Wednesday, August 20, 2025

மகளுடன் ஒரு மாலை..... (2025 இந்தியப்பயணம் பகுதி 60 )

காலையில் கண்விழிக்கும்போதே மனசு கொஞ்சம் பரபரப்பாக இருந்தது.... இந்தியாவுக்குள்ளே எங்கே இருந்தாலும் வந்து பார்ப்பேன்னு சொன்ன 'மகள்'  வர்றதா செய்தி அனுப்பியிருந்தாங்க.    
வழக்கம்போல் ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போய் வந்துட்டு, சிகிச்சைக்குக் கிளம்பினோம்.  இன்றைக்கு அங்கேயும் நமக்குக் கடைசி நாள்தான்.  அடுத்த பயணத்தில் தொடரணும். அதுவரை  தைலம், கிழிக்கான பொடி வகைகள் எல்லாம்  கொண்டுபோய்ப் பயன்படுத்தணும் என்பது டாக்டர் அறிவுரை. 

இங்கிருந்து தைலம் கொண்டுபோவதில் கொஞ்சம் சிரமம் இருக்கு.....  அதனால்  நியூஸி வடக்குத்தீவில் இருக்கும் கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலாவில் இருந்து வாங்கிக்கணும்.   இந்த வலி ஆரம்பிச்சவுடனே..... மருத்துவ ரிப்போர்ட் அனுப்பியதில்,  ஹேமில்டன் என்னும் ஊரில் இருந்து  தைல வகைகளும், கிழிக்கானப் பொடி,   அரிஷ்டம் , லேஹ்யம் எல்லாம் வந்து, அதைத்தான்  இந்தியப்பயணம் போகும்வரை பயன்படுத்திக்கிட்டு இருந்தேன்.  இதை  சென்னை மருத்துவமனை தலைமை டாக்டரிடமும் சொல்லி இருந்தோம்தான். 

இன்றைய சிகிச்சையில் கிழி வைத்தியம்  முடிஞ்சதும்,  இங்குள்ள டாக்டர் ஒருவர், தொடர்ந்து செய்யவேண்டிய உடற்பயிற்சிகளைச் சொல்லிக்கொடுத்தாங்க. அதுக்குப்பின்  கால்களில் பத்துப்போட்டுக் கட்டிவிடுவதும் ஆச்சு. 

மருந்துப்பொடிகளை மட்டும் வாங்கிக்கிட்டு, எல்லோருக்கும்  பைபை சொல்லிட்டுக் கிளம்பினோம். நம்ம ஆட்டோக்காரர் வந்து கூட்டிப்போனார். 

                          
லோட்டஸ்  போனதும்,  மதிவாணன்  (செக்யூரிட்டி ) வந்து நலம் விசாரிச்சார்.  ரொம்ப நல்லமாதிரி மனிதர்.   கையில் ஒரு பை இருந்தாலும் போதும்.... வாங்கிப்போய்  நம்ம அறையில் வச்சுருவார்.  நாம் லோட்டஸில் தங்கத் தொடங்கிய நாளிலிருந்து நமக்குப் பரிச்சயமானவர்தான். ஆச்சுல்லே பதினாறு வருஷம்.  
மகள் வர்ற செய்தி கிடைச்சதும்,  இங்கேயே லோட்டஸில் ஒரு ரூம் ஏற்பாடு செஞ்சுறலாமுன்னு நம்மவர் சொன்னார்.  கொஞ்சம் நிதானமாப் பேச நேரம் கிடைக்கும், இல்லையோ !  கீழே,  அறைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னதில்......  'இங்கே அறை ஏதும் காலி இல்லை...... பர்கிட் ரோடுலே இருக்கும் லோட்டஸில் போடவா'ன்னு  கேட்டார் வரவேற்பில் இருந்த கணேஷ். அப்புறம் மேனேஜரைப் பார்த்து விவரம் சொன்னதில்  இங்கேயே  ஒரு அறை கிடைச்சது.  இவரும் நமக்கு பதினாறு வருஷ நண்பர்தான் ! 

மூணு மணிக்கு விஜி வந்தவுடன் கிளம்பிப்போய்  நம்ம காஃபிக்கடையில் ஒரு டீ குடிச்சுட்டு வந்தோம்.  மகள்,  வர்றதுக்கு  அநேகமா  அஞ்சு , அஞ்சரை ஆகிருமுன்னு  சொல்லியிருந்தாங்க. அப்பப்ப எங்கே இருக்காங்கன்னும் செய்தி அனுப்பிக்கிட்டே இருந்தாங்க.  உண்மையில் கிளாம்பாக்கம் வந்ததும்  செய்தி அனுப்பினவங்க,  லோட்டஸ் வந்து சேரவே ரெண்டுமணி நேரம் ஆகியிருந்தது.  மணி ஆறு !    காலையில்  ஆறரைக்குக் கிளம்புனாங்களாம்.   மழை காரணம் எல்லாமே  தாமதம்தானாம்.   சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், நியூஸியில் இருந்து சிங்கை வந்து சேர எடுக்கும்  நேரம் ! 

மகளும் மாப்பிள்ளையும் வந்ததும்  ரொம்ப மனநிறைவாக  இருந்தது உண்மை.  'ரொம்பக் களைப்பாக இருக்காங்க.... கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்'னு  அவுங்களை விட்டுட்டு,  சின்னதா ஒரு ஷாப்பிங் செய்ய பாண்டிபஸார் போனோம்.  கீதா  கண்ணில் பட்டது..... பட்டதுன்னு சொல்லமுடியாது..... எப்ப நாம் பாண்டிபஸார் போனாலும்  கீதாவுக்கு நேரா எதிர்வாடையில்தான்  பார்க்கிங் கிடைக்கிறது.  
நம்மவர் ஆசைக்காக,  சாலையைக் கடந்து அங்கே போய் ஆளுக்கொரு ப்ளேட் வெங்காய பஜ்ஜி !  இந்தப்பயணத்தில் இதுதான் கடைசின்னு.... சொல்லலாம். கொஞ்சம் பூ வாங்கிக்கிட்டு லோட்டஸ் வந்துட்டோம்.  மகள் ஒரு ஷவர் எடுத்துக்கிட்டு ஃப்ரெஷா நம்ம அறைக்கு வந்தாங்க. 
கைவினைப்பொருட்கள் முக்கியமா அலங்கார வகைகள் செய்வதில் கில்லாடி.  குந்துமணி போல ஒரு விதையில் செஞ்ச  மணிச்சரம் எனக்கு !  இங்கே நியூஸியில், ஒரு இலை, பூ, காய், கனி, விதைன்னு எதுக்கும் அனுமதி இல்லை என்பதால்.... நம்ம பால ராமனுக்குக் கொஞ்ச நேரம் போட்டு வச்சேன்.  அவனோட ஆசிகள்  மணிமாலையாகத் திரும்ப மகளுக்கேப் போகட்டும் ! 

ஆன்லைன் பிஸினஸ் செய்யறாங்க. சரா ஃபேஷன்ஸ் என்ற பெயரில் . என்னுடைய புடவைகள் பெரும்பாலும் மகளிடம் வாங்கியவையே !  அப்பப்போ தெரிவு செய்வதை எடுத்து  வச்சு, ஒரு ஏழெட்டு சேர்ந்ததும், எனக்குப் பார்ஸல் அனுப்பிருவாங்க. இந்த முறை பார்ஸல் இல்லை. நேரில் கொண்டுவந்து கொடுத்தாச்சு.  

சில வருஷங்களுக்கு முன்னால்..... ஒரு புடவை வாங்கிட்டு,  அதுலே இருக்கும் புள்ளையார் டிசைனை, ப்ளௌஸ் துணியில் போட்டுத்தரேன்னு சொல்லி எடுத்து வச்சது.... (நான் ஏறக்கொறைய இதை மறந்தே போயிருந்தேன் ! )இன்றைக்குக் கிடைச்சது.  என்ன ஒன்னு..... கடைசி நேரமாப் போனதால் டெய்லரிடம் தைக்கக்கொடுக்க முடியலை.....     

முந்தியெல்லாம் எனக்கான துணிமணிகளை நானே தைச்சுக்குவேன். மகளோட ஹைஸ்கூல் படிப்பு  முடியும்வரை அவளுக்கான உடுப்புகளை ஸ்கூல் யூனிஃபார்ம் உட்பட நானே தைப்பதுதான்.  உடல்நலம் சரியில்லாமப் போனதால்  இப்பக் கொஞ்ச காலமா..... வெளியேதான் தைக்கக் கொடுக்கிறேன். ப்ச்.....
மேலே படம்:  வலையில் இருந்து !

எல்லோருமாக் கிளம்பி, திநகரை ஒரு சுத்து சுத்திட்டு,  வெங்கடநாராயணா சாலையில் இருக்கும் திருப்பதி தேவஸ்தானக் கோவிலுக்குப் போனோம். தள்ளுமுள்ளு இல்லாமல் நல்ல தரிசனம்  கிடைச்சது. அங்கேயே இருக்கும் தேவஸ்தான கடையில் இருந்து, ஒரு பெருமாள் 'நல்லா இருக்கணும்' என்ற  ஆசிகளுடன்,  மகள் வீட்டுக்குப் போறார்.  
இரவு டின்னர், சங்கீதாவில்.  மகளுடைய பெயரும்  இதுதான் :-)

திரும்பி லோட்டஸ் வந்து நம்ம அறையில் பத்தரை வரை அரட்டைதான் ! 

 தொடரும்........ :-)

0 comments: