Sunday, April 24, 2005

பொன் மேகலை!!!!

ஆளாளுக்கு 'சந்திரமுகி'யைப் பத்திப் பேசி, விமரிசனம் செஞ்சு, அதை அக்கு அக்காப்
பிரிச்சு மேஞ்சு, அடிச்சுத் துவைச்சுக் கிழிச்சும் தொங்க விட்டாச்சு!( நானும் பார்த்தேங்க.
ஆனா ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை,'மணிச்சித்திரத்தாழ்' மனசுலே பதிஞ்சு போனதால!
இயல்பாவே ரீ மேக் படத்தை ஒரிஜனலோடு ஒப்பிட்டுப் பாக்கற குணம் மனுஷனுக்கு வந்துருது இல்லையா?



அது போகட்டும். இப்ப நாஞ்சொல்ல வந்தது, 'பொன் மேகலை'யைப் பத்தி!

தமிழ் சினிமாவுக்கு இருக்கவேண்டிய எல்லா அம்சமும் நிறைஞ்சு இருக்கு! ஒரு பெரிய பட்டியலே
போடலாம்!

சுயநலமுள்ள அரசியல்வாதி (ஆஸ்பத்திரிக்கே 'பாம்' வைக்க ஏற்பாடு செய்யறாரு!)

கெட்ட போலீஸ் அதிகாரி ( கூட வேலை செய்யற பெண் போலீஸை கற்பழிக்கிறாரு)

இதையெல்லாம் வீடியோ எடுத்த வீடியோகிராஃபர்!

நல்ல மனசு இருக்கற பத்திரிக்கையாளர் ( இவர்தான் கதா நாயகன்!)

கடமை தவறாத நல்ல போலீஸ் அதிகாரி ( சமயத்துலே குற்றவாளியைப் பிடிச்சுட்டார்!)

அரசாங்க அதிகாரி, இவர் எல்லாக் கெட்ட குணமும் இருக்கறவர், கதாநாயகியை 'அட்ஜஸ்ட்' பண்ணச்
சொல்றாரு.( பொண்ணொட அப்பா செஞ்ச வேலையை வாங்கறதுக்காம்!)

அம்மா இல்லை. அப்பா மட்டுமே குடும்பத்தை( அவருக்கு ரெண்டு பொண்கள்!)காப்பாத்தறவர்.

ரெண்டு சீன்லே வந்துட்டு, மண்டையைப் போட்டுருவார்.( வழக்கமான ஹார்ட் அட்டாக்தான்!)

அக்கா தங்கைப் பாசம்! அக்கா நாட்டியத்துலேயும் பாடறதுலேயும் நம்பர் ஒன்! தங்கைக்கு வழக்கம்போல
ஐ.ஏ.எஸ். கனவு!

தங்கை வயசுக்கு வந்தவுடன் அதைப் பெரிய அளவிலே கொண்டாடுறது( கழுத்துச் செயினை வித்து!)

குடும்ப நண்பரான இன்னொரு பெண்!

புகழ்பெற்ற ஒரு பாதிரியாரின் முதுகு எலும்பை வச்சு பண்ணின சிலுவை( இது விலை மதிப்பே இல்லாதது!)
இதைத்திருடற ஒரு கோஷ்டி! இதன் தலைவன் நல்லாத்தமிழ் பேசற ஹிந்திக்காரன். இதை வெளிநாட்டுக்கு
விக்க ஏற்பாடு செய்யற ஒரு தாத்தா!( இவர் தமிழந்தான்!)

எல்லாக் கெட்டவங்களையும் ஒரே நாளுலே சந்திக்கும்படியா ஆயிடுது நம்ம கதா நாயகிக்கு! அவள் ஓட, இவுங்கல்லாம்
துரத்தோ துரத்துன்னு துரத்தறாங்க!

அவளை எப்படியாவது கொன்னுடணுமுன்னு எல்லோருக்கும் ஒரு காரணம் இருக்கு!

சண்டைக் காட்சிகள், தனியா இருக்கற பொண்ணை கெட்ட எண்ணத்தோட துரத்துற இளைஞர்கள்! (அதிலும்
முக்கியமானவனா இருக்கறவன் ஏன் பெரிய நெக்லஸ் போட்டுக்கணும்?)

அனு மோகனும், பாண்டுவும் போலிஸ், திருடனா வர்ற அச்சுபிச்சுக் காமெடி!

ஹைய்யோ. கொஞ்சம் இருங்க. எழுதறப்பவே எனக்கு மூச்சு வாங்குது.


படத்துலே நல்ல விஷயம் ஒண்ணும் இல்லையான்னு கேக்கறீங்கதானே? இருக்கே!

இசை நம்ம இளையாராஜா! பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், பவதாரிணி எல்லாம் பாடி இருக்காங்க!

ரெண்டு மூணு பாட்டு, நிஜமாவே நல்லா இருக்கு. கர்னாட சங்கீதம்! என்ன ராகமுன்னு கேக்க மாட்டீங்கதானே?

தெரிஞ்ச முகங்களா சிலர் இருக்காங்கதான்!

நல்ல போலீஸ் ஆஃபீஸர் 'சரண்ராஜ்'

அப்பா சாருஹாஸன்!( அவர் ஃபோட்டோவா தொங்கறப்ப, நம்ம கமலோட முகம் அப்படியே மனசுலே வந்து
போச்சு! கமலுக்கு ரொம்ப வயசாயிட்டா அப்படியேதான் இருக்கும்!)

அப்புறம் அந்த அரசியல்வாதி, பேரு தெரியலை!

இன்னோன்னு, இதுலே வர்ற கோயில், குளம் எல்லாம் அருமையா இருக்கு! எந்த ஊரோ?

ஒருவழியாப் பாத்து முடிச்சுட்டேன். இன்னொரு படம் 'கிரிவலம்'. அதையும் இன்னொருநா பாத்துட்டு, தோணுச்சுன்னா
விமரிசனம் போடறேன்.

என்னவோப்பா, இப்படிச் சொல்லாமக் கொள்ளாம வர்ற படங்களைப் பத்தி, நானும் சொல்லலேன்னா, உங்களுக்கெல்லாம்
யாரு சொல்லுவா?

அந்த நல்ல எண்ணம்தான்!!!!






9 comments:

said...

அதெப்படிங்க.. ? கேள்வியே படாத படங்கள் மட்டும் தேடிப்பிடித்து பாக்கிறீங்க.. ?

said...

துளசியக்கா,
இந்த மாதிரிப் படங்களை பார்த்து விமர்சனம் எழுதி நீங்கதான் எங்களை எல்லாம் காப்பாத்துறீங்க, இல்லைன்னா, நாங்களும் இதே படத்தைத் தெரியாமல் பார்த்திருப்போம்.

said...

பொன்மேகலை இளையராஜாவின் மாஸ்டர்பீஸ். அத்தனை பாடல்களும் அருமையாக இருந்தன - மோகமுள்ளைப்போல.
பாடல்களுக்காகவாது படத்தைப்பார்க்க வேண்டும் என நினத்துக்கொண்டு இருக்கிறேன்,

said...

அன்புள்ள சயந்தன்,

நான் எங்கே இவைகளைத் தேடி போறேன்? எல்லாம் தாமாய்த்தான் நம் வீட்டிற்கே
வருகிறது!

நான் இங்கே ஒரு 'தமிழ் சினிமா லைப்ரரி' வச்சிருக்கேன். நமக்குப் படங்கள் அனுப்பும்
ஏஜண்ட் அநேகமா எல்லாப் படங்களையும் அனுப்பிடுவாரு. அவருக்கு வியாபாரம் ஆகவேணாமா?

சிலசமயம் அருமையான படங்களும் ஓசைபடாம இப்படி வந்துரும்:-)

என்றும் அன்புடன்,
துளசி.

அன்புள்ள முத்து, ஜீவா

நன்றி!!!

நிஜமாவே பாட்டுங்க நல்லா இருக்கு.

said...

//நான் இங்கே ஒரு 'தமிழ் சினிமா லைப்ரரி' வச்சிருக்கேன்.//

பொறாமைப் பட வெச்சுட்டீங்க. புத்தகக் கடை, இசைத்தட்டுக் கடை, உங்களைப் போல் திரைப்பட library, (சம்பந்தமில்லாமல்) nursery பள்ளி, ஆகியவற்றை நடத்துபவர்களின் பாடு கொண்டாட்டம்தான் என நினைக்கிறேன். எந்நேரமும் பொழுதுபோக்குதான் :)

said...

அன்புள்ள செல்வா & வாய்ஸ் ஆன் விங்க்ஸ்( என்னப்பா பேரை இப்படி வச்சிருக்கீங்க?)

நன்றி!!!! இந்த ச்சின்ன லைப்ரரியிலேயே எத்தனை விதமான மனிதர்களின்
சந்திப்பு தெரியுமா?

உண்மையைச் சொன்னா, ஒரு நாவலெ எழுதலாம்:-)

அநேகமா எல்லாப் படங்களையும் பார்த்துடுவேன். அட்லீஸ்ட் சண்டை, பாட்டுங்களை
ஓட்டியாவது!

அதையெல்லாம் எடுத்துட்டா படமெ ஒரு முக்காமணியிலே அடங்கிடாது?

என்றும் அன்புடன்,துளசி.

said...

சரியா சொன்னியள் துளசி.இந்த சந்திரமுகி வந்ததும் போதும் தமிழ்மணம் படுகிற பாடும் போதும்.பெடிச்சியிண்ட கவிதை எதிர்ப்பு இயக்கம் மாதிரி சந்திரமுகி விமர்சன எதிர்ப்பு இயக்கம் ஒண்டை நீங்கள் ஓம் எண்டா நான் தொடங்க ரெடி.யோசிச்சு சொல்லுங்கோ.

பொன்மேகலை ட்ரெயிலர் சன் டிவியில போகேக் பாத்ததுதான்.நீங்கள் இப்பிடிச்சொன்ன பிறகுதான் பாக்கலாம் போல கிடக்கு.தகவலுக்கு நன்றி.

said...

அன்புள்ள அருணன்,

நன்றி!!!

//சந்திரமுகி விமர்சன எதிர்ப்பு இயக்கம் ஒண்டை நீங்கள் ஓம் எண்டா நான் தொடங்க ரெடி.யோசிச்சு சொல்லுங்கோ//

இது நல்ல ஐடியாவா இருக்கே:-))

என்றும் அன்புடன்,துளசி.

said...

கொஞ்சம் பொறுங்கோ அங்கால பாபாவை புலிகள் தடை செய்தவை எண்டொரு புஸ்வாணப்போர் வலைத்தளத்தில நடந்துகொண்டிருக்குது.அது முடியட்டும்.அந்தப்பதிவில பெரிய வெடிச்சிரிப்பு என்னெண்டா பிரபாகரன் இப்ப சந்திரமுகியை என்ன செய்யப்போறார் எண்டு அவயள் ஒரு 'அரசியல் முக்கியத்துவமான" கேள்வியையும் எழுப்பியிருக்கினம்.

ம்...இத்தனையாயிரம் மாவீர்களை இழந்து மக்களை இழந்து ஒரு புரட்சிப்போராட்டத்தை புலிகள் நடத்துவது சந்திரமுகிப்படத்தை தடைசெய்யலாமா இல்லையா எண்டதை அறியத்தான் எண்ட தோரணையில இவயளிண்ட கதையளுக்கு என்ன பதில் சொல்லிறதெண்டே தெரியாமக்கிடக்கு.