Tuesday, April 05, 2005

மலேசிய மண்!!!

ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் தொடர்ச்சி. பாகம் 6.


தமிழ்ப் பத்திரிக்கை விக்கற ஃப்ளாட்பாரம் கடைகள் ஒண்ணுவிடாமே கேட்டாச்சு, 'அவள்
விகடன்' இருக்கான்னு? எங்கேயுமே கிடைக்கலை. புதுசு நாளைக்கு வருமாம். எனக்கெதுக்கு?
இந்த இதழ்தான் வேணும். நம்ம 'உஷா'வோட கட்டுரையை நொறுக்கி ( சுருக்கி) போட்டுட்டாங்கன்னு
அவுங்க வருத்தத்தோட எழுதியிருந்தாங்க. நான்' இதழை வாங்கிப் பார்த்துட்டு பதில் போடறேன்னு,
ஜம்பமா பதில் எழுதியிருந்தேனே! கிடைக்கவேயில்லை!ஹூம்...( அப்புறம், திரும்பிவந்த பிறகு
இணையத்துலேதான் பார்க்க முடிஞ்சது. அவுங்க ஃபோட்டோ அட்டகாசமா இருந்தது. எண்ணி நாலே
நாலு வரிதான் அவுங்க பங்கு கட்டுரை!!!!!)


இதுக்கு நடுவிலே இங்கேயிருந்து 'ரிப்பேர்' செய்யக் கொண்டு போயிருந்த ஒரு சில தங்க நகைகளைப்
பழுது பார்த்துக்கிட்டு, அப்படியே சில நகைகளையும் புதுசா வாங்கியாச்சு! லிட்டில் இந்தியா முழுக்கக்
கண்ணைப் பறிக்கிற விதமா, 'வா, வா'ன்னு கூப்பிடற நகைக் கடைங்களை ஒரேடியா அலட்சியப்படுத்த
முடியுமா?

இங்கே நாம இருக்கற ஊருலேயும் நகைக்கடைகள் இருக்குதான். ஆனா யாருக்கு வேணும் இவுங்க விக்கற
ஒம்போது காரட்? அப்பப்ப 'அப் டு 50% ஆஃப்'ன்னு விளம்பரம் வந்து இம்சை செய்யும்! தங்கம் அரை
விலைன்றது கேக்க எவ்வளவு நல்லா இருக்கு? டிஸைன்களும் சூப்பரா இருக்கும். எடை போட்டு இத்தனை
கிராம், இத்தனை காசுன்ற கதை இல்லைதான். ஒரு பீஸ் இந்த விலை. இப்ப உங்களுக்காகவே அரை விலை!!!
எல்லாஞ்சரி! ஆனா இந்த ஒம்போதுன்றதுதான் உதைக்குது! வாங்கிப் போட்டு அனுபவிக்கலாம். பின்னாலே
விக்கணுமுன்னு நினைச்சா அம்பேல்!!!! நகைன்றது ஒரு கஷ்ட நஷ்டத்துக்கு உதவுற சேமிப்புன்னு சொல்லியே
வளர்க்கப்பட்ட நம்மாலே துணிஞ்சு இந்த ஒம்பது காரட்டை வாங்க முடியலையே!

உண்மையைச் சொன்னா, நான் இங்கே நியூஸியிலே ரொம்ப மிஸ் செய்யறது, நம்ம கோயில்களையும், நகைக்
கடைகளையும்தான். போனாப் போட்டும்னு புடவைக் கடைகளையும் சேத்துக்கலாம்!!! சிங்கையைவிட மலேசியாவுலே
ரொம்பவே விலை மலிவுன்னு, நம்ம மலேசிய நண்பர்கள் சொன்னதை நினைவு வச்சுக்கிட்டு, ஒரு நாள் ஜொஹூர்
பாரு' போயிட்டு வரலாமுன்னு கிளம்புனோம்.

நமக்கோ நேரம் நிறைய இருக்கு! ஹாலிடேலேதானே இருக்கோம். அதனாலே பஸ்ஸுலேயே போகலாமுன்னு
பஸ் எக்ஸ்சேஞ்சுக்குப் போனோம். டாக்ஸிக்கு 5 வெள்ளீ ஆச்சு. எதுக்குச் சொல்றேன்னா, எங்க ரெண்டு பேருக்கும்
ஜோஹூர்பாரு போகவே பஸ் கூலி 4.80தான்! இது எப்படி இருக்கு!!!!!

வழியெல்லாம் வேடிக்கை ஒண்ணுமில்லே.நல்ல அகலமான ரோடுங்களும், பறக்கற வண்டிகளும்தான்! ஒரு இடத்துலே
எல்லா பஸ்ஸுகளும் நெருக்கி அடிச்சு வரிசையா நிக்குது. நகர இடம் இல்லே.இஞ்சு இஞ்ச்சா நகருது. சில பேரு
கீழே இறங்கி நடக்கறாங்க. நாங்க முதல்முறையா இப்படிப் போறதாலே பொறுமை காக்கறது நல்லதுன்னு இருந்தோம்.
ரெண்டு வருசத்துக்கு முன்னே நான் ஒரு மலேசிய நண்பரோடு கோலாலம்பூர் போயிருந்தேன். அப்பவும் பஸ்தான்.
'நைஸ் ட்ரான்ஸ்போர்ட்' பேருக்கேத்தமாதிரியே நல்ல அருமையான வசதியான பஸ்!!! அஞ்சுமணி நேரப் பயணம்
அலுக்காத விதமா, அப்பப்ப தின்பண்டங்கள். காஃபி, டீ, ன்னு கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. மேலும் ஹைவேயின்
ரெண்டு பக்கமும் நல்ல இயற்கைக் காட்சிகள் கண்ணுக்கு விருந்தா இருந்துச்சு! இப்ப வெறும் நாப்பது நிமிஷப்
பயணத்துக்கு இதெல்லாம் இல்லைன்னு பினாத்தறது கொஞ்சம் ஓவர்,இல்லே? அதுவும் 2.40 கொடுத்துட்டு?

பஸ் நின்னதும் நமக்கு முன்னாலெ இறங்கி ஓடுன ஜனங்களைப் பார்த்துட்டு அப்படியே 'காப்பி' அடிச்சோம்.
சிங்கப்பூரை விட்டுப் போயிட்டோமுன்னு பாஸ்போர்ட்லே 'ஸ்டாம்பு' அடிச்சுக் கொடுத்தாங்க! அடுத்து எங்கே
போகணும்? 'ஃபாலோ த பிக் க்ரூப்'ன்னு போனோமா, வெளியே படி இறங்கிப் போனா நிறைய மஞ்ச பஸ்ஸுங்க
நிக்குது. எல்லாரும் ஓடி ஓடி ஏறிக்கிட்டாங்க. நாம வந்த வண்டியிலே இருந்த 'ட்ரைவர்'முகத்தை ஞாபகப்படுத்திப்
பார்க்கறேன். அதுக்குள்ளெ புறப்படத்தயாரா இருந்த இன்னொரு மஞ்ச பஸ் ட்ரைவர் 'இதுலே ஏறுங்கன்னு'ன்னு
தமிழிலே சொன்னார். என்னோட திகைச்ச பார்வையைப் பார்த்துட்டு, 2.40 டிக்கெட்தானேன்னார். தலையை
ஆட்டினதுக்கு, இதுலேயும் ஏறலாம் வாங்க'ன்னார்.சரின்னு ஏறிக்கிட்டோம். நிக்கறதுக்குத்தான் இடம் இருந்தது!
எவ்வளவுதூரம் இப்படி நிக்கணுமோன்னு நினைச்சு முடிக்கறதுக்குள்ளே பஸ் நின்னு, எல்லோரும் இறங்க ஆரம்பிச்சாச்சு!
மறுபடி ஒரு 'காப்பி'!

இமிகிரேஷன் அட்டைங்க எங்கே இருக்குன்னு தெரியலை. கவுண்டரில் இருந்தவர்கிட்டேயெ கேட்டு, வாங்கிப்
பூர்த்தி செஞ்சு கொடுத்துட்டு வெளியே வந்தோம்.மலேசிய மண்ணுலே கால் பதிச்சாச்சு! மறுபடி மஞ்ச பஸ் சவாரி
பஸ் ஸ்டாண்டுவரை இருக்குமுன்னு பார்த்தா,அப்படி ஒண்ணுமே இல்லை! அதுதான் பஸ் ஸ்டாண்டு போல.
ரோடுக்கு அடுத்த பக்கம் ரெண்டு மஞ்ச பஸ்கள் காலியா நிக்குது!!!!

ரொம்பத் தெரிஞ்சமாதிரி, அப்படியே நடக்க ஆரம்பிச்சோம். ஒரு வளைவுலே ஒரு கோபுரம் தென்பட்டது! அதை
நோக்கிப் போனோம். அங்கே ஒரு பெரிய ரோடு இருக்கு. அதைக் கடந்தாக் கோயில். ஆனா பாதசாரிகள்
கடக்க வழி ஒண்ணும் இல்லே. காருங்க சர்சர்ன்னு போகுதுங்க. ஜனங்க குறுக்கே புகுந்து, வண்டிங்களை
அப்படி இப்படின்னு 'டபாய்ச்சுக்கிட்டு' போறாங்க! மறுபடி காப்பி! நம்ம தி.நகருலே பனகல் பார்க் அருகே
குமரன் கடைக்கு முன்னாலே ரோடைக் கிராஸ் செய்வமே அப்படி!!!!!!

பக்திப் பரவசத்தோட கோயிலுக்குப் போய் சாமியைக் கும்பிட்டேன். மணி 10தான்.நடைபாதையிலே தமிழ் சினிமா
வி.சி.டிக்கடைகளும், கோயிலுக்குக் கொண்டு போற பூசைக்கான சாமான்கள் விக்கற கடைகளுமா இருந்துச்சு!
திரும்பி வர்றப்ப கொஞ்சம் பழைய சினிமாப் படங்களை வாங்கிக்கணும்! தெருவெல்லாம் அழுக்கா இருந்துச்சு!
மகள் சொன்னா, 'இந்த ஊர் அப்படியே உங்க மெட்ராஸ்தான்!'

இதப் பார்ரா! இருந்தா என்ன? அதான் பிடிச்சிருக்கு!!!!

இன்னும் கொஞ்சதூரம் நடந்து 'கோட்டேராயா ஷாப்பிங் மால்'ன்னு இருந்த இடத்துக்குப் போனோம்.அப்பத்தான்
கடைங்களைத் திறந்துக்கிட்டு இருக்காங்க. ச்சும்மா ஒரு சுத்து சுத்திவந்தோம். வாங்கிக்கற மாதிரி ஒண்ணும் கண்ணுலே
படலே! மூணு மாடி ஏறி இறங்கி வேடிக்கைப் பார்த்துக்கிட்டு வந்தப்ப ஒரு 'நியூஸிலாண்ட் ப்யூட்டி ப்ராடக்ட்'னு
ஒண்ணு கண்ணுலே பட்டுச்சு! ஆஹா, நம்ம ஊர் சாமானாச்சே! என்ன ஏதுன்னு பார்க்கலாமுன்னு நுழைஞ்சோம்.
இங்கே எந்தக் கடைகளிலும் கேள்விப்படாத சோப்புங்களும், கிரீம்களும் வச்சு, அழகை மேம்படுத்தறாங்க!!!

கீழ்த்தளத்துக்கு வந்தப்ப ஒரு இந்தியன் புடவை, சுடிதார் கடை தென்பட்டது. ஏதாவது கிடைக்குமான்னு சுத்திப்
பார்த்தப்ப, மகளுக்கு ஒரு சுடிதார் பிடிச்சிருந்தது. அளவு சரியா இருக்காதுன்னு ஒரு தோணல். அதனாலே
'இஞ்சு டேப்' வேணுமுன்னு கேட்டதுக்கு ஒரு விற்பனைப் பெண் கொண்டுவந்து தந்தாங்க.தமிழ் பேசுனாங்க!
அவுங்ககிட்டே பேச்சுக் குடுத்தது ரொம்பத்தப்பாப் போச்சு!

'இந்த ஊர்லே ரொம்பவே க்ரைம் நடக்குது. நீங்க என்ன இப்படி தோள் பை போட்டுட்டு வந்திருக்கீங்க? கையிலே,
கழுத்திலே நகை வேற தெரியுது! முதுகு பக்கம் இடிச்சு தள்ளீட்டு அப்படியே தோள்ப்பையை பறிச்சுக்கிட்டு ஓடிடுவாங்க!
வளையலை எடுக்க சில சமயம் கையை அப்படியே வெட்டிடுவாங்க. கழுத்தை மூடிக்கிட்டுப் போகலைன்னா, செயினைப்
பறிக்க கத்தியாலே குத்துவாங்க!. பாஸ்போர்ட் பத்திரம்மா வச்சுக்கணும். பிடுங்கிட்டு ஓடிடுவாங்க' இப்படியெல்லாம்
அந்தம்மா சொல்லிக்கிட்டே போறாங்க! எனக்கு என்ன செய்யறதுன்னே ஒரு நிமிஷம் புரியலை!

நாமோ ஒரு ஹாலிடே வந்திருக்கோம். அதுவும் மகளோட. ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா யாராலே அங்கே
இங்கேன்னு ஓடமுடியும்? பத்திரமா ஊர் போய்ச் சேரறதுதானே நல்லது. அப்படி என்ன ஷாப்பிங் கேக்குது?
எங்க திகைப்பைப் பார்த்துட்டு அந்தம்மாவே, எதிர் வரிசையிலே சிங்கை போற டாக்ஸி ஸ்டாண்ட் இருக்குன்னு
காமிச்சாங்க.( வாடிக்கையாளர்களைப் பயமுறுத்தி ஒண்ணும் வாங்காம ஓடவச்சதை முதலாளி பார்த்திருப்பாரோ?)

நாங்க ஒரு ரெண்டு நிமிஷம் யோசனை செஞ்சோம். மக கிட்டே கேட்டேன், இன்னும் ஏதாவது ஷாப்பிங் இடங்கள்
பாக்கணுமான்னு. என் தங்கம், வேண்டாம்னு சொல்லுச்சு!

உடனே ரோடைக் கடந்து டாக்ஸி இருக்கான்னு பார்த்தோம். அப்ப ஒரு ஆளு வந்து சிங்கை போற டாக்ஸி
ரெடியா இருக்கு. 40 சிங்கப்பூர் வெள்ளி சார்ஜ்ன்னு சொன்னார்.

நான் உடனே, 'ஃபார்ட்டி டாலர்ஸ் டூ மச்'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தப்ப, இன்னொரு மிடில் ஏஜ் மனிதர்,
என் டாக்ஸியிலே வாங்கன்னார். எவ்வளவுன்னு கேட்டதுக்கு 30 ரிங்கெட்! ( சிங்கப்பூர் 13டாலர் 13 சென்ட் !)
சரின்னுட்டு அதுலே ஏறிக்கிட்டுக் கிளம்பிட்டோம்.

இப்ப இமிகிரேஷன் ஓட்டமெல்லாம் இல்லை. அந்த டாக்ஸி ஒரு பூத் கிட்டே நின்னது. அதுக்கு முந்தியே டாக்ஸி
ட்ரைவர் ரெண்டு ஃபாரம் கொடுத்தார். அதைப் பூர்த்தி செஞ்சு கொடுத்தோம். இறங்கி ஓடற வேலையெல்லாம்
இல்லாம, டாக்ஸியிலே உக்கார்ந்துக்கிட்டே பாஸ்போர்ட்லெ ஸ்டாம்ப் அடிச்சு வாங்கியாச்சு! ஒரே ஒரு இடம்தாம்!

வர்றப்ப டாக்ஸி ட்ரைவர்( மலேய்) கேட்டார், 'எப்ப நாங்க திரும்பி வரப்போறொம்'னு. ஆஹா.. அப்பத்தான் விளங்குது
அவரு எங்களை லோக்கல் ஆளுங்கன்னு நினைச்சுக்கிட்டு இருக்கறது!!!

'நாளைக்கு, பங்குனி உத்திரம். கோயிலிலே விழா இருக்கு. அதையெல்லாம் பார்த்துட்டு, ரெண்டு நாள் கழிச்சுத்தான்
திரும்புவோம்'ன்னு அடிச்சு விட்டேன்! மக என்னை ஒருமாதிரியா(!) பாக்கறா.

30 நிமிஷம் கழிச்சு, நாங்க விக்டோரியாத் தெருவிலே நடந்து வந்துக்கிட்டு இருக்கோம்.அப்பத்தான் ஞாபகம் வருது,தமிழ்ப்
பட விசிடி வாங்காம வந்துட்டோமுன்னு! போகட்டும். இங்கேயே வாங்கிக்கலாம்!4 comments:

said...

கலக்கிபுட்டீங்க. ஜோஹூர் என்ன மலேசியாவே நம்ம மெட்ராஸ் தான்னு நினைக்கிறேன். நம்ம ஊரு ஞாபகம் வந்த 2.40 டிக்கெட்ல அப்படியே மலேசியா பக்கம் ஒதுங்கலாம்.

-அல்வாசிட்டி.விஜய்

said...

//நம்ம 'உஷா'வோட கட்டுரையை நொறுக்கி ( சுருக்கி) போட்டுட்டாங்கன்னு
அவுங்க வருத்தத்தோட எழுதியிருந்தாங்க. நான்' இதழை வாங்கிப் பார்த்துட்டு பதில் போடறேன்னு,
//

உஷா இல்லை..ஜெயந்தி தானே?

said...

//இப்ப இமிகிரேஷன் ஓட்டமெல்லாம் இல்லை. அந்த டாக்ஸி ஒரு பூத் கிட்டே நின்னது. அதுக்கு முந்தியே டாக்ஸி
ட்ரைவர் ரெண்டு ஃபாரம் கொடுத்தார்//

தெரியாம போச்சே...நாங்களும் பஸ் பின்னாடி ஓடினோம்..
:)

said...

//வர்றப்ப டாக்ஸி ட்ரைவர்( மலேய்) கேட்டார், 'எப்ப நாங்க திரும்பி வரப்போறொம்'னு. ஆஹா.. அப்பத்தான் விளங்குது
அவரு எங்களை லோக்கல் ஆளுங்கன்னு நினைச்சுக்கிட்டு இருக்கறது!!!//
பேரம் பேசினதுல லோக்கல் ஆளுங்கன்னு நெனச்சுருப்பாரு !! (இந்த பின்னு பின்னினா !!! )