Friday, August 31, 2018

ஜின்னா ஒரு நகைப் பைத்தியம் ! ... (பயணத்தொடர், பகுதி 3 )

பயணங்களில் குறிப்பா சென்னையில் இருக்கும் நாட்களுக்கு  மட்டும் சிலபல சம்ப்ரதாயச் சடங்குகள் இருக்குன்றதால் தொடர்ந்து வந்த சில நாட்களில்  உறவினர் வீடு,  தோழிகள் வீடு, எடுத்த துணிகளைத் தைச்சு வாங்க தையற்கடைக்குப் போய் வர்றது, இடைக்கிடையே ஒன்னு ரெண்டு ஷாப்பிங் இப்படியே போய்க்கிட்டு இருந்துச்சு. கோவில்களையும் விடமுடியாதுன்னு  அங்கேயும்தான்....

மறுநாள் வண்டி கொண்டு வந்தவர் ஜின்னா. இவரும் ஓனர் ட்ரைவர்தான்.  இவுங்களே நாலைஞ்சு பேர் சேர்ந்து தனி பிஸினெஸ்ஸா ஆரம்பிச்சுருக்காங்க போல. நம்ம சீனிவாசன், இப்போ ஒரு தொழிலதிபரிடம் முழுநேர ட்ரைவரா வேலைக்குச் சேர்ந்துட்டார்.   ஆனாலும் நாம்  தென்தமிழ்நாடு போகும்போது, அவர் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வர்றதாகவும், அதுவரை உள்ளூருக்கு சதீஷிடம் சொன்னாப் போதுமுன்னார்.  கார் சார்ஜும் கொஞ்சம் அதிகமாக இருந்ததா எங்களுக்குத் தோணல். எல்லாத்துக்கும் ஜிஎஸ்டியைக் காரணம் காமிச்சுடறாங்க... இப்பெல்லாம்.

 'நாம் நிறைய நாள் இருக்கப்போறோம். அதனால் இங்கே போகணும், அங்கே போகணுமுன்னு ஓடிக்கிட்டே இருக்காதே. நிதானமா எல்லா இடத்துக்கும் போகலாம், எல்லோரையும் பார்க்கலாம்' ன்னு  எனக்குக் காதில் உபதேசக் கச்சேரி வச்சுக்கிட்டே இருக்கார் 'நம்மவர்'.

அதுக்காக, நாம் போற இடத்துக்குப் பக்கத்துலே, போகவேண்டிய வீடு இருந்தாப் போகாம வரமுடியுதா?  அதுக்குன்னு தனியாக் கிளம்பிப் போகணுமா?  ஙே..............

அடையார் அநந்தபதுமன் கோவிலுக்குப் போறோம். 'இடம் தெரியுமா'ன்னு கேட்டதுக்கு நல்லாவே தெரியுமுன்னு  கொண்டுபோய் விட்டார் ஜின்னா! என்னுடைய இஷ்டக்கோவில் இது.  ஒரு தள்ளுமுள்ளோ, ஒரு ஜருகோ, ஒரு நகருங்கன்ற சத்தமோ இல்லாம எவ்ளோ நேரமானாலும்' கிடந்தவனை' தரிசிக்கலாம். கால் வலிகூட பிரச்சனை இல்லை. சந்நிதிக்கு எதிரே  போட்டுருக்கும்  கொலுப்படி மேடை அமைப்பில் உக்கார்ந்துக்கிட்டு, மூணு வாசல் வழியாவும் முகம், இடை, பாத தரிசனங்கள்!  மனசு போதுமுன்னு சொல்லும்வரை.....
கோவில் ரொம்ப நேர்த்தியா இருக்கும்.  பெருமாளுக்கு இங்கே குறைவொன்றுமில்லை!  கோவில் வருமானம் கோவிலுக்கே! (அறநிலையத்துறை கொள்ளையடித்தது போக!)  சாமிக் காசை தின்னும் பேராசை இல்லாத நிர்வாகம் கிடைச்சது பெருமாள் செஞ்ச புண்ணியம்.

பக்கத்துப் பேட்டையில் இருக்கும் தோழி வீட்டுக்குப் போயிட்டுப்போகலாமுன்னு இவரே சொன்னார்! ம்ம்ம்ம்  ஆகட்டும் :-)

'நம்மவரின் செல்ஃபோன் உடைஞ்சு போனதால்... தோழிக்கு  நம் வரவைச் சொல்ல முடியாமல் போச்சு.  ஆனாலும் எப்போதும் போல முகமும் மனமும் மலர அன்பான வரவேற்பு! எங்க  ரெண்டுபேர் வழியிலேயும் இவுங்க சொந்தம்!

ஆர்கானிக் மாம்பழம் ஆளுக்கொன்னு கிடைச்சது அங்கே!  இன்னும் கொஞ்சம் பழுக்கணுமாம்.  அறைக்குத் திரும்பும் வழியில் லோட்டஸாண்டை இருக்கும் பழமுதிர்ச்சோலைக்கு ஒரு விஸிட். மாம்பழமா வரிசை வச்சுருக்கு!   எதை விட? எதை வாங்க?  எல்லாத்துலெயும் ஒவ்வொன்னு!  சரியா?






காய்கறி வகைகளைப் பார்த்ததும் அடுப்பில்லையேன்னு  இருந்தது உண்மை:-) ஒத்தைக் கண்ணால் ஒரே க்ளிக்ஸ்தான்! எல்லாம் நாட்டுக் காய்கள்ப்பா !

பயணத்துக்கு மூட்டைமுடிச்சுக் கட்டும்போது  ஒரு கத்தியும் நாலைஞ்சு  ப்ளாஸ்டிக் தட்டுகளையும் கவனமா எடுத்து வச்சுக்குவார் 'நம்மவர்'.  எதுக்கு  இந்தத் தட்டெல்லாமுன்னு  கத்தினாலும், கடைசியில்  அதெல்லாம் நல்லாவே பயனாச்சுன்னு சொல்லத்தான் வேணும்.  பயணத்துக்குன்னே ஒரு மூடி போட்ட கத்தி வாங்கி வச்சுருக்கேன். பழம் நறுக்கணுமா இல்லையா?   ஆனால் பயணத்தின் போது  கத்தியை மறக்காம செக்கின் பேகில் வச்சுடணும்.  நினைவிருக்கட்டும்!

பகல் லஞ்சாகப் பழங்களை முடிச்சுக்கிட்டு,  இன்னொரு நண்பர் வீட்டுக்கு முதல்முறையாகப் போறோம். ஏற்கெனவே சில பயணங்களில் போகணுமுன்னு நினைச்சு விடுபட்டுப் போயிருந்தது.  மச்சினர் வீடு இதே ஏரியாதான். டு இன் ஒன் :-)




குழந்தை வெண்பாவுக்கு வேத்துமுகமே இல்லை!  செல்லம், பட்டு!  கிளம்பும்போதுதான் முகத்தில் சின்னதா ஒரு அழுகை, வரலாமா வேணாமான்னு எட்டிப் பார்க்குது.... ஆச்சி, ஆச்சின்னு  ஒரே அன்பு! நொடிக்கு நொடி மாறும் முகபாவனைகள்!  நவரச நாயகிப்பா !!  குழந்தைக்குச் சுத்திப்போடணும். கண் திருஷ்டி பொல்லாதது !


மச்சினர் வீட்டுக்குப் போனால்..... அங்கேயும் ஒரு ஜின்னா ! பையன்னு நினைச்சு வாங்குனது பொண்ணாப் போயிருக்கு :-) சரியான நகைப் பைத்தியம். காதுக்கம்மலில் இருக்கும் கல்லை எப்படியாவது  எடுத்துறணுமாம்!
துணிக்கடை விவரம் சொல்லி, மறுநாள்  மகளை (மச்சினர் மகளை) அவள் வேலை செய்யும் ஆஃபீஸில் வந்து கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொன்னேன்.
மறுநாள்  காலையில் ஒன்பதரைக்கு ஆரம்பிச்ச சுத்தல் ராத்ரி பத்துக்கு முடிஞ்சது.  ஜி என் செட்டி சாலையில்  இருக்கும் ஷாந்திநாத் மந்திர்லே ஆரம்பிச்சோம்.  எனக்குக் கண்ணாடி வாங்கறது, ஸ்ரீராகவேந்திரா கோவில், டெய்லர் கடை, நம்மவருக்குப் புது செல்ஃபோன், அதுக்கு கவர் வாங்கிக்கத் தனியா இன்னொரு கடை,  நேரு நகர் தோழி வீடு ன்னு.....
தோழியின் கணவருக்குக் கண்ணில் ஒரு பிரச்சனை....  'நம்மவர்' கண் கோளாறில் ரொம்பவே அடிபட்டுப் போயிட்டதால்... யாருக்காவது கண்ணில் குழப்பமுன்னா பதறிடுவார்!  அதிலும் நண்பருக்குன்னா?  போய்ப் பார்த்து விசாரிக்கணுமுன்னு போனால், சாயங்காலம்  காஃபி வரை அங்கேயே!
மகளைப் பிக்கப் பண்ணப்போனால் பக்கத்துலேயே  ஐயப்பன் கோவில் இருக்கு. இதுவரை பார்க்கலையேன்னு  அங்கே எட்டிப் பார்த்தோம். மொட்டை மாடியில் கோவில்!  கேரள ஸ்டைலில் சின்னதாக் கட்டி இருக்காங்க. கீழே இருந்துவர  சந்நிதிக்கு முன்னால்  ஒரு படிக்கட்டு வரிசை. பதினெட்டு படிகள்.  கீழே இதுக்கு ஒரு கேட்  போட்டு மூடி வச்சுருந்தாங்க. விசேஷகாலத்துலே திறப்பாங்க போல!
Pic. from google. Thanks.

 பொதுவா சனம் ஏறிவர பக்கவாட்டுலே படிகள் இருக்கு.  படம் எடுக்கக்கூடாதுன்னு  போர்டு இருந்ததால்  வண்டிக்குத் திரும்பிப்போனப்ப, அங்கிருந்து கட்டடத்தை மட்டும் எடுத்தேன்.
மகளைப் பிக்கப் பண்ணிட்டுப் பாண்டிபஸார் வந்தால் ரெண்டுநாளைக்கு முன்னால் பார்த்து வச்ச ஜிமிக்கிகம்மலைக் காணோம்.  வந்த அஞ்சாறு செட்டும் வித்துப்போச்சாம்.  பாவம் பொண்ணு.... ஆசைப்பட்டாளேன்னு பார்த்தால்....  ப்ச்.................

வேறொரு செட் பிடிச்சுருக்குன்னு வாங்கியாச்.  ஆகிவந்த கீதா கஃபேயில்  தோசை வகையறாக்களை முடிச்சுட்டு வீட்டுலே கொண்டுபோய் விட்டுட்டு வந்தோம்.  அவுங்க  பேட்டையில் இப்போ  எல்லாவிதமான கடைகளும் வந்து அதுவே ஒரு குட்டிச் சென்னையா ஆனதால் இங்கெல்லாம் வர்றதே இல்லையாம்.  போதாததுக்கு ஒரு பெரிய மால் வேற!   வேளச்சேரி த க்ரேட்  !
சிவபூஷணம் அம்மா,  நாகலாபுரத்து நாவல்ஸ் விக்கறாங்க !
 இளநியை ஆட்டோக்காரர்  பாலசுப்ரமணியம், வெட்டித் தர்றாரேன்னு நினைச்சால்.... கடைமுதலாளி சாவித்தியம்மாவின்  மகனாம் இவர்!
அடுத்து வந்த ரெண்டுநாட்களும்.... இளநீர் குடிக்கறதென்ன,  நாவல்பழங்கள் வாங்கித் தின்னுறதென்ன,  விதவிதமான மாம்பழங்களைக் கெமெராக் கண்ணால் தின்னுறதென்னன்னெ ஓடிப்போயிருச்சு. இதுலே ஒருநாள் சாயங்காலம்  மட்டும் சாலிக்ராமம் போய் வந்தோம். எப்பவும் நம்ம சாரி மாமா (பூனா மாமா) வீட்டுக்கு வழக்கமாப் போறதுதான். அப்படியே நம்ம காவேரி விநாயகருக்கு ஒரு கும்பிடு. இந்த ரெண்டும் இல்லாம இன்னொரு வீடும் அங்கே எனக்கு ஆப்ட்ருக்கு!  ஒரு தம்பி கிடைச்சுருக்கார்.  தம்பி பையன் மூலமாகவே தம்பி கிடைச்சுருக்கார்னு சொல்லலாம்.
நம்ம ஸ்ரீதர்( விஷ்ணு சகஸ்ரநாமம் முழுசும்  மனப்பாடமாச் சொல்வார்! ) இங்கே எங்கூருக்குப் படிக்க வந்தது முதல் அவர் குடும்பம், நம்ம குடும்பமாத்தான்  இருக்கு :-) படிப்பு முடிஞ்சு, போன வருசம் நடந்த மகள் கல்யாணத்துக்கு  வந்த கையோடு, துபாய்லே வேலை கிடைச்சுப் போயிட்டார்.

இப்ப  ஒருவாரம் லீவுலே  சென்னைக்கு வந்துருக்கேன்னு சேதி அனுப்பினார். ரெண்டுநாளில் கிளம்பணுமாம். அதுக்குள்ளே போய் பார்த்துட்டு வரணுமுன்னுதான் போனது.
திருப்பதி மொட்டை, இறைவனிடம் கையேந்தும் ஸ்டைல் பாருங்க.  தேசத்துக்கேத்த வேசம் :-)

மாமா பேரனுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்கு. செப்டம்பர் கல்யாணம். நாம் இருக்க மாட்டோம். அதுக்காக, நமக்கு  வச்சுக் கொடுக்கவேண்டியதைக் கொடுக்காமல் இருக்க முடியுமோ?  எனக்கொரு புடவை, இவருக்கொரு ராம்ராஜ் வேஷ்டி. மாமா,மாமி இருந்த காலத்திலும் சரி,  வீட்டு விசேஷங்களிலும், கோவில் விசேஷங்களிலும் நமக்குச் சேர வேண்டியதை எடுத்து வச்சு, எத்தனை வருசம் கழிச்சுப் போனாலும் கொடுக்கும் பழக்கம் இன்னும் குடும்பத்தில் பாக்கி இருக்கு பாருங்க !
நம்ம காவேரி விநாயகர், மாமா சென்னையில் வீடு கட்டிப் போனது முதல் கூடவே இருக்கார்.  மாமாதான் கோவில் ட்ரஸ்டி அப்போ! இப்ப பிள்ளையும் ஒரு அங்கம்.   குட்டியூண்டு புள்ளையார் கோவிலா இருந்தது மெல்ல மெல்ல வளர்ந்து ஏகப்பட்ட சந்நிதிகளோட இருக்கு.   தற்சமயம் கோவிலில் சந்நிதிகளையும், ராஜ கோபுரத்தையும் விட்டுட்டு, மத்த இடங்களை முழுசுமா இடிச்சுட்டுத் திரும்பக் கட்டி எழுப்பும் வேலை நடக்குது.  மழைகாலத்தில் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து பாழாக்கிடுதுன்னு, இப்பத் தரையை அஞ்சடிக்கு  உசத்திக் கட்டறாங்க.


அடுத்தமுறை போகும்போது  புள்ளையார்அட்டகாசமா இருப்பார்! இருக்கணும்!
கோவிலை எட்டிப் பார்த்துட்டு, ஸ்ரீதர் வீட்டுக்குப் போய் திரும்பறதுக்குள்ளே  ரேணு (மாமாவின் மருமகள்)என் ஃபேவரிட்டான  அரிசி உப்புமா பண்ணி வச்சுட்டாங்க!   நமக்கு ஸ்ரீதர் வீட்டுலேயெ ராத்ரி டிஃபன் ஆச்சு.  அசோகா ஹல்வா, தேங்காய் ஸேவை,  வெஜிடபுள் போண்டா, தச்சு மம்மு! (விஸ்வநாத் கவனிக்க!)

அதுக்காக அ. உ வை விடமுடியுமோ? பார்ஸல் ப்ளீஸ்!  தொட்டுக்க ஆவக்காய் ஊறுகாய். மாமி காலத்துலே அ.உ. வுடன்  மாங்காய் இனிப்பு ஊறுகாய்தான் எப்பவும்.
நல்லவேளை, லோட்டஸில் நம்ம அறையில் ஃப்ரிட்ஜ் இருக்கு :-) மறுநாள் டின்னர் சூப்பர்!  உடனே பாபுவுக்கு சேதி அனுப்பினேன்....

UN 21ST, 5:06AM
Babu,  that அரிசி உப்புமா  &  ஆவக்காய்  superb !!!   It was our dinner  today!!!
ரேணுவுக்கு  மாமியோட கைப் பக்குவம் 95% வந்தாச்சு😊😊😊😊

தொடரும்..... :-)


21 comments:

said...

மைக் டெஸ்ட்டிங்...... அ ஆ இ ஈ

said...

இன்று பிளாக்கர் டாட்காமிலிருந்து ஒரு மெயில். உங்கள் தளத்துக்கு உங்கள் மெயில் பாக்ஸுக்கு மெயில் வருவதை தொடர விரும்புகிறீர்களா என்று கேட்டு. நம்ம ஏரியா, எங்கள் பிளாக் இறந்த தளங்களுக்கும் வந்திருந்தது. தொடர விரும்புகிறேன் என்று பதில் க்ளிக் செய்தேன். டிக் போடாமலேயே மெயில் பாக்ஸுக்கு பின்னூட்டங்கள் வர ஆரம்பித்து விட்டன.

said...

ஷாந்திநாத் மந்திர, அய்யப்பன் கோவில் இரண்டுமே பார்த்ததில்லை.

said...

வாங்க ஸ்ரீராம்.

நேத்து எனக்கும் அப்படி ஒரு மெயில் வந்தது. ஆம் என்று சொன்னேன். ஆனாலும் எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு டிக்கும் இன்று :-)

said...

@ ஸ்ரீராம்.

ஷாந்திநாத் மந்திர் அடிக்கடி போவேன். அய்யப்பன் இதுதான் முதல்முறை!

said...

// நம்ம ஏரியா, எங்கள் பிளாக் இறந்த தளங்களுக்கும் வந்திருந்தது. //

இரண்டு என்று வாசிக்கவும்... மன்னிக்கவும்!

//ஆனாலும் எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு டிக்கும் இன்று :-)//

அப்படீன்னா இப்போ இரண்டிரண்டு முறை உங்கள் மெயில் பாக்ஸுக்கு மெயில் வரும்!!! செக் பண்ணிட்டு டிக்கை எடுத்துடலாம்! எனக்கு டிக் போடாமலேயே வர ஆரம்பித்து விட்டது. நேற்று டிக் போட்ட போஸ்டுக்கு கமெண்ட் இரண்டு முறை வந்திருக்கு!!

said...

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாப்பாளாம்! :-) டிக் எடுத்துட்டேன் :-)

said...

"கையேந்தும் ஸ்டைல்" "இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை" என்ற நாகூர் ஹனீபா பாடலை நினைவூட்டியது.

ஜெயகுமார்

said...

அருமை

said...

//விஸ்வநாத் கவனிக்க!)// கவனிச்சாச்சி. நன்றி. அருமை.

said...

வழக்கம்போல இனிமையான பயணத்தில் உங்களுடன் வந்த நிறைவினை ஏற்படுத்திய பதிவு.

said...

காலில் சக்கரம்தான் நீண்ட தங்கல் எல்லாம் சென்னையில்மட்டும்தானா எங்களூரிலும் உங்க ளுக்கு உறவுகள் உண்டே

said...

சுகமான தொடக்கம். வழக்கமான ஓட்டுனர் இல்லாதது ஒரு குறைதான் இல்லையா....

said...

// எல்லாத்துக்கும் ஜிஎஸ்டியைக் காரணம் காமிச்சுடறாங்க... இப்பெல்லாம். //

அது உண்மைதான் டீச்சர். ஜிஎஸ்டி இம்பிளிமெண்டேஷன் அந்த லட்சணத்துல பண்ணீருக்காங்க. அந்தக் கொளறுபடியால விலையேத்தம் வந்து விழுந்ததென்னவோ மக்கள் தலைல. :(

அடையாறு அனந்து, பழமுதிர்ச்சோலைன்னு வீட்டுக்கு ரொம்பப் பக்கமா வந்திருக்கீங்க. அடுத்த முறை வீட்டுக்கும் வரவும். இதையே அன்பு அழைப்பாகவும் எடுத்துக்கொள்ளவும். :)

தோளில் கிளி உட்கார்ந்திருப்பது அழகு.

said...

வாங்க ஜெயகுமார்,

எனக்கும் அப்படித்தான் தோணுச்சு :-)

said...

வாங்க நாகேந்திர பாரதி,

வருகைக்கு நன்றி!

said...

வாங்க விஸ்வநாத்.

கவனிச்சதுக்கு நன்றி :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

இந்த முறை பெங்களூர் உறவுகள் சென்னைக்கு வந்துருந்தாங்க நம்மை சந்திக்க. அதுதான்

நாங்க மைஸூருக்கு நேராப் போயிட்டோம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உண்மையிலேயே சீனிவாசன் இல்லாதது பெரிய குறைதான். பயணம் அவ்வளவா அருமைன்னு சொல்ல முடியாது...

said...

வாங்க ஜிரா.

அடையார் கோவிலாண்டையா? ஆஹா... அடுத்தமுறை சந்திக்கலாம் !

மச்சினர் மகள் சொன்னதைப் பொய்யாக்கிருச்சு ஜின்னா. யாருகிட்டேயும் போகாது பெரியம்மாவாம். ஹாஹா... யாருகிட்டே............ :-)