Monday, June 19, 2006

ஆ.............விரல்!!! 7 & 8

ஆ.............விரல்!!! 7 அவசரச் சிகிச்சைப் பிரிவில்




அவசர சிகிச்சைப்பிரிவுக்கு எங்களைக் கொண்டு சேர்த்தது ஆம்புலன்ஸ். உள்ளே போனவுடன், அவர்கள் எல்லா விவரங்களையும் பதிந்துகொண்டார்கள். கோபாலின் கையில்( அடிபடாத கையில்) ஒரு பட்டை கட்டிவிடப்பட்டது. அதில் அவருடைய ஜாதகம் முழுவதும் நக்ஷத்திரம், ராசியைத் தவிர மற்றெல்லாம் இருந்தது.


விரல்துண்டை, நிறைய ஐஸ் கட்டிகள் இருக்கும் ஒரு 'க்ளியர் ஃப்ரீஸர் ' பையில், போட்டு என்னிடம் கொடுத்தார்கள். அதற்குள் அது நீலம், நீலமென்ன நீலம் ஏறக்குறைய கருப்பான நிறமாக மாறிவிட்டிருந்தது. சில மருத்துவர்களும் வந்து சில, பல கேள்விகளைக் கேட்டார்கள். எப்படி ஆனது என்ற விவரத்தைக் 'கீறல் விழுந்த ரிக்கார்ட்' போலத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன்.


எலும்பு மருத்துவரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தோம்.முதலில் அவரது உதவி மருத்துவராக ஒரு அம்மணி வந்து பார்த்துவிட்டு,மற்ற மருத்துவர்களுடன் சிறிது நேரம் விவாதித்துவிட்டு, அந்தத் துண்டை, மறுபடி விரலில் பொருத்துவது கொஞ்சம் கஷ்டம். சரியாக நகத்துக்கு அடியில் துண்டுபட்டிருக்கிறது. அதை உடல் மறுபடி ஏற்குமா என்ற சந்தேகம் உள்ளது. ஒரு பத்து சதமானம்தான் வெற்றிகிட்டும் நிலை. அப்படிப் பொருத்தியபின், உடல் அதை ஏற்காவிடில்,'காங்ரீன்' ஏற்பட்டு முழு விரலையும் எடுக்க வேண்டியதாகிவிடும் என்றார்.


"நீங்களே இனி முடிவு செய்ய வேண்டும்! ஒரு மனிதன் தன்னுடைய சுண்டு விரலை உபயோகிப்பது வெறும் ஐந்து சதமானம்தான். ஆகையால் யோசித்துச் சொல்லுங்கள்."


இதற்குள் ஐஸ் கட்டிகள் மெதுவாக உருக ஆரம்பித்திருந்தது. விரல் துண்டு கறுப்பாக மிதக்க ஆரம்பித்தது! ரத்தம் இன்னும் வந்துகொண்டேஇருந்தது. காயத்தின்மேலே ஒரு வேறு ஒரு துணியை மாற்றினார்கள். தலைக்கு முக்காடு போல விரலுக்கு முக்காடோ?ஒரு படுக்கையில் கோபாலை உட்கார வைத்து, மடியில் ஒரு தலையணையை வைத்து, முழங்கையைத் தாங்கினாற்போல வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். தலையணை மேல் மெதுவாக ரத்தம் சொட்ட ஆரம்பித்திருந்தது.அதன்மேல் ஒரு 'டவல்' போடப்பட்டது!


டாக்டர் அம்மணி மறுபடி வந்தார். நான் தவறாகச் சொல்லிவிட்டேன். விரல் துண்டைத் தைத்தால் அதை உடல் ஏற்கும் வாய்ப்பு பத்துசதமானம் அல்ல. பதினைந்து சதமானம்!!!


நாங்கள் எங்கே போய் தலையை முட்டிக்கொள்வது! ஐயோ ஐயோ ஐயோ.....


மகளும் இப்போது வந்துவிட்டிருந்தாள். என் கையில் உள்ள ஐஸ் பையை ஒரு மாதிரிப் பார்த்தாள்!! எல்லாம் உருகிப்போய், தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது விரல் துண்டு!

மருத்துவர் மறுபடியும் வந்து,' டெட்டனஸ் ' ஊசியும், வலி தெரியாமலிருக்க ஒரு ஊசியும், போட்டார். கடைசியாக உணவு உட்கொண்டதுஎப்போது என்றும் கேட்டார். காலை 'ப்ரேக்ஃபாஸ்ட்'டோடு சரி. அப்புறம் ஒன்றுமில்லை. அதுவும் நாலு மணி நேரத்துக்கு முன்னால் என்றதும் திருப்தியான ஒரு பார்வையை வீசிவிட்டு, கோபாலுக்கு 'ட்ரிப்' கொடுக்க ஏற்பாடு செய்தார்.


கொஞ்ச நேரமானது. மறுபடி மருத்துவர் வந்து, கோபாலை , மேலே 'வார்டு'க்கு மாற்றியிருப்பதாகவும், ஒரு விசேஷ மருத்துவருக்காகக் காத்திருப்பதாகவும், அவர் வந்தவுடன் அறுவை சிகிச்சை நடக்கும் என்றும் சொன்னார். கொஞ்ச நேரத்தில் தான் வந்து பார்ப்பதாகவும் சொல்லிப் போனார்.


ஆ.............விரல்!!! 8 சாமியாட்டம்!



நேரமோ போய்க் கொண்டிருக்கிறது! டவல் முழுவதும் ரத்தம்! விரலின் முக்காடும் முழுக்க நனைந்திருந்தது ரத்தத்தில்! மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்! எனக்குப் பசிக்குமே என்று அவருக்குக் கவலை. அடிக்கடி, கீழே உள்ள காஃபிட்டீரியாவுக்குப் போய் ஏதாவது சாப்பிடுஎன்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார். எனக்கோ பசி மரத்துவிட்டது. யாருமே வந்து பார்க்கவில்லை. டாக்டர் வருவார் என்று சொன்னாரே,எப்போது வருவார் என்று தெரியவில்லையே!


நான் தாதிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றேன். அங்கே ஆளுக்கு ஒரு காஃபிக் கோப்பையைக் கையில் வைத்துக்கொண்டு, பேச்சுக்கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது. ஒரே சிரிப்பும், பேச்சுமாக இருக்கிறார்கள். மூன்று பேர்! என் மனநிலையில் அந்தச் சிரிப்பும் பேச்சும் ஒரு எரிச்சலைக் கிளப்புகிறது. நான் நின்று கொண்டே இருக்கிறேன். ஏன், என்ன என்று கேட்க நாதியில்லை!
நானே வலுக்கட்டாயமாக அவர்களைக் கூப்பிட்டு, 'மணி மூன்றாகப் போகிறதே. எப்பது டாக்டர் வருவார்?' என்று கேட்டேன்.


"வருவார்.வருவார்."

"அதுதான் கேட்கிறேன். வருவார் என்று தெரியும். ஆனால் எப்போது?"

"அது தெரியாது. எல்லோரும் பிஸியாக இருக்கிறார்கள். வந்துவிடுவார்."

"எப்போது வருவார் என்று கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள்."

"நாங்கள் விசாரித்துச் சொல்கிறோம். நீங்கள் உங்கள் இடத்திற்குச் செல்லுங்கள்."

"இப்போதே விசாரிக்கலாமே!"

"இப்போது நாங்கள் கொஞ்சம் 'பிஸி"


என்ன பிஸி? அரட்டை அடித்துக் கொண்டு காஃபி அருந்திக் கொண்டிருப்பதற்குப் பேர் 'பிஸி'யா? ( ஒருவேளை அதுதான் நிஜமான 'பிஸி'யோ?)


"உங்களுக்கு 'பிஸி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? எது பிஸி? இப்படி உட்கார்ந்து சிரித்துக்கொண்டு அரட்டை அடிப்பதுதான் நீங்கள் சொல்கின்ற 'பிஸியா? இந்தியாவில் இருக்கும் ஆஸ்பத்திரிகளில் போய்ப்பாருங்கள். 'பிஸி' என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்னஎன்று தெரியும்.."

வெடித்துக் கொண்டு வெளிவந்தது வார்த்தைகள் என் வாயிலிருந்து! என் குரலில் இருந்த கோபம் எனக்கே தெரிந்தது!விடுவிடுவென்று அந்த இடத்தைவிட்டு மறுபடி இவருடைய அறைக்கு வந்தேன்.


என் முகம் போன போக்கைப் பார்த்தே இவர் புரிந்து கொண்டதுபோல,' என்ன சண்டை போட்டியா? 'என்று நிதானமாகக் கேட்டார்.

என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற ஆற்றாமை என் கண்களில் கண்ணீராக வழிந்துகொண்டிருந்தது.

எண்ணி மூன்றாவது நிமிடம் ஒரு டாக்டர் அறை வாசலில் தோன்றினார்! 'ரொம்பக் கோபமாக இருக்கின்றீர்கள் போலிருக்கிறதே! என்னால்ஏதாவது உதவ முடியுமா?' இனிப்புப் பேச்சு! ஹ்ஹ, யாருக்கு வேணும் இந்த மிட்டாய்ப் பேச்சு?

"எவ்வளவு நேரம் இன்னும் காத்திருப்பது? விபத்து நடந்து நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாகிவிட்டது? எந்த மாதிரி 'சேவை' செய்கின்றீர்கள்?"

"இங்கே இப்போது இயங்குவது ஒரு 'ஆபரேஷன் தியேட்டர்'தான்.

அதனால்தான் கால தாமதம். தியேட்டர் ரெடி ஆனவுடன் உங்களுக்குஅறுவை சிகிச்சை நடக்கும்."

"என்ன? இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியில் ஒரே ஒரு தியேட்டர்தானா? மத்த தியேட்டர்கள் எல்லாம் என்ன ஆச்சு?"

"அது தெரியாது. இப்போது இயங்குவது ஒன்றுதான்!"

மறுபடி எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. இந்த இடத்தில் ஒன்று சொல்லவேண்டும். எனக்குக் கோபம் வந்தால் ஒரே சாமியாட்டம்தான். கைகால் எல்லாம் தடதட என்று ஆடும். என்ன பேசுகிறேன் என்ற நிதானம் எல்லாம் அம்பேல்.வார்த்தைகள் படபடவென வந்துவிழும்.

'இதுதான் சேவையா? இதற்குத்தான் நாற்பத்தியேழரை சதவீதம் வரி செலுத்தறோமா? அங்கே என்னன்னா நர்ஸம்மாங்க எல்லாம் அரட்டைக்கச்சேரி செஞ்சுகிட்டு இருக்காங்க. ஒரு ஃபோன் செஞ்சு டாக்டரைக் கூப்பிடக்கூட முடியாத 'பிஸி'யாம். எல்லா வார்டுலேயும் நோயாளிங்களே இல்லே. மிஞ்சிபோனா இந்த வார்டுலெயே அஞ்சு பேருதான் இருக்காங்க. அதுக்கு மூணு நர்ஸ்ங்க!'

'நோயாளிக்கு மட்டுமில்லை, அவுங்ககூட இருக்கறவங்களுக்கு எவ்வளவு மனசு பாதிக்கப்படுதுன்னு புரியாதா? எதுக்கெடுத்தாலும் உயிருக்குஆபத்து இல்லேன்னு சொல்றீங்க. அப்ப உயிர் போனாத்தான் சிகிச்சை செய்வீங்களா?'

'உங்க மனக்கஷ்டம் புரியுது. ஆனா எங்க சேவையை மேம்படுத்த என்ன செய்யலாம்ன்னு உங்க கருத்துக்களைச் சொல்லுங்க.' மெதுவா 'டிஷ்யூ பாக்ஸ்' எடுத்து என்பக்கம் நீட்டறார். கண்ணைத் தொடைச்சுகறதுக்காம்!

கையால ஒரே தட்டு! அந்த பாக்ஸ் எகிறி சுவரோரம் போய் விழுந்தது.

'சேவையை மேம்படுத்தறதா? மொதல்லெ சேவை எங்கே? இருந்தாத்தானெ அதை மேம்படுத்தறதைப் பத்திக் கருத்து சொல்ல முடியும்?'

'இங்கே டாக்டருங்க நர்ஸ்ங்கெல்லாம் இப்ப ரொம்பக் குறைவா இருக்காங்க. அரசாங்க நிதி வேற குறைவாத்தான் கிடைக்குது. எல்லோரும் மற்ற நாடுகளுக்கு வேலைக்குப் போயிடறாங்க.ஆளுங்க பற்றாக்குறையா இருக்கு.'


'அப்ப மற்ற நாடுகளிலே இருந்து இங்கே வந்து வேலை இல்லாம தவிக்கற டாக்டருங்களை வேலைக்கு எடுக்கணும். என்ன நிதி வேற குறைவு?நாங்க கட்டற வரிகள் எல்லாம் எங்கெ போகுது? ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி ஆஸ்பத்திரியை அலங்கரிச்சு வச்சுட்டாப் போதுமா?அலங்காரம் முக்கியமா? ஆளுங்களுக்குச் சிகிச்சை முக்கியமா? பத்துநாளுக்கு தியேட்டர் கிடைக்கலேன்னா, இப்படியே பத்துநாளும் வச்சிருப்பீங்களா?'


'ஐயாம் சாரி, ஐயாம் சாரி'ன்னு சொல்லிகிட்டே இருக்கார். எனக்கோ எரிச்சல்ன்னா எரிச்சல்.


'உங்க நிலமை புரிகிறது. நான் உடனே என்ன செய்யலாம் என்று பார்க்கிறேன். இவருக்கு ரத்தம் தொடர்ந்து வெளியாவதை நிறுத்த ஒரு ஊசிபோடுகிறேன். தொற்று ஏற்படாமல் இருக்க இன்னோரு ஊசி ஏற்கெனவே போட்டாயிற்று. வலியும் உணர முடியாதபடி மருந்து கொடுத்தாயிற்று.பசிக்காமலிருக்கவும் சோர்வு நீங்கவும் 'ட்ரிப்' தொடரச் சொல்கின்றேன். சரியா? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சிகிச்சை தொடரும்.தயவு செய்து கோபம் கொள்ள வேண்டாம்' மெதுவா நழுவிட்டார்!


ஆன்னா ஊன்னா ரத்த அழுத்தம் பார்க்க ஆள் வந்துருது. இப்ப இருக்கற நிலையிலே எனக்குத்தான் ப்ரெஷர் செக் செய்யணும்!

மகள் கீழே போய், எனக்கு ஒரு காஃபி வாங்கிக் கொண்டு வந்தாள்.

இப்போது ஒரு நர்ஸம்மா வந்து, தியேட்டர் இரவு பத்துவரையே வேலை செய்யும் என்றும், இன்றிரவு அறுவை சிகிச்சை நடக்கவில்லையெனில்,மறுநாள் காலை 6 மணிக்குக் கட்டாயம் நடக்கும் என்றும் தெரிவித்தார்.

மகளை வீட்டிற்குப் போய் சாப்பிட்டுவிட்டு, அப்பாவுக்கு மாற்றுடை கொண்டுவரும்படிச் சொன்னேன். இவரும் மெதுவாகக் கண்ணயர்ந்தார்.

எனக்குதான் எண்ண ஓட்டம். நம்மூரில் ஆஸ்பத்திரிகளில் எவ்வளவு நோயாளிகள். படுக்கைகள் இல்லாமல் கட்டிலின் இருபுறமும் கால்வைத்டு இறங்கக்கூட முடியாதபடி எத்தனைபேர் வெறும் பாய்களில் படுத்துக் கொண்டிருப்பார்கள். இருவது 'பெட்' இருக்கும் இடத்தில் இருநூறு நோயாளிகள்! அந்த நர்ஸ்களுக்கும், டாக்டர்களுக்கும் எவ்வளவு வேலைச்சுமை! பாவம்தானே?


இன்னும் வரும்

28 comments:

said...

ஹும்.... அங்கயும் சில மனுசங்க இப்படி தானா? சரி... சரி....

கோபால் சார் இப்ப நல்ல இருக்காருனு சொல்லிட்டீங்க, அதனால கதையா படிக்கறேன்.:-)

said...

வாங்க நன்மனம்.

சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குப்பின் எழுதியது.

இப்போது எனக்கும் ஏதோ கதை படிப்பதுபோலத்தான் இருக்கிறது.

said...

உங்கள் கோபத்தை இப்போதும் உணர முடிகிறது. நம்ம நாடுதான் மோசம், வெளிநாடுகளில் எல்லாம் efficient என்ற மாய பிம்பத்தை உடைத்தெறிகிறது உங்கள் பதிவு.
கோபால் சாருக்கு சுண்டுவிரல் இருக்கிறதா இல்லையா என நாளை தெரியுமா?

said...

எனக்கும் இப்படி தாங்க, உயிர் காக்கும் பணியில் இருப்பவர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதை கண்டால் கோபம் தலைக்கு ஏறி விடும். நம் அரசு மருத்துவமனைகளில் எனக்கு பல வகையான அனுபவங்கள் உண்டு. நமக்கு நம்மை சார்ந்தவர்க்களை கவனிக்காமல் அலட்சியமாக உள்ளார்களே என கோபப்படுகின்றோம். நமக்கு இது ஒரு நாள்(வாரம்) கூத்து. ஆனால் அவர்களுக்கோ நித்தம் இது தானே. அதனால் தான் இப்படி நடந்து கொள்கின்றார்களோ?

said...

மணியன்,
ஒவ்வொரு நாடும் ஒரு ரகம்தான்.
சில நாடுகளில், மொதக்கேள்வியே,
மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருக்கான்னுதானாம். இல்லைன்னா தொலைஞ்சோமாம்.

இங்கே மகப்பேறு மருத்துவம் முற்றிலும் இலவசம். நிறைய அமெரிக்கர்கள், பிரிட்டிஷ்காரர்கள் இங்கத்துக் குடியுரிமை இல்லாமலேயே
டூரிஸ்ட்டா இங்கே வந்து பெத்துக்கிட்டுப் போய் இருக்காங்க.
அரசாங்கம், இப்பத்தான் முழிச்சுக்கிச்சு. இனிமே இதுமாதிரி இங்கே நடந்தா அவுங்க ஆஸ்பத்திரிக்குக் காசு கொடுக்கணுமுன்னு சொல்லி இருக்கு.

said...

நாகை சிவா.
நீங்க சொல்றது சரி. சுடுகாட்டுலே வேலையா இருக்கறவங்க, எப்படி சர்வசாதாரணமா இறந்த உடலைப் பார்க்கறாங்க. நம்மாலே அது முடியுதா?

விபத்து, நோய்ன்னு வந்தா நெருங்குன சொந்தத்துக்கு மனம் எப்படி பாதிக்குது? இதுக்கு இப்ப கவுன்சிலிங் எல்லாம் வந்துருக்குல்லே.

தினம் நோயாளிகளைப் பார்க்கலாம். ஆனா இதுக்குன்னு படிச்சு ட்ரெயின் ஆகி இருக்கறவங்க மக்கள் மனசைப் புரிஞ்சுக்கிட்டு ஒரு அனுதாபத்தோடு பிரச்சனையை( நம்மளைத்தான்) அணுகணும் இல்லீங்களா?

said...

"கையாலே ஒரு தட்டு..அந்த தட்டு எகிறிப்போய் விழுந்தது..."
இப்போ கதை மாதிரி படிக்றோம்

..அப்போ இருந்த நிலை இந்த வரிகளில்...

said...

வாங்க சிஜி.

நான் தான் இப்படி ஆடுனேன். கோபால் பாவம்,இன்னும் ஷாக்லே இருந்து விடுபடலையோ என்னவோ
அமைதியா உக்கார்ந்துக்கிட்டு இருந்தார்.

said...

என்னது இது நடந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறதா? இப்பொழுது எப்படி இருக்கிறார் கோபால்? நான் எப்பொழுதோ நடந்தது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அங்கும் மருத்துவமனைகளில் நிலை இப்படியா?

said...

ராகவன்,

நாந்தான் கிளியராச் சொல்லலையோ?

இந்த சம்பவம் நடந்த மூணு மாசத்துக்கு அப்புறம் எழுதி வச்சதை இப்ப 'வெளியிடு'கிறேன்.

மறுபடி குழப்பறேனா? சம்பவம்( அது என்ன எப்பப் பார்த்தாலும் சம்பவம் சம்பவம்ன்னு?) நடந்து இப்ப மூணு வருசம் ஆகப்போகுது.

said...

என்னங்க இது அக்கிரமம். அங்கயுமா?

இந்த நர்சுங்களுக்கும் டாக்டர்ங்களுக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கான்னே தெரியல. இந்த மாதிரி ஆளுங்க அங்கிங்கெனாதபடி ஒலகம் முழுசும் இருக்காங்க போலருக்கு. ஒங்களும் மெடிக்கல் இன்சூரன்ஸ் இருந்திருந்தா பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு போயிருக்கலாம் இல்லையா?

இந்த அரசு ஹாஸ்பிடல்ஸ் எந்த நாடுன்னாலும் இப்படித்தான் போலருக்கு..

அப்புறம் என்னாச்சி?

said...

துளசி,கோபால் விரல் சரியாப் போச்சுனு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா!!என்னப்ப ஊரு அது.செவிலியர் சிரிப்பது என்பது எல்லா ஊருக்கும் பொது போலிருக்கு. உங்க மகள் பாடும் சிரமம்.அப்பாவுக்கு அடி.அம்மாவுக்குத் துக்கம்.தவிச்சுப் போய் இருக்கும்.

said...

ஏங்க இப்படி? உங்க மேல உள்ள் கோவத்தை அவரு மேல காமிச்சா என்ன ஆவறது? கொஞ்சம் நிதானாமா இருக்க வேண்டாமோ?

said...

// ராகவன்,

நாந்தான் கிளியராச் சொல்லலையோ?

இந்த சம்பவம் நடந்த மூணு மாசத்துக்கு அப்புறம் எழுதி வச்சதை இப்ப 'வெளியிடு'கிறேன்.

மறுபடி குழப்பறேனா? சம்பவம்( அது என்ன எப்பப் பார்த்தாலும் சம்பவம் சம்பவம்ன்னு?) நடந்து இப்ப மூணு வருசம் ஆகப்போகுது. //

ஓ! அப்ப இது நடந்து மூனு வருசத்து மூனு மாசம் ஆகப் போகுதா! இத அவர நேர்ல பாத்தப்ப கவனிக்காமப் போனேனே!

ஆனாலும் அந்த பொழுதுல ஒரு இது வந்துருது பாருங்க.

இப்பிடித்தான் ஒரு வாட்டி....பெங்களூர்ல தூங்கிக்கிட்டு இருக்கேன். அத்த வந்து எழுப்புறாங்க. மூச்சு விட முடியலைன்னு. நடுநிசி....பெங்களூர் குளுருல ஆட்டோவெல்லாம் அந்நேரத்துக்குக் கிடைக்காது. அதுக்கெல்லாம் காத்திருந்தா நேரமாயிராது. படக்குன்னு கைணடிக் ஹோண்டாவ எடுத்துக்கிட்டு அத்தைய அதுல பின்னாடி உக்கார வெச்சி பிடிச்சுக்கச் சொல்லீட்டு...முருகன் மேல பழியப் போட்டுக் கிட்டு வண்டிய ஆஸ்பித்திரிக்கு விட்டேன். அஞ்சு வருசம் இருக்கும் நடந்து. பயங்கர குளிரு. பக்கத்துல இருந்த ஒரு ஆஸ்பித்திரிக்கு வண்டிய விட்டேன். நைட் டியூட்டீல இருந்த கொஞ்ச வயசு டாக்டர். படிச்சு முடிச்சு ஒரு ரெண்டு வருசம் இருக்கும். நாங்க அவ்வளவு பதட்டத்துல இருந்தும், அவரு பதட்டமே படாம, ரொம்பத் தெளிவா, நிதானமா செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சாரு. I was really impressed. நல்லவங்க அங்கங்க இருக்கத்தான் செய்றாங்க.

said...

பிரச்சினை நம்மளுக்கு வரும்போதுதான் அதனோட தீவிரமும் ஆற்றாமையும் கோபமும் வரும்.
எனக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கிறது. அதுசரி அடுத்து என்ன நடக்க போகுது?

தம்பி

said...

//இப்போது எனக்கும் ஏதோ கதை படிப்பதுபோலத்தான் இருக்கிறது//

பழைய டைரி படிக்கும்போதும் இதே உணர்வுதான் வரும். இல்லையா?

அது சரி...நீங்கள் இந்தியா வருகிறீர்களா என்ன?

said...

நம்ம ஊர்லயும் இப்ப கொஞ்சம் மெடிகல் இன்சூரன்ஸ் பற்றி விழிப்புணர்வு வந்துட்டு இருக்கு அக்கா.

said...

டிபிஆர்ஜோ,
நமக்கும் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருக்குதான்.
ஆனா ஆஸ்பத்திரி? இங்கே இன்ஷூரன்ஸ் கம்பெனியே ப்ரைவேட் ஹாஸ்பிடல்
ஒண்ணு நடத்துது. அது ஆர்கனைஸ்டு சர்ஜரிக்கு மட்டும்.
ஆக்ஸிடெண்ட் கேஸ் கவனிக்க அரசாங்க மருத்துவமனை மட்டும்தான்.
வேற எங்கேயும் போக முடியாது.

said...

வல்லி,

இப்ப நல்லாதான் இருக்கார்ப்பா.
மகள் அப்ப நிஜமாவே எனக்கு நிறைய மனோதைரியம் கொடுத்தாள்.
தகப்பன் சாமிக்குப் பெண்பால் என்ன?

தாய்ச்சாமியா?

said...

கொத்ஸ்,

// உங்க மேல உள்ள் கோவத்தை அவரு மேல காமிச்சா என்ன ...//

யார் மேல் கோபம் யார்மேல் காமிச்சா?.... புரியலை போங்க.

said...

ராகவன்,
நல்ல டாக்டர்ங்க நிறைய பேர் இருக்காங்கதான். இது எதோ நம்ம நேரம். இங்கே
நம்ம ஆளு ஆக்ஸிடெண்ட் ப்ரோன். ஆன்னா ஊன்னா ஓடுவோம் ஆஸ்பத்திரிக்கு.

ஆஸ்பத்திரியிலேயும் எல்லாம் சிஸ்டமாட்டிக்கா செய்யணுமாம். ஒரு தடவை கீழே
விழுந்து( ஏணி மேலே ஏறி பெயிண்ட் அடிக்கிறேன்னு கிளம்பி) தோள்பட்டை எலும்பு
இடம்பெயர்ந்து, எமர்ஜென்ஸியிலே எவ்வளோ நேரம் காத்து எக்ஸ்ரே, அது இதுன்னு ன்னு
களேபரம்தான் போங்க. இதே தோள் முந்தி இந்தியாவுலே ஒருக்கா இப்படி ஆச்சு, பைக்லே இருந்து
விழுந்து. அப்ப அங்கே அரைமணிக்குள்ளே ஷோல்டரை செட் செஞ்சுட்டாங்க.

said...

வாங்க தம்பி.

'தலைவலியும் திருகுவலியும்(?) தனக்கு வந்தாத்தான் தெரியுமு'ன்னு ஒரு பழஞ்சொல் இருக்கே.
அதேதான்.

said...

குப்பு செல்லம்,

அது ரொம்ப பழைய பதிவுங்க. இப்ப ஏன் தானே வருதுன்னு தெரியலை. அதுக்குத்தான் கொட்டை எழுத்துலே
பழைய பதிவுன்னு ஒரு வரி அங்கே சேர்த்திருக்கேன்.

இப்ப எங்கே வர்றது? வந்துட்டுத் திரும்பி மூணரை மாசம்தான் ஆகுது.

said...

மனசு,

நல்லதுதான். ஆனா முந்தியே இருந்துச்சே. நாங்க 30 வருசத்துக்கு முன்னாலேயே பூனாவுலே இருந்தப்ப இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தோமே.
ஒருவேளை இப்பப் பரவலா எல்லாரும் எடுக்கறாங்க போல. நல்லதுதான்.

said...

அப்பாடி.நல்லா இருக்காரா.நன்றி.

தாய் சக்தினு சொல்லலாமா?உங்க மகளை/?
ஆக்சிடெண்ட் ப்ரோன்? எனக்குத் தம்பியோ?இங்கேயும் நல்ல டாக்டருக்குக் குறைவில்லை.டையக்னோஸ் பண்றவர் சரியா இருக்கணும்.ஆமாம்!!-- இதோட எத்தனை தரம் சாமியாட வேண்டி வந்தது உங்களுக்கு?:-)
கொத்ஸ் சொல்லறது, நீங்க கோவிச்சதாலே கோபாலைக் கவனிக்காம விட்டுட்டாங்கன்னா என்ன செய்யறதுனு.

said...

வல்லி,


சாமியாட்டத்துக்கு கணக்குவழக்கெ இல்லை:-)))

ஓஹ்ஹோ... கொத்ஸ் அப்படிச் சொன்னாரா?

அப்படி நடந்தா இருக்கவே இருக்கு இன்னொரு சாமியாட்டம்:-)

said...

//கொத்ஸ் சொல்லறது, நீங்க கோவிச்சதாலே கோபாலைக் கவனிக்காம விட்டுட்டாங்கன்னா என்ன செய்யறதுனு.//

அதே அதே.

சில இடங்களில் எல்லாம் நம்ம வேலை ஆகும் வரை சண்டை போடக்கூடாது. சினிமாவில் பார்க்கலை, சர்வர் சண்டை போட்ட ஆள் சாப்பாட்டில் துப்பிக் கொண்டு வருவதை.

நல்ல வேளை அது மாதிரி ஒண்ணும் ஆகலை. கோபால் சார் தப்பிச்சார்.

said...

அய்ய்யோ கொத்ஸ்,

சினிமாலெ மட்டுமில்லை. ஒரு ஹிட்டன்வீடியோலே கூட இப்படிச் செஞ்சதா ஒருக்கா பார்த்தேன். யக்(-: