Monday, August 11, 2025

நட்புகளும் உறவுகளும்...... (2025 இந்தியப்பயணம் பகுதி 57 )

இன்றைய அரைநாள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும்தான் !  ஊர் ஊராய் மாநிலம் விட்டு மாநிலமாப் போய்க்கிட்டு இருந்த வாழ்க்கைப் பயணத்தில் அந்தந்த சமயத்தில் கிடைச்ச நட்புகளைத் தொடர இயலாத  நிலைதான்.  முந்தி ஒரு காலத்தில் பேனா நட்புன்னு இருந்தது யாருக்காவது நினைவிருக்கா ?
 முகமறியா நட்பு.அதுக்குமே கொஞ்சம் மெனெக்கெடத்தான் வேணும். 
இணையத்தொடர்பு வந்ததும்தான், பழைய நட்புகளைத் தேடிப்பிடிப்பது கூட நடக்குது, இல்லே ?  வாழ்க்கையில் வந்த வசந்தம் போல.... யாஹூ குழு ஆரம்பிச்சு,  அதில் நம்ம தோழி  மதி கந்தசாமி நட்டு வைச்ச மரத்தடியில்  கூடியிருந்து , அதில் 'சந்திச்சு' நட்பானவர்கள் பலர். ஒவ்வொருவருக்கும்  மனதில் இருக்கும் ' எழுதும் தாகத்தை'த்  தீர்த்துக்கொள்வதுடன்,  மற்றவர்  எழுதுவதை வாசித்துப் பாராட்டி, 'ஊக்கு' விச்சுக்கிட்டு இருந்தது எல்லாம் நினைவிருக்கோ ?  

அப்புறம் கொஞ்சநாளில் 'தமிழ்மணம் 'என்றொரு மேடையை நமக்கு அளித்தார் காசி ஆறுமுகம்.  முழுமரத்தடியும்  இங்கே இடம்பெயர்ந்தோம்.  அவரவருக்குத் தனி வீடு  ஆச்சு! ஆரம்பமானது எங்கள் அட்டகாசம் !   'நாங்க மரத்தடி மக்கள்'னு சொல்லிக்கறதுலே ஒரு பெருமை வேற !  அந்த உணர்வு இப்பவும் இருக்குதான் !   வெளிநாடுகளிலோ, வெளியூர்களிலோ  மற்ற நட்புகளை சந்திப்பது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுன்னு ஏதோ வீட்டு விசேஷத்துக்குச் செய்வது போலத்தான்  உற்சாகமாக ஓட்டம் !  ஹூம்..... அதெல்லாம் ஒரு காலம்......

முதல் இணைய மகாநாடு நடத்தியதெல்லாம் நினைவிருக்கா ? 

https://thulasidhalam.blogspot.com/2005/03/blog-post_31.html

ஆனால் அந்த மரத்தடி மக்கள், 'நண்பர்களாக'  இப்ப இல்லை. எல்லோரும் குடும்ப உறவாக மாறியிருக்கோம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத குடும்ப உறவு.  அன்பே ப்ரதானம் ! 

இந்த உறவில் நம் மறுபாதிகளுக்கும் இடமுண்டு ! நம்மவர்,  சிலவெளிநாடுகளுக்கு வேலை விஷயமாப் போகும் போது, அங்கே  இருக்கும் நம்ம  மக்கள், அவரை வந்து சந்திச்சு, விருந்து உபசாரங்கள் எல்லாம் நடத்தியிருக்காங்க !!!

ஊருக்குத் திரும்பும் நாள் சமீபிக்கிறது.  இந்த முறை  கூடுதல் லக்கேஜுக்காக ஏர்லைன்ஸுக்கு பணம் கட்டப்போறதில்லை.  வரவர அவுங்க செய்யும் அக்ரமம்  கூடிக்கிட்டே போகுது.  நாம் நியூஸியில் இருந்து  வரும்போது  முப்பது கிலோ வரை கொண்டு போகலாம்.  எங்க ரெண்டு பேருக்கும் அறுபது கிலோ. ஆனால் என்னத்தைக் கொண்டு போக ?   இங்கே என்ன இருக்கு ? எங்க ரெண்டுபேர் பெட்டிகளும் சேர்ந்தே  முப்பது கிலோ வர்றதில்லை.  பேசாம ரெண்டு ஆட்டுக்குட்டிகளைத்தான் கொண்டு போகணும்.....

ஆனால் திரும்பி வரும் பயணத்தில் ஆளுக்கு இருபத்தையஞ்சு கிலோதான் அனுமதி.  ஆளுக்கு அஞ்சுன்னு பத்துகிலோ போச்சு.  கூடுதல் லக்கேஜுக்கு  முதலிலேயே பணம் கட்டினால்  கொஞ்சம்  பரவாயில்லையாம். ஆனால் ஏர்ப்போர்ட்டில் செக்கின் சமயம்  கூடுதல் கனத்துக்குச் செலவு, ரெட்டிப்பு ! 

இந்தப்பயணத்தில் நடுவில் ஒருமுறை,  ஒரு பார்ஸல்  கம்பெனி மூலம்  மகளுக்கு அனுப்பிய பொருட்கள்  நல்லபடியாகப்போய்ச் சேர்ந்ததை மனசில் வச்சுருந்து,  இந்த முறையும் நம்ம அம்பது கிலோவுக்கு மேல் இருப்பதை பார்ஸலில் அனுப்பிடணும்.  அதனால் ஷாப்பிங் செஞ்சுக்கறதை முதலில் முடிச்சுக்கிட்டால்  பார்ஸலை அனுப்பிடலாம். வந்து சேர  எப்படியும் ஒரு வாரம், பத்து நாள் போல ஆகும் என்பதால்.....நியூஸி கிளம்ப ரெண்டு மூணு நாள் இருக்கும்போதே  அனுப்புவது உசிதம்னு திட்டம்.  வழக்கம்போல் குடும்பம் & நண்பர் கார்த்திகேயன் உதவிக்கு வருகிறார்.  இந்தக் கூரியர் கம்பெனியும் அவர் கண்டுபிடிச்சதுதான் ! 

நமக்குக் கூடுதலா சில ஜோடி செருப்புகள், ஷூ ன்னு வாங்கியாச்சு. மதியம் மூணு மணிக்கு  நம்ம தோழி ,  சிங்கை  எழுத்தாளர் ஜெயந்தி சங்கரை,  எழுத்தாளர்  ராமசந்திரன் உஷா  அவர்கள் வீட்டில் சந்திக்கறோம். எழுத்தாளர் அருணா சீனிவாசன் அவர்களும்  கலந்து கொள்கிறார்கள்.  எல்லோரும் நம்ம மரத்தடி மக்கள்னு தனியாச் சொல்ல வேணாம்தானே ? 
பேச்சும் சிரிப்பும்  தீனியும் காஃபியுமா நேரம் ஓடியே போச்சு !  உஷா வீட்டுச் செல்லம் என்னைக் குசலம் விசாரிச்சது.  

                                           
அங்கிருந்து புறப்பட்டு வேளச்சேரி.  நாத்தனார் வீட்டுக்குப்போய் , போயிட்டு வரேன்னு சொல்லிக்கிட்டோம்.  


அதன் பின்  மச்சினர் வீடு.  அவுங்களுக்கும் பேரன் பிறந்துருக்கான். நம்ம இவனைவிட ஒரு மூணு வாரம் பெரியவன் ! 
குழந்தை அங்கே இருந்ததால்.... கொஞ்சம் அதிகநேரம் இருந்துட்டுக் கிளம்பியாச்சு. 
போறவழியில் க்ரீம் ஸ்டோரின்னு ஒன்னு கண்ணில் பட்டது. ஊஞ்சல் போட்டுருக்காங்க !  இன்னொருநாள் வரணும். மூளையில் முடிச்சு !

இன்றைய டின்னர் நமக்கு ஸ்ரீகுப்தா பவனில் !   அவரவருக்கு வேண்டியதைச் சொன்னோம். 


நல்ல சுத்தமான  இடமும் உணவும்தான் ! கொஞ்சம் சுடச்சுட ஜலேபியும் கிடைச்சது !

 லோட்டஸுக்குத் திரும்பும் போது மணி பத்து !

தொடரும்........... :-)

0 comments: