Monday, April 18, 2005

ஸ்ரீ ராம நவமி!!!!

இன்னைக்கு பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த நாள்!!!!

நம்ம பண்டிகைகளிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சது இந்த ஸ்ரீ ராம நவமிதான்!

நாந்தான் பெரிய 'காம்ச்சோர்' ஆச்சே!( இது ஹிந்தி) எனக்குத்தோதா அமைஞ்சிருக்கு இந்தப்
பண்டிகை.


பிரசாதம் செய்யறதுக்குன்னு ஒண்ணும் மெனக்கெட வேணாம். நம்ம வீட்டுலே மூணேமூணு வகைப்
பிரசாதங்கள்தான் எப்பவுமே!

1. பானகம்

2. நீர் மோர்

3. பயத்தம்பருப்பு கோஸ்மல்லி( கோஸ்மல்லிதானே சரியான பெயர்?)

இப்ப செய்முறை(!) பார்ப்போம்.( இதெல்லாம் இந்தியாவுக்கு வெளியிலே, என்னப் போல
இருக்கற மத்த காம்ச்சோர்களுக்கு:-)))) மட்டுமே)

1. பானகம். வெல்லம் கிடைக்கலேன்னா, பரவாயில்லை.அதான் ப்ரவுண் ஷுகர்( இது 'அந்த' ப்ரவுண்
ஷுகர் இல்லே!)இருக்கே. அதை எடுத்துத் தண்ணீரிலே ஒரு கலக்கு கலக்கி, கொஞ்சம் ஏலக்காய்ப் பொடியும்,
சுக்குப் பொடியும்( ட்ரை ஜிஞ்சர்) கலந்தா ஆச்சு!

2. நீர் மோர்.. இதுக்கு நிஜமாவே ரெஸிபி வேணுமா? தயிர்+ தண்ணீ கலந்து ப்ளெண்டர்லெ ஒரு அடி அடிச்சு
உப்பும் கருவேப்பிலையும் சேர்த்துடுங்க ப்ளீஸ்!!!

3. பயத்தம் பருப்பு கோஸ்மல்லி ( இது துளசி ஸ்டைல்)

தேவையான பொருட்கள்: பயத்தம்( பாசிப்) பருப்பு 1 கப்

வெள்ளரிக்காய் 1/2 ( இது டெலிக்ராஃப் க்யூக்கும்பரா இருந்தால். அது சரி இதுக்கு
ஏன் இந்தப் பேரு வந்துச்சுன்னு யாராவது சொல்லுங்களேன்)

சாதாரண வெள்ளரிக்காய் ன்னா 1

அப்புறம், உப்பு, தேங்காய்த்துருவல் 2 டேபிள் ஸ்பூன்) பச்சை மிளகாய் 2/3,
ஒரு சிட்டிகைப் பெருங்காயத்தூள்

தாளிக்கக் கொஞ்சம் கடுகும் ஒரு டீஸ்பூன் எண்ணெய்யும், கொஞ்சம் கறி வேப்பிலையும்.

செய்முறை:

பாசிப் பருப்பை ஒரு மணிநேரம் தண்ணிலே ஊற வச்சுடுங்க.

வெள்ளரிக்காயைத் தோல்சீவி, சின்னத்துண்டா ( பல்லுபல்லா!) நறுக்கிடுங்க.

தேங்காய் பத்தையையும் இப்படியே! துருவல்ன்னா துருவிக்கணும். காம்ச்சோர்ங்க போடறது 'டெஸிகேட்டட்
கோகோனட்)

ஊறின பருப்பைக் கழுவிட்டு, தண்ணியை வடிச்சுட்டு( சும்மா கொஞ்சம் தண்ணி 2 டீஸ்பூன்போல இருக்கட்டும்.
ஒட்ட வடிச்சுடாதீங்க) மைக்ரோவேவ்லே 2 நிமிஷம் 100% பவர்லே வச்சு எடுத்துக்குங்க.

இப்ப ஒரு வாணலி/நான்ஸ்டிக் பேன் அடுப்பிலே வச்சு எண்ணெய் ஊத்தி, அது காய்ஞ்சதும் கடுகு, கறிவேப்பிலை,
நறுக்கின பச்ச மிளகாய்த்துண்டுங்க, ஒரு சிட்டிகை பெருங்காயம்போட்டு வதக்கி, வெந்த பருப்பையும் போட்டுக்
கிளறி, உப்பும் தேங்காய்த்துருவல், வெள்ளரிக்காய் எல்லாம் சேர்த்து ஒரு நிமிஷம் வதக்கி எடுத்தா ஆச்சு.

நம்ம ஊருலே பருப்பை ஊற வச்சு,அப்படியே பச்சையாப் போடுவாங்க. அது நறுக் நறுக்குன்னு நல்லாத்தான் இருக்கும்.
அது ஒரு பச்சைவாசனையா இருக்குன்னு எங்க வீட்டுலே சொல்றதுனாலேதான் இப்படி!

அது போகட்டும். மாங்காய் கிடைக்கிற ஊருலே இருக்கற புண்ணியவதிகளும், புண்ணியவான்களும் மாங்காயைப்
பல்பல்லா நறுக்கி, இதோட சேர்த்துக்குங்க( ஹூம்....)

நேத்து நம்ம ஊர் ஹரே கிருஷ்ணா கோவிலிலே ஸ்ரீ நாம நவமி கொண்டாட்டம். பக்தியோட போய் சாமி கும்பிட்டோம்(!)
அதுக்கப்புறம் 'பேட் கி பூஜா' ( இதுவும் ஹிந்திதான்) கிச்சடி, பருப்பு, ஆலு கோபி( உருளை & காலிஃப்ளவர்) கறி,
தக்காளிச் சட்டினி, பப்படம், ஸாலட், சாக்லேட் கேக், கேசரி, பால் பாயாசம் & பானகம்!

அது சரி. இந்த வருசம் ஸ்ரீ நாமநவமி ஏன் இப்ப சித்திரை மாசத்திலே வந்துச்சு? எப்பவும் பங்குனியிலே, அதாவது
தமிழ் வருஷப்பிறப்புக்கு முந்தியே வருமே!

தெரிஞ்சவுங்க சொல்லுங்க.

உங்க எல்லோருக்கும் பண்டிகை தின வாழ்த்துக்கள்.

'ஹேப்பி பர்த்டே ஸ்ரீ ராம்!!!!!!'

2 comments:

said...

காலை, அம்மாவுடன் தொலைபேசும் பொழுது ஸ்ரீராமநவமினு சொன்னா. அதனால இன்னிக்கு எங்க வீட்ல சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை + பானகம் & நீர்மோர். ஆனால் அப்போ தேடும்பொழுது இந்த குறிப்பு கிடைச்சிருந்தா...
கோசுமல்லி செய்துபார்த்துவிட்டு நன்றி சொல்கிறேன். :-)

said...

அன்புள்ள யக்ஞா,

இதை ஒரு கறியாவும் உபயோகிக்கலாம்( மீந்து போனதை!) வத்தக் குழம்புக்கு இது
சூப்பர் காம்பினேஷன்!

என்றும் அன்புடன்,
துளசி.