Wednesday, November 09, 2011

இந்த வருச தீபாவளி...இப்படி!

அம்பதுக்கு ரெண்டாயிரத்து ஐநூறுன்னா.....'காலுக்கு' எவ்வளவு?

ஒரு பண்டிகையை ஒரு நாளோ ரெண்டு நாளோ கொண்டாடினமா, அப்புறம் அதை விட்டுட்டு நம்ம வேலையைப் பார்க்கப்போனோமான்னு இல்லாம பத்துப்பனிரெண்டு முறை கொண்டாடிக்கிட்டு இருந்தோம். காரணம் ஒன்னும் பிரமாதம் இல்லை...... அந்த 'குறிப்பிட்ட' பண்டிகைக்கு இங்கே அரசு விடுமுறை கிடையாது. அதனால் என்ன.... ஒரு நாள் நாமே லீவு போட்டுட்டுக் கொண்டாடித் தீர்க்க முடியாதா?

அதெப்படிங்க? வீட்டுலே ஆக்கித்தின்னு டிவி பார்த்துக் கொண்டாடுனாப் போதுமா? நம்ம சனங்களோடு சேர்ந்து ஆட்டம்பாட்டமுன்னு இருந்தாத்தானே.....திருப்தி கிடைக்கும்! ஒட்டு மொத்தமா எல்லோரும் லீவு எடுத்துக்க முடியுமா? அதுவுமில்லாம நம்ம அக்கம்பக்கத்து மக்களும் வந்து கலந்துக்கிட்டாத்தானே 'நாங்க இப்படி'ன்னு அவுங்களுக்கு(ம்) காமிக்கமுடியும்? நம்ம நகரசபை வேற , நம்ம கொண்டாட்டங்களுக்குன்னு கொஞ்சம் நிதி ஒதுக்கி வச்சு அப்பப்பக் கண்ணுலே காட்டும். அதை(யும்) விடமுடியுங்களா?

நாமோ (அடிப்படையில்) இந்தியர்கள். நமக்குன்னு ஒரு ஸ்டைல் வேற இருக்குதுங்களே! நமக்குள் எத்தனை மொழியோ அத்தனை விதத்துலே(யும்) ஒரு காரியம் செஞ்சு 'தனித்தனி'க்குழுவா கூட்டமாச் சேர்ந்துதான் கொண்டாடுவோம். நியூஸி இண்டியன், ஃபிஜி இண்டியன், சிங்கப்பூர் இண்டியன், மலேசியா இண்டியன், இந்தியா இண்டியன்( இதுலே ஒரு இருவத்தியஞ்சு வகை!) போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு ஆன்மீகம் சம்பந்திச்ச கோவில்களின் வகையில் சிலது. இந்தக் கணக்கில் ஒரு வருசம் 13 தீபாவளிகூட கொண்டாடி இருக்கோம். முழுசா ரெண்டு மாசம் ஆச்சு கொண்டாடி முடிக்க! வார இறுதியா இருந்தால்தானே எல்லோராலும் வரமுடியும். எல்லாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது வெவ்வேற தனிக் குழுன்னு நினைக்காதீங்க. ஒரு தனிக்குழு கொண்டாடும்போது 'எல்லோரும்' போய் கலந்து ஆதரவு தருவோம். எல்லோரும், எல்லா இடத்திலும், எப்போதும் என்றுதான் நீங்கள் புரிஞ்சுக்கணும் கேட்டோ:-)))))

இந்த வருசம் 'நிலநடுக்கம்' ஸ்பெஷலாப் போனதால் கொண்டாட்டங்களின் எண்ணிக்கை குறைஞ்சு போச்சு. ஹால் கிடைக்கலை, மக்கள் வெளி ஊர்களுக்கு இடம் பெயர்ந்துட்டாங்க என்றதெல்லாம் காரணமுன்னு சொன்னாலும் சங்கங்களின் 'தலை'களுக்கு மனதில் உற்சாகம் குறைஞ்சு போச்சு, முன்னேற்பாடாக் காரியங்கள் செய்ய சோம்பல், ஹால் கிடைக்கலைன்னு சொல்றதெல்லாம் ஒரு சாக்கு இப்படி(யும்) ஒரு பேச்சு ரகசியமா உலாத்திக்கிட்டு இருக்கு. இந்த அழகில் எரியறவீட்டில் பிடுங்குவதுவரை லாபமுன்னு 'ஒரு' சிலர் ஆதாயம் தேடுனதும்,. அதை எதிர்த்துப் பேசின சங்கக்கூட்டங்களில் அமளிதுமளியானதும் இன்னொரு கதை!

பாருங்களேன், ஒரு இருபத்தியாறு மாசங்கள் நாட்டைவிட்டுப்போனதில் என்னென்ன நடந்து போச்சுன்னு!! கட்டி எழுப்பின சாம்ராஜ்யங்கள் எல்லாம் கண் எதிரில் சரிஞ்சுபோய்க் கிடந்துச்சு இந்த ஊர் பாரம்பரியக் கட்டிடங்களைப்போல:(

ஒவ்வொரு குழுவும் தனித்தனியா நம்மைக் கண்டு அவரவர்கள் 'நியாயத்தை' நமக்குத் தெளிவுபடுத்திப் போனாங்க. இதெல்லாம் கிடக்கட்டும் ஆன்மீக நிறுவனங்கள் மீது கொஞ்சம் கவனம் செலுத்தலாமுன்னு பார்த்தால் இருந்த ஒன்னும் இடிஞ்சு போயிருச்சே!

முன்னே ஒரு பதிவில் குறிப்பிட்ட புதுக்கோவில்தான் கொஞ்சம் செயல்பாடா இருக்கு இப்போதைக்கு. அங்கே முற்றிலும் மொழிப்பிரச்சினை இல்லை. ஒரே ஒரு இனம் மட்டும் கூடிச்செஞ்ச ஏற்பாடு இது. (இதே இனத்துக்குள்ளில் கருத்து வேறுபாடு இருக்கு., இன்னொரு குழுவும் தனியாக இயங்குதுன்னாலும் அங்கேயும் இதே மொழியும் இனமும்தானே?

பண்டிகை வருதே என்னதான் நடக்கப்போகுதுன்னு குழம்பிக்கிடந்த சமயம், ஃபிஜி இந்தியக்குழு ஒன்னு (மட்டும்) தீபாவளிக் கொண்டாட்டத்துக்கு அறிவிப்பு கொடுத்துச்சு. அங்கத்தினர்களுக்கு முற்றிலும் இலவசம். மற்றவர்களுக்கு பத்து டாலர் டிக்கெட். (நாம் நாட்டைவிட்டுப் போனதால் நம்ம மெம்பர்ஷிப் எல்லா க்ளப்புகளிலும் காலாவதி ஆகிக்கிடக்கு. இனிமேல்தான் ஒவ்வொன்னாப் புதுப்பிக்கணும்.)

நம்ம பேட்டைக்குப் பக்கத்தில்தான் ஒரு பள்ளிக்கூட ஹாலில் விழா நடக்குது. விழா நடத்தும் குழுவினரின் சொந்தப்பேட்டை அழிவில் கிடக்கு. அதை மீண்டும் சரியாக்க இன்னும் பல ஆண்டுகள் பிடிக்குமாம். அதுக்காக அந்த மக்களின் ஓட்டுகளை வேணாமுன்னு விடமுடியுமா? அந்த ஏரியா எம் பி. நாம் போய்ச் சேர்ந்தபோது கார்ப்பார்க்கில் வண்டிக்குள் தன் கணவருடன் காத்திருந்தாங்க. வெள்ளைக்காரர் என்பதால் நம்ம டைமிங்கை புரிஞ்சுக்கலையேன்னு எனக்கு கவலையாப்போச்சு. 'புரிதல்' இருந்ததால் நாங்கள் அரைமணி தாமதமாத்தான் போனோம். மொழி இனம் இதிலெல்லாம் வேறு பட்டாலும் இந்தியர்களுக்கான பொது குணம் ஒன்னை இதுவரை கைவிட்டதே இல்லை என்ற பெருமைதான் நம் மக்களுக்கு!
ஹால் சாவி வச்சுருப்பவர் இன்னும் வந்து சேரலை. வந்திருந்த நாலைஞ்சு வண்டிகளுக்குள்ளேயே உக்காந்துருந்தோம் நாங்க, குளிருக்குப் பயந்து. ஒரு வழியா ஹால் திறந்ததும் உள்ளே போனோம். மகாலக்ஷ்மி, புள்ளையார் படங்கள் பூஜிக்கத்தயாரா இருந்துச்சு. மேடையும் க்ளப்பின் பேனரோடு அலங்கரிச்சுருக்கு. மெம்பர் இல்லாத பலர் உள்ளேவர அனுமதிக்காகக் காத்திருந்தாங்க. நம்ம கோபால்தான் காசை வசூலிச்சுக்கிட்டு 'நான்மெம்பர்' டிக்கெட்டை முதலில் கொடுத்து உள்ளே அனுப்ப வேண்டிய ஏற்பாட்டை அங்கே முழிச்சுக்கிட்டு நின்ன குழுவின் அங்கத்துக்குச் சொல்லிக் கொடுத்தார். அதானே ..... வருமானத்தை கோட்டை விட்டால் எப்படி? ஹால் வாடகைக்காவது காசு தேற வேணாமா? அனுபவஸ்தர் இல்லையோ:-))))))
கூட்டம் வர ஆரம்பிச்சு ஹால் நிறைஞ்சது.

எம்.பி. அம்மா கொஞ்சம் பழைய ஆளு. நாம் இங்கே வந்த அஞ்சு வருசத்துக்குப்பிறகுதான் முதல்முறையா பார்லிமெண்ட் அங்கம் ஆனாங்க. அப்போ முதல் இப்போவரை ஒரு தேர்தலிலும் தோற்காம அதே ஏரியாவில் மணைபோட்டு உக்காந்துட்டாங்க. லேபர் கட்சி. இப்போதைக்கு எதிர்க்கட்சி இதுதான். ஒரு மாசத்துலே தேர்தல் வேற வருது. நம்ம கம்யூனிட்டியைக் கண்டுக்காம விடமுடியுமா அரசியல் வியாதிகளால்?
எம் பி Ms.ரூத் டைஸனுடனும் கணவருடனும் உள்ளூர் நடப்பை விசாரிச்சுக்கிட்டு இருந்தேன். நிலநடுக்க டேமேஜுக்கு அவுங்க என்ன மாதிரி உதவி செய்யறாங்க? என்ன திட்டம் என்றெல்லாம் கொஞ்சம் விஸ்தரிச்சு (சின்ன) பேசிக்கிட்டு இருந்தோம் முன்வரிசையில் உக்கார்ந்து. ஏன் லேட்டா ஆரம்பிக்கிறாங்கன்னு கேட்டதுக்கு ஆமாம்..... 'ரன்னிங் லேட் அஸ் யூஷுவல்'ன்னு சொல்லிவச்சேன்.

ஒரு வழியா மேடை ஏறுன சங்கத்தலைவர் 'வழக்கம்போல் லேட்டாயிருச்சு சொல்லிக்கிட்டே' நிகழ்ச்சியை ஆரம்பிச்சார். மகாலஷ்மிக்கு விளக்கேத்தி ஆரத்தி செஞ்சாங்க முதலில். நாங்க சிலர் ஆரத்தி எடுத்தோம். இன்னும் எல்லோரும் வாங்க வாங்கன்னு மக்களைக் கூப்பிட்டா....... யாரும் அசையலை:( லக்ஷ்மியின் அனுகிரகம் வேணாமுன்னு ஆகிப்போச்சோ? ஆரத்திப் பாட்டு மேடையில் முழங்குது .... மக்கள்ஸுக்கு நிலநடுக்க டிப்ரஷனோ என்னவோ?
உள்ளூரில் நடனப்பள்ளி நடத்தும் தோழி அனுவின் பரதநாட்டியத்தைத் தவிர வேற நிகழ்ச்சி ஒன்னும் ரஸிக்கும்படியா இல்லை:( சாப்பாடும் இதே கதியில்தான்............. எம்.பி. அம்மாவும் வேற ஒரு நிகழ்ச்சிக்குப் போகணுமுன்னு சொல்லி தப்பி ஓடிட்டாங்க. ஒன்பது மணி அளவில் நாங்களும் 'எஸ்' ஆனோம்.

அசல் தீபாவளிநாள் வந்துச்சு. மாலை ஆறரைக்குக் கோவிலுக்குப் போனோம். வழக்கமான லக்ஷ்மண ரேகையைக் காணோம். வரிசையா குடும்ப சமேதரா பக்தர்கள் உட்கார்ந்திருக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் முன்னால் ஒரு தட்டு. ஒரு பெரிய கொட்டைப்பாக்கு, பூக்கள், குங்குமம், விபூதி, சிகப்பு நூல் கயிறுகள், மூணு சின்ன கிண்ணங்களில் ஒன்னில் தண்ணீரும், இன்னொன்னில் அரிசியும், ஒன்னு காலியும்.
கோவில் பண்டிட் மந்திரம் சொல்லச்சொல்ல அதை ரிபீட் பண்ணறோம். என்ன செய்யணுமுன்னு அவர் சொல்லச்சொல்ல அதைச் செய்யறோம். அரிசி அபிஷேகம் எல்லாம் அந்தக் கொட்டைப்பாக்குக்குத்தான். அந்த நிமிஷம் அது பெருமாள்! கூட்டு ஆக்ட்டிவிடி. நல்லாவே இருந்துச்சு. கூடவே மனத்திருப்தியும்தான். கோவிலின் தன்னார்வலத் தொண்டர்கள் 'மொழி' புரியாத மக்களுக்கு என்ன செய்யணுமுன்னு சொல்லி உதவி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. ஆரத்தி முடிஞ்சு, ரெண்டு இனிப்புகளோடு சாப்பாடும் அங்கேயே!

மூணு நாள் கழிச்சு ஞாயிறன்று அன்னக்கூட் திருவிழா. அடுக்கடுக்கா படிகள் கட்டி தட்டுகளில் பலகாரங்களின் கொலு! கோவர்தன பூஜைன்னு வடக்கே செய்யறாங்க பாருங்க அதுதான் இது. பொதுவா தீபாவளிக்கு மறுநாள் இந்த விழா நடக்கும். ஆனால்....இங்கே நாங்கதான் வீகெண்ட் மனிதர்களாச்சே! ஆக்லாந்து நகர் ஸ்வாமிநாராயண் கோவில் குரு'ஜி' (பூர்வ ஜென்ம நாஸா சயிண்டிஸ்ட்) வந்துருந்தார். அங்கே இருந்தே ஒரு பஜனை கோஷ்டியும். ரொம்ப அருமையான பஜனைப்பாடல்கள் நிகழ்ச்சி. ரெண்டு மணி நேரம் போனதே தெரியலை
இந்த BAPS ஸ்வாமி நாராயண் கோவில் ஆமடாவாடில் ஆரம்பிச்சு அம்பது வருசமாச்சாம். ரெண்டாயிரத்து ஐநூறு வகைகள் செஞ்சு வழிபாடு நடத்துனாங்களாம். ஆனால் எண்ணிக்கை முக்கியமில்லை. எவ்வளவு அன்போடும் பக்தியோடும் செய்யறோம் என்பதுதான் அதிமுக்கியமுன்னு சொல்லி எங்க மனசில் பாலை வார்த்தார் குரு'ஜி'. ( இன்னிக்கு லக்ஷ்மண ரேகா திரும்ப வந்துருச்சு) அதானே....இங்கே கோவில் ஆரம்பிச்சே 'கால் வருசம்'தானே ஆச்சு! நாங்களும் அவ்வளவு கணக்கா இல்லை. ஒரு நூத்தியம்பது வகை செஞ்சு அசத்தி இருந்தோம்.
வழக்கம்போல் பிரிவினை:-)

பரிமாற ஆரம்பிச்சு, முடிக்க வகை இல்லாமல் தட்டுதட்டாத் தீனிகளை மேசையில் நிறைச்சு வேணுங்கறதை எடுத்துத் தின்னுங்கன்னு கடைசியில் முடிஞ்சது உடம்பில் சக்கரை எட்டிப்பார்க்க ஆரம்பிச்சுருக்கேன்னு நானும் கவனமா ஒரு ஏழெட்டு வகையோடு நிறுத்திக்கிட்டேன்.இனி அடுத்த அன்னக்கூட் வரை இனிப்பைக் கண்ணால் மட்டும் தின்ன முடிவு.
20 comments:

said...

//இனி அடுத்த அன்னக்கூட் வரை இனிப்பைக் கண்ணால் மட்டும் தின்ன முடிவு.//

:) ம் காட்சியும் இனிமை தானே, கண்களுக்கு விருந்து

said...

டைமிங் நம்ம தேசிய உரிமை ஆச்சே... :) எப்பவும்போல மெதுவாகத் தான் ஆரம்பிப்பாங்க... :)

கண்ணாலேயே தின்ன முடிவு... எங்களுக்கு வேற வழியில்ல... உங்க பக்கம் வந்து கண்ணாலேயே தான் சாப்பிட்டோம்... :)

நல்ல பகிர்வு டீச்சர்.....

said...

அன்னக்கூட்.... ம்ம்ம்

நல்லாத்தான் கொண்டாடியிருக்கீங்க. எனக்கென்னவோ நீங்க இளைச்சா மாதிரி தெரியுல போட்டோவுல.

said...

அக்கா உண்மையிலேயே இளைச்ச மாதிரி இருக்குது. உடம்பைக் கவனிங்க..

ரெண்டு மாசம் தீபாவளியா!! ஜமாய்ங்க :-)

said...

//எனக்கென்னவோ நீங்க இளைச்சா மாதிரி தெரியுல போட்டோவுல.//

அவங்களுக்கு போட்டோவுல குண்டாகிற techniqueஅ சொல்லித்தரலியா டீச்சர் :-)

அன்னக்கூட்ல உங்க இனிப்பு எது டீச்சர்.

said...

ரசித்துப் படித்தேன் துளசி.
ஸ்வாமி நாராயணன் கோவில் அதன் தத்துவம் எல்லாம் நன்றாகச் செழிக்கணும்.
இளைத்தால் நல்லதுதான்.சரியான காரணம் வேண்டும். சுகர் எப்பவும் செக் செய்துக்கறது நல்லது.
பதிவு கலர்ஃபுல் பா.

said...

// 'ரன்னிங் லேட் அஸ் யூஷுவல்'ன்னு சொல்லிவச்சேன்.//

ஹி. வேற என்னத்த சொல்ல?

நல்ல பகிர்வு.

said...

இந்தக் கணக்கில் ஒரு வருசம் 13 தீபாவளிகூட கொண்டாடி இருக்கோம். முழுசா ரெண்டு மாசம் ஆச்சு கொண்டாடி முடிக்/

ரொம்ப ஓவரா இருக்கே!!

said...

ஜாலியா எம் பி கூடெல்லாம் பேசி போட்டோ எடுத்த அழகே அழகு.
எங்க எம் பி எப்படி இருப்பார் என்று கூட எங்களுக்கு தெரியாது. ;-)

said...

தீபாவளி அமர்களம்.:)

said...

வாங்க கோவியாரே.

கண்களுக்கு மட்டுமா? மனதுக்கும்தான் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நன்றி.

said...

வாங்க புதுகைத்தென்றல்.

கொஞ்சம் இளைப்புதான். பழைய உடுப்புகளுக்குள்ளே மீண்டும் நுழையமுடியுதான்னு பார்க்கணும்:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஹூம்....அது அந்தக் காலம். ஃபிப்ரவரி 22 எல்லாத்தையும் புரட்டிப்போட்டுருச்சுப்பா.

said...

வாங்க R S.

என் வருகையே அங்கே பெரிய இனிப்புக்குச் சமம் இல்லையோ:-)))))

கோவிலுக்குச் சிலைகள் வரப்போகுது. அதனால் செலவுகளில் சின்னப் பங்களிப்பு நம்முடையது.

said...

வாங்க வல்லி.

திடீர் இளைப்பெல்லாம் இப்போ ஒரு நிலைக்கு வந்துருச்சு. நானும் நிலையை முழுசும் புரிஞ்சுக்கிட்டேன்:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

உங்கள் நட்சத்திரப்பதிவுகள் அனைத்தும் அருமை!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

எல்லாத்தையும் கொஞ்சம் ஓவராவே செஞ்சு பழகிட்டோம். இந்த வருசம் அதுக்கெல்லாம் ஆப்பு வச்சுருச்சு இயற்கை:(

said...

வாங்க வெற்றிமகள்.

இந்தமுறையும் பொதுத் தேர்தலில் அவுங்க ஜெயிப்புதான். முந்தாநாள் நியூஸி தேர்தல் நடந்தது. இரவு 12 க்கு முன்பே ரிஸல்ட்டும் வந்துருச்சு.

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா.