம் தெரிஞ்சு கொண்டு காசு குடுத்துப் பாக்கிறத விட பேசாமல் இருக்கலாம் தானே. நான் உங்கட பக்கம்தான் துளசியக்கா. எழுதுங்கோ. அதோட கண்ணாடிப் பூக்களையும் பாருங்கோ. (நான் இப்பதான் பாத்து முடிச்சனான்.). இடைக்கிடை இ;ப்பிடி படம் வாறது கனபேருக்குத் தெரியாது.

said...

விஜய்,

கவலைப்படாதீங்க.. எங்களுக்கும் காலம் வரும்! அப்ப பாப்போம்!!
உண்மையைச் சொன்னா, இங்கெ எங்க ஊர்லே இந்தப் படம் போடறதுக்கு
எங்க டிஸ்ட்ரிப்யூட்டர் கேட்டாருதான். ஆனா, நான் முன்னேயே சொன்ன மாதிரி
தியேட்டர் வாடகை, படச் சுருளுக்குக் காசு, கூரியர் சார்ஜ்னு எல்லாம் நிறைய ஆகுது. இங்கே தமிழ்
ஆட்கள் அவ்வளவா இல்லாததாலே தலைக்கு 30 டாலர் வருது. அதுவும் எல்லா
ஆட்களும் படம் பார்க்க வந்தாத்தான்! இது நடக்கற காரியமா? அதுதான் வேணாமுன்னு
சொல்லிட்டேன்.

xyzw....

குட்டிராதிகா படம் எல்லாம் கிடையாது. நீங்களே தேடிப் பாத்துக்கணும்!

அன்பு,

உங்களுக்குத்தனி மடலிலே பதில் போட்டாச்சு!

வசந்தன்,

ரொம்ப தேங்ஸ் தம்பி.

ஹைய்யா, இப்ப என் கட்சிக்கு ஆளு இருக்கு!!!!

கண்ணாடிப் பூக்கள் வீட்டுலே இருக்குதான். ஆனா, நான் சிங்கப்பூர் போனப்ப,
கோபால் அதைப் பாத்துட்டாரு. அதனாலே இவர் அடுத்த வாரம் வெளியூர் போற நேரம்தான்
நான் அதைப் பார்ப்பேன்:-)))))

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி!!!!

என்றும் அன்புடன்,
துளசி.