Thursday, April 21, 2005

ரெடிமேட்!!!!! பகுதி 8

'வீனஸ் டெய்லர்ஸ்' அலங்கார லைட்டுங்க கலர் கலராப் போட்ட கடை வாசல்லே நிக்கறோம். நாங்களும், மாமியோட
புள்ளையும், பொண்ணுமா!

இது ஆம்பிளைகளுக்குத் துணி தைக்கற கடையாச்சே, இங்கே ஏன் போனோமுன்னு கேக்கறீங்களா?

எங்க இவருக்குத் துணி தைச்சுக்கறதுக்குத்தான்! துணி ஏதா? ஹஹ்ஹஹ்ஹா....

நான் பயத்தோட மாமி வீட்டுலே உக்காந்துக்கிட்டு இருந்தேன்னு சொன்னது ஞாபகம் இருக்கா? வழக்கம் போல
இவர் வேலையிலே இருந்து அங்கே வந்தார். எல்லாம் ஒரு முன்னேற்பாடுதான்!


நானும் மாமியும் புடவை சின்னதா(!) இருந்த விவரமா, துணிக்கடைக்குப் போனதையும், நியாயம்(!) கேட்டுட்டு
வர்றப்ப இன்னும் ரெண்டு புடவைங்க வாங்கினதையும் தெரிஞ்சிக்கிட்டவுடனே ஒரு ஆட்டம் ச்சின்னதா ஆடிட்டு,
(எனக்கு மட்டும் தெரியறமாதிரி!)புடவைங்களைத் திருப்பிக் கொடுக்கப்போறேன்னுட்டு, மாமியோட புள்ளை பாபுவோடு
அந்தக் கடைக்குப் போனார். என்னையும் கூப்பிட்டார். நான் வரலை, நீங்களே போய் குடுத்துடுங்கன்னு சொல்லிட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு ரெண்டு பேரும் ஆளுக்கொரு பையைத் தூக்கிக்கிட்டு வராங்க. ஒண்ணு, கொண்டு போன
புடவைப் பை. இன்னொண்ணு புதுசா இருக்கேன்னு பார்த்தா அதுலெ ரெண்டு ஷர்ட் பீஸும், ஒரு பேண்ட் பீஸும்
இருக்கு! என்னன்னு கேட்டா, நம்ம ரூப்மல் சேட், இவரைச் சமாதானப் படுத்திட்டு, இவர் தலையிலே கட்டிட்டாராம்
அந்தத் துணிங்களை!!!! அவசரமே இல்லை. உங்களுக்கு இஷ்டப்பட்டப்ப பணம் கொடுத்தாப் போதும். அதுவும்
கொஞ்சம் கொஞ்சமா! மாமியை ரொம்பநாளாத் தெரியும். அவுங்க கிட்டே வியாபாரம் நிறையப் பண்ணியிருக்கேன்.
அந்தப் பணம் எங்கேயும் ஓடாது, அது இதுன்னு பேசினவுடனே, இவரும் தனக்கு இன்னும் ரெண்டு செட் துணி இருந்தாத்
தேவலைன்னு வாங்கிகிட்டு வந்திருக்கார்!!!!

வீனஸ் டெய்லர்ஸ்லே மாஸ்டர் (ஆளுங்களுக்கு அளவெடுத்துத் துணிங்களை வெட்டிக் கொடுக்கறவர்.
தைக்கறதுக்கு வேற ஆளுங்க இருக்காங்களாம்) அசப்புலே பாக்கறதுக்கு நம்ம ஹிந்தி சினிமா வில்லன்
நடிகர் பிரான் போலவே இருந்தார். அங்கே தைச்சுக்கிட்டா ரொம்பவே கரெக்டா இருக்குமாம். வேலை
ரொம்ப சுத்தமாம். கூலியும் நியாமானதாம். நம்ம பாபு எப்பவுமே அங்கெதான் தைச்சுக்கறாராம்.

மாஸ்டர் இவருக்கு அளவெடுத்தார். அப்ப 'பெல் பாட்டம்'தான் ஃபேஷன்! 'சத்தம்' நல்லா கேக்கட்டுமுன்னு
கொஞ்சம் அதிகமாவே 'பெல்' வைக்கச் சொல்லியாச்சு!

இப்பெல்லாம் அடிக்கடி, மூணு நாலு மாசத்துக்கு ஒருக்கா புதுத்துணி கிடைக்குது! கடைக்கு பாக்கி கட்டப் போறப்ப
அப்படி இப்படின்னு ஒண்ணு ரெண்டு வாங்கிக்கறதுதான். ஆள் பாதி ஆடை பாதின்ற மாதிரி, ஒரு கெத்து வேணாமா?
'பிரான்' மாஸ்டர் நல்லா பழக்கம் ஆயிட்டார்.

ஆச்சு கிட்டத்தட்ட ஒரு வருசம். இப்ப நம்ம சேட்டனுக்கு மாற்றல் வந்துருச்சு! நாமும் இடம் மாறணுமே. இது ஒரு
பெரிய விஷயமா, மாறிட்டாப் போச்சு! எங்க இவருக்குத்தான் இப்படி இருக்கறது கொஞ்சம் கஷ்டமாப் போச்சு.
கம்பெனியிலே தெரிஞ்ச ஆளுங்ககிட்டேச் சொல்லி, 'விஷ்ராந்த்வாடி'ன்ற இடத்துலே ஒரு வீட்டை ஏற்பாடு செஞ்சுட்டார்.

வீட்டுச் சொந்தக்காரங்க பஞ்சாபிங்க. ஒரு பெரிய வீடு மூணு ரூம், ஹால், கிச்சன், ரெண்டு பாத் ரூம்னு
கட்டியிருக்காங்க. கட்டறப்பவே ஒரு ரூமை வாடகைக்கு விடற ப்ளான் தானாம்! ஒரு பெரிய ரூம், அதோடு
இணைஞ்ச பாத்ரூம். அந்த ரூமிலேயே இடதுபக்கம் ஒரு நீண்ட வால்போல இருக்கற இடம் சமையல் கட்டு!
வாடகையும் பரவாயில்லே. அதுக்கும் குறைஞ்சு எங்கெ கிடைக்கும்? அட்வான்ஸ் மட்டும் 10 மாசத்து வாடகை.

ஒருமாதிரி அட்ஜஸ்ட் செஞ்சு பணத்தைச் சேர்த்துட்டோம். ஜனவரி மாசம், பொங்கல் பண்டிகைக்குப் புது இடத்துக்குக்
குடி போயாச்சு! சக்கரைப் பொங்கல், வடை, பாயசம்னு சமைச்சு, புது ஓனருக்கும் விளம்பினோம். அவுங்களுக்கும்
சந்தோஷமா இருந்துச்சு!

ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே, நமக்குத் தனியா வாசல் இருந்தாலும் நம்ம பாத் ரூமுக்கு மட்டும் இன்னொரு
கதவு இருந்தது. அதைத்திறந்தா, வீட்டு ஓனரோட பகுதிக்குப் போயிரலாம். அதே மாதிரி அவுங்களும் வரமுடியுமே!
அதாலே அந்தக் கதவை நல்லா அழுத்திப் பூட்டி வச்சாச்சு.

ரெண்டே நாளுலே, அந்த வீட்டுப் பொண்ணு இந்தப் பக்கமா வந்து, 'நீங்க பாத் ரூம் கதவைப் பூட்டி வச்சுட்டீங்களா?
அதைத் திறந்து வச்சிருங்க. நீங்க பாத்ரூம் யூஸ் செய்யறப்ப பூட்டிட்டு, அப்புறம் திறந்து வச்சிரணும். எங்க அம்மாவுக்கு
அந்த டாய்லெட்தான் ( இந்தியன் டைப்) பழக்கம். எங்க பாத்ரூமுலே இருக்கறது வெஸ்டர்ன் டைப். அதனாலே
அவுங்களும் உங்க பாத் ரூமையே யூஸ் செய்வாங்க'ன்னு சொன்னாங்க. அட தேவுடா?

மொதல்லே தலையை ஆட்டி வச்சாலும், இது ஒரு மஹாத் தொந்திரவாப் போச்சு. திறக்க மறந்துட்டா, அந்தப் பக்கம்
இருந்து இடி இடின்னு இடிப்பாங்க. சிலப்ப நாம பாதிக் குளியலிலே இருக்கறப்பவும் கதவைத் தட்டுவாங்க. ஒரே
சல்லியம்!

நாங்க வந்து ரெண்டு வாரம்தான் ஆயிருக்கு. மூணாவது வாரத்துலே ஒரு நாள், வெளியே போயிட்டு வீட்டுக்குத்
திரும்பிவந்து, லைட்டைப் போடாம உடை மாத்திக்கிட்டு இருந்தேன். அந்த வீட்டுலே ஜன்னலுக்கு இன்னும் திரை
போடலை! அக்கம் பக்கத்து வீட்டு வெளிச்சம் மங்கலாத் தெரியும். அதுலேயே உடை மாத்திக்கறதுன்னு ஒரு
பழக்கம் வச்சுக்கிட்டு இருந்தோம். அப்ப ஒரு மூலையிலே என்னவோ நெளிநெளியாப் போறமாதிரி இருந்துச்சு!

இவர் வாசல்லே நின்னுக்கிட்டு இருந்தார். நான் துணி மாத்தினதும் குரல் கொடுத்தா, அந்தப் பக்கம் இருக்கற
லைட் சுவிட்சைப் போட்டுட்டு உள்ளே வருவார். நான் மெதுவா சொன்னேன், வாசல்லே போட்டு வச்சிருக்கற
துடைப்பக் கட்டையை தயாரா எடுத்து வையுங்கன்னு! ஏன் ஏன்னு கத்தறார்.அதுக்குள்ளே நான் ஒருமாதிரி
உடையைப் போட்டுக்கிட்டுப் பின்னாலேயே நகர்ந்து போய் அந்தத் துடைப்பக்கட்டையை வாங்கிக்கிட்டேன்.
இப்ப லைட்டைப் போடுங்கன்னு சொல்லிக்கிட்டே அந்த மூலையைப் பார்த்தேன். பாம்பு!!!!!!

கீழே தரை மொஸைக். அதனாலே வேகமாப் போக முடியாம நகர்ந்துக்கிட்டு இருக்கற பாம்பை அப்படியே அந்தக்
கட்டையாலே அழுத்திப் பிடிச்சுக்கிட்டே, வேற தடி இருந்தாக் கொண்டு வாங்கன்னு இப்ப நான் கத்துனேன்.
எங்க இவருக்குப் பாம்புன்னா ஒரே பயமாம்! தூரமா நின்னுக்கிட்டு, ஒரு கட்டையை என் கையிலே கொடுத்தார்.
மறுகையாலே அதை வாங்கிப் போட்டேன் ஒரு போடு. ஒரு அடியோட விட முடியுமா? போடு போடுன்னு போட்டு
அதை ஒரு வழியா 'மேலே' அனுப்பிட்டேன்.

அப்புறமாப் பார்த்தா அது கிட்டத்தட்ட நாலடி நீளம் இருக்கு.கறுப்பும், மஞ்சளுமா கட்டுக் கட்டா இருக்கு. பாம்பைக்
கொன்ன தோஷம் வந்துருமேன்னு இப்ப பயம் வந்துருச்சு!

அப்படியே அதை வெளியே கொண்டுவந்து தீ மூட்டி அதை எரிச்சுட்டுச் சாஸ்திரமா இருக்கட்டுமுன்னு கொஞ்சம்
பாலையும் அதும்மேலே ஊத்துனேன். இவ்வளவு களேபரத்துலே இவர் ஒரு பத்தடி தள்ளி நின்னு வேடிக்கைப்
பாக்கறார். அவர் என்னைப் பார்க்கற பார்வையிலே ஒரு மரியாதையும், கொஞ்சம் பயமும் கலந்திருந்த மாதிரி
இருந்துச்சு!

அன்னைக்குப் பொழுது எப்படியோ போயிருச்சேத் தவிர, இப்பெல்லாம் எம் மனசுக்குள்ளெ பயமா இருக்கு.
எப்பப் பார்த்தாலும், பாம்பு வந்துருச்சோ, பாம்பு வந்துருச்சோன்னு தரையைச் சுத்திச் சுத்திப் பாத்துக்கிட்டே
இருக்கேன். தூங்கறப்பவும் மனசுக்குள்ளே ஒரே பயம்! அன்னைக்கு அந்தப் பாம்பை எப்படி அவ்வளவு வீரமா
அடிச்சேன்றது இதுநாள் வரை எனக்கே விளங்காத மர்மம்! எப்பப் பார்த்தாலும் மனசு 'திக்திக்'ன்னு இருக்கே!
நம்ம கிட்டே கட்டில் கூடக் கிடையாது. தரையிலேதான் படுக்கை!

நேரா மாமி வீட்டுக்குப் போனோம். பாம்புக் கதையைச் சொன்னவுடனெ, மாமி புரிஞ்சுக்கிட்டாங்க. கவலையே
படாதே. ஆர்மி வீடே ஏற்பாடு செஞ்சுரலாம் கொஞ்ச நாளைக்கு அதுலே இருந்துட்டு வேற வீடு பார்க்கலாமுன்னு
தைரியம் கொடுத்தாங்க.

வீட்டு ஓனர் கிட்டே நாங்க காலி செய்யறோமுன்னு சொன்னோம். சரியா மூணு வாரம் ஆகியிருக்கு.
நாங்க ஏற்கெனவே சாமான்களையெல்லாம் டெம்பொவிலே ஏத்திட்டு, பேங்குலே காசு எடுக்கப் போன
ஓனருக்காகக் காத்துக்கிட்டு இருந்தோம்.அவுங்க 8 மாச வாடகையைத் திருப்பிக் கொடுத்தாங்க.

அதுக்குக் கணக்கும் சொன்னாங்க.அவுங்களுக்கு மாசம்ன்னா ஒண்ணாம்தேதி கணக்காம். நாம் 15ஆம் தேதி
வந்தாலும் அந்த மாசம் முப்பத்தி ஒண்ணு வந்தப்ப ஒரு மாசமாம். இப்ப தேதி 5தான். ஆனாலும் இது ஒரு
மாசமாம். அதனாலே ரெண்டு மாசம் போக பாக்கி தர்றாங்களாம்!

நான் திகைச்சுப் போய் நிக்கறேன். இவர் சட்டுன்னு அந்தக் காசை வாங்கிக்கிட்டு, சரி, சரி வா,நேரமாச்சுன்னு
சொல்லிக்கிட்டே நிறுத்தி வச்சிருக்கற ஆட்டோவிலே போய் ஏறிக்கிட்டார். நானும் குழம்பின மனசோடு போய்
ஏறிக்கிட்டேன்.

விட்டுட்டுப் போன இடத்துக்கு 21 நாளுலேயே திரும்பியாச்சு! எங்களுக்கு இப்ப வேற ஆர்மிக்காரர் வீடு. இவர்
ஒரு பெங்காலி! ஆனா அக்கம் பக்கம் நம்மை மாதிரி வாடகைக்கு இருக்கறவங்க அமோக வரவேற்பு கொடுத்தாங்க.
அவுங்களையெல்லாம் பிரிஞ்சு இப்பத்தானே 3 வாரம் ஆச்சு. அதுக்குள்ளேயா நம்மளை மறந்துருவாங்க?

இங்கேயும் ஒரு ச்சின்ன சிக்கல் இருக்கு! இந்த பெங்காலியும் இன்னும் மூணு மாசத்துலே வேற ஊருக்குப்
போறாராம். 'அது ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை.அப்ப ஒரு மாசத்துக்கு இங்கேயே இன்னொரு
இடத்துக்கு மாறிட்டுத் திரும்ப இங்கேயே வந்துரலாம். புதுசா வர்றவங்ககிட்டே சொல்லிடறேன்னு 'வாக்கு' கொடுத்தார்!'

என்னடா இப்படி ஆகிப்போச்சேன்னு வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த ஏரியா நமக்கு ஆகிவந்ததுதானேன்னு
ஒரு சமாதானம் இருந்துச்சு!

இதுக்கு நடுவிலே எங்க இவர் பழையபடி கம்பெனி ஆட்கள்கிட்டே புலம்புனதிலே வேற ஒரு இடம் கிடைக்கறதுபோல
இருந்துச்சு.

அந்த இடம் கொஞ்சம் தொலைவுதான். ஆனா சைக்கிள்லே போற தூரம்தான். 'ஹடப்ஸார் என்ற இடம். அங்கே
வீடு இருக்கு. நான் போய்ப் பார்த்தேன். சுவரு எல்லாம் அழுக்கா இருக்கு. அது பரவாயில்லை வெள்ளை அடிச்சுக்கலாம்.
நிரந்தரமா இருக்கற இடம் வேணும். எப்பவும் மாறிக்கிட்டே இருக்க முடியாது. இந்த ஞாயித்துக்கிழமை ஒரு ஆளை வச்சு அங்கே
சுத்தம் செய்துடலாம். அடுத்த வாரம் போயிடலாம்'னு சொன்னார்.

ஞாயித்துக்கிழமை வந்துச்சு. இவர் காலையிலே கிளம்பிப் போயிட்டார். சாயந்திரம் ஒரு அஞ்சுமணி போல திரும்பி
வந்தார். ஆளே அடையாளம் தெரியாம இருக்கார். தலையெல்லாம் ஒரே வெள்ளை. தலை என்ன தலை? முகம்
உடம்பு, கை, காலுன்னு எல்லாம் ஸ்ப்ரே செஞ்சது போல வெள்ளை! ஆட்டோவிலே திரும்பி வந்திருக்கார்.
அவர் கூடவே ஒரு பழைய இரும்புக் கட்டில்! அதும் மேலேயும் ஒரே டிஸ்டெம்பர் வர்ணம் தெளிச்சிருக்கு. முகம்
சுண்டிப் போயிருக்கு.

என்ன ஆச்சுன்னு எனக்கு ஒரே பதற்றமா இருக்கு!


இன்னும் வரும்.....


2 comments:

said...

//'சத்தம்' நல்லா கேக்கட்டுமுன்னு
கொஞ்சம் அதிகமாவே 'பெல்' வைக்கச் சொல்லியாச்சு!
//

அய்யோ துளசீஈஈஈஈஈஈ !

said...

உங்களுடைய பதிவுகளை அலுவலகத்தில் வைத்து வாசிக்கவே கூடாதுங்க!! மறந்து போய் சத்தமாய் சிரிச்சிடுறன்!!