Wednesday, February 01, 2023

நாலாங்கேட்டைத் தேடி....(கோவிட்டுக்குபின் பயணம்) பகுதி 8


நாட்கோட்டிலிருந்து கிளம்பி நாம் ரிக்‌ஷாவில் வந்திறங்கிய (! )தெருமுனைக்கு வந்து வலப்பக்கம் திரும்பி மெயின் ரோடில் மக்களோடு மக்களாகக் கலந்து நடக்கிறோம். என்னவோ பேரணியில் போறாப்லெ இருக்கு !  இவ்வளவு கூட்டமா !
மூணே நிமிஷ நடையில் ஒரு நாற்சந்திக்கு வந்துட்டோம். கம்பீரமா உசந்து நிற்கும் காங்க்ரீட் தூணின் மேல் நந்தி ! நமக்குப் பின்பக்கம் காமிச்சுக்கிட்டு இருக்கார்.  மேலே போர்டுலே விவரம் இருக்கு.  நந்தி பார்க்கும் திசையில் நானூறு மீட்டரில்  காசி விஸ்வநாதர் கோவில் !  வலப்பக்கம்  அறுநூறு மீட்டரில் 'தஸ் அஸ்வமேத Gகாட்' !

அட!  இங்கே இப்படி நாற்சந்தி எப்ப வந்தது ?  போனமுறை (ஆச்சு எட்டு வருஷம்) நாம் இங்கே வந்தப்ப இடக்கைப்பக்கம் இருக்கும் ரோடில் ரொம்ப தூரத்துக்கு முன்னாலேயே  ஒரு வண்டியையும் போகவிடாமல் தடுப்பு வச்சுக் காவல்துறை மக்கள்  உக்கார்ந்துருந்தாங்களே.... 
அப்போதையப் பதிவு இது. நேரமிருந்தால் அன்றும் இன்றும் வாசிக்கலாம் :-)

http://thulasidhalam.blogspot.com/2014/04/blog-post_14.html

நந்தி பார்க்கும் திசையை நோக்கியே நாற்சந்தியைக் கடந்து  நாமும் போனோம். கொஞ்சதூரத்துலேயே இடப்பக்கம் காசி விஸ்வநாத் கோவிலின்  உதவி மையம் இருக்கு. 
உள்ளே போனால்  ஒரு கடைபோலவே  பயணிகள் வாங்கக்கூடிய  உலோகச் சிற்பங்களும்  ஷால், பை, ஜிப்பா போன்றவைகளுமா....  ஒரு மூலையில்  மேஜையில் கணினியுடன்  மூவர்.  விவரம் கேட்டதுக்கு  ஆதார் கார்டு எண் கேட்டாங்க. நம்ம ஓ ஸி ஐ கார்டைக்  காமிச்சதும்  ஆளுக்கு முன்னூறு  ரூபாய் கட்டச் சொல்லி, நமக்காக ஒரு பண்டிட்டையும் ஏற்பாடு செஞ்சுட்டாங்க.  பத்தே  நிமிட்டில்  எல்லாம் முடிஞ்சது. இன்றைக்கே கோவில் தரிசனம் கிடைக்குமுன்னு நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை ! 


நமக்கான பண்டிட் பங்கஜ் குமார் பாண்டே,   நம்மிடம் அறிமுகம் செஞ்சுக்கிட்டுப்  பைகளையெல்லாம்  லாக்கரில் வச்சுடணுமுன்னு அடுத்த அறைக்குக் கூட்டிப்போனார்.  நம்மவரின்  Back Pack  லாக்கருக்குள் அடங்காது என்பதால் அதை லாக்கர் ட்யூட்டியில் இருக்கும் நபராண்டை கொடுத்துட்டு,  நம்ம செல்ஃபோன்கள், ஹேண்ட்பேக் எல்லாம் லாக்கரில் வச்சுப் பூட்டினோம். சாவியை நாமே வச்சுக்கணும்.   ஃபோனை உள்ளே வைக்குமுன் பண்டிட்டை ஒரு படம் எடுத்தேன். பதில், மரியாதைக்கு நம்மை ஒரு படம் எடுத்துக்கொடுத்தார் :-)   
கோவிலில் காசுக்கு மட்டுமே அனுமதி. வேறெதற்கும் இல்லை.  பூஜைப்பொருட்களையும் விடறாங்க. ஆனால் நம்மாண்டைதான் ஒன்னும் இல்லையே.....    நம்ம கூடவே இன்னொரு நபரும் வந்தார். கர்நாடகாவாம். தனி மனிதர்.  நமக்கொன்னும் பிரச்சனை இல்லை.  

சாலையைக் கடந்து எதிர்வாடையில் ஒரு  ரெண்டு நிமிஷ நடை தூரத்தில்  கேட் 4.  வாசலில் தடுப்பு வச்சு, செக்யூரிட்டிகள் நிக்கறாங்க. கண் எதிரில் பிரமாண்டமான வாசல் பார்த்ததும்  கொஞ்சம் பிரமிச்சதும் உண்மை.  கையில் கெமரா இல்லைன்னு மனம் தவிச்சதும்  உண்மை. அதுக்காகச் சும்மா இருக்க முடியுமா ? கூகுளாரிடம் இருக்கே... கடன் வாங்கினால் ஆச்சு இல்லையோ !!!


நம்ம  ரசீது பார்த்துட்டு  உள்ளே போகக் கை காமிச்சாங்க.  பெரிய வாசலைக்கடந்து உள்ளே போனால், ஆண்கள் பெண்களுக்கான செக்யூரிட்டி செக்கப். அதை முடிச்சு இன்னொரு வாசல் வழியாக கோவில் வளாகத்துக்குள் போறோம். கண்ணுக்கு எதிரே  மூங்கில் கம்புகளால் அமைக்கப்பட்ட வேலிக்குள் இருந்து எட்டிப் பார்க்குது அந்த பிரச்சனைக்குரிய மசூதி.
 ( படம். வலையில் இருந்து. நன்றி )

நாம் இடப்பக்கமிருக்கும் வழியில் போகணும். காசி விஸ்வநாதர் கோபுரம்  
 ஜ்வலிப்பில் !  கோவில் திறப்புவிழா சமயம்  தூர்தர்ஷன் ஒளிபரப்புனதை நாம் நியூஸியில் இருந்து பார்த்தோம். அப்ப முதலே  இன்னொருக்காக் காசிக்குப் போகணுமுன்னு  மனசுக்குள் பதிஞ்சுருந்த ஆசை நிறைவேறியது. சட்னு கண்ணுலே ஜலம் வச்சுண்டேன் ! 
பெரிய  க்யூ வரிசையில் ஜனம் வந்து சேர்ந்துக்கிட்டே இருக்காங்க.  நம்ம டிக்கெட்க்குத் தனியா ஒரு சின்னத்தடுப்பு வழியாக பண்டிட் கூட்டிப்போனார். கோவில் சுவரில் ஒரு  அலங்கார வாசல். அதில் இடுப்பளவு உயரத்தில்  கம்பித்தடுப்பு.  பெரிய  ஜன்னல் போலவே இருக்கு.  அதன் வழியாக உள்ளே எட்டிப் பார்க்கணும். அதோ விஸ்வநாதர் !  போன முறை உள்ப்பக்கம் போய்  அவரைத் தொட்டுச் சேவிச்சதெல்லாம் இப்போ இல்லை ! ஜன்னலுக்கு அந்தாண்டை இருக்கும் பண்டிட், மக்கள் கொண்டுவரும் பூக்கள், கங்கை நீர், பாட்டில் பால் எல்லாம் வாங்கி லிங்கத்துக்கு மேலே  அணிவிச்சும், அபிஷேகம் செய்துமா பிஸியா இருக்காங்க.  பூமலைக்குள் நம்ம விச்சு !   
நம்ம பண்டிட் பங்கஜ் குமார் நமக்கு தரிசனம் கிடைச்சதான்னு விசாரிச்சுட்டு, வளாகத்தின் இன்னொரு பகுதிக்குக் கூட்டிப்போனார்.  பார்வதி தேவியின் சந்நிதியில் அங்கிருந்த பண்டிட்,   ஆரத்தி காமிச்சு ப்ரஸாதம் கொடுத்தார்.  எனக்கொரு ஒரு எருக்கம் மாலையும்  நம்மவருக்கு சாமந்தியும் சங்குப்புஷ்பமுமாய் ஒரு மாலையும் கழுத்தில் விழுந்தது. கூடவே நெற்றியில் குங்குமமும். 


என்னிடம் இடது கையை நீட்டச் சொன்னாரா... நாந்தான் கைக்கட்டு போட்டுருக்கேனே....  அந்த நூற்கண்டை என்னிடமே கொடுத்துக் கட்டை அவிழ்த்தபின் கட்டிக்கச் சொன்னார்.  அந்தப்பையையும் என்னிடமே கொடுத்து விஷ்வநாத் ப்ரஸாத் என்றார்.  இவர் நம்மோடுத்தான் வந்துக்கிட்டு இருந்தாரே... எப்ப இந்தப் பை அவர் கைக்கு வந்ததாம் ?   அங்கே நம்ம விஸ்வநாதர் தரிசனம் முடிஞ்சவுடன் இவர் கைக்கு வந்துருக்கு ! நாம்தான் கவனிக்கலை.
இந்தப்பக்கம் சுற்றி ஒரு பெரிய நந்தி இருக்கும் மண்டபத்துக்குப்போய் தரிசனம் பண்ணிக்கிட்டோம்.  போனமுறை வந்தபோது நந்தியையோ, மூலவர் கோபுரத்தையோ , இந்த மண்டபத்தையோ பார்க்கவேயில்லை. முற்றம் வச்ச சின்ன வீடுபோலத்தான் அப்போ இருந்த நினைவு. தீபக் பாண்டே  கூட்டிப்போன வழியில் தலைநிமிராமல் குனிஞ்சே போய்க் கும்பிட்டு வந்துருக்கோம்.   இந்த நந்தியுமே  மூலவரை நோக்கி இருக்காமல்   வேற பக்கம் பார்க்குதுன்னு ஒரு குழப்பம் இருக்கு.  மொத்த சமாச்சாரமும்  சுப்ரீம் கோர்ட் விசாரணையில்  இருக்கு என்பதால் .... நாம் ஒன்னும் சொல்லப்போறதில்லை. ஆனாலும்..........  

இதுவரை பார்த்த காட்சிகளில்  கோவில் திறப்புவிழாவில் தூர்தர்ஷனில் காண்பித்த பெரிய பெரிய  திறந்தவெளிக்கூடங்கள் ஒன்னுமே இல்லையேன்னு, நம்ம பண்டிட் பங்கஜ் குமார் பாண்டேவிடம் விசாரித்ததில் , 'அந்த வாசல் அதோ'ன்னு கை காண்பித்தார்.  அட ! ஆமாம்.... ஆம்ஃபி தியேட்டர் போல படி வரிசைகளுடன் அட்டகாசமாத்தான் இருக்கு. அந்த வழி பெருந்தலைகளுக்கு  மட்டுமோ என்னவோ ?  

 இந்த வளாகத்தை அடுத்துள்ள இன்னொரு வாசல் வழியா நம்மை பண்டிட் அழைத்துப்போனது  அன்னபூரணியின் சந்நிதிக்கு !  இங்கே நல்ல கூட்டம்.  என் உயரக்குறைவு காரணம் எட்டியெட்டித்தான் பார்க்க முடிஞ்சது. அலங்காரம் அட்டகாசமாக இருந்தது !  இதையடுத்துள்ள கட்டடத்தில்தான் தீபாவளியன்று   தங்க அன்னபூரணியின் லட்டுத்தேர் காட்சி நடக்குமாம்.  அளவிடமுடியாத கூட்டமும்  ஆறேழுமணிநேரம் வரிசையில் காத்திருப்பும் வழக்கமாம்.  கேட்டப்பவே தலைசுத்தலாகிப் போச்சு.
நம்ம காசி விஸ்வநாதர் கோவில் தரிசனம் இத்துடன் முடிஞ்சுருது.  பண்டிட் நம்மை  ஹெல்ப் சென்டருக்குக் கொண்டுவந்து விட்டார். முக்கால் மணியில் திரும்பியிருக்கோம். லாக்கரில்  வச்சுட்டுப்போன செல்ஃபோனை எடுத்தவுடந்தான்  கைகளுக்குப் பலம் வந்ததுபோல் இருந்தது :-) படபடன்னு நாலு க்ளிக் ஆச்சு !!   


பண்டிட்டுக்குக் கொஞ்சம் அன்பளிப்பு கொடுத்துட்டுக் கிளம்பினோம்.  இப்பதான் உள்ளே விவரம் தெரிஞ்சுருக்கே....  இன்னொரு நாள் நிதானமா வந்து சுத்திப் பார்க்கலாமேன்னு மனசு ஆசைப்பட்டது................

இந்த உதவி மையத்துலே ரெஸ்ட்ரூம் வசதிகளும் செஞ்சுருக்காங்க. புதுக்கட்டடம் இல்லையோ !  என்னதான் அருமையா அமைச்சுருந்தாலும்.......  நம்ம மக்கள்...ப்ச்..... எப்போ இந்த சுத்தம் பற்றிய விழிப்புணர்வு வருமோன்னு தெரியலையேடா  பெருமாளே !

ச்சும்மா விவரம் கேக்கலாமுன்னு வந்தால்.... காட்சியே கொடுத்துட்டாரே....  நம்ம  ஸ்ரீ காசி விஸ்வநாதர் !!   பெரியமனசு !!!!  நல்லா இருக்கணும்! 


தொடரும்......... :-)

PINகுறிப்பு : பதிவில் ஏழு படங்கள் கூகுளாண்டவர் அருளியவை!  நன்றி !


9 comments:

said...

ஆஹா...அருமையான தரிசனம் ..

நாங்க வெளியே வரும் பொழுது தான் இந்த சென்டர் கண்ணுல பட்டுச்சு ..சரி அடுத்தமுறை இங்க பார்த்துக்கலாம்ன்னு விட்டாச்சு ..

நாங்க போனது அங்க தீபாவளி நேரம் ஆகையால் 5 மணி நேரம் நின்று ...துண்டி கணபதி , அன்னபூரணி எல்லாரையும் தொடர்ந்து தரிசனம் செய்தோம்..நாசியில் காசியின் வாசம் வீசுது ...

said...

//ச்சும்மா விவரம் கேக்கலாமுன்னு வந்தால்.... காட்சியே கொடுத்துட்டாரே.... நம்ம ஸ்ரீ காசி விஸ்வநாதர் !//
காக்க வைப்பது பெருமாள்
இவரோ காட்சி தந்து அருள்வார்.

said...

நிறைவான பயணம். சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் சென்றுவந்தோம். இப்போது காசியில் அதிக மாற்றம் தெரிகிறது. வாழ்த்துகள்.

said...

வாங்க அனுப்ரேம்,

நாங்களும் போனபோது தீபாவளி சமயம்தான். உங்களை மிஸ் பண்ணிட்டோமோ ?

லைனில் நிற்காமல் சீக்ர தரிசனம் ஆச்சு, அந்த ஹெல்ப் சென்டர் போனதால் !

said...

வாங்க விஸ்வநாத்,

காக்க வைப்பது பெருமாளா இல்லை கோவில் நிர்வாகமும், அங்கே பணியில் நிறுத்தி இருக்கும் அரக்கர்களுமா ?

நல்லாக் காசு பண்ணத் தெரிஞ்சுக்கிட்டாங்க, முக்கியமா திருப்பதியில் !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.


2021 டிசம்பர் 13 முதல் ஏராளமான மாற்றங்களோடு கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நல்ல சுகானுபவம். இன்னொருமுறை வாய்ப்பு கிடைத்தால் விட்டுவிடாமல் போய் வாருங்கள்.

மனம் நிறைவாகத்தான் இருந்தது !

said...

இன்னும் நேரே தரிசிக்க அழைப்பு வரவில்லை . உங்கள் யாத்திரையில் நாமும் காசி விஸ்வநாதர் தரிசனம் பெற்றோம்.

said...

அன்றே விஸ்வநாதர் தரிசனம் அற்புதம்.

said...

வாங்க மாதேவி,

இப்பெல்லாம் கோவிலின் சுற்றுப்புறம் பளிச்னு இருக்கு. அருமையான ஏற்பாடுகள். கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல் போய் தரிசனம் பண்ணி வரலாம்.
விரைவில் கிடைக்கணுமுன்னு வேண்டிக்கறேன்.