Saturday, April 30, 2005

முதியோரும் இளையோரும்!!!

நம்ம பத்மா 'தோழியர்'லே முதியோர் இல்லம் தேவையா இருக்கறது காலத்தின் கட்டாயமான்னு கேட்டங்கல்லெ.

முதியோர் இல்லம்னு சொன்னதும் மனசுக்குள்ளே பல நெருடலான விஷயங்கள்
ஓட ஆரம்பிச்சிருச்சு!

இங்கே இது ஒரு நல்ல 'பிஸினஸ்' ஆகிப் போச்சு! பத்மா சொல்றதுபோல அங்கங்கே பரவலாக
பல அநியாயங்கள் நடக்குதுதான். என்னுடைய தோழி ஒருவர்( வெள்ளைக்காரங்கதான்) நர்ஸ். பிள்ளைங்களையும்,
குடும்பத்தையும் கவனிச்சுக்கிட்டு முழு நேரவேலைக்குப் போக இயலாம பகுதி நேர வேலை செய்யறாங்க.


அவுங்க இப்படி முதியோர் இல்லத்துலேதான் வேலை செய்யறாங்க. இங்கெல்லாம் இதை நர்ஸிங் ஹோம், ரெஸ்ட் ஹோம்
அண்ட் ஹாஸ்பிடல்னு சொல்லறாங்க. நம்ம தோழி அங்கங்கே நடக்கற சில அநியாயங்களைப் பார்த்துட்டு
'நமக்கென்ன'ன்னு இருக்கமாட்டாங்க. அங்கே மேனேஜ்மெண்ட்டோட சண்டைதான். இப்படியே அவுங்க எக்கச் சக்க
இடங்களிலே வேலைக்குச் சேரறதும். சில மாசத்துலேயே அங்கே வேலையை விட்டுட்டு அடுத்த இடம் போறதுமா
இருக்கறாங்க. இப்ப இந்த நர்ஸிங் ஹோம் நடத்துற ஆளுங்ககிட்டே இவுங்களைப் பத்தின விவரம் பரவிடுச்சு.
இவுங்களுக்கு இப்ப வேலையெ கிடைக்கறதில்லை. இவுங்க 'மனசாட்சிக்குப் பயப்படற டைப்' அதான் இப்படி இருக்காங்க.

அவுங்க அப்பப்ப என்கிட்டே சொன்ன விவரங்களைக் கேட்டுட்டு எனக்கு மனசு ரொம்பக் கவலை ஆகிடும். அதுவும்
போதாதுன்னு இங்கே ஆஸ்பத்திரிகளிலே பெயின் மேனேஜ்மெண்ட்க்கு. செல்ஃப் ஹெல்ப் & கண்ட்ரோல்ன்னுட்டு
அவுங்கவுங்களே வலி நிவாரணியை ஒரு டோஸ் ஏத்திக்கற மாதிரி வச்சிருக்காங்க. அதுலே பலபேரு ச்சின்ன வலியைக்கூடப்
பொருட்படுத்தாம அடிக்கடி மருந்து ஏத்திக்கிட்டு அதுலெயே அடிக்ட் ஆயிடறாங்களாம். இது வேற ஒரு பயங்கரம்.

இதுக்கு நடுவிலே மகளோட பியானோ டீச்சர் ஒரு பாட்டி இருந்தாங்க. அவுங்க அந்தக் காலத்துலே 'போலியோ'வால
பாதிக்கப்பட்டு கொஞ்சம் காலை இழுத்து இழுத்து நடப்பாங்க. இது காரணமோ என்னமோ அவுங்க கல்யாணமே
செஞ்சுக்கலை. தனியா இருந்தவங்க உடம்பு பலகீனமாகி, சுகமில்லாப் போயிட்டங்க. அப்புறம் பியானோ க்ளாஸ்
எடுக்கறதையும் நிறுத்திட்டங்க. அவுங்க ரெண்டு பெட் ரூம் ஃப்ளாட்லே இருந்தாலும், எப்பவும் வீட்டைச் சாத்தியே
வச்சிருந்ததாலே, (அவுங்க வீட்டுக்கு மகளை பியானோ ட்யூஷனுக்குக் கொண்டு போய் விட்டுட்டு அங்கியே இருந்து
கூட்டிட்டு வருவேன்) ஒரே மக்கல் வாடையா இருக்கும். தாங்க முடியாம வெளியே வந்து தோட்டத்துலே இல்லாட்டா
குளிர் ரொம்ப இருந்தால் காருலெ உக்காந்திருப்பேன்.

ட்யூஷனை நிறுத்துனதும், சொந்தக்கரங்க வந்து அவுங்களைக் கூட்டிட்டுப் போய் ஒரு முதியோர் இல்லத்துலே
சேர்த்துட்டாங்க. வீட்டையும் காலி செஞ்சு, காலி என்ன காலி, ஒரு கராஜ் சேல் போட்டு சாமான்களையெல்லாம்
ஒழிச்சுக் கட்டினாங்க. அப்புறம் அந்த வீடும் விக்கறதுக்குப் போட்டுட்டாங்க. ( இந்த கராஜ் சேல் பத்தித் தனியா
ஒரு பதிவே போடப்போறேன்!)

அவுங்களைக் கேட்டு அந்த முதியோர் இல்லத்தைத் தெரிஞ்சுக்கிட்டு ஒரு நாள் அங்கெ போனோம்.

வெளியே அலங்காரமான தோட்டம், உள்ளெ நுழைஞ்சதும் வரவேற்பு அறை எல்லாம் படு ஜோரா அட்டகாசமா
இருந்துச்சு.

இந்த மாதிரி, இன்னாரைப் பார்க்க வந்திருக்கோமுன்னு சொன்னதும் எங்களை ( மகளும் நானும்) உக்காரவச்சு
உபசரிச்சுட்டு, அவுங்க ரூமுலே போய் தூங்கறாங்களா இல்லே முழிச்சிருக்காங்களான்னு பார்த்துட்டு வந்து
எங்களைக் கொண்டு போனாங்க.

ச்சின்ன ரூம்தான். அங்கே ஒரு அட்டாச்சுடு பாத்ரூமும் இருந்துச்சு! ஒரு சிங்கிள் கட்டில் போட்டு இருந்துச்சு.
அப்புறம் ஒரு மேசையும் நாற்காலியும். சுவருக்குள்ளெ ஒரு கப்போர்டு & வார்ட்ரோப். அவ்வளவுதான். ஜஸ்ட் பேசிக்!

எங்களைப் பார்த்ததும் பாட்டி டீச்சர்க்கு பயங்கர சந்தோஷம்!!! கொஞ்ச நேரத்துலே அந்த நர்ஸ்/உதவியாளர் ஒரு
ட்ரேயிலே பிஸ்கெட், டீ எல்லாம் கொண்டுவந்து வச்சாங்க. அது டீச்சருக்குன்னு நாங்க நினைச்சப்ப,
அதெல்லாம் விசிட்டருங்களுக்கு சொன்னாங்க. பரவாயில்லையே, வந்து பாக்கறவங்களுக்கும் வீடு மாதிரி உபசரணை
செய்யறாங்களேன்னு மனசுக்குச் சந்தோஷமா இருந்துச்சு!

மறக்கறதுக்கு முன்னாலே ரெண்டு விஷயத்தைச் சொல்லிடறேன்.

இந்த ஊர்லே 'டீ'ன்னா என்னா தெரியுமா? ராச் சாப்பாடு!!!! எனக்கென்ன தெரியும்? நாங்க வந்த புதுசுலே ,
இங்கே இருக்கற வெள்ளைக்காரங்க உங்க டீ டைம் எப்பன்னு கேப்பாங்க, நம்ம வீட்டுக்கு விசிட் வர்றதுக்கு
முன்னாலே! நானும் நாலு நாலரைன்ன சொன்னேன். அவ்வளவு சீக்கிரமாச் சாப்பிட்டா அப்புறம் 'சப்பர்' உண்டா?
எப்பன்னு கேட்டாங்க. நானும் சளைக்காம எட்டரை, ஒம்போதுன்னு சொன்னேன்.

ஒண்ணு கவனிச்சிங்களா? நம்ம ஆளுங்க அதாங்க இந்தியர்ங்க, ஒரு நேரத்தைச் சொல்லும்போது நாலு, எட்டு. பத்து
அப்படின்னு ஒரு ரவுண்ட் ஃபிகராச் சொல்ல மாட்டோம். எப்பவும் ஒரு கிரேஸ் டைமும் சேத்துக்கிட்டுதான் சொல்றது வழக்கம்.
இல்லையா?

எப்ப வருவீங்கன்னு கேட்டா, ஒரு பத்து பத்தரைக்கு வந்துருவோம்ல! இந்த அரைமணிநேரம் போதாதுன்னு அப்புறமும் ஒரு மணி
நேரம் கழிச்சு ஆடி அசைஞ்சு பதினொன்னரை, பன்னெண்டுக்கு வருவாங்கல்ல! பாருங்க! நான் சொல்லவந்ததை விட்டுட்டு
'டைம் கீப்பரா' போய்க்கிட்டு இருக்கேன்(ல) சரி சரி, டீ விஷயத்துக்கு வரேன்.

நான் எப்பவும் முன் ஜாக்கிரதையா, உங்க வீட்டு வழக்கம் எப்படின்னு கேட்டு வச்சுக்குறதுதான். அப்படித் திருப்பிக்
கேட்டாக்க, அவுங்க வீட்டுலே 'டீ' ஆறு மணின்னே பலரும் சொல்றது. அது ஏன்னா, ஆறு மணிக்கு 'டீ'முடிச்சுட்டு,
ஏழு மணிக்குப் புள்ளைங்களைக் குளிப்பாட்டி, ஏழரைக்குத் தூங்க வைக்கவாம்! இங்கெ இது ஒரு கதை. சாயந்திரம்
ஏழரைக்குப் புள்ளைங்கெல்லாம் தூங்கப்போயிரணும். கொஞ்சம் பெரிய புள்ளைங்க எட்டரைக்கு. டி.வி.லே சரியா
எட்டரைக்கு, 'குட் நைட் ச்சில்ரன்'னு ஒரு கார்டு காட்டுவாங்க. அதுக்கப்புறம் வர்ற நிகழ்ச்சிங்கெல்லாம் பெரியவங்களுக்கு!
அப்ப டி.வி. ச்சேனல் கூட ரெண்டுதான் இருந்துச்சு. அதுலெயும் டி.வி ஒன் காலையிலே 10 மணிக்குத்தான் ஆரம்பிக்கும்.
மொதல்லே இங்கத்து தேசிய கீதம் போடுவாங்க!!!!!! அப்பத் திரையிலே இங்கத்து இயற்கை காட்சி, நகரங்கள்ன்னு
படங்கள் ஓடிக்கிட்டு இருக்கும்! இப்ப இதொண்ணும் இல்லை. அதான் இருவத்துநாலு மணி நேரமும் தொல்லைக்காட்சி
நடக்குதே!

ஐய்யய்யோ ( வெள்ளைக்கார பாஷையிலே இதை எப்படிச் சொல்றது? ஓ மை காட் ன்னா?) வெறும் சாயாவைக்
குடிச்சுட்டு பசங்க வெறும் வயத்துலயா தூங்கும்? போட்டு வாங்குனதுலே அப்புறம்தான் முழு விஷயமும் வருது.
'டீ'ன்னா ராச் சாப்பாடு. அதுதான் மெயின் மீல்!

ரொம்ப வருசத்துக்கு முன்னாலெ , ஒரு பதினேழு வருசத்துக்கு முந்தி நடந்ததைக் கேளுங்க!

இது தெரியாம, புதுசா வந்த ஒரு இந்திய நண்பர், அவரோட கூட வேலை செய்யறவங்களை அவரோட வீட்டுக்கு
சாயந்திரம் 'டீ'க்கு கூப்பிட்டு இருக்கார். அவுங்க வந்தவுடனெ செஞ்சு வச்சிருந்த வடை/ பஜ்ஜியைக் கொடுத்து
தேநீர் கொடுத்திருக்கார். அவுங்களும், அது இந்தியன் ஸ்டைல் ஆன் ட்ரேய்/ அப்பிடைசர்/ஸ்டார்ட்டர் நினைச்சுக்கிட்டு
அதையும் தின்னுட்டு, மெயின் கோர்ஸ் வருமுன்னு உக்காந்துகிட்டுப் பேசிக்கிட்டே இருந்திருக்காங்க. நம்ம நண்பரோ,
'இது என்னடா, சாப்பிட்டு முடிச்சிட்டும் போகாம அவங்கபாட்டுக்கு உக்கார்ந்துக்கிட்டே இருக்காங்க. மணி வேற
ஆகிக்கிட்டு இருக்கு. நம்ம சாப்பாடு, சாப்ட்டுட்டுப் படுத்தாதானே நாளைக்கு வேலைக்குப் போகமுடியுமுன்னு' இருக்கார்.

அவருக்கோ தூக்கம் வந்துக்கிட்டு இருக்கு! தாங்க முடியாம 'சரி. நீங்கெல்லாம் வந்ததுக்கு ரொம்ப நன்றி. நாளைக்கு
வேலை நாளாச்சே. ஆஃபீசிலே பார்க்கறென், குட் நைட்'ன்னு சொல்லி அனுப்பியிருக்கார். அவுங்களும் கொஞ்சம் திகைப்போட
போனதை இவர் புரிஞ்சுக்கவே இல்லை. மறுநாள் அவரோட ஆஃபீஸிலே விஷயம் பரவிடுச்சு! அப்ப யாரோ சொல்லப்
போய் தான் இவர் செஞ்சது இவருக்கே புரிஞ்சிருக்கு! அப்புறம் அவுங்க கிட்டே மன்னிப்புக் கேட்டுக்கிட்டு இன்னொரு
நாள் நிஜமாவே சாப்பிடக் கூப்ட்டாராம்! இதே நண்பர்தான், 'ப்ரிங் அ ப்ளேட்'ன்னு சொன்ன நிகழ்ச்சிக்குக் வெறும் தட்டு
ஒண்ணை, சாப்பிடறதுக்குக் கொண்டு போனவரு:-)

இந்த மாதிரி, ஆளுங்களை கூப்புடறதுக்கு ஜஸ்ட் ஸ்நாக்ன்னா, 'ஜஸ்ட் கம் ஃபார் அ கப்பா'ன்னு சொல்லணுமாம்.
இதுலே கூடப் பாருங்க, வீட்டுக்கு விஸிட் வந்தவங்ககிட்டே காஃபி, டீ எதாவது குடிக்கிறீங்களான்னு கேட்டா, சிலர்
அதிலும் லேடீஸ்ங்க சொல்றது, எனக்கு இன்னும் வேடிக்கையா இருக்கும். ' நீயும் குடிக்கறதா இருந்தா நானும்
குடிப்பேன்'னு சொல்வாங்க! எனக்கு வேணாமுன்னா அவுங்களுக்கும் வேணாமாம்! இது எப்படி இருக்கு?

பழையபடி என்னவொ சொல்ல வந்து எங்கியோ போயிட்டேன்!

எங்கெ விட்டேன்? ம்ம்ம்ம்... டீச்சர் ரூம்!

இது இன்னும் நீண்டு போகும்.


2 comments:

said...

சிறந்த பதிவு

said...

இந்தப் பதிவுக்கு வந்த முதல் பின்னூட்டம் உங்களோடதுதான்.

யூ த ஃப்ர்ஸ்ட்!!

பதிவு போட்டு நாலரை வருசமாச்சு:-)